இவர்கள் காலங்காலமாகக் கடலைத் தாயாகக் கொண்டவர்கள்; கடற்கரையை வீடாகக் கொண்டவர்கள். மீன்பிடிப்பதையே, உயிர்த் தொழிலாகவும் கொண்டவர்கள்! இவ்வாறு, அய்ந்தரைக் கோடி மீனவர்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

 வலைவிரியும் கடலே, இவர்களின் வாழ்வாதாரம்! அலைபோல் சுருளும் மீனவர்களின் வாழ்க்கை ஆதாரத்தை அடியோடு, தாக்கி அழிக்கும் நோக்கம் கொண்டதுதான், நடுவண் அரசு, வெளியிட்டிருக்கும் “கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிப்பாணை 2008”!

  இந்த அறிவிப்பாணை வெளியாவதற்கு ஆதிமூலம் எது....? யார்...?? கடற்கரை மேலாண்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, நடுவண் அரசு விரும்பியது; அதற்கு, ‘பசுமைப் புரட்சியின் நாயகன் (!)’ என்று பணக்கார நாடுகளால் புகழப்பெறும் டாக்டர். எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

‘விவசாய விஞ்ஞானியாம்’ டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மைப் புரட்சியில் செய்த சாதனைகள் தாம் என்ன..? அமெரிக்காவின் வழிகாட்டுதலின் பேரில், இந்தியாவில் செயற்கை உரங்களை அறிமுகப்படுத்தினார். வீரிய விதைகளைக் கொண்டு வந்து இந்திய விவசாயத்தைப் பாழடித்தார்; விவசாயிகளைச் சீரழித்தார். விளை நிலங்கள் மலடாகிப்போயின; விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு மடிந்தனர். பண்ணைகளில் பாடுபட்டோர், முடிவில் பட்டினியில் செத்தனர். இவையாவும், ஏடுகளும் இந்திய மக்களும் அறிந்த - அறிவித்த - உண்மைகள்!

 விவசாயிகளின் வாழ்வு, ‘களர்’ நிலமாய் மாறக் காரணமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இப்போது மீனவர்களின் வாழ்வை ஆனமட்டும் அழிக்க முயன்றுள்ளார். அற்புதமான கீழ்க்கண்ட திட்டங்களை நடுவண் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

1. கடற்கரைப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கலாம்;
2. வானுயர்ந்த உணவு விடுதிகள் கட்டலாம்;
3. சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தலாம்;
4. கட்டுமரங்களிலும், படகுகளிலும் சென்று மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதைத் தவிர்க்கலாம்;
5. துறைமுகங்கள் சார்ந்த இடங்களில் மீன் பிடித்தொழிலை உருவாக்கித் தரலாம்;
6. மீனவர்களை கடற்கரைப் பகுதிகளிலிருந்து படிப்படியாய் வெளியேற்றிடலாம்;

இவையே அப்பரிந்துரைகள்.

இவற்றுக்கெல்லாம் தடையாக விளங்கும் ”கடலோரப் பகுதி முறைப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைக்கான அறிவிப்பாணை 1991 - என்னும் பழைய செயல்முறைகளைத் திரும்பப் பெற வேண்டும்” - எனவும் அழுத்தம் திருத்தமாக அப்பரிந்துரையில் வலியுறுத்தி உள்ளார்!

இந்தியாவின் விவசாயம், இவரது, ‘சிந்தனைப்’ புரட்சியால் எழமுடியாமல் விழுந்து கிடக்கிறது. இப்போது, உலகமய, தாராளமய, தனியார்மயத்துடன் கைகோர்த்துக் கொண்டு வரும் இவரது பரிந்துரைகள் இந்திய மீனவர்களின் வாழ்வையும் அவர்களின் ‘கடல் விவசாயத்தையும்’ விட்டு வைக்கவில்லை, கெட்டழியச் செய்கிறது.

இந்தியாவில் ஆறாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்குக் கடலோரப் பகுதிகள் உள்ளன. இக்கடற்கரைப் பகுதிகளை பாதுகாக்க வேண்டும்; மாறாக மாசு படுத்தும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது, என்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே-1991 ல் ‘கடலோரப் பகுதிகளில் ஒழுங்குமுறை ஆணை’யை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளை நவீனப்படுத்தி, அழகு படுத்துகிறோம் என்று கூறிக்கொண்டு, மீனவர்களை வெளியேற்றக் கூடாது என்று, கடந்த இருபது ஆண்டுகளாக மீனவ அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.

நடுவண் அரசோ, மீனவர்களின் கோரிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இப்போது, “2008 ஆம் ஆண்டின் கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிப்பாணையை’ அவசரமாக வெளியிட்டுள்ளது. ‘இது ஓர் மக்கள் விரோத அறிவிப்பு’ என்று சமூக ஆர்வலர்கள் சரியாகவே கணிக்கின்றனர். இதன்படி, கடற்கரைப் பகுதிகளில் பெரிய தொழிற்சாலைகளை, அரசு நிறுவி வருகிறது, இரசாயணத் தொழிற் சாலைகளையும், உல்லாசக் கேளிக்கை விடுதிகளையும் கட்டி வருகிறது.

  ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ‘கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணை 1991-ல் குறிப்பிடப்பட்டுள்ள, நிபந்தனைகளான, மாசு ஏற்படுத்தும் தொழிற் சாலைகளை அமைக்கக் கூடாது - மீன் பிடிப்புப் பகுதிகளில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது – அலையாத்திக் காடுகளை அழிக்கக் கூடாது – போன்ற பத்தொன்பது வகையான கட்டுப்பாடுகளும் கடலில் தூக்கி வீசப்பட்டுவிட்டன. இதன் மூலம் மீனவ சமூகத்தை, கடற்கரைக் கிராமங்களில் இருந்து முற்றாக வெளியேற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

நடுவண் அரசின் கடற்கரை மேலாண்மைத் திட்ட அறிவிப்பு மீனவர்களைக் கடற்கரையோரத்திலிருந்து ஐநூறு மீட்டருக்கு அப்பால் வெளியேற்ற வேண்டும் எனக் கட்டளையிடுகிறது.

கடற்கரை மண்டலங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, இறால் பண்ணைகள், அமைக்கப்படுகின்றன; இரசாயணத் தொழிற்சாலைகள் எழுகின்றன; நட்சத்திர விடுதிகள் கட்டப்படுகின்றன; உல்லாச நீர் விளையாட்டு நிலையங்கள் உருவாகின்றன; ஆடம்பர மாளிகைகள் அனுமதிக்கப்படுகின்றன. மொத்தத்தில், மீன்வளம் சூறையாடப்படவும் கடல்வளம் பாழ்படவும், பச்சிக் கொடி அல்ல... ‘பாய் மரக்கொடி’ அசைக்கப்படுகிறது!

கடலோரப் பகுதிகளில் தனிநபர்களோ, நிறுவனங்களோ ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும் கூட, காற்றில் பறக்கவிடப்படுகிறது.

கடற்கரை மேலாண்மை அறிவிப்பின் மற்றும் ஓர் உச்சாணிச் சலுகை நம் உள்ளத்தை நெருடுகிறது. அது, கடலோரப்பஞ்சாயத்துக்களின் நில எல்லையில் இருந்து கடலுக்குள் பன்னிரெண்டு கடல் மைல்கள் (ஒரு கடல் மைல் என்பது 184 கி.மீ) வரை அரசின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இதனால் மீனவர்கள் கடலுக்குள் சென்று தாராளமாய் மீன் பிடிப்பதற்கும் தடை ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 3,200 கடலோரக் கிராமங்களில், ஐந்து கோடிக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மீன்பிடித்தொழில் மூலம் ஆண்டு ஒன்றுக்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.

இந்திய மீனவர்களின் வாழ்வையும், மீன் பிடித் தொழிலையும் பாதிக்கின்ற இத்திட்டங்களை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியக் கடற்கரைப் பகுதிகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டுப் பெரும் முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதைத் தடுக்க வேண்டும். அவசரமாக அறிவிக்கப்பட்டு உள்ள, “2008-ஆம் ஆண்டு, கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிப்பாணை”யை நடுவண் அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். இதற்காகப் போராடத் துணிவதும்கூட, இந்தியாவின் இறையாண்மை மீது வழுவாத பற்று கொண்டவர்களின் வரலாற்றுக் கடமையாகும்.

Pin It