வான் உலங்கு ஊர்தி – எலிகாப்டர்- வாங்குவதில் மீண்டும் ஓர் ஊழல் அம்பலமாகி இருக்கிறது. இந்திய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அடங்கிய மிக முக்கிய அரசுத்தலைவர்களின் பயன்பாட்டிற்காக இத்தாலி நிறுவனத்திடமிருந்து வான் உலங்கு ஊர்தி வாங்க செய்து கொண்ட ஒப்பந்தத்தில்தான் இது நடைபெற்றுள்ளது. இத்தாலியின் ஃ பின் மெக்கனிகா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் – மிருந்து 12 வான் உலங்கு ஊர்தியை பெற கடந்த 2010-ம் ஆண்டு ரூ 3600 கோடிக்கு இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தத் தொகையில் 10 சதவீதம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக தரப்பட்டுள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது. இப்படி லஞ்சம் தந்த இத்தாலி நிறுவனத்தின் தலைவரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. இதன் பின்னர் தான் இந்தச் செய்தி இந்திய மக்களுக்கு தெரியவந்துள்ளது.

தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தையில் நிலவும் கடுமையான போட்டியை சமாளித்து வெற்றி பெறுவதற்கு கமிஷன் – லஞ்சம் – கொடுப்பது என்பது முதலாளித்துவ நிறுவனங்களின் வழமையான நடவடிக்கையாகும். அதிலும் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கூடுதலான லஞ்சம் கொடுத்து ஒப்பந்தத்தை பெறுகின்றன.

தரமான பொருட்களை வாங்குவதன் மூலம் குறைவான லஞ்சம் கிடைக்கிறது என்பதால்தான் தரம் குறைந்த பொருட்களை வாங்கி கூடுதலான ஆதாயம் அடைகின்றனர் இந்திய அதிகார வர்க்கத்தினர்.

இந்திய அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் தான் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்கள் தரமானதா, இல்லையா என்பதைவிட கூடுதல் லஞ்சம் கிடைக்குமா, இல்லையா என்பதிலிருந்து தான் ஒப்பந்தம் செய்து கொள்வதில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பவர்கள்.

உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குபவர்களுக்கு கமிஷன் என்றப்பெயரால் லஞ்சம் கொடுப்பது என்பது அவைகளின் இயல்பான நடவடிக்கையாகும். இது கமிஷன் என்றப்பெயரில் சட்டப்படியே அங்கீரிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.

இப்படி இருக்கும் போது இத்தாலி நிறுவனத்தின் தலைவர் லஞ்சம் கொடுத்தார் என்று எதற்காக கைது செய்யப்பட வேண்டும்? என்ற நியாயமான கேள்வி எழவே செய்கிறது.

இப்படி வழங்கப்படும் கமிஷன் தொகை நிறுவனத்தின் இடைத்தரகர்களாக செயல்படுவர்களுக்கே வழங்கப்படும். பொருளை கொள்முதல் செய்பவர்களுக்கு நேரிடையாக தரப்படுவதில்லை. இப்படி வழங்கப்படும் கமிஷன் தொகை அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேல் செல்கிற போதுதான் அது லஞ்சமாக கருதப்படுகிறது.

தனியார் நிறுவனங்களில் இப்படி கூடுதலாக கமிஷன் – லஞ்சம் – வழங்கப்படுவது தனியார் நிறுவனங்களில், அதன் உரிமையாளரின் ஒப்புதலின் பேரிலேயே வழங்கப்படுவதால் அவைகள் வெளியே வருவதில்லை. இப்படிப்பட்ட நிகழ்வுகள் பொருளைப் பெற ஒப்பந்தம் செய்துகொள்ளும் நாடுகளின் அரசியல் ரீதியான காரணங்களினாலேதான் பெரும்பாலும் வெளிவருகின்றன.

ஆனால் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனமோ இத்தாலி அரசு நிறுவானமாகும். இதனால் ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் இத்தாலி அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாட்டு நடவடிக்கைகளின் கண்காணிப்பிற்கும் உள்ளாகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவுடனான ஒப்பந்த விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு வெளியே வந்துள்ளது. அதாவது அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு மேல் கமிஷன் தொகை கைமாறியதுதான் குற்றமாக வெளியே வந்துள்ளது.

பாவம், இத்தாலி நிறுவனத்தின் தலைவருக்கு விவரம் புரியவில்லைபோலும்! தனக்கு புரியாத ஒன்றைப்பற்றி அவர் இந்திய அதிகாரிகளிடம் கேட்டிருந்தால், அவர்கள் மிகவும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியிருப்பார்கள். அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு குறைவாக கமிஷன் தந்ததாக ஆவணங்களில் பதிவு செய்து தனது நாட்டு அரசிடமிருந்து அவர் பாராட்டையும் பெற்றிருக்கலாம்!

இத்தாலியில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தரப்பட்டுள்ள கூடுதல் தொகை லஞ்சம் என கூறப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால் இந்நிகழ்வு இந்தியாவில் எப்படிப்பட்ட விளைவுகளை, அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது? அதிலும் மக்கள் மத்தியில் என்றால் அப்படி எதுவும் இல்லை என்றுதான் கூறவேண்டும், இதை பல பத்திரிக்கைகளும் வெளிப்படுத்தியுள்ளன.

மக்களின் உணர்வே மரத்துப் போய் விட்டதாக அங்கலாய்க்கின்றனர். இப்படி ஊடகங்கள் வெளிப்படுத்தும் உணர்வும், உணர்ச்சியும் கூட உயிரோட்டமானதா என்றால் இல்லவே, இல்லை என்பது மக்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.

ஊடகங்கள் தமது தொழில் காரணமாகவே இவைகளை வெளிப்படுத்துவதும், அங்கலாய்ப்பதும் நடக்கிறதே தவிர உண்மையான உணர்வின் வெளிப்பாட்டால் அல்ல. லஞ்சம், ஊழல், முறைகேடு ஆகியவற்றின் ஒரு அங்கம்தான் ஊடகங்களும்! இவைகளை கட்டித் தழுவிக் கொள்ளாமல் ஒரு கணம் கூட இவைகளால் உயிர் வாழமுடியாது!

இந்திய ஊடகங்களின் அன்றாட செயல்பாடுகள் மட்டுமல்ல, அதன் உரிமையாளர்களின் இன்றைய இருப்பே முறைகேடுகளின் ஊடாக அடைந்தவைகளே ஆகும். இந்திய நிறுவனங்களின் இருப்பு மட்டுமல்ல, இந்திய மக்கள் ஆகபெரும்பான்மையினரின் இருப்பும் முறைகேடுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல. இதில் சமூகத்தின் மேல் நிலையில் இருப்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே அளவு ரீதியான வேறுபாடு உள்ளதே தவிர, பண்பு ரீதியான வேறுவாடு ஏதுமில்லை.

இந்தியசமூகம் ஊழல், முறைகேடுகளுக்கு எதிரான அதிர்வலைகள் எழுவதற்கான உள்ளடக்கத்தை வாழ்வியல் முறையாக கொண்டதல்ல. மாறாக அதில் தனது பங்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஏக்கத்தை எப்போதுமே கொண்டதே ஆகும். இந்த நிலைப்பாட்டிலிருந்துதான் அரசு அதிகாரிகளுக்கு இடையிலும், அரசுகளுக்கு இடையிலும், அரசியல் கட்சிகளுக்கு இடையிலும், மக்கள் ஒவ்வொருவருக்கு இடையிலும் முறைகேடுகள் பற்றிய சிந்தனாமுறை எழுகிறது. இதன் காரணமாகத்தான் ஊழல், முறைகேடுகள் இந்திய சமூகத்தில் பெருத்த அதிர்வலைகளை உருவாக்குவதில்லை.

இதில் ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்ட அதிர்வலைகளும் தற்போது நிறுவனமயமாக்கப்பட்டு விட்டது. சமூகம் முழுமைக்கும் இது பொதுமையாக்கப்பட்டு விட்டது. நமக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்போம் என்பதுதான் அந்தப் பொதுமையாகும். இந்த பொதுமையான உணர்வும் அதன் அடிப்படையிலான செயல்பாட்டு வடிவமும் இந்திய சமூகத்தில் எப்படி நிலை நாட்டப்பட்டது? அதற்கான கூறுகளும், வாய்ப்புகளும் இச்சமூகத்திற்கு எங்கிருந்து எப்படி கிடைத்தன போன்ற ஐயங்களுக்கான விடையை இனி பார்ப்போம்!

இன்றைய இந்திய சமூகத்தின் மேல்நிலையில் முதலாளிகள், நிலச்சுவான்தார்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் – உள்ளிட்டவர்களாயினும், நடுத்தர பிரிவினர் ஆயினும், ஏன் தொழிலாளிகள், தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள், வரை ஆகப்பெரும்பான்மையினர் இந்த விநாடி வரை சிந்தனையால் மட்டுமல்ல, நடைமுறையிலும் மேல் சாதிகளாக வாழ்பவர்கள்தான்.

இந்த மேல்சாதி என்ற தகுதி இவர்கள் தமது தகுதி, திறமையின் ஊடாக பெற்றவையா? இல்லை. இது பிறப்பின் அடிப்படையில் கிடைப்பதாகும். இது இந்தியாவில் மனிதர்கள் உருவான காலத்திலிருந்தே நிலவிக் கொண்டிருக்கும் ஓர் பண்பாடா என்றால் நிச்சயம் இல்லை! இந்திய சமூகத்தில் சாதியும் அதன் அடிப்படையான வேறுபாடுகளும் இல்லாத காலமும் ஒன்று இருக்கவே செய்தது. கடந்த இரண்டாயிரத்திலிருந்து, இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகத்தான் சாதியும், சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் இச்சமூகத்தில் வேரூன்றி உள்ளது.

ஆரிய வருகை, பூர்வகுடி மக்களுடனான போராட்டம், அதில் அவர்களின் வெற்றி, இனக்கலப்பு, வெற்றியாளர்களின் மக்களை பிரித்தாளும் தந்திரங்கள், இதை எதிர்த்த பூர்வகுடி மக்களின் போராட்டம், இதில் பெரும்பான்மையினர் காட்டிக்கொடுத்தல், இதற்கு கைமாறாக அடைந்த வாழ்வுதான் நாம் மேலே அவதானித்த ஆகப்பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை.

பூர்வகுடி மக்களில் பெரும்பான்மையானர் தனது சமூகத்தின் ஒரு பகுதியினரை பகுதி, பகுதியாக, சிறுக, சிறுக வெற்றியாளனுக்கு காட்டிக்கொடுத்து அடைந்த வாழ்வாதாரம் தான், இன்றுவரை எப்படிப்பட்ட வரலாற்றுச் சூழலிலும் நீடித்து, நிலைப்பெற்று ஏற்ற இறக்கங்களுடன் நிலவி வருகிறது. வாழ்க்கைக்கான அடிப்படையாகவே இவைகள்தான் திகழ்வதால்தான் ஒற்றுமைக்கான கூறுகள் இச்சமூகத்தில் மிகவும் அரிதான ஒன்றாக ஆகிவிட்டுள்ளது.

முதலாளித்துவ கூறுகள் குறைவாக இருந்த காலத்தில் ஒவ்வொரு சாதிக்குள்ளேயான ஒற்றுமைக் கூறுகள் ஒப்பீட்டளவில் மேலானதாக இருந்தது. சாதிகளுக்கிடையில் மேல், கீழ் அடிப்படையில் ஓர் தொடர்பையும், இயக்கத்தையும் கொண்டிருந்தது.

ஆனால் இன்றோ ஒற்றுமைக்கான கூறுகள் அனைத்து மட்டங்களிலும் ஏறத்தாழ அறுந்தே போயுள்ளது. இப்போது சாதிகளிலேயே கடைநிலை தீண்டத்தகாத சாதிகளுக்கு எதிராக மட்டுமே ஒற்றுமைக்கான கூறுகளை மட்டுமே இச்சமூகம் கொண்டுள்ளது. இதுவும் கூட சிந்தனா ரீதியான ஒற்றுமையே வலிமையானதாகும். இதுதான் நடைமுறை ரீதியாக, ஒதுக்குதல் என்பதைவிட ஒதுங்கிக்கொள்ளல் என்பதை வலுவாக கடைபிடிக்க வைக்கிறது. இது சில நேரங்களில் மட்டுமே நேரடி நடவடிக்கையாக மாறுகிறது.

மேல் சாதிகள் என்று தம்மை நம்பக்கூடிய இந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையினோரை ஒருங்கிணைக்கும் ஒரே ஒரு கூறு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சிந்தனையும், செயல்படுகளுமே ஆகும்.

இவர்களுக்கிடையில் பிற அனைத்து அம்சங்களிலும் ஒற்றுமைக்கான கூறுகள் இல்லவே, இல்லை. ஒற்றுமையின்மைக்கான கூறுகள் மட்டுமே மேலும், மேலோங்கி வருகிறது. மேலும் இது எந்த அளவிற்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவிற்கு அதன் வெளிப்பாடுகள் குழுச்செயல்பாடுகளாக சமூகத்தின் அனைத்து அங்கங்களிலும் பிரதிபலிக்கிறது.

முதலாளித்துவ நுகர்வு பண்பாடு எந்த அளவிற்கு சமூகத்தில் பெருக்கெடுக்கிறதோ அந்த அளவிற்கு ஒற்றுமை இன்மைக்கான கூறுகள் இங்கு வீரியமடைகின்றன.

இவைகள் இன்று சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிறைந்துவிட்டுள்ளது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக நிலைநிறுத்ப்பட்டுள்ளது.

முறைகேடுகள் இச்சமூகத்தின் பிரிக்க வியலாத, ஓர் அங்கமாக அன்றாட, இயல்பான நிகழ்வாக மாறிப்போனதற்கான அடிப்படையே, இச்சமூகத்தின் வாழ்வியல் முறையாகவே காட்டிக்கொடுத்தல் என்பதை கொண்டிருப்பதால்தான். லஞ்சம், ஊழல், முறைகேடுகளும் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல்தான் என்பதை உணரும் போதுதான் மேலே கண்ட உண்மையையும் புரிந்து கொள்ளமுடியும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தனது மூதாயர்களின் காட்டிக் கொடுத்தல், அதன் அடிப்படையிலான வாழ்வியல் ஆகியவற்றை இச்சமூகம் குற்றமாக, இழிவாக கருதாத வரை, இச்சமூகத்தில் போபோர்ஸ், பேர்பாக்ஸ், 2G, வான் உலங்கு ஊர்தி முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்தும் அன்றாட நிகழ்வுகளாகவே நீடிப்பதை எவராலும் தடுத்து விடமுடியாது!

- சூறாவளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It