ஜனரஞ்சகம் என்னும் சொல்லைத் தூய தமிழில் கூறவேண்டுமானால், ‘மக்களால் விரும்பிப் போற்றப்படும் தன்மை கொண்ட’ எனச் சொல்லலாம்.

இதற்கு ஒப்பான ‘கரிஸ்மா’(Charisma) என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகம் செய்தவர், ஜெர்மனியைச் சேர்ந்த ‘மாக்ஸ் வெபர்’ (Max Weber) என்பவரேயாவர். சமூகவியலாளரான இவர், கரிஸ்மா அல்லது ஜனரஞ்சகம் என்பதற்குப் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்.

“தனி மனிதர் ஒருவரது சில தகுதிகள், சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபட்டு அவரை ஓர் அதி மானுடன் (Supper Human) எனக் கருதும் வகையில் அமைந்திருப்பதும், ஏதாவது சிறப்பான திறமைகள் அல்லது ஆற்றலைப் பெற்றிருப்பதும் ஆகும். இவர்களிடம் உள்ள இவ்வகை ஆற்றல்களைப் பிறர் அடைய முடியாது என்றும், அதே சமயம் அது தெய்வீக அல்லது மந்திர சக்தி கொண்டது என்றும் நம்பும் வகையிலும் அமைந்திருக்கும்”என்கிறார் அவர்.

இவரது கருத்தில் பொதிந்திருக்கும், தெய்வீக; அதிமானுட, மந்திர சக்திகள் என்பன அத்தகைய மனிதர்களை மிக உயர்வாகப் போற்றுவது போல் தெரிந்தாலும், அதில் அவர் குறிப்பிட்டிருக்கும்; ‘கருதும்’, ‘நம்பும்’ ஆகிய சொற்கள், மக்களது எண்ணங்களும்; அவர்கள் சம்பந்தப்பட்ட மனிதர் மீது வைக்கும் நம்பிக்கையுமே ஒருவரை ஆற்றல் படைத்தவராக அதிமானுடனாக உயர்த்த உதவுகிறது என்னும் கருத்து இதில் சூசகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. இதன்படி, சாதாரண மக்கள் தங்களுள் ஒருவரை- தமக்கு ஏற்ற ஒருவரை- தலைவராக ஏற்றுக்கொண்டு அவர்மீது ஜனரஞ்சகத் தன்மையினை ஏற்படுத்தி விடுகிறார்கள் என்றாகிறது!

சுமார் 2400 வருடங்களின் முன்னால் வாழ்ந்த அறிஞர்கள் யாவரும், தலைமைப் பண்பு என்பது ஒருவருக்கு அவரது பிறப்பின்வழி அமைவது என்று நம்பியிருந்தார்கள். முன்னைய அரச பரம்பரையினரது நீட்சியை வைத்து இதனை உய்த்துணரலாம்.

சோக்கிரட்டீஸும், மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்களிடமே எதிர் காலம் பற்றிய சிந்தனை விரிவும், அதற்குரிய மன ஆற்றலும்,உடல் பலமும் அளிக்கப்பட்டிருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், ஜனரஞ்சகத் தன்மையும் தலைமைத்துவமும் பிறப்பால் உருவாவது என்னும் கருத்து பலகாலம் நிலவி வந்திருப்பதை அறிய முடிகிறது.

கிரேக்கச் சொல்லான இந்தக் ‘கரிஸ்மா’ பல பொருள் கொண்டது. அதிசயங்களைப் புரியும் ஆற்றல்; எதிர்காலம் குறித்த சூட்சும அறிவு; பிறரைத் தன்வயப்படுத்தும் திறன் என்பன இவற்றுட் சில. இதில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘பிறரைத் தன்வசப்படுத்தும் ஆற்றல்’ இன்றைய அரசியல் தலைவர்கள் பலரது இயல்புகளோடு ஒத்திருப்பதை அவதானிக்கலாம். இவர்கள், பிறரைத் தம்வசப்படுத்துவதன் மூலம் தமது இலக்குகளை அடைவதில் வெற்றிபெறுவதை நாம் இன்று சாதாரணமாகக் காண்கிறோம்.

யார் இவர்கள்?

பிரதிபலித்தல், பிரதிநிதித்தல், பிரதியாக்கல் இந்த மூன்றினையும் உரியவகையில் பின்பற்றும் ஒருவர் சுலபமாக மக்களால் விரும்பப்படும் தலைவராக உருப்பெற்று விடுகிறார்.

இதில் பிரதிபலித்தல் என்னும் வகையின் கீழ்; ஒருவர் எந்த இனத்தின் அல்லது மக்களின் மதிப்பினை அடைய விரும்புகிறாரோ அந்த மக்களது வரலாறு, பண்பாடு ஆகியனவற்றில் அதிக அறிவும் அதே சமயம் அவர்களது வளர்ச்சி, விடுதலை உணர்வு, சமூகவழக்குகள் போன்றனவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கவேண்டும்.

மக்கள் தமது பண்பாட்டின் கூறுகளை எவ்வாறு போற்றுகிறார்கள் அல்லது நடைமுறையில் பின்பற்றுகிறார்கள் என்பதனை அறிந்தவராகவும் , பாடசாலைகளில் மாணவர்கள் தமது இனம் அல்லது மதம் குறித்த அறிவினை எவ்வகையில் பெறுகிறார்கள் என்பது குறித்த சிந்தனை உடையவராகவும் இருத்தல் அவசியமாகிறது.

இவைமட்டுமன்றி அம் மக்களின் அல்லது அவர்கள் தொடர்பான இலக்கியப்படைப்புகள் அவற்றின் தாக்கம் அவர்களை எவ்வகையில் சென்றடகிறது என்பதையும், முடிந்தால் அவர்களின் பண்டைய புகழ்பெற்ற அறிஞர்களது மேற்கோள்களையும், கவிதை வரிகளையும் மேடைகளில் எடுத்துச் சொல்லும் வகையில் வல்லமை படைத்தவராகவும் இருத்தல் அவசியமாகிறது.

இவற்றோடு சிறந்த பேச்சாற்றலும், சிறந்த பேச்சாளர்களது பேச்சுகளைக் கருத்தூன்றிக் கேட்கும் ஆர்வமும், அவர்களிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக்கொள்ளும் திறனும், விருப்பும் இருத்தல் வேண்டும்.

குறிப்பாகப் பிறரிடமிருந்து கற்றுக் கொள்வதைத் தவிர்க்கும் எவரும், நல்ல தலைவராக மாறிவிட இயலாது என்பதால் யார்யாரிடமிருந்தெல்லாம் தனக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் நன்மை கிட்டுகிறதோ அவற்றைப் பின்பற்றுவதில் தயக்கம் காட்டாத மன நிலை கொண்டவராய் இருப்பதும் அவசியமாகிறது.

இவ்வாறு செயல்படுவதன் வழியாகக் காலப் போக்கில் அவர் செயற்படுத்தும் திட்டங்கள் யாவும் அவருடையது என்னும் நிலையை அடைந்துவிடும்.

எனவே பிறரது நல்ல திட்டங்களைச் செயற்படுத்துவதும், அவர்களது சிறந்த திட்டங்களைத் தொடர்வதும் அவருக்கு நற் பெயரையும், ஆதரவையும் அதிகரிக்கச் செய்யுமேயன்றி இவர் பிறரைப் பின்பற்றுகிறார் என்பதால் தமது மதிப்பினை இழக்க நேருமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை.

இதில் இரண்டாவதாச் சொல்லப்பட்ட பிரதிநி தித்தல் என்னும் வகையின் கீழ்; ஒருவரது செயல் திட்டங்களின் வெளிப்பாடு அமைந்திருத்தல் அவசியம்.

தனது எண்ணங்களை உரிய வகையில் அதற்குரிய வார்த்தைகளில் எடுத்துக் கூறும் ஆற்றல் மிகவும் தேவையான ஒன்றாகும்.

தனது அடையாளத்தோடு தாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் அடையாளத்தையும் வெளிப்படுத்துபவராக இருப்பவரையே மக்கள் தங்கள் ஆதர்ச நாயகர்களாக ஏர்றுக் கொள்கிறார்கள். பேசும் போது அவர்களது தொனி, பேசும் பாவனை, தோற்றம் இவை அனைத்தும் மக்களிடம் ஒருவித ஈர்ப்பினை உருவாக்கும் வகையில்ம் அமைந்திருப்பது அவசியம்.

ஊடகங்களுடனான பேட்டிகளின் போது அவர்கள் அளிக்கும் பதில்கள், சமூகத்தின் நாடித்துடிப்பினை வெளிப்படுத்துபவையாக இருத்தல் வேண்டும்.

இதில் இறுதியாகக் கூறப்பட்ட பிரதியாக்கலின் கீழ்; எண்ணத்தில் உதித்தவற்றைச் செயல் திட்டங்களாக மாற்றும் திறனும் அதனைச் செயற்படுத்தும் ஆர்வமும் கொண்டவராய் இருத்தல் அவசியம்.

தான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்பத் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதும், சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், வெளி உலகின் கண்களில் தனது நாடும்,சமூகமும்,இனமும் உயர்வான இடத்தில் வைத்து எண்ணப்படுவதற்குத் தேவையானவற்றிலும் முழுமூச்சுடன் ஈடுபடுபவர்களை மக்கள் தங்கள் தலைவராக முழுமனதுடன் ஏற்றுக் கொள்வர்.

இவ்வாறான செயல்கள் அவரின்பால் மக்களுக்கு நன்மதிப்பினையும், நம்பிக்கையினையும் அதிகரித்திட வழிசெய்வனவாகும். ஊடகங்களுடனான உறவில் விரிசல்கள் எழாது எச்சரிக்கையுடன் செயல்படுவது, இவர்களது மதிப்பினைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

பொதுவாகக் குறிப்பிடுவதாயின், செயல் திறன்களின் வழி தங்களை இனங்காட்டி நிற்பதும், மக்களது உணர்வுகளைப் புரிந்து செயல்படுவதும் ஒருவரை ஜனரஞ்சகத் தலைவர் என்னும் நிலைக்கு உயர்த்திட உதவுகின்றன. இவர்களே மக்கள் மத்தியில் என்றும் போற்றுதலுக்கு உரியவர்களாய் நிலைத்து ஒளிர்கிறார்கள்.

அமெரிக்காவின் ரூஸ்வேல்ட்; ஜோன்.எஃப்.கென்னடி; தமிழகத்தின் அண்ணா; எம்.ஜி.ஆர்; ஈழத்தின் தந்தை செல்வா போன்றவர்களெல்லாம் தமது இயல்பினாலும், மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அக்கறையினாலும், அதனை உரிய வகையில் வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தமையாலும் அவர்கள் மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாய், ஜனரஞ்சகத் தலைவர்களாய் இன்றும் தம்மை அடையாளம் காட்டி நிற்கிறார்கள். இத் தலைவர்கள் யாவரும் மக்களுடன், மக்களுக்காக வாழும் மன நிலையை வளர்த்துக் கொண்டவர்கள் எனலாம்.

நான் அழிந்து நாம் ஆகவும்; எனது அழிந்து எமது ஆகவும் மனரீதியான பரிணாமத்தினை அடைந்திருப்பவர்கள் யாரும் சுலபமாக தங்களை ‘மக்களின் விருப்புக்குரிய தலைவராய்’ நிலைநிறுத்திக்கொள்ள இயலும்.

[www.sarvachitthan.wordpress.com]

****************************************************

கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்:


1.The new Psychology of leadership.

Psychology Press 2010.

S.Alexander Haslam; Stephen D.Reicher; Michael Platow.


2. Social Identity and the Dynamics of Leadership.

Leadership Quarterly- Aug 2005.

Stephen Reicher; S.Alexander Haslam; Nick Hopkins.


3.Social Influence.

Open University Press 1991.

John C.Turner.


4. Charisma.

Black Well 1990.

Charles Lindholm.

Pin It