நவம்பர் 7-ந் தேதி நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டம்பட்டி ஆகிய ஊர்களில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் குடியிருப்புகள் ஆதிக்க சாதியினர்களால் தீக்கிரையாக்கப்பட்டதும், அவர்களுடைய மிதி வண்டிகள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவை கொளுத்தப்பட்டதும், அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பணமும், நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதும், அவர்கள் வீட்டிலிருந்த பள்ளிச் சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள் போன்றவை கிழித்தெறியப்பட்டதும் சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், நீதியையும் நேசிப்பவர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 அதே சமயத்தில், ஆதிக்க சாதிகளுக்கிடையே, தலித் மக்களுக்கு எதிரான ஒரு அரசியல் அணி சேர்க்கைக்கான தூண்டுதலை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்பதை அதைத் தொடர்ந்து வந்த நிகழ்வுகள் சுட்டி காட்டுகின்றன.

நாடகத் திருமண எதிர்ப்பாளர்கள்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் இராமதாஸ் தலித் மக்களின் மீதான தாக்குதலை நடத்தியவர்கள் வன்னியர்களும், தங்கள் கட்சியினரும் அல்ல என்ற மிகப் பெரும் பொய்யை நாக்கூசாமல் கூறிவருவதோடு மட்டுமல்லாமல், அத்தாக்குதலில் மற்ற சாதியினரும் கலந்து கொண்டுள்ளனர் எனக் கூறி ஆதிக்க சாதிகளின் அணி சேர்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், தலித் மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தைத் திருத்தக் கோரி ஆதிக்க சாதிகளின் கூட்டத்தையும் கூட்டியுள்ளார்.

மேலும், சாதிய மறுப்புத் திருமணங்களை, குறிப்பாக தலித் இளைஞர்களுக்கும் ஆதிக்க சாதிப் பெண்களுக்கும் நடக்கும் இடையில் நடக்கும் திருமணங்களை நாடகத் திருமணங்கள் எனக் கடுமையாக விமர்சித்தும் வருகிறார். பணத்திற்காகவும், சொத்திற்காகவும் மட்டுமே தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதியிலுள்ள வசதி படைத்த வீட்டுப் பெண்களை காதலிப்பது போல நடித்துத் திருமணம் செய்து கொள்வதாகவும், எண்ணம் நிறைவேறியதும் அப்பெண்களைக் கைவிட்டு விடுவதாகவும் குற்றம் சுமத்திச் சாதிய மறுப்புத் திருமணத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி வருகிறார். அதற்கு ஆதரவாகப் புள்ளி விவரங்களையும் அள்ளி வீசி வருகிறார் (அவை எவ்வளவு தூரம் உண்மையானவை என்பது கேள்விக்குரியவை).

கலாச்சாரக் காவலர்கள்

இத்தகைய பரப்புரைகளில், இன்னொரு ஆதிக்க சாதியான கொங்கு வேளாளக் கவுண்டர்களின் பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகமும் ஈடுபட்டுள்ளன. சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிரான உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் ஒரு கூட்டத்தையும் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை அண்மையில் கோவையில் நடத்தியது. மேலும், கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கென ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் இருக்கிறது என்றும், அதனால் அந்தக் கலாச்சாரத்திற்கு மாறான கலாச்சாரத்தைக் கொண்ட சாதிகளில் வேளாளக் கவுண்டர் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அத்திருமணங்கள் வெற்றிகரமாக அமையாது என்றும், அதனால் ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட சாதிக்குள் திருமணம் செய்து கொள்வதுதான் சரியானது என்றும் சாதிய மறுப்புத் திருமணத்திற்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி வருகின்றனர். கொங்கு வேளாளர்களின் கலாச்சாரக் காவலர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களுடைய வாதங்களின் போலித் தன்மையையும், உண்மையில் இவர்கள் யாருடைய நலன்களுக்காக இருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

சாதி மறுப்புத் திருமணங்களில் பெரும்பான்மை தோல்வியில் முடிகின்றன என்றும், எனவேதான் தாங்கள் அதை எதிர்ப்பதாகவும் ஆதிக்க சாதியினர் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றனர். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது எனப் பார்ப்போம்.

ஒரே சாதிக்குள் நடக்கும் திருமணங்கள் தோல்வியடைவதில்லையா?

இன்றைய நிலையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரும் நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் மட்டும் மணவிலக்குக் கோரும் வழக்குகள் பல்லாயிரக்கணக்கில் நிலுவையில் உள்ளன. எடுத்துக்காட்டாக, கோவையிலுள்ள குடும்ப நீதி மன்றத்தில் மட்டும் இன்றைய நிலையில் சுமார் 4000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வழக்குகள் மணவிலக்கு கோரித் தமிழ் நாட்டில் உள்ள நீதி மன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறன. இவை அனைத்தும் ராமதாசும் பிற ஆதிக்க சாதியினரும் கூறி வருவதைப்போல உறுதியாகச் சாதி மறுப்புத் திருமணங்கள் அல்ல. இவைகளில் 90 விழுக்காட்டிற்கும் மேலான திருமணங்கள் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்டு, ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் நிச்சயிக்கப்பட்டு அவரவர்களுடைய சாதிக்குள்ளேயே நடைபெற்ற திருமணங்கள் தான். இவை ஏன் தோல்வியடைந்தன? ராமதாஸ் பார்ப்பதைப் போல சாதி என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மட்டும் பார்த்தால் அவர் வந்த முடிவுக்கு நேர் எதிரான முடிவுக்குத்தான் நம்மால் வர முடியும். அதாவது ஒரே சாதிக்குள் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்டு நடக்கும் திருமணங்கள் தோல்வி அடைகின்றன என்ற முடிவுக்குத்தான் வர முடியும். அதை அவர் ஏற்றுக்கொள்ளத் தயாரா?

மேலும் 'தலித் இளைஞர்களுக்கும் தலித் அல்லாத பிற சாதிகளைச் சார்ந்த பெண்களுக்கும் இடையில் நடக்கும் காதல் திருமணங்கள் நாடகத் திருமணங்கள்; அதனால்தான் அவை நீடிப்பதில்லை; மணமுறிவில் முடிகின்றன' எனக் கூறும் ராமதாஸ் ஒரே சாதிக்குள் நடக்கும் நடைபெறும் திருமணங்களின் முறிவுக்கு என்ன காரணம் கூறுகிறார்? அவையும் நாடகத் திருமணங்கள்தானா? அவையும் சொத்துக்காக ஏமாற்றிச் செய்யப்படும் திருமணங்கள்தானா?

இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட சாதியினருக்கு இடையில் நடக்கும் சாதி மறுப்புத் திருமணங்கள் தோல்வியுறுகின்றன எனக் கூறும் கலாச்சாரக் காவலர்கள் ஒரே சாதிக்குள் நடக்கும் திருமணங்களும் ஆயிரக்கணக்கில் தோல்வி அடைந்துள்ளதற்கு என்ன காரணங்களைக் கூறப் போகிறார்கள்? அவை தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்தால் பல்வேறு சமூகப் பொருளாதார, உளவியல் மற்றும் உடற்கூறு சார்ந்த காரணங்கள் அடிப்படையாக இருப்பதை அறியலாம். இக்காரணங்களினால்தான் சில சாதி மறுப்புத் திருமணங்களும் தோல்வி அடைகின்றன. ஆனால் ராமாதாசும், கலாச்சாரக் காவலர்களும் வாதிடுவதைப் போல அதற்குக் காரணம் சாதி மறுப்புத் திருமணங்களாக அவை இருப்பதுதான் என்பதல்ல. மாறாக, பெரும்பான்மையான சாதி மறுப்புத் திருமணங்கள் வெற்றி பெற்றே உள்ளன.

சாதிய மற்றும் வர்க்க சமூகத்தில் உண்மையான காதலுக்கு இடமில்லை!

சாதி மறுப்புத் திருமணத்தைக் கடுமையாக எதிர்க்கும் ஆதிக்க சாதியினர் தங்கள் சாதிக்குள்ளேயே ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண்ணை ஒரு ஏழை வீட்டு இளைஞன் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக் கொள்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. சொத்துக்காகவே காதலிப்பது போல நடித்துத் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறான் என்ற அதே வாதத்தைத்தான் இங்கும் அவர்கள் வைத்துக் கடுமையாக அதை எதிர்க்கிறார்கள். எனவே இறுதியாக அவர்களுடைய நோக்கம் சாதியையும், கலாச்சாராத்தையும் காப்பாற்றுவதல்ல. தங்களுடைய சொத்துடமையைக் காப்பாற்றுவதுதான். அவர்களுடைய நோக்கம் எல்லாம் தங்கள் சாதிக்குள்ளேயே தங்களுக்குச் சமமான அல்லது தங்களை விட அதிகமான அளவு சொத்துடைமை கொண்டவர்களுடன் திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், அதன் மூலம் தங்களுடைய உடைமையைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான். சாதிய மற்றும் வர்க்க சமூகத்தில் உண்மையான காதலுக்கு இடமில்லை. இங்கு திருமணங்கள் சாதிய மற்றும்  வர்க்க உறவால் தீர்மானிக்கப்படுகின்றன.

கலாச்சாரத் தனித்தன்மை!

சாதி மறுப்புத் திருமணங்களால் தங்களுடைய தனித் தன்மை வாய்ந்த (சாதியக்)கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனப் பரப்புரை செய்து வரும் "கலாச்சாரக் காவலர்கள்" உண்மையில் அத்தனித்தன்மையைக் காப்பாற்றி வருகிறார்களா எனப் பார்ப்போம்.

நிலவுடைமை ஆதிக்கச் சாதியைச் சார்ந்த அவர்களின் தொழில் ஒரு காலத்தில் விவசாயம் மட்டும்தான். ஆனால் இன்றோ அவர்கள் விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கவில்லை. நெசவுத் தொழில், உணவு விடுதிகள் நடத்தல், மோட்டார் தொழில், அழகு நிலையம் நடத்துதல், தோல் பதனிடும் தொழில் என இன்று இலாபம் தரும் தொழில்கள் எதையும் நடத்த அவர்கள் தயாராக இருக்கிறார்கள். நிலவுடைமைச் சமூகத்தில் இத் தொழில்கள் அனைத்தும் பிற சாதிகளால் செய்யப்பட்டு வந்தவை. எப்பொழுது அவர்கள் தங்கள் சாதிக்கான தொழிலை விட்டு வெளி வந்தார்களோ அப்பொழுதே அவர்களுடைய சாதியக் கலாச்சாரம் அழியத் தொடங்கி விட்டது.

அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கமும், உடைக் கலாச்சாரமும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. மாட்டு வண்டியில் பயணம் செய்தவர்கள் இன்று கார்களில் உலா வருகிறார்கள்.ஒரு காலத்தில் இவர்கள் கிராமப்புற எல்லைகளைக் கூடத் தாண்டியதில்லை.ஆனால் இன்றோ இவர்களுடைய குழந்தைகள் நகரங்களிலும், வெளி நாடுகளிலும் கல்வி பயின்றும், பணியாற்றியும் வருகிறார்கள். தங்களுடைய குழந்தைகளுக்கு தம் குல தெய்வங்களின் பெயர்களையும், முன்னோர்களின் பெயர்களையும், தமிழ்ப் பெயர்களையும் சூட்டுவதை விட்டுவிட்டுப் பொருள் தெரியாத வடமொழிப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். பார்ப்பனியச் சாதிக் கலாச்சாரத்தில் ஊறிப்போன இவர்கள் பார்ப்பனிய வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதன் மூலம் தங்களைப் பார்ப்பனர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.(தலித் மக்களுடன் இணைந்தால்தான் அவர்களுடைய கலாச்சாரம் அழிந்து விடும் போலும்.).

இவர்களைப் பொறுத்தவரை தலித்துகள் மாட்டுக் கறி சாப்பிடுவதால் தாழ்ந்தவர்கள்; தீண்டத் தகாதவர்கள். ஆனால் மாட்டுக் கறி சாப்பிடும் வெள்ளைக்காரர்கள் மட்டும் இவர்களுக்கு உயர்ந்தவர்கள். ஏனெனில் அவர்கள் நம்மை ஒரு காலத்தில் ஆண்டவர்கள் அல்லவா? இன்றும் கணினிப் படிப்புப் படித்த அவர்களுடைய குழந்தைகளுக்கு வெளி நாடுகளில் வேலை தந்து வாழ்வளித்து வரும் எஜமானர்களாகவும் அவர்கள்தானே இருக்கிறார்கள்! அதனால் அவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களுடைய மொழியே இவர்களின் மொழியும் ஆயிற்று. அயல் நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்குப் பயன்படாத தாய் மொழித் தமிழ் இவர்களுக்கு தலித்துகளைப் போலவே தீண்டத் தகாத மொழியாகிவிட்டது.

இவ்வாறு தொழில், மொழி, உணவு, உடை என அனைத்திலும் இவர்கள் மாறியுள்ளார்கள். இவ்வளவு மாற்றங்களுக்குப் பிறகும் இவர்கள் தங்களுடைய கலாச்சாரத்தை ஒரு சிறிதும் விண்ணம் படாமல் கட்டிக் காப்பாற்றி வருவதாகவும், சாதி மறுப்புத் திருமணத்தால் மட்டுமே தங்களுடைய கலாச்சாரத்திற்கு ஆபத்து வந்து விட்டது போலவும் கதறுகிறார்கள். என்னே நாடகம்!

சாதியைக் காப்பாற்றும் அகமணமுறை

இவர்களுக்குள் இன்னும் எஞ்சியுள்ள கலாச்சாரம் என்பது சாதிக்குள்ளான திருமண முறை மட்டும்தான். ஒரே சாதிக்குள் நடக்கும் இந்த அகமண முறைதான் சாதியத்தை இன்றளவும் உடையாமல் காப்பாற்றி வருகிறது. சாதி மறுப்புத் திருமணங்கள் சாதியத்தின் அடிப்படையைத் தகர்த்தெறியக் கூடியவை. அதனால்தான் ஆதிக்க சாதியினர் அதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். மற்ற கலாச்சார மாற்றங்கள் அனைத்தும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையையும், பொருளாதார வளர்ச்சியையும் அளித்ததால் அவற்றை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் சாதிய உடைவு என்பது அத்தகையதல்ல.

ஏனென்றால் சாதி என்பது ஒரு அதிகாரக் கட்டமைவோடு இணைந்தது ஆகும். சாதியின் அடிப்படையிலேயே ஆதிக்க சாதிகள் தங்களுடைய சமூக மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. சாதி அடிப்படையிலான தங்கள் பலத்தைப் பெருக்கிக் காட்டுவதன் மூலம் அரசியல் அதிகாரப் பேரத்தில் பெரும் பங்கைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எனவே சாதியை இழப்பது என்பது சாதிய அடிப்படையில் பெறக்கூடிய சமூக மேலாதிக்கத்தையும், அரசியல் அதிகாரத்தையும் இழப்பதாகும். எனவேதான் சாதியைக் கட்டிக் காப்பதில் ஆதிக்க சாதிகள் வெறியாக இருக்கின்றனர். புறநிலை எதார்த்தங்கள் சாதியக் கட்டமைவை எவ்வளவுதான் தகர்த்து வந்தாலும் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சாதிய மேலாதிக்கம் என்ற அவர்களுடைய கடந்த காலச் சொர்க்கம் இழந்த சொர்க்கம் ஆகிவிட்டதே என வேதனைக்கு உள்ளாகின்றனர். எப்படியாவது அதை மீண்டும் கட்டமைத்து விட முடியாதா எனக் கடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சமூக மாற்றம் என்ற வரலாற்றுச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்தி விடலாம் எனப் பகற்கனவு காணுகின்றனர்.

வாழ்வியல் நெருக்கடிகள்

மேலும், நிலவுடைமை ஆதிக்க சாதியினர் பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் இன்று சில கடுமையான வாழ்வியல் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர். உலகமயமாக்கல், தாரளமயமாக்கல் ஆகிய பெயர்களில் நடை பெற்று வரும் ஏகாதிபத்தியத்தின் ஊடுருவலாலும், ஏற்றத்தாழ்வான முதலாளிய வளர்ச்சியினாலும் இன்று விவசாய உற்பத்தி கடுமையான சிக்கலில் உள்ளது. விளை பொருள்களுக்குப் போதிய விலை கிடைக்காமை, அதே சமயத்தில் விதை, உரம், பூச்சிகொல்லி போன்ற இடுபொருள்களின் பன்மடங்கு விலையேற்றம், விவசாயத்திற்காகக் கந்து வட்டிக்காரர்களைச் சார்ந்து இருத்தல், மின்வெட்டு, போதிய நீர்ப்பாசன வசதி இல்லாமை, ஆள் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் விவசாயம் அழிவுக்கு உள்ளாகி வருகிறது.

ஒரு காலத்தில் நிலவுடைமை ஆதிக்க சாதியினர் தமது பெண்களை நிலவுடைமையாளர் குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு மட்டுமே திருமணம் செய்து கொடுக்க விரும்பினர். இளைஞர்கள் நல்ல வருமானம் வரக்கூடிய வேலையில் இருந்தால்கூட, அவர்களுக்கு நிலம் சொந்தமாக இல்லாவிட்டால் பெண் தர மாட்டார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. விவசாயத்தை மட்டும் நம்பியுள்ள இளைஞர்களுக்கு இன்று யாரும் பெண் கொடுக்கத் தயாராயில்லை. விவசாயத்துடன் வேறு தொழிலோ அல்லது வேலையோ உள்ள இளைஞர்களுக்கு மட்டும்தான் பெண் கிடைக்கும். அந்த அளவுக்கு இன்று விவசாயம் நிலையற்றதாக, கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக மாறியுள்ளது. அதனால் விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் நிலவுடைமை ஆதிக்க சாதியிலுள்ள சிறு மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குத் திருமணம் இன்று பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் இன்னொரு காரணத்தைக் கொங்குப் பகுதியில் நிலவுடைமை ஆதிக்க சாதியாக இருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எதிர் கொண்டுள்ளனர். பெண்களுக்கான வரதட்சணையை அதிகம் எதிர்பார்க்கும் சாதி அது. அவர்களைப் பொருத்தவரையில் ஆண் குழந்தை என்றால் வரவு. பெண் குழந்தை என்றால் பெரும் இழப்பு. எனவே பெண் குழந்தையைப் பெற அவர்கள் விரும்புவதில்லை. அதன் காரணமாக அந்தச் சாதியில் பிறப்பு விகிதத்தில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விடப் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு. அதனால் திருமண வயதில் உள்ள அந்த சாதி இளைஞர்களுக்கு அந்த சாதிக்குள்ளேயே பெண் கிடைப்பது இன்று பெரும் சிக்கலாக உள்ளது. ஆனால் இந்தப் பிற்போக்கான வரதட்சணைக் கலாச்சாரத்தை எதிர்த்து இந்த ஆணாதிக்கக் கலாச்சாரக் காவலர்கள் இதுவரை எந்தக் குரலையும் எழுப்பியதில்லை.

இக்காரணங்களினால் இன்று கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்த பல இளைஞர்கள் கேரளா சென்று அங்குள்ள மலையாளப் பெண்களைத் திருமணம் செய்து வருகின்றனர். வாழ்வியல் நெருக்கடி அவர்களைச் சாதி உடைப்பாளர்களாக மட்டுமல்லாமல் தேசிய இனத்தின் அடையாளத்தையும் உடைப்பவர்களாக மாற்றியுள்ளது.

சாதிய அரசியலுக்கு மரண அடி

இவ்வாறு ஏகாதிபத்திய ஊடுருவலால் சிதைந்துபோன விவசாயமும், ஆதிக்க சாதியினர் பின்பற்றி வரும் பிற்போக்கான கலாச்சாரமுமே அந்த ஆதிக்க சாதிகளிலுள்ள பெரும்பான்மையான மக்களின் பிரச்சினைகளுக்குக் காரணங்களாக உள்ளன. ஆனால் ஆதிக்க சாதிகளிலுள்ள அரசியல்வாதிகளும், அவர்களது சமூக அடித்தளமாக இருக்கும் அந்த சாதிகளைச் சேர்ந்த பெரும் நிலவுடைமையாளர்களும், பணக்கார விவசாயிகளும் பிரச்சினையைத் திசை திருப்புகின்றனர். தங்களுடைய சாதியைச் சேர்ந்த பெண்களைத் தலித் இளைஞர்கள் சொத்துக்காக ஏமாற்றித் திருமணம் செய்து கொள்வதால்தான் தங்களுக்குப் பெண்கள் கிடைப்பதில்லை என்றும், அவை நாடகத் திருமணங்கள் என்றும், அவை வெற்றி பெறுவதில்லை என்றும், அவற்றை எதிர்க்க வேண்டும் என்றும் பொய்யான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதைச் சாதியப் பிரச்சினையாக மாற்றி தலித்துகளுக்கு எதிரான சாதிய அணி திரட்டலில் ஈடுபட்டுள்ளனர். அதன் மூலம் அரசியல் அதிகாரத்திற்கான பேரத்தில் தங்களுடைய பலத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர்.

மேலும் அவர்களுடைய அணி திரட்டல் தலித்துகளுக்கு மட்டும் எதிரானதாக அமையவில்லை. அவர்களுடைய சொந்த சாதிகளில் உள்ள பெண்களின் சுதந்திரத்திற்கு எதிராகவும் அவர்களுடைய அணி திரட்டல் அமைந்துள்ளது. பெண்களின் படிப்புக்கு எதிராகவும், அவர்கள் வேலைக்குச் சென்று சுயமாகத் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு எதிராகவும் இன்று ஆணாதிக்க சாதி வெறியர்கள் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது மோசமான பின்விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும். இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சாதிய அடிப்படையில் மக்களைப் பிரித்து மோதவிட்டு அதில் அரசியல் இலாபம் அடையவும், பெண்களின் சுதந்திரத்தை ஒடுக்கவும் முயற்சி செய்யும் இவர்களுடைய சதித் திட்டத்தை சாதி எதிர்ப்பாளர்களும், பெண் விடுதலைக்காக நிற்பவர்களும், ஜனநாயகத்தை நேசிப்போரும், சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டோரும் ஓரணியில் திரண்டு அம்பலப்படுத்த வேண்டும். இவர்களுடைய ஆணாதிக்க, சாதிய அரசியலுக்கு மரண அடி கொடுக்க வேண்டும். 

Pin It