கடவுள், மதம், சாதி உள்ளிட்டவைகளைப்போல அறிவியலுக்கு முரணானது எதுவுமில்லை.   ஒரு செல் உயிரி அமீபாவிலிருந்துதான் உலகின் அனைத்து உயிர்களும் தோன்றின எனும்போது உலக மாந்த இனமே ஒரு சாதியாகத்தான் இருக்க முடியும். ஆனால், சாதி என்கிற பொய்மைவாதக் கருத்தை வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்புக்காக மனித குலத்தின் இயங்கியலுக்கு எதிராகச் சிந்தித்தும் பேசியும் வருகிறார்கள்.

தர்மபுரியில் ஒரு இளைஞனும் இளைஞியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதைக் காரணம் காட்டி தலித்துகள் படித்து, உழைத்து, சம்பாதித்து, நல்ல முறையில் வீடுகட்டி வாழ்வதையும் நல்ல முறையில் உடை உடுத்தி, பண்பாட்டுடனும் நாகரீகத்துடனும் வாழ்வதைப் பொறுத்துக்கொள்ளாமல், தலித்துகளை அடித்து நொறுக்கி, அவர்களின் உடைமைகளை வெட்கமில்லாமல் திருடிக்கொண்டு, ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட உழைப்பால் விளைந்த வீடுகளை அடித்து நொறுக்கி, மிச்சம் மீதி இருக்கக்கூடாதென நெருப்பால் கொளுத்தி தாங்கள் குயுக்தியான வஞ்சகமிக்க காட்டுமிராண்டிகள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

     இந்தியாவில் உள்ள 4000த்துக்கு மேற்பட்ட சாதிகளில் எந்தவொரு இரண்டு சாதியும் இணையானது இல்லை எனக் கற்பிக்கும் இந்துத்துவ வருணாசிரமக் கொள்கையை உள்வாங்கிக் கொண்டு, கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிநேலியனூரில், ஒரு அருந்ததியர் இளைஞர் கார்த்திகேயனை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக ஆதிதிராவிடர் பெண் கோகிலாவை அவரது பெற்றோரே கொலை செய்து காவல்துறை கண்முன்னால் எரித்திருக்கிறார்கள். கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், கோகிலாவைக் கொலை செய்ததற்காக நீதி கேட்டு சட்ட ரீதியாகப் போராடும் வழக்கறிஞர்களை வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து நீக்குவது, நீதிமன்ற வளாகத்தில் பலபேர் முன்னிலையில் இழிவுபடுத்துவது என சாதிய வக்கிரக்கொலை (கௌரவக்கொலை என்று நாம் எப்படி சொல்ல முடியும்?) நடத்துகிறார்கள்.    

     கடலூர் மாவட்டம் பாச்சாரப்பள்ளியில் ராமதாசு ஒரு வீடு திறப்பு விழாவுக்கு வந்துபோன அடுத்த நாள் 7 தலித் குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி வெறியாட்டத்தைக் (தர்மபுரி கலவரம் என்று பலபேர் சொல்லுகிறார்கள். இருதரப்பும் மோதிக்கொண்டால்தானே அது கலவரம்?) கண்டித்துச் சுவரொட்டி ஒட்டியதற்காக 7 வீடுகள் எரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் உண்மை அதுவல்ல. தமிழ்நாடு காவல்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 7 தலித் இளைஞர்களின் வீடுகள் குறிவைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன. அதுபோக இந்த 7 பேரும் காவல்துறையில் சேருவதற்கு உரிய பயிற்சிகளை சிரமேற்கொண்டு அளித்த திருஞானம்  என்பவர் குடிசைகள் எரிக்கப்படுவதற்கு முன்பு மிகக்கோரமாகத் தாக்கப்பட்டு, இறந்து விட்டார் எனக் கருதி கண்மாயில் வீசி எறியப்பட்டிருக்கிறார். ஆக, தலித்துகள் கண்ணியத்தோடு வாழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சாதிய வன்மத்தின் வெளிப்பாடாக இந்தக் குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. ரெட்டியாரும், செட்டியாரும், பிள்ளைமாரும், கோனாரும், முதலியாரும், யாதவரும் காவல்துறைக்கு தேர்வானபோது வராத வன்மம் தலித்துகள் தேர்வாகிறபொழுது வருகிறதென்றால், தனக்குக் கீழானவன் தலித் என வடித்தெடுக்கப்பட்டிருக்கிற சாதிய வருணாசிரமச் சிந்தனையன்றி வேறில்லை.

     இதேபோலத்தான், தேனி மாவட்டம் பெரியகுளத்தில், - நமக்கு உடன்பாடில்லாவிட்டாலும் கூட - கடவுள் நம்பிக்கையில் ஊறிப்போய் அங்கிருக்கிற கோவிலில் அறங்காவலர் குழு உறுப்பினராகப் பணியாற்றி வந்த நாகமுத்து என்கிற திருமணமாகாத ஆதிதிராவிடர் இளைஞரை அறங்காவலர் குழுவிலிருந்து விலகச் சொல்லியும், கோவிலுக்கு இனிமேல் வரக்கூடாது எனச் சொல்லியும் சொல்லணா மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலை செய்யுமளவு துன்புறுத்தியிருக்கிறார்கள். என் தற்கொலைக்குக் காரணம் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாதான் என எழுத்துப்பூர்வமாகச் சொல்லியிருந்தும் கூட 5 நாட்கள் பிணத்தை எடுக்க மாட்டோம் என ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு நின்று போராடியும் கூட ஒரு வழக்குக்கூட பதிவு செய்யத் தயங்குகிறது காவல்துறை.

     ஒன்றரை மாத இடைவெளிக்குள்ளாக வெளியே தெரிந்தவை மாத்திரம் இவையென்றால், தலித்துகளின் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த தாக்குதல் எப்படி இருக்கிறது? சமூகம் சாதியால் எவ்வளவு புரையோடிப்போய் இருக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

     ஆனால், இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் முன்னர் நடந்த காலத்தில், இவைகளைக் கண்டிக்க மனமில்லாவிட்டால் கூட, வெளிப்படையாக ஆதரிக்கத் தயங்குவார்கள். ஆனால் இப்பொழுது, துளியும் வெட்கமில்லாமல், சாதிய வன்கொடுமைகளை ஆதரித்துப் பேசுகிறார்கள். கேள்வி கேட்பாரில்லாமல் வன்கொடுமை வெறியாட்டம் நடத்துவதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என மறைமுகமாகவும் திருத்த வேண்டும் என வெளிப்படையாகவும் பேசி வருகிறார்கள்.

     அத்தோடு சாதி ஒழிப்பிற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிற சாதிய மறுப்புத் திருமணங்கள் அறவே கூடாது என அறிவியலுக்கும் சமூகநீதிச் சிந்தனைக்கும் எதிராக பட்டவர்த்தனமாக பேசுகிறார்கள்.

     தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் கூலிங் கிளாஸ் போட்டு ஆதிக்க சாதிப் பெண்களை மயக்குகிறார்கள் என்கிற பேச்சு, தலித் இளைஞர்கள் கோவணத்தோடு அலைய வேண்டும் என்கிற விருப்பத்தைச் சுமந்திருப்பதோடு, ஆதிக்க சாதிப்பெண்கள் கூலிங் கிளாசுக்கும் ஜீன்ஸ் பேண்ட்டுக்கும் மயங்கி விடுவார்கள் என்கிற பெண்கள் மீதான கொச்சையான இழிவையும் சேர்ந்தே சுமந்திருக்கிறது.

     ஆதிக்க சாதிப்பெண்கள், வேறு சாதி ஆண்களை மணந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்துபவர்கள், வேறு சாதியினரிடம் முடி வெட்டிக் கொள்ளக்கூடாது, வேறு சாதியினரிடம் துணி வெளுத்துக் கொள்ள மாட்டோம், வேறு சாதியினர் எங்கள் மலத்தை அள்ள விட மாட்டோம் எனவும் அறிவிப்பார்களா? என்று கேட்க விரும்புகிறோம்.

     அவசர சிகிச்சையின் போதோ, விபத்து காலங்களில் ஏ குரூப், பி குரூப் என வகை பிரித்துக் கேட்காமல் இன்ன சாதி ரத்தம் வேண்டும் என்று கேட்பார்களோ என்று கேட்கவும் தோன்றுகிறது.

     ஆக, அறிவியலுக்கு முரணான சாதியத்தின் விளைபொருட்களான இது போன்ற கருத்துக்களையும் இயக்கங்களையும் முறியடிப்பதற்கு, சாதிமறுப்புத் திருமணத்தை ஊக்குவிப்போம்! அப்படி சாதிமறுப்புத் திருமண ஆதரவு சக்திகளை சாதி மதம் கடந்து கருத்தியலுடன் கூடிய அணி சேர்ப்போம்!!

- நீலவேந்தன், ஆதித்தமிழர் பேரவை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It