அணு உலை எதிர்ப்பாளர்கள் அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு முடிவை அறிவிக்கும் முன்னரே இந்தப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் உண்மையான நிலைப்பாடு வெளிப்பட்டது. இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். பிரதமர் பதவி மீது கண் வைத்து இருப்பவர் எப்படி முதலாளித்துவத்திற்கு எதிராய் முழங்க முடியும்? ஆரம்பத்தில் உங்களில் ஒருத்தியாய் இருப்பேன் என்ற...வர் இப்போது போராட்டக்காரர்களின் நெஞ்சில் ஒருகூடைத் தீயை அள்ளிக் கொட்டி இருக்கிறார். கூடங்குளம் போராட்டத்தை ஜெயலலிதா மத்திய அரசுடன் விளையாடும் பரமபத விளையாட்டில் ஒரு முக்கிய பகடைக்காயாய் பயன்படுத்துகிறார் என்பது அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும் அரசியல் புரிதல் கொண்டவர்களுக்கும் ஜெயலலிதாவை நீண்டநாட்களாய் அறிந்தவர்களுக்கும் தெரிந்ததே.

koodankulam_360மாநில அரசு இனியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தபோதே அதன் நோக்கம் என்ன என்பது எல்லோருக்கும் புரிந்த ஒன்றுதான். அந்தக் குழு செயல்பட்ட விதமும் அது போராட்டக்காரர்களை சந்திக்காத அதன் நிலைப்பாடும் அந்தக் குழுவின் நம்பகத் தன்மையை சிறிதும் ஐயமின்றி தெளிவுபடுத்தியது. இன்னும் ஆழ்ந்து சொல்வதென்றால் மாநில அரசு போராடும் மக்கள் மீது மிகுந்த கரிசனம் கொண்டுள்ளதைப் போன்ற தோற்றத்தை காட்டிக்கொள்ள அமைக்கப்பட்ட அந்தக் குழு ஏற்கனவே முடிவை எடுத்துவிட்டுத்தான் கூடங்குளம் நோக்கிச் சென்றது.

இது போன்ற எத்தனை குழுக்களை அமைத்து இருந்தாலும் அது போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாதவரை அதில் பயன் ஏதும் இருப்பதற்கில்லை. அவர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் எந்த இந்திய விஞ்ஞானியிடமும் ஏன் உலக விஞ்ஞானியிடமும் பதில் கிடையாது. மக்களின் கேள்விகளுக்குப் பதில் இல்லாத, பதில் சொல்லத்தெரியாத இந்த நிபுணர் குழுக்கள் இதன் காரணமாகவே போராட்டக்காரர்களை சந்திக்க மறுத்தன என்பதைவிட, அஞ்சின என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் ஆரம்ப நாட்களில் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தால் பெரும்பாலான ஊடகங்களால் கண்டுகொள்ளப்படவில்லை. அவர் உண்ணா விரதத்தை நிறுத்திக்கொண்ட பிறகே இந்தப் பக்கம் தங்களது பார்வையைத் திருப்பின. ஆரம்பகட்டத்தில் எல்லாப் போராட்டங்களையும் போலவே இதையும் ஒரு போராட்டமாக தங்களது செய்தித் தீனிக்கான களமாக இடிந்தகரையை பயன்படுத்திக்கொண்ட முதலாளித்துவ ஊடகங்கள் இந்தப் போராட்டத்தின் வடிவம் தீவிரப்பட தீவிரப்பட அவைகளும் தங்களது சுயரூபத்தை காட்டிக்கொண்டு போராட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து செய்திகளுக்கும் கொடி பிடிக்கத் (வால் பிடிக்க) தொடங்கின. மத்திய அரசின் எத்தனையோ முயற்சிகளுக்கும் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் தான் மக்கள் பக்கம் இருப்பதைப் போலவே மிகத் திறமையாக நடந்துகொண்டார் ஜெயலலிதா.

இடிந்தகரை சென்று அந்த போராட்ட களத்தைப் பார்த்தபோது ஏதோ ஈழ மண்ணுக்குச் சென்ற ஓர் உணர்வும் பிரமிப்பும் எனக்குள் ஏற்பட்டது. பல்முளைத்த குழந்தை முதல் பல் விழுந்த வயதானவர் வரை ஒவ்வொருவரும் அணு உலையைப் பற்றிய புரிதலோடு போராளியாகவே மாறி இருந்தார்கள். தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களில் இருக்கும் அணு உலை எதிர்ப்பாளர்களும் சப்பானை சேர்ந்த சிலரும் இடிந்தகரை நோக்கி குவிந்தவண்ணம் இருந்தனர். அது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியது. போராட்டக்காரர்களிடம் கருத்தியல் ரீதியாக தோல்வி அடைந்த மத்திய அரசு எந்த வகையில் போராட்டத்தை ஒடுக்கலாம் என யோசித்து வெளிநாட்டு நிதி உதவி என்ற புதிய அஸ்திரத்தை ஏவியது. கடைசிவரை அப்படி எதுவுமே நிருபிக்கப்படவில்லை என்பது இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு எந்த அளவுக்கு பலவீனப்பட்டு போய் இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சென்னையில் பிப்ரவரி 26இல் நடைபெற்ற அணு உலை எதிப்பு மாநாடு போராட்டக்காரர்களுக்கு பெரிய உத்வேகத்தை அளித்தது. அதில் திரண்ட தமிழ்த் தேசிய சக்திகளின் அளப்பரிய பங்களிப்பு இந்தப் போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் கொண்டு செல்லும் நல்வாய்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் மாநில அரசின் திட்டமிட்ட மின்வெட்டு, தொழிற்சாலை நிறைந்த நகரங்களில் அணு உலையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற ஏதுவாக இருந்தது. இந்த நயவஞ்சக செயலில் மாநில அரசு, தான் நினைத்தை சாதித்தது. ஒரு பக்கம் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே மறுபக்கம் போராட்டக்காரர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஜெயலலிதா தயங்கவில்லை. இந்த இடத்தில் ஜெயலலிதா தான் ஒரு புடவை கட்டிய கருணாநிதி என்பதையும் அரசியல் சூழ்ச்சியில் எள்முனை அளவும் கருணாநிதிக்கு குறைந்தவரில்லை என்பதையும் மிகத் தெளிவாக நிருபித்தார்.

இறுதியாக காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் மார்ச் 18 அன்று சங்கரன்கோவில் தேர்தல் முடிந்த கையோடு கூடங்குளம் பகுதி அங்கே தேர்தல் பணிக்கு வந்திருந்த காவல்துறையினராலும் மேலும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினராலும் முற்றுகை இடப்பட்டது.

இதற்கிடையே போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் கல்வி நிறுவனம், தேசப்பற்றாளர்கள்(?) என்று சொல்லிக்கொண்ட மனிதகுல விரோதிகளால் அடித்து நொறுக்கப்பட்டது. தேசத் தந்தை என்று ஆட்சியாளர்களால் அலங்காரச் சொல்லாக பயன்படுத்தப்படும் காந்தியின் அகிம்சை வழியைப் பின்பற்றி நடத்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் போராட்டம் எந்த அளவுக்கு கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கொச்சைப்படுத்தப்பட்டது. கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் பெரும் மக்கள் திரளைக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்துக்காக நடத்தப்பட்ட சிறு கல்வீச்சு கூட நிகழாத மிக உன்னதமான அகிம்சைப் போராட்டம், ஏதோ தேசத்தை அச்சுறுத்தும் பெரிய தீவிரவாத கும்பலை ஒடுக்க தேவைப்படும் ஆயுத பலத்தோடு அழிக்க முயற்சி எடுக்கப் பட்டது.

2007 இல் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராமில் கூட 3000 காவல்துறையினர் தான் நிறுத்தப்பட்டனர். ஆனால் இங்கோ சுமார் 10000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஆயுதம் தாங்கிய அதிகாரவர்க்கத்தின் அடியாட்களாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூடங்குளத்தைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு நான்கு நாட்கள் மின்சாரம், குடிநீர் மற்றும் பால் உள்ளிட்ட உயிர் வாழத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் நிறுத்தப்பட்டது. முன்பு வீரத்தில் ஈழம் போல காட்சி அளித்த இடிந்தகரை பகுதி இப்போது முள்ளிவாய்க்காலை நினைவு படுத்தியது.

போராட்டக்காரர்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டு வன்முறையில் ஈடுபடச்செய்து அடக்கிவிடலாம் என்ற ஆட்சியாளர்களின் கனவு கனவாகவே போனது. போராட்டக்காரர்களை உளவியல்ரீதியாக ஒடுக்கும் இந்த முயற்சியிலும் அரசு தோல்வியே கண்டது. ஆயிரக்கணக்கான காவல்துறையை நிறுத்தி வைத்துக்கொண்டு அணு உலைப் பணிகளுக்கு விஞ்ஞானிகளை அனுப்பி வைத்திருக்கிறது அரசு.

65 ஆண்டுகால சுதந்திர(?) இந்தியாவில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டம் அதிகார பலத்தாலும் ஆயுத பலத்தாலும் ஊடக பலத்தாலும் பண பலத்தாலும் குரல்வளை நெறிக்கப்பட்டு இருக்கிறது. அகிம்சை என்பது மிக எளிதான ஆயுதம்போல் தோன்றினாலும் அதை பயன்படுத்துபவர்கள் மனதளவில் மட்டும் அல்லாமல் உடல் ரீதியாகவும் மிக வலிமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை கூடங்குளம் போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. ஏன் எனில் அந்த ஆயுதத்தை எடுக்கிறவர் எத்தகைய ஆயுதத்தாலும் தாக்கப்படலாம். போராடிய நல்லவர்களை எல்லாம் நக்சல் ஆக்கி அழகு பார்க்கிறது அரசு. ஓரளவு ஜனநாயகத்தை மதித்த ஆங்கில அரசிடம் கூட இந்த ஆயுதத்தை ஏந்திய நாம் வெற்றி பெற சுமார் முப்பது ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. அப்படி இருக்கும்போது கொஞ்சம் கூட ஜனநாயகத்தை மதிக்காத, மனித உணர்வுகளை குழி தோண்டிப் புதைக்கும், ஜனநாயகம் என்றால் ரூபாய்க்கு எவ்வளவு என்று கேட்கும் இந்த மக்கள் விரோத சர்வாதிகார முதலாளித்துவ ஆட்சியாளர்களிடம் அகிம்சை வெற்றி பெற எட்டு மாதங்கள் போதாது. அரை நூற்றாண்டுகள் கூட ஆகலாம். அதில் ஒன்றும் வியப்பில்லைதான். காந்தியே இன்று இருந்து அணு உலையை எதிர்த்தாலும் அவரது வாரிசுகளின் கண்களுக்கு அந்நிய சக்தியாகவே தெரிவார். ஏனெனில் அந்த அளவுக்கு இந்த நாட்டின் மீதும் மண்ணின் மீதும் மக்கள் மீதும் அன்பு கொண்டவர்களாக(?)அவர்கள் வாழ்கிறார்கள்.

இந்த போராட்டம் சிலரின் முகமூடியை கிழித்து இருக்கிறது. இந்த மக்கள் புரட்சியை முன்னின்று நடத்தி இருக்க வேண்டிய அறிவார்ந்த போராளி தோழர் தா.பா. போன்றவர்கள் 2g அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இடைத்தரகராக இருந்த நீரா ராடியாவை விஞ்சும் விதத்தில் செயல்பட்டு "இழப்பீடு வாங்கிக் கொண்டு வெளியேறுங்கள்" என்று சொன்னது அதிர்ச்சியின் உச்சகட்டம். ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டால் மலம் கூட இனிக்கும் என்று தா.பா. சொல்வாரா? என்று ஒரு முகநூல் நண்பர் கேட்டது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. மேலும் இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக அடையாளம் காணப்பட்ட அப்துல்கலாமின் புனிதத்தன்மை தெளிந்த அரசியல் பார்வை கொண்ட இளைஞர்களிடம் அழிபட்டுபோய் இருக்கிறது.

கூடங்குளம் போராட்டம் அகிம்சைக்கான சுயபரிசோதனைக் களமாக மட்டும் இல்லாமல் சர்வாதிகாரத்திற்கு எதிராக அகிம்சையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமோ எனவும் யோசிக்க வைக்கிறது. ஏனெனில் அகிம்சை என்பது போராட்டத்தின் ஒரு வடிவமே. அதில் மட்டுமே போராட்டம் பரிபூரணம் பெறுவதில்லை.

நாடெங்கும் அணு உலை பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியதைவிடவும் உலகத்தையே உற்று கவனிக்க வைக்கும் போராட்டக் களமாக மாற்றியதைவிடவும் இந்தப் போராட்டம் இந்த மண்ணுக்கான அரசியலை அடையாளம் காட்டி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். நன்றாக சிந்திக்க வேண்டும். இந்தப் போராட்டதில் தீவிரமாக பங்கெடுக்கும் அனைவருமே தமிழ்த் தேசியவாதிகள். இனியாவது தனக்கான அரசியலை இனம் கண்டு விழித்தெழுமா இந்தத் தமிழினம்?

- தம்பி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It