இந்தியாவில் 115 மில்லியன் குடும்பங்கள் வேளாண் தொழிலை நம்பியுள்ளன. ஆனால் நமது நாட்டின் விவசாய வளர்ச்சி இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34.8 சதவீதமாயிருந்து வந்த விவசாயத்தின் பங்கு இன்றைக்கு 21 சதவீதமாய் குறைந்திருக்கிறது. மேலும், இதே நிலை நீடித்தால் 2020ல் இந்த சதவீதம் 15 ஆக குறையுமெனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து உயர்ந்து வரும் இடுபொருட்களின் விலையினாலும் அதிக அளவிலான வேதிப்பொருட்கள் உபயோகத்தினாலும் நிலத்தின் தன்மை மாறிப் போயிருப்பதாலும் ஆண்டுதோறும் விவசாய உற்பத்தி குறைந்து வருகிறது. பருவ மாற்றங்கள் விவசாயத்தைப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் நிலையான நம்பத்தகுந்த முயற்சிகள் விவசாயத்துறையில் ஏற்படுத்தப்படாததால் பருவ நிலை சாதகமான காலகட்டங்களில் கூட விவசாய உற்பத்தியில் அபரிமிதமான மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை.
2026ல் இந்தியாவின் மக்கட்தொகை 1420 (ஐ.நா சபை அறிக்கை 1998) மில்லியனாக உயரும் என்றும், அதில் 45-50% வரையிலான மக்கள் விவசாயத்தை நம்பியிருப்பார்கள் என்றும் மக்கட்தொகை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இந்தளவு மக்களுக்கான உணவுத் தேவையை எதிர்கொள்ளக்கூடிய அளவில் விவசாயத் துறையை வளமானதாக மாற்ற வேண்டிய தேவையிருக்கிறது.
2007-08ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்த உணவுப் பொருட்கள் உற்பத்தி 23.078 மில்லியன் டன்களாக இருந்துள்ளது. ஆனால் அன்றைய நாளில் ஒவ்வொரு இந்தியனும் உட்கொண்ட சராசரி உணவு 174 கிலோவாக இருந்துள்ளது. இது ஆப்பிரிக்க நாட்டின் சராசரி உணவை (196) விட 12 கிலோ குறைவானதாகும். ஆனால் உலக வல்லரசு எனப்பட்ட அமெரிக்கர்களின் சராசரி உணவு என்பது 889 கிலோவாக இருக்கிறது. அதே நேரத்தில் சைனாவின் சராசரி உணவு உட்கொள்ளும் திறன் இதே காலகட்டத்தில் 196 கிலோவாக இருந்துள்ளது. 889 கிலோ உணவை உட்கொள்ளும் அமெரிக்கா உணவு நெருக்கடிக்கு காரணம் இந்தியர்களும் சீனர்களும் தங்களுடைய உணவு உட்கொள்ளும் தன்மையை அதிகப்படுத்தியதுதான் என வதந்தி பரப்பி வருகிறது.
தமிழகத்தில் விவசாய உற்பத்தி
ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் கம்பு, சோளம், கேழ்வரகு, தினை போன்ற சத்தான சிறுதான்யங்களையும், மழை பெய்து போதுமான தண்ணீர் இருந்த இடங்களில் மட்டும் நெற்பயிரும் பயிரிட்டு வாழ்ந்து வந்தனர். புதிய புதிய கண்டுபிடிப்புகளின் காரணமாக மனிதன் அனைத்து இடங்களிலும், அனைத்துப் பயிர்களையும், அனைத்து காலங்களிலும் பயிரிட ஆரம்பித்தான். கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீழ் முழுவதுமாக சுரண்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டதுடன் உற்பத்தியை பெருக்குவதற்காக உபயோகப்படுத்தப்பட்ட அபரிமிதமான வேதியப்பொருட்களாகிய உரம், பூச்சி மருந்து ஆகியன மண்ணின் தன்மையை மாற்றி உற்பத்தியில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உயரிய விதைகள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகத்தால் உற்பத்திச் செலவும், உற்பத்தி செய்வதற்கான முதலீடும் அதிகரித்து போதுமான விலையின்மை மற்றும் பருவகால விபரிதங்கள் (மழை, வெள்ளம், வறட்சி) ஏற்படும் போது அதனை ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், விவசாயத்தைவிட்டு கூலித் தொழிலாளர்களாக மாறுவதும் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு விவசாயத்தைவிட்டு வெளியேறியவர்கள் நல்ல மழைப் பொழிவு உள்ள காலகட்டத்தில் மீண்டும் விவசாயத்திற்கு திரும்பாமல் அந்தநிலத்தை தரிசாகவே விட்டு வைத்திருக்கக்கூடிய சூழ்நிலையும் நிலவுகிறது.
நிலப்பயன்பாடு-பயிர் அடர்த்தி விவரம் - தமிழகம்
(பரப்பு இலட்சம் ஹெக்டேர்)
வ. எண் விவரம் 1990-91 1998-99 2008-09 2008-09 90-91 வித்தியாசம்
1. மொத்தப்பரப்பு 13.019 129.97 13.026 ரூ.007
2. விவசாயத்திற்கு லாயக்கான நிலம் 2.90 3.48 3.33 ரூ.043
3. தற்காலிக தரிசு 12.49 9.55 1.013 -2.36
4. இதர தரிசு 1.044 11.10 14.97 -4.53
5. நிகர விதைக்கப்பட்ட பரப்பு 55.78 56.34 5.042 -4.86
6. மொத்த விவசாயப் பரப்பு 81.61 8.047 78.85 -2.76
7. ஒருமுறைக்குமேல் பயிரிடப்பட்ட பரப்பு 1.053 9.92 7.81 -2.70
8. நிகர விதைக்கப்பட்ட பரப்பு 66.31 66.26 58.23 -8.08
9. பயிர் அடர்த்தி 118.9 117.6 115.48 -3.42
1.0 விவசாயம் அல்லாத வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்ட நிலம் 18.35 19.67 21.72 ரூ3.37
மேலே கண்ட அட்டவணையை உற்று நோக்கும் பொழுது 1990-91லிருந்து 2008-09ல் மொத்த விவசாயப் பரப்பில் இரண்டு இலட்சத்து எழுத்தாராயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு குறைந்துள்ளது. அதே போன்று ஒருமுறைக்கு மேல் பயிரிடப்பட்ட பரப்பும் 1.053 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 7.81 இலட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இப்பரப்பு கடந்த இருபதாண்டுகளில் 2.70 இலட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது. கோவை விவசாயக் கல்லூரி ஆய்வறிக்கையின்படி, 1990-91லிருந்து 2001-2002 ஆகிய பத்தாண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் விதைக்கப்பட்ட பரப்பில் நான்கு இலட்சம் ஹெக்டேர் பரப்பு மட்டுமே குறைந்திருந்தது. அதே காலகட்டத்தில் மொத்த விவசாயப் பரப்பிலும் மிகுந்த வேறுபாடு ஏதுமில்லை. இது 81.50 இலட்சம் ஹெக்டேராயிருந்தது 8.000 இலட்சம் ஹெக்டேராய் குறைந்திருப்பதாய் தெரிவிக்கிறது. பயிர் அடர்த்தி 118லிருந்து 120ஆக உயர்ந்துள்ளது. ஆனால் 1990-91க்கும் 2008-09க்கும் இடைப்பட்ட காலத்தில் பயிர் அடர்த்தி 118லிருந்து 115 ஆகக் குறைந்துள்ளது.
ஆனால் இதே காலகட்டத்தில் குத்தூசி கொண்டு துளையிட்டதுபோல் ஆழ்குழாய் கிணறுகளும் (போர்வெல்) காளான்கள் போன்று கட்டிடங்களும், வைகை ஆற்றில் வண்ணார் துணி துவைத்து காயவைப்பது போன்று குத்துக்கற்களால் கோலம் போடப்பட்ட வீட்டடிமனைகளாலும், யாரும் எங்கேயும், எத்தொழிலும் தொடங்கலாம் என்ற தங்குதடையற்ற தொழிற் கொள்கைகளாலும், இதற்கெல்லாம் உறுதுணையாய் உள்ள நான்கு வழி, ஆறு வழிச்சாலைகளாலும், புதிய பொருளாதார மண்டலங்களாலும் விவசாய நிலங்கள், விவசாயமல்லாத பிற உபயோகத்திற்காக பயன்படுவது நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. 1990-91ல் விவசாயமல்லாத வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்ட பரப்பு 18.35 இலட்சம் ஏக்கரிலிருந்து 2008-09ல் 21.72 இலட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதனால் பயிர் உற்பத்தி பயன்பட்டு வந்த 8,32,396 ஏக்கர் பரப்பு குறைந்துள்ளது. இதனால் தான் தமிழக வேளாண் துறை அமைச்சர் சமீபத்தில் மூன்றாண்டுகளுக்குள் பயிரிடப்பட்டு வந்த பரப்புகள் எதுவும் வீட்டு மனையிடங்களாக மாற்றப்படக் கூடாதெனவும், அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட பரப்பு குறைந்ததன் காரணமாக உணவுப்பொருட்களின் மொத்த உற்பத்தியும், உற்பத்தி விகிதமும் வெகுவாகக் குறைந்துள்ளது.
முக்கிய உணவுப் பொருட்கள் உற்பத்தி - தமிழகம்
1998-99 - 2008-09
பயிர்கள் உற்பத்தி (டன்களில்) உற்பத்தி விகிதம் (ஒரு ஹெக்டேருக்கு)
1998-99 2008-09 1998-99 2008-09
நெல் 8141300 5183385 3579 2682
சோளம் 369110 213436 1011 824
கம்பு 206110 84021 1339 1483
ராகி 240610 169944 2004 1887
மக்காட்சோளம் 88340 1257882 1587 4338
கொண்டக்கடலை 6280 4363 619 637
துவரை 47800 16703 644 608
பாசிப்பயறு 67470 31336 543 226
உளுந்து 117070 82983 518 315
நிலக்கடலை 1569790 974768 1829 1990
ஆதாரம். பருவம் மற்றும் பயிர் விவரம் அறிக்கை பசலி 1408-1418, புள்ளிஇயல் துறை
1998-99 மற்றும் 2008-09க்குட்பட்ட பத்தாண்டு உற்பத்தியை ஒப்பிடும் போது அனைத்து முக்கிய உணவுப் பயிர்களின் உற்பத்தியும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணம் உற்பத்திப் பரப்பு குறைந்ததேயாகும். ஆனால் இந்த காலகட்டத்தில் மழையளவிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்திடவில்லை. 1998-99ல் 108.04 மிமில் இருந்து 2008-09ம் ஆண்டில் 1023.1 மிமி ஆகக் குறைந்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் நெற்பயிர் பரப்பு 22,74,961 ஹெக்டேரிலிருந்து 19,31,603 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
பசுமைப்புரட்சிக்குப்பின்பு பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் விவசாய உற்பத்தியில் குறிப்பாக கோதுமை உற்பத்தியில் அபரிமிதமான மாற்றம் ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவின் முக்கிய உணவுப்பொருளான நெல் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் இருந்தது. ஆனால் தற்சமயம் விவசாயப்பரப்பும், உணவுப் பொருட்கள் உற்பத்தி விகிதமும், குறிப்பாக நெல் உற்பத்தியும் வெகுவாக குறைந்து வருகிறது. தஞ்சை தமிழ் பல்கலைகழக பூமிஇயல்துறை ஆய்வின்படி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் 1995-96ல் மொத்த பயிரிடப்பட்ட பரப்பில் 82.2 சதவீதமாயிருந்த நெற்பயிரின் பரப்பு 2008-09ஆம் ஆண்டில் 74.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வணிகப்பொருள் எனக் கண்டறியப்பட்ட கரும்பு 6.5 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகவும், பருத்தி 1.9 சதவீதத்திலிருந்து .07 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. மேலும், பயறு வகைகள் உற்பத்தி பரப்பு 4.1 சதவீதத்திலிருந்து 12.9 சதவீதமாகவும், எண்ணெய் வித்துக்கள் 4.5 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. இதற்கு முதன்மையான காரணம் உத்தரவாதப்படுத்தப்பட்ட நீர் இல்லாதததும் பருவ மாற்றங்களினால் ஏற்படும் முதலீட்டு இழப்பை சந்திக்க இயலாத கையறு நிலையில் விவசாயிகள் இருப்பதுமே ஆகும்.
இந்தியாவில் ஜுன் 2010 நிலவரப்படி 859 இலட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நிலையிலும் இந்தளவு வறுமைக்கோடு நிலவுகிறது. இவ்வுற்பத்தியில் ஆண்டுதோறும் பெருமளவில் குறைவு ஏற்படுமாயின் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு அல்லது பஞ்சம் பட்டினியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படலாம்.
இந்தியாவில் 60 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவுடையவர்களாக உள்ளனரெனவும் 0-3 வயதுடைய குழந்தைகளில் 46 சதவீதம் பேர் எடைகுறைவுடையவர்களாக உள்ளனரெனவும் விவரங்கள் தெரிவிக்கின்றன. உணவு தான்ய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றபோதும் இந்நிலை தொடரும் போது, உணவு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுமாயின் வறுமைக் கோடும் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகமாகலாம். இது வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாகும்.
எனவே, 75 சதவீதத்திற்கு மேல் விவசாய நிலங்களைக் கொண்ட கிராமங்களை விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக அறிவித்திடல் வேண்டும். விவசாயிகளுக்கு தங்கு தடையற்ற மின்சாரம் மட்டுமல்லாது விளை நிலத்தை பாழாக்காத புதிய உயிர் உரங்களையும், விதைகளையும் பயன்படுத்திட ஊக்குவித்திடல் வேண்டும்.
விவசாயம் செய்வோரை தேசிய சேவைப்பணி செய்வோராய் அங்கீகரித்து விவசாய் உற்பத்தியை பெருக்கிட வழிகாணுதல் வேண்டும். மேலும், விவசாயத்தைவிட்டு வெளியேறியவர்களை மீண்டும் அப்பணியில் ஈடுபடுத்திட சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.
வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களின்போது கட்டுபடியான, நியாயமான நிவாரணத்தொகையை வழங்கிடுதல் வேண்டும். அதேபோன்ற உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பொருட்களுக்கு கட்டுபடியான விலை வழங்கிடுதல் வேண்டும். நீர் ஆதாரங்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாத்து, பராமாpத்து நீர் கொள்ளளவை உயர்த்துதல் வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் சோர்வினைப் போக்கி மீண்டும் விவசாயத்தில் ஈடுபட வழி வகுக்கும்.
இந்து நாளிதழின் கிராமப்புற விவகாரங்கள் துறை ஆசிரியர் சாய்நாத் கூறுகையில் ‘விவசாயமே நாட்டின் வாழ்வாதாரத்தின் மையம். விவசாயம் செய்வது சமூக சேவையாகும். அவ்வாறு சமூக சேவையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை ஈடுகட்ட தங்களாலான அனைத்தையும் செய்யுங்கள் அவர்களுக்கு தேவையான மான்யம் வழங்கிட ஏற்பாடு செய்யுங்கள். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்துமே தங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு மான்யங்கள் அளிக்கின்றன. எந்த அளவிற்கு அவை வளர்ச்சி அடைந்துள்ளனவோ அந்த அளவிற்கு விவசாயிகளுக்கு மான்யங்கள் அளிக்கின்றன என்கிறார்.
எனவே, விவசாயிகளுக்கு நம்பிக்கை தரக்கூடிய நடவடிக்கைகளில் துரிதமான செயல்பாடே வீழ்ந்துவரும் விவசாயப்பரப்பை உற்பத்தியை பெருக்குவதற்கு வழிவகை செய்திடும்.
- மதுரை சு.கிருஷ்ணன் (94428 82923)