'தாழ்த்தப்பட்டோர் - பல வண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்' என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் இதற்கு முன்பு வெளியிட்டிருந்தோம். அதில், "ஆளும் வர்க்கங்கள் நடைமுறைப்படுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் வாழ்விழந்து நிற்கும் விவசாயிகள், நெசவாளிகள் உட்பட நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஆளும் கும்பலுக்கு எதிராக வெறுப்பும், ஆத்திரத்தையும் கொண்டுள்ளனர். ஆளும் கும்பலுக்கு எதிராக மக்கள் வெறுப்பும், ஆத்திரமும் கொள்வதற்கு எது காரணமாக உள்ளதோ அதே காரணம்தான் பாமக உட்பட அனைத்து சாதிவெறி அமைப்புகள், பிழைப்புவாதிகள் மீதான மக்களின் அவநம்பிக்கைக்கும், அவர்களிடமிருந்து விலகி நிற்பதற்கும் காரணமாக அமைகிறது. மேற்கண்ட இருதரப்பினருக்கும் ஏற்படும் நெருக்கடி ஒரே புள்ளியில் இருந்துதான் துவங்குகிறது. இதன் காரணமாகத்தான் பாமக ராமதாஸ் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு எதைத் தீர்வாக முன்னெடுக்கிறாரோ, அதுவே ஆளும் வர்க்கங்களின் நெருக்கடியை தீர்ப்பதற்குமான தீர்வாகவும் அமைகிறது. இதன் காரணமாக இவ்விரு பிரிவினரும் ஒன்றிணைந்து செல்வதும் தவிர்க்கவியலாத செயல்" என்பதை தெளிவுபடுத்தியிருந்தோம்.

dalith_colony_643

இக்கட்டுரையை படித்த செல்வன் என்ற வாசகர் “ஐயோ.. படிக்க படிக்க தலை சுத்துதே.. எவனும் யோக்கியன் இல்லே – நு மக்களுக்கும் தெரியும். எந்தக் கழகமானாலும், கட்சியானாலும், தலைவரானாலும், அது புரட்சிகரமா இருந்தாலும் சரி, புரட்சி இல்லாம இருந்தாலும் சரி. அடுத்த சம்பவம் நடக்குற வரைக்கும் தர்மபுரிய வெச்சு ஓட்ட வேண்டியதுதான்”, என்று தனது எண்ணத்தைப் பதிவு செய்துள்ளார்.

சில வாசகர்கள் எமது கட்டுரையில் உள்ள செய்திகள் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், மகஇக குழும அமைப்புகளும் இப்படித்தானா என்று எண்ணும்போது மிகுந்த வேதனையாக உள்ளது என்றும் தொலைபேசி வாயிலாக எம்மோடு தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

மற்றொரு வாசகர், "தங்களின் கட்டுரை ஒட்டுமொத்தமாக புரட்சிகர அமைப்புகளின் மீதே அவநம்பிக்கையை ஏற்படுத்துவதைப் போன்று உள்ளது. எனவே கட்டுரையை வேறு வகையில் எழுதியிருக்கலாமோ என்று கருதுகிறேன்" என்று கூறினார்.

மொத்தத்தில் தமிழகத்தில் செயல்படும் ஒரே புரட்சிகர அமைப்பு தாங்கள்தான் என்று உரிமை பாராட்டிக் கொள்ளும் மகஇக குழுமம், கடந்த 40 ஆண்டுகளாக அவர்கள் இலக்கில் குறிப்பிடும் எதையுமே சாதித்து விடவில்லை. ஆனாலும் இந்த அமைப்பாவது இருக்கிறதே என்று ஆறுதல் பல தரப்பிலும் இருப்பதையும், அதுவும் இப்போது இல்லாமல் போய்விடுகிறதே என்ற ஆதங்கமும் மேற்கண்ட வாசகர்களின் கருத்துகளில் வெளிப்படுவதையும் நாங்கள் உணர்கிறோம்.

ஆறுதலை மட்டுமே தரக்கூடிய அமைப்பைக் கொண்டு, சமூகத்தில் நடைபெறும் பல்வேறு அநீதிகளை எதிர்கொள்வதோ, இவைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி முறியடிப்பதோ, அதிலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதோ சாத்தியமே இல்லை. இந்த அமைப்புகளின் செயல்பாடுகளின் மூலம் ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோத செயலை மூடி மறைக்கவும், மக்களை சாந்தப்படுத்தவுமே முடியும்.

மகஇக குழும அமைப்புகளின் இலக்கும் மக்களைத் திரட்டுவதோ, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதோ அல்ல. கடந்த 40 ஆண்டுகளாக அவர்களின் இலக்கு முன்னணியாளர்களை வென்றெடுப்பது மட்டுமே!

இப்படி வென்றெடுக்கும் நபர்களைக் கொண்டு புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகியவற்றை விற்பனை செய்வது, பேருந்துகளில் மக்களுக்குப் புரியாத, விளங்கிக் கொள்ள முடியாத விடயங்களைப் பேச வைப்பது (இப்படிப் பேசுபவர்களே தாங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் கொஞ்சநாளில் ஓடி விடுவது என்பது வேறு கதை) ஆகியவைதான். இவைகளை செய்வதும் ஒன்றிரண்டு முன்னணியாளர்களை வென்றெடுப்பதற்காகத்தான். இப்படி வென்றெடுக்கும் முன்னணியாளர்களை சமூக யதார்த்தத்திற்குப் புறம்பானவர்களாகவும், சுய சிந்தனையற்றவர்களாகவும், தாங்கள் உருவாக்கும் கற்பனை உலகில் வாழ்பவர்களாகவும் மாற்றுவதுதான். அதாவது அவர்களை சிந்தனை ரீதியாக காயடிப்பதுதான் இவர்களின் நாற்பதாண்டு கால புரட்சிகர சாதனை!

மேலே கண்ட சாராம்சத்தை உடைய இந்த அமைப்பின் தன்மையைக் கொண்டுதான், இது புரட்சிகர அமைப்பு அல்ல என்பதையும் சமரச, சீர்திருத்தவாத அமைப்பாக சீரழிந்து போன இவர்கள், பிழைப்புவாத சகதியில் மூழ்குவதும் தவிர்க்க வியலாத ஒன்றாகி விட்டது என்பதையும், தாழ்த்தப்பட்டோர் ஆதிக்க சாதி வெறியை எதிர்கொள்ள இப்போதைய நிலையில் தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் ஏதும் இல்லை என்பதையும் வரையறுத்துக் கூறியுள்ளோம்.

இப்படி நாங்கள் வரையறுத்துள்ளதாலேயே தமிழகத்தில் புரட்சிகர சக்திகள் உருவாவதற்கான அடிப்படை இல்லை என்பதோ, இனியும் உருவாகாது என்பதோ இதன் பொருளல்ல. அதே வேளையில் புரட்சிகர அமைப்புகள் இனி எப்படி கட்டமைக்கப்பட வேண்டும், செயல்பட வேண்டும் என்பதை தர்மபுரி நிகழ்வு கன்னத்தில் அறைந்தாற் போன்று நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் ஒன்றுபட்ட நக்சல்பரி இயக்கம் பின்னர், மக்கள் யுத்தக்குழு, மாவோயிஸ்டுகள் செயல்பட்டவரைதான் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்னிய சாதிவெறி வெளிப்படமால் இருந்துள்ளது. இதற்கு மேலே கண்ட நக்சல்பரி புரட்சிகர இயக்கங்களில் தாழ்த்தப்பட்டோர் பெருமளவில் இருந்ததும், அதிலும் அவர்கள் ஆயுதம் ஏந்தி நின்றார்கள் என்பதுதான் ஆதிக்க சாதி வெறி வாலை சுருட்டிக் கொண்டிருந்ததற்குக் காரணமாக இருந்துள்ளது. இதை, இந்த சம்பவத்தைப் பற்றி நேரடி கள ஆய்வு செய்துள்ள அனைவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

நக்சல்பரி புரட்சிகர அமைப்புகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை மட்டுமே பெருமளவு சார்ந்துள்ளது. தம்மை மேல்சாதி என்று கருதிக் கொள்வோரில் முன்னணியாளர்களை மட்டுமே இவர்களால் வென்றெடுக்க முடிந்துள்ளது. இது நமக்கு புலப்படுத்தும் செய்தி என்னவென்றால் மேல்சாதிகள் என்று தம்மைக் கருதிக் கொள்ளும் மக்களைத் திரட்டுவதில் புரட்சிகர அமைப்புகள் தோல்வியையே சந்தித்துள்ளன என்பதைத்தான்.

இந்தத் தோல்வி சமவெளிப்பகுதி மக்களை வென்றெடுப்பதில் நக்சல்பரி இயக்கங்கள் தோல்வி அடைந்துவிட்டதாக வேறொரு வகையில் புரிந்துகொள்ளப்படுகிறது. இதை இந்தியா முழுக்க உள்ள ஜனநாயக, புரட்சிகர சக்திகள் அனைவருமே ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த உண்மையை புரட்சிகர அமைப்புகள் ஒப்புக்கொண்டாலும், இதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றியோ, இதை எப்படி மாற்றுவது என்பதைப் பற்றியோ ஏதும் கூறுவதுமில்லை, விவாதிப்பதுமில்லை. இதற்கு இந்திய சமூக வரலாறு பற்றிய புரிதலோ, கண்ணோட்டமோ இவர்களுக்கு இதுவரை இல்லாததுதான் காரணமாகும்.

 உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் உற்பத்தித் துறையில் ஏற்படும் வளர்ச்சியும், முன்னேற்றமும் இந்திய மக்களின் சிந்தனையிலும் அதே அளவிற்கு மாற்றத்தைக் கொண்டு வந்து விடும் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இங்கு எட்டப்பட்டுள்ள வளர்ச்சியும், முன்னேற்றமும் தவிர்க்கவியலாத சமூக வளர்ச்சியின் தேவையில் இருந்து ஏற்பட்டதா என்பதை இவர்கள் கணக்கில் கொள்ளவே இல்லை. தவிர்க்கவியலாத சமூக வளர்ச்சி தேவையிலிருந்து மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவைகள் மக்கள் செயல்பாடுகளின் விளைவாக அவர்களின் சிந்தனா முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று வரை அனைத்து மாற்றங்களும் ஆளும் வர்க்கங்கள் தமது நலனில் இருந்து சமூகத்தின் மீது திணிப்பவைகளே ஆகும். ஆளும் வர்க்கங்கள் தமது நலன்களுக்கு ஏற்ப உற்பத்தியில் திணிக்கும் மாற்றங்களில் மக்களின் பங்களிப்பு, செயல்பாடு ஏதுமில்லாததால், உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் அதே அளவிற்கு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்குவதில்லை.

மக்களின் சிந்தனா முறையில் மாற்றமும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமானால் உற்பத்தியில் ஏற்படும் மாற்றத்தை மக்கள் தமது செயல்பாடுகளின் ஊடாக – போராட்டங்களின் ஊடாக – கொண்டு வந்திருக்க வேண்டும்.

மக்கள் தாங்கள் புதிதாக உருவாக்க விரும்பும் மாற்றங்களை, இதற்கு முந்தைய சமூக அடித்தளத்தின் மூலம் ஆதாயம் அடையக் கூடியவர்களை எதிர்த்து முறியடிப்பதன் மூலமே உருவாக்க முடியும்.

dharmapuri_attack_426

இந்தப் போராட்டம் உற்பத்தியில் மட்டுமல்ல, இதைப் பாதுகாக்க ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டுள்ள பண்பாடு, நாகரீகம், கலை, கலாச்சாரம் உட்பட அனைத்தையும் எதிர்த்து முறியடிப்பது என்பதோடு இவைகளுக்கு மாற்றாக தமது நலன்களுக்கு ஏற்ப புதியனவற்றையும் உருவாக்கிக் கொள்வதாகும்.

இப்படியான ஒரு அனுபவத்தை இந்தியச் சமூகம் இதுவரை தனது வரலாற்றில் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. எனவே தான் உற்பத்தியில் எவ்வளவு பெரிய வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டாலும் அவைகள் கருவிகளில் ஏற்படும் மாற்றமாக மட்டுமே உள்ளது. இவைகள் திணிப்பின் ஊடாக உருவாக்கப்படுவதால், அதை திணிப்பவர்களின் நலனை உள்ளடக்கிய அளவிற்கு மட்டுமே முந்தைய பண்பாடு, நாகரீகம் உட்பட அனைத்திலும் மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இவைகள் தவிர்க்கவியலாத வடிவ மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளன. தாழ்த்தப்பட்டவர்கள் இன்று அனைத்து சாதியினரோடும், பேருந்து, ரயில்களில் சமமாக பயணம் செய்வது, பள்ளிக் கல்லூரிகளில் கல்வி கற்பது, அரசுத்துறைகளில் வேலைபார்ப்பது, செருப்பணிவது உட்பட அனைத்து உரிமைகளும் ஆதிக்க சாதிகள் தமது மனமாற்றத்தின் விளைவாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மனமுவந்து அளித்தவைகள் அல்ல.

தவிர்க்கவியலாத சமூகத் தேவையும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடாப்பிடியான, வீரம் செறிந்த போராட்டங்களின் ஊடாகவும் வென்றெடுத்தவைகளே ஆகும்.

சாதி, தீண்டாமையை சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் முன்பு திணித்து, தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கியவர்கள், இனி அது சாத்தியமில்லை என்பதால், அவைகளை தன்னளவில் – எல்லையை- சுருக்கிக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்றனர்.

தமது நலன்களுக்கு உகந்த வகையில் தாழ்த்தப்பட்டோரை சமூக செயல்பாடுகளில் ஈடுபட சட்டரீதியாக பாதுகாப்பு அளிக்கும் ஆளும் வர்க்கம், சாதி, தீண்டாமையை ஆதிக்கசாதிகள் தன்னளவில் கடைப்பிடிப்பதை பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கிறது. இதன் வாயிலாக தமக்கெதிராக மக்கள் ஒன்று திரள்வதைத் தடுத்து, தனது நலனை முழு அளவில் பாதுகாத்துக் கொள்கிறது.

ஆனால் இந்தியாவில் உள்ள நக்சல்பரி புரட்சிகர இயக்கங்களோ, 'வாழ்நிலையே சிந்தனையை தீர்மானிக்கிறது' என்ற மார்க்சிய இயங்கியலை யந்திர கதியாக புரிந்து கொண்டு, அதை சமூகத்தின் மீது திணிப்பதையே தமது செயல்பாடாகக் கொண்டுள்ளனர்.

இந்திய சமூக வளர்ச்சி பற்றிய செழுமையான புரிதலைக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே மார்க்சிய இயங்கியலை இங்கு சமூக மாற்றத்திற்கான கோட்பாடாக பயன்படுத்த முடியும். இவர்களால் மட்டுமே இந்திய சமூகத்தில் உள்ள அனைத்து சாதி மக்களையும் – சமவெளிப்பகுதியில் உள்ள மக்களையும் - திரட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முடியும்.

சமூகத்தில் உள்ள அனைத்து சாதி மக்களையும் திரட்டுவதற்கான புரிதலையோ, வழிமுறையையோ கொண்டிராத புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் தம்மிடம் உள்ள ஆயுதங்களின் செயல்பாடுகளை வைத்துதான், தாங்கள் செயல்படும் காலம் வரை சாதிவெறியர்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக மட்டுமே முடக்கி வைக்க முடியும் என்பதைத்தான் தர்மபுரி நிகழ்வு நமக்கு உணர்த்தி உள்ளது.

ஆதிக்க சாதிகளில் ஒன்றிரண்டு முன்னணியாளர்களை வென்றெடுப்பதால் மட்டுமே ஆதிக்க சாதி வெறியை முறியடித்துவிட முடியாது. நாயக்கன் கொட்டாயில் தமிழ்வாணன், சித்தாநந்தன், பச்சியப்பன் போன்ற முன்னணியாளர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதும் அவர்கள் தமது மௌனம், ஒதுங்கிக்கொள்ளல் மூலம் வன்னிய சாதிவெறிக்கு மறைமுகமாக உதவியிருக்கிறார்கள் என்பதும்தான் நடந்துள்ளது.

கீற்று இணையதளத்தில் 'வன்னிய சாதி வெறி சொல்வது என்ன?' என்ற கட்டுரையில் “ஆதிக்கசாதி மக்களிடமும் அமைப்பு பலம் பெற வேண்டும். அம்மக்களிடமும் சாதிய பிற்போக்குத் தனங்களுக்கும், வெறியாட்டத்துக்கும் எதிரான போராட்டங்களை கட்டவிழ்த்து விட வேண்டும்”, என்று தோழர் குணா குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஆதிக்க சாதிகளிடமும் அமைப்பு பலம்பெற என்ன திட்டம் உள்ளது என்பதைக் கூறவில்லையே என்று தோழர் குணாவிடம் வாசகர் சுதிர் மார்க்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விக்கான பதில் தோழர் குணாவிடம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள எந்த ஒரு புரட்சிகர அமைப்பிடமும் இல்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவில் உள்ள அனைத்து புரட்சிகரக் குழுக்களும் ஆதிக்க சாதிகளில் உள்ள ஒன்றிரண்டு முன்னணியாளர்களை தாங்கள் வென்றெடுப்பதையே முன்னுதாரணமாகக் கருதி இதே போன்று ஆதிக்க சாதிகளில் உள்ள பெரும்பான்மை மக்களையும், உழைக்கும் மக்கள் என்ற அடிப்படையில் திரட்டிவிட முடியும் என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை தொடரும் வரை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நமது நாட்டில், சமூக மாற்றம் என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும்.

புரட்சிகர இயக்கங்கள் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களையே பெருமளவு சார்ந்து தமது செயல்களைத் தொடர முடிகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிகள் தமக்கு இழைக்கும் அநீதிகளை எதிர்கொள்ளவும், முறியடிக்கவும் புரட்சியாளர்கள் தோள்கொடுக்கிறார்கள் என்பதால்தான் அவர்களுக்கு தமது ஆதரவை வழங்குகின்றனர்.

dalith_colony_646

தாழ்த்தப்பட்ட மக்கள் புரட்சிகர அமைப்புகளில் இணைவதற்கு எது காரணமாக அமைகிறதோ, அதே காரணம்தான் ஆதிக்க சாதிகளை புரட்சிகர அமைப்புகளிடமிருந்து விலகி நிற்கவும் வைக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவெங்கும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஏறத்தாழ ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தமது உயிரையே பறிக்கும் அவலத்திற்கு எதிராக இம்மக்களை அமைப்பாக்கவோ, போராட வைக்கவோ புரட்சிகர, ஜனநாயக சக்திகளால் இயலவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கலவரங்களில் இவர்களை சாதிவெறியர்களால் அமைப்பாக திரட்ட முடிகிறது. இந்த அளவிற்கு இம்மக்களின் சிந்தனாமுறை - அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களின் சிந்தானா முறை - மிகவும் பிற்போக்கானதாக உள்ளதையும், இப்படிப்பட்ட நிலையிலும் இவர்களை தமது வாழ்நிலை அவலங்களுக்கு எதிராக அமைப்பாக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையே இது நமக்கு உணர்த்துகிறது.

தமது வாழ்நிலை அவலங்களுக்கு எதிராகப் போராடும்போதுதான், தமது நலன்களுக்கு எதிரானவர்களையும், ஆதரவானவர்களையும் மக்களால் உணர்ந்து கொள்ளவும், இதன்மூலம் இவர்களின் சிந்தனைத்திறனை ஜனநாயக தன்மை உடையதாக மேம்படுத்த‌வும் முடியும்.

இப்படி ஆதிக்க சாதிகளின் ஜனநாயக உணர்வு மேம்படுமேயானால் தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்களுடன் போராட்டக் களத்தில் இணைவதற்கு தடைக்கல் ஏதும் இருக்கப் போவதில்லை.

தம்மை மேல்சாதி என்று கருதும் மக்களை அமைப்பாக்குவதற்கும், இதன் ஊடாக இம்மக்களின் சிந்தனையை ஜனநாயகப் பூர்வமாக்குவதற்குமான உள்ளடக்கத்தை உடைய திட்டத்தையும், வழி முறைகளையும் உருவாக்க வேண்டும்.

இக்கட்டுரையில் நாங்கள் கூறியுள்ள கருத்துகளும், 'தாழ்த்தப்பட்டோர் பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்' என்ற கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ள கருத்துகளும் யதார்த்தமான உண்மையான விவரங்களில் இருந்து கிடைக்கும் விடைகளேயாகும். இப்படி நாங்கள் உண்மைகளை பதிவு செய்வது பலருக்கும் சலிப்பையும், அவநம்பிக்கையையும் உண்டாக்குவது போலத் தோன்றினாலும் இப்படிபட்டவர்கள் இந்த சமூக யதார்த்தத்தை மூடிமறைப்பதால், இதுவரை ஏற்பட்டுள்ள, இனி எதிர்காலத்தில் ஏற்படப்போகிற எதிர்றை விளைவுகள் நமக்கு பெரும் இன்னல்களையும், அழிவையுமே தரப் போகிறது என்பதை உணர்வார்களேயானால், தமது அவநம்பிக்கை சிந்தனா முறையை மாற்றிக் கொள்வார்கள். இவைகளை முறியடிப்பதற்கான வழிமுறைகளைக் காண முற்படுவார்கள்.

இதற்கு மாறாக நிலவுகிற சமூக யதார்த்தத்தை மூடி மறைக்க முயலும் செயல்பாடுகள் அனைத்தும் நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாக்கவும், பிழைப்புவாதிகளின் அடித்தளத்தை செழுமைப்படுத்துவதற்கும் பயன்படும்.

நாம் விவாதிக்கும் சமூக சிக்கல்கள் எதுவானாலும், அவைகளை உண்மையிலேயே தீர்த்து சமூக மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அடைய விரும்புகிற புரட்சிகர அமைப்புகள், தனிநபர்கள், குழுக்கள் எவராயினும் அதற்குரிய தீர்வுகளை, உரிய வழிமுறைகளைக் கொண்டு நாட்டின் பெரும்பான்மை மக்களைத் திரட்டி, சமூக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இடையூறாக உள்ள தடைக்கற்களை உடைக்க வேண்டியதே இன்றைய உடனடிக் கடமையாக ஆக்கிக்கொள்ள வேண்டும்!

- சூறாவளி, தொடர்புக்கு: +919842529188, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It