வாழ்வின் புகழ் ஏணியில் இருப்பவர்களால் அவர்களின் சொந்த ஊர் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவது வழக்கம். அதுவும் குறுகிய காலம்தான். ஆனால் ஒரு அஃறிணை.. அதுவும் நசிந்து போய் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் இன்றளவும் தன் ஊருக்கு பெருமை சேர்த்து வருகிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆம்... காவலுக்கு கெட்டிக்காரன் என்ற அனைவராலும் புகழப்படும் பூட்டுதான் அது. பூட்டு என்று உச்சரித்தாலே அதன் அடைமொழியாக திண்டுக்கல்லை முன்னதாக சேர்த்து ஒலிப்பது இன்றளவும் வழக்கமாக உள்ளது.

இதன் பின்னணியில் ஆயிரக்கணக்கானோரின் தளராத முயற்சியும், அயராத உழைப்பும் இன்றும் மறைமுகமாக பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

இதனை அறிந்து கொள்ள நாம் குறைந்தபட்சம் 150 ஆண்டுகளுக்கு பின்னாலாவது செல்ல வேண்டும்.

திண்டுக்கல்...! தென் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த ஊர் அப்போதே தண்ணீர் பஞ்சத்திற்குப் பிரபலம். இதனால் ‘செக்கிற்கு மாட்டை கொடுத்தாலும் கொடுக்கலாம். ஆனால் திண்டுக்கல்காரனுக்கு பொண்ணைக் கொடுக்கக் கூடாது’ என்ற அன்றைய காலகட்டத்தில் வழக்குச்சொல்லாக கூறப்படுவது உண்டு. அப்போது விவசாயம் இல்லாததால் அதற்கு மாற்றுத் தொழிலாக உருவெடுத்ததுதான் பூட்டு. நேரம் காலம் பார்க்காமல் தினவெடுத்து உழைக்கத் துடித்த இந்த ஊர் மக்களுடன் இத்தொழில் இரண்டறக் கலந்து விட்டது.

யூஸ் அண்ட் த்ரோ பூட்டு, அலிகார் பூட்டுக்கள் பழுதானால் அவற்றைப் பிரித்து சரிபார்க்க முடியாது. ஆனால் திண்டுக்கல் பூட்டுக்களைப் பொருத்தளவில் எத்தனை முறை பழுதானாலும் அவற்றைப் பிரித்து சரி செய்து தலைமுறை தலைமுறையாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாதாரணமான பூட்டில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது திண்டுக்கல்தான். உள்பாகங்கள் துத்தநாதத்தில் அமைக்கப்பட்டதால் உப்புக்காற்று, மாறுபாடான பருவநிலை போன்றவற்றையும் எதிர்கொண்டு காலம் கடந்து நின்றது. தரம் பிரதானமாக இருந்தது இத்தொழிலுக்கு பெரும் பெயரை வாங்கித் தந்தது. அதேவேளையில் இவர்களின் கற்பனைத் திறன் உலகத்தின் பார்வையை திண்டுக்கல்லை நோக்கித் திரும்ப வைத்தது.

பூட்டு என்றால் அது பாதுகாப்பிற்கு மட்டும்தான் என்ற நிலையில் இருந்து அதன் ‘அடுத்தகட்டத்திற்கு’ எடுத்துச் சென்றதில் திண்டுக்கல்லின் பங்கு அலாதியானது. திருடர்களைத் தாக்கும் பூட்டு, திருட முயல்பவர்களை குழப்பும் பூட்டு, மணியடித்து உரிமையாளர்களை எச்சரிக்கும் பூட்டு, திருட்டு சாவியை ‘லபக்’ செய்யும் பூட்டு, சாவித்துவாரம் இல்லாத பூட்டு என்று ஏகத்திற்கும் நம்மை அசர வைக்கும் தொழில்நுட்பங்கள் ஏராளம். தொழிலில் புரட்சி ஏற்படுத்தி பூட்டு வரலாற்றில் ஒரு முத்திரை பதித்த அந்தக்கால ‘பூட்டு விஞ்ஞானிகளின்’ ஆற்றலை இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.

விபரங்கள் இதோ

.... பூட்டின் அடிப்புறத்தில் இலேசான துளை இருக்கும். அதனுள் வலுவான பிளேடு பொருத்தப்பட்டிருக்கும். வழக்கமான சாவியைத் தவிர வேறு எந்த சாவியையாவது இந்த பூட்டில் நுழைத்தால் அவ்வளவுதான்.. லிவர் மூவ்மென்டில் பிளேடு விடுவிக்கப்பட்டு எதிராளியைத் தாக்கும். ரத்தக்காயம் நிச்சயம். எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலில் திருடர்கள் அலறியடித்து ஓடும் நிலை ஏற்படும். இன்னொரு வகை பூட்டு எஜமானனின் விசுவாசி. வேறு சாவியை இதில் நுழைத்தால் போதும். திரும்ப வெளியே எடுக்கவோ, அசைக்கவோ முடியாது. மறுநாள் உரிமையாளர் வந்து அருகில் உள்ள இன்னொரு துவாரத்தில் ஒரிஜினல் சாவியை வைத்து ஒரு திருகு திருகினால்தான் கள்ளச்சாவிக்கு ‘விடுதலையே’ கிடைக்கும். இன்னொரு வகை பூட்டோ.. சரியான மாயாஜாலக்காரன்.. இதில் சாவித்துவாரமே இருக்காது. திருடர்கள் தலைமுடியை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தி திரும்பிப் போக வைக்கும். இந்த வகை பூட்டின் பின்னால் ஒரு சிறிய திருகு இருக்கும். அதைத் திருகினால்தான் சாவி துவாரமே தெரியும். இன்னொன்றோ ஏமாற்றுக்கார பூட்டு... இதில் சாவித் துவாரம் இருக்கும். ஆனால் சாவியை நுழைத்தால் எவ்வித மூவ்மென்டும் இருக்காது. ‘உண்மையான’ சாவித்துவாரம் அருகில் பார்வை சில்லு எனும் பகுதியால் மறைக்கப்பட்டிருக்கும். இப்படி பூட்டின் பரிமாணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

dindigul_lock_281இவ்வாறு ஒரே நேர்கோட்டு பார்வை உழைப்பும், அசர வைக்கும் கற்பனைத்திறன் தொழில்நுட்பமும் இணைந்ததால் அடுத்தடுத்த பூட்டில் என்னென்ன வித்தியாசம் என்ற ஆர்வப் பார்வைகள் இந்தியா முழுவதும் இருந்து திண்டுக்கல்லை நோக்கி துளைத்தெடுக்க ஆரம்பித்தன.

தண்ணீர்ப் பஞ்சத்திற்கு சுட்டிக் காட்டப்பட்ட இந்த ஊர் பின்பு பூட்டிக்கு அடைமொழியாக மாறிப்போனது. அது ஒரு வசந்தகாலம்.. வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகளின் வருகை, பூட்டுப் பட்டறைகளில் இரவும், பகலும் ‘பைலிங்’ செய்யப்படும் ஓசை, தினமும் ஆயிரக்கணக்கில் வண்டிகளில் வெளியூர்களுக்குப் பயணமாகும் பூட்டுகள், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆர்டர்கள் என்று அந்த இடைவிடாத பரபரப்பு... திண்டுக்கல்லிற்கே சற்று புதியதாகத்தான் இருந்தது.

உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டிருந்த திண்டுக்கல் பூட்டிற்கு பெரும் ஆபத்து உத்திரப்பிரதேசத்தில் இருந்து வந்தது. எதிர்காலத்தில் திண்டுக்கல்லில் இத்தொழிலை அழிக்கும் அசகாயசூரன்தான் அது என்று அப்போது சத்தியமாக யாருமே எதிர்பார்க்கவே இல்லை.

இயந்திரமயமாதல். இதற்குப் பலியான எத்தனையோ தொழில்களில் பூட்டும் பிரதானம். ஆம். 75 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேசம் அலிகார் எனும் இடத்தில் இருந்து இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பூட்டுகள் ஏகத்திற்கு இந்தியா முழுவதும் படையெடுத்தன. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பூட்டுக்களை தயாரித்துத் தள்ளும் இந்த இயந்திர தொழில்நுட்பத்தால் அவ்வகை பூட்டுக்களின் விலை மிகவும் மலிவாக இருந்தது. இயந்திர வடிவமைப்பு என்பதால் பார்க்க அழகாகவும், மெல்லிய தன்மையுடன் இருந்தது. துவக்கத்தில் டைகர் பூட்டு என்ற பெயரில் அறிமுகமானது. அமுக்கு பூட்டு என்று நடைமுறையில் அழைக்கப்பட்டது. (பூட்டுவதற்கு சாவியைப் பயன்படுத்தாமல் அமுக்கினாலே இவ்வகை பூட்டு பூட்டிக் கொள்ளும்) இந்த இயந்திரப்பூட்டு தாக்குதல் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க... இரும்புப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி அதிகரிப்பு.. அதை பூட்டு விலையில் எதிரொலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் திண்டுக்கல் பூட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டது. போதாக்குறைக்கு கனத்த பூட்டுகளையே பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் மாடர்னான கையடக்கப் பூட்டுக்களை நோக்கி புதுமை விரும்பிகள் செல்லத் துவங்கினர்.

இப்படி ‘பல பக்க தாக்குதலில்’ திண்டுக்கல் பூட்டு முழிபிதுங்கத் துவங்கியது. மலைப்பாம்பின் வாயில் சிக்கிய விலங்கின் தருணம் அது. அப்போது கூட வியாபாரிகளுக்கு அதன் விபரீதம் புரியவில்லை

உழைப்பாலும், தொழில்நுட்பத்தாலும் நூற்றாண்டுகளாக ஜெயித்த வியாபாரிகள் அவ்வளவு விரைவில் சோர்வடைந்து விடவில்லை. ஒருபுறம் முனைப்பு அதிகரித்தது. மறுபுறம் அரசிற்குக் கோரிக்கைகள், அலிகார் பூட்டிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் என்று களத்தில் குதித்தது. திண்டுக்கல் பூட்டு யுத்தம் துவங்கியது. பல ஆண்டுகள் இந்நிலை நீடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகளுக்கு அலிகார் பூட்டிற்கு மாதக்கணக்கில் கடன்.. (வித்த பிறகு பணம் கொடுத்தா போதும் அண்ணாச்சி...) பல்வேறு சலுகைகள்.. சன்மானங்கள், விளம்பரங்கள் என்று எதிரணியும் ‘திண்டுக்கல்லை’ பிடிக்க படாதபாடு பட்டது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல.. மெல்ல.. திண்டுக்கல்லை விழுங்கத் துவங்கியது அந்த உத்திரப்பிரதேச இயந்திரம். அன்று ஏற்பட்டதுதான் சரிவின் தொடக்கம். தொடர்ந்து சரிவின் சாய்தளம் செங்குத்தாக மாறியது. தலைமுறை தலைமுறையாக வியர்வை வழிய உழைத்த உழைப்பு, பூட்டின் சரித்திரத்தில் ஏற்படுத்திய அதிரடிப் புரட்சி கொஞ்சம் கொஞ்சமாக மலரும் நினைவுகளாகவே மாறிப் போனது.

இன்றைக்கு பல்வேறு கடைகளின் உள்சுவர்களில் அலிகார் பூட்டுகளின் ஆட்சியே பிரதானம். வெற்றியின் உச்சத்தைத் தொட்ட திண்டுக்கல் சற்றே இளைப்பாறுதலுடன் அங்கே தொங்கிக் கொண்டுள்ளன. எனினும் அடுத்தடுத்து தொடர் முயற்சி அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் தலைமுறை இடைவெளி இதற்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. பூட்டுத் தொழிலுக்கு எதிர்காலம் இல்லை என்ற கருதி ஆயிரக்கணக்கானோர் வேறு களத்திற்குச் சென்றனர். தொழில் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பாதையில் பயணிக்க வைத்தனர்.

இதற்கெல்லாம் மேலாக தொழில்நுட்பம் தெரிந்த பெரியவர்கள் தங்கள் மீது படும் வெளிச்சத்தை இழக்க விரும்பாமல் ‘விஷயஞானத்தை’ கடைசிவரை மறைத்தே வைத்தனர். பூட்டை உடைத்துப் பார்த்து நுட்பத்தை அறிந்து கொள்ளலாம் என்றாலும், உடைத்ததுமே உள்கட்டமைப்பே சிதைந்து போனது. வித்தையை முழுவதும் அடுத்தவர்களுக்கு கற்றுத் தராததால் பல அரிய விஷயங்கள் அவர்களுடனே மறைந்து போய் விட்டன. பூட்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு தொழில்நுட்ப சாகசப் பூட்டுகள் அருகிப்போகின.

நம்மூர் திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்கள் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து என்று பல்வேறு நாடுகளிலும் திண்டுக்கல் பூட்டு ஆர்டரின் பேரில் அனுப்பப்பட்டுள்ளது.

அக்காலத்தில் ராமநாதபுரம் வரை கொண்டு செல்லப்படும் பூட்டுகள் அங்கிருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் ஏகத்திற்கும் கடத்தப்படுவதும் அப்போது மிகவும் பிரபலம்.

தொழிலின் நிலை குறித்து பல ஆண்டுகளாக இத்தொழிலில் உள்ள ஏஎன்எஸ் பூட்டு நிறுவன வியாபாரி சுகுமாறனிடம் கேட்டபோது, "பழைய நிலைக்கு கொண்டு வர படாதபாடு பட்டோம். இரும்புப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, அலிகார் பூட்டுக்களின் மூர்க்கத்தனமான சந்தைப்படுத்துதல் போன்றவற்றால் திண்டுக்கல்லின் பூட்டு தொழிலில் இன்றளவும் மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியவில்லை. தமிழகத்திற்கே பெருமை சேர்த்த இத்தொழிலின் நிலை உணர்ந்து பூட்டு தயாரிப்பதற்கான பொருளை மானியவிலையில் வழங்க வேண்டும். ஐடிஐ.போன்றவற்றில் பூட்டு வடிவமைப்பு குறித்து டிரேடு துவங்க வேண்டும். மாணவர்களுக்கு பயிற்சி அளித்து கடன் உதவி வழங்கி இத்தொழிலில் அதிகளவில் ஈடுபடச் செய்ய வேண்டும். தொழில்நுட்பம் மறையாமல் பாதுகாக்க வேண்டும்" என்றார்.

பாரம்பரிய தொழிலாளர்கள் துரைச்சாமி, பிச்சை ஆகியோர் கூறுகையில், "வருமானம் குறைவு என்பதால் பலரும் கட்டடம், மில் வேலைக்குச் சென்று விட்டனர். வேறுதொழில் தெரியாததால் இதை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் காலத்திற்குப் பிறகு எங்கள் குடும்பத்தில் இத்தொழிலில் ஈடுபடுவதற்கு யாரும் தயாராக இல்லை" என்றனர்.

dindigul_lock_laboursதிண்டுக்கல்லில் பூட்டுத்தொழில் நசிவை தடுக்க அரசு இங்கு பூட்டுத் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் (லாக் சொசைட்டி) என்று அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பூட்டுத் தொழிலுக்கு என்று ஒரு கூட்டுறவு சங்கம் இருப்பது இங்கு மட்டுமே. இங்குதான் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பூட்டு கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவு உள்ளது. எனினும் இந்த நடைமுறை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் இங்கும் தொழிலாளர்கள் மற்றும் பூட்டு தயாரிப்பு எண்ணிக்கையும் வெகுவாய் குறைந்துள்ளது

இது குறித்து சங்க அலுவலர்கள் கூறுகையில், "முன்பு 20 வகையான பூட்டுக்கள் செய்து வந்தோம். தற்போது 7 வகையான பூட்டுக்களே தயாரிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள் சில தொடர்ந்து இங்கு கொள்முதல் செய்கின்றன. தொழிலாளர் பற்றாக்குறை இங்கும் அதிகம் உள்ளது" என்றார்.

குற்றங்கள் நடக்கும் போதுதான் அவை பிரதானமாக பேசப்படுகிறது. தடுக்கப்பட்ட, தோல்வியடைந்த குற்ற நடவடிக்கைகள் வெளியில் தெரிவதில்லை. இது போலீஸ்துறையின் மிகப் பெரிய ஆதங்கம். இது பூட்டிற்கும் பொருந்தும். பல்வேறு குற்றச்செயல்களில் இருந்து தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்து கடைசி வரை ‘வாயைத் திறக்காமல்’ சொத்தைக் காப்பாற்றிய திண்டுக்கல் பூட்டுக்கள் ஏராளம். அவை சமயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கூட தெரிவதில்லை. ஆர்ப்பாட்டம் இன்றி கடமையை நிறைவேற்றி மூதாதையரது நினைவாக பலரது குடும்பங்களில் இன்னமும் நினைவுச் சின்னமாக உழைத்துக் கொண்டிருக்கும் திண்டுக்கல் பூட்டிற்கு என்றும் இல்லை அழிவு.

என்னதான் தீர்வு....?

பூட்டு தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அளித்து தொழிலில் ஈடுபட நம்பிக்கை அளிக்க வேண்டும்.

ஐடிஐ, பாலிடெக்னிக் போன்றவற்றில்  பூட்டுத் தயாரிப்பை பாடமாக வைக்கலாம்.
 
சிறப்பு கவனத்துடன்  அவர்களுக்கு கடன் வசதி மற்றும் தொழில் அனுபவம் உள்ளவர்களை ஒருங்கிணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்தி தொழில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

- கலிவரதன், திண்டுக்கல்

Pin It