எனது போராட்ட அனுபவங்கள்

தந்தை…

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான்கொல் எனுஞ் சொல்." குறள்.

23.9.1992ம் வருடம் நள்ளிரவு சுமார் 11.30 மணி... அன்றைக்கு நெருக்கடியான காலகட்டம்... தமிழகம் முழுவதும் போராட்ட அலைகள். தடா, என்.எஸ்.ஏ. என கருப்பு சட்டங்களால் பார்ப்பவர்களை எல்லாம் காவல்துறை பாய்ந்து பிராண்டிக்கொண்டிருந்த வேளை.. ராமசந்திரா மருத்துவக் கல்லூரியை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்ததை எதிர்த்து ராமசந்திரா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பெரும்போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டு ஈழ ஆதரவாளர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.

அன்றைக்கு நான் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ம.லெ.மக்கள் யுத்தம் கட்சியில் எனக்கு தேசிய விடுதலை என்ற பார்வையில் முரண்பாடு ஏற்பட்டு கட்சியில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே நேரத்தில்தான் மேற்கண்ட அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடும் போராளிகளுக்கு ஆதரவாக நாம் ஏதாவது செய்யவேண்டும் என்ற அடிப்படையில் ஒரு தாக்குதலுக்கு திட்டமிட்டு அதை செயல்படுத்தும் நோக்கத்தில் அந்த இரவில் கூடி நின்றோம். எதிர்பாராத விதமாக என்னை அறிந்த காவல்துறை உதவி ஆய்வாளர் என்னையும் என்னுடன் இருந்த இரு தோழர்களையும் அந்த இரவில் கைது செய்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றார். அங்கே உடைகளைக் களைந்து உடனடியாக காவல் துறை காட்டுமிராண்டிகளின் "கவனிப்பு" ஆரம்பமாகியது. 17 வயதே அப்போது நிறைந்திருந்த நான் வலியால் துடித்துக் கொண்டிருந்தேன். அதே வேளையில் காவல் நிலையத்தின் இன்னொரு பகுதியில் பழக்கமான குரலின் கதறல் கேட்டது. என் வலி மறந்து உற்றுக் கேட்டால், அந்த குரலின் சொந்தகாரர் என் தந்தை சேக்பரீத்…

கையில் விலங்கு, அதோடு இணைக்கப்பட்ட நீண்ட சங்கிலி… அவரை மாட்டை அடிப்பது போல் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

அவரை இழுத்து வந்து என் கண்முன்னால் அவரையும், அவர் முன்னால் என்னையும்  மாறி மாறி அடித்தார்கள். எனக்கு அழுகை வரவில்லை, என் கண்களில் அப்போழுது கண்ணீர் வரவில்லை. ஆனால் வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. "உன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வருகிறதா..? அழு.. அழு.. உன் அப்பனை அடிப்பதை நிறுத்திக்கொள்கிறோம்" என்று அழச் சொல்லி அடித்தார்கள். நடிப்புக்குக் கூட என்னால் அழ முடியவில்லை…

என் தந்தை சேக்பரீத் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கரூர் மாவட்டம் தோட்டகுறிச்சியே பூர்வீகம். எனது தாத்தா, பாட்டி அனைவரும் விவசாயிகளே..

நான் 5 வயது வரை மோகனூர் என்ற காவேரி கரையோர கிராமத்திலேயே வளர்ந்தேன். எங்கள் ஊரிலேயே ஒரே மருத்துவர் எனது பாட்டி மட்டுமே. பிரசவம், குடல் இறக்கம், உர எண்ணை என அனைத்து நோய்களுக்கும் எனது பாட்டியின் கைவ‌ண்ண‌மே ம‌ருந்து.
எனது முப்பாட்டன் கொங்குவேளாளர் சமுகத்தைச் சேர்ந்தவராக, தோட்டக்குறிசியில் பெரும் நிழக்கிழாராக இருந்திருக்கிறார். அவரை கைசூப்பி கவுண்டர் என அழைப்பார்களாம். சாமான் கூட்டம் என்று அழைக்கப்பட்ட எனது முப்பாட்டன் இசுலாமிய மார்க்கத்தை தழுவிக்கொண்டார்.

எனது பாட்டியின் வம்சவகையறாக்கள் அன்றைக்கு 10 கிராமங்கள் உள்ளடக்கிய சமீனாக இருந்து வந்தார்கள். மாடுகள் ஓட்டினால் நீண்டவரிசையில் போகுமாம். சமீன்தார் ஒழிப்பில் பெரும் நிலவகைகளை இழந்த எனது பாட்டியின் குடும்பம் கொஞ்சம் காலத்தில் ஏதும் அற்றவர்களாக மாறி நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு குடி பெயர்ந்து உள்ளார்கள். அங்குதான் எனது பாட்டி அலிமா, எனது தாத்தா இஸ்மாயில் திருமணம் நடந்துள்ளது. என் பாட்டிக்கு 6 மக்கள். நான்கு பெண்பிள்ளைகள்; இரண்டு ஆண் பிள்ளைகள். இதில் நான்கு பெண்களுக்குப் பிறகு 5வதாகப் பிறந்தவர்தான் என் தந்தை சேக்பரித். 5ம் வகுப்பு வரை படித்த என் தந்தை பின்பு படிக்கவில்லை. எனது பாட்டியுடன் மருத்துவம் கற்றுக்கொண்டு பாட்டியின் செல்லப் பிள்ளையாக வளம் வந்தார்.

அன்றைக்கு வசந்தத்தின் இடி முழக்கமாகப் பிறந்த நக்சல்பாரியின் எழுச்சி இந்தியாவின் மூளை முகடுகள் எல்லாம் எதிரொலித்தது. பல்வேறு கிராமங்களில் நிலபறிப்பு இயக்கங்களும் புரட்சிகர நடவடிக்கைகளும் நடந்து வந்தது. எங்கள் கிராமத்திலும் நக்சல்பாரி எழுச்சியின் தாக்கங்களால் உந்தப்பட்டு, மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறி கிராமங்களில் மக்களோடு மக்களாக புரட்சியின் தாக்கங்களை நக்சல்பாரியின் எழுச்சியை நிலபிரபுகளின் கொடுமைகளை பிரசாரம் செய்தார்கள். அந்த இளைஞர்களில் என் தந்தையும் ஒருவர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நக்சல் இயக்கத் தலைவர்களோடு வகுப்புகள் என்றும் வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கவேண்டும் என்ற கோட்பாடுகளும் போதனைகளும் நடந்துள்ளது.

தாஸ், சுப்ரமணி போன்ற தோழர்களுடன் எனது தந்தை சேக்பரீத் அடிக்கடி கூட்டம் போடுவதும் கைகளால் எழுதப்பட்ட போஸ்டர்களை ரகசியமாக ஒட்டுவதுமாக இருந்தார்க‌. 1972 காலகட்டத்தில் எனது தந்தை தனது இயக்க வேலை, போராட்டம் என்று இருக்கும் காலகட்டத்தில் எனது பாட்டி அலீமா இவனுக்கு ஒரு கல்யாணம் செய்தால் அடங்கிவிடுவான் என்று திருப்பூரில் எனது அத்தை மூலம் என் அம்மா ஜெமிலாவை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். ஒரு ஆண் மகன் பிறந்து, அவனுக்கு பாபர் என்று பெயர் சூட்டி ஒருவருடம் முடிந்த நிலையில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டது அந்த இளம்குருத்து.

அதற்குப் பிறகுதான் நான் 1976ம் ஆண்டு பிறந்தேன். நான் பிறந்த ஆண்டு இந்தியா இருள் சூழ்ந்த ஆண்டாகவும், தமிழகத்தில் கொடிய பஞ்சம் நிகழ்ந்த ஆண்டாக‌ இருந்தது மட்டுமல்ல போராட்ட மேகங்களும் திரண்டிருந்த வேளையாக இருந்தது.

தொடரும்...

Pin It