அண்மையில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் எடிட்டராயிருந்தவருமான திரு.துர்காதாஸ் என்பவரின் 'இந்தியா - கர்சன் முதல் நேரு வரை - அதற்குப் பிறகும்' என்ற சுயசரிதைப்போக்கான வரலாற்று நூலை படித்தபோது வரலாறு மற்றும் வரலாற்று நாயகர்கள் குறித்த என் பார்வை மேலும் தெளிவானது. இந்திய நாட்டின் விடுதலைக்குப்பின், நம் வரலாற்று அறிவும், தேச உணர்வும் அரசாங்கங்காளால் விநியோகிக்கப்படும் பாட புத்தகங்கள் (பள்ளி முதல் கல்லூரி வரை) மூலமே திட்டமிட்டு ஊட்டப்படுகின்றன. நம் நாடு இந்தியா, நாம் இந்தியர், நமது தேசத்தின் தந்தை அண்ணல் மகாத்மா காந்தி, மாமா நேரு, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், அறிவியல் பாரதத்தின் சிற்பி இராசீவ் காந்தி என வரலாறு, நமக்கு அறிவியல் போன்றே, நிரூபிக்கப்பட்ட உண்மை போலவே போதிக்கப்படுகிறது. இதன் விளைவு, இந்தியா உண்மையான தேசம் மட்டுமல்ல உலகின் உன்னதமான தேசம் என்றும், அதன் வரலாற்று நாயகர்கள், குறிப்பாக விடுதலைக்குப்பின் வந்த சிலர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட உத்தம புருஷர்களென்ற பிம்பமும் குறைந்தபட்ச படிப்பறிவுள்ள அனைவரின் மனதிலும் பதிக்கப்பட்டதே. ஆனால் கட்டுறா மனதுடன் வராலாற்றைத் தேடிப் படிக்கும் ஒருவருக்கு, உண்மை வரலாற்றோடு, அதன் நாயகர்களின் மெய்ப்பிம்பமும் தெரியவரும்.

Gandhi_321தற்கால சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை, சுதந்திரத்திற்கு முந்தைய அல்லது சுதந்திரத்திற்கு அண்மைக்காலங்களோடு ஒப்பிட்டுப்பேசி இன்றிருக்கும் மோசமான நிலைகுறித்து கவலைகொள்ளும் போக்கு ஓரளவு சிந்திப்பவர்களுக்கு இருப்பது இயல்பு. இவ்வகையான ஒப்பீட்டுப்பார்வை அரசாங்கங்களால் சமைக்கப்பட்ட ஏட்டுச் சுரக்காயை உண்டதன் விளைவேயாகும். சமூகமும் அரசியலும் அதனதன் தன்மையில் சுதந்திரப் போராட்ட காலங்களிலிருந்து சிறிதளவேனும் மாறவில்லை என்பதே உண்மை. தற்கால வரலாறு பிரிட்டானியர்களை, மானுட குலத்தின் முதல் எதிரி போன்றும், விடுதலை அடையும்வரை பல தேசங்களைக் கொண்ட இந்தியா என்ற அப்போதைய கற்பனை நாட்டின் அனைத்துக் கேடுகளுக்கும் அவர்களே காரணம் என்றும் வலிய புனையப்பட்டது. தங்களை எதிர்த்தவர்கள் அனைவரையும் ஹீரோக்களாக்கி, இல்லாத ஒன்றை உருவாக்கியதோடு, நேர்மையற்றவர்களையும் தலைவர்களாக உருவாக்கிய பிரிட்டானியர்களே ஆள்பவர்களின் நன்றிக்குறியவர்கள் என்பது வேறு விடயம்.

புனைவு வரலாறு கூறுவதுபோல, பிரிட்டானியர்கள் எவ்வாறு மோசமானவர்கள் இல்லையோ, அதே அளவு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு மனங்கொள்ளப்படும் தலைவர்களும் உத்தமர்களில்லை. தேசப்பிதா என்று வலிய பொது புத்திக்குள் திணிக்கப்படும் கரம்சந்த் காந்தி சராசரி மனிதருக்கான மனங்கொண்டு செயல்பட்டார் என்பதை துர்காதாஸ் புத்தகம் நெடுக கோடிட்டுக் காட்டுகிறார். போராட்டங்களை வழிநடத்திய விதத்திலிருந்து, தலைவர்களை அவர் கையாண்ட விதம்வரை எந்தவித நேர்மையையும் அவரிடம் காண முடியவில்லை. பரந்துபட்ட பெருநிலப்பரப்பில், பிரிட்டானிய ஆட்சிக்கெதிராக பரவலாய் நடந்த போராட்ட‌த்திற்குத் தேவையான தலைமையை காலம் காந்திக்கு வழங்கியது. தொடர்ந்து, எளிமையும், தனிமனித நேர்மையும் (கருத்து அல்லது அறிவுசார் நேர்மையல்ல), தன் கருத்தில் பிடிவாதமும், தன் அரசியலில் சமரசமின்மை போன்ற தனது போக்காலும் சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை வழி என தான் உருவாக்கிய போராட்ட நெறிகளாலும் தன்னைப்பற்றிய ஒரு பிம்பத்தை அவரால் கட்டமைக்க முடிந்தது.

பிம்பம் சார்ந்த அரசியல் தலைமையை இந்தியாவில் கட்டமைத்ததில் முன்னோடியாக காந்தியைக் கருதலாம். அவரின் இந்த பிம்பம் காந்தியை தன்னிகரில்லாத ஒற்றைக் கருத்துவாதத் தலைவராக வளர்த்தெடுத்ததோடு, தன் வழிப்படாத எவரையும் ஜனநாகயத்திற்கும் பகுத்தறிவிற்கும் ஒவ்வாத வகையில் ஓரங்கட்டவும், ஒழித்துக் கட்டவும் உதவியது. விடுதலைக்காண பல போராட்டங்களை வழிநடத்திய முறைமையிலும், தகுதிமிக்க தலைவர்களான (மக்கள் செல்வாக்கும்தான்) சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரைப் புறந்தள்ளி மோதிலாலை திருப்திப்படுத்த நேருவை முதன்மைப்படுத்தி இன்றைய இந்திய அரசியலை கட்டமைத்ததுவரை காந்தியின் சிந்தையிலும் செயலிலும் நேர்மை இருந்ததில்லை. அதைவிட மோசம், பல தேசிய, இன, மொழி மற்றும் பண்பாடுகளைக் கொண்ட இந்திய துணைக் கண்டத்தை அதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வலிந்து ஒற்றை தேசியமாக்க முயன்று, அதற்கான முதற்காரணியாய் இந்தியை தோற்றுவித்து முதன்மைபடுத்தியது, நாட்டின் இன்றைய ஏற்றத்தாழ்வுமிக்க பொருளாதார தேக்க நிலைக்கும், சுரண்டலுக்கும், குழப்பத்திற்கும் அமைதியின்மைக்கும் அடிப்படை அமைத்ததே இப்புரிதலற்ற ஒற்றையலகு அதிகாரக் குவிமைய அரசமைப்பே. அதற்கு வித்திட்டது காந்தியின் வலிய பிம்பமும் அது திணித்த கருத்துக்களுமே.

நேருவைப் பற்றிய நமது பிம்பம் மகத்தானது. நவீன இந்தியாவின் சிற்பி என்பதிலிருந்து, தனது வெளியுறவுக் கொள்கைகள் மூலம் உலகம் அறியும் தலைவர் என்பதுவரை நேருவை விட்டால் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவிற்கு நாதியே இருந்திருக்காது என்பதுபோல் நம்முன் வைக்கப்படும் கருத்தாக்க‌ங்கள் பல. சில சமயங்களில் அல்ல, பல சமயங்களில் சூழலே அரசியல் தலைமையைப் படைக்கிறது என்பதற்கு உரிய சான்று நேரு. தனது தந்தையின் செல்வாக்கால், காந்தியால் காங்கிரஸ் தலைமை பீடத்திற்கு திட்டமிட்டு ஏற்றப்பட்டவர் நேரு. தன் மகன் தலைவராவதை வாழ்நாள் கனவாக மோதிலால் கொண்டிருந்ததாக துர்காதாஸ் குறிப்பிடுகிறார். இனி யாராவது நம்மூர் கருணாநிதியையும், இராமதாஸையும் வாரிசு அரசியலுக்காக குறை கூறினால் அவர்கள் அரசியல் வரலாறு அறியாதவர்களாகவே கருதப்படுவர். நேருவும் தன் பங்கிற்கு இந்திராவை திட்டமிட்டே வளர்த்தெடுத்தார் என்பதே அரசியல் நோக்கர்கள் காணும் உண்மை.

நேருவின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் அவர் அரசாண்ட காலத்திலேயே போற்றப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம். இன்று நாடு எதிர்நோக்கும் அதிகார குவிமைய குடும்ப அரசியல், பொதுவாழ்வில் சமரசம் மற்றும் நேர்மையின்மை, எங்கும் தலைவிரித்தாடும் ஊழல் மற்றும் அதற்கான அதிகார மையத்தின் ஆதரவுப்போக்கு என்ற அனைத்துமே சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய அரசுகளுக்கு தலைமை வகித்த மோதிலால் நேரு காலத்திலேயே தொடக்கங்கொண்டன. நேருவின் ஆட்சியில் இப்போக்கு பரிணாம வளர்ச்சி கண்டதோடு தன் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவோரை ஓரங்கட்டும் போக்கும் நடைமுறை சாத்தியமானது. வல்லபாய் பட்டேலும், இராஜேந்திர பிரசாத்தும் நேருவின் இத்தகைய போக்கால் பாதிக்கப்பட்டவர்களுள் சிலர். தன்னைப் பற்றிய பிம்பத்தால் கட்டமைக்கப்பட்ட இத்தகைய தலைமைகள் தன் செயல்களால் சமூகத்திற்கு விளைவித்த கேடுகள் மிகப்பல.

இவ்வகை பிம்பத்திற்கு சொந்தக்காரர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; பொருளாதார நிபுணர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், நடிகர்களாகவும், அவதானிக்கப்படும் சிலரும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளனர். அவர்களில் முதன்மையானவர் அணு விஞ்ஞானி என அனைவராலும் அறியப்படும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள். தன்னைச் சார்ந்த சில பண்புகள் மற்றும் செயல்பாடுகளால் கருக்கொண்ட பிம்பத்தால் உச்சநிலையை அடைந்தவர் கலாம். எளியவர், பிரம்மச்சாரி, அணு ஆயுத மற்றும் இராக்கெட் தொழில்நுட்ப திட்டத்தில் பங்குகொண்டு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தவர் என கட்டியமைக்கப்பட்ட இவரது பிம்பம் இளைஞர்களை நோக்கிய இவரது செயல்பாட்டால் பொலிவடைந்தது. கனவு காணச் சொன்னார், நூல்கள் எழுதினார், திருக்குறள் பேசினார். திடுதிப்பென்று அரசியல் சூழலால் குடியரசுத் தலைவரானார். இன்று இவரது முழுநேர வேலை கருத்துக் கூறுவது. கருத்துக் கூறுவதில் தவறில்லை. ஆனால் அது சரியா, தவறா என பகுத்தறியாமல் தன் கருத்தைப் பதிவுசெய்து அரசாங்கத்திற்கோ, அதிகார மையத்திற்கோ அல்லது பெருமுதலாளிகளுக்கோ ஏதுவாய் பொதுக்கருத்தை உருவாக்க முயல்வதே அவரை சர்ச்சைக்குரியவராக்கியுள்ளது. இவ்வகை பொதுக் கருத்துருவாக்கத்திற்கு இவர் கைகொள்வது தன்மைப் பற்றிய பிம்பத்தையே.

நேரு, காந்தி போன்றோரின் பிம்பம் விளைவித்த சேதம் பல தேசிய இனங்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி அவர்களை விளிம்புநிலை மக்களாய், சுரண்டப்படுபவர்களாய் வைத்திருக்கின்றது. கலாம் போன்ற நவயுக பிம்ப விற்பன்னர்கள் தம் கருத்துக்களால் வருங்கால சந்ததியினரையே கருத்துக் குருடர்கள் ஆக்குவதோடு பல இலட்சம் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உலைவைக்கின்றனர்.

கலாமின் கருத்துச் செறிவின்மை, தன் பிம்பத்தின் முதற்படியான அணு ஆயுத ஆதரவில் ஆரம்பிக்கின்றது. தன் இயற்பியல் விதிகளால் அணு ஆயுத உருவாக்கத்திற்கு வித்திட்ட ஐன்ஸ்டீன் கூட அணுகுண்டு உற்பத்தியையோ அதன் பயன்பாட்டையோ ஆதரித்ததில்லை. மாறாக, தன் கண்டுபிடிப்பிற்காக தன்னையே கடிந்து கொள்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு உண்மை இயற்பியளாலர். இராக்கெட் மற்றும் அணுகுண்டு தொழில் நுட்பத்திற்கு (தொழில் நுட்ப படியாக்கத்தின் மூலம் இந்திய அறிவியலாளர்களால் நிகழ்த்தப்பட்டவையே இவையாவும்) அமைப்பு அளவில் மட்டும் பங்களிப்பு செய்து சாதுரியமாய் முன்னிலையடைந்த கலாம், இந்தியா அணுகுண்டு தயாரிப்பதையும், வைத்திருப்பதையும் விரித்துப் பேசுவது மனிதகுலத்திற்கு எதிரானது மட்டுமல்ல, மண்ணுயிர்கள் மேல் அவர் கொண்டுள்ள கரிசனமின்மையையும் காட்டுகிறது. அணுகுண்டு வைத்திருப்பதால் யாருக்கும் எந்தவித பயனும் இல்லை என்ற நிலையிலும் தாழ்த்தி வெறும் பிரச்சாரகராகவே காட்டுகிறது. எதிர்கால இந்தியாவைப் பற்றி கவலைப்படும் இவர் இளைஞர்களின் நெஞ்சில் நச்சுவிதையை ஊன்றுவது இவரது உண்மையான நோக்கம் குறித்த ஐயத்தை ஏற்படுத்துகிறது.

வளமையான இந்தியா குறித்து அனைவரையும் கனவு காணச் சொல்கிறார் கலாம். விடுதலையடைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பின்னும் அனைத்துத் துறைகளிலும் அடிப்படை வலிமையற்றிருக்கும் ஒரு நாட்டில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வு சொல்லும் அடிப்படையற்றவரான கலாம், கனவை தீர்வுக்கான ஒரு உத்தியாகக் காண்கிறார். நான் கற்ற அறிவியல் எனக்கு போதித்த Logic இதுதான். ஒரு அமைப்பு ஒழுங்காக இல்லையென்றால், அமைப்பில் நிகழும் அனைத்துமே தவறான முடிவை நோக்கியதாகவே இருக்கும். இந்த நோக்கில் ஆராய்ந்தால், இந்தியா என்ற நாட்டின் இன்றைய கையறு நிலையும், அதற்கான தீர்வின் சாத்தியமின்மையும் புலப்படும். தெள்ளத் தெளிவான பல தேசிய இனங்களின் இருப்பையும், வாழ்வையும் உறுதிசெய்யும் விதம் குறைந்தபட்சம் கூட்டாச்சியைக் கூட கொடுக்கத் தவறும் கட்டுப்பாடற்ற ஒற்றை மைய ஆட்சித்தத்துவம் எந்த காலத்திலும் நலிந்தவர் (இனம், மொழி உட்பட) செத்தொழிவதையும், வலிந்தவர்களின் சுரண்டலையும் தடுக்காது. குடியரசுத் தலைவராய் இருந்து அரசியலைமைப்பை பரிபாலனம் செய்த ஒருவருக்கு அதிலிருக்கும் குறைகளை கலைய முயலாமல் கனவின் மூலம் தீர்வு என்பது சாத்தியமோ?

abdul_kalam_380சிந்தனை நேர்மையே மனித அறிவிற்கும் சான்றாண்மைக்கும் ஆதாரம். இதனையே கலாமின் திருவள்ளுவர் சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் என்கிறார். சாமானியர்களின் (நம்மைப்போன்றோர்) சிந்தனை நேர்மையால் சிறிதளவே பயனேபோல், பிம்பத்தால் உருவெடுத்தத் தலைவர்களின் சிந்தனை நேர்மையின்மையால் பெருங்கேடு ஏற்படும். கலாமின் தற்காலச் செயல்பாடுகள் இதற்குச் சான்று. அண்மையில், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு ஆதரவாக அவரின் ஒற்றைக்கருத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்நிய முதலீடு அவசியம் என்பதாகும்.

இதைத்தானே நாட்டின் நாற்காலி பொருளாதார நிபுணர்களும், வர்த்தக அமைச்சரும், காங்கிரஸ் கட்சியும் அதன் இளம் தலைவருமான இராகுல் காந்தியும் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர். இவர்களாவது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் பயன்களை அனுமானித்துப் பட்டியலிடுகின்றனர். ஆனால் மேடை கிடைத்தது என்பதற்காக கலாம் தான் சொல்வதெல்லாம் உண்மை என்பது போல் ஒற்றை வாக்கியத்தில் அந்நியப் பெருமுதலாளிகளுக்கு ஆதரவு அளிக்கிறார். உலகப் பொருளாதாரமே ஒருசில பெருமுதலாளிகளின் கையில்தான் உள்ளது என்பதும், அரசுகளையே அசைக்கும் அல்லது தூக்கியெறியும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது என்பதும் கலாம் அறியாததா? இலாபம் ஒன்றையே ஒற்றை நோக்காகக் கொண்ட பெருமுதலீட்டாளர்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதால் ஏற்படும் விளைவுகளை மேலோட்டமாக சிந்தித்தே பட்டியலிடலாம்.

இந்தியா பெரும்பான்மை நடுத்தர மற்றும் ஏழை மக்களைக் கொண்ட நாடு. விவசாயமும் சில்லறை வணிகமும் அடிப்படைத் தொழில்கள். பல்பொருள் அங்காடிகள் வைத்துள்ள நடுத்தர முதலாளிகள் அடுத்தகட்ட சேவையை அளிக்கின்றனர். தள்ளுவண்டியில் கீரை, காய்கறிகள் விற்பவர்களிலிருந்து நடுத்தர முதலாளிகள் வரை தன்னளவில் ஒரு நிறுவனத்தின் முதலாளிகள். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடைசியாக வெளியிட்டுள்ள பொருளாதார கணக்கெடுப்பின்படி (Economic census-2005) சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடி. அவகைளில் வேலை செய்பவர்களை கணக்கில் கொண்டால் சுமார் 5 கோடி பேர்). இவர்கள் அனைவரும் வணிகத்தை சொந்த முதலீட்டில் தனியாகவோ அல்லது குறைந்த பட்ச ஆட்களுடனோ நிர்வகிப்பவர்கள். ஆக சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 1.5 சதவிகிதம். அந்நிய முதலீட்டை அனுமதித்தன் மூலம் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெரும்பாலோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பது சாமானியர்களுக்குப் புரியும்.

மேலும் ஆனந்த் சர்மாவும், இராகுல் காந்தியும் கூறுவதுபோல் விவசாயிகளுக்கு பெருவாழ்வையும், வாடிக்கையாளர்களுக்கு பெரு லாபத்தையும் இந்நிறுவனங்கள் ஒருபோதும் தராது. இடைத்தரகர்கள் வேறு வழியில் தழைத்தோங்குவர். அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தனி அமைச்சகம் அமைத்து திட்டம்போட்டு கிழித்தும் உருப்படாத விவசாயத்தை உருத்தேற்ற அந்நிய முதலீட்டை எதிர்பார்க்கிறார்கள் இந்த மேம்போக்குச் சிந்தனைவாதிகள். ஏதோ உலகெங்கும் எந்த தொழில் நலிந்துள்ளதோ அதைப் புணர்ஜென்மம் எடுக்கச் செய்வதே வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் வேலை என்பதுபோல் இவர்கள் காணும் கனவும் பேசும் பேச்சும் நாட்டை மீண்டெழ முடியாத பேராபத்தில் தள்ளும் காலம் தொலைவில் இல்லை.

அந்நிய முதலீட்டாளன் முதலில் ஆசைகாட்டி, தான் நட்டப்பட்டாவது பொருட்களை குறைந்த விலைக்கு விற்று மண்ணின் வியாபாரிகளை ஒழிப்பான். தன் சாதுரியமான வலையமைப்பின் (network) மூலம் விவசாயிகளையும் மண்டியிட வைப்பான். நாட்டின் நடுத்தர மக்களும், விவசாயிகளும் கீழ்நிலை அடைய அடித்தளம் அமைக்கும் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கலாம் குரல் கொடுப்பது எதைக் காட்டுகிறது? அவரது அறியாமையையா? அல்லது தொடர்ந்து அனுபவிக்கத் துடிக்கும் அதிகாரத்தழுவலையா?

அடுத்து கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து வலிய மூக்கை நுழைத்து தன் மக்கள் விரோதப் போக்கை நிரூபித்து வருகிறார். அணுஉலையை வலிய சென்று பார்வையிட்ட இவர் 'அணுஉலை அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் கட்டப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரையில் அது மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அணுமின் உற்பத்தி மற்ற மின்உற்பத்தியைப் போலவே பாதுகாப்பானது. மின் பற்றாக்குறையைக் கருத்தில்கொண்டு போராட்டத்தைக் கைவிட்டு அணுஉலை இயக்க ஆதரவு தரவேண்டும்' என்றார். மேற்சொன்ன ஒவ்வொரு வாக்கியத்திலும் அனைத்தும் அறிந்த நானே கூறுகிறேன் என்ற தொனி இருக்கிறதே தவிர அறிவார்த்தமும், போராட்டக்காரர்களின் நியாயத்தைப் பாராட்டும் போக்கும் அறவே இல்லை. அணுஉலையின் பாதுகாப்பு குறித்து சான்றளிக்கும் உரிமையும் தகுதியும் இவருக்கு உள்ளதா என்பதே நாம் எழுப்பும் கேள்வி. இந்திய அரசின் அணுசக்தித்துறை, பாதுகாப்பு உட்பட பல கேள்விகளுக்கு விடையளிக்க தனது நம்பிக்கையின் அடிப்படையில் கருத்து கூறுவது தன் பிம்பம் தரும் அழுத்தத்தாலன்றி வேறு எதனால்?

சர்வதேச அணுசக்திக் குழுமம், புகுஷிமா அணுஉலை விபத்தை முன்வைத்து வெளியிட்டுள்ள அணுஉலை பாதுகாப்புப் பற்றிய அறிக்கை, அணுஉலை பாதுகாப்பு என்பது தனிநபரின் கருத்தை ஏற்கும் அளவிற்கோ, நீதிமன்றம் தலையிட்டு வழிகாட்டும் அளவிற்கோ (அணுஉலையில் எரிபொருள் நிரப்புவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் அப்துல்கலாமை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியதை நினைவிற் கொள்க) அவ்வளவு எளிதானதல்ல என்பதை விளக்கும். வாழ்வாதரத்தோடு, எதிர்கால இருப்பு குறித்த கேள்விகளோடு தினமும் போராடும் பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை கேள்விகளுக்குக்கூட பதில் அளிக்காமல், பாதுகாப்பை உறுதி செய்யாமல் (உறுதிசெய்ய இயலாது என்பதால்தான்) பேசும் கலாம், தேவையானபோது விஞ்ஞானியைப் போலவும் அரசியல்வாதியைப் போலவும் பேசத்தயங்குவதில்லை.

கலாம் கனவு காண்பதுபோல் எதிர்காலத்தில் 50,000MW அணுசக்தி மூலம் தயாரிக்க கூடங்குளம்போல 25 அணுஉலைகள் நாடு முழுவதும் அமைக்கப்படும் நிலையில், அதுவே நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தவும், அனைத்துப்பகுதி எளிய மக்களின் வாழ்வாதாரத்தை இல்லாததாக்கவும் போதுமானது. எந்த ஒரு திட்டமிடலும் அனைத்துதரப்பு மக்களாலும் குறைந்தபட்ச ஒப்புதலுடன் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விதம் வகுக்கப்படவேண்டும். அதைவிடுத்து பிற நாடுகளை திருப்திப்படுத்த (இலங்கைக்கு இந்தியாவின் கண்மூடித்தனமான ஆதரவு, ரஷியாவை திருப்திப்படுத்த கூடங்குளங்கள், இப்போது அமெரிக்காவை திருப்திப்படுத்த சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு) தன் மக்களின் உயிரையும் உடைமையையும் பண‌யம் வைக்கும் செயல் அரச வன்முறையே. இதைத்தான் இப்போது அனைத்து அரசுகளும் செய்துவருகின்றன. அத்தகைய அரசுகளை ஆதரிக்கும் ஒருவரை அறிவுஜீவியாக எவ்வாறு அவதானிப்பது?

கருத்துக்கூறல் என்பது அடிப்படை உரிமை. தேர்ந்தெடுத்த விஷயங்களில், பகுத்தறியாமல் கருத்துக் கூறுவது கயமை. கலாம் தன் பிம்பத்தால் ஆட்கொள்ளப்பட்டபின், நாட்டில் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. சான்றாக சில. தான் பிறந்த மண்ணிலிருந்து கூப்பிட்டால் கேட்கும் தூரத்திலிருக்கும் இலங்கைத் தீவின் இனச்சிக்கல் குறித்து கலாம் வாய் திறப்பதேயில்லை. ஈழப்போர் உச்சத்திலிருந்தபோதிலும் சரி, போருக்குப் பின் மக்கள் அவலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றும் சரி கலாம் தன் மௌனத்தால் காங்கிரஸ் தலைமையையே மிஞ்சிவிட்டார். அண்மைக்காலமாய், நாட்டின் நடப்பியலில் முக்கியமானதாய் தென்படும் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து மேம்போக்கான கருத்துக் கூறி தன் தெளிவின்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல, நாட்டின் முக்கிய சிக்கல்களான காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலப் பிரச்சினை, சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான சிக்கல், நக்சல் பிரச்சினை என எதிலும் தன் கருத்தைத் தெளிவாகப் பதிவு செய்யாமல் தப்பிப்பது தன் பிம்பத்திற்கு பங்கம் வராமல் தப்பிக்கும் முயற்சியேயன்றி வேறேது?

உண்மை அறிவுஜீவிகள், அறிவுசார் நேர்மையுள்ளவர்கள் தனிநபர் விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளி சிந்திப்பவர்கள். அமைப்பின் நலன் கருதியே (அமைப்பின் உண்மையற்ற தன்மை குறித்துக்கூட கவலை கொள்ளாமல்) சிந்தித்து, அமைப்பில் இருப்போர் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை என கருத்து கூறுபவர்கள் தன் பிம்பம் காக்க எந்தவித விலையையும் கொடுக்கத் தயங்காதவர்கள். இதில் கவலைகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இப்படிப்பட்டவர்கள் பேசும் வெற்று தேசியம், இவர்களை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக்குகிறது. விளைவு, இளம்தலைமுறை இவர்களின் வெற்று சிந்தனையால் புத்தி மழுக்கப்படுவதோடு, புனைவு வரலாறு செய்ததுபோலவே உண்மையை எக்காலத்திலும் உணர முடியாமல் செய்கிறது.

எந்த ஒரு காலகட்டத்திலும் சமூகத்தில் பெரும்பான்மையோர் பகுத்தறியும் அறிவுஜீவிகளாய் இருப்பதில்லை. எனவே, சமூக பெரும்பான்மையோரால் பிம்பம் கொடுத்து உருவாக்கப்படும் அறிவு ஜீவிகள் அல்லது தலைவர்கள் அறிவுசார் நேர்மையுள்ளவர்களாக இருக்க சாத்தியமில்லை. (அருந்ததிராயை கோபால கிருஷ்ண காந்தி சமூகத்தின் conscience keeper என அண்மையில் கூறியதை மேற்சொன்ன கூற்றோடு ஒப்பிடுக.) இப்படிப்பட்டவர்களின் கருத்துப்பரவல் அணுஉலை வெடிப்பால் ஏற்படும் கதிர்வீச்சு ஏற்படுத்தும் சேதத்தைவிட மோசமானது. இந்நிலையில் நம்முன் உள்ள பெரும்பணி, இத்தகையோரின் பிம்பங்களை கட்டுடைப்பதேயாகும்.

- செ.குமரன், செய்தித் தொடர்பாளர் - மள்ளர் மீட்புக்களம்

Pin It