1. 1899 ஆம் ஆண்டில், சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்துக்காக வெளியிடப்பட்ட விளம்பரத் துண்டு அறிக்கையில், பஞ்சமர்கட்கு இடம் இல்லை என்று அச்சிட்டு இருந்தார்கள். இந்த நிலையை மாற்றியது, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

periyar_2322. 1925க்கு முன்பு,தமிழ்நாட்டுக்குக் காந்தியார் வந்தபோதெல்லாம், மைலாப்பூரில் சீனுவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்து இருப்பார்; உள்ளே போகாமல். 1926 க்குப் பின்தான், அவர் அந்த வீட்டுக்கு உள்ளே சென்றார். காரணம், 1925 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் தொடங்கி நடத்திய பிரச்சாரத்தின் விளைவு என்பது உங்களுக்குத் தெரியுமா? மகாத்மா காந்திக்கே இந்தக் கதிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

3. பகத்சிங் தூக்கில் இடப்பட்டபோது, ஆங்கிலேய அடக்குமுறைக்கு அஞ்சி, தேசபக்தர்கள் வாய்மூடிக் கிடந்தபோது, பகத்சிங் செயலைப் பகிரங்கமாக ஆதரித்து, 1931 இல் கட்டுரை தீட்டியவர் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

4. 1933 இல், பெரியாரின் துணைவியார் நாகம்மையார் மறைந்த அடுத்த நாளே, தடை மீறி, ஒரு கிறிஸ்தவ கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்த பெரியார், ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

5. 1933 அக்டோபர் குடி அரசு ஏட்டில், தந்தை பெரியார் எழுதிய 'இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?' என்ற கட்டுரையில் தீவிர பொது உடைமை வாடை வீசுகிறது என்று சொல்லப்பட்டு, இந்திய குற்றத் தடுப்புச் சட்டம் 124 ஏ பிரிவின்படி, ஆசிரியர் பெரியார் அவர்களும், வெளியீட்டாளர் எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் (பெரியாரின் தங்கை), பிரிட்டிஷ் அரசால் தண்டிக்கப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?

6. 1938 இல், சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அளிக்கப்பட்ட பட்டம்தான் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

7. 1960 வாக்கில் உருவாக்கப்பட்ட சோதனைக் குழாய் குழந்தை பற்றி, 1938 இலேயே கருத்துத் தெரிவித்தவர் (கர்ப்ப ஆட்சி) தந்தை பெரியார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

8. 1942 ஆம் ஆண்டு, கவர்னரும், வைஸ்ராயும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக வேண்டியபோதும், அதை தந்தை பெரியார் ஏற்க மறுத்து, பதவியைத் துச்சமென உதறித் தள்ளினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

9. 1942 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டம் அளிப்பு விழாவுக்கு வந்து இருந்த திருவாங்கூர் மகாராணி, சமற்கிருத மொழியின் வளர்ச்சிக்காக ரூ 1 இலட்சம் நன்கொடை அளித்தபோது, தந்தை பெரியார் அதை எதிர்த்துப் போராடி, அந்தப் பணத்தை, மாணவர் விடுதி வளர்ச்சிக்காகச் செலவிட ஏற்பாடு செய்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

10. 1951 இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்பு உரிமைப் போரின் காரணமாகத்தான், இந்திய அரசியல் சட்டம் முதன்முதல் திருத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

11. பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட, தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில், சூத்திரர்கள் இடம் என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்பதும், 1954 இல் தந்தை பெரியார் முயற்சியால் அந்தக் கல் அகற்றப்பட்டது என்பதும், உங்களுக்குத் தெரியுமா?

12. 1954 ஆம் ஆண்டு, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில், தந்தை பெரியாரின் இராமாயணப் புரட்டு விளக்கக் கூட்டத்துக்கு, அங்கே காவல்துறை அதிகாரி வீடு இருப்பதால் அனுமதி தர முடியாது என மறுத்தனர் என்பதும், அதனால் ஒலிபெருக்கி இல்லாமலேயே, தந்தை பெரியார் 2 மணி நேரம் உரக்கக் கத்திப் பேசினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

13. வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார், சிறையில் கைவிலங்கு பூட்டியே வைக்கப்பட்டு இருந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

14. வைக்கம் போராட்டம் வெற்றி பெறும் நிலையில், அந்தப் புகழ் தந்தை பெரியாருக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே, கடைசி நேரத்தில் காந்தியார் நுழைக்கப்பட்டார் என்ற சூழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா?

Ungalukku_theriyuma_40015. தந்தை பெரியார் தலைமையில் வைக்கம் போராட்டம் நடந்தபோது, போராட்ட வீரர்களுக்கு உணவு வழங்கியவர்கள் சீக்கியர்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

16. வைக்கம் போராட்டத்தைப் பற்றி எழுதிய காந்தியார், தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடவே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

17. தந்தை பெரியாருக்கு வர வேண்டிய கடன் தொகையை, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார், ஆங்கில அரசின் நீதிமன்றத்தில் மூலம் வசூலிக்க மறுத்தார் என்பதும், எனவே அதைத் தமக்கு மாற்றித் தருமாறு சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற பார்ப்பன வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்தார் பெரியார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

18. தந்தை பெரியார் காங்கிரஸ் செயலாளராக இருந்தபோது, பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி காங்கிரசில் வலுத்துவிட்டது என்று கூறிக் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததோடு, காங்கிரசில் இருந்து முக்கியப் பார்ப்பனத் தலைவர்கள் விலகினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

19. குருகுல பிரச்சினை நடந்து கொண்டு இருந்தபோது, பிறப்பில் ஏற்றத் தாழ்வு இல்லை என்று காங்கிரஸ் கமிட்டியில் பெரியார் கொண்டு வந்த தீர்மானத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர் இராஜாஜி என்பது உங்களுக்குத் தெரியுமா?

20. தமிழ்நாடு கதர் போர்டின் தலைவராக தந்தை பெரியார் இருந்தபோது, செயலாளராக இருந்த கே.சந்தானம் என்ற பார்ப்பனர், தன்னிச்சையாக பார்ப்பனர்களை ஏராளமாக வேலைக்கு அமர்த்தியதும், அதை தந்தை பெரியார் கண்டித்ததும் உங்களுக்குத் தெரியுமா?

21. ருசியாவுக்குச் செல்லுவதற்கு முன்பே, இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

22. 1921 இல் நீதிக்கட்சி ஆட்சி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வந்தபோது, பார்ப்பன அதிகாரிகளை பி என்றும், பார்ப்பனர் அல்லாத அதிகாரிகளை என்.பி என்றும் அரசு கோப்புகளில் குறிப்பிட்டு, பார்ப்பனர் அல்லாதாரை இனம் கண்டு வாய்ப்புகளைத் தந்தது என்பதும், அதனால் பார்ப்பனர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டத்தைப் போட அஞ்சினர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

23. 1921 ஆம் ஆண்டு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பெண்களுக்கு முதன்முதலாக வாக்கு உரிமையை வழங்கியது நீதிக்கட்சிதான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

24. வேலைவாய்ப்புகளில் மட்டும் அன்றி, பதவி உயர்விலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, 1922 ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சி ஆணை பிறப்பித்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

25. 1922 ஆம் ஆண்டு, நீதிக்கட்சி ஆட்சியில்தான் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection commission) ஏற்படுத்தப்பட்டு, பணி நியமனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன; அதற்கு முன்பு, அந்தந்தத் துறைகள் மூலமாகவே, ஏராளமான பார்ப்பனர்கள் வேலையில் சேர்க்கப்பட்டு வந்தார்கள் என்ற வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?

(தொடரும்)

அனுப்பி உதவியவர்: அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It