“அடுத்துப் பத்து ஆண்டுகளில் இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளைவிட அதிக வருமானம் ஈட்டும் நாடாக இந்தியா மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது; ஆகவே, உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும்; சுதந்திரமான ஏற்றுமதி இறக்குமதி நடைபெற வேண்டும்; அந்நியச் செலாவணி கூட வேண்டும்; இந்திய நாட்டின் பொருளாதார வளம் பெருக வேண்டும்; வெளி நாட்டுச் சந்தையை நம்பியிருக்கிற நிலை மாறி உள்நாட்டுச் சந்தையை மேலும் பல மடங்கு உயர்த்த வேண்டும்; கிராமப்புற மக்களுக்குப் போதிய வேலை கிடைக்க வேண்டும்; இவற்றுக்கெல்லாம், இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது அவசியம்; சிறப்பு பொருளாதார மண்டலம் இன்றி இந்தியாவிற்கு விடிவு காலம் இல்லை” - என உலக முதலாளிகளின் செல்லப்பிள்ளைகளாகச் செய்லபடும் மன்மோகன்சிங்கும், அலுவாலியாவும் உரத்துக் குரல் கொடுக்கின்றனர்.

 ஏற்றுமதி ஊக்குவிப்பு மண்டலங்கள் (Export Processing Zones) நீண்ட காலமாக இந்தியாவில் இருந்து வருகின்றன. இப்பொழுது, சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற புதிய மொந்தையில் அப்பழைய கள் வழங்கப்படுகின்றது. வாஜ்பாயின் தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணி அரசு தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவதற்கு அடிதளம் இட்டது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் ஆகிய மாறுவேடங்களில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இன்று அணிவகுத்து வருகின்றன.

 தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து, புதிய பொருளாதாரக் கொள்கை நம்முடைய நாட்டில் மெல்லக் காலடி எடுத்து வைத்தது ‘உலகமயமாக்கல்’ என்ற ‘காண்டாமிருகம்’. இப்போது பல நிலைகளில் அகலக் கால் வைத்துக் கொண்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகளும் தேசவளத்தைத் தீனியாகப் போட்டு இந்த இராட்சத மிருகத்தை வளர்க்கப் போகிறோம் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றன.

 நிலச்சீர்திருத்தக் கொள்கையின்படி, நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்கவேண்டிய அரசு, விவசாய நிலங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் ஏன் விற்க வேண்டும்? அரசாங்கமே முன்னின்று, விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி தனியார் முதலாளிகளுக்குத் தாராளமாய் வழங்கும் தரகராகத் தன்னை ஏன் மாற்றிக் கெள்ள வேண்டும்?

 நிலம் என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு எனத் தனியாகச் சட்டம் இயற்றி, மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் விவசாய நிலத்தைக் கையகப்படுத்துகிறது. இதை, “நில அபகரிப்பு, நிலம் சம்மந்தப்பட்ட ஊழல்”, என்றே கூறலாம்.

 பிற்படுத்தப்பட்ட பகுதியினருக்கான பஞ்சாயத்து விரிவாக்கம் என்னும் 1996 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, அரசு அங்குள்ள கிராம சபைகளின் முடிவின்படிதான் விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்த முடியும். ஆனால், பழங்குடியினர் அதிகமாக வாழும் ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் கிராம சபைகளின் ஒப்புதல் பெறாமலேயே நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. இது சட்டத்தை மீறுகிற, மக்களை அவமதிக்கிற, சனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கின்ற செயலாகும்.

 விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நிலத்தை கையகப்படுத்துவதை, உடனடியாக நிறுத்த வேண்டும். ‘நவீன இந்தியாவில், நிலத்தை அபகரிக்கிற மிகப் பெரிய இயக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மிகப் பெரிய நில ஊழலை ஏற்படுத்தும்’ - என சுமித் சர்க்கார் கூறுகிறார். விவசாயிகளின் விலைமதிக்க முடியாத சொத்து - உயிர் மூச்சு – முகவரி - முகம் - வாழ்க்கையின் அடித்தளம் - என எல்லாமும் அவர்களின் நிலம்தான். நிலத்தை இழந்தால், நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்கின்றனர் ; அவர்களின் வாழ்க்கை, கேள்விக்குறியாகிறது; சொந்த நாட்டிலேயே அகதிகளாகும் அவலநிலை ஏற்படுகிறது.

 சிறப்புப் பொருளாதார மண்டங்களுக்கு நிலம் எடுப்பதால், அங்கு வாழ்வோர் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்கள் நகர்ப் புறங்களுக்குச் சென்று சாலையோரக் கூலித் தொழிலாளர்களாகின்றனர். அவர்களிடமிருந்து கையகப்படுத்தும் நிலங்களுக்கு உடனடியாக, இழப்பீடும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பறிக்கப்பட்ட அந்நிலங்களில், பிறர் வந்து அமர்ந்து வளர்ந்து, உயர்ந்திடும் நிலை உருவாகிறது . அவர்களோ, வீடு அற்றவர்களாக, நிலமற்றவர்களாக உள்நாட்டு அகதிகளாக மாறக் கூடிய அவலம் தொடர்கிறது .

 தாங்கள் நேசித்த மண்ணைத் தக்க வைப்பதற்காக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டங்களைத் திசை திருப்புவதற்காகவும், விவசாயிகளை ஏமாற்றுவதற்காகவும் பொய்யான வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் அள்ளி வீசுகின்றனர். எப்படி? ‘நிலம் தந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும்; மாற்றாக வேறு இடத்தில் நிலம் தரப்படும்; நிலத்திற்கு வெளிச்சந்தை விலை வழங்கப்படும்; விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்; மாற்றுக் குடியிருப்புகளுக்கும், மறுவாழ்வுக்கும் தேசிய அளவில் கொள்கை உருவாக்கப்பட்டு, திட்டங்கள் தீட்டப்படும் ; ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும்; அனாதைகள், கைவிடப்பட்டோர், விதவைகள், வஞ்சிக்கப்பட்ட பெண்கள், திருமணமாகாதோர் ஆகியோருக்கு மாத ஊதியம் வழங்கப்படும்; சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும்; பழங்குடியினர் மறுவாழ்வுத் திட்டம் உருவாக்கப்படும்’. என்றெல்லாம் பொய்யான பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.

 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஒதுக்கப்படும் நிலப்பரப்பில் 23 விழுக்காடு மட்டும் தான், உற்பத்திப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள 77 விழுக்காடு கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்படும். தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், அலுவலகக் கட்டிடங்கள் போன்றவை அமைக்கப்படும். இப்பகுதியில் வசதி படைத்த உயர்குடியினர் மட்டும் குடியேற அனுமதிக்கப்படுவார்கள். கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் 75 விழுக்காடு வீட்டுமனை, வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும். அப்பகுதியில் நான்கு வழிச் சாலைகள் அமைப்பதற்கும், சாலையோர உணவு விடுதிகள் கட்டுவதற்கும் நிலம் கையகப்படுத்தப்படும்.

 இவ்வாறு , நிலம், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு காற்றில் பறக்கவிடப்படுகின்றது.

 ரிலையன்ஸ், டாட்டா போன்ற பெரும் முதலாளிகள் இந்தியாவின் நிலபிரபுக்கள் ஆவதற்கான நெடிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

 கனிம வளங்களை வெட்டி எடுத்துச் சென்ற பிறகு, அந்த நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது. ஆடு, மாடுகள் மேய்வதற்குப் புல், பூண்டுகள் கூட முளைக்காது. மரங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுப்புறச் சூழல் கெடும். மண் சத்தற்றதாக மாறிவிடும். மேலும் அம்மண்ணில் புவி ஈர்ப்பு விசை குறைந்து விடும். கனிமங்கள் பிரித்தெடுக்கப்படும்பொழுது ஏற்படும் கதிர் வீச்சு மக்களைப் பாதிக்கும்.

 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு, சுங்கவரி, வர்த்தக வரி போன்ற வரிச்சலுகைகள் அளிக்கப்படுகின்றன. எந்தப் பொருளையும் சுங்கச் சோதனையின்றி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். மின்சாரம், நீர் போன்றவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சுதந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவை மட்டுமல்ல; எளிமைப்படுத்தப்பட்ட சட்ட விதிகள், இலகுவான ஒற்றைச் சாளர முறை, கிளை மையங்கள் கூட தங்குதடையின்றி இயங்குதல், பராமரித்தல், வெளிநாட்டிலிருந்து பொருட்களை வரிகளின்றி இறக்குமதி செய்து கொள்ளுதல், முதல் ஐந்தாண்டுகளுக்கு, ஏற்றுமதி செய்தல், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு நூறு விழுக்காடு வரி விலக்கு அளித்தல், அடுத்த ஐந்தாண்டிற்கு ஐம்பது விழுக்காடு வரி விலக்குப் பெறுதல், அந்த வருமானத்தை மீண்டும் ஏற்றுமதியில் முதலீடு செய்தால் அதற்கு கூடுதலாக ஐம்பது விழுக்காடு வரி விலக்குப் பெறுதல், எனச் சரமாரியாக சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன.

 இந்திய வருமான வரிச் சட்டப் பிரிவு 115JB யின்படி வருமான வரி விலக்குப் பெறலாம்; ஒரு ஆண்டில் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வர்த்தக ரீதியான தொகையை வெளிநாட்டிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் மூலம் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்; மத்திய விற்பனை வரி விதிப்பிலிருந்து விலக்குப் பெறலாம்!

 ‘சீனாவில் கூட சிறப்புப் பொருளாதார மண்டலம் செயல்பட்டு வருகிறது. எனவே இந்தியாவிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்து தொழில் வளர்ச்சி உருவாக்கலாம்’ - என்று சில அறிவாளிகள் வாதாடுகின்றனர். ஆனால், சீனாவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் வெற்றி பெறவில்லை. எனவே, கல்வியாளர்களும், அங்குள்ள அரசியல்வாதிகளும் அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் மூடிவிடும்படி அறிவுரை வழங்கினர்.

 சீனாவில், நிலத்தைப் பயன்படுத்தும் உரிமை மட்டும் தனியார் முதலாளிகளுக்கு மாற்றிக் கொடுக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்தாலும் , நிலம் சீன அரசிடமே உள்ளது. ஆனால், இந்தியாவில் கையகப்படுத்தப்பட்ட நிலம், முதலீடு செய்த நிறுவனத்திற்கே சொந்தமாகிவிடுகிறது. நாளடைவில் நில உரிமையாளரோ, ஏன் இந்திய அரசே கூட அங்கே நுழைய முடியாது.

 சீனாவில், தொழிற்சாலைகள் அமைக்க மட்டுமே நிலங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைப்பதுடன், தங்கும் விடுதிகள், பெரிய உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் , மீதியுள்ள நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தல், ஆகியவற்றிற்கெல்லாம் அனுமதி அளிக்கப்படுகிறது.

விளை நிலங்களைப் பயன்படுத்த சீன அரசு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் விளை நிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன.

டெல்லி மாநில அரசு, டெல்லிக்கு அருகிலுள்ள தாத்ரியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மின் திட்டத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை விவசாயிகளிடமிருந்து பறித்து அம்பானிக்கு வழங்கியுள்ளது. மேற்கு வங்காளத்தில் நந்திக் கிராமம், சிங்கூர் ஆகிய இடங்களில் டாட்டா நிறுவனத்திற்கும், இந்தோனேசியா நாட்டைச் சார்ந்த சலீம் குழு நிறுவனத்திற்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்த பறித்து மேற்கு வங்க அரசு வழங்கியுள்ளது.  ஓரிசாவில் போஸ்கோ என்னும் பன்னாட்டு நிறுவனத்திற்கும், ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு அருகில் பிரான்டிக்ஸ் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரித்து வழங்கிவருகிறது.

தமிழகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் ‘தகவல் தொழில்நுட்பப் பூங்கா’ என்ற தொடரைப் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் 27 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டம், சென்னைக்கு அருகில் துணை நகரம் அமைத்தல், கடல் நீரைக் குடிநீராக மாற்றும் தொழிற்சாலை அமைத்தல் ஆகியவற்றில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்வாக்கு, கொடிக்கட்டிப் பறக்கிறது. தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டங்களின் டைட்டானியம் டை ஆக்ஸைடு எடுக்கும் ஆலை அமைக்க சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை டாட்டா நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரதமர் முதல் மாநில முதலமைச்சர்கள் வரை சாகுபடி நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அளிக்கமாட்டோம் என்று அறிவித்துக் கொண்டே அந்நிய நிறுவனங்களுக்கு இந்திய விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வழங்கி வரும் நிலை தொடர்கிறது.

 வேலைவாய்ப்புகள் பெருகும் என்ற மாயை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் தொழில் நுட்ப ஆற்றலும், அனுபவங்களும் இல்லாத கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது அறவே கிடையாது. மேலும் நவீன இயந்திரங்களையும், வெளிநாட்டு தொழில்நுட்பங்களையும் கொண்டு எல்லா வேலைகளையும் இயந்திரங்களே செய்து முடித்துவிடும்.

 இயந்திரம் சாராத வேலைப்பளு அதிகமாகும்; மனித உரிமை மீறப்படும், தொழிற்சங்கம் அமைக்க உரிமைகிடையாது; தொழிலாளர்களுக்கான வேலை நாள், ஊதியம், ஓய்வு நேரம் போன்ற விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட மாட்டார். தொழிலாளர் நலச்சட்டங்கள், தொழில் தகராறுச் சட்டங்கள் போன்றவை அமல்படுத்தப்படா. தொழிலாளர்கள் நலன், ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, பேறுகால உதவி முதலான சட்டங்கள் மூலம் உரிமைகள் கிடைக்காமல் போகும். ‘அமர்த்து - துரத்து’, என்ற அடிப்படையில், தினக்கூலி, ஒப்பந்த முறையில் பணி அமர்த்துதல் போன்றவை செயல்படுத்தப்படும். இப்படியாக நவீன கொத்தடிமைத் தனம் இந்தியாவில் உருவாக்கப்படும். நூறாண்டுகாலம் போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் காவு கொடுக்கப்படுகின்றன. கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கும், பணிப் பாதுகாப்பற்ற நிலைக்கும் தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள். எந்த விதிமுறைகளையும், சட்டங்களையும் மதிக்காத தனிக்காட்டு ராஜா போலவும், தனிசமஸ்தானம் போலவும் இவை செயல்படலாம்.

 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிமுறைகள் பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். மக்களைக் கலந்தாலோசிக்காமல், தேச முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் என்கிற பெயரில் எதையும் செய்துவிடக் கூடாது.

 சிறப்புப் பொருளாதா மண்டலங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் வரிவிலக்குகள் குறித்தும், அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய மாநில அரசுகள் வெளிப்படையான அறிக்கைகளை வெளியிட வேண்டும். விவசாய நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பிற தொழிற்சாலைகளுக்கும் எடுக்கக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.
 
 “சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவதைத் தடுக்க முடியாது. ஏறக்குறைய அவை நம்மோடு நிரந்தரமாகத் தங்கப்போகின்றன” .- என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறுகிறார்.

 “ஏழைகளைத் துரத்திவிட்டுச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிலைத்து நிற்கும் என்றால், மக்களை ஆளுகின்ற அரசும் பதவியிலிருந்து கீழே இறங்க வேண்டிவரும்” - என்று முன்னாள் தலைமை அமைச்சர் வி.பி.சிங் கூறியுள்ளார்.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய-மாநில அரசுகள், பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் தான் சட்டங்கள் கொண்டு வருகின்றன. அது போலவே சிறப்பு பொருளாதார மண்டலச் செயல்பாடும் திட்டமிடப்பட்டுள்ளது.

 ‘கறுப்பு இன ஆப்பிரிக்க நாடுகளுக்கு, வெள்ளையர்கள் பைபிளோடு வந்தார்கள்; பைபிளை ஆப்பிரிக்க மக்களுக்குக் கொடுத்துவிட்டு அவர்களின் நிலங்களை வெள்ளைக்காரர்கள் விழுங்கிக் கொண்டார்கள்’ - என்பது வரலாறு. அதுபோன்று, வெளிநாட்டு நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கின்றோம் என்று பசப்பிவிட்டு, இந்திய மக்களின் நிலங்களைப் பறித்து ஏப்பமிட வருகின்றன. நாம் இதை அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளும் - தொழிலாளர்களும், இணைந்து போராடி இந்தியாவின் இறையாண்மையைக், காக்க வேண்டும். ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்த வேண்டும். இத்தலையாய கடைமையில் நாம் தவறினால், பொருளாதார மண்டலங்கள் புழுதிக் காடுகளாய் மாறும்! பொன் விளையும் பூமியில் புல் முளைத்துப் போகும்!!

Pin It