இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் டிசம்பர் 20 தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இருளடைந்து கிடக்கும் இன்றைய நிலையில், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டம் இந்திய அளவில் சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

நெய்வேலி அனல் மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ் நாட்டிற்கே வழங்க வேண்டும் என்ற முழக்கத்தை பல்வேறு அமைப்புகளும் மாநிலக் கட்சிகளும் முன் வைத்துள்ளன. ஆனால் அகில இந்திய கட்சி என்ற முறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தான் இப்பொழுது முதன் முதலில் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் பெரும் கொள்ளைக்கு நங்கூரமிடப்பட்டுள்ள உலகமயப் பின்னணியில், இந்திய தேசியத்தை நோக்கிய சில அடிப்படையான கேள்விகளை எழுப்ப வேண்டிய கட்டாயம் இப்பொழுது எழுந்துவிட்டது. இந்தக் கேள்விக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தொடங்கியுள்ள இன்றையப் முற்றுகைப் போராட்டத்திற்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு.

mettur_dam_400தமிழகத்தில் அமைந்த 37 ஆறுகளின் விரிந்த சமவெளியில், பரந்த நிலப்பரப்பைக் கொண்டது நமது தமிழ் மண். இது உருவாக்கி வைத்திருக்கும் பயிர்த்தொழில் உலகின் மூத்த விவசாயங்களில் ஒன்று. காலவளர்ச்சியில் உழவுக்கு ஏற்ற நிலப்பரப்பு பெருக்கமடைந்தது. மற்ற மாநிலங்களை விட, இதனால் விளைநிலம் கூடுதலாகியது. இதில் சிக்கல் என்னவெனில் அதற்குத் தேவையான நீர் தரும் நதிகள் இன்றைய தமிழகத்தில் இல்லை. மாநிலங்கள் பிரிவுபட்டபோது, இவை அண்டை மாநில எல்லைக்குள் சென்றுவிட்டன‌.

கேரளா விளைநிலம் அதிகம் இல்லாது, மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் அதிகம் கொண்ட மாநிலம். முல்லைப் பெரியாரில் நீர் பெற்று, நெடுங்காலமாக, கேரள மக்களுக்கான அரிசியை தமிழகம் தான், பயிரிட்டுத் தந்து வருகிறது. இது போல இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும், எது தேவையோ அதை தன்னிடமிருந்தால் தந்து உதவுவதில் தயக்கம் காட்டுவதில்லை தமிழகம். இது இந்திய ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு அடிப்படையானது என்பதை இந்த நிமிடம் வரை உணர்ந்துள்ள முதிர்ச்சி கொண்டது தான் நம் மாநிலம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

நீரற்றக் கொடுமைமையால் தமிழகம் இன்று வாடுகிறது. பெரும் பணச்செலவில் உருவாக்கிய‌ பயிர்கள் கருகி, கொஞ்சம் கொஞ்சமாக உயிர் துறந்து கொண்டிருக்கின்றன. எகிப்தின் நைல் நதியைப் போன்ற செழிப்பைக் கொண்ட காவிரி டெல்டா, சகாரா பலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் வரத் தொடங்கிவிட்டது. இந்த நிலையிலும் கர்நாடகம், காவிரி தண்ணீர் தர மறுத்து, தன் கண்களை இறுக மூடிக்கொண்டால் யாரால்தான் என்ன செய்ய முடியும்? காவிரி மட்டுமல்லாது, முல்லைப் பெரியார், பாலாறு, தென் பெண்ணை முதலான அனைத்து ஆறுகளுமே பிரச்சனைகளினால் நீரற்றுக் கிடக்கின்றன. தமிழ் மக்களால், என்னதான் செய்ய முடியும்? அதன் கொதிநிலையைத்தான் தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சட்டபடி அமைந்த நதி நீர் ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஒரு தலைப்பட்சமாக அண்டை மாநிலங்கள் ரத்து செய்து கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளாலும் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. மத்திய அரசு மௌனம் காத்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரி தங்கள் எல்லைகளுக்குள் ஓடி வருவதாலேயே கர்நாடகம் அந்தத் தண்ணீரை தனக்குச் சொந்தமானது என்ற உரிமையை எடுத்துக் கொண்டால், தமிழகமும் இதே வழியை ஏன் பின்பற்றக் கூடாது? இதற்கான முதல் கட்டமாக,  நெய்வேலி மின்உற்பத்தி அனைதையும் தமிழகம் எடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்ற கேள்வியோடு தான் போராட்டம் தொடங்கியுள்ளது.

இன்று தமிழகம் கடும் மின் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 10 மணி நேரத்திற்குக் குறையாமல் மின் வெட்டு அமலில் உள்ளது. காவிரியில் நீர் கிடைக்காவிட்டாலும், பாசனக் கிணறுகள் மூலம் பயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் அதற்குத் தேவை மின்சாரம். அது நெய்வேலியில் உற்பத்தியாகியும் நம் தேவைக்கு கிடைக்கவில்லை. இதைப்போலவே கைத்தறி, விசைத்தறி, சிறுதொழில், குறுதொழில் என்று அனைத்தும் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மொத்தில் மின்சாரப் பற்றாக்குறையால், தமிழகத்தின் அனைத்து தொழில்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த பேரழிவைப் பற்றி மத்திய அரசு கவலை கொள்வதாகவும் தெரியவில்லை. 

இத்தகைய‌ சூழ்நிலையில் தான் கம்யூனிஸ்டு கட்சிக்கு முற்றுகைப் போராட்டம் தவிர்க்க‌ முடியாத தேவையாகிவிட்டது. இந்தப் போராட்டத்தில் உள்ள நியாயத்தை யாராலும் மறுக்க முடியாது. நெய்வேலியில்  சுரங்கம் தோண்டும் பணி 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றைய சோவித்து சோலிசக் குடியரசின் உதவியோடு நெய்வேலி அனல் மின்நிலையம் உருவாக்கப்பட்டது. பணி தொடங்கியபோது நிகழ்ந்த சோகத்தை இப்பொழுதும் யாராலும் மறந்துவிட முடியாது. 200க்கும் மேற்பட்ட பூர்வீக கிராமங்களிலிருந்து மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இன்று 53 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நெய்வேலி நகரியம், அந்த மக்கள் வெளியேற்றப்பட்ட இடத்தில் தான் அமைந்துள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியமானது. இந்த சுரங்கத்தொழில் பிறப்பதற்கு முதலில் தியாகம் செய்தவர்கள் இந்த எளிய உழைக்கும் விவசாயிகள் தான்.

ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ எங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பினில் …என்று குறிப்பிட்டதைப்போல, இந்த தொழிற்நுட்ப பெரும் படைப்புக்கு, வியர்வையும் ரத்தமும் சொறிந்தவர்களின் தொழிலாளர்கள் என்பதை யாரால்தான் மறந்துவிட முடியும்? இந்த கூட்டு உழைப்பு சிறுக சிறுக வளர்ச்சி அடைந்து, இன்று ஆலமரம் போன்று வளர்ச்சியடைந்துவிட்டது. நெய்வேலி சுரங்கத் தொழிற்சாலையின் நிலப்பரப்பில் நேரடி உடல் உழைக்கும் தொழிலாளர்கள், தொழிற்நுட்ப வல்லுனர்கள், மூளை உழைப்பாளர்கள் என்று 35 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் நிரந்தரத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர், நிரந்தரமாகாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர். அரசு ஆண்டுகொரு முறை பெருமையோடு வெளியிட்டு கொள்ளும் லாபப் பெருக்கத்திற்கும் இந்த தொழிலாளர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று யாராலாவது கூற முடியுமா?

neyveli_power_plant_600

தமிழ் மக்களின் உழைப்பைப் போலவே, தமிழகத்தின் எல்லையில்லா இயற்கை கனிம வளமும் இந்த பெரும் வளர்ச்சியில் பங்கேற்றுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கங்க‌ளின் மூலம் 10 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. பலகோடி டன் எடையுள்ள நிலக்கிரியைத் தந்து தான் தமிழ்மண் இந்த மின்உற்பத்தியை செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு தமிழகத்திற்குத் தரும் உரிமைத் தொகை எத்தனை தெரியுமா? வெறும் 43 ரூபாய் மட்டுமே. இன்றைய நிலவரப்படி ஒரு டன் நிலக்கரியின் விலை 800 ரூபாய் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எத்தனைக் கோடி டன் எடையுள்ள நிலக்கரியை கடந்த 57 ஆண்டுகளில் நெய்வேலி இழந்துள்ளது? தொழிலாளர்களின் உழைப்பும் இந்த மண்ணின் கனிமும் தான், நிலக்கரி சுரங்கத்தின் லாபத்திற்கு காரணமாக அமைந்துள்ள‌து.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோண்டத் தொடங்கிய முதல் 20 ஆண்டுகளில், கடும் பற்றாக்குறையால் பொருளாதார இழப்பை சந்தித்துக் கொண்டிருந்தது நெய்வேலி நிலக்கரி கழகம். இன்று லாபத்தோடு இயங்குகிறது. இந்த லாபம் கடந்த முப்பது ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்ற ஆண்டு மட்டும் 1411 கோடி ரூபாய் லாபத்தை கழகம் ஈட்டியுள்ளது. ஆனால் உண்மையான வருமானம் 2 ஆயிரம் கோடியைத் தாண்டி இருக்கும் என்று பல்வேறு தரப்பைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். இது எவ்வாறு என்று அவர்களிடம் கேட்டால் அவர்கள் கூறும் பதில், நம்மை அதிர்ச்சியுற வைக்கிறது.

நிறுவனத்திற்குத் தேவையான கேபிள், டியூப் போன்றவை அந்நிய நாடுகளிடமிருந்து வாங்கப்படுகின்றன. அந்நிய நாட்டுக்கு இணையாக தரமானவை, நம் நாட்டிலேயே கிடைக்கின்றன. இதனை அதிகாரிகள் வாங்குவதில்லை. வெளிநாடுகளுக்குப் பறந்து சென்று பேரம் பேசித்தான் வாங்குகிறார்கள். இதற்காக மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் லஞ்சம் கைமாறுகிறது என்கிறார்கள். அரசியலிலும், உயர்மட்ட நிர்வாகத்திலும் திருட்டுத்தனமாக பழமும் தின்று, கொட்டையும் போட்டவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியும், இன்னும் நெய்வேலி லாபம் தருகிறது  என்றால், அதன் உண்மையான வருமான வலிமை எத்தனை இருக்கும் என்பதை, நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். 

நெய்வேலி நிலக்கரி சுரங்கம், இந்திய அனல் மின்நிலையங்களிலேயே தனித்துவத்தைக் கொண்டது. நிலக்கரியை எரித்து, மின் உற்பத்தி செய்வதில் ஆசியாவிலேயே இது தான் முதலிடம் பெற்றுள்ளது. இவ்வாறான பழுப்புநிலக்கரி கடலூர் பகுதியில் கிடைக்கிறது என்றவுடன், அதனை மூடிமறைக்க அமெரிக்க ஆதரவு சக்திகள் பல்வேறு கதைகளை உருவாக்கினர். தரமற்ற நிலக்கரி என்றும், லாபமற்ற தொழிற்சாலையாகிவிடும் என்றும், பல்வேறு பயமுறுத்தல்களை வெளியிட்டனர். இந்த வதந்திகளை முறியடித்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து முடித்ததில், கம்யூனிஸ்டு கட்சிக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இதில் தோழர் ராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் பெரும் முயற்சி எடுத்துள்ளார்கள். பண்டிதர் நேரு தனது ஆட்சியின் கனவுத் திட்டமாக இதனை செயல்படுத்திக் காட்டினார். இவ்வாறு தமிழகத்தில் அமைந்த இந்த நிலக்கரி சுரங்கம் இந்திய வளர்ச்சியிலும் பெரும் பங்கைச் செலுத்தியுள்ளது.

நெய்வேலி அனல் மின் நிலையம் இப்பொழுது 2460 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறது. 1960 ஆண்டு மின் உற்பத்தியைத் தொடங்கிய காலத்தில் இது 600 மெகாவாட் மின் உற்பத்தியாக இருந்தது. இந்த அனல் மின் உற்பத்தியை விடவும், நிறுவனம் வேறு சில மின் உற்பத்தியிலும் இப்பொழுது ஈடுபட்டுள்ளது. 50 மெகாவாட் மின்சாரம் காற்றாலையின் மூலம் இப்பொழுது இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மணிக்கு 10 ஆயிரம் யூனிட் திறன் கொண்ட சூரிய ஒளியில் இயங்கும் மின் நிலையம் இங்கு அமைக்கப்பட்டது. மாற்று மின் உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் இடமாகவும் எதிர்காலத்தில் நெய்வேலி அமையப் போகிறது.

காவிரி நதி நீர்ப் பிரச்சனையில் மேலோங்கும் காநாடகத்தின் அடாவடித்தனத்தைப் பார்த்த தமிழக மக்கள், நெய்வேலி மின்சாரம் பங்கிடும் முறையைப் பற்றி கூர்ந்து கவனிக்கத் தொடங்கி விட்டார்கள்.  உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும் பவர் கிரிடுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து கீழ்க்கண்டவாறு அந்த மின்சாரம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

neyveli_power_station_500

தமிழகத்திற்கு 30 சதவீதம், ஆந்திராவிற்கு 19 சதவீதம், கர்நாடகத்திற்கு 14 சதவீதம், கேரளாவிற்கு 10 சதவீதம், புதுச்சேரிக்கு 5 சதவீதம், மத்திய மின்தொகுப்புக்கு 15 சதவீதம். மொத்தத்தில், மற்ற தென்மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் சேர்த்து மொத்தம் 58 சதவீதம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு வெறும் 30 சதவீதம் மட்டும் தான் கிடைக்கிறது. தமிழகம் இந்த மின்சாரத்தையும் விலைகொடுத்து தான் வாங்குகிறது. இந்தப் பின்னணி, தமிழக மக்களிடம் புதிய சிந்தனையைத் தோற்றுவித்துள்ளது. 

கர்நாடக அரசு, காவேரி தனது மாநிலத்தில் பிறக்கிறது; தண்ணீர் தனக்கு சொந்தமானது; தரமுடியாது என்றால், நெய்வேலி மின்சாரத்தை மற்ற மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் நாம் ஏன் தரவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி சாதாரண கேள்வியாகத் தெரியவில்லை. இந்திய ஒருமைப்பாட்டைக் குறித்த கேள்வியாகத் தெரிகிறது. இந்திய தேசியம் கூறும் ஒருமைப்பாடு எதில் அமைய முடியும்? முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை, ஒப்பில்லாத சமுதாயம் உலகினுக்கு ஒரு புதுமை என்று பாடிய பாரதியின் பாடலின் மூலம் தான் அமைய முடியும்.

தேசிய ஒருமைப்பாடு ஒரு வழிப் பாதை அல்ல; அது பலநூறு வழிகளைக் கொண்டிருக்கிறது. இந்திய மண்ணில் அமைந்த வளங்கள் அனைத்தையும், தேவைக்கேற்றவாறு அனைத்தையும் அனைவரும் பகிர்ந்து கொள்வோம் என்ற சமத்துவ அரசியல் கொள்கையால் தான் சமத்துவ தேசிய ஒருமைப்பாட்டை நம்மால் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும். அதிகார சூழ்ச்சி நிறைந்த மத்திய அரசாலோ, குறுகிய சுயநலம் மிகுந்த மாநில அரசாங்கங்களாலோ அதனை சாத்தியப்படுத்த முடியாது. காவிரி நதிநீர்ப் பிரச்சனையும், நெய்வேலி மின் பகிர்வுப் பிரச்சனையும் ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டு நிற்கிறது. அதை வலியுறுத்தும் போராட்டத்தைத் தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடத்துகிறது.

- சி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It