முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் தற்போது இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கே உலை வைக்கும் அளவிற்கு, மிகப் பெரிதாய் ஆக்கப்பட்டுள்ளது. ஒன்றுமில்லாத விசயத்தை ஈறாக்கி, பேனாக்கி, பெருமாளாக்கிய 'பெருமைக்கு' சொந்தக்காரர்கள் கேரள மாநிலத்தை ஆளும் அரசியல்வாதிகளும், நடுவணரசில் பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் மலையாள ஆளும் வர்க்கமும்தான் காரணம். இவர்களின் மூர்க்கத்தனமான இனவெறிப் பாசத்திற்கு ஒத்தூதுபவர்களாய்த்தான் நடுவண் அரசை ஆளுகின்ற தேசியக் கட்சிகள் எப்போதும் இருந்து வருகின்றன. நடுவண் கூட்டணி அரசுகளில் அங்கம் வகிக்கின்ற வாய்ப்பினை அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகக் கட்சிகள் மாறி மாறித் தொடர்ந்து பெற்று வந்தபோதிலும், தமிழகத்தின் வாழ்வாதாரமாய்த் திகழ்கின்ற இச்சிக்கலில் எப்போதும் முனைப்புடன் செயல்பட்டதேயில்லை என்பது தமிழர்களின் இன்றைய அவலத்திற்கு மற்றுமொரு காரணம். எப்பாடுபட்டேனும் அணையை உடைப்போம் என்று கேரள அரசியல்வாதிகள் தொடர்ந்து கூக்குரலிடுகின்றனர். ஆனால், கேரளத்தை ஆளுகின்ற அரசுகளின் பொறுப்பற்ற போக்கை ஒரு நாளும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசு கண்டிக்க முற்படவில்லை.

mullai_periyar_dam_380உச்சநீதிமன்றம் ஆணையிட்டுவிட்டது. பல்வேறு வல்லுநர் குழுக்களும் அணையின் அசைக்க முடியாத பலம் குறித்து கருத்துச் சொல்லிவிட்டன. ஆனாலும் கேரளத்தின் சண்டித்தனத்தை தட்டிக்கேட்க, கண்டிக்க தமிழகத்தில் பொறுப்புள்ள அரசியல் தலைவர்கள் (சிலரைத் தவிர) இன்மையால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், குறிப்பாக தேனி மாவட்ட மக்கள் வெகுண்டெழுந்து, போராடும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். அண்மைக்காலங்களில் போராளி முத்துக்குமார், ஈழத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலைக்காக வருந்தி தீயிட்டு தன்னை மாய்த்துக் கொண்ட எழுச்சிக்குப் பிறகு, கூடங்குளம் மக்களின் மாபெரும் போராட்டம் தமிழக அரசையும், இந்திய ஒன்றிய அரசையும் சற்றே அசைத்துப் பார்த்துவிட்டது. அதற்கும் மேலாக, முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலுக்காக ஒன்றுபட்ட மக்கள் திரள் கேரள எல்லையோரப் பகுதிகளில் பெரும் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்திவிட்டது. இப்போராட்டம் தமிழகம் தழுவியதாக மாறிவிடும் சூழ்நிலையிலும், அணையை ஆய்வு செய்ய பேரிடர் ஆணையத்தால் அமர்த்தப்பட்ட வல்லுநர் குழுவை நடுவண் காங்கிரசு அரசு அறிவித்துள்ளது என்பதைப் பார்க்கும்போது, இந்திய ஒன்றியம் தமிழர்க்கு எதிரான கட்டமைப்பைக் கொண்டதோ என்ற எண்ணத்தை நடுநிலையாளர்களுக்கே உருவாக்கிவிட்டது என்பதே உண்மை.

முல்லைப் பெரியாறு அணை குறித்த விளக்கமான கட்டுரைகளையும், நேர்காணல்களையும், விளக்கங்களையும் இப்போது வழங்கி வரும் நமது ஊடகங்கள் இத்தனை காலமும் எங்கே சென்றிருந்தன என்பது பெரும் கேள்விக்குறி. மக்களின் வாழ்வாதாரத்திற்கே உலை வைக்கும் இச்சிக்கலிலும், வெறும் பரபரப்பை முன்னிறுத்திய ஊடகங்களின் போக்கு, அவற்றின் விற்பனைக்கு உதவினவே அன்றி, தமிழக மக்களுக்கு எவ்விதத்திலும் உறுதுணையாக நிற்கவில்லை. ஆனால், கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான கருத்துப் பரப்புரைகளை அங்குள்ள ஊடகங்கள் (அவை பொய்யாக இருந்தபோதிலும்) தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தன. முற்றும் முழுதாக தமிழகத்தின் பக்கமுள்ள நியாயங்களை உணர்ந்து, ஆய்ந்து, அறிந்து எழுத இங்குள்ள ஊடகங்கள் இத்தனை காலமும் அணியமாக இருக்கவில்லை. இதனால்தான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்கள் பொங்கியெழுந்துவிட்டனர். இனி காலம் முழுவதும் தமிழர்களை ஏமாற்ற முடியாது என்பதை தங்கள் போராட்டத்தின் குறியீடாக அம்மக்கள் தெரிவித்துவிட்டனர். இதற்கொரு நிலையான தீர்வு ஏற்படும்வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்ற அவர்களின் தெளிவான நிலைப்பாட்டிற்கு தமிழக-கேரள-நடுவண் அரசியல்வாதிகள் முகம் கொடுத்தேயாக வேண்டும்.

ஒருநாள் ஏமாற்றலாம், இரண்டு நாள் ஏமாற்றலாம், இனி ஒவ்வொரு நாளும் ஏமாற்ற முடியுமா? இந்தப் பாடத்தை கேரள அரசியல்வாதிகளோடு தமிழக அரசியல்வாதிகளும் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றே நம்பலாம். 'இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்து' என்று போராடியபோது, மூவர் தூக்குத் தண்டனையைப் பெரிதாக்கினார்கள். 'கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு' என்று முழுமூச்சுடன் எதிர்த்துப் போராடியபோது, 'டேம் 999' வெளியிட நடுவணரசு இசைவளித்தது. தமிழர்க்கெதிரான போக்கினை தனக்குரிய கொள்கையாகக் கொண்டு இயங்கும் இந்திய ஒன்றிய அரசை ஒட்டுமொத்தமாய் இயக்குவது மலையாளக் கூட்டம்தான் என்பதை பிற மாநில மக்களும் உணர்ந்து கொள்ளும் காலம் வரத்தான் போகிறது. அப்போது இந்திய ஒருமைப்பாடு படப்போகின்ற பாட்டையும் பார்க்கத்தானே போகின்றோம். இச்சிக்கலில் இதுவரைக்கும் எத்தனையோ கேள்வி-பதில்கள் வந்துள்ளன. அவற்றில் கேட்கப்படாத கேள்விகளும், சொல்லப்படாத பதில்களும் நிறைந்து கிடக்கின்ற காரணத்தால், அது குறித்த ஒரு தொகுப்பு இஃது.

mullai_periyar_473

கே. முல்லப்பெரியாறா? முல்லைப் பெரியாறா?

ப. தமிழர்களின் உழைப்பில் உண்டு கொழுக்கும், சில ஆங்கில நாளேடுகளின் கேரள ஆதிக்கப்போக்கால், வேண்டுமென்றே, திட்டமிட்டே முல்லைப் பெரியாறு என்ப¬த் திரித்து 'முல்லப்பெரியார்' என்றும், சில தமிழ்த்தொலைக்காட்சிகள் 'முல்லைப் பெரியார்' என்றும் பரப்பி வருகின்றன. இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதுபோன்ற கயமையையும், மலையாள இதழாளர்களின் நேர்மை தவறிய போக்கையும் கண்டித்து இராதிகாகிரி என்ற இதழாளர் வீக்எண்ட்லீடர் என்ற ஆங்கில நாளேட்டில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

கே. பேரணைகள் வேண்டாமென்பது சூழலியல் வல்லுநர்களின் கருத்தாகும். இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்காக மட்டும் குரல் கொடுப்பது முரண்பாடாகத் தெரிகிறதே?

ப. புதிதாய் அணைகள் உருவாக்கப்படக் கூடாது என்பதுதான் சூழலியல் வல்லுநர்களின் கருத்து. முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை, அது ஒரு தடுப்பணையே. மேற்கு முகமாகப் பாய்கின்ற முல்லையாறு, பெரியாறு ஆகிய ஆறுகளை, அவை ஒன்று சேரும் இடத்தில், இரு மலைகளுக்கிடையே தடுப்பு அரண் அமைத்து, கிழக்குமுகமாக தமிழகத்தை நோக்கி திருப்புகின்ற மாபெரும் தொழில்நுட்ப அணையே முல்லைப் பெரியாறு.

கே. அணையின் நீர்மட்டத்தை உயர்த்துகின்ற சிக்கலா? அல்லது அணையின் கட்டுமானத்தை உயர்த்துகின்ற சிக்கலா?

ப. பல வெளிமாநில நண்பர்களும், தமிழகத்திலுள்ள சிலரும், குறிப்பாக அணைப்பக்கமே சென்றிராத சில பத்திரிகை நண்பர்களுக்குமே முல்லைப்பெரியாறு அணை குறித்த சிக்கல் பிடிபடவில்லை. அணையின் மொத்த உயரம் 162 அடி. நீர்த்தேக்கத்திற்கான முழுக் கொள்ளளவு 152 அடி. கேரள அரசின் வீண் பிடிவாதத்தால் குறைக்கப்பட்ட நீர்தேக்கும் அளவு 136 அடி. அணையின் கட்டமைப்பினைக் கூர்ந்து கவனித்தால், அணையின் நீர்தேக்கும் அளவு கூடக்கூட தண்ணீர் தேங்கும் பரப்பளவும், கொள்ளளவும் கூடும். குறையக் குறைய நீர்தேங்கும் அளவும் குறையும்.  அதாவது, அணையின் மொத்தக் கொள்ளளவான 152 தேக்கப்படுமானால், தேங்கும் நீரின் அளவு 15 ஆயிரத்து 562 மில்லியன் கன அடி. அதே அளவு 142 அடியாகக் குறைந்தால் தேங்கும் நீரின் அளவு 12 ஆயிரத்து 830 மில்லியன் கன அடி. 136 அடியெனில் 11 ஆயிரத்து 210 மில்லியன் கன அடி. தற்போது கேரளம் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கச் சொல்கிறது. வெறும் ஆறு அடி குறைந்ததற்கே இராமநாதபுரம் மாவட்டம் தரிசாய்ப் போனது கண்கூடான உண்மை. மேலும் குறைத்தாலோ அல்லது அணையை உடைத்தாலோ தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் தரிசாய் மாறப்போவது உறுதி.

mullai_periyar_432

கே. ஒருவேளை கேரளம் 120 அடியாகக் குறைத்தாலும் தமிழகத்திற்கு அந்த 120 அடித் தண்ணீர் கிடைக்கிறது அல்லவா?

ப. முல்லைப் பெரியாறு அணை 152 அடி உயரம் நீர்த் தேக்கும் கொள்ளளவைக் கொண்டிருந்தாலும், இதில் தமிழகத்தின் பயன்பாட்டிற்காக தற்போதுள்ள நிலையில் 32 அடி நீர் மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனெனில் அணை அமைந்துள்ள இடம் மிகவும் பள்ளமான பகுதி. தமிழகத்திற்கான நீரைப் பெறுகின்ற பகுதி மேடான ஒன்று. தேக்கடி பகுதியிலுள்ள மதகிற்கு அணையின் தண்ணீர் வர வேண்டுமானால், 104 அடிகளுக்கு மேல் நீர் நிரம்பினால் மட்டுமே சாத்தியம். அந்த 104 அடிக்குக் கீழுள்ள நீரை தமிழகமோ, கேரளமோ பயன்படுத்தவே முடியாது. இதன் காரணமாகத்தான் ஆண்டு முழுவதும் இந்த அணையில் தண்ணீர் நிறைந்திருக்கும். இவ்வனப்பகுதியின் பல்லுயிர்ச்சூழலுக்கும், வன உயிரினப் பெருக்கத்திற்கும் புழங்கா நிலையில் உள்ள இத்தண்ணீரே வாழ்வாதாரமாக உள்ளது.

கே. ஒப்பந்தங்களை ஆண்டுக்காண்டு மறுபரிசீலனை செய்து வரும் தற்போதைய சூழலில் 999 ஆண்டு ஒப்பந்தம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லையே? அதுவும் அண்டிப் பிழைக்க வந்த ஆங்கிலேய ஆட்சியாளரால் போடப்பட்ட ஒப்பந்தம் விடுதலை பெற்ற இந்தியாவில் எவ்வாறு செல்லுபடியாகும்?

ப. நல்ல கேள்வி. அப்படியானால், ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருகை தரும் முன்னர், இந்தியா என்றொரு தேசமே இல்லையே. வரும்பொழுது இந்தியா என்றழைக்கப்படும் இத்தேசம் எப்படி இருந்ததோ, அதைப் போல போகும்போதும் விட்டுச் செல்வதுதானே சரியாக இருக்கும். சரி விசயத்திற்கு வருவோம். மேற்காணும் கேள்வியில் நியாயம் இருப்பதுபோல் தோன்றினாலும், மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது, எல்லைகளில் ஏற்பட்ட சிக்கலின் பொருட்டு, எல்லையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், எந்த மொழி பேசுபவர் அதிகமாக உள்ளனரோ அவர்கள் அந்த மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என்பது முக்கியமான விதி. அந்த அடிப்படையில் முல்லைப்பெரியாறு அமைந்துள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை உள்ளிட்ட தற்போதைய இடுக்கி மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை, மலையாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல விழுக்காடு அதிகம். அப்படியானால் நியாயமாய் இந்தப் பகுதிகள் தமிழகத்தோடுதானே இணைந்திருக்க வேண்டும். மன்னராட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை இன்றைய தமிழக மாவட்டமான, கன்னியாகுமரியில்தானே அமைந்திருக்கிறது. அந்த அரண்மனையை இன்றைக்கும் கேரளம் தானே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால், பிரிட்டீஷ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், மேம்பாலங்கள், அணைகளால்தானே இன்றைக்கு இந்தியாவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. முல்லைப்பெரியாறு அணை விசயத்தில் 999 ஆண்டு ஒப்பந்தம் என்பதே மிகவும் தவறு. அப்போதைய சென்னை இராஜதானியும், திருவாங்கூர் அரசும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதியை சென்னை இராஜதானிக்கு 999 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதுடன், ஒப்பந்த நிறைவில் குத்தகைதாரர் (அதாவது தமிழ்நாடு) விரும்பினால் மேலும் 999 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம் என்பதும் தெளிவுடன் வரையறுக்கப்பட்டிருக்கிறது. மலையாள இயக்குநர் சோகன்ராய் 'டேம் 999' என்று தனது படத்திற்குப் பெயர் வைத்ததற்குப் பதிலாக 'டேம் 1998' என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். (இதற்காகவே அவர் மீது அவதூறு வழக்குப் போடலாம்?!)

mullai_periyar_406

கே. முல்லைப் பெரியாறில் தேங்கும் தண்ணீர் ஒரே மாநிலத்திற்குள் ஓடுகின்ற ஆறுகளால் கிடைக்கிறதா? அல்லது மாநிலங்களுக்கிடையே ஓடுகின்ற ஆறுகளால் கிடைக்கிறதா?

ப. இதில் சந்தேகமென்ன? முல்லைப் பெரியாறில் தேங்குகின்ற தண்ணீரில் பெரும் பகுதி (ஏறக்குறைய 5 டி.எம்.சி.க்கும் மேல்), தமிழக மாவட்டங்களான நெல்லை, விருதுநகர், தேனி மாவட்டங்களை ஒட்டியுள்ள மலைத்தொடர்களிலிருந்துதான் பெறப்படுகிறது. இந்நிலையில், 'கேரள மாநில நதி நீர்ச் சட்டம்' முல்லைப் பெரியாறுக்கு ஒரு போதும் பொருந்தாது.

கே. புதிய அணைக்கான ஆய்வு, பூமி பூஜை என்றெல்லாம் கேரளம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே?

ப. புதிய அணை மட்டுமல்ல, கேரளாவிற்குள் எங்கேனும் புதுக்கட்டுமானத்திற்கு அடிகோலிட்டால் கூட, அதற்கான மண் தமிழகத்திலிருந்துதான் செல்ல வேண்டும். தமிழகத்திலிருந்து கேரளாவிற்குச் செல்லும் பதின்மூன்று வழிகளில்தான் இவையெல்லாம் பயணப்பட வேண்டும். தமிழர்களுக்கான வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிவிட்டு, கேரள அரசியல்வாதிகள் புதிய அணை கட்டிவிடுவார்களா என்ன..?

கே: கேரளம், முல்லைப் பெரியாறு அணையை பல்வேறு வல்லுநர் குழுக்களைக் கொண்டு ஆய்வு என்ற பெயரில் அணையின் பல்வேறு இடங்களில் துளையிட்டு சோதனை செய்வது சரிதானா?

ப: அணையை எந்த வகையிலாவது பலவீனப்படுத்த வேண்டும் என்ற கேரளத்தின் தவறான நோக்கமே இதற்கு முதன்மைக் காரணம். சோதனை என்ற பெயரில் பெயர்த்தெடுக்கப்படும் காரைகளால், அணையின் சரிவுப் பகுதிகளில் பெரும் துளைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பெருகும் காலங்களில் இத்துளைகள் அணையின் வலுத்தன்மைக்கு பெரும் சவாலாக அமையும். அப்போது கேரளம் நினைத்தது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால்தான், அத்துளைகளை அடைக்க தமிழகப் பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் முயற்சி செய்தபோது, அவர்களை அணைப்பகுதிக்குச் செல்லவிடாமல் பல்வேறு தடைகளை கேரளக் காவல்துறையும், வனத்துறையும் செய்து வந்தன.

கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பரமேஸ்வரன் நாயர் கூட, 'இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகம் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த நினைக்கிறது' என்று மகா அபத்தமான கருத்து ஒன்றினை ஊடகங்களிடம் தெரிவித்தார். அணையைப் பலப்படுத்தினால், கேரள அரசியல்வாதிகளால் அச்சுறுத்தி வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்மையில் நன்மை பயப்பதுதானே. அப்படியானால், அணையை எந்தவிதத்திலும் தமிழகம் பலப்படுத்திவிடக்கூடாது என்று நினைக்கின்ற கேரளம், தனது மக்களுக்கே துரோகம் நினைக்கிறது என்பதுதானே இதன்பொருள். நல்லவேளையாக அணையைக் காக்க நடுவண் தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தபின்பு, கேரளம் தனது நிலைப்பாட்டிலிருந்து உடனடியாக இறங்கி வந்தது.

கே: உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு, புதிய அணை கட்டிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறதே..?

ப: நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான நீதிபதிகள் குழு அளித்துள்ள அறிக்கையை முழுமையாகப் படித்திருந்தால் மேற்கண்ட கேள்வி எழ வாய்ப்பில்லை. ஏனெனில் அதே அறிக்கையில் அக்குழு, தற்போதுள்ள அணையின் வலுத்தன்மை குறித்து ஐயமின்றிக் கருத்துத் தெரிவித்துள்ளது. நிலஅதிர்வுகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்தவித சேதமும் ஏற்படாது என்றும் நீரின் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேற்காணும் புதிய அணை என்ற கருத்து, கேரளத்தைச் சமாதானப்படுத்துவதற்காகச் தேவையின்றிச் சேர்க்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்கள் பலவும் முல்லைப் பெரியாறு அணையின் வலுத்தன்மை குறித்து எந்த வித ஐயமும் எழுப்பவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 

கே: அணை உடைந்துவிடும் என்ற அச்சத்தில் வாழ்கின்ற இடுக்கி மாவட்ட மக்களுக்கும், முல்லைப் பெரியாறு அணைத் தண்ணீரின் வாயிலாகப் பயன் பெறும் தமிழக மக்களுக்கும் தீர்வாக புதிய அணை என்பது ஏற்புடையதாகத்தானே இருக்கும்? இதிலென்ன தவறு இருக்க முடியும்?

ப: நியாயம் பொதிந்துள்ளதைப் போலத் தோன்றும் மேற்காணும் கேள்வியில் உள்ளபடியே தமிழகத்தின் உரிமையை முழுவதுமாகத் தகர்த்தெறியும் கேரளத்தின் நயவஞ்சகமே மேலோங்கியிருக்கிறது. எப்படியெனில், முல்லைப் பெரியாற்று நீரை ஏகபோகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கேரளத்தின் இலாப வெறிக்கு முதல் தடையாய் இருப்பது பிரிட்டிஷ் ஆட்சியின் போது போடப்பட்ட 999 ஆண்டு கால ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை செல்லாததாக ஆக்க வேண்டுமானால், அணையை உடைப்பதைத் தவிர கேரளத்திற்கு வேறு வழியில்லை. இதன் காரணமாகத்தான் அணை உடைந்தால், முப்பது இலட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற தேவையற்ற அச்சத்தை தனது மக்களிடம் விதைத்துள்ளது.

கேரள அரசியல்வாதிகள் கூறுவதைப்போல ஒருவேளை அணை உடைகின்ற நிலை ஏற்பட்டாலும்கூட, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் அங்கிருந்து 60 கி.மீ. தொலைவிலுள்ள இடுக்கி அணைக்குச் சென்றுவிடும். முல்லைப் பெரியாறு அணை நீரின் கொள்ளளவைப் போன்று இடுக்கி அணை ஏழு மடங்கு கொள்ளளவினைக் கொண்டதாகும். அணை உடைந்து வெளியேறும் தண்ணீர் பெரும்பாலும் பயணப்படுவது அடர்ந்த வனப்பகுதிகளில்தான். அதுமட்டுமன்றி, அணையின் வெள்ளம் செல்கின்ற வழியில் அமைந்துள்ள ஊர்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆயிரம் மீட்டருக்கு மேலே அமைந்துள்ளன. கேரள மாநில அட்வகேட் ஜெனரல் கேரள உச்சநீதிமன்றத்தில் கூறியதுபோல் 'முல்லைப் பெரியாறு அணை மிக வலுவாக உள்ளது. ஒரு வேளை உடைந்து அணையின் நீர் வெளியேறும் பட்சத்தில் சில நூறு குடும்பங்கள் மட்டுமே பாதிப்பிற்குள்ளாகும். அவர்களையும் முன்னறிவிப்போடு காப்பாற்றிவிட முடியும்' என்பதுதான் உண்மை.

mullai_periyar_agreement_630

(அணையின் மீதான தமிழகத்தின் 999 ஆண்டு கால குத்தகை உரிமையுடன், தமிழகம் விரும்பினால் மேலும் 999 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளும் வாசகங்கள் அடங்கிய ஒப்பந்த நகல்)

கே: ஏறக்குறைய 123 ஆண்டுகளுக்கும் மேலாகிப் போன ஒரு அணை எந்த வகையில் வலுவானதாக இருக்கும். அது மட்டுமன்றி ஒரு அணைக்கு 999 ஆண்டு கால ஒப்பந்தம் என்பது மிகவும் தவறானதல்லவா?

ப: அணையின் பழமையைப் பற்றிப் பேசுகின்ற பெரும்பாலானோர், அந்த அணை காலத்திற்கேற்றவாறு புதுப்பிக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட்டு, நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியாமல் பேசுகின்றனர். அணையின் வலுத்தன்மை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்துள்ள அறிக்கையே இதற்கு நல்ல சான்று. முல்லைப் பெரியாறு அணையின் 999 ஆண்டு கால ஒப்பந்தம் என்பது அணையின் ஒப்பந்தமன்று. அந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

கே: 'தமிழகத்திற்குத் தண்ணீர், கேரளத்திற்குப் பாதுகாப்பு' என்ற கேரளத்தின் நிலைப்பாடு சரியானதுதானே?

ப: தமிழகத்திற்குத் தண்ணீர் என்பது சரி. கேரளத்திற்குப் பாதுகாப்பு என்பது எந்த வகையில் சரியாக இருக்கும். கேரள அரசியல்வாதிகளால் விளம்பரப்படுத்தப்பட்டு புதிதாய்க் கட்ட நினைக்கின்ற அணையால் மட்டும் அந்தப்பகுதியிலுள்ள மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாதா? அந்த அணை மட்டும் நிலநலடுக்கத்தால் பாதிப்பிற்கு ஆளாகாதா? தமிழக, கேரள மக்களை ஏமாற்றி, குழப்ப நினைக்கும் கேரளத்தின் தந்திரமே மேற்கண்ட முழக்கம். 'தமிழகத்திற்குத் தண்ணீர், கேரளத்திற்கு மின்சாரம்' என்று இந்த முழக்கம் அமையுமானால் அது வரவேற்கத்தக்கது. ஏனென்றால், தற்போது அணையிலிருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்படும் தண்ணீர், முன் தேக்க அணையிலிருந்து, கீழே வைரவனாற்றுக்கு அருகேயுள்ள நீர் மின் திட்டத்திற்கு மூன்று மாபெரும் குழாய்கள் வழியே 1700 அடியில் இறக்கப்படுகின்றது. தற்போது கேரள மாநில அழுத்தத்தின் காரணமாக குறைக்கப்பட்ட தண்ணீரின் அளவால் இரண்டு குழாய்களில் மட்டும்தான் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இம்மூன்று குழாய்களிலும் அதிகபட்சக் கொள்ளளவில் தண்ணீர் கொண்டு செல்லப்படும் பட்சத்தில், அதிக மின் உற்பத்திக்கு வாய்ப்பு ஏற்படும். அதனை தமிழகத்தோடு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு மேலும் கூடுதல் மின்சாரத்தைக் கேரளம் பெற்றுக் கொள்ளலாம்.

அதுமட்டுமன்று, புதிதாய்க் கட்ட கேரளம் திட்டமிட்டுள்ள அணையின் உயரம் தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையைக் காட்டிலும் குறைந்த அடியைக் கொண்டதாகும். இதிலிருந்து தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கும்? அதனைப் பெறுவதற்கு கேரளத்தோடு என்னென்ன மல்லுக்கட்டிற்கு தமிழகம் தயாராக வேண்டும்? என்பதையெல்லாம் யோசித்துப் பார்த்தால், கேரளத்தின் புதிய அணை முயற்சி முற்றிலும் தமிழத்திற்கு எதிரானது என்பதுதான் திட்டவட்டமான உண்மையாகப் புலப்படும்.

கே தமிழக அரசியல் தரப்பில் மட்டும் நியாயமான நடவடிக்கைகள் வெளிப்படுகின்றனவா?

ப: தமிழகம் பல்வேறு சமயங்களில் கேரளத்தவருக்கு சாதகமாகவே பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. அணையின் நிர்வாகப் பொறுப்பை கேரளக் காவல்துறையினருக்கு விட்டுக் கொடுத்ததுடன், மீன் பிடிக்கும் உரிமை, படகு விடும் உரிமை ஆகிய அனைத்தையும் கேரளாவிற்கே தமிழகம் விட்டுக் கொடுத்துள்ளது. தற்போது அணையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கேரளக் காவல்துறையினருக்கு சம்பளம் தருவதே தமிழகம்தான் என்றால் வியப்பாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், 142 அடி வரை அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும்கூட, அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளாமல் 136 அடி என்ற பழைய நடைமுறையையே இன்றைக்கும் கடைப்பிடித்து வருகிறது. மலையாளிகள் மற்றும் அங்குள்ள தமிழர்கள் மீது தமிழகம் கொண்டுள்ள நேசத்திற்கு இதை விட வேறு எதையும் சான்றாகக் கூற முடியாது. ஆனாலும், இப்போதும்கூட கேரள அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும், அரசியல்வாதிகளும், 'வெடி பொருட்கள் வைத்திருக்கிறேன். அணையை உடைப்பேன், தகர்ப்பேன்' என்று பொறுப்பற்ற வகையில் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்குப் பின்னரும் கூட, தமிழகம் பொறுமையைக் கடைப்பிடிக்கிறதென்றால், அதன் பண்டைப் பாரம்பரியத்தின், விழுமியங்களின் எச்சமன்றோ!

கே: முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனையில் இரு மாநிலங்களும் ஒத்துப் போகின்ற தீர்வுதான் என்ன? அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது?

ப: அணையின் ஒப்பந்தத்தை கேள்விக்குள்ளாக்க நினைக்கின்ற எந்த ஒரு செயல்பாடும் தமிழக நலனுக்கு எதிரானதே. ஆகையால் அணைக்கான ஒப்பந்தத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதனை மதித்து நடப்பது கேரளத்தின் கடமையாகும். அதற்கு ஈடாக, தமிழகத்திடமிருந்து கூடுதல் மின்சாரத்தைப் பெறுவதற்குத் தேவையான புதிய ஒப்பந்தங்களை இயற்றிக் கொள்ளலாம். மழை மிகுதியான இந்திய மாநிலங்களில் கேரளம் இரண்டாமிடத்தில் உள்ளது. ஆனால் மாறாக, இந்திய சராசரி மழைப் பொழிவில் மிகக் கீழான மாநிலங்களில தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. ஆகையால் தமிழகத்திற்குத் தண்ணீர் மிகத் தேவை. கேரள மாநிலமோ மிகை நீர் கொண்ட மாநிலம். அதிகப்படியான தனது நீரைப் பக்கத்து மாநிலமான தமிழகத்திற்குக் கொடுத்து உதவுவதே மிகச் சிறந்த நடவடிக்கை. அதற்கு மாற்றாக, மின்சாரத்தையோ அல்லது வேறு வகையான உணவுப் பொருட்களையோ தமிழகத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு கேரளம் முன் வர வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுள் முதன்மையாக நாம் கருதுவது, முதலில் தேக்கடி நீர்தேக்கத்திலிருந்து மதகுப் பகுதிக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாயை முழுவதுமாகத் தூர் வாருதல் வேண்டும். மேலும் அதிக ஆழத்திற்குத் தோண்டி மதகுப் பகுதிக்குத் தண்ணீர் வரத்தை அதிகப்படுத்துவது அவசியம். தேவைப்பட்டால் மற்றொரு சுரங்க வழியை உண்டாக்கி, அணையில் 104 அடிக்குக் கீழுள்ள புழங்கா நீரையும் பயன்படுத்துவதற்கு உரிய செயல்திட்டத்தை மேற்கொள்ளுதல் அவசியம்.

kerala_dam_area_630

கேரளத்தோடு தண்ணீர் உரிமைக்காகப் போராடும் அதே நேரத்தில் தமிழகப் பயன்பாட்டிற்கு கூடுதல் தண்ணீரை எடுக்க மேற்கொள்ளும் முயற்சி அவசர அவசியம். தமிழகப் பகுதிக்குள் வந்து சேரும் தண்ணீரை உரிய கால்வாய்கள், வாய்க்கால்கள் மூலமாகக் கொண்டு சென்று, சேமிக்கும் வண்ணம் நீர்நிலைகளைப் பராமரித்துப் பேணுவது தமிழகத்தின் கடமை. கண்மாய், ஏரி, குளங்களுக்குச் செல்லும் வரத்துக்கால்கள், போக்குக்கால்களை முறையாகப் பராமரித்து, அவற்றையும் தூர்வாரி செம்மை செய்வதும் அவசியமாகும். இருக்கின்ற நீரையும், கிடைக்கின்ற நீரையும், தருகின்ற நீரையும் சரியாகப் பயன்படுத்துகின்ற தொழில்நுட்பங்களை மேற்கொண்டு, திறமையான நீர் நிர்வாக முறைகளைக் கடைப்பிடிக்க முன்வருவதும், வலியுறுத்துவதும் தமிழக அரசின் கடமையாகும்.

கேரள-தமிழக நல்லுறவைக் காக்க 'உயிர்' கூட்டமைப்பு

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் நிலையான தீர்வினைக் கொண்டு வருவதற்காக இரண்டு மாநிலங்களின் வேளாண் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொறியாளர்கள் மற்றும் பொதுமக்களைக் கொண்டு 'உயிர்' என்றொரு அமைப்பு உருவாகியுள்ளது. இவ்வமைப்பின் சார்பாகக் கடந்த சூலை மாதம் 7ஆம் நாள் கோட்டயம் நூலக அரங்கில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இரு மாநில இறையாண்மையையும், நட்பையும் பேணிப் பாதுகாக்கும் எண்ணம் கொண்ட ஆர்வலர்கள் பெரும் திரளான அளவில் இதில் பங்கேற்றனர். நட்புறவோடு தொடங்கிய இக்கூட்டத்தில் கேரளத்தை ஆளும் காங்கிரசுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பல்ராமின் அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் அவர் 'புதிய அணை என்பது கேரள மக்களை ஏமாற்றும் வேலை. இது மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட ஒன்று. அரசியலுக்கும் வியாபாரத்துக்கும் முல்லைப்பெரியாறு பிரச்சனையை அரசியல்வாதிகள் கையாள்கிறார்கள். புதிய அணை ஒருபோதும் தேவை இல்லை' என்பதை தனது கருத்தாக அங்கே பதிவு செய்தார். கேரளத்தைச் சேர்ந்த பல்வேறு எழுத்தாளர்களும் 'புதிய அணை ஒரு ஏமாற்று வேலை' என்பதாகத் தங்களது கருத்தைத் தெரிவித்தனர்.

கூட்டம் சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இருபது பேர் கொண்ட குழுவொன்று திடுமென்று அரங்கிற்குள் நுழைந்து, தமிழகத்திற்கு எதிராகவும், அவதூறாகவும் பேசி குழப்பம் விளைவிக்க முயன்றது. இப்பிரச்சனையைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்காகவே அச்சமயம் கேரள ஊடகங்கள் முயற்சி மேற்கொண்டன. பின்னர் கேரளக் காவல்துறை அறிவுரையின் பேரில் ஒலிபெருக்கியில்லாமல் 'உயிர்' அமைப்பின் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த தமிழ்மலர் இணைய இதழின் ஆசிரியர் உமாமகேசுவரி தனது உரையில், 'இடுக்கி அணைக்கு தற்போது வயது 50. இந்த அணைக்கும் நூறு வயதாகும். அப்போது அணையை உடைத்துவிட்டு கேரளம் புதிய அணை கட்டுமா அல்லது அதே அணையை தொழில்நுட்ப ரீதியாகப் பலப்படுத்த முயற்சி மேற்கொள்ளுமா?' என்று கேள்வி எழுப்பினார்.

கேரளம் மற்றும் தமிழகத்திற்கிடையில் நல்லுறவு நிலவ வேண்டும், நீண்ட நெடும் பாரம்பரியம் கொண்ட இரு தேசிய இனங்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு 'உயிர்' கூட்டமைப்பு தொடங்கிய இந்த முயற்சி பாராட்டிற்குரியது. இதனைச் சரியான முறையில் கேரள அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தமிழர்களின் வேணவா. செய்வார்களா..?

நன்றி:http://www.tamilmalarnews.blogspot.in/

Pin It