அகிம்சை வழியின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்திய மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் விடுதலை பெற்ற நாடு, ஆன்மீகப் பேரொளியை உயர்த்திப் பிடித்து உலகுக்கே வழி காட்டும் நாடு எனப் பெருமை பாராட்டிக் கொள்பவர்கள் ஏராளமானோர் இந்த நாட்டில் உள்ளனர். அந்தப் பெருமைகள் எவ்வளவு போலியானவை, கபடத்தனமானவை என்பது 9.2.2013 அன்று திகார் சிறையில் காஸ்மீரி இனத்தைச் சார்ந்த முகமது அப்சல் குரு கொடூரமாகத் தூக்கிலிடப்பட்டதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

afzal_guru_200இந்திரா காந்தியைக் கொலை செய்த சத்வந்த் சிங் மற்றும் கேஹர் சிங் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டபோதும் கூட அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட அனுமதி அளித்தது அப்போதைய ராஜீவ்காந்தி அரசு. உச்ச நீதிமன்றம் அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்து, அவர்களது தூக்குத் தண்டனை உறுதியானபோது அவர்களை இறுதியாக உயிருடன் சந்திக்கும் வாய்ப்பை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கியது அப்போதைய அரசு. ஆனால் இப்போதைய அரசோ அப்சல் குருவிற்கு தூக்குத் தண்டனை வழங்காமல் கருணை காட்டும்படி அவருடைய மனைவி குடியரசுத் தலைவருக்கு அளித்த மனு நிராகரிக்கப்பட்டவுடன், இறுதியாக ஒரு முறை அவரை உயிருடன் பார்க்கும் சந்தர்ப்பத்தைக் கூட அவருடைய குடும்பத்தினருக்கு வழங்காமல் அவசர அவசரமாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது. அதன் மூலம் அடிப்படை மனித நாகரித்தையும் கைவிட்டுக் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளது.

அவர் தூக்கிலிடப்படும் தகவலை, சிறை விதிகளடங்கிய புத்தகத்தில் கூறியுள்ளபடி விரைவு அஞ்சல் மூலம் தெரிவித்து விட்டதாக இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே மிகச் சாதாரணமாக, இதயமற்ற இயந்திரம்போலக் கூறுகிறார். இந்தியா ஒரு வல்லரசு ஆகப்போகிறது, தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் உச்சத்தில் உள்ளோம் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களுக்கு, 2ஜி அலைக்கற்றை ஊழலில் பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தவர்களுக்கு நவீனத் தகவல் தொடர்பு மூலம் தூக்குத் தண்டனை பற்றிய தகவலைத் தெரிவிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு மனித உயிர் இந்த ஆட்சியாளர்களுக்குத் துச்சமாகத் தெரிகிறது.

மேலும், குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த பிறகும் கூட , அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகும் ஒரு இறுதி வாய்ப்பு தூக்குத் தண்டனையை எதிர்கொண்டுள்ளவருக்கு வழங்கப்படுவது உண்டு. அந்த ஜனநாயக உரிமையும் அப்சலுக்கு மறுக்கப்பட்டது. (அந்த வாய்ப்பு ராஜீவ்காந்தி கொலைக் குற்றத்தில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட மூவருக்கும் வழங்கப்பட்டதினால்தான் நீதிமன்றத்திற்குச் சென்று தற்காலிகமாக அவர்களுடைய உயிர் பறிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. காட்டுமிராண்டித்தனமான தூக்குத் தண்டனை மூலம் அவர்களது உயிரும் எந்த நேரமும் ரகசியமாகப் பறிக்கப்படலாம்.)

எட்டிலிருந்து பத்தாண்டுகள் வரையிலும் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கப்படாமல் இருந்து பிறகு தூக்கிலிடப்படுவது சரியானதுதானா? எனக் கோரும் மனுக்களை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேவேந்திர பால் சிங் புல்லர், நரேந்திரநாத் தாஸ் ஆகிய இருவரும் 2012- மார்ச்- ஏப்ரலில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் நீதிமன்றம் கருணை மனுவின் மீதான முடிவுக்காக நீண்ட காலமாகச் சிறையில் வாடும் தூக்குத் தண்டனை கைதிகளின் விவரங்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியது. அதில் அப்சல் குருவும் ஒருவர். அந்த மனுக்களின் மீதான விசாரணை 2012, ஏப்ரல் 19- ல் முடிவுற்றது. அதன் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது. இது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். இருந்தும் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திராமல் அப்சல் குருவை இரகசியமாகத் தூக்கிலிட்டுள்ளது. “இது இந்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட இரக்கமற்ற மரண தண்டனையாகும்” என அந்த வழக்கில் நடுநிலை அறிவுரையாளராக(amicus curiae) இருந்த வழக்குரைஞர் அந்தியருசுனா கூறுகிறார்.

தன்னுடைய மாணவப்பருவத்தில் காஷ்மீர் விடுதலைப் போராளிகள் இயக்கத்தில் சேர்ந்து, பிறகு அதிலிருந்து விலகித் தாமாக முன்வந்து காவல்துறையிடம் சரணடைந்த அப்சல் குருவின் வாழ்க்கை மிகவும் துயரம் நிறைந்த ஒன்று. சரணடைந்த பிறகும் அவருக்கு அமைதியான வாழ்வு கிடைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்களைப் போலவே அவரும் சிறப்புக் காவல் படையினரின் சித்திரவதைக்கும், மிரட்டலுக்கும் தொடர்ந்து ஆளாகி வந்தார். இறுதியில் சிறப்புப்படையின் சதி அவருடைய உயிரையும் பறித்துவிட்டது.

அவருடைய வார்த்தைகளிலேயே கூற வேண்டுமானால், “பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலின் பின்னணியில் உண்மையில் யார் உள்ளார்கள் என்பதைக் காவல் துறை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தத் தவறை மறைக்க என்னைப் பலியாடு ஆகிவிட்டார்கள். அவர்கள் மக்களை முட்டாள்களாக்கி விட்டார்கள். பாரளுமன்றத்தைத் தாக்கியவர்கள் யார் என்பதை மக்கள் இதுவரை அறியவில்லை. காஷ்மீர் சிறப்புப்படையும், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவும் சேர்ந்து என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டனர்.” என அவர் 2006-ல் காரவன் இதழுக்குக் கொடுத்த நேர்காணலில் கூறுகிறார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் என அரசு கூறினாலும் அவர்களைப் பற்றிய முழு விவரங்களும் இதுவரை மக்களுக்குத் தெரியாது என்பதுதான் உண்மை. தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேரில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்றும், ஒருவர் தலைமறைவாகி விட்டார் என்றும் அரசு கூறியது. இறந்தவர்களில் ஒருவர் முகமது. தலைமறைவானவர் பெயர் தாரிக். இவர்கள் இருவரும் அப்சலுக்கு காஷ்மீர் சிறப்புப்படை முகாமில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் சிறப்புப் படையால் நன்கு அறியப்பட்டவர்கள். மேலும் அப்சல், சரணடைந்த முன்னாள் போராளி என்ற அடிப்படையில் காஷ்மீரில் உள்ள சிறப்புப்படை முகாமிற்குத் தொடர்ந்து வருகை தர வேண்டும். மேலும் அவருடைய நடவடிக்கைகள் எப்பொழுதும் கண்காணிப்புக்கு உட்பட்டே இருந்தன. இந்நிலையில் அவர் எவ்வாறு சதியில் ஈடுபாட்டிருக்க முடியும்? முகமதை டெல்லிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதே சிறப்புப்படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரிதான் என அப்சல் கூறினார். அதன் பின்னணி என்ன? இவை எல்லாம் இன்றும் கேள்விகளாகவே உள்ளன.

மேலும், அப்சல் குருவின் மீது நடந்த நீதிமன்ற விசாரணைகளும் அதன் அடிப்படையிலான மரண தண்டனையும் இந்த நாட்டில் ஜனநாயகமும், நீதி வழங்கும் முறையும் எவ்வாறு கேலிக்கூத்தாக அமைந்துள்ளன என்பதை மெய்ப்பிக்கின்றன. திறமையான வழக்குரைஞர் ஒருவரைத் தன் சார்பில் வைத்து வாதாடுமளவிற்கு அவரிடம் பணமில்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக எந்த வழக்குரைஞர்களும் வாதாடக் கூடாது என இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தும், போராடியும் வந்தன. அந்த விசாரணை நடந்த முறை பற்றியும், அது எத்தகைய சூழலில் நடத்தப்பட்டது என்பது பற்றியும் இந்நாட்டு மக்களின் நல்வாழ்வு மீது பெரும் அக்கறை கொண்டுள்ள எழுத்தாளர் அருந்ததி ராய் பின்வரும் வார்த்தைகளில் கூறுகிறார்:

“...உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு(அப்சலுக்கு) வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை, தொழில்முறை வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ள பணமும் இருக்கவில்லை. வழக்கு விசாரணை மூன்றாவது வாரத்தில் நுழைந்த போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரினார். அவரை எஸ்ஏஆர் ஜீலானியின் வழக்கில் எதிர்த்தரப்பு வழக்கறிஞராக பணி புரிய அமர்த்தியிருந்தார்கள். அனுபவம் இல்லாத அவரது ஜூனியர் வழக்கறிஞரை அப்சலுக்கு வாதாட நீதிமன்றம் நியமித்தது. அவர் ஒரு முறை கூட தனது கட்சிக்காரரை சந்திக்க சிறைச்சாலைக்குப் போகவில்லை. அப்சலின் சார்பில் ஒரு சாட்சியத்தைக் கூட அவர் அழைக்கவில்லை. அரசுத் தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ததாகவே சொல்ல முடியாது.

அவர் நியமிக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஜூலை 8 அன்று, அப்சல் இன்னொரு வழக்கறிஞரை நியமிக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். அவருக்காக நியமிக்க விரும்பிய ஒரு சில வழக்கறிஞர்களின் பட்டியலையும் கொடுத்தார். அனைவருமே மறுத்து விட்டனர். (ஊடகங்களில் நடந்து கொண்டிருந்த பிரச்சாரத் தாக்குதலைப் பார்க்கும் போது அதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான். வழக்கு விசாரணையில் பிறிதொரு கட்டத்தில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஜீலானியின் சார்பில் வாதிட ஒப்புக் கொண்ட போது சிவ்சேனா கும்பல் அவரது பம்பாய் அலுவலகத்தை சூறையாடியது). இதைப் பற்றி எதுவும் செய்ய முடியாத தனது இயலாமையை தெரிவித்த நீதிபதி, சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யும் உரிமையை அப்சலுக்கு அளித்தார்.

ஒரு சாதாரண மனிதன், கிரிமினல் வழக்கு விசாரணையில் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வார் என்று நீதிபதி எதிர்பார்த்தது ஆச்சரியத்துக்குரியது. குற்றச் சட்டங்கள் பற்றிய நுணுக்கமான அறிவு இல்லாத யாருக்கும் இது சாத்தியமில்லாத பணியாகவே இருக்கும். புதிதாக இயற்றப்பட்டுள்ள பொடா முதலிய சட்டங்கள், சாட்சியங்கள் சட்டம், டெலிகிராப் சட்டம் போன்றவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் இவை அனைத்தையும் புரிந்திருக்க வேண்டும். அனுபவம் நிறைந்த வழக்கறிஞர்கள் கூட கடுமையாக உழைத்துதான் தமது அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.” (அவுட்லூக், அக்டோபர்,30,2006)

இத்தகைய வெட்கங்கெட்ட, கேலிக்கூத்தான விசாரணையின் அடிப்படையில்தான் அப்சலுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. நேரடி சாட்சியங்கள் எதுவும் இல்லாத நிலையிலும் சந்தர்ப்ப சூழ்நிலைச் சாட்சியங்களைக் கொண்டு அவருக்குக் கொடிய தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. சந்தேகத்தின் பலன் குற்றவாளிக்கு இங்கு வழங்கப்படவோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படவில்லை. இது ஒரு அரிதினும் அரிதான வழக்குகளில் ஒன்று எனவும் கருதப்படமுடியாது. ஆனாலும் கொடிய தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அந்தத் தண்டனையை நியாப்படுத்த நீதிபதி கூறிய காரணம்தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் குரூரமான, நஞ்சில் வார்த்தெடுக்கப்பட்ட ஆன்மாவை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. “இந்தக் குற்றத்தை இழைத்தவருக்கு மரண தண்டனை வழங்கினால்தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தியடையும்” என்ற காரணத்தினால் மரண தண்டனை வழங்குவதாகக் கூறித் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வார்த்தைகளில்தான் பலி வாங்கும் இரத்தவெறி வெளிப்படுகிறது.

இந்தக் கூட்டு மனச்சாட்சி யாருடையது? இதை உருவாக்குபவர்கள் யார்? அதனால் காக்கப்படும் நலன்கள் யாருடையவை? இங்குள்ள தொலைக்காட்சிச் செய்திகளும், செய்தி தாள்களும், வார, மாதந்திர இதழ்களும் சேர்ந்து உருவாக்குவதுதான் இந்தக் கூட்டு மனச்சாட்சி. இந்த ஊடகங்களின் உடைமையாளர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் முதலாளிகளும், ஆதிக்க நிலையில் உள்ள ஆளும் வர்க்கத்தின் அரசியல் கட்சிகளுமே. அவர்களே அவற்றைக் கட்டுப்படுத்தியும் வருகின்றனர். அவர்களுடைய நலன்களுக்கு ஏற்றவகையிலேயே இந்த ஊடகங்களில் கருத்துப் பரப்பல்கள் நடைபெறுகின்றன. ஆளும் வர்க்கத்தின் நலன்களே இங்கு நாட்டின், சமூகத்தின் நலன்களாகச் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடைய நலன்களுக்கு எதிரானவை அனைத்தும் நாட்டு நலன்களுக்கு எதிரானவைகளாகச் சித்தரிக்கப்பட்டு வருகின்றன.

அவர்களுக்கு அகண்ட பாரதம் தேவை. பெரிய சந்தை தேவை. காஸ்மீர் தேவை. வட கிழக்கு இந்தியப் பகுதிகள் தேவை. குமரி முதல் இமயம் வரை அனைத்துப் பகுதிகளும் தேவை. (பூட்டானும், நேபாளமும், வங்காள தேசமும், இலங்கையும் கூடத் தம்முடைய செல்வாக்கு மண்டலத்தின் கீழ் இருக்க வேண்டும்..) அதிலுள்ள வயல்களும், வனங்களும், நதிகளும், ஏரிகளும், குளங்களும், பிற இயற்கை வளங்களும், கனிமங்களும் தேவை. அவற்றில் தங்களுக்குக் கூலி அடிமைகளாக வேலை செய்து பண்டங்களை உற்பத்தி செய்ய மக்கள் வேண்டும். அப்பொழுதுதான் முதலாளிகள் உபரியைக் கொள்ளையடித்துக் கொழுக்க முடியும். மக்கள் அவர்களுடைய ஆதிக்கத்தையும், சுரண்டலையும் எதிர்க்கக் கூடாது. அது அவர்களுக்கு ஆபத்தானது. எனவே மக்களின் எதிர்ப்பையும், போராட்டங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும். அதற்காக அவர்களுக்குப் போலீசும், இராணுவமும் தேவை. கடுமையான தண்டனைகளையும், மரண தண்டனைகளையும் வழங்கி மக்களை அச்சுறுத்த நீதி மன்றங்கள் தேவை. நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைகளை நியாயப்படுத்த, அவற்றுக்குச் சாதகமாகப் பொதுமக்கள் கருத்தை, “கூட்டு மனச்சாட்சி”யை உருவாக்க வேண்டும். அதற்கு இந்துத்துவ வெறியும், போலியான நாட்டுப்பற்றும் ஊட்டப்படவேண்டும். அவ்வாறு இந்துத்துவ வெறி கொண்டு உருவாக்கப்பட்ட “கூட்டு மனச்சாட்சிதான்” அப்சலின் உயிரைப் பலி வாங்கியது.

அரிதினும் அரிதான நிகழ்வுகளிலேயே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினாலும் இங்கு வழங்கப்படுகிற மரண தண்டனைகள் நீதிபதிகளின் அக விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தே அமைந்து வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக, அண்மைக் காலத்தில் இரு வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனைகளைப் பார்த்தாலே போதும்.

மொகிந்தர் சிங் என்பவர் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்ததற்காக ஏற்கனவே தண்டனை அளிக்கப்பட்டவர்; அவர் சிறையிலிருந்து நன்னம்பிக்கை வாக்குறுதியின் பேரில் தண்டனைக் கால விடுப்பில் (parole) வெளியில் வந்தபோது அவருடைய மனைவியையும், மகளையும் கொலை செய்து விடுகிறார். அவருக்குக் கீழ் நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்திற்கு அந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிபதிகள் சதாசிவம் மற்றும் பக்கீர் கலிபுல்லா இருவரும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் ‘சமூகத்தின் ஒத்திசைவான மற்றும் அமைதியான சக வாழ்வுக்குக் கொலையாளி ஆபத்தானவராக இருக்கும்பொழுதுதான்’ மரண தண்டனையைப்பற்றிச் சிந்திக்கவேண்டும் என்பதுதான்.

அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து வந்த இன்னொரு வழக்கில் நீதிபதிகள் சதாசிவமும் ஜெகதீஸ் கெஹரும் மரணதண்டனையை உறுதிப்படுத்துகின்றனர். இந்த வழக்கில் சுந்தரராஜன் என்பவன் ஏழு வயதுச் சிறுவனைக் கடத்திச்சென்று கொலை செய்து விடுகிறான். கீழ் நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. அது உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்படுகிறது. அதற்கு நீதிபதிகள் கூறிய காரணம் ‘குடும்பத்தின் மரபு வழியை மேலெடுத்துச் செல்லும் ஆண் குழந்தையை இழந்து விட்ட பெற்றோர்களின் மன வேதனையைக் கணக்கில் கொள்ளவேண்டும்’ என்பதாகும்.(The Hindu, 10.2.2013)

இங்கு ஒரு வழக்கில் ஒருவர் இரு கொலைகளைச் செய்துள்ளார். அவர் ஏற்கனவே பாலியல் வன்முறைக் குற்றத்திற்காகத் தண்டனை அனுபவித்து வருபவர். அவருக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இன்னொருவருக்கு ஒரே ஒரு கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு தண்டனையின் அளவு எந்தச் சட்டவிதியின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படவில்லை. நீதிபதிகளின் அக விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தே அமைந்துள்ளன. இந்த வழக்குகளை வேறு நீதிபதிகள் விசாரித்து இருந்தால் தண்டனைகள் வேறு விதமாகவும் அமைந்திருக்கலாம். இங்கு நிலவி வரும் நீதிமுறை எவ்வளவு ஆபத்தானது, அநீதியானது என்பதை இங்கு காட்டப்பட்ட இந்த இரு எடுத்துக்காட்டுகளிலிருந்தே எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

இந்நாட்டில் நீதி வழங்கும் முறை எவ்வளவு குறைபாடு கொண்டதாக உள்ளது என்பதை இன்னொரு நிகழ்விலிருந்தும் அறியலாம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தில் 13 பேருக்கு மரண தண்டனை தவறான முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றதிலிருந்தும், உயர்நீதிமன்றத்திலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட 14 நீதிபதிகள் ஜூலை, 2012-ல் குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். அத் தண்டனைகள் தவறாகவோ அல்லது அறியாமையிலோ வழங்கப்பட்டவை என நீதிமன்றங்களே ஒப்புக்கொண்டதன் பேரில் அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் விடுத்துள்ளனர்.

எந்தத் தண்டனையையும் பிற்காலத்தில் தவறாக வழங்கப்பட்டது என்று தெரிய வரும்பொழுது அதை இரத்து செய்து விடமுடியும். சரி செய்து விடமுடியும். ஆனால் மரண தண்டனையை நிறைவேற்றிய பிறகு அதை எங்கனம் சரி செய்வது? நீதியின் பெயரால் அநீதியான முறையில் ஒரு சக உயிரைப் பறிக்கும் உரிமையை வழங்கியுள்ள ஒரு அரசியல்-சமூக அமைப்பு முறையை நாகரிகமானது என்று கூற முடிமா?

இத்தகைய அநீதியான, அநாகரிகமான நீதிமுறைதான் இந்துத்துவ வெறி உருவாக்கிய “சமூகக் கூட்டு மனச்சாட்சி” என்ற பெயரில் அப்சலின் உயிரைப் பறித்தது.

மக்களுக்காகப் போராடுபவர்களுக்கும், புரட்சியாளர்களுக்கும், தேசிய இன விடுதலைப் போராளிகளுக்கும் நீதிமன்றங்களுக்கு வெளியே இந்த அரசு விசாரணைகள் ஏதுமின்றி “மோதல்கள்” என்ற பெயரில் மரண தண்டனைகளை வழங்கி வருகிறது. அப்சல் குரு போன்றவர்களை நீதி விசாரணையின் பெயரில் கொலை செய்து வருகிறது. எவ்வறாயினும் அதன் நோக்கம் மக்களுக்காக நிற்பவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான்.

மக்கள் விரோதிகளையும், மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தோர்களையும் இந்த அரசு தண்டித்ததில்லை. அவர்களைக் காப்பாற்றியே வந்துள்ளது. 1984-ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது டெல்லியில் மூவாயிரத்திற்கும் மேலான சீக்கிய இன மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1992-ல் பாபர் மசூதி இடிப்பின் போதும், 2002-ல் குஜாரத்தில் கோத்ரா தொடர்வண்டி தீ விபத்தைத் தொடர்ந்து மோடியின் ஆட்சியின் கீழும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை அவற்றிற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை. இவை இந்த அரசு யாருக்கானவை என்பதைத் தோலுரித்துக் காட்டிவிடுகின்றன.

பிரதீபா பாட்டில் குடியரசுத் தலைவராக இருந்தபோது 35 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். ஆனால் பிரணாப் முகர்ஜி பதவிக்கு வந்ததும் அஜ்மல் கசாப், அப்சல் குரு இருவரின் கருணை மனுக்களையும் நிராகரித்ததால் மூன்று கால இடைவெளியில் இரண்டு பேரைத் தூக்கில் போட வழிவகுத்துள்ளார். அதுவும் இரகசியமாக.

அப்சல் குரு மரண தண்டனை வழங்கப்பட்டு ஏழாண்டுகள் கழித்தும், கருணை மனு கொடுத்து ஆறு ஆண்டுகள் கழித்தும், சுமார் பதினொரு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிறகும் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக்கூட காத்திராமல், இரகசியமாக அப்சல் குருவை காங்கிரஸ் அரசாங்கம் தூக்கிலிடக் காரணங்கள் யாவை? அதன் மூலம் எதைச் சாதிக்க நினைகிறது?

முதலாவது காரணம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் நாட்டைச் சிக்க வைத்து உள்ளது காங்கிரஸ் அரசாங்கம். அனைத்துப் பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்து உள்ளது. இந்நிலையில் வெறிபிடித்த இந்துத்துவ சக்திகள் அதிகார வெறிபிடித்த நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக உயர்த்திப்பிடித்து வருகின்றன. அப்சல் குருவைத் தூக்கிலிடாத காங்கிரஸ் அரசை நாட்டுப்பற்று இல்லாத அரசு எனக் கூறி இந்துத்துவ வெறியர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் பொது மக்கள் கருத்தை உருவாக்க ஊடகங்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்தத் திட்டத்தை முறியடிக்க வேண்டிய தேவை காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்துத்துவ சக்திகளைத் திருப்திப் படுத்தவும், அவற்றைத் தம் பக்கம் கொண்டு வரவும், இந்துத்துவ வெறியர்களின் விருப்பத்தைச் செயல்படுத்துவதில் தான் மோடிக்குச் சிறிதும் சளைத்தவர்களில்லை என்பதை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது காரணம், காங்கிரஸ் கட்சி கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளியதுடன் மட்டுமல்லாமல், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதன் பூதாகரமான ஊழல்கள் வெளிப்பட்டு மக்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாகி உள்ளது. அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும்.

மூன்றாவது காரணம், அப்சல் குரு போன்றவர்களைத் தூக்கிலிடுவதன் மூலம் மக்களுக்காகவும், தேசிய இன விடுதலைக்காகவும் போராடுபவர்களை அச்சுறுத்திப் பணிய வைக்க நினைக்கிறது. ஆனால் மக்கள் அதைக் கண்டு அஞ்சுவதில்லை என்பதைத்தான் கடந்த ஒரு வார காலமாகக் காஷ்மீர் மக்கள் அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து நடத்தி வரும் வீரம் செறிந்த போராட்டங்கள் மெய்ப்பித்து வருகின்றன. செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என எந்த வெளி உலகத் தொடர்பும் இன்றி, ஊரடங்கு உத்தரவுகள் மூலம் காஷ்மீர் மக்களின் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் எனக் கருதுகிறது இந்த அரசு. ஆனால் அதன் ஒவ்வொரு அடக்குமுறையும் மக்களைப் பணிய வைப்பதற்குப் பதிலாக இந்த அரசை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியே வருகிறது. தூக்குக் கயிறுகள் மக்களின் விடுதலை வேட்கையை அழித்தன என்ற வரலாறு இதுவரை எழுதப்படவில்லை என்பதுதான் உண்மை.

- புவிமைந்தன்

Pin It