திவான் பகதூர் சர் ஆற்காட் லட்சுமணசாமி முதலியார் (1887–1974), என்ற ஏ.எல்.முதலியார் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தபோது, அவருக்கும், அப்போதைய தமிழக அரசுக்கும் இருந்த உறவுகள் பற்றி, எங்கள் பேராசிரியர்கள், இன்றும் பல கருத்தரங்க உணவு இடைவேளைகளின் போது சிலாகித்துப் பேசுவதைக் கேட்டிருக்கின்றேன். காமராசர் முதல்வராக இருந்தபோது முதல்வருக்கும் துணைவேந்தருக்குமான உறவுகள் நாட்டுப் புறக் கதைகள் போலவே பேசப்படுகின்றன.

ஏ.எல்.முதலியாருக்குப் பின் ஏன் ஒரு துணைவேந்தர் கூட அவ்வளவு கம்பீரமாகவும், அறிவுச் செருக்குடனும், அரசு அதிகார நிர்ப்பந்தங்களை நிராகரிக்கும் துணிவுடனும் உருவாகவில்லை என்ற கேள்வியைப் பல பேராசிரியர்கள் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழ்ப் பலகலைக் கழகத் துணைவேந்தராக இருந்த வி ஐ சுப்ரமணியம், மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த சீனி கிருஷ்ணசாமி, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த வே வசந்திதேவி, உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய வெகுசிலரே துணைவேந்தர் பதவிக்குரிய மாண்பினைச் செழுமைப் படுத்தியுள்ளனர்.

துணைவேந்தர் பதவி என்பது ஒரு அரசு ஊழியப் பதவியல்ல என்பதைத் துணைவேந்தர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று பரவலாகக் குற்றஞ்சாட்டப் படுகின்றது. உயர்கல்வித் துறைச் செயலரையும், உயர்கல்வி அமைச்சரையும் தொழுது வணங்கி அவர்கள் இடும் கட்டளைகளையெல்லாம் சிரமேற்கொண்டு நிறைவேற்றும் பழக்கங்களினால், அவர்கள் சிறுமைப்படுத்தப் படுகின்றார்கள்.

இந்தச் சூழலில் தான், கலகக் காரர், இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலின் தலைவர் நீதிமான் மார்க்கண்டேய கட்ஜுவின் அறிக்கை மிகுந்த கவனம் பெறுகின்றது. நீதிபதிகள், துணைவேந்தர்கள், தேர்தல் ஆணையர்கள், தலைமைக் கணக்கு அதிகாரிகள், தகவல் ஆணையர்கள் போன்ற அரசியல் சாசனவழி நியமனம் பெறும் பதவி வகிப்போர் யாவருக்கும் பொருந்தக் கூடிய விளக்கத்தையே கட்ஜு வழங்கியுள்ளார். துணைவேந்தர்கள் அரசு ஊழியர்கள் அல்லர். அவர்கள் நீதியரசர்களுக்கு நிகரான வகையில், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரைப் போலவே, அரசினால் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தத் தக்கவர்கள் அல்லர் என்பதே இந்த அறிக்கையிலிருந்து பெறப்படும் சேதியாகும்.

நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு, அண்மையில், தான் ஒரு அரசு ஊழியன் அல்லன் என்பதை விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் தமிழ் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது. அரசியல் சாசன வழி நியமனம் பெறும் துணைவேந்தர்கள், இந்த அறிக்கையின் மகத்துவத்தை உணர்ந்து போற்றுவார்களாக.

தலைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு : மார்க்கண்டேய கட்ஜு

வெளிப்படையாக இருப்பதற்கும் இந்திய பிரஸ் கவுன்சிலுடன் எனக்குரிய தொடர்புக்கும் என்று எந்த சம்பந்தமும் இல்லை.

உங்கள் உதடுகள் சுதந்திரமானவை என்பதால், உரக்கப் பேசுங்கள்.

உங்கள் நாக்கும் உமக்கேயுரியதால், இன்னும் உரக்கப் பேசுங்கள்.

- ஃபைஸ் அகமது ஃபைஸ்

இந்திய பிரஸ் கவுன்சில் (பி.சி.ஐ) தலைவராக இருந்தாலும், பத்திரிகைகளுக்குத் தொடர்பில்லாத சில விஷயங்களிலும் நான் வெளிப்படையாகக் கருத்துக் கூறுவதை, அரசியல்வாதிகளும், வக்கீல்களும், வேறு சிலரும் விமர்சித்துள்ளனர். எனவே, நான் கருத்துக் கூற வேண்டிய தருணம் இது என்று கருதுகின்றேன்.

என் மீதான குற்றச் சாட்டே, பிசிஐ நீதி நிகர் செயல்பாடுகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதால், அதன் தலைவர் ஊடகங்கள் தொடர்பில்லாத பிரச்சனைகளில் பேசக் கூடாது என்பதே. முதலில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். ஒரு விஷயம் பிசிஐ முன்பாகக் கொண்டுவரப்படுமானால், அதில் தொடர்புடைய ஒரு விஷயம் அல்லது ஒரு நபர் குறித்து, பிசிஐ தனது நீதி நிகர் செயல்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய வேளையில், நான் எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டிய பொழுது, நான் உடனடியாக விவாதங்களிலோ, முடிவெடுத்தலிலோ ஈடுபடுவதில்லை.

நீதி நிகர் விஷயங்களில் நான், தனியாளாக முடிவெடுப்பதில்லை. மாறாக, பெருவாரியான வாக்குகளின் அடிப்படையில், முடிவுகளை மேற்கொள்வது பிசிஐ ஆகும். பிசிஐயில் தலைவர் தவிர 28 உறுப்பினர்கள் உள்ளனர். நான், நடுநிலை வகிக்கும் நோக்குடன் முடிவெடுத்தலில், விலகி நின்றிருந்தால், பின் பிற உறுப்பினர்கள் அந்த விஷயத்தை அவர்கள் தமக்குச் சரியெனப் படும் விதத்தில் கையாண்டு கொள்வார்கள். பிறகேன் இத்தனை ஆரவாரக் கூச்சலாம் ?

ஒரு நீதிமான், தம் முன் வழக்கு வராதவரை, பொது விஷயங்களில் கருத்துரைக்கக் கூடாது என்றும் சொன்னார்கள். இதற்கு என் பதில் இதுதான்: நான் ஒரு நீதிபதியல்ல; ஓய்வு பெற்றுவிட்ட ஒரு நீதிபதி. பிசிஐ தலைவர் பதவி என்பது, ஒரு நீதிமான் பதவியிலிருந்து செயல்பாடுகளிலும் பதவியிலும், முற்றிலும் வேறுபட்டது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

முதலில், ஒரு நீதிபதிக்கு நீதித்துறை சார்ந்த செயல்பாடுகள் மட்டுமே உண்டு (இந்திய அரசியல் சாசனத்தின் 235 வது ஷரத்தின் படி உயர் நீதி மன்றங்களுக்கு அளிக்கப்படும் துணை நீதித் துறையின் நிர்வாக மேலாண்மை அதிகாரம் தவிர). ஆனால், பிரஸ் கவுன்சில், நீதி நிகர் செய்ல்பாடுகளை நிறைவேற்றுவது தவிர, பிசிஐ சட்டத்தின் 14வது ஷரத்தின் படி, பத்திரிகைகளால் அல்லது பத்திரிகை மீதான புகார்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குதல்; பிரிவு 13ன் படி, பத்திரிகை சுதந்திரத்தைக் காத்தல், இதழியலின் உயரிய தரத்தினை நிலை நிறுத்துதல் எனப் பல பணிகள் உண்டு.

இரண்டாவதாக, உயர் நீதி மன்றமும், உச்ச நீதி மன்றமும் கொண்டிருக்கும் அதிகாரங்களை, பிசிஐ பெற்றிருக்கவில்லை. சன்றாக, அழைப்பாணையை விடுக்கும் அதிகாரம்; நீதிமன்ற அவமதிப்பைத் தண்டிக்கும் அதிகாரம், நிர்வாக அதிகாரிகளின் ஆணைகளை ரத்துச் செய்யும் அதிகாரம்; பொது நலவழக்கில் வழிகாட்டுதல்களை வெளியிடுதல் என எந்த அதிகாரத்தையும் பிசிஐ பெற்றிருக்கவில்லை. பிசிஐ தலைவருக்கும், நீதிமான்களுக்கும் வேறு சில வேறுபாடுகளும் உண்டு. இப்படியிருக்க, எப்படி, இரு பதவிகளையும் சமமாகக் கருதிட இயலும் ?

நான் பிசிஐயின் தலவர் மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனும் ஆவேன் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வந்திருக்கின்றேன். பிசிஐ சட்டம், ஊடகத் துறை சாராத விஷயங்களில் நான் கருத்துக் கூறுவதைத் தடுக்கும் எந்த ஷரத்தையும் கொண்டிருக்கவில்லை (இருப்பினும், நான் ஏற்கனவே சொல்லியுள்ளபடி, பிசிஐயின் நீதி நிகர் செயல்பாடுகளை நிறைவேற்றிட வேண்டிய ஒரு விஷயத்தில், நான் என்னுடைய கருத்தைச் சொல்லியிருந்தால், பின் நான் அந்த விவாதங்களிலிருந்தும், முடிவெடுத்தலிலிருந்தும் நடுநிலை காக்கும் நோக்குடன் விலகியிருப்பேன்). எனவே, நான் தொடர்ந்து அப்படியான விஷயங்களில் கருத்துச் சொல்வதைத் தொடர்ந்து கொண்டிருப்பேன். குறிப்பாக, என் கருத்துப்படி, தேச நலன் தொடர்பான ஒரு விஷயத்தில், யார் என்ன சொல்லிக் கொண்டிருந்தாலும், இந்திய அரசியல் சாசனம் 19(1)(அ) ஷரத்துப் படி, (அனைத்துக் குடிமகன்களுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான அதிகாரமளிக்கும் ஷரத்து இது) பிசிஐ தலைவராக இருந்து கொண்டே, தொடர்ந்து அப்படியான விஷயங்களில் கருத்துரைத்து வருவேன்.

நான் ஒரு அரசு ஊழியர் என்றும், அரசினால் நியமிக்கப் பட்டவன் என்றும், அதனால், அரசுக்குக் கடன் பட்டவனென்றும், என் மீது குற்றஞ்சாட்டப் படுகிறது. இதற்கு என் பதில் இது தான்: முதலில், பிசிஐ தலைவர், அரசினால் நியமிக்கப்படுபவரல்ல. மாறாக, பிசிஐ சட்டத்தின் 5(2)வது ஷரத்தின் படி, ஒரு தேர்வுக் குழுவினால் தெரிவு செய்யப்படுகின்றார். அந்தத் தேர்வுக் குழுவில், 1. பாராளுமன்ற மேலவையின் தலைவரும் இந்திய துணைஜனாதிபதியுமானவர் 2. மக்களவையின் சபாநாயகர் மற்றும் 3. பிசிஐயின் ஒரு உறுப்பினர் (இவரும் அரசினால் நியமிக்கப்படுபவரல்ல. மாறாக, பிசிஐ உறுப்பினர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப் படுகின்றார்) உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் குழுதான், என்னை ஒருமனதாகத் தெரிவு செய்தது. இரண்டாவதாக, நான் ஒரு அரசு ஊழியன் அல்லன். ஆனால் நான் ஒரு சட்டப் பூர்வமான, சுயாதீனமான அதிகாரி. பிசிஐ சட்டத்தின் ஷரத்து 7(1), என்னை ஒரு அதிகாரி என்று தான் அழைக்கின்றது. ஆனால், அதிகாரி என்ற சொல், நான் ஒரு அரசு ஊழியனாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லையே. ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருக்கலாம். எந்தச் சூழலில் அந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் அது சார்ந்தேயிருக்கின்றது.

பிசிஐ சட்டத்தின் 7(1) வது ஷரத்துப் படி, ஆபீசர் என்ற சொல் ஒருவர் ஒரு அலுவல் பொறுப்பை வகிக்கின்றார் என்பதே பொருள். பிசிஐ தலைவர் அரசின் ஊழியரல்ல என்பதை விளக்க பல கூறுகள் உள்ளன: 1. வழமையாக, ஒரு ஊழியர் என்பவர், ஒரு மேற்பார்வையாளரின் கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் இயங்குவார். ஆனால், பிசிஐ தலைவருக்கு அப்படியான ஒரு மேற்பார்வையாளர் எவரும் இல்லை. 2. ஒரு அரசு ஊழியருக்கு ஏசிஆர் எனப்படும் வருடாந்திர கமுக்க அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும். ஆனால், பிசிஐ தலைவருக்கு அப்படியான எந்தவொரு கமுக்க அறிக்கையும் தயாரிக்கப் படுவதில்லை. 3. ஒரு அரசு ஊழியரைப் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யவோ, பணியிட மாற்றம் (பணியிட மாற்றத்திற்கு உட்படும் பதவியில் அவர் செயல்பட்டு வந்தால்) செய்யவோ இயலும். ஆனால், பிசிஐ தலைவரை அப்படிப் பணியிடை நீக்கம் செய்யவோ, இடமாற்றம் செய்யவோ இயலாது. 4. அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள் பிசிஐ தலைவருக்குப் பொருந்தாது.

பிசிஐ தலைவரின் ஊதியம் அரசால் தான் வழங்கப் படுகின்றது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை (பிசிஐ தலைவர், பொறுப்பில் உள்ள ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு நிகரான சம்பளம், படிகள் மற்றும் பலன்களைப் பெறுவார் என்று நியமன ஆணை குறிப்பிடுகின்றது); என்றாலும், உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கூட அரசுதான் சம்பளம் வழங்குகின்றது. அதனால், நீதிபதிகள் அரசின் ஊழியர்கள் ஆகிவிடுவார்களா?

நான் காங்கிரஸ் அல்லாத அரசுகளையே விமர்சிக்கிறேன் என்று என்னைக் குற்றஞ்சாட்டுபவர்களுக்கு, நான் பல தொலைக்காட்சி விவாதங்களில் விளக்கம் சொல்லியிருக்கின்றேன். நான் மகாராஷ்ட்ரம், இமாச்சலப் பிரதேசம், டில்லி போன்ற காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை விமர்சிப்பதை வழமையாகக் கொண்டிருக்கின்றேன். அவ்வாறு என் மீது குற்றஞ்சாட்டுபவர்கள் உண்மைத் தகவல்களைத் திரிக்கிறார்கள் என்பது எனது குற்றச்சாட்டு.

இந்த விளக்கத்தைக் கொடுப்பதற்குக் கூட நான் மெனக்கிட்டிருக்க மாட்டேன். ஆனால், சிலர் முன்வைக்கும் திரிபு வாதங்களால், பொது மக்கள் தவறான தகவல்களைப் பெறுவதிலிருந்து காக்கவே இந்த விளக்கம் தேவையாகியுள்ளது.

Pin It