மார்க்சின் மூலதனத்தை இன்றைக்கும் படிக்க வேண்டுமா?

1848-ஆம் ஆண்டில் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதன்பின் அவர்கள் உருவாக்கிக் கொடுத்த இயக்கவியல் பொருள்முதல்வாத, வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் மார்க்சியத் தத்துவம் என்ற பெயரில், வரலாற்று, சமூக, அறிவியல், அரசியல், பொருளாதார, தத்துவத் துறைகளில் புறக்கணிக்க முடியாத அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தின. உலக நாடுகள் எங்கணும், மார்க்சியத்தைச் சமூக மாற்றத்துக்கான புரட்சிகர வழிகாட்டியாகக் கொண்ட அரசியல் குழுக்கள் உருவாயின. பல நாடுகளில் புரட்சி வெற்றி கண்டது. புதிய அரசியல் அமைப்புகள் உருவாயின. மார்க்சியம் பல்கலைக் கழகங்களில் பாடமானது. சமூக, அரசியல், பொருளாதார, தத்துவத் துறை மாணவர்கள் மார்க்சியத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். மூலதனத்தைப் படித்துப் புரிந்து கொள்ளப் பல்கலைக் கழக பேராசிரியர்கள் விளக்கவுரைகள் எழுதி வெளியிட்டனர். மதம், கலை, இலக்கியம், சட்டம், நீதி, பண்பாட்டுத் துறைகளிலும் மார்க்சியக் கண்ணோட்டம் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1990-களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள், மார்க்சியம் தோற்றது என்று கூறி மார்க்சை மீண்டும் புதைத்தனர். மார்க்சிய ஆதாரவாளர்கள், என்ன ஆயிற்று, எங்கே கோளாறு என்று, மார்க்சிய நூல்களைப் பரணிலிருந்து எடுத்துத் தூசு தட்டிப் படிக்கத் தொடங்கினர். இந்த நேரத்தில், முதலாளித்துவம் உச்சகட்ட வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் அறிக்கையிலேயே, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் முன்னறிந்து கூறியிருந்த உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய பொருளாதார நடவடிக்கைகள் உலகில் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை.

முதலாளித்துவம் அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளின் காரணமாக எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நெருக்கடிகளைச் சந்தித்தே தீரும் என்று, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கணித்துக் கூறியுள்ளனர்.

1825-ஆம் ஆண்டுதொட்டு, ஒவ்வொரு பத்து ஆண்டிலும் ஒருமுறை, அனைத்து நாகரிக தேசங்களிலும், அவற்றைச் சார்ந்து வாழுகின்ற ஓரளவுக்கு நாகரிகமற்ற தேசங்களிலும், ஒட்டுமொத்தத் தொழில் வணிக உலகும், உற்பத்தியும், பரிவர்த்தனையும் நிலைகுலைந்து விடுகின்றன. வணிகம் நிலைகுத்தி நின்று விடுகிறது... 1825-ஆம் ஆண்டு முதலாக ஐந்து தடவை இந்த நெருக்கடியை நாம் கடந்து வந்துள்ளோம். தற்போதைய தருணத்தில் (1877) ஆறாவது தடவையாக அனுபவித்துக் கொண்டுள்ளோம்.  [கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் – ஏங்கெல்ஸ்].

இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன… முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.  [கம்யூனிஸ்டு அறிக்கை – மார்க்ஸ், ஏங்கெல்ஸ்].

உலக முதலாளித்துவம் 2000-ஆம் ஆண்டிலும், 2008-ஆம் ஆண்டிலும் வழக்கம்போல் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது. தற்போதைய நெருக்கடிகள் முந்தைய நெருக்கடிகளைக் காட்டிலும் மிகவும் உக்கிரமாக இருந்தன. முதலாளித்துவப் பொருளாதார அமைப்புமுறையே வரலாற்றில் இனி நிரந்தரமான சமூக அமைப்புமுறை என்று பிரகடனப்படுத்திய முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் தங்கள் கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர். முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சி பற்றிய வரலாற்று நூலாகவும், நவீன முதலாளித்துவத்தின் முழுமையான ஆய்வு நூலாகவும் மூலதனம் விளங்குவதால், தற்போதைய காலகட்டத்தில் மார்க்சிய ஆதரவாளர்கள் மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களும் மார்க்சியத்தை ஆழ்ந்து கற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். சாம்பலிலிருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவைபோல் மூலதனம் மீண்டும் முன்னணிக்கு வந்துவிட்டது.

2009-ஆம் ஆண்டில், நியூஸ்வீக் பத்திரிக்கையின் அட்டையில், இப்போது நாம் அனைவரும் சோசலிஸ்டுகள் என்ற பிரகடனம் இருந்தது. ஃபிரான்சின் அதிபர் சர்க்கோஷி மார்க்சின் மூலதனம் நூலைப் படித்துக் கொண்டு இருப்பது போலவும், முதலாளித்துவம் செத்துவிட்டது என்று அறிவிப்பதுபோலவும் படம் வெளியிடப்பட்டது.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலுள்ள மிகப்பெரும் முதலீட்டு வங்கியின் பொருளாதார வல்லுநர் கூறுகிறார்: ”நான் எந்த அளவுக்கு அதிக நேரத்தை வால் ஸ்ட்ரீட் வர்த்தகத்தில் செலவழிக்கின்றேனோ, அந்த அளவுக்கு மார்க்ஸ் கூறியது மிகவும் சரி என நம்புகிறேன். முதலாளித்துவத்தைப் புரிந்து கொள்ள மார்க்சின் அணுகுமுறையே மிகவும் சரியானது என்று முற்றிலுமாக நம்புகிறேன்.” ஹெச்எஸ்பிசி வங்கிக் குழுமத்தின் முதன்மைப் பொருளாதார அறிஞர் ஸ்டீபன் கிங் அவர்கள், ”முதலாளித்துவம் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில், மார்க்ஸ் சொன்னது எப்போதும் சரியாகத்தான் இருந்துள்ளதோ?” என்ற கேள்வியை எழுப்பி, ”ஆம்!” என்று பதிலையும் கூறுகிறார். ஜெர்மன் நாட்டு நிதியமைச்சர் பியர் ஸ்டெயின்பிரக் மூலதனம் நூலைப் புகழ்ந்து பேசியுள்ளார். போப்பாண்டவர், ”மூலதனம் நூல் மாபெரும் பகுப்பாய்வுத் தரம் கொண்டது” எனப் பாராட்டியுள்ளார். இங்கிலாந்தில் முதலாளித்துவப் பத்திரிகைகளான டைம்ஸும், டெய்லி டெலிகிராஃபும் போட்டிபோட்டி, மார்க்ஸ் பற்றியும், மூலதனம் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு, ‘மார்க்ஸ் இப்போதும் சரியா?’ என்ற விவாதத்தில் ஈடுபட்டுள்ளன.

இங்கிலாந்திலுள்ள ஒரு முன்னணிப் பதிப்பகம் மூலதனம் நூலின் புதிய பதிப்பை, இன்றைக்குத் தேவையான காலத்தை வென்ற கருத்துருக்கள் என்னும் துணைத் தலைப்பிட்டு, இதுவரை எழுதப்பட்ட நூல்களிலேயே, மிகவும் தாக்கம் செலுத்திய நூலாகக் கருதப்படுகிறது என்ற குறிப்புடன் வெளியிட்டுள்ளது.

பெர்லினில் கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் அனைத்து பிரதிகளும் பல மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டன. மார்க்ஸ் எழுதிய நூல்களின் முழுமையான தொகுப்புகளை வெளியிட்டு வரும் ஜெர்மன் பதிப்பாளர் ஜோர்ன் ஷட்ரம் கூறுவதாவது:

”2004-ஆம் ஆண்டுவரை மூலதனம் நூல், ஆண்டுக்கு 100 பிரதிகளுக்கும் குறைவாகவே விற்று வந்தது. 2008-ஆம் ஆண்டில், கடந்த 10 மாதத்தில் 2500 பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுள்ளது. முதலாளித்துவம் ஏன் வெற்றி பெறவில்லை என்பது பற்றி மார்க்ஸ் என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளதையே இது காட்டுகிறது.” (இன்டர்பிரஸ் சர்வீஸ், 07௧1௨008).

கடந்த ஆயிரம் ஆண்டுகளில், மக்கள் சிந்தனையில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 10 சிறந்த சிந்தனையாளர்களைத் தேர்ந்தெடுக்க, 1999-இல், பிபிசி செய்தி நிறுவனம் ஆன்லைனில் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் மார்க்ஸ் முதலிடம் பெற்றார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 2-வது இடத்திலும், ஐசக் நியூட்டன் 3-வது இடத்திலும், டார்வின் 4-வது இடத்திலும் வந்தனர்.

மார்க்சின் மூலதனம் ஒரு குறிப்பிட்ட நாட்டிலுள்ள முதலாளித்துவத்தைப் பற்றிப் பேசவில்லை. மிகப் பொதுவான முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றியே ஆய்வு செய்கிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கு, உலகளாவிய சந்தைப் பொருளாதாரக் கூறுகள், தொழிலாளர்கள் மீதும், ஒட்டுமொத்த மக்கள் சமூகத்தின் மீது அதன் பாதிப்புகள், முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்-முரண்பாடுகள், அதனால் ஏற்படும் நெருக்கடிகள், முதலாளிதுவத்தின் தவிர்க்க முடியாத வீழ்ச்சி ஆகிய அனைத்தையும் தெள்ளத் தெளிவாக மூலதனம் நூலில் மார்க்ஸ் விளக்குகிறார். 135 ஆண்டுகளுக்கு முன்பு மூலதனம் நூல் வெளியானபோது இருந்த முதலாளித்துவம் தற்போது பெரிதும் மாறியுள்ளது. ஆனாலும், மார்க்ஸ் முன்கணித்த அதே பாதையில்தான் மாறி வந்துள்ளது. நாம் இன்றைக்கும் முதலாளித்துவத்தின் முற்றிய நெருக்கடிகளின் மத்தியில்தான் வாழ்ந்து வருகிறோம். எனவேதான், மூலதனம் நூலில் கூறப்படும் ஒவ்வொரு கருத்தும் இன்றைய சூழ்நிலைக்கும் மிகவும் பொருந்துமாறு அமைந்துள்ளன.

”மூலதனம் நூலில் மார்க்ஸ் கூறும் கருத்துகள் இன்றைய உலகுக்குப் பொருந்துமா என்று கேட்கப்படுகிறது. சொல்லப்போனால், மார்க்சின் கருத்துகள் அவர் காலத்தைவிட இன்றைக்குத்தான் மிகவும் பொருந்துவதாக உள்ளன” என்று, சோசலிஸ்ட் ஒர்க்கர் இதழின் ஆசிரியர் ஆலன் மாஸ் கூறுகிறார். 40 ஆண்டுகளாகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மூலதனம் நூல்பற்றி வகுப்புகள் எடுத்துவரும் பேராசிரியர் டேவிட் ஹார்வியும் இதே கருத்தைத்தான் முன்வைக்கிறார். ”முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளைப் பற்றியும், அவற்றை இருளிலும் ஒளிவீசும் வகையில் ஊடுருவிக் காண்பதற்காகவும் எவ்வளவோ செய்துள்ள அந்த உன்னதமான இயக்கவியல்வாதியின் படைப்புகளைக் கவனமாக வாசிப்பதற்கு [இன்றைய நாட்களைவிட] வேறு சிறந்த தருணங்கள் இருக்க முடியுமா?” என்று டேவிட் ஹார்வி கேள்வி எழுப்புகிறார்.
மூலதனம் நூலின் சாரக்கூறுகளைப் புரிந்து கொள்ள, மூல நூலையேதான் படிக்க வேண்டுமா? மார்க்சியத்தை விஞ்ஞானம் என்கிறோம். இயற்பியல் பாடங்களைப் படிக்கும் மாணவர்கள், நியூட்டன், ஐன்ஸ்டீன் நூல்களைப் படிப்பதில்லை. மின்னியலைப் படிப்போர் தாமஸ் ஆல்வா எடிசன் எழுதிய நூல்களைப் படிப்பதில்லை. பிற பேராசிரியர்கள் எழுதிய பாடப் புத்தகங்களைப் படித்தே பட்டம் பெறுகின்றனர். அதேபோல, மூலதனம் நூலில் மார்க்ஸ் எழுதிய கருத்துக்களைப் பல்வேறு மார்க்சிய அறிஞர்கள், பேராசிரியர்கள் விரித்தும், விவரித்தும், விளக்கம் கூறியும் எழுதியுள்ளனர். அவற்றை படித்தால் போதாதா? என்கிற கேள்வியும் அடிக்கடி எழுப்பப்படுகிறது.

மூலதனம் நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதில் பேசப்படும் கருத்துகளை, அவரவருடைய எண்ணங்கள், நோக்கங்கள், அறிவுத்திறன், அனுபவ எல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக மார்க்சின் இயக்கவியல் வழிமுறைகளைப் பற்றிய தெளிவு ஆகியவற்றுக்கு ஏற்பவே புரிந்து கொள்கின்றனர். “மார்க்சின் இயக்கவியல் வழிமுறையைப் புரிந்து கொள்ள நீங்கள் மூலதனம் நூலைப் படிக்க வேண்டும். ஏனெனில், அதன் மெய்யான நடைமுறைக்கு அதுவே ஆதாரமாக உள்ளது. ஆனால், மூலதனம் நூலைப் புரிந்து கொள்ள நீங்கள் மார்க்சின் இயக்கவியல் வழிமுறையைப் புரிந்து கொள்ள வேண்டும். மூலதனம் நூலைக் கவனமாகப் படிக்கும்போது, அவருடைய வழிமுறை எவ்வாறு செயல்படுகிறது என்பது படிப்படியாகத் தெரியவரும்” என்று டேவிட் ஹார்வி கூறுகிறார். மூலதனம் நூலைப் பல்கலைக் கழக மாணவர்களுக்குக் கற்றுத் தருவதில் நாற்பது ஆண்டுகளாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள டேவிட் ஹார்வி, தன்னுடைய வகுப்புகளைக் கேட்டால் போதும் என்று கூறாமல், “மார்க்சின் மூல நூலை நேரடியாகக் கற்பதற்குக் கடுமையாக முயல்வதன் மூலம்தான் அவரது சிந்தனையைப் பற்றிய உங்களுடைய புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும்” என்று பரிந்துரைக்கிறார். எனவே, மார்க்சையும், மார்க்சியக் கோட்பாடுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், அவற்றைப் பிறருக்கும் கற்றுத்தர வேண்டும் என்கின்ற ஆர்வமுள்ளோர், மார்க்சியம் கற்ற அறிஞர்களின் வாயிலாகக் கேட்டு அறிந்து கொள்வது மட்டுமின்றி, மார்க்சின் மூல நூல்களை நேரடியாகக் கற்பதும் அவசியமாகும்.

மூலதனம் நூலைப் படித்துப் புரிந்து கொள்ள, முன்னெப்போதையும்விட இப்போதுதான் சிறந்த தருணம். தொடர்ந்து கூடுவோம். குழுவாகச் சேர்ந்து படிப்போம். விவாதிப்போம். விளக்கம் பெறுவோம். புத்துணர்வு கொள்வோம். புதியதொரு சமுதாயம் படைப்போம்.

நம்பிக்கையுடன்,
நாங்கள்.

மு.சிவலிங்கம்
'மூலதனம்' கற்றல் அரங்கு
இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் சென்னை
துவக்க நிகழ்வுக்காக...

Pin It