போரின் இறுதி நாட்களில் போராளிகள் உள்பட இலட்சத்துக்கும் மேலான ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என வேறு வேறு தரப்பிலான கோருதல்கள் இருந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழுவினர் 40,000 வெகுமக்கள் வரை கொல்லப் பட்டிருக்கலாம் எனத் தமது அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்கள்.

2009, மே 18 அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மானுடப் பேரழிவைத் தமிழகத் தமிழர்கள் கையறுநிலையில் சாட்சியமாக நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஈழத் தமிழ் அரசியல் மட்டுமல்ல, தமிழக அரசியலும் நடந்து முடிந்த இரத்தக் களறியில் உறைந்துபோன நாட்கள் அவை.

தமிழக மார்க்சிஸ்ட்டு கட்சிகள், மார்க்சியத்தை விமர்சிக்க வந்த தமிழ் பின்நவீனத்துவம், நடைமுறையிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்க வந்ததாக, அதன் போதாமைகளை நிரவுவதாகக் கோரிக் கொண்ட இருத்தலியல் மற்றும் விமர்சன மார்க்சியம் அனைத்துமே நடந்து முடிந்த ஈழப்படுகொலையின் போது அர்த்தமிழந்து போயின.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. இது தமிழ் அரசியல் சிந்தனையை, அதன் சிறுபத்திரிகை மரபை, அதன் ஈரராயிரம் ஆண்டு அறிவுமரபை முற்றிலும் புரட்டிப் போட்டது. தமிழ்ச் சிந்தனையை முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை ஈழ ஆயுத விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சி தோற்றுவித்துள்ளது.

1989இல் சோவியத் பாணி சோசலிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்பான உலகை, 2001 செப்டம்பர் நியூயார்க் தாக்குதலுக்குப் பின்பான உலகை, பின்கெடுபிடிக்கால, பின்செப்டம்பர் உலகை விடுதலைப் புலிகள் புரிந்துகொள்ளவில்லை என்னும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

yamuna_rajendran_eelam_450விடுதலைப் புலிகளின் தலைமை வெள்ளாள சாதியத் தலைமையாகவும், இஸ்லாமிய எதிர்ப்புத் தலைமையாகவும், இந்துத்துவத் தலைமையாகவும், தலித்திய விரோதத் தலைமையாகவும், மார்க்சிய விரோத வலதுசாரித் தலைமையாகவும் முன்வைக்கப்பட்டது. பின்நவீனத்துவவாதிகளும், ஸ்டாலினியக் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இந்தப் பிரச்சாரத்தை வெகு வேகமாக முன்னெடுத்தார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் வெகுமக்களுக்குமான உறவு குறித்த கேள்விகள், போரின் இறுதி நாட்களில் அவர்கள் வெகுமக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தததை முன்வைத்தும், சிறார் சிறுமிகளை எந்தவிதமான பயிற்சியும் அற்று பலவந்தமாகத் தமது அணியில் சேர்த்துப் பலிகொடுத்தமையை முன்வைத்தும் எழுப்பப்பட்டன. ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் விடுதலைப் புலிகளின் மீதும், அதன் தலைவரான பிரபாகரனின் மீதும், விடுதலைப் புலிகளின் நிறுவன அமைப்பு வடிவத்தின் மீதுமே பிற ஈழ விடுதலை அமைப்புகள் சுமத்தின. புதிய தலித்தியர்களாகவும், ஜனநாயகவாதிகளாகவும் இவர்களில் பலர் புதிய அவதாரம் பூண்டனர்.

ஈழத்தில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வெளியான நூல்களில், முதல் கட்டத்தில், உலக விடுதலைப் போராட்ட அனுபவங்கள் தொடர்பான கோட்பாட்டு எழுத்துகள், குறிப்பாக வியட்நாம் மக்கள் போர், கியூப கெரில்லா போர் தொடர்பான எழுத்துகள் வெளியாகின.

புரட்சிகர நிறுவன வடிவம் தொடர்பான விவாதங்களைக் கொண்ட கோட்பாட்டு இதழ்களை இயக்கங்கள் வெளியிட்டன. சே குவேரா, ஜெனரல் கியாப் போன்றோரின் நூல்களும் சோசலிசத் தமிழீழம் நோக்கி எனும் நூலும், இயக்கங்களின் ஈழப் போராட்டம் தொடர்பான திட்டவரைவுகளும் இவற்றில் முக்கியமானவை.

எண்பதுகளின் முற்பகுதியில் பிற விடுதலை இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டன. இதையொட்டி, கருத்தியல் மேலாண்மை என்பதாக அல்லாமல், ஆயுத மேலாண்மையையும், ஏகப் பிரதிநிதித்துவத்தையும் நியாயப்படுத்தி விடுதலைப் புலிகள் வெளியிட்ட நூல்களும், அவர்களின் பத்திரிகை, சஞ்சிகைக் கட்டுரைகளும் வெளியான காலம் இரண்டாம் கால கட்டம். விடுதலைப்புலிகளின் நிறுவன, கருத்தியல் வெளிப்படைத் தன்மைகள் முழுமையாக இரகசியமாகின; படுகொலைக்கு ஆளானதால் பிற இயக்கங்களின் கருத்தியல், அரசியல் வெளிப்படைத்தன்மையும் ஈழத்தில் முழுமையாக முடிவுக்கு வந்தன என்று இக்கட்டத்தைச் சொல்லலாம். விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்படுவது மட்டுமே ஈழப் போரராட்ட வரலாறு என்றாகிய காலமும் இதுதான்.

பிற இயக்கங்களை விடுதலைப் புலிகள் அழிக்கத் தொடங்கியதை யடுத்து, படுகொலை செய்யப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களில் கணிசமான போராளிகள் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் பெறுகிறார்கள். எண்பதுகளின் மத்தியில் இருந்து தொண்ணூறுகளில் இவர்களிடமிருந்து நிறைய இலக்கிய அரசியல் கோட்பாட்டுச் சஞ்சிகைகள் வெளியாகின்றன. உயிர்ப்பு முதல் வியூகம் வரையிலான கோட்பாட்டுச் சஞ்சிகைகள் இக்காலகட்டத்தில் வெளியாகின்றன.

அரசியல், புரட்சிகர நிறுவனம், வெகுமக்கள் பிரச்சினை போன்றவை குறித்த கட்டுரைகள் இந்த இரு இதழ்களிலும் வெளிவந்தன. என்றாலும், இன்னும் காத்திரமாக நடந்திருக்க வேண்டிய, பின்சோவியத், பின் ஸ்டாலினிய, பின்செப்டம்பர், பின்புரட்சிகர சமூக அனுபவங்களையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் ஒப்பீட்டு ரீதியில் வைத்து, நிறுவனம், அரசியல், சர்வதேசியம், வெகுமக்கள், போராளிகள், புரட்சிகர அறம் போன்ற அடிப்படையான கேள்விகள் குறித்த விவாதங்கள் நடைபெறவேயில்லை.

எழுபதுகளில் முனைப்புப் பெற்ற ஈழ விடுதலை, தொண்ணூறுகளில் நுழைந்தபோது அது முற்றிலுமான புதிய சர்வதேசிய-தேசிய அரசியலில் நுழைந்தது. தொண்ணூறுகள் முதல் முள்ளிவாய்க்கால் பேரழிவு வரையிலான இருபதாண்டு காலகட்டத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் திசைவழி குறித்த கோட்பாட்டுப் புரிதல் கொண்ட எழுத்துகளை விடுதலைப் புலிகளும் உருவாக்கவில்லை; விடுதலைப் புலிகளை மையமாக வைத்து அவர்களை விமர்சிப்பதை மட்டுமே செய்து கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அல்லாதவர்களும் உருவாக்கவில்லை.

இந்தக் குறிப்பிட்ட முப்பதாண்டு காலகட்டத்தில், மரபான புரட்சிகர நிறுவன வடிவம் தொடர்பான அடிப்படையான கேள்விகள் எழுந்து விட்டிருந்தன. புரட்சிகர இயக்கங்களில், நிறுவனங்களில் ஜனநாயகம், மனித உரிமை பேணல் போன்ற விவாதங்கள் எழுந்து விட்டிருந்தன. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் புரட்சிகர வன்முறையின் பகுதியாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த எதிரியைப் பயமூட்டுதல், பயங்கரத்துக்கு உள்ளாக்குதல், ஆள்கடத்தல், எதிரித் தலைமையினரை அழித்தல் போன்றன இப்போது புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு முற்றிலும் புறம்பான, முழுமையான பயங்கரவாதமாக அடையாளம் காணப்பட்டன.

ஐம்பதுகளின் அறுபதுகளின் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீனமெரிக்க ஆயுத விடுதலைப் போராட்ட சமூகங்களும், இப்போதைய அரசுகளும், இன்றைய ஆயுத விடுதலை இயக்கங்களை முற்றிலுமாக மறுதலித்து விட்டிருந்தன. அனைத்துக்கும் மேலாக மார்க்சியர்கள் பேசிவந்த சர்வதேசியம் என்பது இப்போது அதன் கருத்தியல் கண்ணியை உதிர்த்து விட்டிருந்தது. இலங்கையின் இனக்கொலை அரசை கியூபா மூர்க்கமாகவும் உறுதியாகவும் ஆதரிப்பதை வேறு வகைகளில் நம்மால் விளக்கவே முடியாது. இந்தப் புதிய அரசியல் பிரக்ஞையுடன் ஈழ விடுதலைப் போராட்டம் மீளாய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அது எவராலும் முன்னெடுக்கப்பட இல்லை.

இதனோடு ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாறு, அரசியல், போராட்ட அனுபவங்கள் தொடர்பாக இதுவரையிலும் வெளியாகி இருக்கிற எழுத்துகள் எம்மாதிரியிலானவை என அவதானிப்பதும் இங்கு பொருத்தமானது. விடுதலைப் போரராட்டத்தின் வரலாறு என்பது அனுபவவாதமாக இருக்க முடியாது. போராட்டம் தொடங்கிய உலகு, அது செயல்போக்காக வளர்ந்து செல்லும் உலகு என்பது குறித்த வாசிப்பு சார்ந்த புரிதலுடன், தமது இருப்புசார் அனுபவத்தை இணைப்பது மட்டுமே அகமும் புறமும் இணைந்ததான ஒரு விடுதலைப் போராட்ட வரலாறாக இருக்க முடியும். இவ்வகையிலான ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு எழுதப்பட வேண்டியதன் வெற்றிடம் இன்றுவரையிலும் அப்படியே இருக்கிறது.

பிரான்ஸ் புஸ்பரராசா, கனடா செழியன், விடுதலைப் புலிகளின் தோற்றவியலாளர்களில் ஒருவரான கணேசன் ஐயர், பிரான்ஸ் புஸ்பரராணி போன்றவர்களின் நூல்கள் இத்திசை நோக்கிய நூல்கள் என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும். இவை அனைத்துமே ஆரம்பகாலப் போராட்ட அரசியல் குறித்தவை எனும் அளவில் முக்கியத்துவம் கொண்டவையே அல்லாது, தொண்ணூறுகளின் பிறகு நேர்ந்த அரசியல்-கருத்தியல் விவாதங்கள் இவர்களது பார்வையாக விரிவுபெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

 II

முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பது ஒரு முடிவு, பிறிதொன்றின் தொடக்கம். கூறியது கூறலும், நடந்தது அனைத்தும் நன்றாகவே நடந்தது என்பதும், நடந்தது அனைத்துமே தவறானது என்பதும் வரலாற்றை மறுக்கும் பார்வையாகும். ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தரவுகள், ஈழ விடுதலைப் போராட்டத்தை உணர்ச்சிகரமாக ஆதரித்த தமிழ்த் தலைமுறையினரை விரக்தியில் ஆழ்த்திவிடத்தக்கவை. விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களையே பிணைக்கைதிகளாகப் பயன்படுத்தியது, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் தமது உட்பகையைத் தீர்த்துக் கொள்ளத் தமது சக பெண்போராளியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை(1), சில விதிவிலக்குகள் தவிர அனைத்து விடுதலை இயக்கங்களும் அரசியல் மாறுபாடுகளுக்காகவும் தமது தலைமையைத் தக்கவைத்துக் கொள்ளவும் தத்தமது தோழர்களையே படுகொலை செய்தமை, போராட்டத்திற்கு நேரடியாகத் தொடர்பில்லாத மக்களைப் படுகொலை செய்தமை, இனச்சுத்திகரிப்பை ஒத்ததாக விடுதலைப் புலிகள் இஸ்லாமிய மக்களை வெளியேற்றியமை என இவை அனைத்துக்கும், விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அல்லாத இயக்கத்தவர்களும் தம்மை விமர்சனத்துக்கும் சுயவிமர்சனத்திற்கும் உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக தொண்ணூறுகளில் தொடங்கிய புதியதொரு அரசியல்-கருத்தியல்-நிறுவனப் பிரக்ஞையுடன் தமது அரசியலையும் அனுபவங்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கான ஆய்வுமுறையியலையும் நாம் கண்டடைய வேண்டும். அந்த முறையியலுக்கான மரபை வரலாற்று மார்க்சிய அனுபவங்கள் நமக்கு வழங்கியே இருக்கின்றன. அதனையே நாம் விமர்சன, சுயவிமர்சன மரபு என்கிறோம்: சமூக நடவடிக்கையின் அகநிலை அல்லது புறநிலைக் காரணங்களிலிருந்து எழும் முரண்பாடுகள், பிழைகள், குறைபாடுகள் ஆகியவற்றைக் கடந்து வருவதற்காக, அவற்றை ஒப்புக்கொண்டும் அவற்றை வெளிப்படுத்தியும் விரிவாக ஆய்வுசெய்தல் என்பதே விமர்சனம் மற்றும் சுயவிமர்சனத்தின் சாராம்சம்(2) என்பதுதான் அந்த மார்க்சிய மரபு.

 III

2009, மே 18இல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரழிவை ஒட்டி ஜூன் 2009 உயிர்மை இதழில் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் என ஒரு கட்டுரையை எழுதினேன். அதன் பின்பாக, ஈழ விடுதலைப் போராட்டத்தின் போதான உலகு, அது வளர்ந்து நகர்ந்த உலகு, முள்ளிவாய்க்காலின் பின்னான இன்றைய உலகு எனும் பின்னணியில், இலங்கை, இந்தியா, தமிழகம், புகலிடம், ஈழம் என அனைத்து நிலப்பரப்புகளிலும் நடந்தனவும், நடப்பனவும் குறித்துக் கூர்மையாக அவதானிக்க முயன்றதன் விளைவாக, மூன்று ஆண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகளே இந்தத் தொகுப்பாக ஆகியிருக்கிறது.

இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் சில ஆதாரங்களை முன் நிறுத்திய ஆய்வெழுத்துகளாக முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக சர்வதேசச் சூழல், இலங்கை-இந்திய இடதுசாரிகளின் பார்வைகள், எஸ்.வி. ரராஜதுரையின் சர்வதேசியம், உலக விடுதலை இயக்க அனுபவங்களும் விடுதலைப்புலிகளும், விடுதலைப் புலிகளின் சாதி, உலக அளவிலான ஆவணப்படங்கள், சர்வதேசிய அமைப்புகளின் ஆய்வு அறிக்கைகள் ஆகியவை எனது முழுமையான ஆதார வாசிப்பின் அடிப்படையில் அமைந்த கட்டுரைகள். மார்க்சிய மரபில், எழுத்து-வாசிப்பு-அனுபவம் என்பவற்றுக்கான ஒருவரது எதிர்விணையாக உருவாகி வந்த கோட்பாட்டு எழுத்துகள் கணிசமானவை. இவ்வகையில் பிற கட்டுரைகள், குறிப்பாக தமிழக-ஈழ இலக்கியவாதிகள், அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, ஷோபாசக்தி போன்ற தமிழக, புகலிட, ஈழ மாற்றுக் கருத்தாளர்கள், தயான் ஜயதிலக, ரோஹன் குணரட்ண, ரஜீவ விஜேசிங்க போன்ற இலங்கை அறிவுஜீவிகள், தமிழக தலித்திய மற்றும் தமிழ்த் தேசியர்கள், பின்முள்ளிவாய்க்கால் யதார்த்தம் போன்றன விவாத எதிர்வினையாகவே உருக்கொண்ட கட்டுரைகள்.

எனது வாசிப்பிலிருந்தும், எனது விவாத எதிர்வினைகளிலிருந்தும் நான் அறுதியாகப் புரிந்துகொண்டவை என என்னால் சில விஷயங்களைச் சொல்ல முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈழப் பிரச்சினை குறித்த எந்த அடிப்படையான புரிதலும் எப்போதுமே இருந்திருக்கவில்லை என்பது எனது புரிதலாக இருக்கிறது. ஈழ மக்களிடையில் வெகுஜன வாக்கெடுப்பைத் தாம் நிராகரிக்கிறோம் என்று சொல்வதற்கான தகைமை தமது (இந்திய நிலம் சார்ந்த) கட்சிக்குக் கிஞ்சிற்றும் இல்லை என்கிற அரசியல் அடிப்படைகூடத் தெரியாத இவர்களை, எவ்வாறு சர்வதேசியம் பேசுகிற ஒரு புரட்சிகரக் கட்சியாக ஏற்க இயலும்? எனக்கு மிக அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் தந்தவை பின்முள்ளி வாய்க்கால் குறித்த அ.மார்க்சின் கூற்றுகளும், எஸ்.வி.ராஜதுரையின் கூற்றுகளும்தான். மார்க்சியத்தின் போதாமை குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தத்துவத் தேட்டமின்மை குறித்தும் எழுதியவர்கள் இவர்கள்.

குஷ்பு மீதான தாக்குதல் முதல் வேளச்சேரி என்கவுன்டர் வரை குரல் தரும் மனித உரிமையாளரான அ.மார்க்ஸ், 40,000 ஈழ வெகுமக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரச்சினை குறித்துப் பேசும்போது, இலங்கை அரசின் மீது இனக்கொலை விசாரணை தொடங்கக் கோர முடியாததற்குச் சொல்கிற காரணங்களும், இலங்கையில் பகைமறப்புச் செயல்பாடு குறித்த அவரது தீர்க்கதரிசனமும் இவ்வாறு இருக்கிறது:

சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் நிறுத்திவைத்திருந்த உண்மையை உலகின்முன் யாராலும் மறைக்க இயலவில்லை. இதன் விளைவாகவே ராஜபக்சே அரசு நடத்திய இனப்படுகொலை சர்வதேசிய அரசியலகராதியில் 'இனப் படுகொலையாக' இடம்பெற இயலாமலும் போனது. மக்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டதனாலேயே 'நியூரம்பர்க்' மாதிரியிலான விசாரணை ஒன்றிற்கும் இன்று வழியேயில்லாமல் போயுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பகை மறப்புச் செயல்பாடுகள் ஒன்றே இன்று இலங்கையில் காரிய சாத்தியமாக உள்ளது(3).

2009ஆம் ஆண்டு இவ்வாறு எழுதுகிற அ.மார்க்ஸ், அவர் தலைமையேற்ற வேளச்சேரி என்கவுண்டர் உண்மைகாண் குழுவின் அறிக்கையில் கரிசனையுடன் சொல்வதைப் பாருங்கள்:

சந்தேகத்திற்குரிய ஐவரையும் உயிருடன் பிடித்திருக்கலாம், பிடித்திருக்க வேண்டும். அப்போது பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கும்.

சந்தேகத்திற்குரிய ஐவர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பது அற மற்றும் சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமல்ல புலனாய்வு நோக்கிலும் தவறானது. கொள்ளைக் கும்பலின் வீச்சு, தீவிரவாதத் தொடர்பு எனப் பல உண்மைகளை அறியக்கூடிய வாய்ப்பு இவர்கள் கொல்லப்பட்டதன் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் பங்கு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்(4).

 'தீவிரவாதத் தொடர்பு' குறித்த 'உண்மைகளை அறிய முடியாமல்' போய்விட்டதற்காக அக்கறைப்பட்டு, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோருகிறார் அ.மார்க்ஸ். நல்லவேளை, கொல்லப்பட்டவர்கள் 'கொள்ளையர்கள்' என்பதால் 'அவர்களது கொலைக்கு நீதி கேட்க முடியாமல் போய்விட்டது' என அவர் இங்கு விவாதிக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் தொடர்பாக அ.மார்க்ஸின் புரிதலிலுள்ள கோளாறு என்னவென்றால், விடுதலைப் புலிகளுக்கும், அரசினால் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட வெகுமக்களுக்கும் வித்தியாசம் காண முடியாமல் போனது அவரது முதல் கோளாறு. கார்டன் வைஸின் கூண்டு நூல், ஐநா வல்லுநர்குழு அறிக்கை, நோர்வே அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை என அனைத்தும் சொல்வது என்ன? மகிந்த கோதபாய சகோதரர்களின் நேரடி வழி காட்டுதலில் செயல்பட்ட இலங்கை இராணுவம் ஈழத்தமிழ் மக்களைத் திட்டமிட்டுப் பட்டினி போட்டு, மருந்து தராமல், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொன்றது என்பதுதான். சரணடைந்தவர்களையும், பிரபாகரனின் 12 வயது மகன் உள்பட, போர்க் கைதிகளையும் இலங்கை இராணுவம் படுகொலை செய்து எரித்தது என்பதுதான்.

இவை தொடர்பான மனித உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், புலிகள் மக்களைப் பிணைக்கைதிகளாக வைத்திருந்ததற்கும் என்ன தொடர்பு? உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும், ஐநா மனித உரிமை அமைப்பும் இலங்கை அரசின் பொறுப்புக் கூறலும் போர்க்குற்றமும் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது நமது பின்நவீனத்துவர், மனித உரிமைப் போராளி, பகைமறைப்புப் பற்றித் தமிழ் மக்களுக்கு வேதம் ஓதிக்கொண்டிருக்கிறார்.

நடைமுறையில் மகிந்த ராஜபக்சேவுக்கும் அ.மார்க்சுக்கும், போரின் இறுதியில் தமிழ் மக்கள் எவரும் அரசினால் கொல்லப்படவில்லை என அருள்வாக்குப் பாலித்த இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் என்னால் எதுவும் வித்தியாசம் காணமுடியவில்லை.

அடுத்து வருகிறவர் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் போதாமையைத் தமது மார்க்சிய வாசிப்பினால் நிரவி வருகிற எஸ்.வி.ராஜதுரை தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் வசைபாடிக் கொண்டிருந்தவர், முள்ளிவாய்க்காலுக்குக் கொஞ்சம் முன்னால் தலைகீழாகி, தமிழீழப் போராட்டம் சரிவராது என இலங்கை சென்று இரகசியமாகக் கிசுகிசுக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளைக் காட்டிலும் மிகப்பழம் வைதீக மார்க்சியராக அவர் இவ்வேளை பரிமாணம் எடுக்கிறார். இலங்கையின் நிலைமையில் சாத்தியமேயில்லாத இத்தொகுப்பிலுள்ள இலங்கை, இந்திய மார்க்சிஸ்ட்டுகள் மற்றும் இலங்கை அறிவுஜீவிகள் குறித்த எனது கட்டுரைகளில் ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன தனது மனோரதக் கனவுகளையும் அவாவையும் காவியபடி, முப்பதாண்டுகால உலக, புரட்சிகர அரசியலின் அனுபவங்களையே மறந்தபடி, அவர் ஈழப் போராட்டத்திற்கான வழிமுறையை இப்படி உபதேசிக்கிறார்:

அவர்களது விடுதலை வேட்கை மீண்டும் கிளர்ந்தெழுகையில், அவர்கள் இலங்கைத்தீவிலுள்ள சிங்கள முஸ்லிம் உழைக்கும் மக்களுடனும் தென்னாசியப் பகுதியில்,குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள உழைக்கும் மக்களுடனும் தங்களை இணைத்துக் கொள்ளும் போராட்ட வடிவத்தை மேற்கொள்வார்கள் என்று கருதலாம். எனினும் இந்தப் பிரதேசம் முழுவதையும் தழுவக்கூடிய அகநிலைச் சக்திகள் கருத்து நிலையிலேயே உள்ளன என்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளை, அவை உறுதியான உருத்தோற்றம் கொள்ள வேண்டும் எனும் நமது அவாவையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை(5).

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.யூ. குணசேகரா, சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார, கியூப விடுதலையின் ஆராதகரும் பரந்துபட்ட மார்க்சிய வாசிப்பாளருமான தயான் ஜயதிலக, சே குவேரா மரபாளர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஜேவிபியினர் எனத் தென்னிலங்கை சிங்கள மார்க்சியர் அனைவருமே சிங்கள இனவாதிகளாகவும், இலங்கை இராணுவத்தின் காதலர்களாகவுமே இருக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் இலங்கை தேசபக்தத் தலைவன் மகிந்த ராஜபக்சே என்பதே அறுதியில் இவர்களின் நிலைப்பாடு. இந்த நிலைமையில் தமிழர்களின் உரிமைகள் பற்றிப் பேசவும், அவர்களுடன் சேர்ந்து செயல்படுவதும் இவர்களுக்கு எப்படிச் சாத்தியம்? இன்றைய நிலைமையில் தமிழ் மக்களின் சார்பு நிலையிலிருந்து பேசுகிற இரு மார்க்சியர்களில் ஒருவர் நவ சமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு; பிறிதொருவர் சோசலிஸ்ட் கட்சித் தலைவர் ஜெயசூரிய மட்டுமே. தென்னிலங்கையில் இவர்கள் பெரும் அரசியல் செல்வாக்குள்ள ஆளுமைகள் இல்லை. இதுவன்றி தமிழ்மக்களின் மீது பரிவுகொண்ட ஊடகவியலாளர்களும் மனித உரிமையாளர்களும் அரசின் கடும் ஒடுக்குமுறைக்கும் உயிர்அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி நாட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள். இந்த நிலைமையில் எஸ்.வி.ராஜதுரை விரும்பும் ஒற்றுமை அரசியல் என்பது வெறும் பகல்கனவே அன்றி வேறில்லை.

 IV

விடுதலைப் புலிகளின் அமைப்பிலுள்ள, வேறுபட்ட போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லா அணிகளின் அறிக்கைகளும், தனிநபரின் ஆணைகளுக்கு, அதாவது தலைவர் பிரபாகரனின் ஆணைகளுக்கு ஏற்பவே தமது இயக்கங்கள் செயல்பட வேண்டும் எனும் எண்ணப் போக்கையே முன்வைக்கின்றன. இச்சூழலில், அமைப்பில் ஜனநாயகம் அதைக் கீழிருந்து உருவாக்குவது என்பதற்கான எந்தச் சான்றையும் விடுதலைப் புலிகளை நிழலாக இருந்து நடத்துபவர்களிடம் காண முடியவில்லை. விடுதலைப் புலிகளின் அமைப்பு சார்ந்த கருத்தியலுக்குள், உள்ஜனநாயகத்தை ஏற்பது என்றும் சாத்தியமில்லை.

தமது விடுதலைக்குத் தமது மக்களையும் தமது அரசியலையும்தான் ஒரு புவிப்பரப்பில் இயங்குகிறவர்கள் கொண்டிருக்க வேண்டும். தமது விருப்பப்படிதான் பிறநாடுகளும் பிற அரசியலாளர்களும் இயங்க வேண்டும் எனக் கருதுவது சாத்தியமே இல்லை. முரண்களுக்குள் தமது அரசியலைத் தமக்குச் சாதகமாகக் கொண்டுபோவதற்கான சாத்தியங்களையே ஒருவர் தேட வேண்டும். தாம் நினைத்தபடி பிறரை நிர்ப்பந்திப்பதோ, இயலாதபோது படுகொலை செய்வதோ ஒருவரை அரசியலில் எங்கும் கொண்டு சேர்க்காது.

ஆயுத விடுதலைப் போராட்டம் காலாவதியாகி விட்டதா என்பது நம்முன் எழுந்து நிற்கும் மிக முக்கியமான ஒரு கேள்வி. உலகில் இன்றும் சில நாடுகளில் ஆயுத விடுதலைப் போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 21ஆம் நூற்றாண்டில் ஆயுத விடுதலைப் போராட்டங் களின் தன்மை எவ்வாறாக இருக்கும் என அமெரிக்காவும் அதற்கு எதிரான தந்திரோபாயங்களைத் திட்டமிடுகிறது. அமெரிக்காவின் முன்னறிவிப்பின்படி 21ஆம் நூற்றாண்டில் இனம், மதம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் ஆயுத விடுதலைப் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். அவற்றைத் தகவல் தொழில் நுட்பத்தின் ஊடாட்டம், வேகம், குறிதவறாமை, எந்திரனைப் பயன் படுத்துதல், சிறிய வகைமாதிரி கொண்ட முன்கூட்டித் திட்டமிடல் எனும் வகையில் அரசுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்கப் படையினர் அனுமானிக்கிறார்கள்.

ஆயுத விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கான பதில்கள் மிகச் சிக்கலானவை. முதலாவது ஆயுத விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான வெளி சக்திகள் இன்று இல்லை. ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் சக்திகள், மக்கள் மத்தியில் தாம் கலக்காமல் அரசுகளுக்கு இராணுவ, தார்மிக நெருக்கடியை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. மக்களின் உயிர் அழிவுகள் பெருமளவில் இல்லாமல் போராளி அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்திச் செல்வதும் சாத்தியம் இல்லை. மக்களி லிருந்து எப்போது ஒரு தனித்த படையாக அவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்களோ அவ்வேளையில் அரசபடையினரின் வலிமையான இராணுவத்தை அவர்கள் எதிர்கொள்வது இயலாமல் போகும்.

இன்று, தத்துவம், கருத்தியல் என்பதற்கு அப்பால் உலக நாடுகள் அனைத்தும் ஆயுத விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறது. ஆயுதப் போராட்டம் குறித்த கேள்விகளை இப்படித்தான் கேட்கலாம்: ஆயுதப் போராட்டங்கள் இனி வெற்றிபெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? அரசியல் வெற்றி அல்லது அதிகாரத்தை வெற்றிகொள்வதற்கான சாத்தியங் களையும் சாத்தியமின்மைகளையும் தாண்டி, ஆயுதப் போராட்ட இயக்கங்கள் எழுவதைத் தவிர்க்கும் வகையில் இன்றைய உலக நெருக்கடிகள் இருக்கின்றனவா?

V

தமிழ்த் தேசிய அரசியல் என்பது அது ஈழ தேசிய அரசியலாயினும் தமிழ்த் தேசிய அரசியலாயினும், விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகள் குறித்த எந்த ஒப்புக்கொள்ளலையும், பொறுப்புக் கூறலையும் இவர்கள் ஏற்பது இல்லை. வெகுமக்களுக்கும் இவர்கள் பேசும் விடுதலை அரசியலுக்கும் இடையிலான உறவு என்பது, வெகுமக்களைத் தமது பொறுப்பில் விடப்பட்ட பிரக்ஞையற்ற உயிரிலிகளாக, வெறும் ஜடங்களாகக் கருதும் போக்கு ஆகும். இந்தப் புரிதலில் இருந்துதான் அவர்கள் வெகுமக்களைப் பிணைக்கைதிகளாக்கும் கருத்துநிலையைப் பெறுகிறார்கள்.

புகலிட விடுதலைப்புலி ஆதரவாளர்களாயினும் தமிழகத் தமிழ்த் தேசியர்களான தியாகு, சீமான், மணியரசன் போன்றவர்கள் ஆயினும் அனைவருமே இத்தகைய பார்வை கொண்டவர்களாகவே இன்றளவிலும் இருக்கிறார்கள். இலங்கை அரசின் பொறுப்புக் கூறல் குறித்து சர்வதேச மனித உரிமை அறிக்கைகளையும், ஐநா அறிக்கையையும், சேனல் நான்கு ஆவணப் படங்களையும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.

ஆனால், அதே அறிக்கைகளும், ஆவணப் படங்களும் விடுதலைப் புலிகளால் தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் கடப்பாட்டை முன்வைக்கின்றன. இவர்கள் அதை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை (நேரடியாக இச்செயல்களில் ஈடுபட்டவர்கள் முழுமையாகக் கொல்லப் பட்டுவிட்டார்கள்), ஆனால், அந்த அரசியலின் தொடர்ச்சியைப் பேணுபவர்கள் எனத் தம்மைக் கோரிக்கொள்கிறவர்கள் குறைந்தபட்சம் தாம் ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்த தீமைகளையும், மனித உரிமை மீறல்களையுமாவது ஒப்புக் கொள்ள வேண்டும்.

 இந்த ஒப்புக்கொள்ளல், இந்த சுயவிமர்சனம், எதிர்காலத் தமிழ் எதிர்ப்பு அரசியலின் ஜனநாயகப் பண்புகளுடனும் வெகுமக்களுடனான உறவுடனும் தொடர்புடையது எனும் அளவில் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதே முரண்தன்மை கொண்டதுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பாகப் பேணி வளர்க்கப்பட்டு வரும் நம்பிக்கையும். இதன்மூலம், முள்ளிவாய்க்காலின் பின்பான உலகு தழுவிய யதார்த்த அரசியலை முன்னெடுப்பதற்கான வெகுமக்களின் அரசியல் ஓர்மையை இத்தகைய ஐதீக மனநிலை பின்தள்ளிவிடும் ஆபத்தை இவர்கள் திட்டமிட்டு வளர்த்து வருகிறார்கள். இத்தகைய மனோரத அரசியல் ஈழமக்களின் போராட்டத்தை முன்னுந்திச் செல்வதை விடவும், இலங்கை அரசின் கடுமையான அரசியல் திட்டங்களையே முன்னெடுத்துச் செல்லப் பயன்படும். முள்ளிவாய்க்காலின் பின்னான அரசியல் யதார்த்தம் இதையே சுட்டிநிற்கிறது.

வடக்கு கிழக்கை நிரந்தரமாகவும் முழுமையாகவும் இராணுவ மயப்படுத்தும் திட்டத்தில் இலங்கை அரசு உள்ளது. நடக்கவேண்டிய போராட்டம் வடகிழக்கு மண்ணில்தான் எனும் யதார்த்தத்தை முன்நிறுத்தி நோக்கும் போது, இனியொரு ஆயுதப் போராட்டத் திற்கான சாத்தியம் வடகிழக்கு தழுவிய வகையில் இன்று இல்லை.

எதிர்கால ஈழ அரசியல் என்பது புதிய கருத்துக் களங்களையும் புதிய மொழியையும் கொண்டதாகவே இருக்கமுடியும். இதற்கான முன்நிபந்தனையாக, சர்வதேச அரசியலைக் கவனங்கொண்ட விமர் சனத்தையும், தனது போராட்ட அனுபவங்களின் மீதான சுயவிமர்சன அரசியலையும் ஈழ எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் கோரி நிற்கிறது.

 2009, மே 18 முதல் இந்த முன்னுரை எழுதப்படும் 2012, டிசம்பர் 15 வரையிலான காலகட்டத்தில் இத்தகைய எழுத்துகள் வெளியாகி இருக்கின்றனவா? வெகுசொற்பமான, வெளிப்படைத்தன்மையற்ற, கருத்துகளுக்குப் பொறுப்புக் கோரப்படாமல் அநாமதேயமாகச் சில கட்டுரைகள் இந்நோக்கில் எழுதப்பட்டிருக்கின்றன. வசவுகள் இணையதளப் பின்னூட்டங்களாகக் குவிந்துகிடக்கின்றன. பகடிக் கட்டுரைகளும், நான் கடவுள் மற்றவன் சாத்தான் வகைக் கட்டுரைகளும் நூற்றுக்கணக்கில் அவதூறுகளின் மொழியில் அணிவகுத்து நிற்கின்றன. தமது கருத்துகளுக்குப் பொறுப்பேற்காதவர்களால் எழுதப்படும் இத்தகைய எழுத்துகளில் எந்தவிதான சுயவிமர்சனங்களையும் நாம் காண்பதற்கான சாத்தியம் இல்லை.

 VI

தம்முடைய நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு, துரோகம் இழைக்கப்பட்டு, துடிதுடித்து இறந்தவர்களைக் கண்ட தப்பிப்பிழைத்தோருக்கு இதனால் ஆறுதல் கிடைக்கப்போவ தில்லை. அவர்கள் பட்டினியால் தளர்ந்து அழுக்கேறிக் குழிகளில் பதுங்கி வாழ்ந்தவர்கள். தாக்குதல்களின் இடைவெளியில் வலுவற்ற பாதுகாப்பு அரண்களிலிருந்து வெளியேறிச் சிதறிக்கிடக்கும் உடற்பாகங்களை நாய்கள் தின்பதற்கு முன்னர் தேடிப்பிடித்துப் புதைத்தார்கள். குடும்பங்கள் விரக்தியின் உச்சத்தில் இருந்தன; அனைவரும் ஒட்டுமொத்தமாக விரைவில் சாகடிக்கப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டனர். அன்பான பெற்றோர்கள் தப்பிப் பிழைப்பதற்கு எந்த வாய்ப்புமில்லை என்று தோன்றியதால் குழந்தைகளுடன் மொத்தமாகத் தற்கொலை செய்துகொள்ள எண்ணினார்கள். மே 2009 வாக்கில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் கைவிட்டு விட்டு ஓடினார்கள். துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தப்பிப்பிழைக்க பிணங்களை மிதித்தும் தாண்டியும் ஓடினார்கள். யுத்த களத்தி லிருந்து அவர்கள் தப்பியதும் ஐநா பணத்தில் கட்டப்பட்ட தரமற்ற இடைக்கால முகாம்களில் கைதுசெய்து அடைக்கப்பட்டார்கள்.

 மேலே கண்ட சொற்கள் இலங்கையில் தமது அமைப்பின் செயல் பாடுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை சொல்வதற்காக ஐநாவின் மூத்த ஆய்வாளர் சார்லஸ் பெட்ரி தலைமையில் அமைக்கப்பெற்ற நால்வர் குழு அறிக்கை(6) குறித்து பிரான்செஸ் ஹாரிசன்(7) சொன்னவை. பிரித்தானிய ஊடகவியலாளரான பிரான்செஸ் ஹாரிசன் 2009 மே காலகட்டத்தில் நேர்ந்த மானுடப் பேரழிவு குறித்து மரணமுற்றவர்களை இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்(8) எனும் முழுமையான நூலை எழுதியவர்.

இந்த அறிக்கை குறித்துப் பேசும்போது இலங்கைப் போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறி யுள்ளது என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பாக ஐநா தனது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சார்லஸ் பெட்ரி தலைமையிலான குழுவினர் 2012ஆம் ஆண்டில் எட்டு மாதங்கள் விசாரணை நடத்தி இந்த அறிக்கையை தயாரித் துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் பேரவை, மனித உரிமைப் பேரவை, ஐநா செயலகம் போன்ற முகவர் நிறுவனங்கள் உரிய முறையில் தமது கடமைகளைச் செய்யவில்லை என பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை முரண்பாடுகள் நிலவும் நாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு தொடர்பான பாடங் களைக் கற்றுக்கொடுத்துள்ளதாக பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து ஆராய சிறப்புக் குழுவை ஐக்கிய நாடுகள் அமைப்பு நியமித்துள்ளது.

128 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 7,000 ஆவணங்கள் குறித்த ஆய்வறிக்கை என சார்லஸ் பெட்ரி குறிப்பிடுகிறார். இந்த அறிக்கை யில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கொள்கை வகுப்புக் குழுவின் கூட்டப் பதிவுகள் முழுமையாகக் கறுப்பு மையினால் (பக்கங்கள் 11, 15, 88, 92, 93, 95, 96) அடிக்கப் பட்டிருக்கின்றன.

பிரான்செஸ் ஹாரிசன் சொல்கிறபடி

'சார்லஸ் பெட்ரி தயாரித்த இந்த அறிக்கையின் முன்வரைவிலுள்ள தொகுப்புரையை ஐநா நீக்கிவிட்டது. அப்பகுதி, ஐநா பாதுகாப்புக் குழுவும் செயலகமும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஐநாவின் இலங்கைக் குழுவின் ஒத்துழைப்போடு உரக்க அறிவித்திருந்தால் பல்லாயிரம் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமென்று பலர் நம்பு கிறார்கள் என்று கூறுகிறது. ஐநாவின் பன்னாட்டு ஊழியர்கள், இலங்கை யில் பெரும் பான்மையான மக்களின் படுகொலைக்கு இலங்கை அரசுதான் காரணம் எனக் கூறினர்; ஆயினும் ஐநா உயரதிகாரிகள் விடுதலைப் புலிகளையே தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்கள் என்பதை பெட்ரியினுடைய அறிக்கை தெளிவாக வெளிப்படுத்தி யுள்ளது. இந்தப் பக்கச் சார்பு இலங்கைப் போர் குறித்த உலகளாவிய ஊடகங்களில் ஒரு பக்கச் சார்பான செய்திகள் வெளிவருவதற்குக் காரணமாக அமைந்தது. ஏனெனில், இந்தச் சார்புநிலை மிகுந்த செல்வாக்கும் நம்பிக்கைக்குரியதுமான ஐநாவிலிருந்தே உருப்பெற்றது'.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஐநா உறுப்பு நாடுகளால் பாகாப்புச் சபை, மனித உரிமைச் சபை, பொதுச்சபை போன்றவற்றினால் ஒரே ஒரு கூட்டம்கூட இலங்கைப் பிரச்சினை குறித்துக் கூட்டப்படவில்லை என அறிக்கை தெரிவிக்கிறது. உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்பாகத் தாம் விரும்பிய செய்திகளைத்தான் கேட்க விரும்பியதே யொழிய, உண்மையில் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என அறிந்து கொள்ள விரும்பவில்லை எனத் தெளிவாக அறிக்கை குறிப்பிடுகிறது.

 பாதுகாப்புச் சபையில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பல உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் அவை எவற்றுக்கும் எழுத்துபூர்வமான பதிவுகள் ஏதும் இருக்கவில்லை எனவும் (பக்கங்கள் 16,19, 20) அறிக்கை குறிப்பிடுகிறது. அறிக்கையின் மிக முக்கியமான வெளிப்பாடுகள் குறித்து பிரான்செஸ் ஹாரிசன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

இலங்கை உள்நாட்டுப் போரில் ஐநாவின் செயல்பாடு 'மோசமான தோல்வி' இனி 'மீண்டும் அப்படி நடக்கக்கூடாது' என்று இந்த உள் ஆய்வறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ருவாண்டாவில் ஐநாவின் முந்தைய செயல்பாட்டைக் குறிப்பிட்டு அங்குக் கற்றிருக்கவேண்டிய பாடங்களைக் கற்கவில்லையென்றும் அவை இலங்கைக்குப் பொருந்தக்கூடியவை என்றும் கூறுகிறது.

சிரியா விஷயத்திலாவது இலங்கையின் படிப்பினைகள் பயன்படு மென்று நம்புவோம்... மேலும் அந்த அறிக்கை 'கொழும்பில் மேலதிகாரிகள் பலர் படுகொலையைத் தடுப்பது தங்கள் கடமை யென்றே நினைக்கவில்லை' எனக் குற்றஞ்சாட்டியுள்ளது. இது ஆகக் கடுமையான விமர்சனம். ஆனால் இது எப்படி நடந்தது, ஏன் அவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதற்கான காரணங்களை ஏற்கவே முடியவில்லை.

 மரணம் அடைந்தவர்களின் பட்டியலையும், காயம் அடைந்தவர் களின் பட்டியலைரையும் 2009, மார்ச் 9ஆம் நாள் ஐநாவின் பணியாளர்கள் தயாரித்தனர். ஆனால் அந்தப் பட்டியலையும் வெளியுறவுத் துறையினருக்கான செய்தி அறிவிப்பையும் ஐநா வெளியிடவில்லை. அந்தச் செய்தி அறிவிப்பு, 'ஐநா பதிவுசெய்த கிட்டத்தட்ட அனைத்துப் பொதுமக்களின் படுகொலைக்கும், படுகாயங்களுக்கும் இராணுவத் தாக்குதல்களே காரணம்' என்று குறிப்பிடுகிறது. மேலும் பொது மக்களின் பாதுகாப்புக்காக அரசு வாக்களித்த 'பாதுகாப்பு வளைய'த்திற்கு உள்ளேதான் படுகொலை களில் மூன்றில் இரண்டு பங்கு நடக்கிறது என்பதை ஐநா அம்பலப்படுத்தத் தவறியது. இதற்கு மூன்று நாள்களுக்குப் பின்னர் இலங்கைக்கான ஐநாவின் வசிப்பிடப் பிரதிநிதி நீல் புஹ்னேயும் துணைச் செயலாளர்கள் பலரும் அவர்கள் சேகரித்த படுகொலை, படுகாயம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த மறுத்து அவை சரிபார்க்கப்பட வேண்டியவை என்று கூறினார்கள். சார்லஸ் பெட்ரி தமது அறிக்கையில் இதைச் செய்தி அறிவிப்புகளில் ஐநா 'யதார்த்தத்தை எதிர்கொள்ள மறுத்தது' என மழுப்பலாகக் குறிப்பிடுகிறார்.

ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றிப் பேச முனைந்த போது பான் கி மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார், நவி பிள்ளை அறிக்கையின் கடுமையைக் குறைக்க அவரைரக் கட்டாயப் படுத்தினார் என்பதை இவ்வறிக்கையின் பின்னிணைப்புகளில் அந்தரங்கச் செய்திப் பரிமாற்றங்களில் காணமுடிகிறது. நவி பிள்ளை யின் அறிக்கைகள் இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் ஒரே மட்டத்தில் வைத்துப் பார்ப்பதாகவும் விஜய் நம்பியார் புகார் கூறியுள்ளார்... உண்மையில் அந்தக் காலகட்டத்தில் நவி பிள்ளை தன் அறிக்கையில் குறிப்பிட்ட படுகொலை, படுகாயங்களின் எண்ணிக்கை குறைந்த மதிப்பீடுதான் என்பது ஐநாவுக்கே தெரியும்.

தற்போது அதே காலகட்டம் பற்றி சார்லஸ் பெட்ரியின் அறிக்கை குறிப்பிடும் எண்ணிக்கை அப்போது நவி பிள்ளையின் அறிக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட மிக அதிகம். அதாவது படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,687. படுகாயம் அடைந்தவர் களின் எண்ணிக்கை 10,067.

 இந்த எண்ணிக்கை போர்ப் பகுதியில் பணியாற்றிய பாதிரியார்கள், தமிழ் மருத்துவர்கள், என்ஜிஓ பணியாளர்கள் மற்றும் புலிகளால் பிடித்துவைக்கப்பட்ட ஐநா பணியாளர்களால் சேகரிக்கப்பட்டவை.

எல்லாச் சுதந்திர பார்வையாளர்களுக்கும் போர்ப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே சில ஊக்கமுள்ள ஐநா பணியாளர்கள் தொலைதூரத் தகவல் சேகரிப்புக் குழுவை உருவாக்கிக் கொழும்பி லிருந்தவாறே எல்லாச் செய்திகளையும் உறுதிப்படுத்தி வந்தார்கள்.

அவர்கள் தயாரித்த படுகொலை, படுகாயம் அடைந்தவர்கள் பட்டியல் என்பது மூன்று வேறுவேறு நபர்களிடமிருந்து வந்த தகவல் களை உறுதிப்படுத்தித் தொகுக்கப்பட்டது. பெட்ரி அறிக்கை, இது மிகச் சிறந்த செயல் முறையைக் கொண்ட அருமையான நடைமுறை என்று கூறுகிறது. இந்த வழிமுறையில்தான் ஏப்ரல்வரை 8,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஐநா உறுதிப் படுத்திக்கொண்டது. அதன் பின்னர் கடுமையான தாக்குதல்களுக் கிடையில் பதுங்கு குழிகளுக்கு வெளியே வந்து தகவல்களை உறுதிப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிட்டது.

 படுகொலை செய்யப்பட்டவர்கள், படுகாயம் அடைந்தவர் களின் எண்ணிக்கை குறித்து ஐநா பணியாளர்கள் தயாரித்த அறிக்கையைப் போர்ப் பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க ஐநா தூதர்களே ஏற்க மறுத்து அதன் நம்பகத் தன்மையைத் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தினார்கள் என்பதை இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிரியாவிலோ ஆப்கானிஸ்தானிலோ குறிப்பிடப்பட்ட படுகொலை எண்ணிக்கை சேகரிக்கப்பட்ட முறையைவிட இந்தத் தகவல்கள் அதிக கவனத்துடன் சரிபார்த்துத் தயாரிக்கப்பட்டவை என்பது கணக்கில் கொள்ளப்படவில்லை.

அத்தோடு தொடர்ந்து இலங்கைப் போர் பற்றிய அதிகாரப் பூர்வமான ஆவணங்களில் ஐநா குறிப்பிடும் 1,00,000 மரணங்கள் என்ற எண்ணிக்கையும் கணக்கிலெடுக்கப்படவில்லை.

பெட்ரி அறிக்கையின் பின்னிணைப்புகளில் படுகொலை, படுகாயம் பற்றி அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் புதைந்து கிடக்கின்றன.

2009இல் களத்திலிருந்த ஐநாவின் தகவலாளர்கள் 17,810 பேர் கொல்லப்பட்டதாகவும் 36,905 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் கொடுத்துள்ளனர். ஐநா குழு இந்த எண்ணிக்கையைப் பாதிவரை சரிபார்த்ததில் இந்த எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப் பட்டுள்ளது என்பதை உணர்ந்தார்கள்.

 இந்தப் படுகொலையின் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கை அன்றே அம்பலப்பட்டிருந்தால் உலக சமுதாயம் இலங்கை அரசைக் கண்டித்திருக்கும். பல மரணங்களையும் போருக்குப் பிந்தையப் பல அத்துமீறல்களையும் நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். பின்னர் ஒரு ஐநா அறிக்கை 40,000 பேர்வரை கொல்லப்பட்டார்கள் என்னும் தகவல் நம்பகத்தன்மை கொண்டதுதான் என்று கூறுகிறது.

பெட்ரியின் அறிக்கை இந்த எண்ணிக்கையையும் தாண்டிக் கடைசி ஐந்து நரக மாதங்களில் 70,000 பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.

இவ்வளவு பெரிய தவறுகள் எவ்வாறு நேர்ந்தது என்பது குறித்தும் அறிக்கை சில கருத்துகளைக் குறிப்பிடுகிறது.

அறிக்கை இரண்டு பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறது. 'பாதுகாத்தல்' எனும் சொற்றொடர் மற்றும் கருத்தாக்கம் தொடர்பான மயக்கம் புரியாமை ஐநா ஊழியர்களுக்கு இருந்தது. உளவியல்சமூகக் கவனிப்பு, பொழுதுபோக்கு, ஊழியர் பயிற்சி, உணவு மற்றும் இருப்பிடம் அளித்தல் போன்ற மனிதாபிமான உதவிகளையே 'பாதுகாத்தல்' என அவர்கள் கருதினார்கள். ஐநாவின் பதிவுகளின்படி இவர்களுக்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட கடந்தகால வன்முறைகளின் வரலாறு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆகவே அவர் களின் வன்முறைகளில் இருந்து 'பாதுகாத்தல்' என்பதில் உள்ள சிக்கல் அவர்களுக்குப் புரியவேயில்லை. 'பாதுகாத்தல்' என்பதை அவர்கள் 'மேற்பார்வை செய்தல், எதிர்வினை புரிதல்' என்பதாக மட்டுமே புரிந்துகொண்டிருந்தார்கள் (பக்கங்கள் 18,19). அரசியல் பிரச்சினைகளில் 'தலையிடாமை' என்பதை, குறிப்பிட்ட பிரச்சினை அரசியல் தன்மை கொண்டது என்பதால் அல்ல, மாறாக அதில் 'தலையிட்டால் இலங்கை அரசின் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும்' என்பதற்காகவே அவர்கள் தலையிடாது தவிர்த்தார்கள் என்கிறது அறிக்கை (பக்கம் 19).

இதுவன்றி சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின்படி மனித உரிமை மீறல் புரிந்தார்கள் என விடுதலைப் புலிகளை மட்டுமே ஐநா ஊழியர்கள் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந் தார்கள்; பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பெருமளவிலான படுகொலைளுக்கு இலங்கை அரசை அவர்கள் குற்றம் சாட்டவில்லை. இதற்கு அவர்கள் சொன்ன காரணம், தரவுகளைச் சரிபார்த்துக் கொள்ளமுடியவில்லை என்பதுதான் என அறிக்கை (பக்கம் 20) குறிப்பிடுகிறது. இலங்கை அரசை விமர்சிப் பவர்கள் அனைவரையும் 'பயங்கரவாதிகள்' என இலங்கை அரசு முத்திரை குத்தியது. இவ்வாறு 'பயங்கரவாதி' என முத்திரை குத்தப் பட்டவர்களில் ஐநா பிரதிநிதியான ஜான் ஹோம்சும் இடம்பெற்றார் என்கிறது (பக்கம் 107) அறிக்கை. இவ்வாறு குழப்பமும், கையறுநிலை யும், பொறுப்பின்மையும், இலங்கை அரசின் அச்சுறுத்தலும் சூழ்ந்த நிலையில்தான் ஐநா ஊழியர்கள் இலங்கையினுள் செயல்பட்டார்கள் என்கிறது அறிக்கை.

யுத்தத்தின் இறுதிநாள்கள் தொடர்பாக வெளியாகியிருக்கும் சார்லஸ் பெட்ரி தலைமையேற்றுச் சமர்ப்பித்த ஐநாவின் உள்ளக மறுபார்வை அறிக்கையையடுத்தும், அக்டோபர் 2012இல் இலண்டனில் பிரான்செஸ் ஹாரிசனின் மணமடைந்தவர்களை இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறோம் நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைப் புலிகளின் செயல்பாடு தொடர்பாக நோர்வே நடுவர்குழு உறுப்பினர் எரிக் சோல்ஹைம் பிரபாகரன் குறித்துப் பேசியதையடுத்தும்(9) இரண்டு விதமான யதார்த்தமற்ற அரசியல் நிலைப்பாடுகள் பேசப்பட்டு வருகின்றன.

 ஐநா சபை 'வேறுவிதமாக' நடந்திருந்தால் இலங்கையும் 'வேறு விதமாக' நடந்திருக்கும் என்பது ஒரு நிலைப்பாடு. இதை ஐநா சபை யின் மீதான கடும்போக்காளர்கள் முன்வைக்கிறார்கள். அமெரிக்கா, நோர்வே போன்ற சர்வதேச நாடுகள் பிரபாகரன், பொட்டு அம்மான் தவிர்த்து பிறருக்குப் பொதுமன்னிப்புத் தருமாறு இலங்கையிடம் முன்வைத்த திட்டத்திற்கு அவர் ஒப்புதல் தந்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரழிவைத் தடுத்திருக்கலாம் என்பது ஒரு நிலைப்பாடு. இதனை எரிக் சோல்ஹைம் முன்வைக்க, புகலிட மற்றும் புலத்து மாற்றுக் கருத்தாளர்கள் இப்போது வலியுறுத்துகிறார்கள்.

 இதில் முதலாவது நிலைப்பாடு அன்றைய நிலையில் யதார்த்தமற்றது என்கிறார் ஐநா பிரதிநிதியான ஜான் ஹோம்ஸ்(10). எண்ணெய்வள நாடுகள் பிரச்சினைபோல் அல்லாது இலங்கையைப் பொறுத்து அக்கறையற்ற நிலையில் உலக நாடுகள் இருந்தன; ஐநா சபை, உலக நாடுகள் என அனைவரையும் புறக்கணித்து அல்லது வெளியேற்றி விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டும் எனும் இராணுவத் தீர்வில் இலங்கை அரசு மூர்க்கமாக இருந்தது என்பதுதான் அந்த யதார்த்தம். இரண்டாவது நிலைப்பாடு, இந்தியாவைப் பொறுத்தும் இலங்கையைப் பொறுத்தும் யதார்த்தமற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பை நிர்மூலமாக்குவதையும் அதனுடைய தலைமையைக் கொன்றொழிப்பதையும் இலங்கையும் இந்தியாவும் திட்டமாகக் கொண்டிருந்தன. எரிக் சோல்ஹைமின் ஊடாட்டத்தின் வழி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களைக்கூட அவரால் உயிரோடு காப்பாற்ற முடியாத சூழலில், சர்வதேசியத் திட்டத்தைப் பிரபாகரன் ஒப்புக்கொண்டிருந்தாலும்கூட, இந்தியாவும் இலங்கை யும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் அன்று இருக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் பிரபாகரன் தொடர்பாகவும், ஐநா தொடர் பாகவும் கடும்போக்காளர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஒப்பீட்டளவில், பேரழிவில் இலங்கை அரசின் கொடூரச் செயல்பாடு களை குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்க முடியும். இந்த இரண்டு அனுபவங்களில் இருந்தும் இலங்கை அரசை எவ்வாறு ஒரு பொறி முறைக்குள் கொணர்வது என்று சிந்திப்பது மட்டுமே நல்விளைவைத் தருவதாக இருக்க முடியும்.

 VII

பெனடிக்ட் ஆன்டர்சனின் 'தேசியம் கற்பிதம்' எனும் கருத்தாக்கம், தீண்டாமையைக் குற்றச்சட்டத்தின் கீழ் கொணர்ந்த விடுதலைப் புலிகளின் 'இடைக்கால அரசின் தண்டனைச் சட்டம்' ஆகியவை குறித்து நூலின் இருவேறு இடங்களில் விரிவாகப் பேசியிருக்கிறேன்.

விவாதத் தொடர்ச்சியின் பொருட்டு இந்தக் கூறியது கூறலின் தவிர்க்க வியலாமையை வாசகர்கள் உணர்வார்கள் என்று கருதுகிறேன். ஈழம்-தமிழகம்-புகலிடம் எனும் முப்பெரும் பிரதேசங்கள் சார்ந்த எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, பொதுவான எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்துக்குமான விமர்சன அரசியலை அவாவியே இக்கட்டுரைத் தொகுப்பு உங்களின் முன் வருகிறது.

 கடந்த முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் உடன்பயணியாக நான் இருந்திருக்கிறேன். அரை நூற்றாண்டு கால தேசிய விடுதலைப் போராட்ட அனுபவங்கள், மார்க்சியர்களின் சோசலிச அரசியல் அனுபவங்கள், வேறுபட்ட உலக அரசியல் போக்குகள் ஆகிய சூழலுக்குள் நின்று ஈழவிடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியையும் அனுபவங்களையும் புரிந்துகொள்கின்ற, ஆவண மதிப்பும், கருத்தியல் மதிப்பும், எதிர்கால அரசியல் விவாத மதிப்பும் கொண்ட ஒரு நூலைக் கொணர்வதுதான் எனது நோக்கமாக இருந்தது. அந்த இலக்கை நான் எய்தியிருக்கிறேன் என்றுதான் நம்புகிறேன்.  ஸ்டாலினையும், மாவோவையும், அபிமல் குஸ்மானையும், சேகுவேராவையும், அல்பான்சோ கெனோவையும், அப்துல்லா ஒச்சாலனையும், யாசர் அரஃபாத்தையும், ஹோசிமினையும் எந்த விமர்சனமும் இன்றிக்கொண்டாடிக்கொண்டு அல்லது அவர்களது செயல்பாட்டை 'வரலாற்றில் வைத்துப்' பாதுகாத்துக்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மட்டும் 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ளாமல்' நிராகரிப்பது ஒருபோதும் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகாது என்பதையே இந்த நூலில் நான் வலியுறுத்துகிறேன்.

 தொகுப்பின் கணிசமான கட்டுரைகள் உயிர்மை மாத இதழிலும் குளோபல் தமிழ் நியூஸ், கீற்று, உயிரோசை, தேசம்நெட், பொங்குதமிழ் இணையதளங்களிலும் வெளியானவை. நான் எழுத நேர்ந்த எல்லா இடங்களிலும் தங்குதடையற்ற எழுத்துச் சுதந்திரத்தை எனக்கு வழங்கிய ஊடக நண்பர்கள் நடராஜா குருபரன், மனுஷ்யபுத்திரன், கீற்று ரமேஷ், ஜெயபாலன், சிவப்பிரகாசம் சிவரஞ்ஜித் ஆகியோருக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகக் கடினமான பணியான 'சுட்டிகள்' பகுதியைக் கவனமெடுத்துச் செய்தவன் எனது அன்பு நண்பனான கலாநிதி எஸ்.வி. உதயகுமார். நிஜத்தில் அவனுக்கு நான் சொல்லும் நன்றிக்குரிய எல்லா வார்த்தை களும் அர்த்தமிழந்தவை; அவனுக்கான எனது கனிவான ஆரத்தழுவு தலும் முத்தமும்தான் அதனை ஈடுசெய்யும். எம்.எப். ஹுஸைன் குறித்த தனது புத்தக வேலைகளின் இடையிலும், நான் கேட்டுக்கொண்டதற் கிணங்க இந்த நூலின் அட்டைப்படத்திற்கென அல்பான்சோ கெனோ மற்றும் பிரபாகரன் ஆகியோரின் சித்திரங்களை வரைந்து கொடுத்த எனது நண்பர் ஓவியர் புகழேந்திக்கு எனது மனம் கனிந்த நன்றி.

தொகுப்பைத் திருத்தமாகவும் அழகாகவும் கொணரும் அடையாளம் பதிப்புக்குழுவினருக்கும், கட்டுரைகள் வெளியான வேளைகளில் உடனுக்குடன் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட எனது அன்பு நண்பர்கள் அசோக் யோகன், மு.புஷ்பராஜன் ஆகியோருக்கும் எனது மனமுவந்த நன்றி உரித்தாகிறது. நூலின் வாசகர்களுடனான உரையாடலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

 ஆதாரங்கள்

(1). ஜென்னி.ஜெ (7, மார்ச் 2011), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் : எனது சாட்சியம் : இன்றும் மறைக்கப்படும் தோழி ரீட்டா மீதான அவலம், தேசம்நெட்.  

(2) Crticism and self-criticism, Great Soviet Encyclophedia, 1979.

 (3).மார்க்ஸ்.அ (செப்டம்பர், 2009), அரசு இறையாண்மை ஆயுதப் போராட்டங்கள், புலம். 

(4).உண்மை அறியும் குழு : இடைக்கால அறிக்கை, சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள், 27, பிப்ரவரி 2012.

 (5).ராஜதுரை.எஸ்.வி (மே, 2009), ஈழத்தமிழ் மக்களும் நாடாளுமன்றத் தேர்தலும், தமிழர் முன்னணி, தமிழ்நாடு.

 (6).ஹாரிசன்.பிரான்செஸ் (டிசம்பர், 2012), ஐநாவின் மோசமான தோல்வி, தமிழில் : கண்ணன்-ஷாலினி, காலச்சுவடு.  

(7).Report of The Secretary General’s Internal Review Panel on United Nations Action in Sri Lanka, November 2012.

 (8).Harrison.F (Ocober 2012) , Still Counting the Dead: Survivors of Sri Lanka's Hidden War, Portobello Books, London.  

(9).Solheim.E (4 October 2012), Prabhakaran fails to accept the international proposal, Frances Haarison's Still Countng the Dead, Book Launch Speech, London.

 (10).Doucet. L (13 November 2012), UN 'failed Sri Lanka civilians', says internal probe, BBC.  ****

(ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் நூலின் முன்னுரை)

- யமுனா ராஜேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It