'யாருடா நீங்க... எங்கடா இருக்கீங்க..? என்று கோபமாகக் கேட்கத் தோன்றுகிறது எல்லா குண்டுவெடிப்புக்கும் பொறுப்பேற்கும் ‘இந்திய முஜாஹிதீன்’ என்ற பெயரைக் கேட்டதும். லஷ்கர்-இ-தய்யிபா, ஜெய்ஷ்-இ-முஹம்மமது, ஜமாத்-இ-இஸ்லாமி, சிமி என்று பல்வேறு பெயர்களை சொல்லிப் பார்த்தாலும் இந்த ‘இந்திய முஜாஹிதீன்’ என்ற பெயர் புரிந்து கொள்வதற்கும், திருப்பிச் சொல்வதற்கும் எளிதாக இருக்கிறது. அதுவே இந்த அமைப்பு மீண்டும் மீண்டும் பொறுப்பேற்கக் காரணமாக இருக்கிறது போலும். இன்னும் கால் நூற்றாண்டுக்கு இவர்கள்தான் பொறுப்பேற்பார்கள் போலத் தெரிகிறது.

இவர்களுக்கு எங்கிருந்து வெடிமருந்து கிடைக்கிறது? அதனை கச்சிதமாகப் பொருத்தி வெடிகுண்டாக்கும் பொறியாளர் எங்கே கிடைக்கிறார்? இந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஒதுங்கும் மறைவிடம் நாட்டில் எப்பகுதியில் உள்ளது? உலகின் முன்னணியில் இருக்கும் உளவுத் துறைகளில் ஒன்றாக நமது இந்திய உளவுத் துறை இருந்துவரும் நிலையில், இந்த துப்புத் துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எப்படி இந்த அமைப்பு உயிரோட்டமாக செயல்பட்டு வருகிறது? அவ்வமைப்பினர் என்று கூறி பலர் பிடிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் இன்னும் பலர் எப்படி வெளியே துணிச்சலாக குண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

இவர்களை யார் இயக்குவது என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே போகிறது. மத்திய அரசியலுக்கு மிகப்பெரிய சங்கடங்கள் ஏற்படும் போதெல்லாம் இந்த இந்திய முஜாஹிதீன்கள்(?) குண்டு வெடிப்புகளை நடத்தி அரசுக்கு மறைமுகமாக உதவிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஹெலிகாப்டர் ஊழலும் அப்சல் குருவின் தூக்கும் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஐதராபாத் குண்டு வெடிப்பு அதன் அழுத்தங்களை தணித்துவிட்டது.

அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டு பத்து பதினைந்து நாட்களுக்குள் இந்த குண்டு வெடிப்பு சாத்தியப்பட்டுப் போனதுதான் வியப்பு. ‘அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்குப் பழிவாங்க தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்த திட்டம்’ என்ற செய்தி நாளிதழ்களின் முதல் பக்கத்தில் அடுத்த நாளே வெளியானது.

அதுதாங்க உண்மை! அஜ்மல் கசாபையும், அப்சல் குருவையும் தூக்கில் இட்டதற்கு பழிவாங்கவே இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததாக உள்துறை அமைச்சர் ஷிண்டேவே சொல்லிவிட்டார்.

அப்சல் குரு எந்த ஒரு தீவிரவாத அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என்று உச்சநீதிமன்றமே சான்றளித்திருக்கிறது. முறையாக ஒரு வக்கீல் வைத்துக்கொண்டு வாதாடக்கூட முடியாதவராக அவர் இருந்திருக்கிறார். அவர் உறுதியான சாட்சிகளின்றியும், சான்றுகளின்றியும் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அவர் ஒரு அப்பாவி என்று மனிதநேய ஆர்வலர்களும், நீதிக்காகப் போராடும் அமைப்பினரும் குரலெழுப்பி வரும் நேரம் பார்த்து, அப்சல் குருவுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை உடைத்து தூள்தூளாக்கும் ஒரு முயற்சியாகவே ஹைதராபாத் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

அப்சல் குருவுக்கு நல்ல வக்கீல் வைக்கக்கூட உதவாத தீவிரவாதிகளா அவரது தண்டனைக்கு ஆத்திரப்பட்டு குண்டு வெடித்து உதவப் போகிறார்கள். அப்சல் குருவுக்கு ஆதரவாகத்தான் தீவிரவாதிகள் குண்டுவைத்து வெடித்தார்கள் என்று உறுதிப்படுத்தி, சந்தேகத்தில் நிழலாடும் மிச்சமுள்ள உள்ளங்களையும் அரசு திருப்திப்படுத்திவிட முடிகிறது.

குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் முஸ்லிம்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முஸ்லிம்களுக்காக உயரும் நியாயத்தின் குரல்கள் அமுங்கிப் போகின்றன. முஸ்லிம் சமூகம் முழுவதுமே பயத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்கிறது. பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் அனைத்திலும் முஸ்லிம்கள் பரிதாப விசாரிப்புக்கு ஆளாகிறார்கள். அவர்கள் கேவலத்திற்கும், தலைக்குனிவுக்கும் உள்ளாகிறார்கள். சமூகத்தில் புறக்கணிக்கப்படுகிறார்கள். வேலை வாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. வாடகைக்கோ, விலைக்கோ வீடுகள் கிடைப்பதில்லை. நகர்ப்புறத்தின் மையத்தில் இருந்து விலக்கப்பட்டு ஓரம்கட்டப்படுகிறார்கள். புறநகர்களுக்கு முஸ்லிம்கள் ஒதுக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

முஸ்லிம்களுக்கு இவ்வளவு பெரிய அழிவைத் தரும் இந்திய முஜாஹிதீன்கள் நிச்சயமாக முஸ்லிம்களாக இருக்க முடியாது என்பதுதான் இந்திய முஸ்லிம்களின் வாதம்.

இந்தப் பெயரில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் முஸ்லிம்கள்தானே என்கிறார்கள். ஹைதராபாத் மக்கா பள்ளி, அஜ்மீர் தர்கா, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், மாலேகான் போன்ற இடங்களில் குண்டுகள் வெடித்த போதும் இதே இந்திய முஜாஹிதீன் அமைப்புதான் பொறுப்பேற்றிருந்தது. அதன்பேரில் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்ட இளைஞர்கள் ஏராளம் பேர். அசிமானந்தா என்ற சாமியார், ‘இவர்கள் அப்பாவிகள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததன் பேரில்’ பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் குழு, சமீபத்தில் இந்தியப் பிரதமரை திடுதிப்பென்று சந்தித்து, ‘இந்திய முஜாஹிதீன்கள் என்பவர்கள் யார்? அவர்களது தலைமையகம் எங்கே இருக்கிறது? அவர்களது தலைவர் யார்?’ என்று கேட்டிருக்கிறார்கள். மிரண்டு போன பிரதமர், விசாரித்து சொல்வதாக சொல்லியிருக்கிறார்.

நாட்டில் தொடர்ந்து குண்டுகளை வெடிக்கச் செய்துகொண்டே வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு பற்றி பிரதமருக்கே சரியான புரிதலும் தகவலும் இல்லை. அப்படியென்றால், அவர்கள் ஏன் துணிச்சலாக செயல்பட மாட்டார்கள்?

ப.சிதம்பரம், உள்துறை அமைச்சராக இருந்தபோது, குண்டுவெடிப்புகளுக்கும் இந்திய முஜாஹிதீன்களுக்கும் உள்ள உறவு பற்றி அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. காவி பயங்கரவாதம் பற்றி கருத்துச் சொன்ன கையோடு குண்டு வெடிப்புகள் நடந்தவுடனே, எந்த ஒரு அமைப்பின் பெயரையும் ஊடகங்கள் சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

‘அவுட்லுக்’ வார இதழ் இதுபற்றிய சர்வே ஒன்றை வெளியிட்டது. அதில், குண்டுவெடிப்புகளின் பின்னணியில் முஸ்லிம் அமைப்புகள், முஸ்லிம் இளைஞர்கள் பெயரைச் சொல்லும் போது தொலைக்காட்சிகளுக்கான சந்தை விகிதம் (டி.ஆர்.பி. ரேட்டிங்) எகிறி குதிப்பதாக ஊடகபூதங்கள் சில சொன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்புகள் நடந்தவுடனே புகைப்படக் கருவிகளின் அசைவுகளும், தெரிவுகளும் பதற்றத்தைப் பற்றவைக்கத் துடிக்கின்றன. உயிரிழந்தோருக்கான ஓலங்களும், உறுப்பிழந்தோருக்கான பரிதாபங்களும் பரவி விரவி சூழ்நிலையை இறுக்கம் கொள்ளச் செய்கின்றன. மீடியாக்களில் விவாதங்கள் பரபரத்துக் கொள்கின்றன. சிஎன்என் ஐபிஎன்-னும் என்டிடிவியும் தமிழில் புதிய தலைமுறையும் முஸ்லிம் தலைவர்களையும், அறிஞர்களையும் அழைத்துவந்து, கேள்வி என்ற பெயரில் அவமானப்படுத்துகின்றன.

இந்தப் பின்னணியில்தான் சம்பந்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு இந்திய முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்கிறது. இங்கேதான் இந்திய முஜாஹிதீன் யார் என்ற சந்தேகம் எழுகிறது. ஆட்சியாளர்களும், அறிஞர்களும், நிபுணர்களும் கூட சூழ்நிலை இறுக்கத்தால் வாயடைத்துப் போகின்றனர். பொதுமக்களின் கோபத்தையும், ஆவேசத்தையும் அடங்கிப்போகச் செய்ய யாராவது ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உண்மையோ, பொய்யோ நமக்காக (அரசுக்காக) ஒரு இந்திய முஜாஹிதீன் பொறுப்பேற்றுக் கொண்டால் சரி, பொறுப்பேற்கட்டும். பட்ஜெட் தயாரிப்பது, மசோதா விசாரிப்பது, நாடாளுமன்றத்தை முடக்குவது, புதிய ஒப்பந்தங்களைப் போடுவது, கமிஷன் பேசுவது, அப்பாவிகளைத் தூக்கில் போடுவது என்று நமக்கான வேலைகளைப் பார்ப்போம் என்று ஆட்சியாளர்கள் திரும்பிக் கொள்கிறார்கள்.

இந்த பாதிப்பு யாருக்கு? இது யாருக்கு வைத்த வேட்டு? இந்த குண்டுவெடிப்புகளில் மரணித்தவர்கள் 17 பேராகவும் காயம்பட்டவர்கள் 150 பேராகவும் இருக்க, வெட்கித் தலைகுனிவோராகவும், சமூக உறவில் புறக்கணிக்கப்படுவோராகவும், பாதிக்கப்படுவோராகவும் ஆவது, சிறுபான்மை முஸ்லிம்கள் அனைவருமே இல்லையா? எனவே முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையுள்ள முஸ்லிம் இதுபோன்ற வன்காரியங்களை செய்ய மாட்டான்.

பொதுப் பிரச்சனைகளிலும், பொதுத்தளங்களிலும் முஸ்லிம்கள் செய்யும் சேவைகளை கவனமாகப் புறக்கணிக்கும் அல்லது மறைக்கும் செய்தி ஊடகங்கள், குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட வன்முறைகள் நடக்கும்போது விசாரிக்காமலேயே அதன் சுமைகளை முஸ்லிம்கள் தலையில் ஏற்றிவிடுகின்றன. முஸ்லிம் அல்லாத மக்களுடன் முஸ்லிம்கள் இரண்டறக் கலந்து வாழக்கூடியதில் இருந்து அவர்கள் அன்னியமாக்கப்பட வேண்டும் என்கிற திட்டமிட்ட சதி நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிரதானப் பகுதிதான், குண்டுகள் எங்காவது வெடித்தால் அதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று அடித்துச் சொல்லும் இந்த வன்செயலாகும். இதன்மூலம் அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களாகி விட்டன.

முஸ்லிம்கள் மீது உடனடி பழிபோடும் இந்தச் செயலை ப்ரஸ் கவுன்சிலின் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு (உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) வன்மையாகக் கண்டித்துள்ளார். சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “இது ஊடகங்களின் திட்டமிட்ட செயல்... பணம் பெற்றுக்கொண்டு செய்தி வாசிப்பது மாதிரிதான் இதுவும்” என்கிறார். உளவுத்துறையும், ஊடகங்களும் உருவாக்கி நடத்தும் கற்பனையான ஒரு அமைப்பு தான் இந்த இந்திய முஜாஹிதீன் என்கிறார் கட்ஜு.

எனவே, இந்திய முஜாஹிதீன் யார் என்பதைக் கண்டுபிடிப்பது தான் இப்போது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

Pin It