நீண்ட காலமாகத் தமிழர்களின் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருவது பொங்கல். இவ்விழா தமிழ்ப்பண்பாட்டுடன் இணைந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பொங்கல் விழாவின் பண்பாட்டுக் கூறுகளை விளங்கிக் கொள்வதற்கு தமிழர்களின் சமூக வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியம்.

தமிழர்கள் யார்? இந்தக் கேள்விக்கான பதில் தேடும் ஆய்வு நெடுங்காலமாக நடந்து வருகிறது. தமிழ் நிலத்தில் பிறந்து வளர்ந்த அனைவரும் தமிழர்கள் என்று எளிமையாகச் சொல்லி விடலாம். அப்படியென்றால் தமிழ் நிலம் என்பது எது என்ற கேள்வி எழுகிறது. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியப் பாயிரம் ஒரு எல்லை வரையறையைத் தருகிறது. வட வேங்கடம் என்பது இன்று ஆந்திராவுக்குச் சொந்தமாகிவிட்ட திருப்பதியைக் குறிக்கும். தென் குமரி என்பது தெற்குத் திசையில் உள்ள குமரி (கன்னியா குமரி) என்றும், குமரிக்குத் தெற்குத் திசையில் (அதாவது கடலில்) இருந்த பகுதி என்றும் இருவிதமான கருத்துகள் உள்ளன. எப்படியாயினும் தமிழ்நிலம் என்பது இன்று சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள பகுதி மட்டுமே.

இந்நிலப் பகுதி மட்டுமின்றி குமரியிலிருந்து சிறு தொலைவில் உள்ள இலங்கையின் பல பகுதிகளும் தமிழர்கள் வாழ்ந்த, வாழும் நிலங்கள்தான். இன்று இது தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து வேறு நாடாக இருந்த போதும் நீண்ட காலமாகத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே இலங்கை கருதப்பட்டுள்ளது. இன்று அண்டை மாநிலமாக விளங்கும் கேரளாவும் சேரநாடு என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியதுதான். இவ்வளவு நிலப்பகுதிகளிலும் வாழ்ந்து வந்த ஒரு பெரும் இனக்கூட்டம்தான் தமிழர் எனப்படும் இனம்.

இந்தத் தமிழினத்துக்கென்று தனித்த பண்பாடு உண்டு. ஆரியர்கள் உள்ளிட்ட பல்வேறு இனத்தவரின் வருகையினால் இப்பண்பாட்டுக் கூறுகள் தனித்தன்மை இழந்து கலப்பினப் பண்பாடுகளாக மாறிப் போயுள்ள நிலையில் தமிழர்களின் பண்பாட்டை அடையாளம் கண்டு மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

பண்பாடு என்றால் என்ன? இதுவும் ஒரு சிக்கலான கேள்வி. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகை ஒரு விளக்கம் தருகிறது. ஓர் இனக்கூட்டத்தின் பண்பாடு என்பது அந்த இனக்கூட்டத்தின் வாழ்வியல் முறைகளின் தனித்த கூறுகளைக் குறிக்கிறது. பாடு என்ற சொல் அக்கூட்டத்தின் உற்பத்தியைக் குறிப்பதாகும். பாடுபடுதல் என்பது உற்பத்திக்காக உழைத்தலைக் குறிக்கும். உற்பத்திக்கும் பண்பாட்டிற்கும் உள்ள உறவை மேற்கண்ட கலித்தொகை வரி உணர்த்துகிறது. அதாவது உற்பத்தி முறையைப் பொறுத்தே பண்பாடு அமையும்.

பண்டைத் தமிழ்ச் சமூகம் நிலம் சார்ந்த உடைமைச் சமூகம். இச்சமூகத்தின் உற்பத்தி உறவுகள் அனைத்தும் நிலம் சார்ந்து உருவாக்கப்பெற்றவை. மேல்கட்டுமானத்தில் உள்ள பண்பாடு என்பது அடிக்கட்டுமானமான உற்பத்தியைப் பொறுத்தே அமையும் என்கிறது மார்க்சியம். சங்க இலக்கியங்களில் தமிழ்நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பாகுபடுத்தப்படுகிறது.

இவ்வைந்து திணைகளுக்கும் உரிய வாழ்வியலை நோக்கும் போது ஐந்து நில மக்களும் வேறுபட்ட பண்பாடுகளைக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. இதில் மருதம் (வயலும் வயல் சார்ந்த இடமும்) மட்டுமே நிலவுடைமைச் சமூகத்தின் முழுமை பெற்ற வடிவமாகக் காணப்படுகிறது. குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்) வேட்டைச் சமூகத்தின் எச்சத்தையும் நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க நிலையையும் ஒருங்கே கொண்டுள்ளன.

நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்)நிலப்பகுதி மேற்கண்ட மூன்று திணைகளுக்குரிய உற்பத்தி முறைகளிலிருந்து வேறுபட்டது. நெய்தற் திணையில் உற்பத்தி என்பது நிலப்பகுதியைச் சாராமல் நீர்ப்பரப்பாகிய கடலைச் சார்ந்தது. எனவே மற்ற திணைகளிலிருந்து வேறுபட்ட பண்பாட்டு அடையாளங்களை இத்திணை கொண்டுள்ளது.

ஐவகைத் திணைப்பகுப்பில் பாலைத்திணைக்கு இறுதி நிலையே தரப்பட்டுள்ளது. பாலை தவிர்த்த மற்ற நால்வகை திணைகளுக்கே விருப்பத்துடன் கூடிய முக்கியத்துவத்தைத் தமிழர்கள் அளித்துள்ளனர். இதற்குக் காரணங்கள் உண்டு. பாலைத்திணை எனும் தனித்த நிலப்பகுதி எதுவும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை.

'குறிஞ்சியும் முல்லையும் முறைமையிற் திரிந்து
பாலையென்பதோர் படிமம் கொள்ளும்'

என்று தொல்காப்பியத்தில் பாலைத் திணைக்கான வரையறை சுட்டப்படுகிறது. அதாவது குறிஞ்சி எனும் மலைப்பகுதியும் முல்லை எனும் வனப்பகுதியும் தன்னுடைய வளங்களை இழந்து வறண்டு போகும் போது அந்தப் பகுதி பாலை நிலம் என்று குறிப்பிடப்படுகிறது.

மருதத்திணை என்பது பண்பட்ட விவசாய நிலமாக உருப்பெற்றுள்ளதால் இந்நிலம் வறண்டு பாலையாக மாறுவதாகக் குறிப்பிடப்படவில்லை. மற்ற நால்வகை நிலங்களைப் போல் பாலை நிலத்தில் நில உற்பத்தி சார்ந்த உறவுமுறைகள் கிடையாது. ஏனென்றால் அங்கு உற்பத்தி என்ற ஒன்றே கிடையாது. குறிஞ்சியும் முல்லையும் நிலவளம் குன்றி வறண்டு பாலையாக மாறும் நிலையில் அங்கு உற்பத்தி என்று பெரிதாக நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே உற்பத்தி உறவுகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். பாலைத்திணைக்குரிய பண்பாடுகளை பாலைக்கலி மற்றும் பட்டினப் பாலை போன்ற இலக்கியங்களில் அறியமுடிகிறது.

இந்த வகையில் பார்க்கும் போது ஒவ்வொரு நிலத்துக்கும் அதனதன் உற்பத்தி சார்ந்த அறுவடைக் கொண்டாட்டங்கள் இருந்து வந்துள்ளன. மற்ற திணைகளை விட நிலைத்து நின்று வாழப் பாதுகாப்பான நிலப்பகுதியாக மருதம் உருவெடுத்த நிலையில் அது பெரும்பான்மை மக்களின் திணையாகவே மாறியது. தமிழ்நாட்டின் பெரும் நிலப்பரப்பு விவசாயம் சார்ந்த உற்பத்தி முறைக்கு ஏற்றதாக இருந்ததால் தமிழ்ச் சமூகம் வேளாண்மை சார்ந்த நிலவுடைமைச் சமூகமாக உருப்பெற்றது.

விவசாய நிலங்களின் பண்பாடு மற்ற திணைக்குரிய சிறுபான்மை நிலப்பகுதிகளிலும் தாக்கம் செலுத்தியது. எனவே மருதத் திணையில் அறுவடைக் காலக் கொண்டாட்டங்கள் மற்ற திணை சார்ந்த மக்களிடம் பரவியது. இதனால் மருத நில மக்களின் அறுவடைக் கொண்டாட்டமான பொங்கல் விழா தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமாக மாறியது. இப்பொங்கல் விழாவுடன் தொடர்புடைய பண்பாட்டுக் கூறுகள் தமிழர்களின் அடையாளங்களாக நிலைபெற்றன.

வயல்களில் ஆண்டு முழுவதும் பாடுபட்ட பலன்களை அறுவடை செய்யும் தை மாதத்தின் தொடக்க நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. வயலில் பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராவதில் விவசாயிக்கு மட்டுமின்றி இயற்கைக் கூறுகளுக்கும் பங்குண்டு. அந்த வகையில் பயிர் உற்பத்திக்கு ஆதாரமான ஒளியைத் தரும் சூரியனுக்கும், நீரைத் தருவதாகக் கருதப்படும் இந்திரனுக்கும், மனிதனுடன் இணைந்து உழைக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகப் பொங்கல் விழாவைத் தமிழர்கள் கருதி வருகின்றனர். விவசாய கிராமங்களில் இவ்விழாவை நன்றி செலுத்தும் விழா என்று குறிப்பிடுகின்றனர்.

தீட்டுப்படாத விழா:

பண்டைத் தமிழர்களின் வாழ்க்கை முறை கொண்டாட்ட மயமானது. பூந்தொடை விழா, இந்திர விழா, உள்ளி விழா, தை நீராடல், தைப்பொங்கல் எனப் பலப்பல விழாக்களைக் கொண்டாடிக் களித்துள்ளனர். இவற்றுள் இன்று எஞ்சியிருக்கும் ஒரே பெரும் கொண்டாட்டம் பொங்கல் மட்டுமே.

பாவை நோன்பு எனப்படும் தைநீராடலுக்கும் பொங்கலுக்கும் தொடர்புண்டு. தை மாதத்தில் பாவை செய்து நீராடி வழிபடுவதே தை நீராடல் விழா. இதில் வழிபடப்படும் பாவை மண்ணால் செய்யப்படுவது. மண் என்பது நிலத்திற்கான குறியீடு. உற்பத்திக்குக் களனாகி வாழ்வளிக்கும் நிலத்தை வழிபடுவதே இவ்விழாவின் நோக்கம். இவ்விழாவில் பறை இசைத்து ஆடப்படும் குரவைக்கூத்து, வள்ளைக்கூத்து, உலக்கை இடித்து ஆடும் ஆட்டம் போன்றவை இடம் பெற்றன. இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

தை மாதப் பவுர்ணமி நாளில் பாவை நோன்பு எனப்படும் தைநீராடல் கொண்டாடப்பட்டதாகப் பரிபாடல் குறிப்பிடுகிறது. தை மாதப் பவுர்ணமி நாள் தைப்பூசமாகத் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தைப்பூச விழாவே அந்நாளில் தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டதாக பேராசிரியர் தொ.பரமசிவன் குறிப்பிடுகிறார்.

தற்போதும் தென் மாவட்டங்களில் தைப்பூச நாளில் சிறுவீட்டுப் பொங்கல் என்றொரு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பீர்க்கு, பூசணி, செம்பருத்தி, போன்ற பூக்களை சாணத்தில் பொதித்து வைப்பர். அவை மாலையில் வாடி விடும். இதனைப் பொங்கல் முடிந்து 8 முதல் 15 நாட்களுக்குப் பிறகு (கிட்டத்தட்ட தைப்பூசம் அன்று) சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப் படும் போது ஆற்றில் விடுவர். வீட்டினுள் களிமண்ணால் சிறிய வீடு கட்டி அதன் முன்பாக பொங்கல் வைத்துப் படைப்பார்கள்.

சிறுவர், சிறுமியரால் கொண்டாடப்படும் இதுவே தைநீராடல் என்று ஆண்டாளால் குறிக்கப்படுகிறது. ஆனால் ஆண்டாள் காலத்தில் பாவை நோன்பு மார்கழி நாளில் தொடங்குவதாக மாற்றம் பெற்றுள்ளது. திருப்பாவையின் முதல் பாடல் ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்’ என்று தொடங்குகிறது. அதாவது பாவை நோன்பு விழா மார்கழி மாதப் பவுர்ணமி நாளில் தொடங்கி தை மாதப் பவுர்ணமியில் முடிவடைகிறது. தை மாதத்தில் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்பட்ட பாவை நோன்பு பிற்காலத்தில் சமயத்தாக்கம் பெற்று மார்கழி மாதத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம்.

ஆரியப் பண்பாட்டின் தாக்கத்துக்கு உட்படாத தமிழர்களின் தனிப்பெரும் விழா பொங்கல் மட்டுமே. பிறப்பு, இறப்பு போன்றவற்றால் உண்டாகும் தீட்டு பொங்கலுக்கு இல்லை. மேலும் சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் பயிர்கள் உயர்சாதியினரால் விலக்கப்பட்டவை. இவற்றுக்குப் பொங்கல் விழாவில் முக்கிய இடம் காலங்காலமாக தரப்பட்டு வருகிறது. தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவைச் சித்திரை முதல் நாளில் கொண்டாடும் வழக்கம் பின்னாளில் அன்னியர்களால் திணிக்கப்பட்டது. (காண்க: தமிழ்ப் புத்தாண்டு அரசியல்)

சல்லிக்கட்டு:

பொங்கல் விழாவுடன் இணைத்துக் கொண்டாடப்பட்டு வரும் மாட்டுப் பொங்கல் தனிச்சிறப்புடையது. பயிர் உற்பத்தியில் மனிதனுடன் இணைந்து, மனிதனை விட அதிகப்படியான உழைப்பைத் தரும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக சல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு நிகழ்த்தப்படுகிறது. இது குறித்த சர்ச்சைகள் ஆண்டு தோறும் தொடர்வது வழக்கமானது. அலங்காநல்லூர், பாலமேடு, உறங்காபட்டி, சிராவயல், அரளிப்பாறை, விராலிமலை போன்ற ஊர்களில் சல்லிக்கட்டு சிறப்புடன் நடத்தப்படுகிறது.

சல்லிக்கட்டு குறித்த செய்திகள் தமிழ் இலக்கியங்களில் தென்படுகின்றன. ஏறு தழுவுதல் என இது குறிக்கப்படுகிறது. தொடக்கத்தில் இது முல்லை நில மக்களான ஆயர்களால் நிகழ்த்தப்பட்ட விளையாட்டு. ஆயர்களின் பொருளாதார அடித்தளம் மாடுகளுடன் இணைந்தது. மாட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையைக் கொண்ட ஆயர்கள் அவற்றை வைத்து விழாச் சடங்குகளை நிகழ்த்திக் கொண்டாடினர். சங்க இலக்கியமான முல்லைக்கலிப் பாடல்களிலும், சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலும் ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத நிலத்திலும் மாடுகளுக்கு முக்கியத்துவம் பேணப்பட்டுள்ளது. முல்லைத் திணைக்குரியதாயிருந்த ஏறு தழுவுதலை ஆதிக்கம் மிக்க உற்பத்தி நிலமாயிருந்த மருத நிலம் தனதாக்கிக் கொண்டது. சல்லிக்கட்டு என்பது விளையாட்டு மட்டுமின்றி, உற்பத்தி சார்ந்த பண்பாடாகவும் விளங்குகிறது. அக்காலத்தில் சல்லிக்கட்டில் வெல்பவனுக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இங்கு சல்லிக்கட்டில் வெல்வது என்பது வெறும் விளையாட்டு வெற்றியல்ல. அதனைத் தாண்டி உழைப்பின் அளவை அறியும் முயற்சியாகக் கொள்ள முடியும்.

தமிழ் நாட்டின் பெரும்பான்மைத் தொழில் விவசாயம் என்றிருந்த நிலையில் விவசாய நிலத்தில் கடுமையாக உழைப்பவனே பொருளாதார வளர்ச்சியைப் பெற முடிந்தது. அப்படி உழைப்பதற்கு வலிமையான உடலும், மன உறுதியும் தேவை. அதனை அறிவதற்கான ஒரு அளவீட்டு முறையாக (Assessment) சல்லிக்ககட்டு பயன்பட்டுள்ளது. வயலில் கடும் உழைப்பைத் தரும் மாட்டைத் தன் உடல் வலிமையால் வெல்பவன் நிச்சயம் கடுமையான உழைப்பாளியாக விளங்கி உயர்வான் என்று மக்கள் நம்பினர். சல்லிக்கட்டில் மாட்டை வெல்வது எளிதான ஒன்றல்ல. மாட்டுக்கு இணையான வலிமையும், மாட்டின் சிறு சிறு அசைவுகளையும் புரிந்து கொள்ளும் கூர்த்த அறிவும் அதற்கு மிக அவசியம். அவ்வாறான தகுதிகளைப் பெற்றவன் கடின உழைப்புடன் உற்பத்தியைப் பெருக்கி வளமான வாழ்வைத் தம் பெண்ணுக்கு நிச்சயம் அளிப்பான் என்று அம்மக்கள் நம்பியதால் சல்லிக்கட்டில் வெல்பவனுக்குப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் பண்பாட்டைப் பேணியுள்ளனர்.

மாட்டு வண்டிப்பந்தயம் (ரேக்ளா) என்பது மாடு பிடிப்பது போன்றே மாட்டை விரட்டுவதில் உள்ள வல்லமையை அளவிடும் ஒரு விளையாட்டு. விவசாய உற்பத்தி முறையில் மாட்டை நிர்வகிக்கும் திறனை அளவிட இப்போட்டி பயன்பட்டுள்ளது. தற்போதும் மதுரை (தெற்குத் தெரு) மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

இன்று இது போன்ற வீர விளையாட்டுகளில் வெல்பவனுக்குப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் பண்பாடு மறைந்து விட்டது. இதற்குக் காரணம் பொருளாதார உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றமும் அதன் விளையாக உண்டான சமூக மாற்றங்களும்தான். இன்று விவசாயம் சார்ந்த உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் அதிலிருந்து சேவைப் பொருளாதார முறைக்கும் சமூகம் தாவிச் செல்கிறது. இந்நிலையில் விவசாயத்தில் கடும் உழைப்பைத் தருவது என்பது பொருளாதார மேம்பாட்டுக்கான அடையாளம் இல்லை என்றாகிவிட்டது. எனவே இது போன்ற போட்டிகளில் பரிசாக பொன், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை தரப்படுகின்றன.

இன்று சல்லிக்கட்டுக்கு எதிர்ப்புகளும் கிளம்புகின்றன. குறிப்பாக சல்லிக்கட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற வாதம் எழுகிறது. இதற்குப் பதிலளிக்க சல்லிக்கட்டுடன், ஸ்பெயின் நாட்டின் காளைச்சண்டை (Bull fight) எனும் வீர விளையாட்டை ஒப்பிட்டுப் பார்க்கலாம். உலகப்புகழ் பெற்ற இந்த விளையாட்டு ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்திய இடங்களிலெல்லாம் பரவியது.

காளைச் சண்டை நடக்கும் மைதானத்தில் காளையுடன் ஒரு வீரர் மட்டுமே இடம்பெறுவார். அவர் இச்சண்டைக்கெனத் தயாரிக்கப்பட்ட பிரத்தியேக ஆடையை அணிந்திருப்பார். கையில் பாரம்பரியக் கொடி ஒன்றை அசைத்தபடி அந்தக் காளையைத் தூண்டி விடுவார். இன்னொரு கையில் கூர்மையான ஈட்டி ஒன்றை வைத்திருப்பார். காளை அவரை நோக்கிப் பாயும் போது லாவகமாக விலகிக் கொண்டு அதன் உடலில் ஈட்டியால் குத்தித் தாக்குவார். உடலில் ரத்தம் வழிய அந்தக் காளை தொடர்ந்து அவரைத் தாக்க முயற்சிக்கும். மீண்டும் மீண்டும் அவர் தன் ஈட்டியால் அதனைக் குத்திக் காயப்படுத்துவார். மைதானத்தை விட்டு வெளியேற வழியின்றி காளை தொடர்ந்து உடலில் பலத்த காயங்களைப் பெற்று ஒரு கட்டத்தில் கீழே விழுந்து செத்து மடியும். அந்த வீரர் வெற்றி வீரராக அறிவிக்கப்படுவார்.

ஸ்பெயின் நாட்டில் இந்த விளையாட்டு பன்னெடுங்காலமாக நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலேயே இவ்விளையாட்டு நிகழ்த்தப்பட்டதை கான்டபிரியா எனுமிடத்திலுள்ள அல்டாமிரா குகையில் கிடைத்த தொல் பழங்கால ஓவியங்களின் மூலம் அறியமுடிகிறது. இத்தனை காலமாக ஒரு காளையைக் குத்திக் கொல்வதை வீர விளையாட்டாக அந்நாட்டினர் கொண்டாடியுள்ளனர். இவ்விளையாட்டுக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் சல்லிக்கட்டைப் போன்றே பார்சிலோனாவில் நடைபெறும் காளைச்சண்டை உலகப்புகழ் பெற்றது. இந்தக் காளைச் சண்டை கடந்த ஆண்டுடன் நிறுத்தப்பட்டது.

இந்தக் காளைச் சண்டையில் நடப்பதைப் போல சல்லிக்கட்டில் காளை மாட்டின் ரத்தம் துளி கூட சிந்தப்படுவதில்லை. மாட்டின் திமிலைப் பிடித்தபடி சில நிமிடங்கள் நீடிப்பதே சல்லிக்கட்டில் வெற்றியாக அறிவிக்கப்படுகிறது. எனவே இவ்விளையாட்டில் காளை மாடு கொடுமைப்படுத்தப் படுவதாகக் கூறுவது ஏற்க முடியாதது. ஆனால் சில வேளைகளில் மனிதர்களுக்கு காயங்களும், உயிர்ச் சேதமும் கூட ஏற்படுவதுண்டு. அவ்வாறு நிகழா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தடுக்க வேண்டுமே தவிர, சல்லிக்கட்டு எனும் பண்பாட்டு விளையாட்டையே தடை செய்ய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

குக்கர் பொங்கல்:

உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களைச் சந்தைப் படுத்துவுதற்காக அந்தந்த நிலப்பகுதிகளில் உருவானதே நகரம் எனும் அமைப்பு. சான்றாகச் சங்ககாலம் முதற்கொண்டே சிறந்து விளங்கியதாகக் குறிக்கப்பெறும் மதுரை நகரம். இந்நரகத்திலும், சுற்றியுள்ள ஊர்களிலும் உற்பத்தியாகும் வேளாண் பொருட்களைச் சந்தைப் பரிமாற்றத்துக்கு உட்படுத்துவதற்காக உண்டானதே இந்த நகரம்.

வேளாண் சமூகத்தைத் தொடர்ந்து வந்த முதலாளித்துவச் சமூக அமைப்பில் இது போன்ற நகரங்கள் தன்னளவில் பெருத்துப் போயின. அத்துடன் புதிய நகரங்கள் பலவும் உருவாயின. நகர்மயமாதலின் விளைவாக சிற்றூர்கள் சிறிய நகரங்களாகவும் சிறிய நகரங்கள் பெரும் நகரங்களாகவும் மாறிவருகின்றன.

இன்று நகரங்களுக்கும் நிலம் சார்ந்த உற்பத்தி முறைக்கும் தொடர்பே இல்லை எனலாம். மருத நில உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு உருவான மதுரையின் நகர்ப்பகுதிக்குள் இன்று மருத நிலப்பகுதி என்று எதுவும் கிடையாது. வேளாண்மை சார்ந்த உற்பத்தி முறைக்கு இந்த நகரம் மெதுவாக அன்னியப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கும் பொருந்தும். இதனால் நில உற்பத்தி முறை சார்ந்த பாரம்பரியப் பண்பாடுகளுக்கும் நகரங்களுக்கும் தொடர்பில்லாத நிலை உருவாகியுள்ளது. பொங்கல் உள்ளிட்ட விழாக்கள் மக்களின் வாழ்வியல் பண்பாடு என்ற நிலையிலிருந்து மாறி வெறும் சடங்குகளாகப் படிந்து போயுள்ளன. இவ்விழாக்களின் இடத்தை தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு போன்ற அன்னியக் கொண்டாட்டங்கள் எளிதாகப் பிடித்துக் கொண்டு விட்டன.

இன்று நகரங்களில் கொண்டாடப்படும் பொங்கல் விழா அதன் அடிப்படையை இழந்து போயுள்ளது. ஆனால் சமூக மாற்றத்தில் இது தவிர்க்க முடியாததும் கூட. வீட்டு வாசலில் சூரியன் உதிக்கும் நேரத்தில் யாரும் இன்று பொங்கல் வைப்பதில்லை. நாட்காட்டியில் நல்ல நேரம் பார்த்து நண்பகல் பொழுதில் சமையலறையில் வெறும் சடங்காகப் பொங்கல் வைக்கின்றனர். சூரியனைப் பார்த்துக் கொண்டே குலவைச் சத்தத்துடன் பொங்க வேண்டிய பொங்கல், விசில் சத்தத்துடன் குக்கரிலிருந்து வெளிவரும் ஆவியாகக் காற்றில் கரைகிறது.

Pin It