காங்கிரஸ் கட்சியினரும் கூட அமெரிக்காவை எதிர்த்து சென்னையில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நம்பமுடியாத செய்திதான்! அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘டைம்’ இதழ்தான் அதற்குக் காரணம். அந்த இதழ் பிரதமர் மன்மோகன் சிங் “குறை சாதனையாளர்; அரசு மீதான நம்பகத்தன்மைக் குறைவுக்குப் பொறுப்பானவர்; பணவீக்கம், ஊழல்களால் மக்களின் அதிருப்திக்கு உள்ளானவர்; ரூபாய் மதிப்புக் குறைவுக்குக் காரணமானவர்; அமைச்சர்களைக் கட்டுப்படுத்தமுடியாமல் திணறுபவர்; திசை தெரியாமல் தடுமாறும் பொருளாதாரத்தை நெறிப்படுத்த முடியாதவர்” என எழுதி இருந்ததுதான் அதற்குக் காரணம். பொதுவாகக் கூறினால் ‘செயல்படாத’ பிரதமர் எனக் கூறி விட்டதுதான் காரணம்.

manmohan_singh_250அமெரிக்க முதலாளிகளின் நலன்களுக்காக அமெரிக்கர்களை விட அதிக அளவு விசுவாசத்துடன் பாடுபட்டு வருபவர் மன்மோகன் சிங். அவருடைய விசுவாசத்தைக் குறை கூறினால் காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்!

நமது மக்களும் மன்மோகனின் செயல்பாடு பற்றிக் குறை கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இது வேறு வகையானது. மக்களது நலன்களுக்கு எதிரான விசயங்களில் அவர் மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறார் என்பதுதான் மக்களின் விமர்சனம்.

உலகமயமாக்கல் என நாகரிகமாக அழைக்கப்படும் நவீன காலனிய ஆதிக்கத்திற்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டதே நரசிம்மராவ் அமைச்சரவையில் மன்மோகன் நிதி அமைச்சராக இருந்தபோதுதான். இந்த ஆதிக்கத்திற்கு எதிராக உள்ள அனைத்து அரசியல், பொருளாதாரத் தடைகளையும் தகர்ப்பதில் மிக மிக வேகமாகச் செயல்பட்டு வருபவர் அவர். இன்று நமது நாடு எதிர்கொண்டுள்ள அனைத்துப் பொருளாதார நெருக்கடிகளுக்கும், ஊழல்களுக்கும் காரணம் அவருடைய வழி காட்டுதலின் கீழ் இந்திய ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் கொள்கைகள்தான்.

தாராளமயமாக்கல் என்ற பெயரில் நமது நாட்டின் கனிம வளங்களும், பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளும் இந்நாட்டின் பெரும் முதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

வேளாண்மை வளர்ச்சிக்கு என எந்தக் குறிப்பிடத்தக்க முதலீடும் கடந்த இருபது ஆண்டுகளில் செய்யப்படவில்லை. அதே சமயத்தில் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த உர மான்யங்கள் போன்றவை உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனைப் படி குறைக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும் மான்யத்துடன் உற்பத்தி செய்யப்படும் வேளாண்மைப் பொருள்கள் இங்கு வந்து குவிக்கப்படுகின்றன. அவற்றிற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரிகள் பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளன. அதனால் இங்குள்ள விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, மலேசியாவிலிருந்து தொடர்ந்து பாமாயில் இறக்குமதி செய்து வருவதன் மூலம் இங்குள்ள நிலக்கடலை சாகுபடியும், தென்னை சாகுபடியும் அழிவைச் சந்தித்து வருவதைக் கூறலாம். மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள் மரபீனி மாற்றப்பட்ட ரகங்கள் என்ற பெயரில் அதிக விலைக்கு விவசாயிகளுக்கு விதைகளை விற்றுக் கொள்ளையடித்து வருகின்றன.

பெரும் முதலாளிகளுக்கு இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மானியமாக வழங்கி வரும் இந்த அரசாங்கம் விவசாயிகளுக்குத் தேவையான கடன்களை வழங்குவதில்லை. அவ்வாறு வழங்கப்படும் கடன்களும் பெரும் பண்னைகளுக்கும், பணக்கார விவசாயிகளுக்குமே சென்று விடுவதால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களின் கடும் சுரண்டலுக்குள் சிக்கி விடுகின்றனர். இடுபொருள்கள் விலை அதிகரிப்பு, கடும் வட்டி, விளைபொருள்களுக்குப் போதிய விலை கிடைக்காமை ஆகிய காரணங்களால் இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். 1995-லிருந்து 2011-முடியமட்டும் சுமார் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் மன்மோகன்சிங் அரசின் தாராளமயமாக்கல் கொள்கைதான்.

இங்கு வந்த அந்நிய நேரடி முதலீடுகள் பெரும்பாலும் மூலதனச் செறிவுள்ள(capital intensive) தொழிற்சாலைகளில், அந்நியச் சந்தைக்கான பொருள்களை ஏற்றுமதி செய்யப்படும் நோக்கத்திலேயே இடப்பட்டுள்ளன. இவை இங்கு வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை. மாறாகப் பெரும் முதலாளிகளுக்குப் பெரும் இலாபங்களை அள்ளித் தரும் வளர்ச்சியாகவே இருந்து வருகிறது. சிறு, நடுத்ததர முதலாளிகளும் கூட இங்கு நசுக்கப்பட்டு வருகின்றனர்.

பங்குச் சந்தை வெளிநாட்டு முதலாளிகளுக்குத் திறந்து விடப்பட்டது. பங்குச்சந்தையில் நடைபெறும் ஊகபேர வணிகத்தின் மூலம் மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வருடந்தோறும் பங்குச் சந்தைச் சூதாடிகள் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்கின்றனர். இங்கு பணமும் பங்குச் சந்தை ஊகபேரப் பண்டமாக்கப்பட்டதால் ரூபாயின் மதிப்பில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாராளமயமாக்கல்தான் பெரும் ஊழல்களுக்கும் வழிவகுத்தது. ஊழல்கள் மூலம் நமது நாட்டின் வளங்களைப் பெரும் முதலாளிகளும், அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் கொள்ளையடித்து வருகின்றனர்.

பொதுவாகக் கூறினால், மன்மோகன் சிங்கின் தாராளமயமாக்கல் கொள்கைகள் நாட்டில் ஒரு சிலருக்கு மட்டும் வளத்தையும், பெரும்பான்மை மக்களுக்கு வறுமையையுமே அளித்துள்ளது. உலக அளவிலான பில்லியனர்களில்(பில்லியன்= நூறு கோடி) ஐம்பது பேருக்கு மேல் இந்தியாவில் உள்ளனர். அதே சமயத்தில் இங்குதான் எழுபத்து ஏழு விழுக்காடு மக்கள் தினசரி ரூபாய் இருபதுக்கும் கீழான வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இவற்றை எல்லாம் படு வேகத்தில் செயல்படுத்தி வந்த மன்மோகன் சிங் பன்னாட்டு முதலாளிகளுக்கு வீர நாயகனாகத் தோன்றினார். அவருடைய செயல்பாடுகள்தான் இன்று இந்தியாவைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி உள்ளன. அனைத்து மக்களையும் போராட்டப் பாதைக்கு இழுத்து வந்துள்ளன. விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், பழங்குடியினர், மாணவர்கள், வழக்குரைஞர்கள், வணிகர்கள் என அனைத்து மக்களையும் போராட வைத்துள்ளன். மக்கள் போராட்டம் அவருடைய செயல்பாட்டுக்குப் பெரும் தடையாக இன்று மாறி உள்ளது.

ஆனால் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களோ இந்தியாவைச் சுரண்ட இன்னும் அதிக வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என நிர்ப்பந்தித்து வருகிறன. அமெரிக்க, ஐரோப்பியா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் அவற்றின் மூலதனப் பெருக்கத்திற்குத் தடையாக மாறி உள்ளதால் அதைச் சரிக் கட்ட இந்தியச் சந்தையைக் குறிவைக்கின்றன. சில்லறை விற்பனையில் பல இலச்சினை(multi brand) கொண்ட பொருள்களின் விற்பனைக்கு அனுமதி வேண்டுமென வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் நிர்ப்பந்தித்து வருகின்றன. ஆயுள் காப்பீடு, வங்கித்துறை ஆகியவற்றைத் திறந்துவிடச் சொல்லிப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கின்றன. அதன் மூலம் இந்திய மக்களின் சேமிப்புகளைக் கொள்ளையடித்துச் செல்ல விரும்புகின்றன. விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் அளித்து வரும் மானியங்களை நீக்கச் சொல்லுகின்றன. தண்ணீரையும் தனியார் உடைமையாக்கக் கோருகின்றன.

ஆனால் மன்மோகன் அரசோ பொருளாதார நெருக்கடிகளாலும், மக்களது போராட்டங்களாலும் ஏற்கனவே முட்டுச் சந்தில் மாட்டிக்கொண்டு செய்வது அறியாது விழி பிதுங்கி நிற்கிறது. இதைப் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் “... திசை தெரியாமல் தடுமாறும் பொருளாதாரத்தை நெறிப்படுத்த முடியாதவர்” என்ற கடுமையான விமர்சனத்தை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் ஊதுகுழலான 'டைம்' இதழ் வைக்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்திற்கான சரியான திசை வழி என்பது அவர்களுடைய கொள்ளைக்கு ஏற்றவகையில் இந்தியச் சட்டங்களைத் திருத்துவது என்பதுதான். செயல்படுவது என்பது மக்களுடைய போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கித் தங்கள் கொள்ளைக்கு வழிவகுப்பது என்பதுதான்.

ஆனால் மத்தியில் உள்ள காங்கிரசின் கூட்டணி அரசின் பலவீனமான பிரதமரால் அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனவே அவர்கள் மக்களுடைய போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கித் தங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றும் கடுமையான, உறுதியான, நம்பகமான ஒரு புதிய ஏஜண்டைத் தேடத் தொடங்கி உள்ளார்கள். அதற்காகப் பொதுக் கருத்தை உருவாக்கத் தொடங்கி உள்ளார்கள்.

நாங்கள் உங்களுக்கு நம்பகமான ஏஜண்டாக இருப்போம் என சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே ஏற்கனவே அறிவித்து விட்டார். நரேந்திர மோடி போன்ற பாசிஸ்டுகள் நாளைய பிரதமராகத் திட்டமிட்டு உருவாக்கப்படலாம். அதைத்தான் திட்டமிட்டு 'டைம்' போன்ற இதழ்களும், பிற ஊடகங்களும் செயல்படுத்தி வருகின்றன. அவர்களுடைய கனவு நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

Pin It