ஒரு காலத்தில் தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகக் கருதப்பட்டது தருமபுரி மாவட்டம். ஒன்றுபட்ட தர்மபுரி மாவட்டத்தில் வறுமையும், வேலையின்மையும், சமூகக் கொடுமைகளும் நிறைந்திருந்த காலத்தில் அடக்கப்பட்ட மக்களின் எழுச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், நக்சல்பாரி இயக்கமும் வேர் பிடித்தது. எழுபதுகளின் பின்னால் கந்துவட்டிக் கொடுமைகளையும், சாதி ஆதிக்கங்களையும் எதிர்த்து தலித் மற்றும் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி போராடிய பெருமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நக்சல்பாரி இயக்கத்திற்கும் உண்டு.

வீரம் செறிந்த மக்கள் போராட்டம் நடத்திய நக்சல்பாரி தலைவர்கள் பாலன் மற்றும் அப்பு ஆகியோர் மோதல் சாவு என்கிற பெயரில் கொல்லப்பட்டனர். அந்த இருபெரும் போராளிகளின் பிரம்மாண்டமான சுத்தி அரிவாள் பொறித்த நினைவுச் சின்னம் உள்ள இடம் தான் நாய்க்கன்கொட்டாய். ஒரு காலத்தில் செங்கொடி இயக்கத்தின் பெருமை பேசிய நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி காலனி போன்ற இடங்கள் கடந்த 07.11.2012ம் தேதி ஆதிக்க சாதியின் திட்டமிட்ட வெறிச்செயலால் உருக்குலைந்து, சிதைந்து போன பகுதிகளாக காட்சியளித்த கொடுமையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. வன்னிய சாதிப் பெண் திவ்யாவை பட்டியல் சாதியைச் சார்ந்த இளைஞன் இளவரசன் காதலித்து சட்டப்படி திருமணம் செய்து காவல்துறையின் உயர் அதிகாரியிடம் பாதுகாப்பு கேட்டு, அவரும் உறுதியளித்த பின்னால் நடந்துள்ள கோர சம்பவங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நக்சல்பாரி இயக்கங்கள் அரசு பயங்கரவாதத்தால் அடக்கப்பட்ட பின்பு சாதி அமைப்புகளில் குறிப்பாக வன்னியர் சங்கம், பா.ம.க ஆகிய இயக்கங்களின் கை ஓங்கியது. மறுபக்கம் தலித் காலனிகளில் உள்ள தலித் மக்களின் முதல் தலைமுறை படிக்கத் தொடங்கியது. பல இளைஞர்கள் பக்கத்து மாநிலமான கர்நாடகம் பெங்களூருக்குச் சென்று கட்டிடத்தொழில், சிறு தொழில், சுமை தூக்கும் தொழில் செய்து அதன் மூலம் தங்கள் பொருளாதார வாழக்கையையும், குழந்தைகளின் கல்வியையும் மேம்படுத்தினார்கள். மேலே சொன்ன மூன்று பகுதிகளிலும் பள்ளி சென்று முடித்து பாலிடெக்னிக் மற்றம் கல்லூரி படிப்புக்குச் சென்றனர். பக்கத்து கிராமங்களிலே வாழ்ந்து வரும் இதர சாதியைச் சார்ந்த பெண்கள் மற்றும் ஆண்களுடன் பழகுகிற வாய்ப்பு கிடைக்கிற‌போது இயற்கையாக ஏற்படும் காதல் நிகழ்வுகள் இந்தப் பகுதியிலும் தொடர்ந்தது எனில் ஆச்சரியம் இல்லை.

அந்த வகையில் வயது வந்த இளவரசன், திவ்யா திருமணம் முடிந்து தங்கள் திருமண வாழ்க்கையைத் தொடருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. காவல்துறை இருவருக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

குறிப்பாக ஒரு வயது வந்த தலித் இளைஞன், தலித் அல்லாத பெண்ணை திருமணம் செய்யும் போது அவர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு கொடுத்து சாதி மறுப்புத் திருமணத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசு நிர்வாகமே, பிரித்து வைக்கிற கொடுமைகளை சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்த்து Latha Singh Vs Uttar Pradesh (2006(5) SCC 475) என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டகட்ஜூ மிக அற்புதமான முறையில் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுரையும் கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற நீதிபதி சதாசிவம் அவர்கள் 2009ம் ஆண்டு இதே போன்ற ஒரு தீர்ப்பை சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்பது குறித்து தன் தீர்ப்பில் கூறி, அந்த தீர்ப்பின் சாராம்சத்தை மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கையாக‌ அனுப்ப உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரமக்குடியில் நடந்த கலவரத்தில் ஆறு தலித்துகள் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாட்ஷா மற்றும் வேணுகோபால் கொடுத்த தீர்ப்பிலும், இது போன்ற வழிகாட்டுதல்கள் கொடுக்கபட்டுள்ளன. அதேபோன்று கட்டப்பஞ்சாயத்து சம்மந்தமாக ஆறுமுகம் சேர்வை எதிர் தமிழ்நாடு அரசு (2011 (3) MLJ-551)ல் பாரா-3, 5, 6, 8, 9 மிகத் தெளிவாக கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

"சமீப காலங்களில் வேற்று சாதி, மாற்று மதங்களையும் சார்ந்தவர்கள் திருமணம் செய்கிறபோது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கிராம கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரால் ஓர் இயக்கமாகவே நடத்துகிற ஒரு போக்கு உள்ளது. மேற்படி வன்கொடுமைகளையும், கட்டப்பஞ்சாயத்துகளையும் 2006 (5) SCC-475)ல் குறிப்பிட்டபடி மேற்படி கருணைக் கொலை, கௌரவக்கொலை என்ற பெயரில் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடும் நிலப்பிரபுவத்துவ ஆதிக்க சக்திகளை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும். மேலும் மேற்படி கட்டப்பஞ்சாயத்துகள் தாங்களாகவே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கை ஆகும்.

எனவே காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்படி வன்கொடுமைகளை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறோம். மேற்படி சம்பவங்கள் குறித்து குற்றவியல் வழக்குகள் தொடர்ந்த போதும், நடக்கும் வன்கொடுமைகள் குறித்து மாநில் அரசுகள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மற்ற அதிகாரிகளை தற்காலிகப் பணி நீக்கம் செய்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1. வன்கொடுமை நடக்கும் என்பதை ஏற்கனவே தெரிந்திருந்தும் அது தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்,

2. மேற்படி வன்கொடுமை நடந்த பிறகு உடனடியாக தலையிட்டு சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய உரிய குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்காதவர்கள் மேற்படி வன்கொடுமை சம்மந்தமாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு உடையவர்களாக கருதப்பட வேண்டும்" என்று தீர்ப்புரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பின்புலத்தில் நாய்க்கன் கோட்டையில் நடந்த கலவரத்தை ஆய்ந்து பார்க்க வேண்டும். கடந்த 15.10.2012ம் தேதி இளவரசனும், திவ்யாவும் சட்டப்படி திருமணம் செய்து கெண்டனர். மேற்படி திருமணத்திற்கு பெண்ணின் தந்தை நாகராஜ் எந்த எதிர்ப்பும் முதலில் தெரிவிக்கவில்லை.

ஆனால் அதற்கு முன்பாக வன்னியர் சங்கக் கூட்டம் ஒன்றில் காடுவெட்டி குருவின் வன்முறையைத் தூண்டும் பேச்சு பரவலாக அந்த சமூக மக்களால் கேட்கப்பட்டுள்ளது. நாகராஜை மனரீதியாக துன்புறுத்தி அவரைத் தற்கொலை செய்ய தூண்டிவிட்டுள்ளனர் இந்த கலவரத்திற்குக் காரணமானவர்கள்.

இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோதே இது குறித்து காவல்துறைக்கு தெரிந்திருந்தும் முறையாக தலையீடும் தகுந்த பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தால் பெண்ணின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்திருக்க மாட்டார். அதைத் தொடர்ந்து வன்கொடுமை, கொள்ளை, தீ வைப்பு நிகழ்ச்சிகள் நடந்திருக்காது.

இந்த சம்பவங்கள் குறித்து சம்மந்தப்பட்ட காவல்துறையைச் சார்ந்த சில அதிகாரிகள் நாகராஜை மனரீதியாக துன்புறுத்தியதாகத் தெரியவருகிறது. நாகராஜ் தன் சமூகத்தைச் சார்ந்த வன்முறையாளர்கள் நிர்பந்தித்த காரணத்தினாலேயே தற்கொலை செய்துள்ளார்.

பல்லாண்டு காலமாக புகைந்து கொண்டிருந்த சாதி ஆதிக்க வெறி, காடுவெட்டி குருவின் பேச்சினாலும், அதைச் சார்ந்த அமைப்பு மற்றும் சம்மந்தப்பட்ட நபர்கள் நாகராஜின் தற்கொலையைப் பயன்படுத்தி ஒரு திட்டமிட்ட வன்கொடுமை கலவரத்திற்கு இட்டுச்சென்று நடந்தேறியது தான் 07.11.2012ல் நடந்த கொடுமை ஆகும்.

தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் வாழ்ந்து வரும் செல்லன்கொட்டாயிலிருந்து இந்த கலவரத்தில் யாரும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் 2000க்கு மேற்பட்ட வன்னிய வகுப்பைச் சார்ந்த கலவரக் கும்பல் நாகராஜனின் உடலை வைத்துக்கொண்டு நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் திட்டமிட்டபடி நடத்திய தலித் மக்கள் மீதான வன்கொடுமை மிக வித்தியாசமான ஒரு குற்றச் சம்பவமாகும். வீட்டில் பயந்து ஒழிந்திருந்த பெண்கள், குழந்தைகளை எதுவும் செய்யாமல் வெளியே துரத்திவிட்டு, அவர்கள் உழைத்து சேர்த்து வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து, அவர்கள் பயன்படுத்தும் பீரோ, அலமாரி, கட்டில், தொலைக்காட்சிப் பெட்டி, மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணிணி, அரசு கொடுத்த சைக்கிள், ஆடுகள் ஆகியவைகளை மூன்று பகுதிகளிலும் திட்டமிட்டு கொள்ளையடித்து, தீ வைத்து கொளுத்தி சேதப்படுத்தியுள்ளனர். நடத்தப்பட்ட‌ தாக்குதல்கள் ஏதோ ஆத்திரத்தில் நடத்தப்பட்டவை அல்ல.

மேற்படி மூன்று கிராமத்தில் நடத்தப்பட்ட கொள்ளை, தீ வைப்புச் சம்பவங்கள் காவல்துறைக்குத் தெரியாது நடந்த சம்பவங்களும் அல்ல. மூன்று பகுதிகளிலிருந்தும் தொலைபேசி, கைபேசி மூலம் காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது என்பதை உண்மை அறியும் குழு நேரில் விசாரித்ததில் தெரிந்து கொண்டோம்.

இந்த திட்டமிட்ட கலவர சம்பவத்தின் நோக்கமே இனி ஒருமுறை வன்னியச் சாதியை சார்ந்த பெண்களை தலித் இளைஞர்கள் காதல், கல்யாணம் என்ற நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என நிகழ்த்தப்பட்டதாகும்.

மாலை சுமார் 4.30 மணிக்குத் தொடங்கி பகுதி பகுதியாக 8.30 மணிவரை இந்த சம்பவங்கள் மூன்று பகுதிகளில் நடந்திருக்கின்றன‌. இரவு 9.00 மணிக்குத் தான் போலீசார் மேற்படி பகுதிகளுக்கு வந்து மக்களை தங்களின் வீடுகளுக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்.

'பறையனுக்கு குடியானவ பெண் கேட்கிறதா' என்று அங்கிருந்த பெண்களை அச்சுறுத்தியதும், மாணவர்கள் பயன்படுத்தும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், மடிக்கணிணி, சைக்கிள் ஆகியவற்றை திட்டமிட்டு சேதப்படுத்தியதும் இந்த பட்டியல் சாதி மக்கள் கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக வளர்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்ற கலவரக் கும்பலின் நோக்கத்தின் காரணமாகவே.

கொண்டம்பட்டி காலனியில் ஓராண்டுக்கு முன்பாக நேதாஜி என்ற தலித் இளைஞன் முத்துலட்சுமி என்ற வன்னியப் பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்ற பின்னால், பக்கத்தில் உள்ள புளியம்பட்டி ஊரைச் சார்ந்தவர்கள் நேதாஜியின் வீட்டை மட்டும் உடைத்தற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகையை இந்த சம்பவத்தின் மூலம் தீர்த்துக் கொண்டார்கள். 11.11.2012ம் தேதி எமது வழக்கறிஞர் குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, பொ.லிங்கம், எம்.பி, மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், ஆறுமுகம் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான என்.நஞ்சப்பன், மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பாதிக்கப்பட் மக்களையும், வீடுகளையும் நேரில் கண்டு ஆய்வு செய்தார்கள். அதனடிப்படையில் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

1. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் இந்த வன்கொடுமைச் செயலுக்கு செய்ய திட்டம் தீட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. இடிக்கப்பட்ட, சேதப்படுத்தப்பட்ட வீடுகளை உடனே கட்டித்தருவதும், சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு உடனே இழப்பீடு தருவதும், போர்கால அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

3. வன்கொடுமையைத் தூண்டிவிட்ட வன்மைப் பேச்சுக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மக்களின் பாதுகாப்பையும், அமைதியையும், உறுதிப்படுத்த வேண்டும்.

4. கல்வி உரிமைச் சட்டம்-2009ன் படி தலித் மக்கள் வாழும் பகுதிகளில் கட்டாயமாக அருகாமைப் பள்ளிகளில் படித்து பயன்பெற மாவட்ட நிர்வாகங்கள், சிவில் உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னார்வ குழுக்கள் உதவியோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. சட்டப்படி வயது வந்தோர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்வது சாதியை ஒழிக்கும் ஒரு பகுதி என்ற முறையில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கோட்பாடுகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும், அரசின் திட்டங்களையும் விளக்கி விழிப்புணர்ச்சி ஊட்ட வேண்டும்.

6. வெண்மணி தொடங்கி தர்மபுரி நாய்க்கன்கொட்டாய் வரை நடந்திருக்கிற வன்கொடுமைகளை நன்கு ஆராய்ந்து வருமுன் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது, மனித உரிமைகளைப் பேணுவதும், வளர்ப்பதும், அதை முன்னெடுத்துச் செல்வதும் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமை என்பதை உணர்த்த வேண்டும்.

- ப.பா.மோகன், வழக்கறிஞர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Pin It