நான் மேடைகளில் உணர்ச்சிபொங்க பேசியதுண்டு. ஆனால் தங்களைப் போல அச்சுபிசகாமல் அர்த்தத்தோடும் நையாண்டியோடும் பேச நினைத்து முடியாமல் போனதுண்டு. அதே போல் ஈழக்கொள்கையில் மாறுபட்டிருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஒரு மதிப்பு இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ....

நான் செம்பியன், லயோலா கல்லூரி இரண்டாமாண்டு மாணவன். ஈழத்தில் நம் இனம் படும் துன்பங்களைக் கண்டு, தம்பி பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகளைக் கண்டு தமிழக மாணவர்களை ஒன்றிணைத்துக் கொண்டு இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்றெண்ணி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிய மாணவர்கள் எண்வரில் நானும் ஒருவன்.

உண்ணாவிரதத்தை லயோலா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தொடங்கியிருந்தாலும் இது இனத்துக்கான போராட்டம். இதில் அனைத்து தமிழக மாணவர்களும் 'தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு' என்ற முழக்கத்தோடு எடுத்துச் செல்லும் விதமாக பொதுவான பெயரில் 'தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' என்று உருவாக்கினோம்.

ஆனால் எதிர்பாராவிதமாக எந்த காரணமும் இல்லாமல் 'தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு' என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி தங்களது மாணவர் படையை வைத்து தமிழக மாணவர்களிடையே முதல் பிரிவினையை ஏற்படுத்தியது. இன்றுவரை அவர்கள் ஈழத்துக்கான மாணவ போராட்டத்தில் தனி அணியை உருவாக்கிய காரணம் என்ன என்று புரியவில்லை? நிற்க.

இந்திய பார்ப்பனீயம், தங்களது மொழியில் சொல்வதானால் இந்திய ஏகாதிபத்தியம் எங்களது உண்ணாவிரதத்தை வலுக்கட்டாயமாக பல தந்திரங்களை கையாண்டு முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனாலும் மாணவத் தீ பரவிவிட்ட செய்தி அறிந்து, சென்னை அல்லாது பிற மாவட்டங்களில் எங்களைப்போல் உண்ணாவிரதம் இருந்து தொடர்ந்து தீயை அணையாமல் பாதுகாத்த மற்ற கல்லூரி மாணவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வலுவான தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு, தமிழக மாணவர்களை ஒன்றிணைப்பதற்காக நாங்கள் வெளிமாவட்டங்கள் சென்றிருந்தோம்.

அதுசமயம் இங்கு சென்னையில் பல கல்லூரி மாணவர்கள், கூட்டமைப்பின் சார்பாக ஒன்றாக இருந்து செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கக்கூடிய செயல். இதில் பல இயக்கங்களின் மாணவரணி செயல்பட்டது. அதில் ஒருவர்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றத்தைச் (AISF) சேர்ந்த சி.தினேஷ்.

செயல்பட்ட அணைத்து மாணவர்களும் தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு என்றே முழக்கமிட்டனர். கூட்டத்தோடு கூட்டமாக வந்த உங்கள் மாணவரணி பெருமன்றத்தின் தோழர் தினேஷும் தனித் தமிழீழமே தீர்வு என்று கூறுவது உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி.

ஏனென்றால் கடந்த மார்ச் மாத ஐ.நா. தீர்மானத்தின் போது நாடாளுமன்றத்தில் ஈழத்திற்கு எதிராக உரக்க குரல் கொடுத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாஸ்குப்தா. தோழர் தினேஷ் சொல்வது போல் தனித்தமிழீழமே தீர்வு என்று நீங்கள் கூட கூறியதாக கேள்விப்பட்டதில்லை.

இவ்விடத்தில் நாங்கள் தங்களிடம் கேட்பது, ஒன்று தில்லியில் உங்களது முழக்கத்தை தனித்தமிழீழம் என்று முன்வையுங்கள். அப்படி செய்தால் தமிழகத்தில் அனைவரும் மகிழ்வர். ஏறக்குறைய 90 ஆண்டு அனுபவமுள்ள அரசியல் கட்சி தனித்தமிழீழ கோரிக்கையை முன்வைத்தால் மகிழ்ச்சிதானே?! இல்லையென்றால் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் பெயரை வைத்துக்கொண்டு தங்களது கட்சியின் மாணவரணி தோழர் தினேசை பயன்படுத்தாமல் இருக்க வழிவகை செய்யுங்கள்.

மார்க்சியத்தைப் புரிந்துகொண்டோமோ இல்லையோ ஆனால் தங்கள் கட்சியைப் போல போராட்ட செயல்பாடுகளை, முடிவுகளை தலைநகர் சென்னை என்பதால் ஓரிடத்திலிருந்து எடுக்காமல் எல்லாமாவட்டத்திலும் கலந்தாலோசித்து மண்டல ரீதியாக மாணவர்கள் ஒன்றிணைந்து குழு அமைத்து முடிவெடுப்பது என்று திட்டமிட்டுள்ளோம். ஆனால் தோழர் தினேசோ மொத்த தமிழ்நாட்டையும் ஒற்றையாளாக நின்று போஸ்டர்களிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டுள்ளார்.

கூட்டமைப்பு சார்பாக ஒரு போராட்டத்தை அறிவித்தால் இலட்சங்களில் செலவு செய்து போட்டியாக மாநாடு ஒன்றை அறிவிக்கிறார்! சக மாணவர்களோ, ஊடகவியலாளர்களோ எங்களிடம் வந்து மாணவர்களாகிய உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்கின்றனர். மாநாட்டிலோ கம்யூனிஸ்ட் தோழர்களின் பங்கே அதிகம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளுக்கு மாவட்டங்களில் பேரணி அறிவித்தால் போட்டியாக சுடர் பயணம் என்கிறார். மற்ற மாணவர்கள், உணர்வாளர்கள் குழப்பமடைந்து ஏன் தனித்தனியே செய்கிறீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.

எங்கள் கல்லூரிக் கல்வியை பணயம் வைத்து, பெற்றோர்களை பகைத்துக்கொண்டு மாபெரும் இந்திய அரசை எதிர்கொண்டு சாகும்வரை உண்ணாநிலை என்று போராட்டக்களத்திற்கு வந்த எங்களை 'இனத்துரோகி பாதிரியார்' ஒருவரின் பின்புலத்தில் இயங்குவதாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளன‌ர்.  இதை செய்வது களத்தில் இருக்கும் சக மாணவர்கள் என்னும்போது இந்த சமூகம் எங்களைப் போன்றவர்களுக்கு சூட்டும் பட்டத்தை கண்டு அகமகிழ்கிறோம்.

அரசியல் வாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்கும் நெடுமாறன், ஐயா நல்லக்கண்ணு போன்றோர்களை முன்னுதாரணமாகக் கொண்டு சுயநலமில்லா மாணவர் போராட்டத்தை வைத்து தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கிறோம். முடியாதவகையில் அடுத்த கல்வியாண்டு மாணவர்களிடம் தமிழீழ விடுதலைக்கான மாணவ போராட்டத்தை மாணவ போராட்டமாகவே கொடுத்துச் செல்ல எண்ணுகிறோம். இதில் கட்சி சாயல் பூசவேண்டாமே!

இன்று தெலுங்கானா போராட்டம் வெற்றிபெறும் நிலையில் இருப்பதற்கு அங்குள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. வேறுவேறு கொள்கை கொண்ட பலதரப்பட்ட மாணவர்களாக அவர்கள் இருந்தாலும் தனித் தெலுங்கானா என்று வந்துவிட்டால் எல்லா மாணவர்களும் ஒன்றிணைந்து போராடுகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள அரசியல் கட்சிகள் மாணவர்களை மாணவர்களாகவே செயல்பட வைப்பதுதான். ஆனால் சபிக்கப்பட்ட தமிழினத்திலோ எதிரிகளை விட வேகமாக துண்டாடுவது உணர்வாளர்களாகவே உள்ளனர்.

இன்னும் ஓரீரு ஆண்டுகளில் மாணவ பருவத்திலிருந்து வெளிவந்தபிறகு தங்களைப் போன்ற கட்சிகள் தங்களது சித்தாந்தங்களை, கொடிகளை எங்கள் மீது திணிக்கலாமே? அதுவரை ஈழப்போராட்டம் மட்டிலுமாவது மாணவப் போராட்டத்தை கட்சி சாயல் பூசாமல் விட்டுவையுங்களேன்?!

நாங்கள் உங்களிடமும் மற்ற அரசியல் கட்சிகளிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு என்று உங்களது கொள்கைகளை சுமந்து செல்ல ஓர் அரசியல் கட்சி, தொழிலாளர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி என பல உள்ளது. எங்களுக்கென்று இருப்பது மாணவர் கூட்டமைப்பு ஒன்றுதான். மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த தினேசை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக எந்த விதமான அறிக்கையும் கொடுத்து ஊடகவியலாளர்களையும் சக மாணவர்களையும் குழப்ப வேண்டாம் என தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக

செம்பியன் (லயோலா கல்லூரி, இரண்டாம் ஆண்டு) - 96000 94493, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It