கிணறு வெட்ட, வெட்ட பூதம் கிளம்பியது போன்று, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடந்த 600 நாட்களுக்கும் மேலாக, அறிவார்ந்த முறையில், அறிவியல் பூர்வமாக கூடங்குளம் அணுஉலைத் தொடர்பான பல உண்மைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு, இந்திய மக்களின் மனசாட்சிகளுக்கு தொடர்ந்து எடுத்து சொல்லி, மக்கள் மன்றத்தின் முன்வைத்து வருகிறது. இந்த இயக்கம் எடுத்து வைத்துள்ள அனைத்து நியாங்களுக்கும், இதுவரை மத்திய அரசோ, அணுசக்தித் துறையோ தகுந்த பதில்களை இதுவரை கொடுக்கவில்லை என்பது உலகறிந்த உண்மை. இதற்காக நீதிமன்றங்களையும் நாடியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், கூடங்குளம் அணுஉலை தரமற்ற, தரங்குறைந்த பாகங்களால் கட்டப்பட்டுள்ளன என்றும், இது காங்கிரசு அரசின் மற்றொரு ஊழல் நிறைந்த திட்டம் என்பதை மீண்டும் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்த இக்கட்டுரை இங்கே விழைகிறது. 

ஷியோபோடால்ஸ்க் 

koodankulam_371 ஷியோபோடால்ஸ்க் என்ற ரஷ்ய நிறுவனம், ரஷ்ய நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, பிற நாடுகளில் கட்டப்படுகிற அனைத்து அணுஉலைகளுக்கும் தேவையான தேவைப்படும் நீராவி இயந்திரங்களையும் (Steam Generators) இன்னும் சில முக்கிய அணு உலை பாகங்களையும் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம்/ தொழிற்சாலை. 

கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட வேண்டிய கூடங்குளம் அணுஉலையில் வால்வுகள் பல பழுதடைந்து விட்டன. அதில் சில வால்வுகள் சரி செய்யப்பட்டுள்ளன. சில வால்வுகள் தற்காலிகமாக பழுது பார்க்கப்பட்டுள்ளன, சில வால்வுகள் முற்றிலும் புதிதாக மாற்றப்பட்டுள்ளன என கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த ஆண்டுகளில் அவ்வப்போது சொல்லி வந்தது போலவே, இன்று அவர்கள் சொன்ன கூற்றுக்கள் அனைத்தும் உண்மையாகிப் போய்விட்டது. 

கடந்த 2012 டிசம்பர் மாதம் கூடங்குளம் அணுஉலையில் நடந்த ஹைட்ரோ சோதனையில் (HYDRO TEST) வால்வுகளை தயாரித்த நிறுவனத்தின் கணிப்புப்படி / அவர்கள் சான்றளித்தப்படி அந்த வால்வுகள் சரியாக செயல்பட வில்லை. ஹைட்ரோ சோதனைக்குப் பிறகு வால்வுகள் திறக்கப்பட்டன. ஒன்றுக்கும் மேற்பட்ட, புதியதாக பொருத்தப்பட்ட வால்வுகள் முறையாக செயல்படாத காரணத்தால், அவற்றின் தயாரிப்பை, அவற்றின் தரத்தை சந்தேகப்பட வேண்டியுள்ளது. அணுஉலையை இயக்கப்போகும் நேரத்தில் இத்தகைய தரமற்ற வாழ்வுகளின் செயல்பாடுகள் குறித்து சில தடயங்கள் கண்டறியப் பட்டுள்ளன, அங்கே பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு உதிரிபாகங்களின் தரமும் தரக்குறைவாகவே இருப்பதை நாம் உறுதியாக அறியமுடிகிறது. ஒட்டு மொத்தமாக பார்கின்ற போது, இந்த அணு உலையின் பாகங்களை விற்றவர் மீதும், அவற்றை கொள்முதல் செய்து வாங்கியவர்கள் மீதும் மிகவும் மோசமான, ஆழமான பிரச்சனைகள், சிக்கல்கள், தவறுகள், மோசடிகள் நடந்திருப்பதாகவே தெரிகிறது. 

ரஷ்யாவின் அணுசக்தி துணை நிறுவனங்கள் ஷியோபோடால்ஸ்க் மற்றும் இன்பார்ம்டெக் (Informtech) மீது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டு புலன் விசாரணை, கூடங்குளம் அணு உலையின் கோளாறுகளுக்கு, குற்றச்சாட்டுகளுக்கு, தற்போதைய பிரச்சனைகளுக்கு புதிய திருப்பத்தை, விளக்கத்தை கொடுக்கின்றன. கடந்த பிப்ரவரி 2012, ஆம் ஆண்டு KGB யின் கீழ் இயங்கும் (FSB – Federal Security Service) உளவுத்துறை அதிகாரிகள் ஷியோ போடால்ஸ்க் (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் கிளை அமைப்பின் கொள்முதல் செய்யும் இயக்குனர் திரு.செர்கை ஷுடோவ்வை ஊழல், திருட்டுத்தனம் மற்றும் ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்துள்ளது.ரஷ்யாவின் (FSB – Federal Security Service) உளவுத்துறை அதிகாரிகள் தரம் குறைந்த இரும்புத் தகடுகளை விற்றதாக திரு. செர்கை ஷுடோவ்வின் மீது பகிரங்க குற்றம் சாட்டியுள்ளனர். ரஷ்யாவின் ஊடகச் செய்திகள் குறிப்பாக ஊடக நிறுவனமான ரோஸ்பால்ட் (Rosbalt) குறிப்பிடுவது போல, பல்கேரியா, ஈரான், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கட்டப்பட்டுள்ள ரஷ்ய அணு உலைகளுக்கு உக்ரேனியாவில் கிடைக்கும் தரமற்ற, விலை குறைந்த இரும்புத் தகடுகளினால் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை விற்றதாக ஷியோ போடால்ஸ்க் கம்பெனியின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

கூடங்குளம் அணு உலையில் பழுதடைந்த இந்த வால்வுகள் ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் மூலம் ரஷ்யாவில் இருந்து நமக்கு விற்பனை செய்யப்பட்டதா? அல்லது இந்தியாவிலே வாங்கப்பட்டதா என்பது உடனடியாகத் நமக்குத் தெரிய வில்லை. இத்தகைய தரமில்லாத பழுதடைந்த வால்வுகள் மற்றும் பிற (உதிரி) பாகங்கள் ஷியோ போடோல்ச்க் (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் கிளை அமைப்பின் மூலமாக வாங்கப்பட்டனவையா என்பதை இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக அதன் உண்மையை நாட்டு மக்களுக்கு அறிவிக்க மறுத்து வருகிறது, உண்மைகளை மறைத்து வருகிறது. 

தவறான தகவல்களைத் தரும் இந்திய அணுசக்திக் கழகம்

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இப்படியான கேள்விகளைக் கேட்டால், இந்தியாவில் அணு உலைகளைக் கட்டி, அவற்றை இயக்கி வருகின்ற, செய்கின்ற இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL), ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் மீது அப்படி ஒரு விசாரணை நடப்பது எங்களுக்குத் தெரியாது என்று கொட்டாம்பட்டிக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கிற்கு விலை சொல்லும் கதை போன்று பதில் தருகிறார்கள். பிறகு எங்களின் அணுவிஜய் நகரியக் குடியிருப்பு முற்றுகைப் போராட்டத்திற்கு பிறகு, அணு உலை வளாக இயக்குனர் திரு. ஆர்.எஸ். சுந்தர் மற்றும் அதன் பிற பொறுப்பாளர்கள், கூடங்குளம் அணுஉலையில் நாங்கள் நூற்றி ஒரு (101%) விழுக்காட்டிற்கு மேல் பாதுகாப்புத்தரமான இயந்திரங்களை, உலகத்தரமான வால்வுகளை நாங்கள் இங்கே பொருத்தி இருக்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கிறார். நாங்கள் தென் கொரியாவைச் சார்ந்த எல்.ஜி. எலக்ட்டி ரானிக்ஸ் கம்பெனி, ஜெர்மனியின் சிமென்ஸ் கம்பெனி, பிரான்ஸ் நாட்டின் வாடெக் மற்றும் ஆல்ஸ்டம் போன்ற நிறுவனங்களிடம் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு இயந்திரங்கள் வாங்கி யிருக்கிறோம் என்று இல்லாத ஊருக்கு வழி சொல்கிறார். இது குறித்து கூடங்குளம் அணு உலையின் ஊதுகுழலான இந்து நாளிதழுக்கு மட்டும் பிரத்தியேக பேட்டி கொடுக்கிறார். 

அணுஉலைக்கு தேவையான இயந்திரங்களை தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் தரத்தையும் நாங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டோம். இவற்றின் தரத்தை கண்டறிய நாங்கள் ஹைட்ரோ சோதனைகள் கூட மேற்கொண்டு விட்டோம் என்று வாக்குமூலம் கொடுக்கிறார். தரமில்லாத பாகங்கள் வந்து இறங்கினால், அதை உடனடியாக ரஷ்யாவுக்கு உடனே திருப்பி அனுப்பி விடுவோம். தரமான இயந்திரங்கள் வந்து இறங்கியதற்கான ஆவணங்கள், அவற்றின் தரத்தை பரிசோதித்து பார்த்த திற்கான ஆதார ஆவணங்கள் அனைத்தையும் நாங்கள் சேர்த்து, இதற்கான ஒரு பிரத்தியேக ஆவணக்காப்பக அறை ஒன்றை நாங்கள் பராமரித்து வருகிறோம் என்று தேவையில்லாத, கேட்கப்படாத கேள்விகளுக்கு ஊடகம் வாயிலாக பதில் தருகிறார். இந்த ஆவணக்காப்பகத்தில் இருக்கின்ற ஆவணங்களை தேவை என்றால் நேரடியாக வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என்று வாய்ச்சவுடால் விடுகிறார். ரஷ்யா நாட்டின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ள இத்தகைய மோச மான ஆபத்தான, மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய, பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய உண்மை நிலவரங்களை, நாட்டு மக்களுக்கு சொல்லாமல் இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) வேண்டுமென்றே, திட்டமிட்டே மூடி மறைப்பதாகவே தெரிகிறது.  

பொறுப்பற்ற அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் 

இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியமோ, இந்தியாவின் அணுஉலைகளுக்கு தேவையான இயந்திரங்களை வாங்கும் பொறுப்பு எங்களுடைய பணி அல்ல, மாறாக அதனுடைய இயக்கத்தை, செயல்பாடுகளை மட்டுமே நாங்கள் கட்டுப்படுத்த முடியும் என்று பொறுப்பற்ற வகையில் கைகழுவி விட்டு, தற்போது ஆயிரத்திற்கு மேற்பட்ட வால்வுகள் இருக்கும் போது, நான்கு வால்வுகள் மட்டும் பழு தடைந்து விட்டன. அவற்றிற்கு பதிலாக புதிய வால்வுகள் ரஷ்யாவில் இருந்து வந்த சேர்ந்து விட்டன என்று அவசர அவசரமாக அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் கட்டுரை (18.04.2013 அன்று) எழுதிய பிறகு, எங்கள் அப்பன் குதுருக்குள் இல்லை என்ற அடிப்படையில், இப்படி மேலும் பல உண்மைகளைச் சொல்லி, அணுசக்தித் துறைக்கு இன்னும் இழுக்கு வந்துவிடக் கூடாது என்று கருதி, உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா என்று இல்லாமல், இருக்கிற பெயரை காப்பாற்றும் முயற்சியில், எதிர்கால அணுவணிகத்தைக் கணக்கில் கொண்டு அதிரடியாக இறங்கி இருக்கிறது இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம். உடனடியாக மேலோட்டமாக, சப்பைக் கட்டுக்கட்டிக் கொண்டு, “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க” முயற்சி எடுக்கிறது, அந்த குற்றச்சாட்டுக்களுக்கு முழுவதும் உடந்தையாக செயல்படுகிறது.

இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம். கடந்த ஜூலை18, 2012 அன்று அணுசக்தித் துறையின் சிறப்புச் செயலாளர், ஜே.ஜோஷி, துணைச் செயலாளர் என். குமார், இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் பி.தேசகேசா ஆகிய மூவரும் ரஷ்யாவின் ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்திற்கு சென்று நான்கு நாட்கள் தங்கி இருந்து பேசிவிட்டு வந்ததை இந்திய அணுசக்திக் கழகம் மற்றும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியமமும் திட்டமிட்டே மறைத்து விட்டன. தங்களுக்கு ஒன்றும் தெரியாதவர்கள் போல நடித்து, உண்மைக்குப் புறம்பான தகவல்களை சட்டபூர்வமாக கேட்டும்போது கூட தர மறுத்து ஏமாற்றி வருகிறார்கள்.

இந்திய அரசாங்கம் ஷியோ போடால்ஸ்க் (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் கிளை அமைப்பின் மூலம் கூடங்குளம் அணு உலைக்கு வாங்கப்பட்ட இயந்திரங்கள், மற்ற பாகங்கள் மீது கண்டிப்பாக ஒரு புலன் விசாரணை நடத்தியிருக்கவேண்டும். ஆனால், அப்படி விசாரணை செய்வதற்குப் பதிலாக, இந்திய பிரதமர் அலுவலகம், ரஷ்ய உதவி மூலம் கட்டப்பட்டு வரும் கூடங்குளம் அணு உலையில் விபத்துகள், பேரிடர்கள் எதுவும் நடந்தால், அதற்கு ஏற்படும் செலவை, இழப்பீட்டை இந்திய அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ளும் என்ற உத்தரவாதத்தை ரஷ்யாவிற்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது. இத்தகைய ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்யாவின் செய்தி ஊடகமான ரோஸ்பால்ட் (Rosbalt) மட்டுமே தொடந்து ரஷ்ய மொழியில் சொல்லி வருகிறது. உலகத்தில் உள்ள வேறு எந்த ஆங்கில ஊடகங்களும் இந்த ஊழல் குறித்து பேச மறுக்கின்றன என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.  

அணுஉலை கொதிகலன் சார்ந்த பிரச்சனைகள்  

இது தவிர, இந்திய அணுசக்தி துறையில் ( DAE) பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகளால் சொல்லப்பட்டு 2011 இல் PTI செய்தி நிறுவனத்தின் வழியாக, வெளிவந்த செய்திகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கூடங்குளம் அணு உலை 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலே செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அணு உலைக்கு பல கிலோமீட்டர் தூரத்திற்கு மின் இணைப்பை கொடுக்கும் கேபிள்கள் பதிக்கப்பட்ட பிறகு, அணுஉலையை சுற்றி அணுஉலை கொதிகலனின் மையப்பகுதியை (RPV – REACTOR PRESSURE VESSEL) மூடும் பணிகள் நடந்து முடிந்த பிறகு, அவைகள் காணாமல் போனதாக கூடங்குளம் அணுஉலையை வடிவமைத்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று அந்த PTI செய்தி குறிப்பிடுகிறது. அணுஉலையின் முக்கியமான பாகங்கள் ரஷ்யாவில் இருந்து சரியான நேரத்திற்கு பெறப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டாலும், முன்னரே நீண்ட தொலைவுக்கு பதிக்கப்பட்ட மின்கேபிள்களை தொலைந்து போன காரணத்தால், அதை சமாளிப் பதற்காக, கூடங்குளம் அணுஉலை பாகங்களை வரிசையாகப் பெறுவதற்கு பிரச்சனைகள் இருந்ததாக பின்னாளில் சொல்லப் பட்டது என்று அந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதனால், அந்த (பானை போன்று) டோம்கள் என்று அழைக்கப்படுகின்ற அணுஉலையின் கொதிகலன் மையப் (கூண்டுப்பகுதி) முதலில் பெறப்பட்டதாகவும், பிறகு அதற்கான கேபிள்கள் பின்னர் தாமதமாகப் கிடைக்கப் பெற்றதாகவும் திரித்து சொல்லப்பட்டன. அதே, PTI செய்தி நிறுவனத்தின் செய்திகளை மேற்கோள்காட்டி, இந்த பிரச்சனையானது, அணு உலை கொதிகலன் மையக் கருவில் (Dome – கூண்டு) இருந்து அணு உலையின் பிறபகுதி கட்டிடங்களுக்கு, கட்டுப்பாட்டு அறைகளுக்கு சென்று சேர வேண்டிய, மின் கேபிள்கள் காணாமல் போய் விட்டன, ஆகவே, பின்னர் அதை மீண்டும் பதிப்பதற்காக, அந்த அணுஉலையின் கொதிகலன் மையக்கரு அமைந்துள்ள, அந்த காங்கிரீட் சுவரில் மீண்டும் துளைகளை ஏற்படுத்தி, அவற்றை உடைத்து, சொடுக்கி அறை மையத்தில் (Switch Yard) இருந்து அணு உலையின் மையக்கருவிற்கு மீண்டும் மின் கேபிள்கள் பாதிக்கப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப் பட்டது என்று அந்த செய்தி ஊடகம் தெரிவித்தது. இது மிகவும் மக்களின் உயிருக்கு உலைவைக்கும் ஆபத்தான செயல்பாடாகும்.

அணுஉலை கொதிகலன் மையப்பகுதியில் (RPV – REACTOR PRESSURE VESSEL) இரண்டாவது முறை (நீர் – ஹைட்ரோ பரிசோதனை) மீண்டும் சோதனை என்பது உலகில் வேறு எங்கும் நடக்காத ஒன்று. அது மட்டுமல்ல, அணு உலையின் கொதிகலன் (RPV – REACTOR PRESSURE VESSEL) மையக்கருவை, அதன் காங்கிரீட் சுவரை இடித்துவிட்டு மீண்டும் அந்த டோமை (பானை போன்று வடிவம் கொண்ட) ஒட்டுப் போடுவது என்பது உலக அணுசக்தி வரலாற்றில் நடக்காத ஒன்று. கேள்விப்படாத ஒன்று. மண்டை ஒட்டை கழற்றிவிட்டு, மீண்டும் கபாலத்திற்குள் பொருட்களை வைத்து பொருத்தும் ஒரு செயல்பாடுத்தான் இது போன்ற தலைகீழ் செயல்பாடுகள். 

இசர்ஷோர்கி சவோடி

  ஷியோ போடால்ஸ்க் போன்றே இசர்ஷோர்கி சவோடி என்கிற ரஷ்ய நிறுவனம், அணு உலைக்கு தேவையான கொதிகலன்களை (Reactor Pressure Vessel - RPV) தயார் செய்யும் நிறுவனம் கடந்த 2002ஆம் ஆண்டு கூடங்குளம் அணுஉலைக்கு தேவையான கொதிகலன்ளை வடிவமைக்க முறைப்படியான ஒப்பந்தம் போடும் முன்னரே, கூடங்குளம் அணுஉலைகளுக்கு தேவையான இரண்டு அணுஉலை கொதிகலன்களையும் தயாரிக்க தொடங்கிவிட்டதாக அதன் பொது இயக்குனர் திரு.யோவ்ஜெனி செர்கிவ், அந்த கொதிகலன்களை ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடல் வழியாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவிக்கிறார். இதற்குக் காரணம், கூடங்குளம் அணுஉலை கட்டப் படுவதற்கு தேவையான கொதிகலன்களை உறுதியாக இந்தியா தங்களிடம் தான் வாங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு கிடைத்துவிட்ட காரணத்தால், நாங்கள் அவற்றை முன்ன தாகவே தயாரிக்கத் தொடங்கிவிட்டோம் என்று அந்த வழியனுப்பும் நிகழ்விலே கடந்த 2004 நவம்பர் மாதத்தில் தெரிவித்துள்ளதை ரஷ்யாவில் வெளிவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நாளிதழ் வெளியிட்டுள்ளது. 

இது கூடங்குளம் அணு உலையில் நடைபெற்றுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. அந்த இசர்ஷோர்கி சவோடி நிறுவனம் தயாரித்த இந்த அணுஉலைக் கொதிகலனில் தான் வெடிப்புகள், பற்ற வைப்புகள் (Welding) இருப்பதாக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வல்லுனர் குழு சுட்டிக்காட்டிய பிறகு இந்திய அணுசக்திக் கழகம் இறுதியாக ஒப்புக்கொண்டுள்ளது. (வெல்டுகள்) பற்ற வைப்புகள் இல்லாமல் இருந்தால்தான் அது பாதுகாப்பான அணுஉலை. அல்லது இது வேதி வினை புரியும் போது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் அணுஉலையின் பல்வேறு பகுதிகளில் ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் பாகங்கள், கூடங்குளம் அணு உலையின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக அணுஉலை கொதிகலன் பகுதிகளில் (RPV) பொருத்தப்படிருக்கின்றன. பொருத்தப்பட்டு அவைகள் சீல் வைத்து மூடி வைக்கப்பட்டுள்ளன. அவைகளால் தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால், அணுஉலை இயங்கத் தொடங்கும் போது தான், அந்த தரமற்ற பாகங்கள் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டும். மக்களின் பாதுகாப்பிற்கு அவைகள் உறுதியாக பெரிய கேடு விளைவிக்கும். 

காலதாமதம் ஏன்?

  கடந்த 2007 ஆம் ஆண்டு முதலே கூடங்குளம் அணுஉலைகளை இயக்க நாள் குறித்த இந்திய அணுசக்தித்துறை, இன்று வரையிலும் அவற்றை இயக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. (எ.டு) அணுசக்தி ஆணையத்தின் உறுப்பினரான வரும், தமிழக அரசின் வல்லுநர் குழுவில் இடம் பெற்றவருமான திரு.எம்.ஆர். சீனிவாசன், குறிப்பிடும்போது, கூடுதல் பாதுகாப்பு காரணங்களுக்காக, நாங்கள் சில வால்வுகளை பொருத்த வேண்டிய சூழ்நிலையில், அணுஉலையின் அடிப்படை ஒரிஜினல் வடிவத்தையே மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அது தான் அணுஉலை குறித்த நேரத்தில் இயக்குவதற்கான காலதாமதத்திற்கு காரணமாக அமைந்து விட்டதாக குறிப்பிடுகிறார். இந்தியாவிலும், ரஷ்யாவிலும் தயாரிக்கப்பட்ட இந்த வால்வுகள் அணுஉலை மற்றும் அதன் கொதிகலனோடு பொருந்தி வருவது மிகவும் சிரமாகவே உள்ளது. இதிலே சில சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்சொன்ன தரக்கட்டுப்பாட்டு முறைகள், உறுதிப்பாடுகள் அனைத்தும் அணு உலைக்கான பாகங்கள் வாங்கியது முதல், அவற்றை பொருத்தியது வரை முறையாக கண்காணிக்கப் பட்டிருந்தால், தற்போது நடந்திருக்கும் இடியாப்பச் சிக்கல் போன்று எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. இது வரை அணுஉலையில் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற, அதை இயக்குவதற்கு தடையாக உள்ள அனைத்து பழுதடைந்த, குறைபாடுகள் நிறைந்த வால்வுகளும் பிற துணை இயந்திர அமைப்புகள் முழுவதும் ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் தயாரிப்புகளே என்பதை முற்றிலுமாக இதன் மூலமாக அறுதியிட்டுக் கூறமுடியும்.

விழித்துக்கொண்ட நாடுகள்

இந்த ஷியோ போடால்ஸ்க் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட இந்த உதிரி பாகங்களால் இந்தியா, பல்கேரியா, ஈரான், சீனா போன்ற நாடுகளில் கட்டப்பட்டுவருகிற அனைத்து உலைகளும் இந்த குற்றத்திற்கு, மோசடிகளுக்கு, சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளன. பல்கேரியா நாடு ஏற்கெனவே, இந்த குற்றச்சாட்டு குறித்து ரஷ்யாவின் ஆட்டம்ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட் அமைப்பிடம், ஷியோ போடால்ஸ்க் கம்பெனி மூலம் வழங்கப்பட்ட அனைத்து பாகங்களின் தரச்சான்றிதழ்களைக் கேட்டு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை அறிந்த சீனா 3000 கேள்விகளுக்கு மேலாக ஆட்டம்ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட் அமைப்பிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். இப்படியாக ஷியோ போடால்ஸ்க் கம்பெனி விற்பனை செய்த தரங்குறைந்த இயந்திரப்பாகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யவில்லை எனில், மிகப் பெரிய பேரிடரை இந்தியா சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் ஆர்மீனியன் தலைநகரில் செயல்படும் “பெல்லோனா” (BELLONA FOUNDATION) என்ற அமைப்பும், இப்படி ஆய்வு செய்யவில்லை என்றால், வரக்கூடிய பேரிழப்பை சந்திக்க, இந்திய நாட்டில் வரிகட்டும் மக்கள் தான் இந்த சுமையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ரஷ்யாவின் சுற்றுச்சூழல் நிறுவனமான “இகோ டிபென்ஸ்” (ECO - DEFENCE) எச்சரிக்கை விடுகிறது.

ஊழலை கண்டுகொள்ளாத இந்திய அரசு

ஷியோ போடால்ஸ்க் (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் கிளை அமைப்பின் கொள்முதல் செய்யும் இயக்குனர் திரு.செர்கை ஷுடோவ்வை ஊழல், திருட்டுத்தனம் மற்றும் ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்தது ரஷ்யாவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு நிச்சயம் உறுதியாக தெரிந்திருக்கும். இவரை கைது செய்த்ததினால் கூடங்குளம் அணு உலைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு ஆபத்து குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்தக் கைது குறித்து இந்திய அணுசக்தித் துறைக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும், நிச்சயம் தகவல் கொடுத்திருப் பார்கள். ஆனால், இந்திய அணுசக்தித் கழகமோ அல்லது இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியமோ இது குறித்து ஒன்றும் தெரியாதது போல, அறியாமையில் இருப்பது போல நடிக்கிறார்கள். இதனுடைய விளைவுகள், பாதிப்புகள் குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால், இந்திய அரசு, காங்கிரசு கட்சி, ரஷ்ய நாட்டு அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்து கொண்டு இந்த கைது குறித்தும், கூடங்குளத்தில் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற பாகங்கள் குறித்தும் இந்திய மக்களுக்கு உண்மையை சொல்ல மறுத்து, எல்லாம் நன்றாக இருப்பதாக மக்களை ஏமாற்றி நாடகமாடி வருகின்றனர்.

இதில் நடந்துள்ள அனைத்து ஊழல்களையும் பூசி மறைக்கப் பார்க்கின்றனர். அணுசக்தித் துறையின் சிறப்புச் செயலர் ஷியோ போடால்ஸ்க் கன்பெனிக்கு கடந்த ஆண்டு 2012 சென்று எவ்வாறு இந்த குற்றச்சாட்டுக்களை, ஊழலை மூடி மறைக்கலாம் என்று திட்டம் தீட்டி இருக்கிறார்கள். அதனால் தான் இந்தியப் பிரதமர் ரஷ்ய அதிபரை பார்க்கும் போதெல்லாம் கூடங்குளம் அணுஉலைகளைத் தொடங்குவதற்கு நாள் குறித்து விட்டு வருகிறார், நாட்டு மக்களின் பாதுகாப்பை அடகுவைத்து விட்டு வருகிறார். அணுஉலைத் திட்டத்தில் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருகிறார். ரஷ்யாவின் காலடியில் சரணடைந்து தன்னுடைய அரசைக் காப்பாற்ற மன்றாடிவிட்டு வருகிறார்.

கடந்த டிசம்பர் 2012 அன்று நடந்த முதல் சோதனை, தற்போது இரண்டாம் முறை மீண்டும் நடத்தப்படும் முழு ஹைட்ரோ போன்ற சோதனையின் அனைத்து உண்மைகளையும் வெளிப் படையாக அறிவித்து, அந்த சோதனை முடிவுகளின் விடைகளை இந்திய அணுசக்தி நிறுவனம் சுதந்திரமான பொது மக்கள் ஆய்வு உட்படுத்த வேண்டும். அதன் பிறகு, மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் முழுமையான, முறையான புலன் விசாரணைகள் செய்யப்பட்டு மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும். ஷியோ போடால்ஸ்க் (Zio–Podolsk) நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட அனைத்து பாகங்களையும், அதன் தரத்தையும் ஆய்வுக்கும், விசாரணைக்கும் உட்படுத்தி நாட்டு மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். 

தரமற்ற மின் கேபிள்கள்

பல ஆண்டுகளாக, சொல்லப் போனால் 25ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் கூடங்குளம் அணுஉலையைத் தொடங்குவதற்கு முன்னரே, பல வால்வுகளில் பழுதுகள், கசிவுகள் என்று பல விதமான தடங்கல்கள், பிரச்சனைகள் தொடர்ந்து வந்த வண்ணமாய் உள்ளன. அடிக்கடி ஏற்படும் மின்கசிவினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு பல தொழிலாளர் கள் இறந்தும் வருகின்றனர். மின் கசிவு காரணமாகவே பல நூறு தொழிலாளர்கள் செத்துப் போனதாக அதிரவைக்கும் பல செய்திகள் அவ்வப்பொழுது வெளிவருகின்றன. பல இறப்புகள் மூடி மறைக்கப்படுகின்றன. கூடங்குளம் அணுஉலையில் பொருத்தப்பட்டுள்ள மின்கேபிள்  களின் தரமும் இன்று கேள்விக் குறியாகியுள்ளது.

மின்சாரத்தைக் கடத்தும் இந்த மின் கேபிள்கள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடுக்கப்படும் சமிக்ஞைகளை (Sensors) சரியாக உணர்ந்து கொள்ள முடியாமல், அங்கிருந்து கொடுக்கப்படும் உத்தரவுகளை சரியாக நிறைவேற்ற முடியாமல், தவறான முறையில் அந்த உத்தரவுகளை புரிந்து கொண்டு, அணுஉலையில் இருக்கும் பல தானியங்கி (Automatic) இயந்திரங்களை அந்த உத்தரவுகளுக்கு ஏற்ப இயக்க முடியாமல் செய்து விடுகின்றன. இதனால் பல நேரங்களில் பெரிய விபத்துகள் நடக்கவும் காரணமாக அமைகின்றன. பல நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு, பல ஒப்பந்த தொழிலாளர்கள் இறந்து விடுகின்றனர். மாயமாகப் போய் விடுகின்றனர். இப்படிப்பட்ட உயிருக்கு உலைவைக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நடந்து வரும் நிலையில், இவைகள் அனைத்தும் உண்மையாகும் சூழலில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் உயிர்களை துச்சமென மதிக்கின்றன. இந்த நாசகார அணு உலையை மூட மறுக்கின்றன என்பது மிகவும் கேவலமான நிலை. இது மாபெரும் பேரழிவை ஏற்படுத்தும்.

கூடங்குளம் ஒரு பரிசோதனைக் கூடமா?

கூடங்குளம் முதல் அணுஉலை, எங்களுக்கு ஒரு பரிசோதனைக் கூடமாக இருக்கிறது. (LAB– ஆய்வுக் கூடமாக). முதல் அணுஉலையில் இருந்து, நாங்கள் இடண்டாம் அணு உலைக்கான பாடங்களை கற்றுக் கொள்கிறோம்) என்கிறார் அணுஉலையில் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், இதிலிருந்து முதல் அணுஉலையின் நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். – (IANS செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு.-2011)

தற்போது, கூடங்குளம் அணுஉலைகளுக்கு அதிகப்படியாக கூடுதலாக மேலும் 4000 கோடி செலவிடப் பட்டுள்ளதாக அணுசக்திக் கழகம் சொல்லுகிறது. அணு உலைகள் இயக்கப்படும் நிலையில் இருக்கும் போது, ஏன் கூடுதலான செலவு என்று மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். தரமற்ற பாகங்களை மீண்டும் மீண்டும் கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவாகிறதா அல்லது நடந்த ஊழல் பேரங்களை மறைக்க மேலும் கையூட்டு கொடுக்கப்படுகிறதா? என்று காங்கிரசு அரசு விளக்க வேண்டும். 

இந்த இலட்சணத்தில் கூடங்குளம் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டது என்றால் ரஷ்ய நிர்வாகம் பொறுப்பெடுக்காதாம்?! இந்திய உயிர்களுக்கு இங்கே மதிப்பே இல்லை. இந்திய உயிர்கள் அவ்வளவு மலிவாகப் போய்விட்டன நமது ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களால். 

மின்சாரவியல் (Electrical) மின்னணுவியல் (Electronical), இயந்திரவியல் (Mechanical), பொறியியல் (Engineering) போன்ற அனைத்து துறைகளிலும் இடியாப்பச் சிக்கல் போன்ற பல தாறுமாறான பிரச்சனைகளினால், கூடங்குளம் அணுஉலைகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்திய அணுசக்தித்துறை என்ன செய்வதென்று அறியாமல் சிக்கித் தவிக்கிறது என்பது தான் இனியும் மறைக்க முடியாத உண்மை.

ஆகவே, மக்களின் பாதுகாப்புக்கருதி, பேரிடரை தவிர்க்க முதல் அணுஉலையை இயக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடுங்கள்,

இரண்டாவது, அணுஉலையில் நடைபெறும் கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்துங்கள். ஒட்டுமொத்தமாக அணுஉலைகள் மூடுங்கள். எரிசக்திக்காக சூழல்நேய மாற்றுத்திட்டங்களை செயல்படுத்துங்கள்.

இனியும் வேண்டாம் இன்னொரு செர்நோபில்... , மற்றொரு புகுஷிமா.... அதுவும் நம் மண்ணில்!                                                                                             

தரங்கட்ட அணுசக்தித் துறை அதிகாரிகளால், அதிகார வர்க்கத்தினரால், அமைச்சர்களால் கட்டப்பட்டு, மக்களின் உயிருக்கு உலை வைக்கும் தரமற்ற கூடங்குளம் அணுஉலைகளை இழுத்து மூடுவோம்!

மத்திய, மாநில அரசுகளே மக்கள் பாதுகாப்பில் சமரசம் செய்யாதே !

கூடங்குளம் அணுஉலைகளில் கையூட்டுப் பெற்றவர்களை கைது செய்து நடவடிக்கை எடு. !   

- ம.புஷ்பராயன், அமைப்பாளர், கடலோர மக்கள் கூட்டமைப்பு

Pin It