மறைந்த தோழர் விடியல் சிவாவின் நினைவாக ‘விடியல் சிவா- ஒரு பதிப்பு இயக்கத்தின் பயணம்’ என்னும் தலைப்பில் பா.செயப்பிரகாசத்தால் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரை ‘பொங்கு தமிழ்’ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ அதே கருத்துகளைக் கொண்ட பா.செயப்பிரகாசத்தின் இன்னொரு கட்டுரை ‘மீண்டும் எழுந்த விடியல்’ என்ற தலைப்பில் செப்டம்பர்(2102) மாத ‘குமுதம் தீராநதி’ இதழில் வெளியாகியுள்ளது. ஒரு தோழரின் நினைவாக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில் அத்தோழரின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் மீது தனது சிந்தனைகளையும், கருத்துக்களையும் ஏற்றி விளக்குவதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் மீது ஒரு நிழல் யுத்தத்தைத் தொடுத்துள்ளார் கட்டுரையாளர்; அமைப்புகள் மீதும், சமூக மாற்றத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராகக் காட்டிக் கொண்டே புரட்சிகர அமைப்புகள் பற்றிய தவறான கருத்துகளையும், அவநம்பிக்கைகளையும் பரப்பும் வேலையை இக்கட்டுரை மூலம் செய்துள்ளார்.

“புரட்சிகர அமைப்புகளின் போதாமையை அமைப்பு இயக்க முறைகளில் மட்டுமேயல்ல, ஏழு முனைகளில் அதற்கான பரிசீலனை இன்மையைக் கண்டார்” எனத் தோழர் சிவாவிடம் இருந்த கருத்துகளாக ஏழு அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளார் கட்டுரையாளர். ஆனால் தோழர் சிவா அந்த ஏழு முனைகளில் கட்டுரையாசிரியர் விளக்குவதுபோலத் தனது கருத்துகளைத் தொகுத்து வெளியிட்டு இருந்ததாகவோ அல்லது அவற்றை மற்ற தோழர்களிடம் பகிர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அவ்வாறு இருக்க தோழர் சிவாவின் கருத்துகளாகக் கட்டுரையாளர் தொகுத்துக் கூறியிருப்பவை பற்றி அவர் எப்படி அறிந்தார் என்பது தெரியவில்லை. எனவே அவை அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துக்கள்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவை தன்னுடைய கருத்துகள்தான் எனப் பொறுப்பேற்றுக்கொள்ளும் நேர்மையின்றி, அவற்றை மறைந்த தோழர் சிவாவின் மீது ஏற்றி இட்டுக்கட்டி அக்கட்டுரையை எழுதிள்ளார்.

புரட்சிகர அமைப்புகள் மீதான அவருடைய விமர்சனங்கள் எவ்வளவு மேம்போக்கானவை, அவதூறானவை என்பதை அவருடைய கட்டுரையே வெளிப்படுத்துகிறது.

ஏழு முனைகளில் புரட்சிகர அமைப்புகளுக்குப் பரிசீலனை இல்லை எனக் கூறும் அவர் “பல்வேறு பிரச்சனைகளில் மக்களின் புரிதல்களுக்கும் மா.லெ. இயக்கங்களின் பார்வைக்கும் இடைவெளி இருப்பதை சிவா அனுபவப்பூர்வமாக அறிந்தார். இவையனைத்தும் பதிலளிக்கப்பட வேண்டிய கேள்விகள். பதில்கள் இல்லாத கருத்தியல் இடைவெளியை நிரப்புவதற்கான நூல்களை விடியல் பதிப்பகம் வெளிக்கொணர்வதைக் குறிக்கோளாகக் கொண்டது” எனக் குறிப்பிடுகிறார். விடியல் பதிப்பகம் இத்தகைய குறிக்கோளைக் கொண்டுள்ளது எனத் தோழர் சிவா எங்கும் அறிவித்ததாகத் தெரியவில்லை. விடியல் பதிப்பகத்திற்கு இவர் கொள்கை அறிக்கை தயாரிக்கிறார் போலும்! அதற்காக விடியல் பதிப்பகம் கொண்டுவந்த பல நூல்களைப் பட்டியலிடுகிறார்.

அவர் பட்டியலிட்டுள்ள சில நூல்களைப் பார்த்தாலே போதும். அவருடைய கூற்றில் உள்ள முரண்பாட்டை அறிந்து கொள்ளலாம். மா.லெ. அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களால் அந்நூல்கள் எழுதப்பட்டவை என அவர் கருதுகிறார். சில நூல்களின் மூல ஆசிரியர்களைப் பற்றி அவர் அறிந்திருந்தால் அவ்வாறு எழுதியிருக்கமாட்டார்.

‘இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919-1947’ என்ற நூலை எழுதிய சுனிதி குமார் கோஷ் (இந்நூலை சுனில் குமார் ஜோசி எழுதிய ‘இந்திய வரலாறு’ எனத் தவறாக அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.) 1967-ல் நடைபெற்ற நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு தோன்றிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி( மா.லெ.)யின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். தொடர்ந்து புரட்சிகர அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருபவர்.

மேலும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ‘உலகமயமாக்கல்- அடிமைத்தளையில் இந்தியா’ என்ற நூலின் மூல ஆசிரியர் இன்று இந்தியாவின் ஆளும் வர்க்கமே அஞ்சி நடுக்கம் கொண்டிருக்கும் அளவிற்குச் செல்வாக்குப் பெற்றுள்ள ஒரு புரட்சிகர அமைப்பின் தலைமைக் குழுவில் உள்ளவர். முதிர்ந்த வயதில், கடும் நோயுடன் துயருற்றுக் கொண்டிருக்கும் அவரை இந்திய ஆளும் வர்க்கம் பொய் வழக்குகள் போட்டுச் சிறையில் இன்று அடைத்து வைத்துள்ளது.

இந்த விவரங்களைக் கட்டுரையாளர் அறிந்திருந்தால் “பதில்கள் இல்லாத கருத்தியல் இடைவெளியை இட்டு நிரப்புவதற்காக” அமைப்புக்குத் தொடர்பில்லாத அறிவுஜீவிகளால் எழுதப்பட்ட நூல்கள் அவை எனக் கருதியிருக்க மாட்டார். அவை மா.லெ. புரட்சிகர அறிவுஜீவிகளால் எழுதப்பட்டவை. தமிழ் நாட்டில் உள்ள புரட்சிகர அணிகளுக்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டவை.

அடுத்து, “ஒடுக்கப்படும் தேசிய இனமக்களின் விடுதலை என ஒன்று இருக்கிறது என்ற ஓர்மை இல்லாமல் ஏறத்தாழ புரட்சிகர அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன” என அவர் குறிப்பிடுகிறார். உண்மையில் ‘இந்தியா தேசிய இனங்களின் ஒரு சிறைக்கூடம்’ என்ற புரிதலுடன் தொடக்கத்தில் இருந்தே செயல்பட்டு வருபவை மா.லெ. புரட்சிகர அமைப்புகள்தான். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காக நிற்பவை அவை. ஆனால் அதே சமயத்தில் கட்டுரையாளர் போல அந்த அமைப்புகள் தேசிய இனவாதத்தில் வீழ்ந்துவிடவில்லை. தேசிய இனவாதத்தில் வீழ்வதைத்தான் தேசிய இனமக்களின் விடுதலை பற்றிய ஓர்மை என அவர் கருதுகிறார் போலும். புரட்சிகர அமைப்புகள் இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனமக்களின் விடுதலையையும் பற்றிச் சிந்திக்கின்றன. கஷ்மீர், வடகிழக்குப் பகுதி மக்கள், தமிழின மக்கள் என அனைத்துத் தேசிய இன மக்களுக்காகவும் குரல் கொடுக்கின்றன. அவர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடி வருகின்றன. அதே போலத் தமிழீழ மக்களின் மீதான அடக்குமுறைகளை எதிர்த்தும் குரல் கொடுத்து வருகின்றன. அதே சமயத்தில் ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் உள்ளடக்கமாகக் கொண்டிராத தேசிய இன விடுதலையை அவை ஆதரிப்பதில்லை. சோசலிசம் இல்லாத தேசியம் ஒரு சூழ்ச்சி என்பதும், ஏமாற்று என்பதும், தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அது எதையும் வழங்காது என்பதும் புரட்சிகர அமைப்புகளுக்குத் தெரியும். இந்த வரைறைக்குள் நின்றே தோழர் சிவா தமிழீழ மக்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான இயக்கங்களில் பங்காற்றினார். இந்த வரையறைகள் பற்றித் தேசிய இனவாதத்தில் வீழ்ந்துவிட்ட பா. செயப்பிரகாசம் போன்றவர்களுக்கு அக்கறை இருக்கவேண்டிய அவசியமில்லைதான். அதனால்தான் புரட்சிகர அமைப்புகளுக்கு தேசிய இனவிடுதலை பற்றி ஓர்மை இல்லை என அவர் எழுதுகிறார்.

மேலும் அவர், “...பிரதான முரண்பாடு, யுத்த தந்திரம், போர்த் தந்திரம், நடைமுறை உத்திகள் என மயிர் பிளக்கும் விவாதங்களை நடத்திக்கொண்டு வேறு வேறான திசைகளில் பிரிந்தார்கள். அணியிலிருப்போரின் சிந்திப்புத் திறன், செயல்திறன், கிரகிப்பு என்ற உளவியல் அம்சங்களை கவனத்தில் கொள்ளாது, இவர்களின் விவாதம் இரவுக் கணக்கில் நீளும். நெடிய விவாதங்கள், ஆலோசிப்புகளில் இவர்கள் கரைந்து கொண்டிருந்த காலத்தில் கண் முன்னரேயே, சமுதாயப் பிரச்சனைகளை அந்தந்த மக்கள் நடத்திக்கொண்டு போய்க்கொண்டே இருந்தார்கள். எழுந்து எதிர்கொள்ள வேண்டிய புதிய புதிய பிரச்சினைகளை விவாதிக்கும் குழுவாக மட்டுமே இருக்க முடிந்ததே தவிர, மக்களை அணி சேர்க்கும் செயலூக்கம் கொண்டு உருக்கொள்ளவில்லை” எனப் புரட்சிகர அமைப்புகள் பற்றி எழுதுகிறார்.

ஒரு சமூகத்தை முழுமையாகப் புரட்சிகரமான முறையில் மாற்றியமைக்கச் சிந்திக்கும், திட்டமிடும், அதை நோக்கி மக்களை வழி நடத்திச் செல்லும் ஓர் இயக்கம் சமூகத்தைப் பற்றிய அனைத்தும் தழுவிய பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். அச்சமூகத்தில் நிலவி வரும் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், அதனூடே செயல்படும் வர்க்கங்கள், சமூக மாற்றத்தினூடேதான் தங்களுடைய விடுதலை அடங்கியுள்ளது என்ற நிலையிலுள்ள புரட்சிகர வர்க்கங்கள், சமூக மாற்றம் தமக்கு அழிவைக் கொண்டு வந்து விடும் என்ற நிலையில் சமூக மாற்றத்திற்கு எதிராக நிற்கும் எதிர்ப் புரட்சிகர வர்க்கங்கள், ஊசலாட்டம் கொண்ட வர்க்கங்கள், அங்கு இருக்கும் தேசிய இனங்கள், பழங்குடியினர் மற்றும் அங்கு நிலவிவரும் குறிப்பான பண்பாட்டு நிலைமைகள்- சாதி, மதம், பழங்குடியினர், பெண்கள்,இன்ன பிற - அரசியல், பொருளாதார நிர்வாகக் கட்டமைப்புகள், வாழ்வாதாரங்கள், நிலவி வரும் சர்வதேச நிலைமைகள், ஏகாதியபத்திய முகாம்களுக்கிடையிலான போட்டிகள், முரண்பாடுகள், ஏகாதியபத்தியத்துடன் குறிப்பான அந்நாட்டிற்கு உள்ள உறவு, சார்புத்தன்மை, முரண்பாடு என அனைத்தையும் பருண்மையாக ஆய்வு செய்து சரியான அரசியல் யுத்த தந்திரமும், போர்த்தந்திரமும் வகுக்கப்படாமல் ஒரு இயக்கம் மக்களைத் திரட்டிவிட முடியாது; சமூக மாற்றத்தையும் சாதித்துவிடமுடியாது. கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள ஏழு அம்சங்களுக்கும் அவற்றிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என அவர் கருதுகிறாரா? அவ்வாறு கருதினால் அது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறதே தவிர வேறு எதையுமில்லை.

அத்தகைய திட்டத்தின் அடிப்படையிலேயே புரட்சிகர சக்திகளை அணிதிரட்டவும், சமரச சக்திகளை அம்பலப்படுத்தவும், புரட்சிக்கு எதிரான சக்திகளைத் தனிமைப்படுத்தவும் முடியும்; சமூக மாற்றத்தைச் சாதிக்கமுடியும். அத்தகைய அணிதிரட்டலுக்கு அவசியமான கண்ணோட்டத்தை வழங்குவதுதான் யுத்த தந்திரம், போர்த் தந்திரம் என்ற மார்க்சிய- லெனினியக் கருத்தாக்கங்கள். சமூக மாற்றத்திற்கான இறுதி இலக்கு என்ன? அதற்கான முழக்கங்கள் யாவை? அந்த இறுதி நோக்கத்தை நோக்கி மக்களை வழி நடத்திச் செல்லும்போது எதிர்கொள்ளும் ஒவ்வொரு குறிப்பான அரசியல், வரலாற்றுச் சூழலில் வைக்க வேண்டிய தற்காலிக இலக்குகள் யாவை? அதற்கான குறிப்பான முழக்கங்கள் யாவை? என்பவை பற்றிக் கூறுபவைதான் யுத்த தந்திரமும், போர்த் தந்திரமும். இவை சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட மா.லெ. புரட்சியாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அரிச்சுவடிப் பாடங்கள். இவை பற்றி விவாதிப்பதை மயிர்பிளக்கும் விவாதம் எனக் கொச்சைப்படுத்துவது கட்டுரையாளருக்கு உள்ள மார்க்சிய அறிவின் வெறுமையைத்தான் காட்டுகிறது. சமூக மாற்றத்திற்காகப் பொறுப்பேற்றுள்ள ஒரு புரட்சிகர இயக்கத்தின் அணி இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றில் தேர்ச்சி பெறும் புரட்சிகர அமைப்பினாலேயே மக்களைத் திரட்ட முடியும். அவற்றைக் கிரகிக்க முடியவில்லை என்று கூறுவதும், அவை தேவை இல்லை என நிராகரிப்பதும் சமூக மாற்றத்தையே நிராகரிப்பது ஆகும். இயக்கத்தைப் பஜனை கோஷ்டியாக மாற்றுவதாகும்.

சரியான அரசியல் யுத்த தந்திரத்தையும், போர்த் தந்திரத்தையும் கொண்டிராத ஓர் இயக்கம் தனது இலக்கை அடைவதில் வெற்றி பெற இயலாது. அதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டுதான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் நடைபெற்ற தேசிய இன விடுதலைப் போரில் ஏற்பட்ட பெரும் பின்னடைவு.

“...நெடிய விவாதங்கள், ஆலோசிப்புகளில் இவர்கள் கரைந்துகொண்டிருந்த காலத்தில் கண் முன்னரேயே, சமுதாயப் பிரச்சனைகளை அந்தந்த மக்கள் நடத்திக்கொண்டு போய்க்கொண்டே இருந்தார்கள்” என எழுதுவதன் மூலம் மக்களுடைய போராட்டங்களை சிறப்பித்துச் சொல்வதாகக் காட்டிக்கொள்கிறார். உண்மையில் ஒரு பக்கம், மக்களுடைய போராட்டங்களைச் சிறப்புறச் சொல்வதுபோல முன்னிறுத்தி இன்னொரு பக்கம் தான் பங்கெடுத்துப் பணியாற்றிய அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும் தனக்கும் தொடர்பு இல்லாததுபோல, மூன்றாம் நபர் போலத் தள்ளி நின்று இழிவுபடுத்தும் வேலையை இதன் மூலம் செய்கிறார்.

மேலும் அரசியல் யுத்த தந்திரம், போர்த்தந்திரம் வகுக்கப்படாமலேயே, அவற்றின் வழிகாட்டுதலின் கீழ் மக்கள் அணி திரட்டப்படாமலேயே, மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் மூலமே புரட்சிகரமான சமூக மாற்றம் வந்து விடும் எனக் கருதுவது காளை மாட்டில் பால் கறக்க நினைப்பது போலாகும். இலக்கு பற்றியும், மாற்றுச் சமூக அமைப்பு பற்றியும் கண்ணோட்டமும் திட்டமும் இன்றி ஆயிரக்கணக்கான தன்னெழுச்சியான போராட்டங்களை மக்கள் நடத்தினாலும் அவற்றின் பலன்களை ஆளும் வர்க்கங்களிலுள்ள பிரிவுகளும், பிற சமரச சக்திகளுமே அறுவடை செய்யும். மக்களுக்குக் கிடைக்கப்போவது வெறும் ஏமாற்றமே! இதைத்தான் வரலாற்று அனுபவங்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன.

“சமுதாயப் பிரச்சினைகளை பொருளாதாரச் சிக்கல் என்னும் ஒற்றை முனையாக மட்டுமே பார்க்கும் பார்வை நம் மத்தியில் உள்ளது...” என எழுதுவதன் மூலம் புரட்சிகர அமைப்புகளுடன் (சுயவிமர்சனத்துடன்) தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது போலவும், பொருளாதாரவாதத்தைச் சாடுவது போலவும் காட்டிக்கொண்டு புரட்சிகர அமைப்புகளை நயவஞ்சகமாகத் தாக்கித் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். மேலும் “நம் மத்தியில் உள்ளது” என்று சொல்வதன் மூலம் அவர் தன்னை எந்த அமைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார் எனத் தெரியவில்லை. சமூகப் பிரச்சினை= பொருளாதாரச் சிக்கல் என்று எந்த மா.லெ. அமைப்பும் கருதுவதாகவோ அல்லது செயல்படுவதாகவோ தெரியவில்லை.

மேலும் அவர், “உண்மையில் விடியல் பதிப்பகம் ஒரு இயக்கத்தின் பணிகளைச் செய்தது. இயக்கத்துக்கும் மேலாகவே அதன் வீச்சு இருந்தது என்று குறிப்பிட முடியும்” என எழுதுகிறார். இயக்கத்தைப் பற்றிய அவருடைய பார்வை எவ்வளவு குறைபாடு உள்ளதாக இருக்கிறது என்பதையே இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. எவ்வளவு சிறந்த நூல்களை வெளியிட்டாலும் ஒரு பதிப்பகம் ஓர் இயக்கமாக மாறிவிட முடியாது. சிறந்த நூல்கள் ஓர் இயக்கத்திற்கு உதவிபுரியுமே தவிர நூல்களே இயக்கமாக மாறிவிட முடியாது. மிகச் சிறந்த நூல்களை வெளியிட்ட விடியல் சிவாவும் அவ்வாறு கருதியவரல்ல. ‘இயக்கத்துக்கும் மேலாகவே அதன் வீச்சு இருந்தது’ எனக் குறிப்பிடுவதன் மூலம் தோழரைச் சிறப்பிப்பதாகக் காட்டிக் கொண்டு புரட்சிகர இயக்கத்தின் தேவையை மறுக்கும் போக்கையே வெளிப்படுத்துகிறார்.

மொத்தத்தில் ஒரு தோழரின் மறைவு, அவருடைய செயல்பாடு மற்றும் சிந்தனைகள் மீது தனது சிந்தனைகளையும், கருத்துகளையும் ஏற்றி விளக்குவதன் மூலமாகப் புரட்சிகர அமைப்புகளுக்கு எதிரான கலைப்புவாதக் கருத்துகளை, உறுதியான தெளிவான வார்த்தைகளில் அல்லாமல், நழுவிச் செல்லும் இலக்கிய நடையில் இந்தக் கட்டுரையாளர் முன்வைத்துள்ளார்.

கட்டுரையாளரின் சமூக அக்கறை பற்றி எங்களுக்குச் சிறிதளவும் ஐயமில்லை. உண்மையில் அவரிடத்தில் உள்ள கேள்விகளையும், ஐயங்களையும் அவருடைய பெயரிலேயே முன் வைத்து விடை தேடுவதுதான் நேர்மையாக இருக்க முடியும். அதற்கான பதில்களைப் புரட்சிகர அமைப்புகளிடமிருந்தும் பெற முடியும். சமூக மாற்றத்தில் அக்கறை உள்ள அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். அதற்குரிய அனைத்து ஜனநாயக உரிமைகளும் அவருக்கு உண்டு. அதை விடுத்து மறைந்த ஒரு தோழரின் மீது தனது கேள்விகளையும் ஐயங்களையும் ஏற்றி எழுதுவது அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்காது எனக் கருதுகிறோம்.

- மாசீலன்

Pin It