மார்க்சு, ஹெகலியத்தை அப்படியே பின்பற்றினாரா அல்லது கடந்து சென்றாரா அல்லது முற்றிலும் மறுதலித்தாரா என்ற விவாதம்தான் இக்கட்டுரைக்கான கருப்பொருளாகும். ஹெகலியத்திலிருந்து எவற்றை உட்செரித்துக் கொண்டார், எவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டார் என்ற சிக்கலான விவாதங்கள் மார்க்சியர்கள் மத்தியில் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளதைக் காணமுடிகின்றது.

ஹெகல் மற்றும் மார்க்சு ஆகிய இருவரது அனைத்து படைப்புக்களும் வெளியிடப் பட்டதன் மூலம் மார்க்சியர்களுக்கு அவர்களைப் பற்றிய புரிதல் மேலும் விசாலமானது; இது மட்டுமின்றி அவர்கள் இருவருக்கிடையே இருந்த உறவை பற்றியும் ஆழமாக புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் முழுத் தொகுப்பு நூல்களை வெளிவந்ததை ஒட்டி மார்க்சியத்திலிருந்து உருவான‌ போக்குகள் மிகவும் கூர்மையான முரண்பாட்டை அடைந்தது என்று கூறலாம்.

மார்க்சு தனது தத்துவ‌ப் பணிக்காக ஹெகலிடமிருந்து ஏராளமான முறைகளையும், முறைமைகளையும் உள்வாங்கி கொண்டிருந்தார் என மார்க்சியர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர். ஹெகல் இயற்றிய ‘ஆன்மாவின் நிகழ்வியம்’ (The Phenomenology of spirit), ‘தர்க்கத்தின் விஞ்ஞானம்’ (The Science of Logic), ‘உரிமையின் தத்துவம்’ (Philosophy of Right) ஆகிய மூன்று நூல்களும், அவற்றை விமரிசித்து மார்க்சு எழுதிய நூல்களும் குறிப்புகளும் சேர்ந்து, ஹெகலியத்துக்கும் மார்க்சியத்துக்குமான உறவைப் பற்றி ஆராய போதுமான‌ அடிப்படைகளை வழங்குகின்றன.

ஹெகலின் ‘ஆன்மாவின் நிகழ்வியம்’ என்ற நூல் அகநிலையும் புறநிலையும் இணைத்த நிகழ்வியம் மற்றும் சமூக இருப்பியல் ஆகிய கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. மார்க்சு ஹெகலின் நிகழ்வியக் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டார். இந்த வகையில் நிகழ்விய கருத்துக்களின் அடிப்படையில் ஹெகலையும் மார்க்சையும் இந்நூல் இணைக்கின்றது.

அதேபோல‌ ‘தர்க்கத்தின் விஞ்ஞானம்’ என்ற நூல் ஹெகலியத்தின் வரலாற்று, தர்க்க அணுகுமுறைகளை விளக்குகின்றது. மார்க்சு தனது மூலதனம் நூலுக்காக இத்தகைய வரலாற்று, தர்க்க வகையினங்களைப் பெற்றுக் கொண்டார். ஹெகலியம் மற்றும் மார்க்சியம் ஆகியவற்றின் தர்க்க அணுகுமுறைகளுக்கான தொடர்ச்சியை காண்பதற்கு இந்நூல் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஹெகலின் ‘உரிமையின் தத்துவம்’ என்ற நூல் ஹெகலின் அரசியல், சிவில் சமூகத்தின் தன்மை மற்றும் அரசின் அடிப்படைகளை அறிந்து கொள்ள போதுமானதாக இருக்கும். இதை மார்க்சு விமரிசன ரீதியாக அணுகியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெகலிடமிருந்து மார்க்சு எடுத்தாண்ட முதலாவது கருத்தாக்கம்

1832 முதல் 1845 வரையிலான காலகட்டத்தில் ஹெகலின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு முன்னமே மார்க்சு தனிதனி வெளியீடுகளால் ஹெகலை ஆழமாகப் பயின்றிருந்தார். 1807 இல் வெளியிடப்பட்ட‌ ‘ஆன்மாவின் நிகழ்வியம்’, 1817 இல் வெளியிட்ட ‘விஞ்ஞானத் தத்துவத்தின் கலைகளஞ்சியம்’, 1811ல் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்ட‌ ‘தர்க்கத்தின் விஞ்ஞானம்’, 1820 இல் வெளியிடப்பட்ட‌ ‘உரிமையின் தத்துவம்’ போன்றவை மார்க்சுக்கு கிடைக்கப் பெற்றன. மார்க்சு ஹெகலுடன் கொண்டிருந்த சிந்தனையின் ரீதியான உறவு என்பது 1836 லிருந்து 1883 வரையிலும் இருந்தது.

மார்க்சு தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை 1841 இல் எழுதி முடித்தார். அதன் தலைப்பு 'டெமாரிடியன் இயற்கை தத்துவத்திற்கும் எபிகூரியன் இயற்கைத் தத்துவதற்கும் உள்ள வேறுபாடு' என்பதாகும். 1843 இல் ‘ஹெகலின் உரிமைத் தத்துவத்தின் மீதான விமரிசனம்’ என்ற நூலை இயற்றினார். அதே ஆண்டில் 'ஹெகலின் உரிமைத் தத்துவத்தின் மீதான விமரிசனம்: அறிமுகம்' என்ற நூலையும், 1844 ஆம் ஆண்டில் ‘ஹெகலின் இயக்கவியல் மற்றும் பொதுவாக தத்துவத்தின் மீதான விமரிசனம்’ என்ற கையெழுத்துப் பிரதியையும் எழுதினார். இதற்காக இந்தக் காலகட்டத்தில் மார்க்சு ஹெகலை ஆழமாகப் பயின்றார்.

இவற்றை தொடர்ந்து மார்க்சு ஹெகலை தொடர்ந்து விமரிசனத்திற்கு ஆட்படுத்தினார். புனித குடும்பம் (1945), லீப்சிக் கழகம் (1845-46) மற்றும் தத்துவத்தின் வறுமை (1947) போன்ற நூல்களில் பாயர், பாயர்பாக், ஸ்டிர்னர் போன்றவர்களை விமரிசித்தார். அவர்களின் வழியாகவும் ஹெகலை எதிர்கொண்டார். இதன் மூலம் ஹெகலுக்கு எதிரான தனது கருத்தோட்டங்களை மேலும் வளர்த்துக்கொண்டார்.

முதன் முதலில் ‘ஆன்மாவின் நிகழ்வியம்’ என்ற‌ நூலின் வாயிலாகத்தான் ஹெகலை மார்க்சு அறிந்திருந்தார். ஹெகலின் நிகழ்வியக் கருத்துக்களை 1943 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ரேஹே என்பவருக்கு எழுதிய கடித்தில் மார்க்சு விவாதித்திருந்தார். அப்போதே ஹெகலின் நிகழ்விய கருத்துக்கள் மீது ஆழ்ந்த கவனம் செலுத்தியிருந்தார் என்று தெரிய வருகின்றது. பின்னர் 1844 ஆம் ஆண்டில் எழுதிய‌ ‘கையெழுத்துப் பிரதி’யில் இக்கருத்தை ஆழமாக உள்வாங்கியிருந்தார். ஹெகலிடமிருந்து மார்க்சு உட்கிரகித்து எடுத்தாண்ட‌ முதலாவது கருத்தாக்கம் உழைப்பு தத்துவம் மற்றும் அந்நியமாதல் ஆகும்.

இதற்கு முன்னரே 1843 ஆம் ஆண்டு அக்டோபர் மாதவாக்கில் மார்க்சின் கவனம் அரசியல் பொருளாதாரத்தின்மீது திரும்பி இருந்தது. அப்போது மார்க்சு பாரிஸுக்கு சென்றார். அங்கே ஜெர்மன் தொழிலாளர் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கே பொருளாதாரம் குறித்த விவாதங்களை நடத்தினார். ஆடம் ஸ்மித்தையும் டேவிட் ரிகார்டோவையும் ஆராய்வதை தனது முக்கியப் பணியாக எடுத்துக் கொண்டார்.

முதன் முதலில் ‘லிஸ்ட்’ என்பவர் எழுதிய 'தேசிய அமைப்பின் அரசியல் பொருளாதாரம்' என்ற நூலைதான் மார்க்சு பயின்றார். 1843 களில் சுதந்திர வாணிபம் குறித்து ஆராய துவங்கிவிட்டார். பின்னர் 1844 இல் ‘மில்’ என்பவரது ‘அரசியல் பொருளாதாரத்தின் கூறுகள்’ என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. பின்னர் பாதுகாப்பான வரிவிதிப்பு குறித்து விமரிசித்தார். பின்னர் 1859 இல் மார்க்சு ‘பொருளாதார விமரிசனத்திற்கான கருத்துரையின் முன்னுரை’யில், தான் 1842-43-களில் பொருளாதாரத்தை நோக்கி வந்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

ஹெகலிடமிருந்து மார்க்சு எடுத்தாண்ட இரண்டாவது கருத்தாக்கம்

1848 -லிருந்து மார்க்சு அரசியல் பொருளாதாரத்தை ஆய்வதற்காக முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருந்தார். மூலதனத்தை வடிவமைப்பதற்கான‌ ஒரு புதிய முறையை ஹெகலிடமிருந்து பெற்று கொண்டார். அதுதான் ஹெகலின் தர்க்க முறைமையாகும். இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் அரசியல் பொருளாதாரத்தை மறுவரையறைக்கு உட்படுத்தினார். ஆக, ஹெகலிடம் மார்க்சு எடுத்தாண்ட இரண்டாவது கருத்தாக்கம் ‘தர்க்க முறையியல்’ (logical methodology) ஆகும். ஹெகலின் வர‌லாற்று, தர்க்க முறைமைகள், விளக்க முறைமைகள் ஆகியவை மார்க்சிய இயங்கியலுக்கு அடிப்படையாக அமைந்தது. மார்க்சின் ‘மூலதனத்தின்’ முறைமையியக் கோட்பாடுகள், ஹெகலின் ‘தர்க்கத்தின் விஞ்ஞானம்’ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்.

மார்க்சியத்தில் தோன்றிய‌ இரு முக்கிய முகாம்கள்

ஹெகலியத்தின் அடிப்படையான கருத்துக்களை உட்செரித்துக் கொண்டு அதை மார்க்சியத்தின் அடிப்படையாக மாற்றியமைத்துக் கொண்டார் என்று ஒருசாரர் விவாதிக்கின்றனர். இவர்களின் வாதத்திற்கு அடிப்படையாக நிகழ்வியக் கோட்பாட்டை கொள்கின்றனர். ஆனால் ஹெகலிய தர்க்கவியலை மட்டும் ஏற்றுக் கொண்டு மார்க்சியத் தத்துவத்தைப் படைத்தார் என்று ஒரு சாரர் விவாதத்தை முன்வைக்கின்றனர். இவர்கள் நிகழ்வியக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வ‌தில்லை. இவர்களுக்கு ‘தர்க்கவியலின் விஞ்ஞானம்’ என்ற ஹெகலின் நூல் முக்கியத்துவம் பெறுகின்றது. மார்க்சு, ஹெகலியத்தை மறுத்து மார்க்சியம் படைத்தார் என்பது இவர்களது வாதமாகும்.

மார்க்சிற்கும் ஹெகலுக்கும் இடையேயான சிந்தனைரீதியான உறவைப் பொருத்து பொதுவாக‌ இரு முக்கிய முகாம்கள் நிலவின. அவை 1.ஹெகலிய மார்சியம், 2. ஹெகலிய நீக்கம் செய்யப்பட்ட மார்க்சியம் ஆகியனவாகும்.

முதலாவதாக கூறப்பட்ட‌ ஹெகலிய மார்சியம், நிகழ்விய அணுகுமுறையைக் கொண்டு சமூக விஞ்ஞானத்தை ஆய்ந்தது. இது அகம், புறம் ஆகியவற்றின் இணைப்பு மற்றும் சமூகத்தை ஆய்வு செய்யும் ஹெகலின தர்க்க வகையினம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. நிகழ்வியம் என்பது தன்னுணர்வு, சிந்தனை மற்றும் அனுபவம் ஆகியவை பற்றிய ஒரு தத்துவப்பிரிவு ஆகும். இது மனம் பற்றிய தோற்றவியல் என்றும் அழைப்படுகின்றது. ஹெகலிய அடிச்சுவட்டை பின்பற்றி மார்க்சு தனது தத்துவத்தைக் கட்டமைத்தார் என்பது ஹெகலிய மார்க்சியம் என்றழைக்கப்ப‌டுகின்றது. இது மார்க்சியத்தை ஹெகலியத்தின் நீட்சியாகப் பார்க்கின்றது.

இரண்டாவதாக, மார்க்சின் வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையாக ஹெகலிய தர்க்க முறைமை திகழ்ந்ததைக் காணலாம். மார்க்சு தனது வரலாற்று அணுகுமுறையை ஹெகலிய தர்க்க முறைமைகளின் மீது கட்டமைத்தார் என்ற வாதம், மார்க்சியமானது ஹெகலியத்தை மறுத்து விளைந்தது என்பதை நிறுவ முயல்கின்றது. ஹெகலின் அடிப்படையை முற்றிலும் மாற்றியமைத்து தனது தத்துவத்தை வகுத்துக் கொண்டார் என்ற போக்கை ஹெகலியத்திலிருந்து நீங்கிய மார்க்சியம் என்றும் அழைக்கப்படுகின்றது. இரண்டாவதாக கூறப்பட்ட ஹெகலிய நீக்கம் செய்யப்பட்ட மார்க்சியம் என்பது நிகழ்விய முறையியல் மற்றும் அகம்புறம் ஆகியவற்றின் செல்வாக்கை ஏற்றுக்கொள்வதில்லை.

ஹெகலிய மார்க்சியமும் அதை மறுத்த போக்குகளும்

மார்க்சின் ஆரம்பகால எழுத்துக்களான அவரது முனைவர் பட்ட ஆய்வேடு, பார்ஸ் கம்யூன் கையேடு, 1844, ஹெகலின் உரிமைப் பற்றிய மார்க்சின் ஆய்வு, அவரது தந்தைக்கு 1837, 1857- 58 இல் எழுதிய கடிதங்கள், க்ரன்ட்ரைஸ், மற்றைய எழுத்துக்கள் 1930க்கு பின்பே வெளியிடப்பட்டன.

மார்க்சு ஹெகலிடமிருந்து எத்தகைய கருத்தாக்கங்களை எடுத்துக்கொண்டார் என்றோ அல்லது எத்தகைய கருத்தாக்கங்களை எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்தார் என்பதற்கான ஆதாரங்களை அவர் விட்டுசெல்லவில்லை. ஆனாலும் எங்கல்சின் எழுத்துக்களிடமிருந்து சிலவற்றை நாம் அறிகிறோம். அவற்றை அறிந்துகொள்ள எங்கல்சின் நான்கு படைப்புகள் துணை நிற்கின்றன. 1.டூரிங்க்கு மறுப்பு (1878, 2.கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் (1880), 3. இயற்கையின் இயக்கவியல் (1873–83), 4. லூட்விக் பாயர்பாக்கும், மூலச்சிறப்புள்ள செர்மன் தத்துவமும் (1888). இவையாவும் இரண்டாம் அகிலத்தின் காலகட்டத்தில் எழுதப்பட்டதாகும்.

இரண்டாம் அகிலத்தின் காலகட்டம் என்பது பொருள்முதல்வாதமும் இயற்கை விஞ்ஞானமும் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டமாகும். மார்க்சு பொருளாதாரம் மற்றும் சமூக விஞ்ஞானத்தில் மிகவும் தேர்ந்தவர். எங்கல்சு இயற்கை விஞ்ஞானத்தில் மிகுந்த புலமைப் பெற்றவர். அப்போது மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை இயற்கையின் விதிகளில் பொருத்தி நிறுவ வேண்டிய கட்டாயம் எங்கல்சுக்கு இருந்தது. மார்க்சு தனது கோட்பாடுகளை பொருளாதார விஞ்ஞானத்தில் நிறுவியது போன்று, பொதுஉடைமை தத்துவத்தை நிலைநாட்டியது போன்று, இயற்கையானது, இயக்கவியல் விதிகளின்படி இயங்குகிறது என்பதை நிறுவ வேண்டிய பொறுப்பு எங்கல்சுக்கு இருந்தது.

அப்போது டூரிங் என்பவர் பல நூல்களை எழுதினார். அவர் ஹெகலை எதிர்த்தும், செர்மன் கருத்துமுதல்வாதத்தை எதிர்த்தும் எழுதிவந்தார். செர்மன் தொழிலாளர்கள் 18 ஆம் நூற்றாண்டின் செர்மன் கருத்துமுதல்வாதத்திற்கும், குறிப்பாக ஹெகலியத்திற்கும் உண்மையான வாரிசுகளாக‌ இருந்ததை நிறுவி டூரிங்கின் கருத்துக்களை எங்கல்சு மறுத்தார். இதுதான் 'டூரிங்க்கு மறுப்பு' என்னும் நூலாகும். ஹெகலும் சரி, செர்மானிய கருத்துமுதல்வாதமும் சரி, இரண்டுமே செர்மானிய பிற்போக்கு அரசியலை தாங்கி நின்றது என்பதை மறுப்பதே எங்கல்சின் முக்கியப் ப‌ணியாக இருந்தது. அதோடு அவை இரண்டும் ஒரு புரட்சிகர இயக்கத்தின் அறிவு பூர்வமான வழிகாட்டிகளாகத் திகழ்தன என்றும் நிறுவினார்.

எங்கல்சுக்கு வேறொரு முக்கிய பணியும் இருந்தது. அதாவது இயற்கை அறிவியல் வடிவில் இருந்த வலது போக்குக்கும், சோசலிசத்தை மறுத்தளித்த தத்துவ கருத்துமுதல்வாதத்திற்கும் எதிராக மார்க்சியத்தை நிலைநாட்ட வேண்டியிருந்தது. அவர் ஹெகலிய இடது போக்கை பாதுக்காக்க விஞ்ஞான இடதுசாரி பிரிவை உருவாக்கினார். ஹெகலிய மார்க்சியம் பொருள்முதல்வாதத்தையும் இயங்கியலையும் இணைத்தது. இந்த‌ வ‌கையில் 'லூத்விக் பாய‌ர்பாக்க்கும் ஜெர்மானிய‌ தத்துவ‌த்தின் முடிவும்' என்ற‌ நூல் அமைந்த‌து. இந்த‌ நூல் சி.என்.ஸ்டார்க் என்பவர் எழுதிய நூலை மறுத்து எழுதப்பட்டது. இதில் பாய‌ர்பாக்கை இவ‌ர் ஒரு க‌ருத்துமுத‌ல்வாதி என்று கூறியிருப்ப‌தை ம‌றுத்த‌ளித்தார்.

ஸ்டார்க்கிற்கு பதிலளிக்கும் போது எங்கல்சு பாயர்பாக்கை ஒரு பொருள்முதல்வாதி என்று கூறினார். இரண்டு வகையான பொருள்முதல்வாதத்தை வேறுபடுத்தினார். ஒன்று, பிரன்சு பொருள்முதல்வாதம்; அது, எந்திரத்தனமான பொருள்முதல்வாதம். அது இயற்கையை நிலையானதாகப் பார்த்தது. மேலும் அது இயற்கையின் வளர்ச்சியை பார்க்கவில்லை. மாறாக அது நிலையானதாகப் பார்த்தது.

வரலாற்று பொருள்முதல்வாதம் என்பது சமூகத்தின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய தத்துவமாகும். இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது அளவுமாற்றம் குணமாற்றத்தை உருவாக்கும், எதிர்மறைகளின் ஒற்றுமை மற்றும் நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆகிய மூன்று அடிப்படையான பிரபஞ்சத்திற்கான விதிகளை கண்டுபிடித்ததாக உரிமைக் கோருகின்றது. இவற்றை இயற்கையின் இயக்கத்திற்கும் சமூகத்தின் இயக்கத்திற்கும் பொதுவான விதிகள் என்று கோருகின்றது.

பாயர்பாக், இருப்புக்கும் சிந்தனைக்கும் உள்ள‌ உறவின் மர்மத்தை உடைத்தார். சிந்தனைதான் இருப்புக்கு முந்தையது என்றும், சிந்தனைதான் இருப்பு வடிவம் கொடுக்கின்றன என்றும் எல்லா தத்துவங்களும் உரைத்தன. ஆனால் பாயர்பாக் ஒரு புதிய விஞ்ஞானத்தையும், பொருள்முதல்வாதத்தை ஆரம்பித்துவைத்தார். இருப்புதான் சிந்தனையின் தோற்றுவாய் என்று என்று கூறினார். ஹெகலிய மரபில் இரண்டு பகுதிகள் இருந்தன. ஒன்று கருத்துமுதல்வாத பழைமைவாதம். இரன்டு புரட்சிகரமான‌ இயக்கவியல். இவ்விரு பகுதிகளும் ஒன்றோடொன்று இரண்டற கலந்துவிட்டிருந்தன.

ஹெகலின் கருத்தியல் கூறுகள் அரசியல் பிற்போக்குத்தனத்தை உருவாக்கியது மட்டுமல்ல பிரஷ்யன் சர்வாதிகாரத்தையும் நியாயப்படுத்தியது. வளர்ச்சியையையும் முன்னேற்றத்தையும் வலியுறுத்திய கூறுகள் இயக்கவியலுக்கு இட்டுச் சென்றது. ஹெகலின் இயக்கவியலை ஹெராக்லிடசின் இயக்கவியலின் தொடர்ச்சியாகப் பார்த்தார். இயக்கவியல் என்பது வரலாற்றுத் தன்மைக் கொண்டதாகப் பார்த்தார்.

லெனினின் முதல் தத்துவநூல் என்ற பெருமையை ”பொருள் முதல் வாதமும் அனுபவவாத விமர்சனமும்” பெற்றுக் கொண்டது. ஆனால் ஐந்து வருடங்களுக்குப்பின் எழுதிய‌ ‘தத்துவ ஞானக் குறிப்பேடு' ஹெகலிய தர்க்கவியலை லெனின் அதிகம் உள்வாங்கிக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது.

முதல் உலகப் போரின்போது 1914 முதல் 1917 வரையிலும் லெனின் ஹெகலை ஆய்வதிலேயே முழுநேரத்தையும் செலவிட்டுள்ளார். ஹெகலின் தர்க்கவியலின் விஞ்ஞானத்திலிருந்து ஏராளமான குறிப்புகளை எடுத்து கொண்டார். ஹெகலின் எழுத்துக்களின் சுருக்கவுரைகளை தயாரித்துக் கொண்டார். இத்தகைய ஆய்வுகளின் மூலம் 1908 இல் எழுதிய பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமரிசனமும் என்ற நூலின் கருத்துரைகளிலிருந்து வளர்ச்சிபெற்றக் கருத்துக்களுக்கு லெனின் வந்தடைந்தார். அதற்கு பின்னர் லெனினின் எழுத்துக்களில் ஹெகலின் தர்க்கவியல் கூறுகளின் செல்வாக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக தேசிய இனப்பிரச்சனையிலும், பொருள்முதல்வாதம் குறித்தக் கருத்துக்களிலும், அரசு மற்றும் புரட்சி பற்றிய கருத்துக்களிலும் வளர்ச்சி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அது தர்க்கவியல் பார்வை மேலோங்கியிருந்தது.

லெனின், மார்க்சியத்தை ஹெகலிய மரபில் மீண்டும் நிறுத்தினார். அவர் எங்கல்சு கையாண்ட இயற்கையின் இயக்கவியல் வழிமுறையை முன்னிறுத்தாமல், அறிவுத்தோற்றவியலாக மாறிய இயக்கவியலை வழிமுறையைக் கையாண்டார். ‘இயக்கவியல் என்பது மார்க்சியத்தின் அறிதல் கொள்கையே; அதுதான் பொருளின் ஒரு கூறாகும்; அது மட்டுமல்ல பொருளின் சாரமுமாகும்’ என்று லெனின் கூறுவார். ஹெகலைப் போல லெனின் இயக்கவியலை அறிதல் கோட்பாட்டின் இடத்தில் சரியாக‌ வைத்தார். இந்த இயக்கவியல் மீண்டும் அகநிலைக் கோட்பாட்டின் ஒரு பகுதியாக மாறியது. லெனின் ஹெகலின் செயலூக்கமுள்ள அகநிலையினைப் பெற்றுக் கொண்டார்.

ஹெகலின் தர்க்கவியலை முழுமையாக புரிந்துகொள்ளாவிடில் மார்க்சின் மூலதனத்தை குறிப்பாக மூலதனத்தின் முதல் பகுதியைப் புரிந்துகொள்ளமுடியாது என்று லெனின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. லெனின் எழுதிய‌ ‘தத்துவஞானக் குறிப்பேட்டில்’ அகநிலை உணர்வு மீண்டும் மைய இடம் பிடித்தது. ஹெகலைப் போலவே லெனினும் கருத்தின் வலிமையை அங்கீகரித்தார். லெனின், தனது 'தத்துவ ஞானக் குறிப்பேடுகளை', முதல் உலகபோரின் போது எழுதினார். ஐரோப்பிய போருக்கும் சர்வதேச அணிசேர்க்கைக்கும் இடையேயான உறவை புரிந்து கொண்டிருந்தார். இது ஹெகலின் பொதுவான மற்றும் குறிப்பானதிற்குமான உள்ளுறவுகளின் கருத்துக்கோப்பை பிரதிபலித்தாகும்.

அகநிலைக்கும் புறநிலைக்கும், தோற்றத்திற்கும் சாரத்திற்கும், சார்புநிலைக்கும் முழுமைக்கும் ஒவ்வொன்றும் மற்றவற்றோடு கொண்டுள்ள உறவையும் ஈடுபாட்டையும் ஹெகலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்று லெனின் கூறுகின்றார்.

அறிவு என்பது இயற்கையின் பிரதிபலிப்பு, மனிதனால் ஏற்படும் பிரதிபலிப்பு. ஆனால் அது எளிய பிரதிபலிப்பல்ல, உடனடியான பிரதிபலிப்பல்ல, முழுமையானது என்றும் சொல்லமுடியாது. மாறாக அறிவு என்பது வளர்ச்சிப் போக்கை அனுமானிப்பது. பொருளிலிருந்து உருவாகும் தொடர்ச்சியான சிந்தனையாகும். அவ்வாறு உருவாவது என்றென்றும் முடிவற்ற தொடர்ச்சியானதாக‌ இருக்கும் என்று கூறுவதில் எவ்வளவு வளர்ச்சி தெரிகின்றது.

அவ்வாறு பிரதிபலிக்கும் அறிவை உயிரற்றதாகவும், இயக்கமற்றதாகவும், முரணற்றதாகவும் புரிந்துக் கொள்ளக் கூடாது. அது என்றென்றும் இயக்கத்தில் இருப்பதாகவும் புரிந்துக் கொள்ளவேண்டும். ஆனால் லெனின் முந்தைய படைப்புகளில் அறிவின் பிரதிபலிப்பலிப்பு உயிரற்றாதாகவும், இயக்கமற்றதாகவும் முரண்பாடற்றதாகவும் காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்கவியலின் முக்கிய அடிப்படையானது முரண்பாடுகளின் இயக்கமும் சுய இயக்கமும் ஆகும் என்று லெனின் கூறுகின்றார்.

20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் ஸ்டாலின் மார்க்சியத்தை ஹெகலிய நீக்கம் செய்தார். ஹெகலிடத்திடமிருந்த மார்க்சியத்தின் உறவுகளைத் துண்டித்தார். மார்க்சியத்தை எந்திரத்தனமான பொருள்முதல் வாதமாக மாற்றினார். அவர் மார்க்சியத்தையும் விஞ்ஞானவாதத்தையும் இணைத்து செயல்பட்டார்.

லூகாக்ஸ், லெனினின் வாரிசாகத் திகழ்ந்தார். லூகாக்ஸ் ‘வரலாறும் வர்க்க உணர்வும்’ (1923) என்ற நூலை எழுதினார். அவ‌ர் 1938 இல் ‘இளம் ஹெகல்’ என்ற நூலை எழுதி, 1948 இல் முதல் முதலில் வெளியிட்டார். இரண்டு நூல்களுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்பட்டன.

மேற்கண்ட இரண்டு நூல்களிலும் ‘இளம் ஹெகல்’ என்ற நூல் உருவாவதற்கான சிறப்பான காரணிகள் இருந்தன. அவையாவன: 1. ஹெகலிய ஆய்வுகளை மறுபடியும் செய்யப்பட்டன. 2. மார்க்சின் ‘1844 ஆண்டின் பொருளாதார தத்துவ கையேடுகள்’ 3. ஹெகலின் முந்தைய எழுத்துக்கள் கிடைக்கப் பெற்றது ஆகியனவாகும். இத்தகைய‌ப் பின்னணியில்தான் இந்நூல் உருவானது.

ஹெகலின் 'ஒழுக்க வாழ்வின் அமைப்பு' என்னும் நூல், 1923 இல் வெளியிடப்பட்டது. அடுத்து ‘ஜீனர் உண்மை தத்துவம்’ என்னும் நூல், 1931 இல் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு நூல்களும் ஹெகலின் வேறொரு பரிமாணத்தைக் காட்டின. இவை இரண்டும் பொருளாதாரம், முதலாளித்துவம் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றை பற்றிய ஹெகலின் சிந்தனைகள் அடங்கிய நூல்களாகும்.

மார்க்சின் ‘1844 ஆண்டின் பொருளாதார தத்துவ கையேடுகள்’ கிடைக்கப் பெற்றபின் மார்க்சின் கருத்துரைக்கு மறுவிளக்கம் அளிக்கப்பட்டதைப் போல, ஹெகலின் இந்த இரண்டு நூல்கள் கிடைக்கப்பெற்ற பின் ஹெகலையும் ஹெகலியத்தையும் மறுவாசிப்புச் செய்யப்பட்டன. ஹெகலின் இந்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பு லூகாக்ஸுக்குக் கிடைத்தது. இத்தகைய பின்னணியிலிருந்து லூகாக்ஸ் ‘இளம் ஹெகலை’ எழுதினார்.

‘வரலாறும் வர்க்க உணர்வும்’ மற்றும் ‘இளம் ஹெகல்’ ஆகிய இரண்டு நூல்களும் ஹெகலின் இரண்டு வேறுவேறு படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவானவை. ‘வரலாறும் வர்க்க உணர்வும்’ என்ற நூலுக்கு அடிப்படையாக அமைந்தது 'தர்க்கத்தின் விஞ்ஞானம்' என்ற நூலாகும். அதே போல‌ ‘இளம் ஹெகல்’ என்ற நூலுக்கு அடிப்படையாக அமைந்தது, ‘ஆன்மாவின் நிகழ்வியம்’ என்ற நூலாகும்.

1923 இல் மார்க்சிய முறையியலை ஆய்வதையே முக்கியப் பணியாக லூகாக்ஸ் ஏற்றிருந்தார். அதற்காக ‘தர்க்கத்தின் விஞ்ஞானத்தை’ நாட வேண்டியிருந்தது. ஆனால் 1938 இல் நிலைமையோ வேறாக இருந்தது. அப்போது ஐரோப்பிய பாசிசத்தையும், பாசிசத்தின் வேர்களையும் ஆய்ந்து அறிய வேண்டியிருந்தது. ஆகவே ஹெகலின் ‘ஆன்மாவின் நிகழ்வியம்’ என்ற நூலின் தத்துவம், நடைமுறை மற்றும் சமூக இருப்பியல் போன்ற கருத்துக்களை எடுத்தாள வேண்டியிருந்தது. லூகாக்ஸின் மேற்கண்ட இரு நூல்களும் இரண்டு வரலாற்று சூழ்நிலைமைகளில் எழுதப்பட்டதாகும்.

‘வரலாறும் வர்க்க உணர்வும்’ என்ற நூலில் மார்க்சியத்தையும் தத்துவத்தையும் ஒன்று சேர்த்தது. இந்நூலின் முக்கிய நோக்கம், ஹெகலே மார்க்சுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் வழிகாட்டியாக இருந்தார் என்பதை நிறுவுவதாகும். ஹெகலுக்கு இரு பக்கங்கள் இருந்ததை லூகாக்ஸ் உணர்ந்திருந்தார். ஒன்று புறநிலைக் கருத்துமுதல்வாதமாக வளர்ந்திருந்த‌ பழைமையான பிற்போக்குதனம்; மற்றது இயங்கியல் சிந்தனையை பிரதிபலிக்கும் புரட்சிகரமான அம்சம். மார்க்சு இந்தப் புரட்சிகரமான அம்சத்தையே ஏற்றுக் கொண்டார்.

லூகாக்ஸ், இயங்கியலை வரலாற்றில் வைத்தார். அகநிலை - புறநிலை, தத்துவம் - நடைமுறை ஆகியவை சமூகபொருளாதார கட்டமைப்பில் மனித நடவடிக்கையோடு தொடர்புபடுத்திப் பார்த்தார். ‘இளம் ஹெகல்’ என்ற நூலை ஆராயும்போது அகநிலை-புறநிலை இணைவு, மனித நடைமுறை போன்றவற்றை வலியுறுத்தினார். மனித நடைமுறையை புறநிலையாக உணரப்பட்டது. இதன்மூலம் இயங்கியலின் வரலாற்று ரீதியிலான அமசங்களை வலியுறுத்தியது.

எங்கல்சு இயக்கவியலை இயற்கையோடு தொடர்புபடுத்தினார் என்று முன்னரே பார்த்தோம். ஆனால் லூகாக்ஸ் இயக்கவியலை சமூக ஒழுங்கோடு தொடர்புபடுத்தினார். அதாவது இயற்கை தத்துவத்திற்கு மாற்றாக சமூக இருப்பியலை வைத்தார். இதன் மூலம் வர‌லாற்றோடு இயக்கவியலை இணைத்தது, எங்கெல்சின் வழிக்கு எதிரானதாகும். லூகாக்ஸ் மார்க்சியத்தை ஒரு தர்க்கமாக அணுகவில்லை. மாறாக, சமூகத்தை ஆய்வு செய்யும் ஒரு முறையியலாக‌ப் பார்த்தார்.

மார்க்சைப் பொருத்தவரை ‘ஆன்மாவின் நிகழ்வியம்’ என்ற நூலில் காணப்படும் உழைப்பு என்ற கருத்தாக்கத்தை மையமாக வைத்து ஆய்வு செய்தார். அது புறஉலக ஆன்மாவிலிருந்து உழைப்பு என்ற நடவடிக்கை உருவாகிறது என்ற ஹெகலின் கருத்துரையை மறுத்தார். மாறாக உழைப்பை, சமூக பொருளாதார உற்பத்தி நடைமுறையில் வைத்து ஆய்வுசெய்தார். ஆனால் லூகாக்ஸுக்கு இந்த அணுகுமுறை தேவைப்படவில்லை.

மீண்டும் ஹெகலிய மார்சியம்

ஜார்ஜ் லூகாக்சு, ஹெர்பர்ட் மார்க்யூஸ், ஜீன் ஹிப்பொலைட் மற்றும் ஆல்ஃபிரட் ஷ்மிட் ஆகியோர் மூலம் 20 ஆம் நூற்றாண்டில் மார்க்ஸ் மறு-ஹெகலியமாக்கலின் முதல் கட்டம் தொடங்கியது. அனைவரும் எங்கல்சின் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை நிராகரித்தனர்.

லூகாக்ஸ், ஹெகல் மற்றும் மார்க்ஸ் ஆகியோர்களின் அகம் சார்ந்த‌ நடவடிக்கைப் பற்றியக் கொள்கையின் மீது தன் கவனத்தைச் செலுத்தினார். போல்ஷிவிசத்தின் ஆதரவாளர் என்ற நிலையில், ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வுக்காக வாதிடும் லூகாக்ஸ், மனித‌ உழைப்பு மற்றும் நடவடிக்கை என்ற ஹெகலிய‌ கருப்பொருள்களை வலியுறுத்தினார். மேலும் அவை இரண்டும் மார்க்சிடம் எவ்வாறு தொடர்ந்தன என்பதையும் விளக்கினார்.

மார்க்யூஸ், பிராங்பர்ட் பள்ளியின் ஒரு உறுப்பினர், விமரிசன கொள்கை என்ற கொள்கை உருவாக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். ஹெகல்தான் சமூக நிறுவனங்களின் திறனாய்வைக் கண்டுபிடித்தவர் என்றும் அவருக்குப்பின் அவரது கொள்கையைக் கடைபிடித்தவர் மார்க்சு என்றும் மார்க்யூஸ் கூறுகிறார். ஹெகலியத்தை மையக்கருத்து ம‌ன‌ம் ப‌ற்றிய‌ தோற்ற‌விய‌ல்தான் என்பது இவ‌ர‌து க‌ருத்தாகும். ஹெகலின் அந்நியமாதல் மற்றும் அகவயமாதல் போன்ற கருப்பொருட்கள்தான் மார்க்சியத்தின் மைய‌ப்பொருளாக‌ இருப்ப‌தாக‌ ஹிப்போடைட் கூறுகிறார்.

தருக்க மற்றும் வரலாற்று ரீதியான வளர்ச்சிப் போக்கு என்பதுதான் மார்க்சிடன் காணப்படும் அடிப்படையான போக்கு என ஷ்மிட் கூறுகிறார். ஹெக‌லிய‌ த‌ர்க்க‌ வ‌கையின‌ங்க‌ளை ச‌மூக‌ மாற்ற‌த்திற்கான‌ க‌ருவிக‌ளாக‌ மார்க்சு ஏற்றுக் கொண்ட‌தாக‌ ஷ்மிட் கூறுகிறார்.

கிறிஸ்டோபர் ஆர்தர் மற்றும் டோனி ஸ்மித் சிந்தனைப்பள்ளி

மறு‍ஹெகலிய மார்க்சியத்தின் இரண்டாவது கட்டத்தின் பிரதிநிதிகள் கிறிஸ்டோபர் ஆர்தர் மற்றும் டோனி ஸ்மித் ஆவர். இப்புதிய ஹெகலிய மார்க்சியம் இரண்டு பண்புகளைக் கொண்டது. தர்க்கத்திலிருந்து முழுமையாக வருவிக்கப்பட்ட மார்க்சிய விளக்கமுறைமையை எடுத்துக்கொண்டது; அது வரிசைகிரம விளக்கமுறையின் எந்தக் கூறுகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆர்தர் மற்றும் ஸ்மித் ஆகியோரின்படி இயற்கைப் பரிணாமம்தான் மார்க்சையும் ஹெகலையும் இணைக்கும் முறையியல் ஆகும். தர்க்கவியலாக இருக்கட்டும், வரலாறாக இருக்கட்டும், அல்லது தத்துவமாக இருக்கட்டும், ஹெகலின் விளக்கம் என்பது இயற்கையின் பரிணாமத்தின் அடிப்படையிலிருந்துதான் உருவாகும். ‌இயற்கைப் பரிணாமம் என்பது ஹெக‌லிய தர்க்கவியல் விளக்கத்தின் உட்கூறாகும். ஒவ்வொரு முழுமையான அமைப்பும் தீர்மானகரமான சாரம்சத்தைப் பெற்றிருக்கிறது. அது இயற்கைப் பரிணாமத்தின் மையமாக விளங்குகிறது.

ஒருங்கியக்கவியல் (systematic dialectics) என்பது ஒரு விளக்க முறைமையைக் குறிக்கும். அமைப்பின் வளர்ச்சி என்பது அதன் தீர்மானகரமான வகையினத்தின் கட்டுப்பாட்டால் வரையறுக்கப்படுகிறது. ஆர்தரும் ஸ்மித்தும் ஹெகலின் தர்க்கத்தின் விஞ்ஞானத்தையும், மார்க்சின் மூலதனத்தையும் இணையாக நிறுத்துகின்றனர். காரணம், மூலதனத்தின் விளக்க முறைமை என்பது ஒரு ‘ஒருங்கியக்கவியலை’ (systematic dialectics) அடிப்படையாக‌க் கொண்டிருக்கிறது. இது ‘ஒருங்கியக்கவியல்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

புதிய ஹெகலிய மார்க்சியத்தின் தேவை என்பது வரிசை கிரமமான‌ விளக்கம் அல்லது வரலாற்று ரீதியான விளக்கம் ஆகும். ஆனால் ஆர்தரும், ஸ்மித்தும் தர்க்கரீதியான நிலைப்புத்தன்மைக்கு முதன்மை அளிக்கின்றனர்; வரலாற்றுப் பரிணாமத்திற்கல்ல. அவர்கள் தர்க்கரீதியான இணக்கத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால் அவர்கள் சமூக வளர்ச்சிக்கு அழுத்தம் தருவதில்லை. அவர்களுக்கு சமூக வளர்ச்சி என்பது இரண்டாம் பட்சமாகும்.

மார்க்சின் வர்க்க ஆய்வுகளை மறுதலிக்கும் தனிநபர் கோட்பாடாக அது அமைகிறது. தனிநபர் என்பவர், குழு உணர்வின்படி செயல்படுவதில்லை. மாறாக தனிப்பட்ட நலன்களுக்காக மட்டுமே செயல்படுகின்றனர். எவ்வாறிருந்தபோதிலும், ரோமரும், எல்ஸ்டரும் மார்க்சிடமிருந்து பெற்றது, சுரண்டல் கோட்பாடு மட்டுமே ஆகும். அவர்களது தனிநபர் கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே இந்தக் கருத்தைகூட‌ ஏற்கின்றனர்.

ஹெகலிய நீக்கம் செய்யப்பட்ட மார்க்சியம்

ஹெகலியத்தை மறுத்த முதல் பள்ளியினர் ரோமர் மற்றும் எல்ஸ்டர் சிந்தனைப்பள்ளி ஆகும். இவர்கள் முறைமைய‌ த‌னிந‌பர்வாதம், அறிவுபூர்வமான தேர்வு கோட்பாடு போன்ற கோட்பாடுகளை மட்டுமே சார்ந்திருந்து ஹெகலியத்திடமிருந்து மார்க்சை வெகுதூரம் தள்ளிவைக்கின்றனர். முறைமைய‌ த‌னிந‌பர்வாதம் (Methodological Individualism) என்பது ஒரு தர்க்கமாகும். இது எந்த ஒரு சமூக மொத்தத்தின் இருப்பையும் மறுக்கும் தர்க்கமாகும். அது சமூகம் வர்க்கங்களாகவும் குழுக்களாகவும் பிரிந்துக் கிடக்கிறது என்ற கோட்பாட்டை மறுக்கிறது. அது தனிநபரின் தேர்வுகளின் மூலம் சமூக வளர்ச்சியை விவரிக்கின்றது. அது ஹெகலிடமும், மார்க்சிடம் காணப்பட்ட இயற்கை பரிணாமவிய விளக்கத்தை மறுக்கின்றது. அதைப் பொருத்தவரை சமூகம் என்பது கிடையாது. தனி நபர்களே உண்டு.

இவர்கள் கையாளும் இரண்டாவது தர்க்கம் என்பது அறிவுபூர்வமான தேர்வு கோட்பாடு (Rational choice theory) ஆகும். இதுவும் முறைமைய தனிநபர்வாதம் மாதிரியான ஒரு கோட்பாடாகும். தனிநபரின் விருப்பங்கள் ஒரு குழு மனோபாவத்தினால் தீர்மானிக்கப்படும் என்பதை அது மறுத்தலிக்கிறது. அகநிலையான‌ முடிவுகள் யாவும் ஒட்டுமொத்த உணர்வின் அடிப்படையில் உருவாவதில்லை. மாறாக மார்க்சின் வர்க்க ஆய்வுகளை மறுதலிக்கும் தனிநபர் கோட்பாடாக அது அமைகிறது. தனிநபர் என்பவர், குழு உணர்வின்படி செயல்படுவதில்லை. மாறாக தனிப்பட்ட நலன்களுக்காக மட்டுமே செயல்படுகின்றனர்.

ரோமரும், எல்ஸ்டரும் மார்க்சிடமிருந்து பெற்றுக் கொண்ட கருத்தாக்கம், சுரண்டல் கோட்பாடு மட்டுமே ஆகும். அதுவும் அவர்களது தனிநபர் கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே இந்தக் கருத்தை ஏற்கின்றனர்.

ஜெரால்டு ஏ.கோஹன் மற்றும் பிலிப்பி வான் பாரிஜ் சிந்தனைப்பள்ளி

20 ஆம் நூற்றாண்டின் ஹெகலியம் கடந்த மார்க்சியத்தின் இர‌ண்டாவ‌து கால‌க‌ட்ட‌த்தைச் சார்ந்த‌வ‌ர்க‌ள் ஆவ‌ர். இதற்கு முன்பு விவரித்த‌ ரோமர் மற்றும் எல்ஸ்டர் சிந்தனைப்பள்ளியின் அடிப்படை நிலைப்பாட்டை மறுக்கின்றது. அதற்கு பதிலாக, ச‌மூக விஞ்ஞான‌த்தில் செய‌ல்முறை விள‌க்கத்தை (Functionalism) வைக்கின்றனர். ரோம‌ர் எல்ஸ்ட‌ர் சிந்தனைப் பள்ளிக்கும் ம‌ற்றும் கோஹ‌ன் வான் பாரிஜ் சிந்தனைப் பள்ளிக்கும் இடையிலான‌ அடிப்ப‌டையிலான‌ வேறுபாடு என்ப‌து ச‌மூக விஞ்ஞான‌த்தில் கையாளப்படும் செய‌ல்முறை விள‌க்க‌மாகும் (Functionalism). ரோமர் எல்ஸ்டர் செயல்முறை விளக்கத்தை மறுக்கின்றனர். அதே போல கோஹன் வான் பாரிஜ் ஆகியோர் முறைமைய தனிநபர்வாத தர்க்கத்தையும், அறிவுபூர்வமான தேர்வுக் கோட்பாட்டையும் மறுதலிக்கின்றனர்.

இரண்டு பள்ளியினரும் ஹெகலிய மற்றும் மார்க்சிய உயிர்வளர்ச்சித் தத்துவத்தை ஏற்று கொள்ளவில்லை. ‘செயல்முறைக் கோட்பாடு’தான் மார்க்சியத்தின் உயிராதாரம் என்று கூறுகின்றனர். ‘மார்க்சின் வரலாற்றியல்’ என்ற நூலில், உற்பத்தி சாதனங்களுக்கும் உற்பத்திமுறைக்கும் இடையே உள்ள உறவை செயல்முறையான தர்க்கத்தின் அடிப்படையில் முன்வைக்கின்றனர். இவர்கள் உயிரோட்டமான‌ தத்துவத்திலிருந்து மார்க்சை விடுவித்து, செயல்முறை தர்க்க அடிப்படையில் மார்க்சியத்தை நிலைநாட்டச் செய்தனர்.

இந்தப் பள்ளியானது மார்க்சியத்தின் அடிப்படையாக தர்க்க வரலாற்று அணுகுமுறையை வைத்தது. அது ஆன்மாவின் நிகழ்வியத்தை நீக்கிவிட்டு தர்க்கத்தின் விஞ்ஞானத்தை வைத்தது. அதாவது ஹெகலுக்கும் மார்க்சுக்கும் இடையேயான இணைப்பானது தர்க்கவியலின் அடிப்படையில் அமைந்தது; இவர்களை நிகழ்வியம் ஒன்றிணைக்கவில்லை என்று இப்பள்ளிக் கூறுகின்றது.

ஸ்கீமிட் சிந்தனைப்பள்ளி

ஸ்கீமிட் சிந்தனைப்பள்ளி, மார்க்சின் எழுத்துக்களின் தர்க்கரீதியான, வரலாற்று ரீதியான அணுகுமுறையே மேலோங்கியிருப்பதாகக் கண்டறிந்துக் கூறும் ஒரு சிந்தனைப் பள்ளியாகும். சமூகத்தைப் பற்றி விளக்குவதற்கு மார்க்சு ஹெகலிய முறைமையியலின் கூறுகளை எடுத்துக் கொண்டார். அவற்றைப் பயன்படுத்தி சமூக அமைப்புகளின் செயல்பாடுகளை விளக்கினார். தர்க்கரீதியான, வரலாற்று ரீதியான அணுகுமுறை என்பது செர்மானிய அறிவாளிகளால் உருவாக்கப்பட்டது. இதன் முதன்மையானவர் ஸ்கீமிட் ஆவார்.

இந்தப் பள்ளியினரின் முக்கிய நோக்கம் மார்க்சின் பொருளாதாரக் கருத்துரைகளில் உள்ளார்ந்திருக்கும் முறைமையை வெளிக்கொணர்வதாகும். க்ரால் என்ப‌வ‌ரும் இந்த‌ சிந்த‌னைப் ப‌ள்ளியைச் சார்ந்த‌வ‌ர். இவ‌ர் ஹெக‌லிய‌ கோட்பாடான‌ சார‌ம் என்ப‌து மார்க்சின் மூல‌த‌ன‌த்தின் க‌ருப்பொருள் ஆகும் என்று கூறுவார். மார்க்சின் ‘ம‌திப்பு’ என்ற‌ க‌ருதுகோள் ஹெக‌லின் சார‌க்கு கோட்பாடே த‌விர‌ வேறொன்றும‌ல்ல‌ என்பார். மேலும் ஹெக‌லிய‌ முர‌ண்பாட்டின் த‌ர்க்கம்தான், மூல‌த‌ன‌த்தில் ச‌ர‌க்கின் மதிப்புக‌ளான‌ ப‌ய‌ன்ம‌திப்பு ம‌ற்றும் ப‌ரிவ‌ர்த்த‌னை ம‌திப்பாக‌ மார்க்சு எடுத்தாண்டுள்ளார் என்கிறார். இவற்றை தொடர்ந்து இன்னமும் விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

முடிவாக,

இதுவரை ஹெகலியத்திற்கும் மார்க்சியத்திற்குமான உறவும் முரணும் கொண்ட‌ பல்வேறு போக்குகளை ஆராய்ந்தோம். மார்க்சுக்குப் பின்னர் மார்க்சியர்களிடையே தோன்றிய தத்துவார்த்த, முறைமையியல் போக்குகளை அறிந்து கொள்வதன் மூலம் மார்க்சை மேலும் அணுக்கமாக நெருங்குவதற்கான‌ வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்றுக் கருதுகின்றேன். இத்தகைய விவாதங்களை நாமும் வேறுவடிவத்தில் எதிர்கொண்டு வந்துள்ளோம் என்பதும் உணர முடிகின்றது. சம காலத்தில் நாம் எதிர் கொண்டிருக்கின்ற தத்துவார்த்த கருத்தியல் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதற்கும் சமூகத்தை மாற்றுவதற்குமான‌ நமக்கான‌ முறையியலை மார்க்சிடமிருந்தும் மார்க்சியத்திலிருந்தும் உருவாக்கிக் கொள்ள‌ இந்த விவாதம் உதவும் என நம்புகின்றேன்.

Pin It