(ஆழம் ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை இங்கு சிற்சில மாற்றங்களுடன்)

 ஐ.நா மனித உரிமைக் கூட்டம், அமெரிக்கத் தீர்மானம், எல்எல்ஆர்சி– இன்று இவைதமிழக ஊடகங்கள், கல்லூரிகள் தொடங்கித் தேநீரகங்கள், முடி திருத்தகங்கள் வரை விவாதிக்கப்படும் சொல்லாடல்களாகி விட்டன!தமிழீழத்தில் 2009இல் முதல் ஆறு மாதங்களுக்கு நடந்த இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையில் சிங்களத்துடன் நேரடியாகக் கைகோத்துச் செயல்பட்ட காங்கிரசுக்கும் சரி, காங்கிரசின் இந்த மாபாதகங்கள் தமிழினத்தின் கண்களில் படாமல்பொடி தூவி மறைத்து வந்தவர்களுக்கும் சரி,இந்தச் சொல்லாடல்கள் பெரிதும் கைகொடுத்து வந்தன.அவை உலகின் பல நாடுகளுக்கும் தத்தமது நலன்களைக் காத்துக் கொள்ளும் கருவிகளாகின!ஆனால் இன்று இந்தச் சொல்லாடல்களே தமிழ் மாணவர்க் கிளர்ச்சிக்கு எரியூட்டிகளாகி விட்டன!நான்காண்டுக் காலம் தூங்கிக் கிடந்த தமிழர்தம் உள்ளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன!தமிழர்கள் இதன் விளைவாய்த் தமிழீழச் சிக்கலில் கழுத்தறுத்து வரும் இந்தியக் கட்சிகளையும், இரண்டகம் செய்து வரும் தமிழகக் கட்சிகளையும், உலக நாடுகளின் அப்பட்டமான வணிக நலன்களையும் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் ஓர் அரை நூற்றாண்டுக்குப் பிறகுஎந்தத் தலைவனின் தலைவியின் பதாகைகளுமின்றித் தெளிவான கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

ஐ.நாவை வைத்து உலக நாடுகளும் இந்தியாவும் இந்தியத்தேர்தல் கட்சிகளும் நடத்தி வரும் நாடகங்கள்தமிழினப்பேரழிவு நடந்து முடிந்தபிசுபிசுப்பில் நடைபெற்ற ஐநா மனித உரிமைக் கூட்டத்திலேயே தொடங்கி விட்டன.அக்கூட்டத்தில் இந்தியா இலங்கையை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென எப்போதும் போல் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார் அன்றைய முதலமைச்சர் கலைஞர். ஆனால் இந்தியா எப்போதும் போல் அவர் கடிதத்தைக் காலால் தள்ளி விட்டது.இலங்கையில் நடைபெற்றுள்ள மனித அவலங்கள் பற்றியெல்லாம் விவாதிப்பது நேர விரயம்;சொல்லப்போனால் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய இலங்கையைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றுவதே நியாயமானது என அம்மன்றத்தில் பேசியது இந்தியா.இலங்கையின் இறையாண்மையும் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனும் காக்கப்பட வேண்டும் என்றது இந்தியம்.

கியூபாவின் காஸ்ட்ரோவுக்குக் காய்ச்சல் அடித்தால் இங்கு சில தமிழர்கள் சுக்குக் கஷாயம் குடிப்பார்கள்.வெனிசுலாவின் சாவேஸ் தேர்தலில் போட்டியிட்டால் அவரது வாக்கு விழுக்காட்டைக் கணக்குப் பார்ப்பதிலேயே அவர்கள் புளகாங்கிதம் அடைவார்கள், இன்றோ அவருக்கு வீர வணக்கம் செலுத்தி உள்ளம் கசிகிறார்கள். இவ்விருவரும் உலகப் பாட்டாளி வர்க்க ஒற்றுமை காக்கும் போராளிகள் என நம்பி வருகிறார்கள். ஆனால் அவர்களோ அந்த ஐ.நா மன்றக் கூட்டத்தில் இலங்கைக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க முடிவெடுத்தனர். அவர்களின் பிரதிநிதிகள் பயங்கரவாதத்துக்கு எதிராக இப்படி ஒரு வெளிப்படையான போரை எந்த நாடும் நடத்தியதில்லை என்று ஐநா மனித உரிமை மன்றத்தில் அப்பட்டமாகப் பொய் புளுகினர். பயங்கரவாதத்தை ஒடுக்கும் கலையை உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டுமென ராஜபட்சேவைப் பார்த்துக் கைகுலுக்கினார் சாவேஸ். தமிழன் எக்கேடு கெட்டால் அவர்களுக்கென்ன?தங்களின் வணிக நலன் காக்கும் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன் காப்பதே கியூப நலன்,வெனிசுலா நலன் எனக் கருதி விட்டனர்.

இப்படித்தான் ஒரு காலத்தில் பொதுவுடைமையைக் கடைப்பிடித்த ரஷ்ய, சீன நாடுகளும், இந்திய ஆதிக்க வட்டாரத்தில் செயல்படும் மாலத்தீவு, மொரீஷியஸ், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் போன்ற நாடுகளும், ஏன், இந்தியாவின் ஜென்ம விரோதி எனக் கருதப்படும் பாகிஸ்தானும் கூட தத்தமது புவிசார் அரசியல் நலன் சார்ந்து தமிழர்களுக்கு எதிராகக் கைகோத்துக் கொண்டன.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுளும் செல்லமாக இலங்கையைக் கண்டிப்பது கூட தத்தமது புவிசார் அரசியல் நலன் கருதியே.

தங்களின் புவிசார் அரசியல் நலன் சார்ந்து இந்த நாடுகள் நடத்தும் நாடகங்களே அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஐநா மனித உரிமை மன்றக் கூட்டங்களில் அரங்கேறின.

தமிழ் இளைஞர்கள் பின்னங்கைகள் கட்டப்பட்டு முதுகில் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளை சேனல் 4 ஒளிபரப்பியதும், அதைத் தொடர்ந்து டப்ளின் தீர்ப்பாயமும் ஐ.நா மூவர்க் குழுவும் சிங்கள ராணுவத்தின் போர்க்குற்றங்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டதும் இலங்கைக்கு நெருக்கடியை அதிகப்படுத்தின. ஐநா அறிக்கைப் பரிந்துரையின்படி,இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்கத் தற்சார்புள்ள பன்னாட்டு ஆணையம் தேவை என்னும் கோரிக்கை எழுந்தது.

ஆனால் இலங்கையோஎல்எல்ஆர்சி எனப்படும்கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற அமைப்பைத் தனக்குத்தான் ஏற்படுத்திக் கொண்டது.ஒரு சில அப்பாவித் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டது உண்மைதான் என்றாலும், அது திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல எனக் கூறியது. மருத்துவமனைகள் மீது குண்டு விழுந்தது உண்மை என அது சொன்னாலும் அதற்குக் காரணமாக யாரையும் சுட்டவில்லை. இனக்கொலை, போர்க்குற்றம், மானிட விரோதக் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது அதன் முடிவு.மற்றபடித் தமிழ்ப் பகுதிகளில் அகக்கட்டமைப்பை முன்னேற்ற வேண்டும், இராணுவத்தைப் படிப்படியாக வெளியேற்ற வேண்டும் என்றெல்லாம் பொத்தம் பொதுவான புத்திமதிகளையும் இலங்கைக்குக் கூறியது.

2011 டிசம்பரில் வெளியான இந்த உப்புச் சப்பில்லாத அறிக்கையை ஒட்டி 2012 மே மாதம் ஐநா மனித உரிமை மன்றத்தில் அடுத்த நாடகம் அரங்கேறியது.இந்த அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டுமென்னும் தீர்மானத்தை அமெரிக்கா இப்போது கொண்டு வந்தது. டப்ளின் தீர்ப்பாயம், ஐநா மூவர்க் குழு, சேனல் 4 காணொளிச் சான்றுகள் ஆகியவற்றைக் கண்டு கொள்ளாமல் இலங்கையின் இனவெறிக்கு முட்டுக் கொடுக்கும் ஒரு தீர்மானத்தை இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் எனத் திமுக,அதிமுக உள்ளிட்ட தேர்தல் கட்சிகள் வர்ணித்தன. இந்தக் கட்சிகள் அனைத்தும் இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரித்தே தீர வேண்டுமென வானத்துக்கும் பூமிக்கும் தாவி ஒருசேரக் குதித்தன.

இந்திய அரசோ இதனை ஆதரிக்க மறுப்பது போல் சில நாள் பாசாங்கு செய்தது.பிறகு தமிழகக் கட்சிகளின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம் எனக் கூறி அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.ஆனாலும் இலங்கை எல்எல்ஆர்சி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவற்கு ஐ.நா மனித உரிமை ஆணையரின் அறிவுரையைப் பெற வேண்டும் என்ற கொஞ்சம் வலுவான பிரிவினைக் கூட ஒழித்துக் கட்டிய பின்புதான் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரித்தது.இதை எதிர்த்துத் திமுகவோ அதிமுகவோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.இந்தியாவின் இந்தத் தமிழின விரோதப் போக்கைத் தோலுரித்துக் காட்டாத தேர்தல் கட்சிகள் தங்களால்தான் இந்த வெற்றி கிடைத்ததாகக் கூறி,இதனால் ஏதோ ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவு ஏற்படுத்தி விட்டதாகத் தமிழர்களிடையே பொய்த் தோற்றம் காட்டின.தோழர் தியாகு உள்ளிட்ட ஒன்றிரண்டு தமிழ்த் தேசியர்கள்தான் அமெரிக்கத் தீர்மானத்தை அழுத்தம் திருத்தமாக அம்பலப்படுத்திக் காட்டினர். என்ன செய்ய? தமிழகக் கட்சிகளுக்கு நாற்காலி நலன்! 'பரந்து பட்ட' பார்வை கொண்ட இந்தியாவுக்குப் புவிசார் அரசியல் நலன்!

இரண்டாயிரத்துப் பதிமூன்று பிறந்தது,கூடவே அமெரிக்க வரைவுத் தீர்மானம் ஒன்றும் வந்து சேர்ந்தது.ஆனால் அதே ஏமாற்றுத் தீர்மானம்.இலங்கை தன் ஆணையத்தின் பரிந்துரைகளையே இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் கண்டிது இத்தீர்மானம், அவ்வளவுதான். இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்துப் பன்னாட்டுக் குழு புலனாய்வு செய்ய வேண்டுமென நவநீதம் பிள்ளை விடுத்துள்ள அறிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாகக் கூறியது இத்தீர்மானம்.இந்த அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமெனத் தமிழ்க் கட்சிகளின் கூக்குரல் தமிழக ஊடகங்களிலும் தில்லி நாடாளுமன்றத்திலும் எப்போதும் போல் கேட்கத் தொடங்கியது. 2012 போலவே இப்போதும் இந்தியா ஆதரிக்க மறுத்து வந்தது. தமிழகத் தேர்தல் கட்சிகளைப் பொறுத்த வரை, நாடகக் காட்சிகள் எப்போதும் போல் அவர்களுக்குத் தோதாகஜாம் ஜாமென்று சிறப்பாகத்தான் அரங்கேறிக் கொண்டிருந்தன.

இம்முறையும் சில தமிழ்த் தேசியர்களின் அமெரிக்கத் தீர்மான எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் தவறவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் தின்பண்டம் சாப்பிட்டுக் கொண்டே மிரட்சியுடன் பார்க்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சியும் சேனல் 4இன் ஒளிப்படங்களாக வெளிவந்து,தமிழர் உள்ளங்களில் பெரும் துயரத்தை ஏற்படுத்தின. உடனே சூட்டோடு சூடாகத் திமுகவின் டெசோ அமைப்பும் இலங்கையின் இனப்படுகொலையை கண்டிக்கிற அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென ஒரு பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.

இந்தப் படங்களைப் பார்த்த ஜெயலலிதாவும் இது இனப்படுகொலை எனக் கண்டித்தார். தமிழகச் சட்டமன்ற ஆளுனர் உரையிலும் அதுவே இடம்பெறச் செய்தார்.

இந்நிலையில்தான் சென்னை லயோலா கல்லூரியில் மாணவர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இந்த அமெரிக்கத் தீர்மானம் ஓர் ஏமாற்றுத் தீர்மானம், தமிழீழ மக்களுக்கு எதிரான, இலங்கை அரசுக்கு ஆதரவான தீர்மானம் என்பதை அவர்கள் போட்டு உடைத்தனர். போராட்டத் தீ தமிழகக் கல்லூரி மாணவர்களிடையே பற்றிப் படர்ந்தது.வெறும் எண்மர் உண்ணா விரதம் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உண்ணாவிரதமாக விரிவடைந்தது.லயோலா மாணவர்களின் கோரிக்கைகள் இப்போது இன்னும் வலுப்பெற்றன. தமிழீழத்தில் நடந்தது போர்க்குற்றமன்று, அது இனப்படுகொலை என்றும், அந்த இனப்படுகொலையை அரங்கேற்றிய,அரங்கேற்றி வரும் ராசபட்சேவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்றும்,பொய்மையான எல்எல்ஆர்சி ஆணையத்துக்கு மாறாக ஒரு பன்னாட்டுப்புலன் விசாரணை ஆணையம் இலங்கையில் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை இந்தியாவே ஐ.நா மனித உரிமை மன்றத்தில் முன்வைக்க வேண்டுமென அவர்கள் கோரினர்.

இந்தக் கோரிக்கைகள் அனைத்துப் பதவி வேட்டைக் கட்சிகளையும் ஆட்டங்காணச் செய்தன.அமெரிக்கத் தீர்மான ஆதரவு என்று மொட்டையாகப் பேசி வந்த கலைஞரும் பன்னாட்டு விசாரணை எனப் பேசத் தொடங்கி விட்டார்.முன்பு இனப்படுகொலையைக் கண்டிக்கிற அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு எனக் கூறிப் பொது வேலை நிறுத்தம் அறிவித்தவர் இப்போது இனப்படுகொலை என்னும் சொல்லை அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா சேர்க்க வேண்டும் என்றார்!தில்லி நாடாளுமன்றத்தில் இந்த அடிப்படையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து வெளியேறவும் செய்தார்.

இப்போது அம்மாவும் அமெரிக்கத் தீர்மானத்தில் பன்னாட்டு விசாரணை எனச் சேர்க்க வேண்டும் என்றார்.

இந்தியாவோ எப்போதும் போல் இப்போதும் ஒன்றுமில்லாத அமெரிக்கத் தீர்மானத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. கியூபாவும் வெனிசுலாவும ஐநா மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை என்றாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து தமிழின அழிப்பை மூடி மறைக்கும் சதி ஆலோசனைகளில்தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தன.

முழுத் தன்னல வெறியுடன் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் செயல்பட்டு வந்த பின்புலங்களைப் புறந்தள்ளித் தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் டெசோ பங்காளிக் கட்சிகளும்நடத்தி வந்த அமெரிக்கத் தீர்மான எதிர்ப்பு நாடகத்தை மாணவர்களின் போராட்டம் அம்பலப்படுத்தி விட்டது.இது மாணவர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி. தமிழீழத்துக்குப் பொது வாக்கெடுப்பு என்னும் மாணவர்களின் கோரிக்கை நிறைவேறும் போதுதான் முழு வெற்றி கிடைத்ததாகப் பொருள்.தில்லியிடம் தாஜா அரசியல் செய்து தமிழீழம் பெற்றுத் தரலாம் என நினைத்துச் செயல்படும் தமிழகத் தேர்தல் கட்சிகளுக்கு மாறாக இந்தியாவுக்கு எதிராக வரிகொடா இயக்கம் நடத்த வேண்டும் எனச் சரியான போராட்ட அரசியலை முன் வைக்கின்றனர் மாணவர்கள்.

இந்தப் போராட்ட மாணவர்கள் தமிழக நாற்காலி அரசியல் தலைவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசான்களாகி விட்டனர்.அவர்கள் காஷ்மீரிலும் வடகிழக்கிலும் தண்டகாரண்யத்திலும் இந்தியா என்ன செய்து வருகிறது என்பதையும் அறிந்து வைத்துள்ளனர்.அது மட்டுமல்ல.

திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விட்டால் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகத் திமுக அறிவித்தவுடன்,டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் இதனை விமர்சித்துப் பேசிய அர்னாப் கோஸ்வாமி,இந்தியாவுக்கு வேண்டியது புவிசார் அரசியல் கூட்டாளியா? கூட்டணிக் கூட்டாளியா? எனக் கேட்டார்.

வெளியுறவுக் கொள்கை என வந்து விட்டால்,தமிழர் நலன் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, ஒட்டுமொத்த இந்தியர் நலன் எனத்தான் பார்க்க வேண்டுமெனப் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கூறுகிறார் பாரதிய ஜனதா பார்ட்டியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சேஷாத்ரி சாரி.

பா.ஜ.க, சிபி.ஐ.எம், சிபி.ஐ, கட்சிகளின் தமிழகத் தலைவர்கள் ஈழத்தின் இனப்படுகொலை, ராஜபட்சே கைது என்றெல்லாம் தமிழகத்தில் கதை அளந்தாலும் அவற்றின் தில்லித் தலைமைகளின் கவனம் அனைத்தும் இந்தியப் புவிசார் அரசியல் நலனில்தான். இது ஈழச் சிக்கல் தொடர்பாக காங்கிரஸ் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெளிவாக எதிரொலித்தது.அதாவது இந்திய நலன் காக்கப் பல லட்சம் உயிர்களையும் பலி கொடுக்கலாம் என்பதே அவர்கள் கருத்தாக இருந்தது.

தில்லிசார் ஊடகங்களும் இந்தியக் கட்சிகளும் போதிக்கும் இந்திய நலன்கள்,இலங்கை இறையாண்மை பற்றியெல்லாம் உண்மையை உணரும் போது,உலகின் அரசியல் பார்வைக்கும் நம் மாணவர்கள் பாடம் புகட்டுவர்.

வங்க விடுதலையை இந்திரா ஏற்றதும் சரி,இந்தியா தமிழீழ விடுதலையை ஒடுக்கி வருவதும் சரி, இந்தியப் புவிசார் அரசியல் நலன் காக்கவே.

தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு இந்திரா ஆயுதப் பயிற்சி அளித்ததும் சரி,இன்றைய இந்தியா தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்களப் படைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதும் சரி,எல்லாம்இந்தியப் புவிசார் அரசியல் நலன்பேணத்தான்.இலங்கையின் இறையாண்மையில் நாங்கள் தலையிட மாட்டோம் என்பதெல்லாம் ஏமாற்று வேலைகளே.

இன்று இந்தியம் எதையும் மூடி மறைக்கவில்லை.லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் அழிப்பில், ஐந்நூறுக்கும் மேற்பட்டத் தமிழக மீனவர்களின் அழிப்பில் துணை நின்று "இதுதாண்டா இந்தியா" எனத் தமிழர்களின் செவிட்டில் அறைந்து சொல்கிறது.

இனி இந்தியப் புவிசார் அரசியல் நலன் காப்பதோ,இறையாண்மை காப்பதோ தமிழர்கள் வேலையில்லை.தமிழகத் தமிழர்களுக்கும் தமிழீழத் தமிழர்களுக்கும் இறையாண்மை உண்டு,சில மைல் தொலைவு இரு தமிழர்களையும் பிரிக்கும் நீர்ப் பரப்பு இந்தியப் பெருங்கடலன்று, அது தமிழர் கடல். இவ்விரு தமிழ்ப் பரப்புகளுக்கு உட்பட்ட இயற்கைக் கொடையனைத்தும் தமிழர்களுக்கே!

ஆம், இனி தமிழர்களுக்கென்று ஒருபுவிசார் அரசியல்நலன் வேண்டும். அது அவர்களின் விடுதலை நலனோடு இணைந்திட வேண்டும். ஈழத் தமிழருக்குக் கொழும்பு பகை என்றால் தமிழகத் தமிழருக்கு தில்லி பகை என்பதை உணர வேண்டும். இந்த அடிப்படைப் புரிதல் மாணவர்ப் போராட்டத்தில் சூல் கொண்டிருப்பது வருங்காலத்தின் மீது நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

Pin It