தாராளமயம் - தனியார்மயம் வழி, உலகமயக் கொள்கைகள் இந்தியாவில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அக்கொள்கைகள், ‘இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியும், உற்பத்தியைப் பெருக்கியும், இந்தியாவை உலக அளவில் உயர்த்திவிடும்’- என நம்பி இந்தியத் தலைமை அமைச்சரும், இந்திய நிதியமைச்சரும் அன்றாடம் அறிவிப்புகள் பலவற்றைச் செய்து வருகின்றனர்!. ஆனால் நிலைமை வேறாகவே உள்ளது. இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதற்குப் பதிலாக, புதிய சுரண்டல் முறையே உருவாகி உள்ளது!. அரசுத்துறை , பொதுத்துறை, கூட்டுறவுத்துறை, தனியார்துறை ஆகியவற்றில் வேலை வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதோடு, ‘ஆட் குறைப்பு’ என்ற பெயரில் பணியிலிருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் அவலமும் அன்றாடம் நடந்தேறுகிறது!.

உலக வங்கியின் கட்டளைகளுக்கு ஏற்ப, நடுவண் அரசின், ‘செலவு சீர்திருத்தங்கள் ஆணையம்’ - ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு வருவது கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்துக் கொள்வதற்கு ஒப்பாகும்!. இந்தியாவில், படித்து முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை பதினெட்டுக் கோடியைத் தாண்டிவிட்டது. தமிழகத்தில் அவ்வாறு வேலைக்காகக் காத்திருக்கும் படித்து முடித்த இளைஞர்களின் எண்ணிக்கை அரைக்கோடியாகும்!. இப்படி வேலையின்மை என்பது, இந்தியாவின் முன்னேற்றத்தைத் தேய்க்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. பூதாகாரமாக உருவாகி வரும் வேலையின்மையைத் தீர்ப்பதற்கு, நடுவண் மற்றும் மாநில அரசுகள், விரைவான - உருப்படியான - திட்டங்களைத் தீட்டவேண்டாமா? வேதனைகளை விரட்டியடிக்க, சரியான கொள்கைகளை வகுத்துச் சட்டமாக்கிச் செயல்படுத்த வேண்டாமா...??

வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையும், அந்நிய நாடுகளின் நேரடி முதலீடுகளும் நமது நாட்டில், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதற்கு மாறாக, வேலையின்மையைத் தானே பெருக்கித் தந்துள்ளன? அந்நிய நாட்டு நிறுவனங்கள் இங்கு உயர் தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்களை இறக்குமதி செய்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், வேலைகளை முடிக்க, வேலைகளை வெளி நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றன. விளைவு? ஏற்கனவே இருக்கின்ற வேலை வாய்ப்புகளும் பறிபோகின்றன. படித்தோர் மத்தியில் வேலையின்மையும் பசித்தொல்லையும் நிரந்தரமாய் நீடிக்கின்றன!

உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதால், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் ஒப்பந்தப் பணி மூலம் வேலைகள் நடக்கின்றன. பெரும்பாலான வேலைகள், ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்துச் செய்யப்படுகின்றன. ஒருவேலைக்கு, நிரந்தரப் பணியாளருக்கான ஊதியத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் வெளி நிறுவனத் தொழிலாளிக்குக் கூலியாகக் கொடுத்துவிட்டு, அதே வேலையைச் செய்ய வைப்பது என்பது இன்று நடைமுறையாக உள்ளது. அதாவது குறைந்த கூலிக்கு அதிக உழைப்பைச் சுரண்டுவது என்பதே அதன் அடிப்படையாகும்.

கடந்த இருபதாண்டுகளாக அரசுத்துறைகளிலும், பொதுத்துறைகளிலும், தனியார்துறைகளிலும், ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை தற்காலிக மற்றும் தினக்கூலியாகப் பணியமர்த்துவது நடைமுறையாக உள்ளது. மேலும் அமைப்பாக்கப்படாத துறைகளில் நிரந்தரப் பணி என்ற பேச்சுக்கே இடமில்லை.

 “பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்த உரிமையுள்ளது” - என்று இந்திய உச்சநீதிமன்றம் 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளித்த தீர்ப்பு, இந்த சுரண்டல் முறைக்கு பச்சைக்கொடி காட்டுவதுபோல் அமைந்துவிட்டது. தொழிலாளர்களுக்கு விரோதமான இத்தீர்ப்பு, முதலாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. அதனால் தான் அண்மையில் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் கூட மிகவும் நெருக்கடியைச் சந்தித்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான அக்கறையினை நடுவண் அரசும் அப்போது காட்டவில்லை.

ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் பணிச்சுமைகளோ மிகவும் மோசமானவை; கொத்தடிமைகள் போல் நடத்தப்படும் நிலைமை; ஊதியமோ உயிர் வாழக்கூட போதுமானதாக இல்லாத ஊசலாட்டம்; முதலாளிகளின் நிபந்தனைகளோ, அறிவிக்கப்படாத சட்டமாக உள்ள கொடுமை; சனநாயக உரிமைகள் மறுக்கப்படும் அடாவடித்தனம்; தொழிலாளர் சட்டங்கள் காற்றில் பறக்கவிடப்படும் சர்வாதிகாரம்; பாதுகாப்பற்ற பணி; அரைப்பட்டினி வாழ்க்கை; பணியில் நிரந்தரமின்மை; நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்கும் வழியில்லாத அவலம்; நீண்டநேர வேலைப்பளு. இவைபோன்ற கொடுமையான சூழலில்தான் நாடுமுழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தியாவில், ‘உலக மயமாக்கல் என்னும் கொள்கை வெளி நிறுவனங்கள் மூலம் பணி நியமனம் செய்தல் என்கிற நவீனமான சுரண்டல் முறையை’ உருவாக்கியுள்ளது. வெளி நிறுவனங்கள் மூலம் பணியமர்த்துவது. நடுவண் அரசு, மற்றும் மாநில அரசு நிறுவனங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நடுவண் அரசுக் கல்வி நிறுவனங்கள், நடுவண் அரசுத் துறைகளின் உணவகங்கள் ஆகியவை காவல் பணி, தூய்மைப்பணி, பேணல்பணி போன்ற பணிகளுக்கு, தனியார் நிறுவனங்கள் மூலம் ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளன. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவற்றில் குப்பையள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற துப்புரவுப் பணிகளுக்கும், வெளி நிறுவனங்களை நாடுவது வியப்பளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் நியமனம் செய்ய, செவிலியர், மருந்தாளுநர், ஈப்பு ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர்கள், ஆய்வக பணியாளர்கள் எனப் பலரும் வேலைகளில் சேரக் காத்துக்கிடக்கின்றனர்; இவர்களைப் போலவே, அரசு அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள், கணினி இயக்குபவர்கள், உதவித் திட்ட அலுவலர்கள் போன்ற பணிகளுக்கும் ஆட்கள் தேவை. ஆனால், இங்கெல்லாம், வெளி நிறுவனங்கள் மூலம் பணிகளைச் செய்து முடிக்கத் தொடங்குவது, வேலையில்லாத் திண்டாட்டத்தை நிரந்தரமாய்ப் போக்கும் வழியாகாது.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலும் பணியாளர்கள் வெளி நிறுவனங்கள் மூலம் குறைந்த ஊதியத்திற்கு பணியமர்த்தப்படுகின்றனர்.

மேலும், தமிழக சட்டமன்றத்தில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்றபோது, “பேருந்துகளைப் பராமரிக்கும் வேலைக்கு, வெளி நிறுவனங்கள் மூலம் பணி நியமனம் செய்யப்படும்” - என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதே போன்று, தமிழக அரசின் ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை, தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுமென்று ஆதி திராவிட நலத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீது அத்துறை அமைச்சர் அறிவிப்புச் செய்துள்ளார்.

வெளி நிறுவனங்கள் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதை நடுவண் அரசும், மாநில அரசும் ஆதரித்தும் தீவிரமாக அமல்படுத்தியும் வருகின்றன. மேற்கண்ட அறிவிப்புகளே அதற்குச் சான்று!. இம்முறையானது, இங்கிலாந்து நாட்டில் மார்கரட் தாட்சர் ஆட்சியில் “வேலையில், அமர்த்து – பின் துரத்து” (Hire, then fire) என்ற முழக்கத்தோடு கொண்டுவரப்பட்டது. அந்த முறையே, தற்போது ‘உலகமயமாக்கல்’ என்ற போர்வையில், இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படுவோருக்கு குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. ‘பணி ஓரிடம், ஊதியம் வேறிடம்’ - என்ற நிலையுள்ளதால் பணியின் மீது ஊழியர்களுக்கு எந்தவிதமான ஈடுபாடும் ஏற்படுவதில்லை. இந்நிறுவனங்கள், ஊழியர்களைப் பணியமர்த்தியதற்காகவும், ஊதியம் பெற்றுத் தருவதற்காகவும் சேவைக்கட்டணம் என்ற பெயரில் ஊதியத்திலிருந்து ஐந்து விழுக்காடு முதல் பத்து விழுக்காடு வரை பிடித்தம் செய்துகொள்கின்றன. பணியமர்த்துவதற்காகக் கையூட்டுப் பெறுவதும், அதனால் தகுதியில்லாத ஊழியர்களைப் பணிக்கனுப்புவதும், ஊழியர்களுக்கு ஊதியத்தை முறையாக கொடுக்கத் தவறுவதும், அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டுவதும் இவ்வாறெல்லாம் சுரண்டுவதும் அன்றாடம் நிகழும் காட்சிகள்! பணிப்பாதுகாப்பு என்பது அறவே இல்லை. இந்தப் பணி நியமனங்கள் மூலம் குறைந்த ஊதியத்தில் நிறைய வேலைகளைச் செய்து முடித்துக் கொள்ளலாம் என்பது முதலாளி வர்க்கச் சிந்தனை. ஊழியர்கள் ஊதிய உயர்வு கோர முன்வரமாட்டார்கள் என்பதால் அரசு நிறுவனங்களும் இப்பணி நியமன முறையை ஊக்கப்படுத்தி ஆதரவளித்து வருகிறன என்பதே உண்மை.

கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் 1920-களில் “ஓடு குடிகள்” என்ற பெயரில் ஒரு சமூகக் கொடுமை நிலவியது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தம் வாழ்க்கையை நடத்த பண்ணையார்களின் நிலங்களில் அன்றாடம் வேலை செய்ய வேண்டும்; அவர்கள், பண்ணையாரின் நிலங்கள் அல்லது புறம்போக்கு நிலங்கள் அல்லது வாய்க்கால் கரையோரங்கள் போன்றவற்றில் குடிசை போட்டு குடும்பத்துடன் தங்கி வேலை செய்வார்கள். அவர்கள் பண்ணையார்களை எதிர்த்துக் கூலி உயர்வு கேட்டாலோ, சாதி ரீதியாக இழிவுபடுத்துவதை எதிர்த்துக் குரல் கொடுத்தாலோ, பண்ணையார்களால் ஓட ஓட விரட்டப்படுவார்கள். அக்கொடுமைக்கு ஆளான விவசாயக் குடியைத்தான், “ஓடுகுடி” என்று வரலாறு பதிவு செய்துள்ளது. அதேபோன்ற, கொடுமையில் தான், வெளி நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படும் பணியாளர்களின் அவல வாழ்க்கையும் உள்ளது. பணிக்கு வைத்துக்கொள்ளும் நிறுவனம், ‘ஓடிவிடு’ -என்றால் ஓடிவிட வேண்டும் என்ற நிலையில் தான் பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். இதுவே அன்றாடக் காட்சியாக உள்ளது.

வெளி நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, மருத்துவப்படி, நகர ஈட்டுப்படி, வாகனப்படி, குழந்தைகளுக்குப் படிப்புத் தொகை, சீருடை, சலவைப்படி, போனஸ், வீடுகட்டுவதற்கு குறைந்த வட்டியில் கடன், ஓய்வூதியம், போன்றவை எவையும் இல்லை. ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு போன்ற விடுப்புச் சலுகைகளும் கிடையாது. பொது வருங்கால வைப்பு நிதி, குடும்பநல நிதி, பணிக்கொடை போன்ற சலுகைகளும் எதிர்பார்ப்பதற்கில்லை. ஊதியம் மட்டுமே உண்டு. இவ்வாறு பணியமர்த்தும் முறையும் பணியமர்வும் தரத்தில், விளிம்பு நிலையில் உள்ளன.

180 நாட்கள் ஒரு நிறுவனத்தில் ஒருவர் தொடர்ச்சியாகப் பணி செய்தால், அவரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று, ‘இந்திய ஒப்பந்த உழைப்புத் தடுப்புச் சட்டம்’ (­Abolition of Contract Labour Act) கூறுகிறது. ஆனால் ஊழியர் ஒருவர் நிரந்தரம் செய்யப்பட்டால் அவருக்கு சலுகைகளும், உரிமைகளும் தந்து, சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்னும் விதி, இங்கே குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்படுகிறது.

‘உலக மயமாக்கல்’ என்னும் ஒவ்வாத கொள்கையால், வெளி நிறுவனம் மூலம் பணியமர்த்தல் என்பது, தினம் தினம் நடைபெற்று வருகிறது. இது, பிரெஞ்ச் புரட்சிக்காலத்தில் மனிதர்களின் தலையை வெட்டுவதற்கு “கில்லெட்டின்” இயந்திரம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டதோ, அதே போன்று வேலை வாய்ப்பை ஒழிப்பதற்கு, வெளி நிறுவனங்கள் மூலம் பணி நியமனம் (Out Sourcing) என்ற முறை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்டும் வருகிறது.

பணிக்குப் பாதுகாப்பில்லாததும், ஊதியத்திற்கு உத்தரவாதமில்லாததும் வாழ்க்கைக்கு உதவுமா? ‘அமர்த்து – துரத்து’ என்ற கொடிய முறை அலைநடுவே சிக்கித் தவிக்கும் துரும்பு என எளியோரை அலைக்கழிக்காதா? குறைந்த ஊதியத்தில் நிறைந்த பணிச்சுமையைத் தலையில் ஏற்றித் தவிக்க வேண்டுமா? இக்கொடுமைக்கு எதிராக தொழிலாளர் இயக்கங்களும், ஊழியர் சங்கங்களும், நாட்டுப்பற்றுக் கொண்ட நல்லோர்களும் குரல் எழுப்ப வேண்டியது சமூகக் கடமையாகும்.

உழைக்கும் கரங்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புக் கிடைக்கவும், வாழ்க்கைக்குத் தேவையான உயர்ந்த ஊதியம் பெறவும் போராட வேண்டியது அவசியம்! வெற்றியை எட்டுவது காலத்தின் கட்டாயம்!!

- பி.தயாளன்

Pin It