குழந்தைகளை வீட்டு வேலைகளுக்கு அமர்த்துவது சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி வேலைக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால்,நமது சமுதாயத்தில் வசதிபடைத்த உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே குழந்தைகளை வேலைக்கமர்த்துகின்றனர்,இது அநியாயமானதாகும்.  வேலைக்கு அமர்த்தப்படும் குழந்தைத் தொழிலாளர்கள், சுயகௌரவமும், சுதந்திரமும், நட்பும் இல்லாமல்,தனிமை வாழ்க்கைக்கு விடப்படுகிறார்கள்”.இவ்வாறு மாகசசே விருது பெற்றவரும், குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான சாந்தா சின்ஹா கூறுகிறார்.

 இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் உள்ளனர்,அவர்கள் வேளாண்மைப் பணிகளான நிலங்களை உழுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் , பருத்தி எடுத்தல்,போன்றவற்றிலும், கால்நடை வளர்த்தல், காடுகள் வளர்த்தல், மீன் வளர்த்தல், ஆகிய பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.  சுரங்கத்தொழில்,தோல் பதனிடும் தொழில்,கல்லுடைத்தல்,கண்ணாடிப் பொருட்கள் தயாரித்தல்,வளையல் தயாரித்தல்என இங்கெல்லாம் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.வீட்டில் சமைப்பதும்,துணி துவைப்பதும்,சுத்தம் செய்வதும் குழந்தைத் தொழில்களாக மாறி வருகின்றன. நகரில், தேநீர் விடுதிகள்,உணவகங்கள், இனிப்பகங்கள் போன்றவற்றிலும்,ஜரிகை உற்பத்தி, பட்டு உற்பத்தி, கம்பள விரிப்பு தயாரிப்பு, பீடி சுற்றுதல்,செங்கல் அறுப்பு போன்ற தொழில்களிலும் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

இந்திய அரசின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் 2001-ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 12 கோடியே 26 லட்சம் பேர் உள்ளனர்.  அவர்கள் பல்வேறு வகையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது 1991-ஆம் ஆண்டின் எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிகமாகும். 

குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு முக்கிய காரணம் குறைந்த கூலியும்,  அதிகமான நேரம் வேலை வாங்குதலும் ஆகும். இந்தியாவில் வறுமையில் வாழ்வோர் பெரும்பான்மையாக உள்ளதால்,தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.  இம்முறையினால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. 

 குழந்தைத் தொழிலாளர்களை (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986ன்படி 14 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தைகள் என அழைக்கப்படுவார்கள்.  இச்சட்டம் குழந்தைகளை 13வகையான தொழில்களிலும் மற்றும் 53வகையான தொழில் நடைமுறைகளிலும் ஈடுபடுத்துவதைத் தடை செய்கிறது. இச்சட்ட விதிமுறைகளுக்கு மாறாகக் குழந்தைகளைப் பணியில் அமர்த்தினால் மூன்று  மாதம் முதல்  ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது ரூபாய் 10,000/- முதல் 20,000/- வரையிலான அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுகிறது. 

 தேசிய குழந்தைத் தொழிலாளர்கள் கொள்கை 1987ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.  அதில், தீமையை ஏற்படுத்தும் தொழில்களில்,குழந்தைகள் ஈடுபடுத்தப்படாமல் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டப் பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளின் குடும்பங்கள் பயனடையும் வகையிலான வளர்ச்சித் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், 12 தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டங்களை உருவாக்குதல், சிறப்பு பள்ளிகளின் வாயிலாக அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் போன்றவை அதில் அறிவிக்கப்பட்டன.

இந்திய அரசியல் சட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கான கீழ்க்கண்ட சட்ட  திருத்தங்கள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. 

பிரிவு 21ஏ கல்வி பெறும் உரிமை:இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். 

பிரிவு 24: தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் குழந்தைகள் பணிபுரிவதைத் தடை செய்தல் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் 14வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொழிற்சாலைகளிலோ அல்லது சுரங்கங்களிலோ அல்லது தீமை ஏற்படுத்தும் வேறு தொழில்களிலோ ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. 

பிரிவு 39 :குழந்தைகளின் நலன்களைப் பாதுகாப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கொள்கைகளை உருவாக்குதல்

 குழநதைகள் அவர்களின் வயதுக்கும் உடல் வலுவுக்கும் ஒத்துவராத வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதற்கு அவர்களின் குடும்பப் பொருளாதார நிலைதான் காரணமாகும்.  எனவே , இத்தகையதொரு நிலை ஏற்படாத அளவிற்கு தொழிலாளர்கள், ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தையும், உடல் வலுவையும் பாதுகாத்தல்.

மேற்கண்டவாறு அரசியல் சட்ட பாதுகாப்புகள் இருந்தும் கூட, உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமான அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியாவில் தான் பள்ளிக்கு வெளியே இருக்கும் சிறார்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.  இவர்கள், தாங்கள் பரம்பரையாகவே ‘தொழில்செய்யவே பிறந்தவர்கள்’ என்ற மூட நம்பிக்கையுடன் உள்ளனர்;கல்வி கற்றால் இத்தொழில்களுக்குச் செல்ல இயலாது என்றும் எண்ணுகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்தும்,குழந்தைகள் வேலைக்குச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 

உறவினர்களாலும்,தரகர்களாலும் நகர்புறங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு,அங்கு குழந்தைகளைக் கொத்தடிமைகளாக விற்கும் கொடுமையும் இந்தியாவில் நாள்தோறும் நடந்தேறி வருகிறது. ஒப்பந்தக்காரர்களிடம் குறிப்பிட்ட தொகையைக் கடனாக பெறும் பெற்றோர்கள்,அதன்பிறகு தாங்கள் செய்யும் வேலைக்கு ஊதியமாக எதையும் பெறுவதில்லை. காலப்போக்கில் கடனுக்கு பதில் தங்களின் அன்புக் குழந்தைகளை ஒப்பந்தக்காரர்களிடம் கொத்தடிமைகளாக ஒப்படைத்துவிடும் அவலமும் நடந்து வருகிறது.  குழந்தைத் தொழிலாளர்கள் ஒருநாளைக்கு 12மணி முதல் 15மணி நேரம் வரை சுகாதாரமற்ற,பாதுகாப்பற்றசூழ்நிலையில்வேலைசெய்யும்படிகட்டாயப்படுத்தப்படுகின்றனர். 

பணியிடங்களில்உடல்ரீதியாகவும்,மனரதியாகவும்துன்புறுத்தப்படுகின்றனர். பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்கள் முறையை,ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் அடிப்படையானது வறுமை ஒழிப்பும், கல்வி அறிவின்மையைப்  போக்குவதும் ஆகும். 

கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கலாம்.

1. குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது , சத்துணவு வழங்குவது.

2.  தொழிலாளர் நலத்துறை, காவல்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, பொதுச் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுதல்.

3. குழந்தைத் தொழிலாளர் முறைக்கெதிராக மக்கள் மனநிலையை மாற்ற தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளுவது.

4.குழந்தைகளின் கல்வி கற்கும் உரிமையை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது.

5.வேலை செய்யும் இடங்களிலிருந்து நீக்கப்பட்ட குழந்தைகளுக்கு முறையான கல்வியளிக்க ஏற்பாடு செய்வது.

6.குழந்தைகளை வேலைக்கனுப்பும் பெற்றோர்களின் வறுமையைப் போக்கிட அரசு பொருளாதாரத் திட்டங்களை  விரைந்து நிறைவேற்றுவது.

7.குழந்தைகள் பசியால் இறப்பதைத் தடுக்க, மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராமக் கல்விக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், இளைஞர் மன்றங்கள், ஆகியவற்றின் மூலம் இணைந்து செயல்படுவது.

8.குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவது சட்டத்திற்குப் புறம்பானது, அறநெறிக்கு முரணானதும்,என்பதை எடுத்துக்கூறி பொது மக்கள் மத்தியில் மன மாற்றத்தை ஏற்படுத்துதல்.

9.கல்வி அனைவருக்கும் தரமாகவும், இலவசமாகவும், கட்டாயமாகவும் அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்தல்.

10. குழந்தைப்பருவம் என்பது குழந்தைகள் கல்வி கற்றல், மகிழ்ச்சியை அனுபவித்தல், தீமைகளிலிருந்து விலகி பாதுகாப்பாக இருத்தல் ஆகியவைகளை உத்தரவாதப்படுத்துதல்.

11. குழந்தைகள் நமது நாட்டின் சொத்துக்கள், அவர்கள் தான் நம் எதிர்காலம் என்ற கொள்கைகள் மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்தல்.

12. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்திட தொடர் நடவடிக்கைகளும், காலவரையறைக்குட்பட்ட திட்டங்களும் உருவாக்குதல்.

13.  குழந்தைகளுக்கு சத்தான உணவும், நல்ல உடல்நிலையும், தரமான கல்வியும் அளிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தங்களது வரவு-செலவு அறிக்கையில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்தல்.

14.  குழந்தைகளை விற்பவர்களையும், அடகு வைப்பவர்களையும் தண்டிப்பதற்கு உரிய சட்டங்கள் இயற்றிச்செயல்படுத்தல்.

 மேற்கூறியவாறு நடவடிக்கைகளை எடுத்து, நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்.  அப்போது மட்டுமே, செடியில் கருகும் மொட்டுகளைச் சீக்கிரம் காக்க முடியும்.

Pin It