சில பதிவுகளுடன்…

கடந்த மாதம் (அக்டோபர் 6 ஆம் தேதி) மக்கள் சனநாயக குடியரசுக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தபொழுது உளவுத் துறையினரால் “மாவோயிஸ்டுகள்” என்று கைது செய்யப்பட்டோம். சில நாட்கள் முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்தோம்.

வெளிவந்ததும் முதலில் கேள்விப்பட்டது தருமபுரியில் தலித் கிராமங்கள் தாக்கப்பட்டதுதான். அதிலும் முக்கியமாக எங்களது அரசியல் மையமாகச் செயல்பட்ட நத்தம் கிராமம் தாக்கப்பட்டது என்னைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.

எங்களுக்கு கையெழுத்துப் போடும் நிபந்தனையுடன் பிணை கிடைத்ததால் இப்பொழுது நேரில் சென்று பார்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம். இதனால், இக்கொடூர தாக்குதலைப் பற்றிய விவரங்களை ஊடகங்கள், உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள், கட்டுரைகள் என்பதன் ஊடாகவே நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

ஆனால் இந்தத் தாக்குதலுக்கான வரலாற்றுப் பின்னணி ஒரு சிலரால் மட்டுமே, அதுவும் ஓரளவே சொல்ல முடிந்துள்ளது. சிலர் மறைத்தும், பலருக்கு தெரியாமலேயே உள்ளது என்பதாக நாங்கள் உணர்ந்தோம். எனவே மறைக்கப்பட்ட உண்மைகளை (அ) மறந்துவிட்ட உண்மைகளை வெளிக்கொணரவேண்டிய தேவை இருப்பதாக உணர்கிறோம். ஏனென்றால் எங்களது அரசியல் வாழ்க்கை தருமபுரி தலித் மக்களுடனும், வன்னிய உழைக்கும் மக்களுடனும் இரத்தமும் சதையுமாக பின்னிப் பிணைந்தது.

தருமபுரி வரலாறு என்பது 1980-இல் காவல்துறையால் அடித்துக்கொல்லப்பட்ட தோழர் பாலன், 2000-த்தின் தொடக்க ஆண்டுகளில் காவல்துறையுடனான மோதலில் வீரமரணம் அடைந்த கெரில்லாத் தளபதிகள் தோழர் ரவீந்திரன் மற்றும் தோழர் சிவா (எ) பார்த்திபன் போன்றவர்களின் தியாகங்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. மேலும் தேசிய பாதுகாப்புச் சட்டம் (பலமுறை), தடா, பொடா போன்ற கருப்பு சட்டங்கள் பல தோழர்களின் சிறை வாழ்க்கையானது. மேலும் நூற்றுக்கணக்கான இப்பகுதி மக்களும் எண்ணற்ற வழக்குகளை சந்தித்துள்ளனர்.

70-களின் இறுதி ஆண்டுகளில் கூட்டுக்குழுவாக இருந்த நக்சல்பாரி இயக்கம் பின்னர் 1980-இல் மக்கள் யுத்தக் கட்சியாக மாறி 2002 வரை செயல்பட்டது. இந்த 25 ஆண்டுகளாக இயக்கம் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டது.

எழுபதுகளின் இறுதியில் இருந்து 1985 வரை பல்வேறு மக்கள் திரள் போராட்டங்கள் மூலம் திடப்பட்டிருந்தது. 85-இல் ஏற்பட்ட கட்சிப் பிளவும், அரசு அடக்குமுறையும் பின்னடைவை ஏற்படுத்தின. பின்னர் மீண்டும் மக்கள் யுத்தக் கட்சி தன்னைப் புனரமைத்துக்கொண்டு 1987-இல் இருந்து செயல்படத் தொடங்கியது. இதிலிருந்து 1996 ஆம் ஆண்டுவரை சுமார் பத்தாண்டுகள் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக கடும் போராட்ட கட்டமாகவே இருந்தது. 1996-இல் இருந்து 2002 வரை முழுக்கட்டுப்பாடு நிலவிய காலகட்டமாகும்.

தலித் மக்களும் ஆதிக்கசாதி உழைக்கும் மக்களும் இந்த இயக்கப் போக்கில் இணைந்தே செயல்பட்டனர். ஊத்தங்கரை சம்பவத்திற்குப் பிறகு 2002-இல் இருந்து கடந்த பத்தாண்டுகளாக புரட்சிகர செயல்பாடு என்பது இப்பகுதியில் கிடையாது. இதற்கு மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் மக்கள் இயக்கத்தைக் கட்டிய மக்கள் யுத்தக் கட்சி ஆயுதக்குழு வடிவத்தை எடுத்ததே, மக்களிடமிருந்து கட்சியைத் தனிமைப்படுத்த காரணமாகியது.

இது மக்கள் யுத்தக் கட்சியின் ராணுவ அமைப்பு உருவாக்கம் பற்றிய கண்ணோட்டம், அரசியல் அதிகாரத்தை நிறுவுவதைப் பற்றிய நிலைப்பாடு போன்றவற்றின் தவறுகளாலேயே நிகழ்ந்தது. இதே தவறை இன்றுவரை இன்றைய மாவோயிஸ்ட் கொண்டிருப்பதால்தான் அவர்களால் மீண்டும் இப்பகுதியில் செயல்பட முடியவில்லை.

மக்கள்திரள் வழியிலேயே அனைத்து வடிவங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டிருக் கின்ற நாங்கள் மக்கள் யுத்தக் கட்சியின் மக்கள் திரள் போராட்டப் பாரம்பரியத்தை தொடர்வோம் என்று கூறிக்கொள்கிறோம். அதேசமயத்தில் அதன் ஆயுதக்குழு வடிவத்தை நிராகரித்து தருமபுரியின் பின்னடைவை மீட்டெடுப்போம் என்று உறுதிகூறுகிறோம்.

மேலும் மறைக்கப்பட்ட மக்கள்திரள் போராட்ட வரலாற்றைச் சுருக்கமாகவும், சில முக்கிய நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நோக்கிலேயே முதல் கட்டமாக இந்த குறுவெளியீட்டை வெளியிடுகிறோம்.

தோழமையுடன்

துரைசிங்கவேல்

தலைவர்

ம.ச.கு.க.

***

தமிழக மக்களே!

தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியில் அமைந்துள்ள நத்தம், அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி தலித் கிராமங்கள் மீது சாதிவெறி சக்திகள் திட்டமிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு வன்னிய சாதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை தலித் இளைஞன் இளவரசன் காதல் திருமணம் செய்துகொண்டதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

காதல் திருமணம்தான் காரணம் என்றால் காதலித்த தலித் இளைஞன் வீட்டை மட்டும் தாக்கியிருக்கலாம், அதிகபட்சமாகப்போனால் தலித் இளைஞருக்கு துணையாக வந்தவர்களையும் தாக்கியிருக்கலாம். ஆனால் ஆதிக்க சாதிவெறியர்களின் கொடூரத் தாக்குதல் நத்தம் கிராமத்தின் சொத்துக்கள் முழுவதையும் சூறையாடியது. இதையொட்டிய பல்வேறு பத்திரிக்கைச் செய்திகள் தொடர்ந்து வெளிவந்தது நாம் அறிந்ததே.

1

சாதி வெறியாட்டத்தின் பின்னணி என்ன

ஏன் இப்படி நடந்தது? இத்தாக்குதலுக்கான உண்மைக் காரணம் என்ன? நத்தம் தலித் மக்கள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான நீண்ட போராட்டப் பாரம்பரியம் மிக்கவர்கள். மிகச் சிறிய கிராமமாக இருந்தபோதும், சுற்றிலும் வன்னியர் கிராமங்கள் இருந்த நிலையிலும், முன்னாள் மக்கள் யுத்தக் (நக்சல்பாரி) கட்சி தலைமையில் 1992 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டுவரை சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், கந்துவட்டிக்கு எதிராகவும், உழைக்கும் மக்களுக்காகவும், வன்னியர் உழைக்கும் மக்களுடன் சேர்ந்து பல்வேறு வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள்.

தலித் மக்களின் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான மற்றும் முன்னேற்றத்திற்கான போராட்டங்கள்

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே நத்தம் சுற்றியுள்ள வன்னிய கிராமங்களுக்கு செய்துவந்த சாதி இழிதொழிலை நிறுத்தியவர்கள். இதற்காக ஆதிக்கசாதி வெறி சக்திகள் தாக்குதல் முயற்சி யை மேற்கொண்டனர். நத்தம் தலித் கிராமத்தில் வருடா வருடம் நடைபெறும் கொடைகாரம்மன் கோயில் திருவிழாவை ஆதிக்கசாதி வெறித்தாக்குதலுக்கான களமாக மாற்றத் திட்டமிட்டனர். க்யூ-பிராஞ்ச் (உளவுத்துறை) ஆதிக்கசாதிகளின் நலன் காக்கவும், ம.யு. கட்சிப் பலமாக இருந்த நத்தம் கிராமத்தை தாக்கவும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் (வன்னியர் சாதி வெறியைத் தூண்டும்) வேலையைச் செய்தனர்.

தோழர்கள் நத்தம் தலித் மக்கள் மற்றும் வன்னியர் உழைக்கும் மக்களுடன் சேர்ந்து துண்டறிக்கைப் போட்டு வன்னியர் கிராமங்களில் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்தனர். திருவிழா அன்று நத்தம் தலித் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டவர்களை ஒன்றுதிரட்டி திருவிழாவில் தாக்குதல் வந்தால் எப்படி எதிர்கொள்வது எனப் பயிற்சி அளிக்கப்பட்டது. திருவிழாவில் பொங்கல் வைக்க எடுத்துச் செல்லும் விறகுகளுக்கு பதிலாக உருட்டுக்கட்டைகள் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

கோயிலுக்கு அருகில் சில இடங்களில் கற்களைக் குவித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் வயதான பெண்கள், முதியவர்கள், சிறுவர்களைப் பத்திரமாகத் திருப்பி அழைத்து வருவதற்கான ஏற்பாடும் ஊர் மக்கள் அங்கும் இங்கும் கலையாமல் ஒரு படைப்பிரிவைப் போல் இளைஞர்கள் பாதுகாப்புடன் திருவிழாவிற்குச் சென்று திரும்புவது என்றும், தாக்குதல் நிகழும்போது தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஒரு குழுவும், ஊர் மக்களை பாதுகாப்பாக அழைத்துவர ஒரு குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவை அனைத்திற்கும் திட்டவட்டமான தயாரிப்புகள் வேகமாக முடுக்கி விடப்பட்டன. இத்தயாரிப்புக்கான செய்திகள் மெதுவாக வன்னியர் கிராமங்களில் கசிய, ஆதிக்கசாதி வெறி சக்திகள் அரண்டுபோய் தங்களது சாதிவெறித் தாக்குதல் முயற்சியைக் கைவிட்டனர்.

தோழர் பாலன் தலைமையில் 80-களில் நாயக்கன் கொட்டாயில் இருந்த இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நாய்க்கன் கொட்டாயில் இரட்டைக் குவளை வைத்திருந்ததை எதிர்த்துப் போராட திரண்ட நத்தம் தலித் மக்கள் தேநீர்க் கடையில் இருந்த இரட்டைக் குவளைகளைச் சாலையில் போட்டு உடைத்தனர். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ‘இனிமேல் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளைகளை வைக்கக் கூடாது’ என்றும் முழக்கமிட்டனர். முன்பு தோழர் பாலன் காலத்தில் வன்னியர் உழைக்கும் மக்கள் தலைமையில் இரட்டைக் குவளையை ஒழிப்பதற்கானப் போராட்டம் நாய்க்கன் கொட்டாயில் நடைபெற்றது. 1992-இல் தோழர்கள் தலைமையில் தலித் மக்களே தனித்து நின்று போராடி நாய்க்கன் கொட்டாயில் இருந்த இரட்டைக் குவளை முறையை ஒழித்தனர்.

பக்கத்து வன்னிய கிராமமான கோணயம்பட்டியைச் சேர்ந்த மணி என்பவன் நத்தம் தலித் மக்களை இழிவுபடுத்தி வந்தான். கோணயம்பட்டி மக்களிடமும், சுற்றிலும் உள்ள கிராமத்தில் ஆதிக்கசாதி வெறியைத் தூண்டி வன்னியர் சாதியின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று கொண்டிருந்தான். மணியின் சாதிவெறிக்கு எதிராக தலித் மக்களும். வன்னிய உழைக்கும் மக்களும் சேர்ந்து சுமார் 60 தோழர்கள் பல்வேறு கிராமங்களில் மணியின் ஆதிக்க சாதிவெறியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர். கோணம்பட்டியில் பிரச்சாரம் செய்தபோது மணி தலைமையில் கூடிய சாதி வெறிக்கூட்டம் தோழர்களை அடித்து விரட்டியது. மணியில் தலைமையில் நாய்க்கன் கொட்டாயில் மறியல் செய்து முற்போக்கு இளைஞர் அணி (R.Y.L.) தோழர்களை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டது. 20 பேர் கொண்ட சாதிவெறிக் கும்பல் கத்தி கட்டைகளுடன் நத்தம், மத்தங்கொட்டாய் (வன்னிய கிராமம்) பகுதிகளுக்குச் சென்று மிரட்டியது.

இதற்குப் பதிலடியாகத் தோழர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுற்றி உள்ள கிராமங்களுக்குச் சென்று வன்னிய உழைக்கும் மக்களிடம் மணியின் சாதி வெறியை, கட்சி விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தினர். பிறகு நத்தம் தலித் மக்களும், வன்னிய உழைக்கும் மக்களும் இணைந்து நாய்க்கன் கொட்டாய் நடுரோட்டில் மணியின் கால்களை முறித்து, முழக்கமிட்டு, ‘இனிமேல் தலித் மக்களுக்கு எதிராக, கட்சிக்கு எதிராக யார் நடந்தாலும் மக்கள் தக்க பதிலடிக் கொடுப்பார்கள்’என்று எச்சரித்தனர். இந்தப் போராட்டம் சுற்றியுள்ள தலித் மக்கள் மத்தியிலும், வன்னிய உழைக்கும் வர்க்கம் மத்தியிலும் பெரும் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் பெற்றது. அதேவேளை ஆதிக்க சாதிவெறி சக்திகளுக்கும், உழைக்கும் மக்கள் விரோதிகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

நத்தம் தலித் கிராமத்தில் சாராயம் விற்பதை எதிர்த்து நத்தம் தலித் மக்கள் ஒன்று சேர்ந்து சாராயப் பானையையும், சாராயம் விற்ற கேனையும் போட்டு உடைத்தனர். சாராயம் விற்றவனைக் கைதுசெய்யக் கோரி நாய்க்கன் கொட்டாய் சாலையில் ஊர்மக்கள் அனைவரும் திரண்டு சாலை மறியல் செய்தனர். பின்பு நத்தம் கிராமத்தில் ‘மது ஒழிப்புக் கிராமம்’ என்ற விளம்பரப் பலகையை வைத்தனர்.

ஆதிக்க சாதிவெறித் தாக்குதலை எப்படி முறியடிக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி போராட்டமிது:- சாதிவெறித் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஒரு சிறந்த வீரம் செறிந்த உதாரணமாக 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற தருமபுரி நகரின் நடுவில் அமைந்துள்ள கோல்டன் தெரு தலித் மக்களின் போராட்டத்தைக் குறிப்பிடலாம்.

கந்துவட்டிக்காரன் (வன்னியர் சாதியைச் சேர்ந்தவன்) கோல்டன் தெருவில் வசிக்கும் தலித் ஒருவரிடம் பணம் தரவில்லை என்று மிரட்டி அடிக்க, அங்கிருந்த தலித் மக்கள் கந்துவட்டிக்காரனை அடித்தனர். கந்துவட்டிக்காரன் வன்னியர் உழைக்கும் மக்களிடம் சென்று தலித்துகள் என்னை அடித்துவிட்டனர் என்று சாதிய பிரச்சினையாக மாற்றினான். வன்னியர்களைத் திரட்டி அடிக்கவும், தலித் மக்களும் தாக்குதல் தொடுக்க ஒரு சிறிய கலவரம் மூண்டது. பிறகு பின்வாங்கிய கந்துவட்டிக்காரன் ஒரு பெரிய சாதிக் கலவரத்திற்கு திட்டமிட்டான். பின்னர் ஆதிக்க சாதிவெறிக் கும்பலை திரட்டி சுற்றியுள்ள வன்னியர் கிராமங்கள் அனைத்தையும் தாக்குதலுக்கு தயார் செய்யவும் ஆரம்பித்தான்.

உடனடியாக இச்சிக்கலில் தலையிட்ட தோழர்கள், கோல்டன் தெரு இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் கூட்டி சாதி வெறி சக்திகள் தாக்குதல் தொடுத்தால் அதை எதிர்கொள்வதற்கான அனைத்து தயாரிப்புகளையும் மிகவும் திட்டமிட்ட முறையில் ஏற்பாடு செய்தனர். சுற்றியுள்ள தலித் கிராமங்கள், ம.யு. கட்சி செல்வாக்குள்ள வன்னியர் கிராமங்களிலிருந்தும் இளைஞர்கள் திரட்டப்பட்டு கோல்டன் தெரு தலித் மக்களின் தற்காப்பிற்காக குவிந்தனர். இரவும் பகலும் தற்காப்பிற்கான தாக்குதலுக்கு தயாராய் இருந்தனர் கோல்டன்தெரு தலித் மக்கள்.

அதேநேரம் கந்துவட்டியால் பாதிக்கப்படுவது வன்னிய உழைக்கும் மக்களும்தான் என்றும், கந்துவட்டிக்காரனே வன்னியர்களிடம் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டுகிறான், ஆதிக்க சாதிவெறி சக்திகளை ஒருங்கிணைக்கிறான், கோல்டன் தெரு தலித் மக்கள்மீது சாதிவெறித் தாக்குதல் நடந்தால் அதற்கு முழுமுதல் பொறுப்பு அவனே என்றும் சாதிவெறித் தாக்குதல் நடக்கும்பட்சத்தில் அந்த கந்துவட்டிக்காரன் மக்களால் தண்டிக்கப்படுவான் என்ற கருத்துக்களை தாங்கிய துண்டறிக்கை தருமபுரி முழுக்க உடனடியாக விநியோகிக்கப்பட்டது.

ஏற்கனவே மக்கள் விரோதிகள் பலர் மக்களால் தண்டிக்கப்பட்டிருந்த சூழலில் கந்துவட்டிக்காரன் அரண்டுபோய் உடனடி யாக சாதிவெறித் தாக்குதலுக்கான திட்டத்தைக் கைவிட்டதோடு தோழர்களிடம் மன்னிப்புக் கேட்டு ரகசிய தூதும் அனுப்பினான். வெற்றிகரமாக சாதிமோதல் தடுக்கப்பட்டது. தலித் அமைப்புகள், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் அனைத்து சக்திகளும் இந்த நடைமுறை அனுபவத்தைக் கையாண்டால் உழைக்கும் மக்கள் சாதி மோதலில் பலியாவதைக் கட்டாயம் தவிர்க்க முடியும், அதேவேளை சாதி வெறியைத் தூண்டும் சக்திகளைத் தனிமைப்படுத்தி தண்டிக்க முடியும்.

நத்தம் தலித் கிராமத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், தருமபுரியிலிருந்து அரூர் செல்லும் சாலையில் உள்ளது செம்மனஹள்ளி தலித் கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களின் சுடுகாட்டை வளத்தியான் (வெள்ளாளர் - 30 ஏக்கருக்கும் மேல் சொத்துடையவன்) என்பவன் ஆக்கிரமித்து வைத்திருந்தான். தோழர்கள் தலைமையில் கூடிய ஊர் மக்கள் அச்சுடுகாட்டை மீட்க திட்டமிட்டனர். மறுநாள் சுடுகாட்டில் கூடிய தலித் மக்கள் முழக்கமிட்டு வளத்தியான் போட்டியிருந்த வேலியை அகற்றி புதிதாக சுடுகாட்டைச் சுற்றி வேலி போட்டனர். வளத்தியான் சுடுகாட்டு நிலத்தில் வளர்ந்திருந்த தென்னை மரத்திலிருந்த தேங்காய்களைப் பறித்து அனைவரும் குடித்தனர். இப்போராட்டத்தின் மூலம் சுடுகாட்டை மீட்டனர்.

செம்மனஹள்ளி தலித் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அரசு அனுமதி அளித்தது. அதற்காக ஊரின் முக்கிய சாலையில் அமைந்திருந்த வளத்தியான் நிலத்தை ஊர்ப் பெரியவர்கள் கேட்க அவன் தர மறுத்தான் ஊர் தோழர்கள் தலைமையில் கூடிய ஊர் மக்கள் நிலத்தில் கொடியை ஊன்றி இந்த நிலம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட உடைமையாக்கப்பட்ட நிலம் என்றும், வளத்தியான் ஏற்கனவே ஊர் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தவன், செம்மனஹள்ளி உழைக்கும் மக்களால் வளர்ந்தவன் என்ற கருத்துக்களை முழக்கங்களாகப் போட்டனர். உடனடியாக வளத்தியான் நிலத்தை மருத்துவமனை கட்ட வழங்கினான். மக்கள் போராட்டத்தின் வெற்றிச் சின்னமான அந்த மருத்துவமனை இன்றும் மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல் ஊரில் 100-க்கும் மேற்பட்ட குரூப் ஹவுஸ் வீடுகள் கட்ட அரசு அனுமதி வழங்கியிருந்தும் இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்டதால் வீடு கட்டிக் கொடுப்பது தாமதமானது. தோழர்கள் தலைமையில் திரண்ட ஊர் மக்கள் தருமபுரி-அரூர் முக்கிய சாலையில் மறியல் செய்ய, ஓடி வந்த அரசு அதிகாரிகளிடம் திட்டவட்டமாக பேசிய ஊர் மக்கள் குரூப் ஹவுஸ் வீடுகளை உடனடியாக கட்டித்தர அதிகாரிகளிடம் உறுதியை வாங்கி இப்போராட்டத்தில் வெற்றிபெற்றனர். இவ்வாறாக தலித் மக்களுக்கான எண்ணற்ற போராட்டங்கள் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு தாலுக்காக்களில் நடைபெற்றன.

கந்துவட்டிக்கெதிரான போராட்டங்கள்

நாய்க்கன் கொட்டாயில் நத்தம் கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது துறிஞ்சிப்பட்டி என்னும் வன்னியர் கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் முருகேசன் (வன்னியர்) கந்துவட்டியை தரவில்லை என்று கந்துவட்டிக்காரன் அவருடைய வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டான். கந்துவட்டியைக் கொடுத்தால் தான் வீட்டைத் திறப்பேன் என்று மிரட்டியும் சென்றான். தோழர்கள் தலைமையில் நத்தம் தலித் மக்களும், வன்னிய உழைக்கும் மக்களும் 50 பேர் திரண்டு சென்று பூட்டை உடைத்து முழக்கமிட்டனர். திரண்டு வந்த ஊர் மக்களிடம் “இனி அந்தக் கந்துவட்டிக்காரன் மிரட்டினால் அவனை மக்கள் போராட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம்” எனப் பேசிவிட்டு சென்றனர். கந்துவட்டிக்காரன் அதன் பின் மிரட்டுவதைக் கைவிட்டான்.

நுணக்கட்டியூர் (நத்தம் கிராமத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது) என்ற வன்னியர் கிராமத்தில் சங்கர் (வன்னியர்) என்பவர் கந்து வட்டியைக் கட்ட முடியாமல் தவித்தார். சங்கரின் மாடுகளைப் பிடுங்க வந்த கந்துவட்டிக்காரனை ஏற்கனவே திட்டமிட்டு பதுங்கியிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தோழர்கள் சிறைபிடித்தனர். பின்பு அவனை இழுத்து வந்து ஊருக்கு நடுவே நிறுத்தினர். கந்துவட்டிக்காரனை (வன்னியர் சாதியைச் சேர்ந்தவன்) “இனி நான் கந்துவட்டி வாங்க மாட்டேன்,” என்று மன்னிப்பு கேட்க வைத்தனர். இது சம்பந்தமாக கந்துவட்டிக்காரன் அண்ணன் காவல்துறையிடம் வழக்கு கொடுக்க சங்கர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு எதிராகப் போடப்பட்ட துண்டறிக்கையில் ‘கைது செய்யப்பட்ட மூவரும் கூலி வேலை செய்தால் தினமும் எவ்வளவு கூலி கிடைக்குமோ அந்தக் கூலியை அவர்கள் சிறையிலிருக்கும் வரை அவர்களுடைய குடும்பத்தாரிடம் கந்துவட்டிக்காரன் கொடுக்க வேண்டும்’என்றும், ‘வழக்கிற்கான செலவு மற்றும் நீதிமன்றத்திற்கு சென்றுவர போக்குவரத்து செலவு இவற்றையும் கந்துவட்டிக்காரன் உடனடியாக கொடுக்க வேண்டும்’ என்று இருந்தது. மேலும் ‘அப்படி கொடுக்கத் தவறினால் இதுவரை கடன் தராதவர்களின் சொத்தை இவன் பறிமுதல் செய்ததுபோல் இவன் சொத்தை மக்களைத் திரட்டி பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவோம்’ என்றும் இருந்தது. இந்தத் துண்டறிக்கையை தோழர்கள் பிரச்சாரம் செய்ய, கந்துவட்டிக்காரன் ஓடிவந்து தோழர்களிடம் மன்னிப்பு கேட்டு, கைதானவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை திரும்பப் பெற்றான்.

தருமபுரி நகரில் உள்ள கோல்டன் தெருவில் கந்துவட்டிக் காரனுக்கு எதிரான போராட்டம் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு போராட்டம்

 நுணக்கட்டியூரில் கந்துவட்டிக்காரனிடம் சங்கர் உட்பட மூவருக்கு இழப்பீடு வாங்கிக் கொடுத்ததை ஏற்கனவே பார்த்தோம்.

80-களில் செங்கல்மேட்டில் (இது நத்தம் தலித் கிராமத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது) நடந்த இரட்டைக் கொலை வழக்கில் பொய் வழக்குப் போட்டு 10 வருடங்களாக வழக்கிற்காக அலைந்து அல்லல்பட்டு வந்த தோழர்களுக்கும், ஆதரவாளர் களுக்கும் பொய் வழக்கிற்கு காரணமானவனிடம் இழப்பீடு கோரி 100-க்கும் மேற்பட்ட மக்கள் கூடி (நத்தம் தலித் மக்கள் உட்பட) அவனது நிலத்தில் கொடிகளை நட்டு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பொய் வழக்கிற்கு காரணமானவன் மக்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சி, ஓடிவந்து இழப்பீட்டிற்கானப் பணத்தைக் கொடுத்து மக்களிடம் மன்னிப்பு கேட்டான். மக்கள் மன்றத்தைக் கூட்டி பாதித்தவர்களுக்கு அப்பணம் இழப்பீடாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பாலன் காலத்தில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை பாண்டும் அவன் அண்ணனும் காவல்துறையிடம் காட்டிக் கொடுக்க, அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாண்டு அண்ணன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று போராடியும் பணியாததால் அவன் வாழைத் தோப்பு மக்களால் அழிக்கப்பட்டது. இதன் பின்னரே அவன் இழப்பீடு பணத்தைக் கொடுத்தான். அப்பணம் மக்கள் மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேற்கண்ட மக்கள் போராட்டங்களைப் போன்றே 1992-ஆம் ஆண்டிலிருந்து 2002-ஆம் ஆண்டுவரை குறிப்பாக 1996-ஆம் ஆண்டிலிருந்து 2002-ஆம் ஆண்டுவரை மக்கள் யுத்தக் கட்சி (நக்சல்பாரி) தலைமையில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான, உழைக்கும் மக்களுக்கான பலநூறு போராட்டங்கள் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு தாலுக்காக்களில் நடத்தப்பட்டன.

நாய்க்கன்கொட்டாய் சுற்றியுள்ள பகுதியில் இப்போராட்டங்களை நத்தம் தலித் மக்கள், வன்னிய உழைக்கும் மக்களுடன் இணைந்து எடுத்தனர். இதன் மூலம் தலித் மற்றும் வன்னியர் உழைக்கும் மக்களிடையே வர்க்க ஒற்றுமை கட்டியமைக்கப்பட்டது.

மேற்கூறிய போராட்டங்களால் ஆதிக்கசாதி வெறியர்கள், உழைக்கும் மக்கள் விரோதிகள் காவல்துறையிடம் வழக்கு கொடுக்கவே அஞ்சினர். காவல்துறையும் மக்களைக் கைதுசெய்வதை தவிர்த்து போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் தோழர்களுக்கு மட்டும் குறிவைத்தது.

ஊத்தங்கரையில் 2002-ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டார்கள் என்று சொல்லி க்யூ-பிரிவு போலீசாரால் 32 தோழர்கள் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் நத்தம் தலித் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர் ஆவார்கள். நத்தம் அருகே உள்ள மொளகனூர் என்னும் ஆதிக்கசாதிகளின் ஊரைச் சேர்ந்த தோழர்கள் 2 பேர் ஆவார்கள். இந்தக் கைதை ஒட்டி க்யூ-பிரிவு போலீசும், நக்சலைட் ஒழிப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையும் இணைந்து கொடூரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இத்தகைய அடக்குமுறையாலும், மக்கள் யுத்தக் கட்சியின் தவறான செயல் உத்திகளாலும் முன்னாள் மக்கள் யுத்தக் கட்சியின் செயல்பாடானது கிட்டத்தட்ட முற்றிலும் நின்றுபோனது.

நக்சலைட் அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் மற்ற கட்சிகள் எந்த ஊர் மக்கள் போராட்டத்தையும் முன்னெடுக்காமல் வெற்று அரசியல் முழக்கங்களைப் பிரச்சாரம் செய்வதிலும், கட்டப் பஞ்சாயத்து செய்வதிலுமே காலத்தை ஓட்டினர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் மெல்ல மெல்ல சாதிவெறி சக்திகளும் கந்துவட்டிக்காரர்களும் தலைதூக்க ஆரம்பித்தனர். இவர்கள் முன்னாள் மக்கள் யுத்தக் கட்சியின் இதயமாக இருந்த நத்தத்தின் மீது தாக்குதலைத் தொடுக்க நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க...

2

இக்காத்திருப்பு நிறைவேறும் வாய்ப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் காடுவெட்டி குரு, மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் “வன்னியர் பெண்ணை எவன் சாதிமறுப்புத் திருமணம் செய்தாலும் அவனை வெட்டுங்கள்” என்று சாதிவெறியுடன் கொக்கரித்தான்.

அத்தோடு மட்டுமல்லாமல் நத்தம் தலித் கிராமம் மீதான சாதிவெறியாட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு நத்தம் அருகி லிருக்கும் கிருஷ்ணாபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் இதையே கூறினான். (இதே கருத்தையே பல ஆண்டுகளாக கொங்கு வேளாளர் பேரவை போன்ற ஆதிக்க சாதிவெறி சங்கங்களும் கூறிக் கொண்டிருக்கின்றன.) கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் லாபத்திற்காக வன்னியர்களிடம் சாதிவெறியை ஊட்டியது.

சமூக வளர்ச்சியின் அங்கமாக இன்று காதல் திருமணங்கள் அதிகரித்து வருவதும், இதனால் சாதிய அகமணமுறை உடைந்து வருவதும் ஒரு போக்காக படிப்படியாக வளர்ந்துவருகிறது. இதனால் இந்தியா முழுவதும் கௌரவக் கொலைகள் என்பது மிக முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. சாதிரீதியாக வேறுபட்ட இருவர் காதலிப்பதற்கு எதிராக ஆதிக்க சாதி வெறிக்கும்பல்கள் கை கோர்க்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில்தான் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் வன்னியப் பெண்ணை காதலித்து சாதி சாதிமறுப்புத் திருமணம் செய்தார், அதை தங்களுக்கு சாதகமாக்கி ஆதிக்க சாதிவெறி சக்திகளும், கந்துவட்டிக்காரர்களும், வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்து வன்னிய உழைக்கும் மக்களுக்கு சாதிவெறி ஊட்டின. அதற்கு உளவுத்துறையும், காவல்துறையும், ஆதிக்கசாதி கூட்டு (ஜெயலலிதா) அரசும் முழு ஒத்துழைப்பை தர தங்களது நெடுநாள் திட்டத்தை திட்டமிட்டு நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி தலித் கிராமங்கள் மீது சாதி வெறியாட்டத்தை நடத்தியதன் மூலம் அரங்கேற்றின.

ஆதிக்கசாதி வெறியாட்டம்

சாதிவெறி திருட்டுக் கும்பல் தலித் மக்கள் பல ஆண்டுகள் உழைத்து சிறுகச், சிறுக சேர்த்துவைத்த சொத்துக்களை திருடியது. தன் உழைப்பின் ரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டப்பட்ட வீடுகளை சாதிவெறி காட்டுமிராண்டிகள் தரைமட்டமாக்கினார். பல இருசக்கர வாகனங்கள், கார்கள், டாடா ஏசி போன்ற வண்டிகளைக் கொளுத்தி சாதி வெறியாட்டம் போட்டது பரிணாம வளர்ச்சியடையாத ‘அரைக்காட்டுமிராண்டி கும்பல்’. உளவுத்துறையும், காவல்துறையும் புரட்சியாளர்களின் இதயமாக விளங்கிய நத்தம் தலித் கிராமத்தை பூண்டோடு ஒழித்த பூரிப்பில் மிதந்தனர். சாதி ஆதிக்க வெறிபிடித்த (ஜெயலலிதா) அரசும், அதிகார வர்க்கமும் தலித் எழுச்சிக்கு அடையாளமாய் திகழ்ந்த, வன்னிய உழைக்கும் மக்களோடு கைகோர்த்து தலித் ஒடுக்குமுறையை ஒழித்த நத்தம் தலித் கிராமத்தை அடியோடு தீக்கிரையாக்கிவிட்ட திருப்தியில் கொடூர புன்னகை பூத்தது, தலித் எழுச்சிக்கும், சமூக விடுதலைக்கும் போராடும் புரட்சியாளர்களின் போராட்டத்திற்கு சாவுமணி அடித்துவிட்டோம் என்று எக்காளமிட்டனர்.

3

நெருப்போடு விளையாடாதீர்கள்

நெருப்போடு விளையாடிய ஆதிக்க சாதிவெறியர்களின், கந்துவட்டிக்காரர்களின், உளவுத்துறையின் (க்யூ-பிரிவு), நக்சல் ஒழிப்பு பிரிவினரின், காவல்துறையின், ஆதிக்க சாதி அரசின், காடுவெட்டி குருக்களின், ராமதாசுகளின் பகல்கனவு பலிக்காமல் போனது. இவர்கள் அனைவரும் தேன்கூட்டில் கைவைத்த குரங்கைப் போல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

சாதி வெறியாட்டத்தின், புரட்சியாளர்களின் மீதான ஒடுக்குமுறையின் வெற்றியின் அடையாளமாக நத்தம் கிராமத்தை மாற்ற நினைத்தவர்களுக்கு, நத்தம் தலித் மக்களின் உறுதியும், தமிழகம் முழுவதும் உள்ள தலித் இயக்கங்களின் எழுச்சியும், புரட்சிகர சக்திகளின் எதிர்ப்பும், ஜனநாயக சக்திகளின், சாதி மறுப்பாளர்களின் தலித் மக்களுக்கான உறுதிமிக்க ஆதரவும், நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்கள் நோக்கி நாள்தோறும் நீளும் பல்லாயிரக்கணக்கான ஆதரவுக் கரங்களும் நத்தம் தலித் கிராமத்தை தலித் எழுச்சியின் அடையாளமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

தாக்குதல் நடத்திய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்களை நோக்கி புரட்சிகர சக்திகளும், தலித் இயக்கங்களும், சனநாயக ஆர்வலர்களும், சாதி மறுப்பாளர்களும் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்றால் எங்கே தலித் மக்களின் ஓட்டு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் தி.மு.க. விசாரணைக் குழுவை அனுப்பியது. பார்ப்பன எதிர்ப்பை செயலற்ற வெற்று முழக்கமாக (பெரியாருக்குப் பின்) செய்துவரும் தி.க. (வீரமணி) தவிர்க்க முடியாமல் ஆதிக்க சாதி எதிர்ப்பைப் பேசவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. மணியரசன் அமைப்பைத் தவிர தமிழ்த் தேசியம் பேசும் இனவாத கும்பல்களில் சீமான், நெடுமாறன் முதல் இனவாத பாளையக்காரர்கள்வரை இதற்கு எத்தகைய எதிர்வினையும் ஆற்றாமல் ‘தமிழன்’ என்ற உணர்வோடு வாய்மூடி மௌனிக்கி றார்கள். பார்ப்பன ஜெயலலிதாவின் (தேவர் சாதி ஆதிக்க கும்பல் செல்வாக்கு செலுத்தும்) அ.இ.அ.தி.மு.க. அரசு 50,000 ரூபாய் நஷ்ட ஈடு என்று (அதுவும் அனைவருக்கும் கிடைக்கவில்லை) கண்துடைப்பு நாடகமாடி கண்மூடிவிட்டது.

சில நாட்களுக்குப் பிறகு மக்கள் தொலைக்காட்சியில் தருமபுரி நிகழ்வு (தலித் கிராமங்கள் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டது இவர்களுக்கு நிகழ்வு) குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், காடுவெட்டி குருவின் விளக்கங்கள் என்ற பெயரில் ஆதிக்க சாதிவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். தலித் கிராமங்கள் வழியாக படிக்கும் இளம் பெண்கள் செல்ல முடிய வில்லை என்றும், இரண்டு இளைஞர்கள் தேநீர்க் கடையில் பேசிக் கொண்டாலே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர் என்றும், தலித் இளைஞர்கள் திட்டமிட்டே ஆதிக்க சாதி பெண்களை காதலித்து கைவிடுகின்றனர் என்றும், தருமபுரியில் தலித் கிராமங்கள் தாக்கப்பட்டதற்கு தலித் கிராமத்திற்கும், மற்ற கிராமங்களுக்கும் இடையே சமூக பகை இருந்ததே காரணம் என்றும், காலம் காலமாக தொடர்ந்துவரும் தலித் மக்கள் மீதான ஆதிக்கசாதி திமிரை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் ராமதாசு பேசும்போது தான் தலித் மக்களுக்காக போராடியவன் என்று கூறினார். முதலில் வன்னியரிடம் சாதிவெறியைத் தூண்டி அதன்மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த ராமதாஸ், வன்னியர் ஓட்டை மட்டும் வைத்து முதல்வர் நாற்காலியில் அமர முடியாது என்ற உண்மையை உணர்ந்து தனது முதல்வர் கனவை நனவாக்க தலித் ஓட்டுக்களும் அவசியமெனக் கருதி தலித்துகளின் பாதுகாவலர் என்று நாடகமாடினார். (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அந்த நாடகத்தை இப்பொழுதும் நம்பச் சொல்கிறார்.) ‘உள்ளதும் போச்சுடா நொள்ள‌க்கண்ணா’ என்ற பழமொழிக்கேற்ப வன்னியர் ஓட்டும் கிடைக்காமல் போக அரசியல் லாபத்திற்காக இன்று வன்னியர் சாதிவெறியைத் தூண்டி வருகிறார். மேலும் இத்தகைய வன்னிய சாதிவெறி அரசியலுக்கு வன்னியர் சமூகத்தில் உள்ள ஆளும் வர்க்க, அதிகார வர்க்க சக்திகளின் நலன்களும், திட்டமும், செயல்களும் உள்ளன.

தலித் மக்களின் ஒப்பற்ற கட்சியாக தன்னைக் கூறிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தருமபுரி தலித் கிராமங்கள் மீதான சாதி வெறியாட்டத்திற்கு தீர்வாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்த சி.பி.ஐ. லட்சணம் பற்றி வி.சி. கட்சிக்குத் தெரியாதா. வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலையை சி.பி.ஐ. துருவித் துருவி விசாரித்து வரும் அழகு அனைவரும் அறிந்ததே. தொடக்க காலங்களில் தலித் மக்களின் செல்வாக்கைப் பெற பல்வேறு போராட்டங்களை நடத்திய வி.சி. கட்சி இன்று பிழைப்புவாத அரசியல் கட்சியாக சீரழிந்து வருகிறது.

மேல்மட்ட தலைமையிலிருந்து, கீழ்மட்ட தலைமைவரை தலித் மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதைக் கைவிட்டு தங்களை முன்னேற்றிக்கொள்வதிலேயே முழு அக்கறை காட்டுகின்றனர். அதற்காக தலித் மக்களை பலியாக்கவும் தயங்கியதில்லை. முற்றும்முழுதாக பிழைப்புவாத சக்திகளாக சீரழிந்து கிடக்கின்றனர்.

இதன் வெளிப்பாடாகவே வி.சி. கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக நல்லிணக்கம் என்று சொல்லி தலித் மக்களின் உரிமைகளை பா.ம.க. ராமதாசிடம் அடகு வைக்கிறார்.

தலித் மக்களும், வி.சி. கட்சி மற்றும் பிற தலித் கட்சிகளில் உள்ள தலித்துகளும், பிழைப்புவாத தலைமைகளை தூக்கியெறியும், அதேவேளையில் அந்தந்த கட்சிகளின் தலைமையை உறுதிமிக்க போராட்டங்களை முன்னெடுக்க நிர்ப்பந்திக்க வேண்டும். தலைமையானது அப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்கத் தவறினால் தலித் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியோடு போராடும் தலைமை உள்ள அமைப்பில் இணைந்து உறுதிமிக்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தருமபுரி-தலித் கிராமங்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி, ஆதிக்க சாதிவெறி சக்திகள் நமக்கு விட்ட சவாலை அடியோடு வீழ்த்த சிதறிக்கிடக்கும் தலித் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.

தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும், சாதி ஒழிப்பு போராட்டத்திலும் தலித் மக்கள் மற்றும் தலித் இயக்கங்கள் தனியே நின்று போராடும் அபாயகரமான (சாதியத்தைக் கட்டிக்காக்கும், நவீன பார்ப்பனியத்திற்கு துணைபோகும்) தவறை விட்டொழிக்க வேண்டும்.

தலித் மக்களின் விடுதலைக்காக, சாதி ஒழிப்பிற்காக, உறுதியாகப் போராடக்கூடிய புரட்சிகர அமைப்புகளுடனும், சாதி எதிர்ப்பாளர்களுடனும், சனநாயக சக்திகளுடனும், அனைத்து சாதி உழைக்கும் மக்களுடனும், ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருடனும் ஐக்கியப்பட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஆதிக்க சாதியில் உள்ள உழைக்கும் மக்கள் சாதிய மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும், சாதி மோதல்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் உழைக்கும் மக்கள்தான் என்பதை உணர வேண்டும். உழைப்பை சுரண்டி கொழுக்கும் பணக்காரர்கள் தங்களை எதிர்த்து உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் சாதி வெறியைத் தூண்டி உழைக்கும் மக்களையும் பிரித்தாளுகின்றனர் என்பதை உணர வேண்டும். அரசியல் கட்சிகள் பதவியில் அமர்ந்து கொள்ளையடிக்க அரசியல் லாபத்திற்காக சாதி வெறியைத் தூண்டுகிறார்கள் என்ற உண்மைகளை அனைத்து உழைக்கும் மக்களும் உணர வேண்டும்.

அனைத்து ஆதிக்கசாதி சங்கங்களிலிருந்தும் ஆதிக்க சாதிவெறியைத் தூண்டுகின்ற அனைத்து கட்சிகளிலிருந்தும் ஆதிக்கச் சாதியில் உள்ள உழைக்கும் மக்கள் வெளியேற வேண்டும்.

உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்கவேண்டும் என்ற வர்க்க உணர்வைப் பெற்று தலித் உழைக்கும் மக்களோடு கைகோர்க்க வேண்டும். வர்க்கப் போராட்டம் சாதி ஒழிப்புப் போராட்டத்துடன் இணைந்தது என்பதை உணர்ந்து, சாதி ஒழிப்பு போராட்டத்தில் தலித் மக்களுடன் கைகோர்த்து போராட வேண்டும்.

தருமபுரி - நத்தம் தலித் கிராமத்தை “தலித் எழுச்சியின்” அடையாளமாக்குவோம்

தருமபுரியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே சாதி இழிதொழிலை நிறுத்திய கிராமம் நத்தம் தலித் கிராமம், மது ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்த கிராமம் நத்தம் தலித் கிராமம், முன்னாள் மக்கள் யுத்த (நகசல்பாரி) கட்சி தலைமையில் வன்னிய உழைக்கும் மக்களுடன் இணைந்து பல்வேறு வர்க்கப் போராட்டங் களை, சாதி ஒழிப்பு போராட்டங்களை எடுத்த கிராமம் நத்தம் தலித் கிராமம். இத்தகைய நத்தம் தலித் கிராமத்தை தலித் எழுச்சியின் அடையாளமாக மாற்ற வேண்டும். தமிழகம் தழுவிய அளவில் ஆதிக்க சாதிவெறியர்கள் கொட்டத்தை அடக்கும் எழுச்சியின் அடையாளமாக்க வேண்டும்.

மூவர் தூக்கு என்ற முழக்கம் எப்படி தமிழகம் தழுவிய மக்கள் போராட்டமாக உருவெடுத்ததோ, சமச்சீர் கல்வி, முல்லைப் பெரியாறு போன்ற முழக்கங்களும் எப்படி தமிழகம் தழுவிய மக்கள் போராட்டமாக உருவெடுத்ததோ அதுபோல் ‘நத்தம்’ தலித் கிராமம் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கான எதிர்ப்பு என்ற முழக்கமும் பெரும் தலித் மக்கள் எழுச்சியாக, சாதி ஒழிப்பிற்கான எழுச்சியாக தமிழகம் தழுவிய அளவில் உருவெடுக்க வேண்டும்.

இந்த தலித் மக்களின் எழுச்சி...

சாதி வெறிபிடித்த காடுவெட்டி குருக்களை காணாமல் செய்யும் எழுச்சியாக,

சாதிமறுப்பு திருமணத்தை எதிர்க்கும், சாதிவெறியைத் தூண்டும் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போன்ற ஆதிக்க சாதிவெறி அமைப்புகளை உருத்தெரியாமல் செய்யும் எழுச்சியாக,

தருமபுரி தலித் கிராமங்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆதிக்கசாதி வெறி சக்திகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு முழு அளவிலான இழப்பீட்டைப் பெற்றுத் தரும் எழுச்சியாக,

(ஜெயலலிதா) அரசின் ஆதிக்கசாதி கூட்டையும், சாதி வெறியர்களுக்குத் துணைநின்ற உளவுத்துறை (க்யூ-பிரிவு), காவல் துறையை வீழ்த்தும் எழுச்சியாக

கால காலமாக அரசியல், பொருளாதார அரங்கில் பின்தங்கிக் கிடந்த தலித் மக்களை முழு அளவில் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக, பொருளாதார முன்னேற்றங்களைப் பெற்றவர்களாக மாற்றும் எழுச்சியாக,

ஊர்த் தெருவில் நடக்கக்கூடாது, கோயிலில் நுழையக் கூடாது, ஊர்த்தெரு - சேரித்தெரு எனப் பிரித்திருப்பது, சாதி சுடுகாடு, கடைகளில் சாதி பெயரில் விளம்பரப் பலகை வைப்பது, இரட்டைக் குவளை என்ற எண்ணற்ற பண்பாட்டு விழுமியங்களை தலைகீழாகப் புரட்டிப்போடும் பண்பாட்டு எழுச்சியாக,

சாதியத்தை கட்டிக்காக்கும் கருத்தியலாக உள்ள நவீன பார்ப்பனிய‌த்தை (இந்து-இந்தியா-இந்தி) நவீன வெள்ளாளியத்தை (சாதி நிலவுடமையைப் பாதுகாப்பது, ஆதிக்க சக்திகளின் தமிழ்த் தேசியம்) வீழ்த்தும் கருத்தியலை நூறாயிரமாக மலரச்செய்யும் எழுச்சியாக மாற்ற மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

தமிழக அரசே!

· நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்கள் மீதான சாதிவெறித் தாக்குதலுக்கு காரணமான சாதி வெறியர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு முழு இழப்பீடு வழங்கு!

· சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும், ஆதிக்கசாதி வெறியைத் தூண்டும் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போன்ற அமைப்புகளை, கட்சிகளை தடை செய்!

· காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்த தலித் மக்களுக்கான சாதி அமைப்புகளைத் தவிர்த்து மற்ற அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்!

· சாதி வெறியைத் தூண்டும், தலித் மக்களை இழிவு படுத்தும் காடுவெட்டி குரு, ராமதாஸ் மற்றும் பழ.கருப்பையாவை உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!

தமிழக மக்களே!

· தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அனைத்து தளங்களிலும் தமிழகம் தழுவிய தலித் எழுச்சியாக முன்னெடுப்போம்!

· தலித் ஒடுக்குமுறைக்கு எதிராக வீரம்செறிந்த போராட்டங்களை முன்னெடுத்த நத்தம் தலித் கிராமத்தை தலித் எழுச்சியின் அடையாளமாக்குவோம்! வளர்ந்த நகரங்களில் இருக்கும் சாதியக் கூறுகள் அனைத்தையும் அடியோடு ஒழிப்போம்! கிராமப்புறங்களில் படிப்படியாக சாதி ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுப்போம்!

· அரசின் ஆதிக்க சாதி கூட்டிற்கெதிராகவும், தருமபுரி சாதி வெறியாட்டத்திற்கு துணை நிற்கின்ற உளவுத்துறை, காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அணிதிரள்வோம்!

· தலித் மக்களே! தலித் இயக்கங்களில், கட்சிகளில் உள்ள தலித் பிழைப்புவாத, சமரச சந்தர்ப்பவாத தலைமைகளைத் தூக்கியெறியுங்கள்! தலித் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியோடு போராட வாருங்கள்!

· ஆதிக்க சாதியில் உள்ள உழைக்கும் மக்களே! ஆதிக்க சாதிவெறியைத் தூண்டும் ஆதிக்க சாதி சங்கங்களை, கட்சிகளை விட்டு வெளியேறுங்கள்!

· தலித் மக்களுடன் இணைந்து சாதி ஒழிப்பு போராட்டத்தை, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுங்கள்! · தலித் மக்களே! அனைத்து உழைக்கும் மக்களே! சாதி மறுப்பாளர்களே! சாதி வெறியாட்டத்திற்கு எதிராக ஓரணியில் திரள்வோம்!

· தொழிலாளர், உழவர், அறிவுத்துறையினர், தேசிய முதலாளிகள் மற்றும் தலித்துகள், பெண்கள், மீனவர்கள், மதச் சிறுபான்மையினர், பழங்குடிகளின் கூட்டு அரசியல் அதிகாரத்தைப் படைப்போம்! மக்கள் சனநாயக குடியரசை நிறுவுவோம்!

· தந்தை பெரியாரின் கனவாகிய சுதந்திர தமிழகம் படைப்போம்! சுதந்திர தேசங்களின் விருப்பப்பூர்வமான (பொது வாக்கெடுப்பின் மூலம்) கூட்டரசை படைப்போம்!

Pin It