“எனக்கொரு பெரும் கனவு இருக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியாத சமுதாயம் நாளை மலர வேண்டும். தொல்லியாளர்கள் ஆய்வில் மட்டுமே சாதி என்ற சொல் இடம் பெற வேண்டும். அப்போது சாதி என்பதன் பொருள் புரியாமல் அதிராதிகளை, வரலாற்றுச் சுவடிகளைத் தேடிச் செலிக்க வேண்டும். சாதியின் கோரமுகத்தை ஆய்ந்து அறியும் போது கோபத்தோடும் குமட்டலோடும் சாதியில் சரணடைந்த இன்றைய தலைமுறை மீது காறி உமிழ வேண்டும்”. -தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம்.

                நன்றாக ‘விவரம் தெரிந்த’ சிந்தனையாளர்கள் கூட “நீங்கள் பேசும், அரசியயெல்லாம் சரி, இமானுவேல் சேகரன் என்ற ‘சாதித் தலைவரின்’ பெயரில் இயக்கம் நடத்துவது தான் முரண்பாடாக உள்ளது” என்று எண்ணிடத்திலே கதைத்ததுண்டு.

                உலகில் இனம், மதம் ஆகிய அடிப்படையில் உழைக்கும் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் வரலாறுகள் காலந்தோறும் நடந்தேறியே வருகின்றன. இத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்த்து புரட்சியாளர் பெருமக்கள் பலர், மக்கள் சக்தியின் துணையோடு களமிறங்கி அக்கொடுமைகளை அறுத்தெறியப் போராடி வந்துள்ளார்கள்.

                மேற்கண்ட ஒடுக்குமுறைக்கு எதிராய் போராடியவர்களை புரட்சியாளர்கள், போராளிகள், மாவீரர்கள், தலைவர்கள் என, மக்கள் புகழ் மாலை சூட்டி உச்சி முகர்ந்து கொண்டாடினார்கள்.

                இந்தியத் துணைக்கண்டம் போன்ற சாதியக் சீழ்ப் படிந்த ‘தேசத்தில்’ சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக - வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக - பண்ணை நிலப்பரப்புத் தத்துவத்துக்கு எதிராக தன் உன்னதமான உயிரையும் கூட ஈன்றளித்த மாவீரர்களின் இலட்சியங்கள் இரண்டு பெரும் கூட்டத்தினரால் மடைமாற்றம் செய்யப்படுகிறது; திரிக்கப்படுகிறது; திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன.

                ஒரு கூட்டம் சாதிய ஆதிக்கத்தின் பெயரால் அம்மாவீரர்கள் நெஞ்சில் சுமந்த இலட்சியத்தை உணரமறுத்து, அம்மாவீரர்களின் போராட்டம் எத்தகையதாயினும் அவரைச் சாதியச் சிறைக்குள் போட்டு முடக்கி வருகிறது. ஆதிக்க சாதியினரும், அரசும் இக்கூட்டத்திற்குள் அடங்குவர்.

                பிறிதொரு கூட்டம் அம்மாவீரர்களின் நெஞ்சில் சுமந்த இலட்சியத்தை தூரக்கடாசி விட்டு வெறும் சாதியின் அடிப்படையில் மட்டும் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறது; சாதியாய் அடையாளப்படுத்த முனைகிறது. மாவீரர்களின் இலட்சியத்தின் பால் பாசம் கொள்ளாமல் சாதியினடிப்படையில் நேசம் கொள்கிறது.

                முதலாவது கூட்டம் மாவீரர்களை சாதியக் குறும்பார்வையோடு அணுகுகிறது. இரண்டாவது கூட்டம் சாதியப் பாசத்தோடு அணுகுகிறது. ஆக, இரண்டு கூட்டங்களும் மாவீரர்களின் இலட்சியப் பெருங்கனவுகளை, அவர்களின் போராட்ட உணர்வை மறுதளித்து, மாவீரர்களின் இலட்சியப் பாதைக்கு எதிரான நிலைபாட்டையே எடுத்து வருகிறார்கள் என்பது தான் எதார்த்தமான உண்மையாக இருக்கிறது.

                ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் உலகலாவிய மாவீரர்களின் நினைவைப் போற்றும் பொன்னான மாதமாக அமைந்திருக்கிறது.

                அந்த வகையில் தென் தமிழகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நெஞ்சுரத்துடன் போராடிய மாவீரன் இமானுவேல் சேகரன் மற்றும் மாடக்கோட்டை சுப்பு ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும் செப்டம்பர் மாதமே.

சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன்:

                மாவீரன் இமானுவேல் சேகரரின் நினைவேந்தல் நாளில் இளைஞர்களால் வடிவமைத்து வைக்கப்படும் பதாகைகள், மாவீரனை சாதியத் தலைவராக அடையாளம் காட்டுபவையாகவும், அவரின் வாழ்வில் நடக்காத கற்பனாவாத காட்சியாகவும் உள்ளன. மேலும், இளைஞர்கள் மேலாடையில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் அரசியலற்ற உதிரித் தன்மை கொண்டதாக, வெட்டிக் கவர்ச்சித் தன்மையுடையதாக உள்ளன.

                இளைஞர்களின் இந்தப் பிற்போக்கு எண்ணத்திற்கான அடிப்படைக் காரணம், தாம் யாரை வரலாற்று நாயகனாக – வீர புருசனாக ஏற்றுக் கொண்டார்களோ, அந்த நாயகனின் வரலாற்றையும் - களப்பணியையும் - போராட்டப் பாதையையும் - அரசியல் கண்ணோட்டத்தையும் - இலட்சியத்தையும் அறிந்து கொள்ளாதவர்களாக இருப்பதேயாகும். மாவீரனின் வரலாற்றை அறியாமலேயே, தாங்கள் நாயகனை தரிசிக்க முயல்கிறார்கள்.

                மாவீரன் இமானுவேல் சேகரன் தான் வாழ்ந்த நாட்களில் சாதியம் நிலைத்து நிற்க வேண்டும் என்று விரும்பி, அதற்காக மக்களை அணிதிரட்டி, சாதியத்தில் குளிர்காய்ந்தவர் அல்லர். சாதி என்னும் நஞ்சை இம்மண்ணிலிருந்து அகற்றி ஒரு சமத்துவ மானுடன் தழைக்க வேண்டும் என்கிற இலட்சியத்தை நெஞ்சிலேந்தி அதற்காகவே களம் கண்டவர், சாதி வெறியர்களுக்கு எதிராக அவரின் கனத்த குரல் இன்று நாடெங்கும் உரத்து எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

                ஆதிக்க எதிர்ப்பும், போராடும் குணமும் இமானுவேல் சேகனின் இளம் பருவத்திலேயே குடி கொண்டிருந்தது. எனவே தான் இமானுவேல் சேகரன் பொருளீட்டிக் கொள்வதற்குத் தனக்குத் கிடைத்த அரிய வாய்ப்பான அரசுப் பணியை உதறித் தள்ளிவிட்டு, சாதியின் கோரப்பிடியில் சிக்கித் துயருறும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க – களப்பணியாற்ற தாய்மண் திரும்பினார். பொது வாழ்க்கைக்கு வந்த இமானுவேல் சேகரன், ‘தேவேந்திரகுல சங்க’த்தின் மாவட்ட பொறுப்பை ஏற்று, உழைக்கும் மக்களுக்கான அடிப்படை வசதியை பெறுவதற்கான போராட்டத்தில் மக்களை அணிதிரட்டி அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ஏழை-எளிய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை உண்டாக்க அரும்பாடுபட்டார். மேலும், உழைக்கின்ற மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை மக்களிடத்தே பரப்புரை செய்தார்.

                சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரண்ட மக்கள், அரசியல் சட்ட உரிமைகளைப் பெற வழிவகை செய்தார். இவ்வாறான தீவிர செயல்பாட்டின் காரணமாக 1953 - ஆம் ஆண்டு ‘ஒடுக்கப்பட்டோர் இயக்க’த்தின் முதுகுளத்தூர் வட்டாரத் தலைவராக உயர்ந்தார்.

                சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான மாவீரனின் போர்க்குரல் மாவட்ட எல்கையைத் தாண்டி வீச்சு பெற்றது. இதனால் பல்வேறு சமூக மக்களும் இமானுவேல் சேகரனின் போராட்டத்தை வரவேற்றனர். பல்வேறு சமூக மக்களின் நல்லாதரவை பயன்படுத்தி 14.04.1953 (சித்திரை முதல் நாள்) அன்று இராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டைக் கூட்டி மக்களை அலை அலையாய் அணிதிரட்டி விழிப்புறச் செய்தார்.

                சாதியின் ஆதிக்கத்தின் பெயரால் திணிக்கப்படும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொண்டு மண்ணுளிப்பாம்பாய் நெளிந்து வாழ்வது சாதிய இந்துத்துவக் கட்டமைப்பைப் பேணிக்காப்பதாகும். எனவே தியாகி இமானுவேல் சேகரனாரின் சாதிய ஆதிக்க எதிர்ப்புப் போராட்டமானது அடிப்படையில் இந்துத்துவ – பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டமாகும். 

                மாவீரன் இமானுவேல் சேகரன் அக்காலத்தில் நிலவிய பொதுக்கடைகளில் சாதியப் பாகுபாட்டுடன் தேனீர் குவளையை வழங்கும் இரட்டைக் குவளை முறையை எதிர்த்து கடையை மக்கள் துணையோடு அடித்து நொறுக்கினார். ஆதிக்க சாதியினரின் சமூகக் கேடுகளுல் ஒன்றாக விளங்கிய இரட்டைக் குவளை முறையை எதிர்த்து பல கட்டங்களாக போராடியுள்ளார். சில கடைகளைப் பூட்டிடக் காரணமாகவும் இருந்துள்ளார்.

                அதற்காகவே 21.05.1954-இல் அருப்புக்கோட்டையில் இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டு, ஆயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி அரசையும், ஆதிக்க சாதி வெறியர்களையும் விஞ்சித்து நிற்கச் செய்தார். அம்மாநாட்டுக்கான செலவினங்களுக்காக, தன் குடும்பச் சொத்தின் ஒரு பகுதியை விற்று அவ்வரிய செய்கையைச் செய்துள்ளார்.

                சில கிராமங்களில் நிலவிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக, சாதிவெறி பிடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முனைந்து களமாடியுள்ளார்.

                தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மக்களைத் தட்டியெழுப்ப, தன் தோழர்களுடன் இணைந்து கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடத்தே அமர்ந்து பேசி, அரசியல் விழிப்புணர்வடையச் செய்ய அரும்பாடுபட்டுள்ளார்.

                மனிதனை மனிதன் சமமாகப் பாவிக்க மறுக்கும் சாதிவெறிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் கரங்களை உயர்த்துவது – சாதி வெறிக்கு எதிரான போராட்டத்தில் தலைமையேற்பது சாதி வெறி ஆகாது. அந்த வகையான களம்தான் இமானுவேல் சேகரனின் போராட்டக் களம். சாதி வெறிக் கொடுநிலைக்கு எதிராகக் குரல் கொடுப்பது சாதியச் சார்பு நிலையா? அது ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி; உயிரினத்தின் ஏதேச்சி என்பதை நடுநிலைமையோடு புரிந்து கொள்ள வேண்டும். 

பொதுவுடைமைப் போர்வாள் தோழர்.மாடக்கோட்டை சுப்பு:

                சாதிவெறிக் கொடுமைகள் தலைவிரித்தாடிய முந்தைய இராமநாதபுரம் மாவட்டத்தில், பண்ணை அடிமை முறையும் - சாதிய அடக்குமுறையும் ஒருங்கே நிலவிய அன்றைய சூழலில், சமூகக் கொடுமைகளைக் கலைந்தெறிய எழுச்சியோடு கிளர்த்தெழுந்தவர்தான் தோழர் மாடக்கோட்டை சுப்பு. 

                தனியொரு நபராய் போராடிய தோழர்.சுப்பு, மேலும் வீரீயத்துடன் களப்போராட்டத்தை முன்னெடுக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார். சமூக உரிமைப் போராட்டம், விவசாயிகளின் வர்க்கப் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் அயராது பங்காற்றியுள்ளார். அவரது சமூக உரிமைப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவருடைய நலனுக்கானதாக அமைந்திருந்தது.

                ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவத்தை மறுக்கும் இரட்டை குவளை முறையை எதிர்த்து தானே தேனீர் கடையை நடத்தி ‘டீக்கடை பெஞ்சை’ கம்யூனிச பரப்புரைக் களமாக மாற்றியவர் தோழர்.சுப்பு. 1978-இல் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்லிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

                விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து போராடிய தோழர்.சுப்பு உழைக்கும் விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்லிஸ்ட்-லெனினிஸ்ட்) மாவட்டத் தலைமைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்று துடிப்போடு போராடினார்.

                1992-இல் தேவகோட்டைப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புடன் விளங்கிய சிறுவாச்சி ஆலய நுழைவுப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். இவரது போராட்டத்தைக் கண்ட ஆதிக்க சாதி வெறியர்கள் அஞ்சி நடுங்கினர். தோழர்.சுப்புவின் போராட்டத்தை மட்டுப்படுத்த நினைத்த ஆதிக்க சாதி வெறியர்கள், தங்கள் விசுவாச அரசபடையான காவல்துறையைக் கொண்டு, தேவகோட்டையில் நடத்த ஒரு கொலையில் ஈடுபட்டதாக தோழர் சுப்பு மீது வழக்குப் போடச் செய்தனர்.

                அந்த பொய் வழக்கு தொடர்பாக திருநெல்வேலி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு திரும்பிய போது கூலிப்படை காலி, கொடியவன் இசக்கி என்பவரால் தோழர் சுப்பு கொலை செய்யப்பட்டார். தோழர் சுப்பு மாவீரன் சுப்புவாய் பரிணமித்தார்.

                மாவீரன் சுப்புவைக் கொலை செய்த ஆதிக்க சாதி வெறியர்கள், வரலாற்றில் மாறாக இரத்தக் கறையுடன் தவிர்க்க முடியாமல் இடம் பெற்றார்கள் கோழைகளாய்...

                வெகு சமீப காலத்திற்கு முன்பு இம்மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரன் சுப்பு இன்றுவரை இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பாரேயானால், அவர் தென் தமிழகத்தின் வாழும் - குறிப்பாக தேவகோட்டைப் பகுதியில் வாழும் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்காய் குரல் கொடுக்கும் சாதி ஒழிப்புப் போராளியாய் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பார்.

                ஆனால், அவரின் நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடும் இளைஞர்களோ, அவர் ஏற்றுக் கொண்ட கம்யூனிசக் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு, ஒடுக்கப்பட்ட – உழைக்கும் மக்களை அணி சேர்ப்பதற்கான திட்டவரைவு ஏதுமின்றி, குறுகிய சாதியச் சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு கடந்த செப்டம்பர்-13, தோழர் சுப்புவின் நினைவு நாளான்று ‘மள்ளர்’ என்ற சொல்லாடலுடன் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியே சான்றாக அமைந்தது.

                மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வைக் கடைப்பிடிக்கும் இளைஞர்கள் சுயசாதி பெருமை பேசி வருவதை விட்டுவிட்டு, அறத்தை மறுக்கும் சாதியத்தின் குரல் வளையை நெறிக்க தங்கள் கரங்களை உயர்த்திப் போராட வேண்டும். சாதி ஒழிப்புப் போராட்டமே மாவீரன் இமானுவேல் சேகரன், மாவீரன் மாடக்கோட்டை சுப்பு போன்ற புரட்சியாளர்களின் நெஞ்சிலே கனன்று கொண்டிருந்த விடுதலை நெருப்பை அணையாமல் காப்பதற்கான நெறிமுறையாக அமையும்.

                போராளிகள் இமானுவேல் சேகரனும், தோழர் சுப்புவும் தான் பிறந்த சாதியை உச்சாணிக் கொம்பில் வைத்து கொண்டாட வேண்டும் என்பதற்காக போராடியவர்கள் அல்ல. மாறாக அவர்கள், கேடான சாதியத்தை தீயிட்டுக் கொளுத்த வந்த பெருநெருப்புகள்.

                அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, அவர்களின் அரசியல் இலட்சியத்தைப் புறந்தள்ளுவதும், சாதி முத்திரை குத்தி பொது நீரோட்டத்திலிருந்து அகற்றத் துடிப்பதும், அறிவுக்கு ஒவ்வாத அறியாமைத்தனமேயன்றி, வேறொன்றுமில்லை. சாதியவாத - குள்ளச்சிந்தனையாளர்களின் இந்த எண்ணம் மேலோங்கும் வரை போராளிகளின் கொள்கை வாரிசுகள் புறப்பட்டுக் கொண்டேதானிருப்பர் உழைக்கும் மக்களின் நலனுக்கான சாதியொழித்த தமிழ்த்தேசக் குடியரசு நிறுவப்படும் வரை...

சாதியத்தின் பெயரால் போராளிகளை, ஒரு சாதிக்கான தலைவராக அணுகும் இத்தகைய கோணல் பார்வையை, நேர் செய்யவேண்டியது மேற்கண்ட இரண்டு கூட்டத்தாரின் முன் நிற்கும் அவசிய – அவசர தேவையாகும்.

Pin It