நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம், அடுக்குமாடிகளில் வீடுகளை வாங்குகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் கடன் வாங்கி இருப்பார்கள். தனியாக ஒரு வீட்டில் வசித்தால், கடன்காரர்கள் அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பார்கள். அடுக்குமாடி வளாகத்துக்கு உள்ளே அப்படி நுழைந்து விட முடியாது.

ஒருமுறை எங்கள் வளாகத்தில் கடன் வசூலிக்க வந்தவர்களுக்கும், கடன்காரருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தகராறு ஆகி விட்டது. அதனால், அக்கம்பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்குப் பிரச்சினை. எனவே, கடன் வசூலிப்பவர்களை வளாகத்துக்கு உள்ளே அனுமதிப்பது இல்லை எனத் தீர்மானித்தோம். அவர்கள் வந்தால், ‘எங்கள் வளாகத்துக்கு உள்ளே வராதீர்கள்; கடன்காரர்கள் வாயிற்கதவுக்கு வெளியே வந்தால் பிடித்துக் கொள்ளுங்கள்; அல்லது அவர்களது அலுவலகத்தில் போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி விடுவோம்.

அவர்களும் ஒரு நாள் முழுவதும் வளாகத்துக்கு வெளியே தெருவில் நின்று கொண்டு இருப்பார்கள். இவர்களும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். அடிக்கடி, உள்ளக இணைப்பில் (இண்டர்காம்) அல்லது அலைபேசியில் வாயிற்காப்பாளருக்குத் தொடர்புகொண்டு, ‘கடன் வசூலிக்க வந்தவர்கள் போய் விட்டார்களா? இல்லையா?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

சில வேளைகளில், கடன் வசூலிக்க வருபவர்கள், ‘நான் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தால் நீ என்ன செய்ய முடியும்?’ என்று எதிர்வாதம் செய்வார்கள்.

‘இது தனி வீடு அல்ல; அடுக்குமாடி வளாகம்; இங்கே சங்கம் இருக்கிறது; சட்ட விதிகள் இருக்கின்றன’ என்றெல்லாம் எதையாவது சொல்லி அவர்களைச் சமாளித்து அனுப்பி விடுவோம்.

முகவரி பிரச்சினை

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு, வீட்டு முகவரியை, மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதில் நிறைய குழப்பம் வருகின்றது. ஒருமுறை, என்னுடைய அஞ்சல் பெட்டியில் கிடந்த அஞ்சல்களை எடுத்து வந்து பிரித்துப் பார்த்தேன். அதில் ஒரு உறைக்குள், 50,000 ரூபாய்க்கான வங்கி வரைவு ஓலை இருந்தது. யார் அனுப்பி இருக்கிறார்கள்? என்று பார்த்தேன். அது எனக்கு வந்த கடிதம் அல்ல. என்னுடைய வீட்டுக் கதவு எண் சரிதான். ஆனால், பக்கத்து வளாகம்.

சில கட்டுமான நிறுவனத்தார், தாங்கள் அருகருகே கட்டுகின்ற வளாகங்களுக்குத் தனித்தனிப் பெயரை வைக்காமல், ஒரே பெயரில், 1,2,3,4 என வரிசையாக பெயர் சூட்டி விடுவார்கள். அங்கேதான் வருகிறது இப்படிப்பட்ட குழப்பங்கள்.

அஞ்சலைக் கொண்டு வருபவர்கள், குறிப்பாக கொரியர் நிறுவனங்களில் வேலை பார்க்கின்ற இளைஞர்கள், அலைந்து திரிந்து வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்காமல், மிக எளிதாக யாருடைய பெட்டியிலாவது போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். அந்தப் பெட்டியைத் திறப்பவர், அது தமக்கு வந்த கடிதம் இல்லை என்றால், அலுவலகத்தில் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் அல்லது, வாயிற்காப்பாளர்களிடமாவது கொடுக்கலாம். ஆனால், அப்படியே தங்களுடைய அஞ்சல் பெட்டிக்கு மேலே தூக்கி வைத்து விட்டுப் போய் விடுவார்கள். அது பல நாள்களாக அப்படியே கிடக்கும். சில வேளைகளில், தரையில் விழுந்து கிடக்கும். துப்புரவுப் பணியாளர்கள் ஒதுக்கித் தள்ளிவிடவும் வாய்ப்பு உண்டு. அதுபோன்ற கடிதங்களை, காவலர்களை வைத்துச் சேகரித்து, உரியவர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கின்றோம்.

எனவே, உங்கள் குடியிருப்பு முகவரியில், Block-1,2 அல்லது 3 என்பதைத் தெளிவாக எழுத வேண்டும். அதிலும் ஒரு வளாகத்துக்கு உள்ளே எந்தத் தொகுப்பில் (Block) உங்கள் வீடு உள்ளதையும் என்பதையும் குறிப்பிட்டு எழுத வேண்டும். முகவரியைச் சுருக்கி எழுதக் கூடாது.

முகவரி புத்தகத்தின் தேவை

ஒரு சங்கத்தைத் தொடங்கும்போது, உறுப்பினர்கள் அனைவருடைய விவரங்களும் தெளிவாக இருக்க வேண்டும். எங்கள் வளாகத்துக்குக் குடிவந்த ஒருவர், பின்னர் தன் மனைவியையே யார் என்று தனக்குத் தெரியாது என்று சொன்னார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, இந்தப் பெண்ணை இரண்டாந்தாரமாக ஆக்கி இங்கே வைத்து இருந்திருக்கின்றார். குட்டு வெளிப்பட்டபோது, இந்தப் பெண்ணைத் தனக்குத் தெரியாது என்றார். நீதிமன்றத்துக்கு வழக்கு போய்விட்டது.

அவர் எங்கள் வளாகத்துக்கு வந்தபோது, அந்தப் பெண்ணைத் தன்னுடைய மனைவி என்று எழுதிக் கொடுத்து, பதிவு செய்து இருந்தார். முகப்படம், கையெழுத்தை எல்லாம் வாங்கி வைத்து இருந்தோம். அந்த ஆவணத்தை வாங்கி, அந்தப் பெண்மணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அது செல்லுபடியாகக் கூடியது; நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணம் ஆகும்.

ஒரு வளாகத்தில் பத்துப் பதினைந்து வீடுகள் மட்டும்தான் இருக்கிறது என்றால், யார் உரிமையாளர்கள் என்பது எல்லோருக்கும் ஓரளவு தெரியும். ஆனால், 100, 200 வீடுகள் என்றால், யார் உரிமையாளர்கள் என்றே தெரியாது. எனவே, முகவரி புத்தகம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

உறுப்பினர்கள் குறித்த கோப்பு இருக்கின்றதா? ஒரு அலுவலகம் போல இயங்குகிறதா? என்பதை எல்லாம் தணிக்கையாளர்கள் சரி பார்க்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், அவர்கள் சரிபார்ப்பது இல்லை. பொறுப்பாளர்கள் சொல்லுவதைக் கேட்டுக் கையெழுத்துப் போடுகிறார்கள்.

சங்க உறுப்பினர்கள் முகவரியை, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அதற்கு, கோடை விடுமுறையின்போது, மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகவரி புத்தகத்தை ஒருமுறை அச்சிட்டால் போதுமே! யார் வீடு விற்கிறார்கள் என்றுதான் தெரிந்து போகுமே? இதை ஏன் அடிக்கடி புதுப்பித்து அச்சிட வேண்டும்? என்று ஒரு கேள்வி வரலாம்.

இதில் உரிமையாளர்கள் பெயரும் இருக்கும். யார் வாடகைக்கு இருக்கின்றார்கள் என்பதையும் சேர்த்து இருக்கின்றோம். வாடகைதாரர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். எனவே, அந்த விவரங்களைத்தான் சரிபார்க்க வேண்டும்.

ஒருவர் எந்தத் தேதியில் உள்ளே வந்தார்? எப்போது காலி செய்து கொண்டு போனார்? என்பதையெல்லாம் எழுதி ஆவணமாக வைத்து இருக்க வேண்டும். புதிதாக ஒருவர் குடியிருப்பில் குடியேறும்போது, அங்கே உள்ள சங்கத்தைத்தான் முதலில் அணுக வேண்டும். அந்தக் குடியிருப்பின் நடைமுறைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வணிக நடவடிக்கைகள்

மற்றொரு குடியிருப்பில் ஒரு பிரச்சினை. ஒருவர் தன் வீட்டை, ஒரு அலுவலகத்துக்கு வாடகைக்கு விட்டு விட்டார். அது ஆடை வடிவமைப்பு அலுவலகம். 20 கணினிகள், பணியாளர்கள் என காலையில் இருந்தே வரிசையாக வாடிக்கையாளர்கள் வளாகத்துக்கு உள்ளே வந்து போகத் தொடங்கி விட்டார்கள்.

இத்தகைய வணிக நடவடிக்கைகளுக்கு, அடுக்குமாடி வளாகங்களில் இடம் கிடையாது.

எல்லா விற்பனைப் பத்திரங்களிலும், ‘இது குடியிருப்புக்காக மட்டும்தான்; வணிக நடவடிக்கைகைளுக்கு இடம் இல்லை’ என்ற விதிகள் கண்டிப்பாக இருக்கும். படித்துப் பாருங்கள். நமக்கு அளிக்கப்படுகின்ற மின்சாரம், வீட்டுப் பயன்பாட்டுக்கானது. அலுவலகத்துக்கு என்றால், அதற்காகத் தனியாக விண்ணப்பித்து வாங்க வேண்டும். எனவே, அலுவலக நடவடிக்கைகளுக்கு, அடுக்குமாடி வளாகங்களில் கண்டிப்பாக இடம் இல்லை.

நாங்கள் அந்தக் குடியிருப்புக்குப் போனோம். ‘அலுவலகம் நடத்தக் கூடாது’ என்று சொன்னோம். அவர் உடனே பிரச்சினையை வேறுவிதமாகக் கொண்டு போனார். ‘நான் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவன். இந்தச் சங்கத்துக்காரர்கள் என்னைத் துன்புறுத்துகிறார்கள்’ என்று காவல்நிலையத்தில் மனு கொடுத்து விட்டார்.

என்னை அழைத்தார்கள். நான் சென்றேன். ‘அவரது வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு வரச் சொல்லுங்கள்’ என்று சொன்னேன். அதில், நான் சொன்னபடி தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை காவல் ஆய்வாளரிடம் எடுத்துக் காண்பித்தேன். பிரச்சினை தீர்ந்தது. அலுவலகத்தைக் காலி செய்தார்கள்.

எந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலும் ஒரு பிரச்சினை காவல்நிலையத்துக்குப் போகிறது என்றால், சங்கத்துக்காரர்கள் தனியாக அங்கே போகக்கூடாது. பத்துப் பேர் சேர்ந்துதான், காவல்நிலையத்துக்குப் போக வேண்டும். இது மிக மிக முக்கியம். அப்போதுதான், உங்கள் பேச்சைக் கேட்பார்கள். தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைக்கு அவ்வாறு போக வேண்டியது இல்லை. சங்கப் பிரச்சினைகளுக்காக மட்டும்தான் அப்படிச் செல்ல வேண்டும்.

குப்பை அள்ளும் ஒப்பந்தக்காரர்கள், சரியாக வேலை செய்யவில்லை என்று வேறு ஒருவரிடம் மாற்றிக் கொடுத்தோம். அவர் மின்தூக்கிக்கு உள்ளே (லிஃப்ட்), பிரெஷ்னர் எல்லாம் வைத்தார்.

பழைய ஆள் வந்தார். ‘நீ எப்படி இங்கே வரலாம்?’ என்று கேட்டார். அவர்களுக்குள் பிரச்சினை ஆகி விட்டது. பேசிக்கொண்டே இருக்கையில் திடீரென புது ஆள், பழைய ஆள் முகத்தில் ஒரு குத்து விட்டார். அவரது கையில் கட்டி இருந்த வளையம் பட்டு, குருதி கொப்பளிக்கின்றது.

எங்களுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. அடிபட்டவர், அப்படியே காவல் நிலையம் போவேன் என்கிறார். அது கிரிமினல் குற்றம். நாங்களும் சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். அவரை எங்கள் காரில் ஏற்றி வைத்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, சிகிச்சை அளித்துச் சமாதானப்படுத்தி அனுப்பினோம். புது ஆளை மாற்றிவிட்டு, மீண்டும் அவருக்கே ஒப்பந்தத்தைக் கொடுத்தோம்.

ஆனால், எப்போதுமே ஒரே ஆளை, ஒரே நிறுவனத்தை நீண்ட காலமாக வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு முறையும், ஓராண்டு குத்தகைதான் விடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும், அவர்கள் சம்பள உயர்வும் கேட்பார்கள். அந்த வேளையில், டெண்டர் விட்டுத்தான் நீங்கள் புதிய ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் சமாளிக்க முடியும்.

கடை வைக்கலாமா?

அலுவலகம் நடத்தக் கூடாது. கடை வைக்கலாமா?

வளாகத்தில் உள்ள பொது இடத்தில், ஒரு பலசரக்குக் கடை வைக்கலாம் எனத் தீர்மானித்தோம். குடியிருப்பிலேயே, கொஞ்சம் சிரமத்தில் இருந்தவரை அழைத்து, கடை வைக்கச் சொன்னோம். முதலில் குறைந்த விலைக்கு பொருள்களை விற்றார்கள். கொஞ்சம் கொஞ்சமாக விலையைக் கூட்டி விட்டார்கள். மூன்று நான்கு ஆண்டுகள் கழிந்தது. அவரைக் காலி செய்யும்படிச் சொன்னோம். உடனே அவர், நீதிமன்றத்துக்குப் போய், அந்தக் கடைதான், என் குடும்பத்துக்கு வாழ்வாதாரம் என்று சொல்லி தடையாணை வாங்கி விட்டார். நாங்களும் நீதிமன்றம் சென்றோம்.

‘அந்த இடம் பிரிக்கப்படாத மனை; எங்கள் எல்லோருக்கும் சொந்தமானது’ என்றோம்.

தடை ஆணை கொடுத்த நீதிபதி சொன்னார்: ‘இருக்கலாம். ஆனாலும், அந்த இடத்தில் கடை கட்டவோ, ஒப்பந்தம் போடவோ உங்களுக்கு உரிமை இல்லை' என்றார்.

நாங்கள் வேறுவழி இன்றி, ‘அந்தக் கடையில் யாரும் பொருள்களை வாங்கக் கூடாது’ என்று அறிவித்துப் புறக்கணித்தோம். அந்தப் பெண்மணி அசரவில்லை. அந்த இடத்தைத் தனது சரக்குகளை வைக்கின்ற கிடங்காக மாற்றிக் கொண்டார். புறம்போக்கில் அல்ல, அடுக்குமாடி வளாகங்களிலும் இப்படித் துணிச்சலாக இப்படிப் பொது இடத்தை வளைப்பவர்கள் இருக்கின்றார்கள். வழக்கு இன்னமும் நடந்துகொண்டு இருக்கின்றது. அதனால், இப்போது அமைகின்ற புதிய குடியிருப்புகளில், கட்டுமானக்காரர்களே கடைகளுக்கு இடம் ஒதுக்கி பிரச்சினையைத் தீர்த்து விடுகின்றார்கள்.

வணிக நடவடிக்கைகள் என்று வரும்போது, குடியிருப்பில் வசிக்கின்ற மற்றவர்களுக்குத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். வெளியில் இருந்து வாடிக்கையாளர்கள் வராத அளவுக்கு, உள்ளே இருப்பவர்களுக்கு மட்டுமான நடவடிக்கைகளுக்கு, சங்கம் ஒப்புதல் அளிக்கலாம்.

குடியிருப்பவர்கள் யாரும் சட்டம் அறிந்தவர்களாக இருக்க முடியாது. எனவே, எந்த ஒரு பிரச்சினையிலும், கூடுமானவரையிலும், ஒரு வழக்குரைஞரை ஆலோசனை கேட்டுச் செய்ய வேண்டும். கடை வைப்பதாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் குத்தகையை புதுப்பிக்க வேண்டும். எல்லாமே எழுத்தில் இருக்க வேண்டும்.

கேபிள் பிரச்சினை

தொடக்கத்தில் எங்கள் குடியிருப்புக்கான தொலைக்காட்சி கம்பிவட (கேபிள்) இணைப்பு வழியாக, ரஷ்ய, ஜப்பான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தாம் தெரிந்தன. கேபிள்காரர், ஊராட்சி மன்றத் தலைவரின் உறவினர். ஊராட்சி மன்றத் தலைவரின் உதவி மிகவும் தேவைப்படுகின்றது. அவரைப் பகைத்துக் கொள்ள முடியாது.

பக்கத்துக் குடியிருப்பில் மின்னணு (டிஜிட்டல்) முறையில் துல்லியமாக ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தார்கள். அவரை அழைத்தோம். ஆனால், அவர்களுடைய பணியாளர்கள் இணைப்பு கொடுப்பதற்குத் தயங்கினார்கள். எங்கள் வளாகத்தில் உள்ள நான்கு பெண்கள் சேர்ந்து, அவரிடம் இணைப்பு ஒயரை வாங்கி, எங்கள் கைகளால், வீட்டுக்குக் கொண்டு வந்து இணைப்புக் கொடுத்தோம். உடனே, ஊராட்சிமன்றத் தலைவர், ஒரு வார காலம், எங்கள் பகுதியில் தெரு விளக்கை அணைத்து வைத்து விட்டார்.

இப்போது, அந்தப் பிரச்சினை தீர்ந்து விட்டது. எல்லா வீடுகளுக்கும் நேரடியாக தொலைக்காட்சி இணைப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வசதி வந்து விட்டது. விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

சில பிரச்சினைகளை சங்கம் தீர்த்து வைக்கலாம். சில பிரச்சினைகளை, குடித்தனக்காரர்கள்தாம் சமாளிக்க வேண்டும். உள்ளூர் பணியாளர்களை உடனே பகைத்துக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற வேண்டும்.

ஒரு பெண்ணை, சங்க அலுவலகத்தில் வேலைக்குச் சேர்க்கச் சொன்னார் ஊராட்சி மன்றத் தலைவர். எங்கள் குடியிருப்பைக் கட்டிய நிறுவனத்தாரிடம் கேட்டேன். ‘கவலைப்படாமல் வையுங்கள். வேலைகளைக் கொடுங்கள். செய்ய முடிந்தால் செய்வார்கள். இல்லை என்றால், அவர்களாகவே விலகிப் போய் விடுவார்கள்’ என்றார்.

அப்படியே நடந்தது. ஒரே வாரத்தில், அந்தப் பெண் வேலையில் இருந்து விலகிக் கொண்டார். அடுத்து, ஊராட்சி மன்றத் தலைவரைக் கேட்டோம். அவரிடம் வேறு ஆள் இல்லை. ‘நீங்களே ஆள் வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். பிரச்சினை முடிந்தது.

கார் நிறுத்தம்

பக்கத்துக் குடியிருப்பில், அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு பிரச்சினை. ஒரு குடித்தனக்காரர், சங்கச் செயலாளரைக் கொலை செய்வேன் என்று மிரட்டிக் கொண்டு இருக்கின்றார். என்ன பிரச்சினை?

ஒருவருடைய கார் நிறுத்தம் வெறுமனே கிடந்தது. அதில் கொண்டு போய் மற்றொருவர் தமது வண்டியை நிறுத்தி விட்டார். அந்த இடத்துக்காரர் இரவு இரண்டு மணிக்கு வந்தார். தன்னுடைய இடத்தில் வேறு கார் நிற்பதைப் பார்த்து, செயலாளரை எழுப்பி விட்டார். அவர், காவலர்களை அனுப்பி என்னவென்று பார்க்கச் சொல்லி இருக்கின்றார். வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தியவர், குடித்துவிட்டுப் படுத்து இருக்கின்றார். எழுப்பியதால் தகராறு. ஒருவழியாகப் பேசி, அவரது காரை இடத்தை விட்டு அகற்றும்படி செய்தோம்.

ஆயினும், கொலை மிரட்டல் குறித்து, செயலாளர் காவல்நிலையத்தில் கொண்டு போய் மனு கொடுத்து விட்டார். காவல் நிலையத்தில் இருந்து மிரட்டல் விடுவித்தவரை அழைத்து, எச்சரித்து அனுப்பினார்கள். இதுபோன்ற தேவை இல்லாத பிரச்சினைகளையும், சங்கப் பொறுப்பாளர்கள் சந்திக்க வேண்டும்.

குடிநீர்ப் பிரச்சினை

குடிநீர்ப் பிரச்சினை குறித்து ஏற்கனவே பேசி இருக்கிறோம். மிகுந்த செலவில் நாங்கள் வடிகட்டித் தருகின்ற குடிநீரை, ஒவ்வொரு நாளும், காலை ஏழு மணி முதல், ஐந்து நிமிடங்களுக்கு மட்டும்தான் கொடுத்து வந்தோம். ஒருவர் என்ன செய்தார்?

தன்னுடைய குளியல் அறையில் குழாயில் (ஷவர்) நல்ல தண்ணீர் இணைப்பைக் கொடுத்து விட்டார். மோட்டார் வைத்து, வேகமாகத் தண்ணீரை உறிஞ்சி, தன்னுடைய வீட்டுக்கு உள்ளேயே ஒரு தொட்டி வைத்துப் பிடித்துக் கொண்டார்.

மற்றவர்கள் எங்களுக்குத் தண்ணீர் சரியாக வரவில்லை என்கிறார்கள். ஒருவழியாக, யார் உறிஞ்சுகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து விட்டோம்.

அவர் சொல்லுகிறார்: ‘நீங்கள் குளிப்பதற்காகக் கொடுக்கின்ற நீரில், எங்கள் தலைமுடி கொட்டுகிறது. அதனால், என் மனைவி நல்ல தண்ணீரில்தான் குளிப்பார்’ என்கிறார். அதற்காக ஆகின்ற செலவை எடுத்துக்கூறி, அந்த இணைப்பைத் துண்டித்தோம். ஒருவர் சொல்லுகிறார்: ‘நான் வாடகை வீட்டில் இருந்தபோது, தண்ணீரே கிடைக்கவில்லை. இந்தக் குடியிருப்புக்கு நான் வந்ததே, நன்றாகக் குளிக்கலாம் என்பதற்காகத்தானே?’ என்கிறார்.

மற்றொருவர், குளிப்பதற்காகக் கொடுக்கின்ற நீரை, வீட்டுக்கு உள்ளேயே ஒரு சிறிய சுத்திகரிப்புக் (ஆர் ஓ) கருவியை வாங்கி வைத்துப் பொருத்தி மறுசுழற்சி செய்கிறார். அது நவீன கருவி. சத்தமே வராமல் வேலை நடக்கின்றது. ஆனால், 50 லிட்டர் தண்ணீரை உறிஞ்சித்தான் ஒரு லிட்டரைச் சுத்தம் செய்யும். நாங்கள் மேலே மொட்டைமாடியில் ஒவ்வொரு குழாயையும் மூடிப் பார்த்து, எந்த வீட்டுக்கு அதிகத் தண்ணீர் போகிறது என்பதைக் கண்டுபிடித்துத் தடுத்தோம்.

இப்படித் தண்ணீரை உறிஞ்சுவதுதான் எல்லா அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தலையாய பிரச்சினை. எனவே, ஒவ்வொரு வாரமும், குடிநீர் வழங்கலைச் சரிபார்க்க வேண்டும். அதுதான் சங்கத்தின் பொறுப்பு. ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி மீட்டர் வைத்தால் பிரச்சினை தீர்ந்து விடும்.

சில வீடுகளில் குழாயில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வடிந்துகொண்டே இருக்கும். அதைப் பற்றிக் கவலையேபட மாட்டார்கள். ஒவ்வொரு சொட்டு என்றாலும், ஒரு இரவிலேயே 40 லிட்டர் வீணாகி விடும். மீட்டர் பொருத்தி விட்டால், ஓடி வந்து சரி செய்வார்கள். வாசர் ரிப்பேர் என்றால், உடனே மாற்றுவார்கள்.

உலகம் முழுவதும், நாடுகள் மாநிலங்களுக்கு இடையே மட்டும் அல்ல, அடுக்குமாடி வளாகங்களிலும் தண்ணீரைப் பகிர்வதுதான் இப்போது பெரிய பிரச்சினை. அதற்கான செலவுதான் அதிகம். எதிர்காலத்தில் தண்ணிரின் விலை மேலும் மேலும் கூடிக்கொண்டே போகும்.

முன்பு, தண்ணீருக்காகப் பொருத்தப்பட்ட அளவைக் கருவிகள், அடிக்கடி பழுதாகி பிரச்சினைகள் ஏற்பட்டன. இப்போது நல்ல தரமான கருவிகள் வந்து விட்டன. தரையில் ஓங்கி அடித்தாலும், உடையாது. அத்தகைய மீட்டர்களைப் பொருத்தி, சங்கக் கணினியோடு அதை இணைத்து விடுகிறார்கள். எனவே, ஒரு வீட்டில் எவ்வளவு தண்ணீர் செலவு ஆகிறது என்பதை, சங்க அலுவலகத்தில் உள்ள கணினியிலேயே தெரிந்து கொள்ளலாம். அப்படி ஒவ்வொருவரும் பயன்படுத்துகின்ற தண்ணீரின் அளவுக்கு ஏற்றபடி, செலவைப் பகிர்ந்து கொள்ளலாம்.

இதனால், தண்ணீர் மட்டும் அல்ல, மின்சாரமும் சிக்கனம் ஆகும். தண்ணீரை வாளியில் இருந்து எடுத்துக் குளிப்பதைவிட, பூந்தெளிப்பான் மூலம் குளித்தால் நல்லது. அதில் குறைந்த அளவுதான் தண்ணீர் செலவு ஆகும். சிலர் பல் தேய்க்கும்போது, முகச்சவரம் செய்யும்போதெல்லாம், குழாயைத் திறந்தே வைத்து இருப்பார்கள். தண்ணீர் வீணாவதைப் பற்றிக் கவலைப்படவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை இப்படித்தான் கட்டுப்படுத்த முடியும். தண்ணீர் பயன்பாடு குறித்து, அடிக்கடி எச்சரிக்கைகள் விடுத்து, சுற்று அறிக்கைகைளை அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

- அருணகிரி

Pin It