விடுதலைப் புலிகள் இறுதி வான் தாக்குதலை நடத்திய நாள் பிப்ரவரி 29, 2009 . தாக்குதல் நடத்தப் பயன்பட்டவை இரு மென் ரக விமானங்கள்; வீசிய இரு குண்டுகளின் எடை 56 கிலோ; அதற்கு மேல் அந்த விமானங்களால் எடுத்துச் செல்ல முடியாது. மக்கள் பெருமளவு கூடும் இடங்களில் வீசினாலும் மூன்று பேருக்கு மேல் உயிரிழப்பு நிகழாது. "இராணுவ நெருக்குதல் அதிகமாகிவிட்டது; இனி அவைகளை அங்கு வைத்திருக்க முடியாது" என்று கருதி, விமானங்ளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக தாக்குதலைத் திட்டமிட்டார்கள். 

பிப்ரவரி 29- நள்ளிரவு. வீதிகளில் மக்கள் நடமாட்டமோ, அலுவலகங்களில் பணியாற்றுபவர்களோ இல்லாத நேரம். கொழும்பின் கொம்பனித் தெருவில் உள்ள இராணுவப் பாதுகாப்பு வளையத்தில் செயல்படும் இராணுவ முகாம் மீது குண்டு வீசப்பட்டது. அது இராணுவ முகாம் மீது விழாமல் முன்னாலிருந்த வருவாய்த் துறை அலுவலகத்தின் மீது விழுந்தது. உயிரிழப்பு எதுவும் இல்லை. இன்னொரு குண்டு கட்டுநாயக விமானப் படைத் தளத்தின் மீது வீசப் பட்டது. இராணுவ இருப்புகளை நோக்கி வீசப் பட்டதே தவிர, கல்விச் சாலைகள், மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்கள், சந்தை, வணிக வளாகம் போன்ற மக்கள் திரளும் இடங்களில் புலிகள் குண்டு வீசித் . தாக்குதல் நடத்தியதாக வரலாறு இல்லை. மாறாக சிங்கள ராணுவம் இவைகளையே செய்தது. புலிகளது இறுதி விமானத் தாக்குதலை- “அத்தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் ஐநூறு சிங்களவர் செத்திருக்கலாம்" என்று ஒரு சில மேதாவிகள் விமர்சனப் படுத்துகிறார்கள் (23-3- 2013. தினமணி நாளிதழில் சமஸ் என்பவர் எழுதிய கட்டுரை; சமஸும் அவர் போன்ற சில மார்க்ஸீய குழப்பவாதிகளுக்குமான பதிலளிப்புகள், விளக்கப்படுத்தல்களாகவே எனது இக்கட்டுரை வெளிப்பட்டுள்ளது.) 

eelam_students_636

எந்த ஒரு பிரச்சினையையும் எத்திசை நோக்கி நகர்த்துவது என்பதற்கான முன் சமிக்ஞையாக திரித்து எழுதப்படுதல் இவர்களின் எழுத்துக்கு மூலமாய் அமைந்திருக்கிறது. இவர்களின் கருத்து, பார்வை, செயல் என சகலத்தின் முன்னோட்டமும் இந்தப் பணிக்காக மாறி விடுகிறது.

"தமிழீழத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாமாகவோ சர்வதேச நாடுகளாகவோ இருக்க முடியாது; ஈழத்தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும்” போன்ற சில சொற்பமான கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 

எந்தவொரு புதிய முன்மாதிரியையும் நமது பொதுப்புத்தி ஏற்றுக் கொள்வதில்லை. ஆகப் பெரிய சிந்தனையாளர்கள் எனச் சொல்லப் படுகிறவருக்கும் வரலாற்று முன்மாதிரிகளைக் காட்டி எதையும் உசுப்பி விட்டால்தான் உறைக்கும் என்பது தமிழ்ச்சமூகப் பொதுப்புத்தியின் வழமை. 

அல்ஜீரிய மக்கள் பிரான்சின் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடினர். மக்களின் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது பிரெஞ்சு அரசு. “அல்ஜீரிய மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்போம். ராணுவத்தில் சேரமாட்டோம்” என எதிர்த்தனர் பிரான்சின் இளையவர்கள். மிகப்பெரிய எழுத்தாளரும் பிரெஞ்சு அறிஞருமான ழீன் பால் சார்த்தரே இளைஞர்களின் இந்த மறுப்பு நியாயமானது என்று வரவேற்றார். ‘தேசபக்தியின் பெயரால் நடக்க இருந்த மோசடியை முறியடித்து விட்டார்கள்’ என்று பாராட்டி அல்ஜீரிய விடுதலைக்கு தோள் கொடுத்தார். 

தமது காலனியாதிக்கத்தின் கீழ் இருக்கும் அல்ஜீரிய விடுதலைக்கு பிரெஞ்சுத் தேச இளைஞர்களும், சிந்தனையாளர்களும் குரல் கொடுத்தனர். அது போன்றதே வியட்னாமின் விடுதலையும்! கொடிய ஆக்கிரமிப்பின் கீழ் தளைபட்ட மக்கள் விடுபடப் போராடியபோது உலகம் அவர்களுடன் இணைந்தது. எந்த வல்லரசு அவர்களை ஆக்கிரமித்ததோ அதே அமெரிக்காவின் உள்ளிருந்தே இளையோரும் அறிஞர்களும் எதிர்ப்புக் கொடியேந்தினர். அல்ஜீரியவுக்காக- வியட்னாமுக்காக அந்த மக்களே போராட வேண்டும்; அவர்களின் விடுதலையை அவர்களே பெற்றுக் கொள்வார்கள் என்று எந்த மார்க்ஸிய விஞ்ஞானியும் பின்நவீனத்துவ வித்தகர்களும் பேசிடக் கணோம். 

வடக்கு, கிழக்கு தமிழ்ப்பரப்பில் ஐந்து பேருக்கு ஒரு சிங்களப் படையாள். போதாதென்று சிங்களப் போலீஸ், கப்பற்படை என்று நெருக்கிப் பின்னிய இந்த நெருக்குவாரத்திற்குள் வேதனை மூச்சுவிடும் தமிழர்கள் எப்படித் தமிழீழத்துக்கான நடவடிக்கைகளை வெளிப்படுத்த முடியம்? கல்யாணத்தில் ராணுவம்; கருமாதிச் சடங்கில் ராணுவம்; கடவுளை வழிபட்டு வேதனையை ஆற்றிக் கொள்ளப் போனால் கோவில் வாசலிலும் ராணுவப் பிரசன்னம். 

காணாமல் போன தம் உறவுகளை மீட்டுத் தரக் கோரி 7-3-2013 அன்று ஆயிரக் கணக்கில் வன்னியிலிருந்து பெண்கள் கொழும்பில் ஐ.நா. அலுவலர்களிடம் முறையிட பத்து பேருந்துகளில் புறப்பட்டார்கள். இராணுவம் தடுத்து நிறுத்தியது. வேறு வழியின்றி பெண்கள் வன்னியிலிருந்த இலங்கை அரசின் அலுவலர்களிடம் கையளித்துத் திரும்பினார்கள். இச் செய்தியை ஐ.நா. பொதுச் செயலர் பான்.கி.மூன் கவனத்திற்கு கொண்டு சென்ற போது “கொழும்பில் ஐ.நா. பணியகத்தில் தான் அளிக்க வேண்டுமென்பதில்லை. அதற்கு வேறு வழிகள் பல உள்ளன” என ஓரம் ஒதுங்கிக் கொண்டார். இது கடந்த காலங்களில் ஐ.நா. கடைபிடித்த ஒருபக்கச் சார்பையும் இன்று அங்குள மக்கள் நிலையையும் தெளிவாய் எடுத்துரைக்கிறது. 

மண்மீட்பிற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு மாணவர்கள் நினைவேந்தல் செலுத்த மெழுகுவர்த்தி ஏந்தும் உரிமையை மறுத்த ராணுவம், யாழ் பல்கலைக் கழகத்திற்குள்ளேயே நுழைந்து அடித்து நொறுக்கியது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். யாழ் பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஸானந்த், சாலமன் உட்பட நான்கு மாணவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக் கொட்டடியில் தள்ளப்பட்டவர்கள் இன்னும் விடுவிக்கப்படவே இல்லை. 

மக்களும் மாணவர்களும் ஈழத்தில் ஒலிக்க இயலாத குரலை இங்குள்ள மாணவர்கள் எதிரொலிக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது என தமிழகம் முழுவதும் நீதியின் குரல் பரவுகிறது; புலம்பெயர்ந்தோரும் தாய் பூமியிலுள்ளவர்களும் துணையாக நடப்பார்கள் எனில் என்ன தவறு? இன்று அங்குள்ள தமிழர்கள் எழுந்து நிற்க இயலாது. எழுந்தால் காணாமல் போவார்கள். செத்துப் போனவர்கள் தவிர மீதமிருப்போரை உயிரோடு கொல்லும் திட்டமிட்ட இனப் படுகொலையை (structural genocide) சுனாமி வேகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது இராஜபக்ஷேயின் அரசு. 

இன்று தமிழகத்தின் சொந்தங்கள் ஈழ மண்ணுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்; மட்டுமல்ல, இலங்கை நட்டுவைத்த உலகக் கொடுமையின் உயரமான விருட்சம் வேறெங்கும் துளிர் விடக்கூடாது என்ற மானுடநேயப் பார்வை கொண்டவர்களாய் மாணவர்கள் வெளிப்பட்டிருக்கிறார்கள். 

நீதி, நிர்வாகம், மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புக்கள் (நாடாளுமன்றம், சட்டமன்றம்) ஊடகம் என்பவை சனநாயகத்தை தாங்கி நிற்கும் நான்கு தூண்கள்-இவை எல்லாற்றையும் இலங்கை நாசப்படுத்தி விட்டது. இராணுவம் எனும் ஒற்றைத்தூண் நிமிர்ந்து நிற்கிறது. உள்நாட்டு கருத்துத் தளங்கள் இறுக மூடப்பட்டுவிட்டன. கட்டுரை, கவிதை, கதை, நெடுங்கதை, பத்தி எழுத்து (colums writtings), தலையங்கம், செய்தி வெளிப்பாடு, கேலிச் சித்திரம் என அறிவார்ந்த செயல் பக்கங்கள் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளன. பொதுக் கூட்டம், அரங்க நிகழ்வு, தெருமுனைக் கூட்டம், மேடை-போன்ற வாய்மொழி வெளிப்பாடுகளும் தடை செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் அறிவார்ந்த உரையாடல் தளம் உலக அளவில் தன்னியல்பாய் திறந்து கொண்டுள்ளது. இந்த அறிவு சார் உரையாடல் தளத்துகுள் தான் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகத்தின் புலம்பெயர் தமிழர்களும் செயற்படுகின்றனர். இன்று ஈழத்தின் பிரச்சினை ஈழமக்களது பிரச்சினை அல்ல. முதன் முதலாய் ஈழ விடுதலைப் போராட்டம் உலக நிகழ்வு நிரலுக்குள் நகர்த்தப் பட்டுள்ளது. தமிழன் என்பதால் இந்தப் போரைப் பற்றிப் பேசுதலைக் கடந்து, உலக மனிதனென்பதாலும் உரையாட வேண்டியுள்ளது. உரையாடல் செய்வோரை அவர்கள் தமிழினமாக அமைந்து விட்டார்கள் என்பதாலே மவுனிக்க வேண்டும் என்பது எவ்வகைத் தர்க்கம்? 

 இப்படியொரு அறவழிப் பட்ட மாணவர் கிளர்ச்சியை இதன்முன் வேறெங்கும் கண்டிருக்க முடியாது. தமது போராட்டத்தினூடாக மக்களையும் இணைத்து ஆகப் பெரிய சமூக எழுச்சியாக (social uprising) ஆக்கியிருக்கிறார்கள். மத்திய அரசின் மன சாட்சியையும் அரசியல் கட்சிகளின் சுயநலப் போக்கையும் குத்திக் கிளறி, தட்டிக் கேட்கும் வகையில் அந்தச் சமூக எழுச்சியை வார்க்க செயற் திட்டங்களை மாணவர்கள் தற்போது அறிவித்திருக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றும் பிழை நேரலாம். புத்த பிக்கு மீது தாக்குதல், சுற்றுலாப் பயணியர் மீது தாக்கி திருப்பி அனுப்பியது என நடந்த ஒன்றிரண்டு இப்போது மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது. . இதனைக் கும்பல் மனோபாவம் எனச் சாயம் அடித்து, ஒரு சமூக எழுச்சியை ஏற்க நெஞ்சில்லாது முன்கூட்டிய கருத்து ஒன்றை தனக்குள் வைத்துக் கொண்டு அதை மெருகேற்றப் பயன்படுத்தும் வார்த்தைகளில் பிண நாற்றம் அடிக்கிறது. 

1960-ல் ஐரோப்பாவை உலுக்கிய ”பாரீஸ் மாணவர் எழுச்சி” போல்- 

1956-ல் இலங்கையின் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழிச் சட்டதையும் 1976-ல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முயற்சியையும் மூர்க்கத்தோடு எதிர்த்துத் துவைத்த தமிழ்மாணவர் பேரவை போல்- 

1983-ல் சீனாவின் கம்யூனிஸ கொடுங்கோலர்களை சனநாயக உரிமைகளுக்காய் எதிர்த்துக் களத்தில் நின்ற சீன மாணவர் எழுச்சி போல்- 

இன்று மாணவர் போராட்ட அலைகள் பொங்கியுள்ளன. தமிழக அரசியலை இந்த அலைகள்-குறிப்பாய் மூன்று வகைகளில் மாற்றியமைத்து விட்டது. 

ஒன்று-அணுசக்திக்கு எதிரான கூடங்குள போராட்ட இயக்கம் போல் அரசியல்வாதிகளை தொலைவாய் நிறுத்தி விட்டார்கள்; விரட்டியடித்துள்ளார்கள் எனலாம். 

இரண்டு-காங்கிரஸின் கூட்டணியிலிருந்து கடைசி ஞானோதயம் போல் தி.மு.க.வை வெளியேற வைத்தார்கள். 

மூன்று- தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் வரலாற்றுச் சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றச் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து அலை அலையாய் எழும்பிய போர்க் குணத்தின் சாதனைகள் இவை . 

 -2- 

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம் என நான்கு மாதங்கள் முன்பு இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. புதிய காணிச் சட்டம் என இதற்குப் பெயர். ஒவ்வொரு அரச மரத்தின் அடியிலும் புத்த விகாரை கட்டுவது இன்று தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். பவுத்த -சிங்கள மயத்துக்கான அனைத்தும் அங்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் -வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ’காணிகள் உரிமைச் சட்டம் மாகாண சபைகளுக்குரியது’ என்ற அடிப்படையை இந்த புதிய காணிச் சட்டம் இல்லாமல் செய்து விடுகிறது. தட்டிக் கேட்க இந்திய அரசுக்குத் திராணி இல்லை. 

புனிதப் பிரதேசம் (sacred place)  என்று சில பகுதிகளை அறிவித்து சுவீகரிக்க இந்த புதிய காணிச் சட்டம் வழி செய்கிறது. புனிதப் பிரதேசம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பத்து மைல் சுற்றளவில் உள்ள எந்த குடியிருப்பும், கட்டிடங்களும் ஆலயங்களும் அகற்றப்படும். கோயில், மசூதி, கிறித்துவ ஆலயம் எதுவென்றாலும் அகற்றப்படுகின்றன; நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்கள், இஸ்லாமியரின் பள்ளி வாசல்கள், கிறித்துவ தேவாலயங்கள் இடிக்கப் படுகின்றன. இடிக்கப் பட்டவை புணரமைக்கப் படவில்லை. ஆனால் புதுசு புதுசாக புத்த விகாரைகள் எழுப்பப் படுகின்றன. 

தமிழ் மக்களை, தமிழினத்தின் கலாசாரத்தை, மொழியை அழிப்பது வரை துணையாக இஸ்லாமியரை அரவணைத்தார்கள். இப்போது சிறுபான்மையினராகிய இசுலாமிய அழிப்பு வேலையில் தீவிரம் கொண்டு அவர்கள் பாரம்பரியமாக வாழும் காணிகள் அபகரிப்பு, பாரம்பரிய வாழ்விடங்களில் பள்ளிவாசல்கள் இடிப்பு, இஸ்லாமிய 'கலால்’ ரத்து என படு மோசமாக நடக்கிறது. "பொதுபல சேனா” என்ற பவுத்த தீவிரவாத அமைப்பு ’கலால் ரத்து’ போன்ற பல இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது. 

பவுத்த-சிங்கள பேரினவாதம் தமிழ்-இஸ்லாமிய அரசியல், பொருளாதார, கலாச்சார அழிப்பை செய்து, சிங்கள மயமாக்கலை தொடர்ந்து துரிதப் படுத்தியுள்ளது. சாதாரணமாகக் கட்டப்படும் அரசுக் கட்டிடம் கூட பவுத்தக் கட்டிடக் கலை பாணியில் எழுப்பப் படுகிறது. குடியிருப்புகளும், அலங்கார வளைவுகளும் சின்னங்களும் எல்லாமும் பவுத்தக் கட்டிடக் கலையோடு கூடி எழுகின்றன. தமிழ்க் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டப்படுகின்றன. இன்னும் இரு ஆண்டுகளில் வட கிழக்குப் பகுதிகள் சிங்கள மயமாகிவிடும். அமெரிக்க தீர்மானம் என்ற பெயரில் அமெரிக்க அனுசரணையுடன் அதற்கான ஓராண்டு காலத்தை ஐ.நா. மன்றம் வழங்கியுள்ளது. அடுத்த ஒரு ஆண்டும் இந்தியா-அமெரிக்க துணையோடு "வாய்தா” வாங்கிவிட இலங்கை முயற்சி செய்யும். அத்துடன் தமிழரின் கதை முடிக்கப் படும். 

eelam_students_427

இப்போதும் ஐ.நா.வின் மனித உரிமைக் கதவுகள் திறந்தே இருக்கின்றன. வரும் மே-27-ல் உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை விவாதிக்க ஐ.நா. மனித உரிமை அவை கூடுகிறது. அப்போது வாக்களிக்க உரிமையுள்ள நாடுகளில் ஒன்று இலங்கைப் பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மாற்றுத் தீர்மானம் கொண்டு வரலாம். வாக்களிக்க உரிமையுள்ள நாடுகளில் இந்தியா ஒன்று. இந்தியா இந்த மாற்றுத் தீர்மானத்தினை கொண்டு வருமா? அல்லது “தோளில் ஏறின செல்லப் பிள்ளை காதைக் கடித்தது போல்” ஏற்கனவே கேவலப் பட்டுப் போன தனது முகத்தையும் இலங்கை கடித்துக் குதறி இன்னும் பங்கறைப் படுத்த அனுமதிக்குமா? 

மனித உரிமைகளை காலடியில் நசுக்கி, மக்களைப் படுகொலை செய்த சிரியா நாட்டின் ஆட்சியாளர்கள் மீது சர்வதேச விசாரணையை நடத்திட ஐ.நா. அண்மையில் தீர்மானம் நிறைவெற்றியுள்ளது. அப்படியான முன்மொழிதலை இலங்கை மீது செய்யாததற்கு இந்தியாதான் காரணமாக இருக்கிறது. கழுத்து நெரிக்கும் அனைத்துலகக் கரங்களுடன் காந்தி தேசக் கரமும் இணைகிறது. 

“ஆட்டாளுக்கு ஒரு மோட்டாளு;

அடப்பக் கட்டைக்கு ஒரு துடப்பக் கட்டை”

என்கிற மாதிரி அமெரிக்காவுடன் இணைந்து இந்துப் பெருங்கடல் அரசியலை வசப்படுத்த இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது வர்த்தக நலன்களுக்காக முண்டுகின்றன. ஆளும் வர்க்கக் குழுக்களது கைப்பாவையாய் இயங்கும் இந்திய தாசர்கள் அமெரிக்க உதவியுடன் இலங்கையை தாஜா பண்ண முயலுகிறார்கள். 

இவ்வளவு கொடூரங்களையும் கோலோச்சும் சிங்கள அரசை “போருக்குப் பின் மெல்ல இன அடிப்படைவாதப் போக்கிலிருந்து விலகி வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது” என இந்திய ஆட்சியாளர்கள் போலவே சொல்வது இருபத்தோராம் நூ ற்றாண்டின் முதல் தரமான நகைச்சுவை. இலங்கை அரசியலுக்கு முட்டுக் கொடுத்து பகை மறுப்பு, நல்லிணக்கம் பேசுகிற சில மார்க்சியக் கோமாளிகளின் சுகமான கற்பனை இது எனலாம். 

இன அடிப்படை வாதத்திலிருந்து இலங்கை இம்மியாவது அசைந்தது என ஆதாரங்கள் காட்ட முடியுமா? இருந்தால் தானே? தமிழக நிகழ்வுப் போக்கு இலங்கையை மீண்டும் அடிப்படை வாதத்தை நோக்கித் தள்ளிவிடும் என்ற அச்சம் எதற்கு? ஏற்கனவே அந்தப் புதை சேற்றில் மூழ்கிக் கொண்டிருப்பவனைக் காட்டி பயமூட்டி தமிழ்க் குரல்கள் மேலெழ விடாது செய்யும் சூழ்ச்சிக்காரர் பேசியதல்லவா இத் தர்க்கமில்லா வெற்றுப் பேச்சு! 

ஈழத் தமிழர்களின் இன்றைய உடனடித் தேவை எவை? உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றும் மூலாதாரப் பிரச்சினைகள். ஈழத்தமிழருக்கு இவை மூன்றையும் விட முக்கியமானது அரசியல் சுதந்திரம். அது இருந்தால் இந்த மூன்றையும் அடையும் வழிகள் கணக்கில்லாமல் திறந்து கிடக்கின்றன. ஆனால் இதை அப்படியே மாற்றி "இன்றைக்கு ஈழத் தமிழர்களின் அடிப்படைத் தேவை பொருளாதார மீட்சியும் ராணுவ மயமாக்கலிலிருந்து விடுவிப்பும்" என தலைகீழாய்ப் பார்க்கிறார்கள் சில கருத்துருவாக்கிகள்; இந்திய ஆட்சியாளர்கள் பொருளாதார வளர்ச்சி என்பதை மட்டும் நா புண்ணாகும் அளவு சொட்டாங்கு போட்டுப் பேசுவார்கள். இராணுவம் அகற்றப் படுதல் பற்றி உச்சரிப்பதில்லை. கருத்துருவாக்கிகள் இதையும் தடவிக் கொடுப்பதுபோல் உச்சரிப்பார்கள். 

ஈழத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி இலங்கை போடும் பிச்சை அல்ல; இந்தியாவோ, அமெரிக்கா போன்றவையோ அளிக்கும் கருணைத் தொகைகளால் உருவாவது அல்ல. தமிழர் நிலம், தொழில். வாழ்வு, உறைவிடம் அனைத்தும் மீட்டெடுக்கப் பட்ட பின்னரே, பொருளாதார வளர்ச்சி சாத்தியம். முதலில் மூச்சு விடும் சுதந்திரம் வேண்டும் அவர்களுக்கு. 

அவர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் செய்யும் அனைத்துச் சதி நாடகங்களையும் எதிர்கொண்டு, ஈழத் தமிழர்களின் சுதந்திரமும் நல்வாழ்வும் தான் போராடுபவர்களின் இலக்கு. அது யாரையோ எவரையோ திருப்திபடுத்த நடத்தப் படுவது என உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம். "இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் மலர இருக்கும் தமிழ் ஈழம்” என்று ’க்’ வைத்துப் பேசுகிறபோது இவர்களின் உள்ளக் கிடக்கை தமிழீழ விடுதலை அல்ல என்பதும் பிடிபட்டுப் போகிறது. போர்க் குணம் எனப்படுவது நட்டி வைத்து பின் ஒதுங்குகிற வேலை அல்ல; நடுச் செங்கல் உருவுகிற காரியமும் அல்ல. 

"மானுடம் எங்கு வதை படுகிறதோ அங்கெல்லாம் எனது கவிதை பேசும். வியட்நாம் போராட்டம் நிகழ்ந்த போது ஒரு வியட்நாமியனாக எனது கவிதை கலகம் செய்தது. சிலியில் அலண்டே கொல்லப்பட்ட போது சிலிக் குடிமகனாக எனது கவிதை கோபம் கொண்டெழுந்தது. 1971-ஆம் ஆண்டு சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அவர்களுடன் சேர்ந்து என் கவிதை அழுதது. யாழ்ப்பாணத்தில் சாதி ஒழிப்புப் போராட்டம் நடைபெற்ற போது அந்தப் போராட்ட சக்திகளோடு இணைந்து என்னுடைய குரலும் ஒலித்தது. மாறி மாறி தடி கொடுத்து ஓடும் அஞ்சலோட்டம் போல -இப்போது தமிழ் இனத்தின் சார்பாக எனது குரல் கேட்கிறது. இந்தப் பணி முற்றுப் பெறும்போது, வேறு எங்கு வதைக் குரல் கேட்கிறதோ என் கவிதைகளுக்கூடாக நான் அங்கு போய்ச் சேருவேன். இந்தத் தொடர் ஓட்டம்தான் எனது செல்நெறியாக இருக்கிறது." 

என்கிறார் ஈழக் கவி இரத்தின துரை. 

ஆம், தொடர்ஓட்டம் தான். போர்க் குணம் என்பது தொடர் ஓட்டம் தான். 

ஒரு தேசிய இன விடுதலைக்கெதிராய் கருத்து உருவாக்கத்திலும், கழுத்து நெரிப்பிலும் பாதகம் செய்வோரை அடையாளம் கண்டுகொள்வது தனித் திறமை; அப்போது-

” பாதகம் செய்வோரைக் கண்டால்

 மோதி மிதித்து விடு பாப்பா “

என்ற பாரதியைத் தான் துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது.

- பா.செயப்பிரகாசம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It