இன்று இந்திய தேசத்தின் மூவர்ணக்கொடி கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது, நாலாவது நிறமாக மனித ரத்தம்.

தன் மக்களை முன்னெச்சரிக்கையாக காப்பாற்றத் தவறும் தேசம், பழி வாங்கும் நோக்குடன் சில கொலைகளை தானே சட்டம் என்ற பெயரில் செய்து தனது மக்களை திருப்தி படுத்துவது என்பது தவறான முன் உதாரணம். மக்களின் மனதில் கொலையை ஒரு தீர்வாக விதைக்கும் இச்செயல் நாளை மக்களையும் அதுபோலவே தீர்மானிக்கத் தூண்டும்.

அஜ்மல் கசாப் என்ற சிறுவனின் அதீத வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு இறைநம்பிக்கை என்ற பெயரால் மனமாற்றம் செய்யப்பட்டு ஒரு கொலைக்கருவியாக அவனை உருவாக்குகின்றனர். கடவுளுக்காக செய்கிறோம் என்ற நம்பிக்கையில் முன்பின் தெரியாத அப்பாவிகளை எந்தவித உள்நோக்கமும் இன்றி சுட்டுத் தள்ளுகிறது அந்த கொலைக்கருவி.

அவனால் பாதிக்கப்பட்ட அனைவர் பொருட்டும் நமக்கு ஆழ்ந்த அனுதாபமும், வருத்தங்களும், பிரார்த்தனைகளும் என்றும் இருக்கிறது என்பதே நிதர்சனம்.

ஆனால் அதே சமயம் அஜ்மல் கசாபை கொல்வதனால் எந்த பயனும் இல்லை என்று பல மனிதம் போற்றும் அமைப்புகளும் கூறி வந்தன. ஒரு அப்பாவிச் சிறுவனை ஓராண்டு காலத்தில் கொலைக்கருவியாக மாற்ற முடியும் என்றால், ஒரு இருபது ஆண்டுகளில் கடும் சிறைதண்டனையால் ஏன் அவனை ஒரு அன்பின் தூதுவனாக மாற்ற முடியாது?? அதை விடுத்து மீண்டும் மீண்டும் நாடுகளின் பெயராலும், இன, மொழி, ஜாதி, மதத்தின் பெயராலும் வெறுப்பின் விதைகளை விதைப்பது, மேலும் பல கசாப்களையே உருவாக்கும்.

ஒரு அரசு, யாருக்கும் தெரியாமல், பின்வாசல் வழியாக தான் நினைத்ததை செய்கிறது; அதுவும் ஒரு கொலையைச் செய்கிறது என்பது என்ன காரணத்தைச் சொன்னாலும் ஒரு மிகவும் தவறான முன்னுதாரணமாகவே கொள்ளப்படவேண்டும்.
 
நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணையரை தலைவராகக் கொண்டு இயங்கும் 'மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம்', "கொலையின் மூலம் ஒரு தீர்வு" என்ற கருத்தியலையும், ஒரு அவசர கதியில் மக்களுக்கு அறிவிக்காமல் மரண தண்டனை நிறைவேற்றுவது என்ற “எதேச்சதிகார போக்கினையும்” மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

- செல்வராஜ் முருகையன், செயலாளர், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம், சென்னை (9884021741)

Pin It