முதல் பெண்ணும் முதல் ஆணும் இந்த உலகத்தில் எப்போது பிறந்தார்களோ அப்போதே காதலும் பிறந்த விட்டது. மனித குலத்தின் வயது எவ்வளவோ அவ்வளவு வயது காதலுக்கும் உண்டு. மனிதகுலம் முதன்முதலாகத் தோன்றிய நம் தமிழ் மண்ணில் வேறெப்போதும் ஏற்படாத சோதனையும், அச்சுறுத்தலும் தற்போது காதலுக்கு ஏற்பட்டுள்ளது.
காலம் காலமாய் காட்டாறாய் ஓடிக்கொண்டிருக்கும் காதலுக்கு சாதி என்கிற தடுப்புச் சுவர் முலம் அணை கட்ட முயலும் சம்பவம் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில் சென்னையில் கொங்குவேளாளக்கவுண்டர் சாதியினரின் ஒரு கூட்டமைப்பின்கீழ் திரட்டப்பட்ட கூட்டத்தில் “காதலர்கள் பெற்றோர் சம்மதத்துடனேயே இனி காதலிக்க வேண்டும்” என்று தீர்மானம் இயற்றியுள்ளனர். அதற்கு அடுத்த நாள் விழுப்புரத்திற்கு வருகைதந்த மருத்துவர் இராமதாசு “பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்யும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டுமென்று முழங்கினார்”.
பெற்றோர்களின் சம்மதத்துடன் காதலியுங்கள், திருமணம் செய்யுங்கள் என்று தீர்மானம் போடத் தெரிந்தவர்கள், பிள்ளைகளின் காதலை, திருமணத்தை பெற்றோர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்று ஏன் தீர்மானம் இயற்றவில்லை? சாதிச் சங்கங்களுக்கு தலைவராகி விட்டதாலேயே தங்கள் சாதிப்பிள்ளைகளின் காதலில், திருமணத்தில் குறுக்கிடும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது? “இளவயதுப் பருவத்தில் காதல் என்கிற பெயரில் ஒரு சிலர் பெண்களின் மனதைக் கெடுத்து திருமணம் செய்கின்றனர். பெண்ணின் அத்தைமகன், மாமன் மகன்கூட கூட்டிச் செல்ல உரிமையில்லாத நிலையில் காதல் என்ற பெயரில் ஒரு கூட்டம் பெண்களைக் கடத்திச் செல்கிறது” என்று மருத்துவர் இராமதாசு புலம்பித் தீர்க்கிறார். டீன்ஏஜ் பருவத்தில் பெண்களின் மனதைக் கெடுப்பதற்கு ஒரு சிலர் முயன்று திருமணம் செய்யும் வரைக்கும் பெற்றோர்கள் ‘தொலைக்காட்சி முன்பு மெகா சீரியலில் மூழ்கிக் கிடந்தார்களா?’
காதல் வலைவீசி பெண்களைக் கடத்தி லட்சக் கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் பறிக்கிறார்கள் என்றும், தாங்கள் பரம்பரை பணக்காரர்கள் போலவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இதுதான் வேலை போலவும் பேசிவரும் சாதித் தலைவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சிறு, குறு விவசாயம் செய்யும் வன்னியர்களின் நிலங்களில் உழைக்கிறார்கள் தலித்துக்கள். தலித்துக்களின் உழைப்பு இல்லாமல் வன்னியர்களும், வன்னியர்களின் நிலம் இல்லாமல் தலித்துக்களும் வாழ்வது கடினம். “உடலுழைப்பிலும், உற்பத்தி முறையிலும் வன்னியர்களும், தலித்துக்களும் உறவுமுறை கொண்டாடி, ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்து வரும் சூழலில், அரசியல் லாபத்திற்காக இவர்களை மோதவிட்டு நரித்தனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் எண்ணம் ஈடேறப்போவதில்லை.
“இஸ்லாமிய மதத்தில் பெற்றோர் சம்மதத்துடன் செய்யும் திருமணங்களே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன் முக்கியத்துவத்தை அனைத்து சமூகத்தினரும் உணர வேண்டும்” என மருத்துவர் கூறுவது உண்மைதான். அதேநேரத்தில் மற்றொரு உண்மையையும் மருத்துவர் உணர வேண்டும். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த ஆணோ, பெண்ணோ தனக்கு கணவனாக (அ) மனைவியாக அமையப்போகும் இந்துமதக் காதலர்களைப் பற்றி பெற்றோர்களிடம் கூறி அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்கின்றனர். இப்படி மதம் மாற்றி நடைபெறும் திருமணத்திற்கு இந்துமதத் தரப்பிலிருந்து யாரும் சென்று கலந்து கொள்வதில்லை. அதேபோல் இந்து மதத்திற்கு மாறிய இஸ்லாமிய மணமக்களின் பெற்றோர்களும் திருமணத்தில் கலந்து கொள்வதில்லை என்ற உண்மையை விவரம் அறிந்தவர்களிடம் மருத்துவர் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
“மதம் மாறுவது போல சாதி மாறுவதற்கு தடையில்லை என்று சட்டம் சொன்னால் ஆண்டான் அடிமைமுறை இருக்காது. பெண்களை மயக்குகிறார்கள், கடத்துகிறார்கள், பணம் பறிக்கிறார்கள்” என்று மருத்துவரும் உண்மைக்கு மாறாக புலம்பவேண்டிய அவசியமில்லை. “சீனா, ஜப்பான், சிங்கப்பூர், பிரேசில் போன்ற நாடுகளில் காதல் திருமணம் செய்தாலும் பெற்றோரின் சம்மதம் வேண்டுமென்ற சட்டம் உள்ளதாகவும், அதுபோல இந்தியாவிலும் சட்டம் இயற்ற வேண்டும்” எனக்கூக்குரலிடும் மருத்துவர் தனது பாதுகாப்பிற்காக ஒரு உண்மையை மறைக்கிறார். மேற்கண்ட நாடுகளில் “பிள்ளைகளின் காதலை பெற்றோர்கள் அங்கீகரிக்க வேண்டும். யாருடன் சேர்ந்து வாழ்வது என்ற முடிவை அவர்களே தீர்மானித்துக் கொள்ள உரிமையுண்டு” என்று சட்டம் சொல்கிறது.
மேலை நாடுகளில் உள்ள இந்தச் சட்டம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டால் இச்சட்டத்தின் மூலம் முதலில் கைதாக வேண்டியவர் மருத்துவராகத்தான் இருப்பார். இளம் பெண்களை மயக்குகிறர்கள், கடத்துகிறார்கள், பணம் பறிக்கிறார்கள் என்று ஊர்ஊராகச் சென்று சாதிச்சங்கங்களைக் கூட்டி ஒப்பாரி வைக்கும் மருத்துவர் இராமதாசு “மயக்கம் தெளிந்த பெண்களை, கடத்தலிலிருந்து மீட்கப்பட்ட பெண்களை, பணம் கொடுத்து மீட்டு வந்தப் பெண்களை” இப்படி யாராவது ஒருவரையாகிலும் இதுவரை ஊடகவியலாளர்கள் முன் நிறுத்தியிருப்பாரா? “ஆணும் பெண்ணும் சமம் என்று பேசுகிறோம். ஆனால் பெண்ணின் திருமண வயது 18 என்றும், ஆணின் திருமண வயது 21 என்றும் இருப்பது பாகுபாடில்லையா? எனவே பெண்ணின் திருமண வயதையும் 21 என்று அதிகரிக்க வேண்டும்மென்று” புதிய பெண்ணுரிமைப் போராளியாக புறப்பட்டிருக்கும் மருத்துவர் அய்யாவை மனதாரப் பாராட்டுவோம்.
ஆனால் தர்மபுரி சம்பவத்திற்குப் பிறகு இதைப் பேசுவதால் தான் மருத்துவர் மீது அனைவருக்கும் ஐயம் வலுக்கிறது. 18-ஐ 21 ஆகப் உயர்த்துவதால் மட்டும் காதலுக்கும், சாதி மறுப்புத் திருமணத்திற்கும் கடிவாளம் போடலாம் என்று நினைப்பவர்களுக்கும், மனநோயாளிகளுக்கும் அதிக வேறுபாடில்லை. அரசியலில் முகவரியிழந்த சிலர் சாதிச்சங்கம் வைத்துக்கொண்டு அதன் மூலம் செல்வாக்கு பெற முயலுகின்றனர். அவர்களை தலித் மக்களுக்கு எதிராக ஒருங்கிணைத்து சாதியாத்திரை சென்று கொண்டிருக்கிறார் மருத்துவர். “40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை சுரண்டிக் கொழுத்தன. தமிழகம் ஏற்றம் பெற எங்களுக்கு ஒருமுறை ஒரேயொரு முறை வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்” என்று கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சுகிறார் மருத்துவர். இவரைப் போலத்தான் கடந்தகால வரலாற்றில் ஜெர்மானியர்களிடம் இட்லர் கெஞ்சினார். அவர் கெஞ்சலுக்குக் கிடைத்த பலன்தான் இரண்டாம் உலகப்போர் என்பதை வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்து வைத்துள்ளது. ஜெர்மானியர்கள் செய்த தவறை தமிழ் மக்கள் செய்யமாட்டார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த உண்மை மருத்துவருக்கு தெரியவில்லையே என்று நினைக்கும்போது சிரிப்பு நமக்கு வாயால் வரவில்லை.
Pin It