செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழ உறவுகளின் உண்ணாநிலைப் போராட்டம் இன்று 19வது நாளாகத் தொடர்கிறது. செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேரும், சிறப்பு முகாமில் 11 பேரும் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர். ஈழத் தமிழ் உறவுகளின் மன உறுதியைப் பார்த்து வியந்து, அதே முகாமில் இருக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மூவர், தார்மீக ஆதரவு அளிக்கும் விதத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, ஈழ உறவுகளின் உயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கை எதையும் தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை. அவர்களை நேசிக்கிற லட்சோபலட்சம் தமிழர்களின் அன்பால்தான் அவர்களது உடலில் உயிர் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாய்மண்ணிலிருந்து தப்பிப் பிழைத்து, தமிழ் மண்ணுக்கு வந்துள்ள தொப்புள்கொடி உறவுகள் விஷயத்தில் அரசும் அதிகாரிகளும் காட்டும் அலட்சியத்தை இணைப்புக் குழுவின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

15 பேரை விடுவிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தது அரசு. இப்போது, அதைப்பற்றிக் கவலைப்படாமல், 4 பேரை மட்டுமே விடுவித்து, இந்தப் போராட்டத்தைக் குறுக்குவழியில் முறியடிக்க நினைக்கிறது. நான்குபேர் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கிறோம் என்றாலும், கொடுத்த வாக்குறுதியை முழுமையாகச் செயல்படுத்தாமல் ஏமாற்ற முயலும் அதிகாரிகளைக் கண்டிக்கிறோம்.

உண்ணாவிரதம் இருக்கும் அந்த உறவுகள் புதிய கோரிக்கை எதையும் எழுப்பவில்லை. திறந்தவெளி முகாமுக்கு மாற்றுவதாகக் கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களது வேண்டுகோள். ஜூன் 5ம் தேதிக்குள் 15 பேரை திறந்த வெளி முகாமுக்கு மாற்றுவதாகவும், மீதியுள்ளவர்களை படிப்படியாக மாற்றுவதாகவும் வாக்குறுதி கொடுத்த அதிகாரிகள், கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டதுதான் இப்போதைய பிரச்சினைக்கு அடிப்படை., வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறியதன் மூலம், அகதிகளிடையே அச்சத்தையும், அரசுக்கு அவமானத்தையும் இந்த அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

இரண்டு வாரங்களைக் கடந்தும் போராட்டம் தொடர்வதால், உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கொடுத்தும், அவர்களைப் பார்த்துப் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது, ஆட்சியரின் பொறுப்பின்மையைக் காட்டுவதோடு, ஈழத் தமிழ் உறவுகளின் உயிர் குறித்து அவர் கவலைப்படவில்லையோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நிலை மோசமடைந்து கொண்டே போவதை அரசும் அதிகாரிகளும் நன்கு அறிவர். இது தெரிந்தும் அவர்கள் மௌனம் சாதிப்பது கொடுமை. இன்னும் எத்தனை நாள்தான் உங்களால் உண்ணாவிரதம் இருக்கமுடியும் - என்று ஆணவத்துடன் கேட்கிற விதத்தில் இருக்கிறது அவர்களது மௌனம். இந்த அதிகார அராஜகத்தை, போராட்ட இணைப்புக் குழுவின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். உண்ணாவிரதம் இருப்போரின் உயிருக்கு ஆபத்து என்றால், அரசும் அதிகாரிகளுமே அதற்குப் பொறுப்பாவார்கள் என்று சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

உண்ணாவிரதம் இருப்போரின் உயிர்களைக் காக்கவும், அவர்களைத் திறந்தவெளி முகாமுக்கு மாற்றவும் கோரி, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன், இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. அந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம். அதேசமயம், இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதாக உறுதியளித்திருக்கும் தமிழக உள்துறைச் செயலாளர், அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இணைப்புக் குழுவுக்காக...

புகழேந்தி தங்கராஜ்
திரைப்பட இயக்குநர்
அலைபேசி: 9841906290

ஜூலை 3, 2012.

Pin It