மத, இன, சாதிவெறியுடன் தமிழக ஊடகங்களில் பெரும்பாலானவை இயங்கி வருகிறது என்பதை மீண்டும் ஒருமுறை அவை நிரூபித்திருக்கின்றன.

தமிழக இஸ்லாமிய இளைஞர்களை பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்தி தொடர் கைதுகளை அரங்கேற்றி வரும் தமிழக - கர்நாடக காவல்துறையை கண்டித்து கடந்த 10ந் தேதி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னையின் முக்கிய பகுதியான அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட செய்திகளை அப்படியே இருட்டடிப்பு செய்தன மீடியாக்கள். பத்திரிகைகளில் கூட அடுத்தடுத்த நாட்களில் இந்த செய்தி வெளியாகவில்லை.

‘இன்னசென்ட் ஆஃப் முஸ்லீம்ஸ்' மற்றும் ‘விஸ்வரூபம்' ஆகிய படங்களை தடை செய்ய சொல்லி இஸ்லாமியர்கள் நடத்திய ஆர்ப்பட்டம் மற்றும் போராட்டங்களின்போது, முஸ்லிம்களின் எதிர்ப்பிலுள்ள நியாயங்களை புறக்கணித்துவிட்டு, அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள், தமிழக முஸ்லிம்களை ஜனநாயக விரோதமாக பிடித்து சென்று பொய் வழக்கு போடும் காவல்துறையின் நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த மனமில்லை. எந்த ஊடகமும், பத்திரிகையும் இந்த விஷயத்தில் ஊடக தர்மத்தையோ, பத்திரிகை தர்மத்தையோ கடைபிடிக்கவில்லை.

இதேபோல இரண்டு தினங்களுக்கு முன் சென்னைக்கு வந்த சமூக சேவகி மேதா பட்கர், பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்தில் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட விவகாரம், மரக்காணம் கலவர பகுதியை மேதா பார்வையிட்டது; சென்னை கூவம் ஆறு பகுதி குடிசை வாழ் மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம், கல்பாக்கம் விவகாரம் போன்றவற்றை செய்திகளாக வெளியிட்ட ஊடகங்கள், மேதாவின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை முற்றிலும் இருட்டடிப்பு செய்துள்ளன.

காரணம் தெளிவான ஒன்று. தமிழக முஸ்லிம் இளைஞர்கள் மீதான காவல்துறையினரின் அராஜகங்கள் குறித்து மேதா தெளிவாக பேசியிருந்தார்.

கடந்த 22-05-2013 அன்று பெங்களூரு போலீசார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகப்படும் சில முஸ்லிம் இளைஞர்களை பிடிக்க மேலப்பாளையம் வந்தனர் என்ற செய்தியை நேற்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகத்தின் அடிப்படையிலான செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடும் ஊடகங்கள், ஒரு சமுதாயத்தின் உணர்வுகளை இருட்டடிப்பு செய்கிறது என்றால் இதை மத வெறித்தனம் அல்லது இனவெறித்தனம் என்று சொல்வதா? அல்லது முஸ்லிம் விரோதப்போக்கு என்பதா?

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் காவல்துறை கொடுக்கும் பொய் செய்திகளை அப்படியே வெளியிட்டு வரும் மீடியாக்கள், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரின் வாக்கு மூலங்களை வெளியிட தயாராக இல்லை. கர்நாடக ஊடகங்கள் இந்த குடும்பத்தினரின் கண்ணீர் பேட்டிகளை வெளியிட்டு வரும்போது தமிழக ஊடகங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?

நேற்றைய தினம், கிச்சான் புஹாரியை, சிறையில் அவரது வழக்கறிஞர்களுடன் சேர்ந்து சந்தித்த நண்பர்கள், நம்மிடம் கூறியது இது:

"கிசான் புஹாரியை குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி, மேலிருந்து தொங்க விட்டு பின் மேலே இழுத்து இப்படியே மூன்று நாட்கள் சித்திரவதை செய்துள்ளனர்...'' இதில், ‘மலமும் விந்தும் வெளியேறி விட்டது' என்று வேதனையுடன் புஹாரி கூறினாராம். அதேபோல கால் பாதம், மர்மஸ்தானம் மற்றும் நெஞ்சு பகுதிகளில் அவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் வைத்தார்களாம். இதேபோல, பஷீர் அஹமதுவுக்கு ஷாக் கொடுத்ததில் அவரது காலில் ஓட்டை விழுந்து விட்டதாம்.

ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது... இதுவரை முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக ஒரு ஆதாரத்தையும் விசாரணை அதிகாரிகளால் காட்ட முடியவில்லை. அப்படியிருக்க பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு அல்லது அவர்களது ஆதரவு தரப்பு செய்தியை வெளியிட தமிழக ஊடகங்களுக்கு என்ன தயக்கம்.?

அநியாயத்திற்கு துணைபோகும் தமிழக பத்திரிகைகளின் நடவடிக்கைகளை என்னவென்பது.

இந்த செய்திகளை வெளியிடக்கூடாது என்று காவல்துறை தலைமை ஊடகங்களை அன்பாக மிரட்டியதாக நம்பகமான செய்தி வெளியானது. காவல்துறையின் மிரட்டலுக்கு ஊடகங்கள் பணிகின்றன என்றால், அவற்றின் மடியில் கனமிருக்கிறது என்று தான் அர்த்தம். சி.பி.ஐ. ரைடு போன்ற சங்கடங்களை சந்திக்க வேண்டும் என்ற பயம் ஊடகங்களுக்கு இருப்பதால்தான் அவை பயந்து நடுங்குகின்றனவோ என்று என்ன தோன்றுகிறது.

இதில் விதிவிலக்காக inneram.com, onindia.com, savukku.net, keetru.com போன்ற இணைய தள செய்தி ஊடகங்கள் நடுநிலையோடு செய்திகளை வெளியிடுவதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. 

- எஸ்.எம்.சையது இக்பால், பொதுச் செயலாளர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

Pin It