ஒரு சமூகம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதை இரண்டு விதங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். ஒன்று கருத்து பரிமாற்றம்; மற்றொன்று ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் மூலம். இந்த சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க கருத்து பரிமாற்றம் மிகவும் அவசியமாகிறது. ஆனால் அந்த கருத்துக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள் எவரும் கவலைப்படுவதில்லை. ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார் "எனக்கு பூச்சரம் கட்டத் தெரியும் என்பதால் காகிகதப் பூவைக் கொண்டு பூச்சரம் கட்டினால் பூச்சரம் மணக்காது" என்று. அப்படித்தான் எனக்கு எழுதத் தெரியும் என்பதாலோ, எனக்குப் பேசத் தெரியும் என்பதாலோ எதை வேண்டுமானாலும் எழுதிவிட முடியுமா? எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா?

ஒரு கருத்தோ அல்லது ஒரு எழுத்தோ சமூக பொறுப்பு உள்ளவர்களின் மூலம் சமூகத்தின் பார்வைக்கு செல்லும் பட்சத்தில் அந்த சொல் தவறாக இருக்கும் பட்சத்தில், அந்த சொல் சமூகத்தில் எவ்வளவுப் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதை யாரும் உணர்வதில்லை. அப்படி ஒரு தவறை தான் இங்கே எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆம்! சாதி மறுப்புத் திருமணத்தை கலப்புத் திருமணம் என்று எழுதியும், பேசியும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். கொச்சைப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அது ஏதோ நடக்கக்கூடாத ஒன்று போலவும் பாவப்பட்ட செயல் போலவும் சித்தரிக்க முனைகிறார்கள்.

இதற்கு முதலில் கலப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள அவசியமாகிறது. கலப்பு என்பது இருவக்கப்படும் ஒன்று இனக்கலப்பு; மற்றொன்று பொருட்கலப்பு. இனக்கலப்பு என்பது ஓர் இனம் அதற்கு முற்றிலும் வேறுபட்ட இனத்தோடு சேர்ந்து கொள்வது அல்லது உறவை ஏற்படுத்திக் கொள்வதே ஆகும். பொருட்கலப்பு என்பது ஒரு பொருள் அதன் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்ட பொருளுடன் இணைந்து கொள்வது (உதாரணமாக பாலுடன் நீரைக் கலப்பது). இதுவே கலப்பு ஆகும்.

அடுத்து இனம் என்றால் என்ன? இனம் எத்தனை வகைப்படும்? உயிரியலில், இனம் என்பது உயிரியல் வகைப்பாடு மற்றும் பெயரீட்டு தரநிலை தொடர்பிலான அடிப்படை அலகுகளில் ஒன்றாகும். பொதுவாக இனம் என்பது, தங்களுக்குள் கலந்து இளம் உயிரினங்களை உருவாக்கக் கூடிய ஒரு தொகுதி உயிரினங்கள் என வரையறுக்கப்படுகின்றது. பெரும்பாலான தேவைகளுக்கு இந்த வரைவிலக்கணம் போதுமானது. எனினும், டிஎன்ஏ ஒப்புமை அல்லது உருவாக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான அல்லது வேறுபட்ட முறைகளிலும் இனம் என்பதற்கு வரைவிலக்கணம் தரப்படுவது உண்டு. இனங்களுக்குள் காணப்படும் சூழல் சார்ந்த இயல்பு வேறுபாடுகள், அவற்றைப் பல்வேறு துணையினங்களாக பிரிப்பதற்கு வழி வகுக்கின்றன. (நன்றி wikipedia) சுருக்கமாக சொல்வதேயானால் பொதுப் பண்புகள் கொண்டவைகளை ஓர் இனம் எனலாம். அந்த வகையில் அடிப்படையில் மூன்றே இனங்கள் தான் உண்டு. ஒன்று மனித இனம், இரண்டு விலங்கினம், மூன்று தாவரஇனம்.

ஆகவே தான் இனங்களுக்கான வரையறைகள் இப்படி இருக்கும் பட்சத்தில் சாதி என்பது ஓர் இனமா? மதம் என்பது ஓர் இனமா? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. சாதி என்பது மனிதர்கள் ஒற்றுமையாக இருப்பதை விரும்பாத அல்லது பிரித்து வைத்து தான் நலமாக வாழ யாரோ ஒரு சிலரால் செய்யப்பட்ட ஒரு கயநெறியே ஆகும். இன்னும் சொல்வோமானால் தந்தை பெரியார் அவர்கள் இதை மனுதர்மம் எனும் தீரக்கருமத்தின் சூத்திரம் என்று சொல்வார். ஒரு சாதியைச் சேர்ந்த பெண் மற்றொரு சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனையோ, ஒரு சாதியைச் சேர்ந்த ஆண்மகன் மற்றொரு சாதியைச் சேர்ந்த பெண்ணையோ திருமணம் செய்துகொண்டால் அது கலப்புத் திருமணமா? அல்லது சாதி மறுப்புத் திருமணமா? தன் குணநலன்களோடு ஒத்த சக மனிதனையே திருமணம் செய்து கொள்ளும்போது அது எப்படி கலப்புத் திருமணம் ஆகும்? புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து தான் சாதி மறுப்புத் திருமணம் என்று பிரகடனம் செய்தார்கள். ஆனாலும் இன்னும் பெரும்பாலான எழுத்தாளர்கள், பத்திரிக்கைகள் கலப்புத் திருமணம் என்றே எழுதுகிறார்கள். இது தவறான சிந்தனைக்கு இட்டுச் செல்லும் என்பதை அவர்கள் உணர்கிறார்களா? அல்லது சாதியும் ஓர் இனம் என்ற விஷத்தை மக்கள் மனதில் பதியவைக்கத் துடிக்கிறார்களா? என்று தெரியவில்லை!

சாதியின் மீது அதீத நாட்டம் கொண்டவர்கள் இதை ஒரு சூழ்ச்சியாகவே பயன்படுத்துகிறார்கள். எப்படியாவது சாதியை மக்கள் மனதில் தக்கவைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய நிலைப்பாடு. சாதியை ஒழிக்கவேண்டும் என்று வலியப் பேசுவார்கள்; வாயடிப்பார்கள். ஆனால் சாதி மறுப்பு என்ற சொல்லைக்கூட உச்ச்சரிக்கமாட்டார்கலாம்; குறைந்தபட்சம் சாதிமறுப்பு என்ற சொல்லைக்கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி சாதியை ஒழிக்க முனைவார்கள்? ஒரு பெண்ணோ அல்லது ஆணோ சாதியின் மீது நம்பிக்கை இழந்து சாதிகளைக் கடந்து திருமணம் செய்து கொள்ளும்போது அதை கலப்புத் திருமணம் என்று எழுதிக் கொச்சைப்படுத்தி மக்கள் மனதில் அது ஏதோ வினோதமான செயல் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுகிறார்கள். இதுதான் இந்துத்துவத்தின் சூழ்ச்சி, சூது, வெற்றி!

சாதியை வலியுறுத்த எப்படி எல்லாம் முயலமுடியுமோ அப்படி எல்லாம் முயற்சிக்கிறார்கள். இவர்கள் சொல்வது போல கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்கள் ஓர் ஆட்டைத் திருமணம் செய்துக் கொள்ளவில்லை; ஒரு கழுதையைத் திருமணம் செய்து கொள்ளவில்லை; எல்லா விதத்திலும் மனிதனுக்கே உரிய குண நலன்களை கொண்ட சகமனிதனைத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் ! ஆனாலும் இவர்கள் பார்வையில் அது கலப்புத் திருமணமாம். அப்படியானால் ஒரு ஆணோ, பெண்ணோ ஒரு கழுதையைத் திருமணம் செய்துகொண்டால் அதற்கு என்ன பெயர் சொல்வார்கள்? சாதி என்ற ஓர் இனமே இல்லாத பட்சத்தில் சாதி மாறி திருமணம் செய்து கொள்வது எப்படி கலப்புத் திருமணம் ஆகும்?

தங்கள் சொல்லும் கருத்துக்கள் மக்கள் மனதில் எப்படி பதியும், எவ்வித தாக்கத்தை உண்டாக்கும் என்பதை அறிந்து கொண்டு எழுதுவதுதான் ஒரு முற்போக்கு சிந்தனையாளரின் சிறந்த பார்வையாக இருக்கமுடியும். இந்த சமூகத்தில் சிந்தனையாளர்கள், முற்போக்குவாதிகளால் தான் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. அப்படி உள்ள வேளையில் சாதியை வேரோடு ஒழிக்க வேண்டிய பொறுப்பும் சிந்தனையும் சமூக சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்குமே உரியது. அதை விடுத்து இவர்களும் இப்படியே செய்வார்களேயானால் அது ஒரு பிற்போக்கு சிந்தனையாகவே மாறும். கலப்புத் திருமணம் என்றே சொல்லிக் கொண்டு வருவோமானால் சாதியின் மசுரைக்கூட புடுங்க முடியாது. சாதியை ஒழிக்க வேண்டுமானால் முதலில் சாதி மறுப்பு என்ற சொல்லாடலை நடப்பில் கொண்டுவாருங்கள். சொல்லில் கூட சாதிமறுப்பை உறுதி செய்யவில்லை என்றால் சாதியை ஒழிப்பது என்பது இயலாத ஒன்றே.....

- அங்கனூர் தமிழன் வேலு

Pin It