பாசிச வழிமுறைகளை இன்று பல நாடுகளும் தமது சொந்த மக்களுக்கெதிராக பின்பற்றத் தொடங்கிவிட்டன. இது மிகவும் ஆபத்தான நிலையாகும். அண்டை நாடாகிய இலங்கையில் பாசிசம் கொடிகட்டிப் பறக்கிறது. அதன் தலைமை நீதிபதி ஷிவானி பண்டாரநாயகாவையே அந்தப் பாசிசம் காவு வாங்கத் துடிக்கிறது. நடுநிலை தவறாது அரசுக்கு எதிராக சில தீர்ப்புக்களை வழங்கியதால் பழி வாங்கப்படுகிறார் அந்தப் பெண் தலைமை நீதிபதி. நீண்டகாலமாக இலங்கையில் ராஜபக்ஷே குடும்பம் நிகழ்த்திவரும் பாசிச அரசியலை கண்காணிக்காததன் விளைவே இன்று நீதித்துறையைக் கூட அது விட்டுவைக்காத நிலை.

இஸ்ரேல் நாட்டின் ஆட்சியாளர்கள் வரப்போகும் தேர்தலைச் சந்திப்பதற்காக பாலஸ்தீனத்தைப் பற்றி அவதூறு பிரச்சாரங்களை பரப்பி ‘காசா’ பகுதியில் ஏவுகனைத் தாக்குதல் நடத்தி தங்களை இஸ்ரேலின் பாதுகாவலர்களாக காட்டி பாசிச வழியில் அரசியல் ஆதாயம் அடைய முனைகிறார்கள்.

இந்திய அரசியல் களத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ச.க.வின் இந்துப் பேரினவாத அரசியலுக்கு காங்கிரசு தலைமையிலான அரசு பாசிச நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. அப்துல் கசாபை அவசர அவசரமாக தூக்கிலிட்டு நாங்கள் இந்துப்பேரினவாத அரசியலில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளது காங்கிரசு தலைமையிலான அரசு.  இதை வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பாக பல அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒரு மனிதனைத் தூக்கிலிட்டு கொன்றுவிட்டு அதை கொண்டாடுகின்ற கொடுமையை வேறு எந்த நாகரீக சமூகத்திலும் காணமுடியாது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் மனித உரிமைப் போராளிகளில் முன்னோடியுமான 93 வயதுமிக்க மாமனிதர் கிருஷ்ணய்யர், கசாபைத் தூக்கிலிட்ட நிகழ்வை ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று கண்டித்துள்ளார். கசாப்புக்கு அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு நியாயமாகக் கொடுக்கப்பட வேண்டிய கால அவகாசம் கொடுக்கப்படாததைப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான உரிமையை பாசிச அரசின் செயல்பாடுகள் பறித்து விட்டதே என்று பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

நம் நாட்டில் கோயபல்சின் தத்துவம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. பாசிசம் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வேகம் பரபரப்பான சூழலில் கண்டுணரப்படுவதில்லை. நாளுக்கு நாள் அதன் வெளிப்பாடுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பாசிச நடைமுறைகள் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்படும் மனநிலை உருவாக்கப்படுகின்றது. இது மிக ஆபத்தானது. தமிழ்நாட்டில்; பத்திரிகைச் சுதந்திரத்தையும், சனநாயக மரபுகளை பாதுகாப்பதில் அதன் பங்களிப்பையும் ஆட்சியாளர்கள் மிகவும் திறமையாகக் கட்டுப்படுத்திவிட்டனர். முழுநீள அரசு விளம்பரங்களைத் தாராளமாக எல்லாப் பத்திரிகைகளுக்கும் வழங்கி பத்திரிகையின் தார்மீகப் பொறுப்பையும் கடமையையும் அழித்துவிட்டனர். சனநாயகரீதியாக ஏற்படும் மக்கள் எழுச்சிகள் குறித்து பத்திரிகைகள் கண்டு கொள்வதில்லை. அரசு விளம்பரங்களுக்காக தங்கள் தரத்தையும், நன்மதிப்பையும் பல பத்திரிகைகள் இழந்து விட்டன. பத்திரிகைநீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. பாசிச அரசுகள் செய்திகளையே விலைபேசி விடுகின்றன. எதை பெரிய செய்தியாக்க வேண்டும், எதை மக்கள் பார்வையிலிருந்து மறைக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு செய்துவரும் ‘பத்திரிகைகளின் பாசிசத்தை’ இந்தியப் பத்திரிகை கவுன்சிலின் தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ பலமுறை அம்பலப்படுத்தியதோடு கண்டித்துமுள்ளார்.

ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை பிறரோடு நேரடியாகவோ, தொடர்பு ஊடகங்களின் வழியாகவோ பதிவு செய்யும் உரிமை அடிப்படை மனித உரிமையாகும். அந்த உரிமையை நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது பிரிவு எல்லோருக்கும் உறுதி செய்துள்ளது. பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்பி வருகின்றனர். சமூக வலைதளத்தை பொழுதுபோக்கு சாதனமாகவே பலரும் பயன்படுத்துகின்ற போது ஒரு சிலரே மனித உரிமை மீறல்கள்  குறித்து தைரியமாக கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர். ஆனால், வளர்ந்துவரும் பாசிசத்தால் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் கருத்துச் சுதந்திரத்தை முற்றிலும் தடுத்து அடிப்படை மனித உரிமைகளைப் பறிப்பதாக அமைகின்றன.

‘மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சோனியாகாந்தியின் மருமகன் இராபர்ட் வதேராவைவிட பல மடங்கு சொத்துக்களை சேர்த்துவிட்டார்’ என்று புதுச்சேரியைச் சார்ந்த ரவி என்பவர் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் கொடுத்த மின்னஞ்சல் புகாரின் பேரில் காவல்துறை முழு வேகத்துடன் செயல்பட்டு ரவியை அதிகாலையில் அவரது வீட்டைத் தட்டி கைதுசெய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66 ஏ யின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தது. அதே காவல்துறை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்கள் நேரடியாகவே காவல்நிலையம் வந்து புகார் கொடுத்தாலும், வழக்கு பதிவு செய்ய கூட மறுப்பது வேறு கதை.

நாக்பூரைச் சார்ந்த கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தனது வலைதளத்தில் வரைந்த கார்ட்டூனுக்காக அவர்மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. நடைபெற்றுவரும் மோசடி அரசியலைத் தனது கேலிச்சித்திரம் மூலம் நறுக்கென அம்பலப்படுத்தினார். பாராளுமன்றத்தை ஒரு கக்கூசாகவும், அசோகத் தூணில் உள்ள 4 சிங்கங்களை இரத்தவெறி பிடித்த 4 ஓநாய்களாகவும், பாரதமாதாவை இலஞ்சம் என்ற பேய், அரசின் அதிகார வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகளோடு இணைந்து கற்பழிக்க முயல்வதாகவும் சித்தரித்திருந்தார். இதனால் கோபமுற்ற மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அவர்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து கடந்த 8.9.12 அன்று அவரைக் கைது செய்தது. எதிர்ப்புக் குரல் வலுக்கவே, மத்திய உள்துறை அமைச்சகம் தனது புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டது. அசீம் திரிவேதி விடுவிக்கப்பட்டார்.

அண்மையில், பாசிச வழிமுறைகளையே மூலதனமாக வைத்து பாசிச அரசியல் நடத்தி வந்த பால் தாக்கரேயின் மரணமும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பல சட்டப்புறம்பான நிகழ்வுகளும் பெரும் விவாதப்பொருளாக மாறின. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையோ, அதன் சனநாயக மரபுகளையோ ஒரு துளியும் மதிக்காமல் இனவெறி மற்றும் மதவெறி அரசியலில் தன் வாழ்நாள் முழுவதும் அவர்களின் மனசாட்சிக்கும் எதிரான விதத்தில் இரங்கல் செய்திகளை தெரிவித்திருக்கின்றனர். அரசியல் சாசன உயர் பதவியில் அமர்ந்திருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பால் தாக்கரேயின் மரணத்தை “நாட்டிற்கு ஏற்பட்ட” என்று கூறி சனநாயகத்தையே அதிர வைத்தார். தங்களது சினிமாத் தொழிலுக்காக தாக்கரேயின் இனவெறியைப் பயன்படுத்திக் கொண்ட அமிதாப்பச்சன் போன்ற நடிக நடிகைகளின் கூட்டம் அவரை வானளாவப் புகழ்வதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தனது இறுதிமூச்சு வரை மதவெறியையும் இனவெறியையும் மூச்சுக்கு மூச்சு, வார்த்தைக்கு வார்த்தை உமிழ்ந்து வந்த ஒருவரைப் பற்றி நாட்டின் அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் கூறியிருக்கும் கூற்றுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றன. அவை கண்டனத்திற்குரியவை. இந்த நிகழ்வுகள் யாவும், குடியரசுத் தலைவர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை பலரும் பாசிசத்திற்கு எப்படி தலைவணங்குகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பத்திரிகை கவுன்சிலின் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ மட்டும் பகிரங்கமாகக் உண்மையை உரைத்தார். ‘பால் தாக்கரேயின் கொள்கைகளும், அரசியல் நிலைப்பாடும் அரசியல் சட்டத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானது. எனவே அப்படிப்பட்டவருக்கு நான் இரங்கல் தெரிவிக்க மாட்டேன்’ என்று தனது கருத்தைப் பதிவு செய்தார். பாசிசத்திற்கு தலைவணங்கும் அத்தனை பேருக்கும் அவருடைய பதிவு ஒரு சவுக்கடியாக அமைந்தது.

பால் தாக்கரேக்கு ஏன் அரச மரியாதை? அவர் எந்த அரசுப் பதவியும் வகிக்கவில்லையே? என்று கேட்பதற்கு ‘பெரும்பான்மையினரின் விருப்பம்’ என்று மிகவும் சாதுர்யமாக பதிலளிக்கின்றனர். இந்தப் பெரும்பான்மை விருப்பமும், மனநிலையும் இயல்பானதல்ல. கட்டியமைக்கப்படுகின்ற ஒன்று. அது மரியாதை காரணமாக அமைந்ததல்ல அது அச்சத்தின் விளைவாக எழுந்தது. இதைத்தான் பால் தக்கரேயின் மரணத்தையொட்டி மும்பையில் நடந்த கடையடைப்பை விமரிசித்து இளம்பெண் சாகின் தாதா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். மற்றொரு இளம்பெண் ரேணு ஸ்ரீனிவாசன் அதை ஆதரித்தார். 2 பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். மராட்டிய முதல்வர் உட்பட நீதித்துறையும், நிர்வாகத்துறையும் இந்த நிகழ்வுகளை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஒரு குரல் மட்டுமே இந்நிகழ்வுகளைக் கண்டித்தது. ‘தனது அரசியல் உரிமையை நிலைநாட்டும் ஒருவரைக் கைது செய்யும் செயல் குற்ற நடவடிக்கையாகும். இந்த கைது நடவடிக்கை சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் தவிடுபொடியாக்கிய செயல்பாடு’ என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மட்டும் தனது கருத்தை மீண்டும் பதிவு செய்தார். அந்தப் பெண்கள் கைது செய்யப்பட்டதை மிகக் கடுமையாக கண்டனம் செய்து மராட்டிய முதல்வருக்கு உடனடியாக தலையீடு செய்யச் சொல்லி கடிதம் அனுப்பினார். அதனடிப்படையில் உயர்மட்ட விசாரனை நடத்தப்பட்டு அந்தக் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் கொல்லப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தார் என்பதாலேயே, கைது செய்யப்பட்டு தீவிரவாதியாக முத்திரை குத்தி குற்றம் சுமத்தப்பட்டவர் அப்சல் குரு. வழக்கு விசாரனையில், சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாத சூழலிலும் அவரை தூக்கிலிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ‘சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாத சூழலில் எப்படி ஒருவரை தூக்கிலிட முடியும்’? என்று கேட்பதற்கு, வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘இந்தியப் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு ஏற்ப அக்குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிடுவதைத் தவிர வேறுவழியில்லை’ என்று கூறுகின்றனர். இதுவும் பெரும்பான்மையினரின் விருப்பமல்ல, மாறாக கட்டியமைக்கப்படும் நீதிமன்ற பாசிசம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஆந்திராவில் ஹைதராபாத் நகரம் அதிகமாக இசுலாமியர் வசிக்கும் பகுதி. அங்கு அமைந்துள்ள ‘சார்மினார்’ வளாகத்தையொட்டி ஒரு பாக்யலட்சுமி கோவிலை அண்மையில் கட்டிக்கொண்டு அது முற்காலத்தில் இருந்து அங்கிருக்கும் கோவில் என்று மதவெறிப்பிரச்சாரம் செய்து இசுலாமியர்களைத் தொடர்ந்து வம்புக்கு இழுக்கிறது சங்க பரிவார அமைப்புக்கள். 1950 மற்றும் 1960 களில் அங்கு சார்மினாரைத் தவிர வேறு எந்தக் கோவிலும் இருக்கவில்லை என்பதை ‘இந்து” நாளேடு புகைப்படத்தை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. இருப்பினும் ஆட்சியிலிருக்கும் காங்கிரசு அரசு மத மோதல்களை வளர்த்தெடுக்கும் விதமாக சங்க பரிவார அமைப்புக்களுக்குத் துணை நிற்கிறது. ஏற்கனவே 2010 ல் பல இந்து ஆலயங்களுக்குள் சங் பரிவார அமைப்பினரே மாட்டுக்கறியைத் தூக்கிவீசி மதமோதல்களுக்கு வித்திட்டனர். காவல்துறை விழிப்புடனும், நடுநிலையுடனும் செயல்பட்டதால் பெரும் மோதல் சம்பவங்கள் தடுக்கப்பட்டன. ஆனால் இப்போது நடைபெறும் நிகழ்வுகள் இந்துப்பேரினவாத பாசிச வழிமுறைகளைப் பின்பற்றி காங்கிரசு அரசு அரசியல் ஆதாயம் தேட விளைவதையேச் சுட்டிக்காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு தங்கள் வாழ்வாதார உரிமைகளைக் காத்துக்கொள்வதற்காக சனநாயக வழிகளில் போராடி வரும் மக்கள் மீது குறிப்பாக வயதான பெண்கள் மீது கூட குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசவிரோத சட்டங்களைப் பாய்ச்சி வழக்குகளைப் பதிவுசெய்து அச்சுறுத்தி வருகிறது. சனநாயகரீதியாக நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு யார் எவ்விதத்தில் ஆதரவு தெரிவித்தாலும் அவர்களை கைது செய்து அச்சுறுத்தி இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்ற பாசிசப் போக்கினை மிகச் சாதாரணமாக பின்பற்றி வருகிறது.

அண்மைக்காலத்தில், நம்நாட்டில் தொடர்ந்து கட்டியமைக்கப்படும் பாசிசத்தால் நாட்டை பேராபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவை முதலில் கண்டுணரப்பட வேண்டும். பிறகு அவையெல்லாம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு களையப்பட வேண்டும். பத்திரிகை பாசிசம், காவல்துறை பாசிசம், நீதிமன்ற பாசிசம் என்று அரசு எந்திரமே பாசிசமயமாகும் போக்கு கட்டுப்படுத்தப்படவில்லையென்றால், நம் நாடு அதற்கு பலியாகிவிடும்.

Pin It