கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுயநிதி மற்றும் கல்லூரிகளில்  மருத்துவம், பொறியியல் சார்ந்த பல்வேறு தொழிற்நுட்பப் படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு, சுயநிதி கல்வி நிறுவனங்கள் (சிறுபான்மையினர்) உட்பட அனைத்துவிதமான படிப்புகளுக்கும் தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய அரசு நிர்ணயித்த சுயநிதிக் கல்லூரிக் கல்விக்கட்டணங்களை மட்டும் மைய அரசின் உதவித்தொகை திட்டத்தின்  கீழ் செலுத்த தமிழக அரசால் கடந்த 9.1.2012 அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை 6 ல் தெளிவாக சில விஷயங்களை வலியுறுத்தாததை தலித் விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் மீண்டும் 1.9.2012 அன்று சில திருத்தங்கள் செய்யப்பட்டு அரசாணை(நிலை) எண்: 92 வெளியிடப்பட்டது.

கல்விக்கட்டணம் இல்லை

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக அரசாணை எண்:6 ல் 20111-2012 ஆம் ஆண்டு முதல் சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளிலும் இலவசக் கட்டண இருக்கையில் பயிலும் ஆதிதிராவிடர்,பழங்குடியின மாணவ, மாணவியர் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயித்த கல்வி கட்டணங்களை மட்டும் அவர்களின் பெற்றோர்கள்/ பாதுகாவலர்கள் ஆண்டு வருமானம் 2 இலட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் அக்கட்டணங்களை மைய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்க அரசால் ஆணையிடப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஆணை எண்:92 அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. மதுரை மாநகரில் இயங்கும் ஒரு மருத்துவமனை மற்றும் செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் மருத்துவத் துறை சார்ந்த பல பிரிவுகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் அரசாணை எண்: 92 க்கு எதிராக கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. மேலும், இந்த நிறுவனத்தில் பயிலும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இதுவரை முறையான அரசு சலுகைகளைக் கூட பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் இயங்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம்மாறிய கிறித்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அரசாணை எண்:92 ன் படி கடந்த 2011-2012 ஆம் கல்வியாண்டிலும், நடப்பு கல்வியாண்டிற்கும் (2012-2013) எந்தவிதமான கல்விக் கட்டணங்களையும் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறையிடமிருந்து பெற்றுத்தரப்படவில்லை.

கல்விக்கடன் என்ற பெயரில் தனிநபர் கடன்

மேலும்,கல்லூரியியே கல்விக் கடனை மாணவர்களுக்குப் பெற்றுத்தருவதாகக் கூறி தனியார் வங்கியின் மூலமாக தனி நபர் கடன்களை வாங்கித் தந்துள்ளனர். இதனால் கல்வி கடனாக ரூ.3 இலட்சம் பெற்ற மாணவனின் தந்தை தனிநபர் கடனாக 4 ஆண்டுகளில் வட்டியுடன் சேர்த்து ரூ.7 இலட்சம் கட்டவேண்டிய அவல நிலைக்கு கல்லூரியே மாணவனை தள்ளியுள்ளது என்று கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகரில் இயங்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் பயிலும் பல ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டிலும்(2011-2012), நடப்புக் கல்வியாண்டிலும்(2012-2013) முறையாக அரசாணை எண்:92ன் கீழ் கல்விக் கட்டணங்கள் பெற்றுத் தரப்படவில்லை. கரூர் மாவட்டம் காரூடையாம்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு கல்லூரியிலும் கடந்த 2011-2012 ஆம் கல்வியாண்டிலும்,நடப்பு கல்வியாண்டிற்கும் (2012-2013) ஒரு மாணவருக்கு கூட பெற்றுத்தரவில்லை. மாறாக கல்விக் கட்டணங்களை கட்டாயப்படுத்தி மாணவர்களிடம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கோவையில் மரப்பாலம் பகுதியில் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் கடந்த 2011-2012 ஆம் கல்வியாண்டிலும்,நடப்பு கல்வியாண்டிற்கும் (2012-2013) கல்விக் கட்டணங்கள் பெற்றுத் தரப்படவில்லை.

இப்படி தனியார் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளைக்கு மத்தியில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இயங்கும் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களிடமிருந்து கட்டாய கல்விக் கட்டணங்களை வசூலிக்கின்றனர்.

மேலும், அரசாணை:92 ஐ குறித்து சிலமாணவர்களின் பெற்றோர்கள் விசாரித்ததால் கல்வி உதவித் தொகை வழங்கும் போது கல்விக் கட்டணங்களையும் திருப்பி தந்து விடுகிறோம் என்று கூறுவதாகவும் தெரிகிறது.

தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக செயல்படும் சுயநிதிக் கல்லூரிகள் மீதும் அரசுத்துறை சார்ந்த கல்வி நிறுவனங்கள் மீதும் தமிழக முதல்வரும், ஆதிதிராவிடர் நலத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Pin It