(அண்மையில் கீற்றில் வெளிவந்த பேராசிரியர் தொ.பரமசிவனின் நேர்காணல் பரந்துபட்ட அளவில் விவாதங்களையும், கடுமையான எதிர்வினைகளையும் எழுப்பியுள்ள நிலையில், நாட்டார் தெய்வங்கள் மற்றும் பெரியாரியல் குறித்தான பேராசிரியரின் கருத்தினை இன்னும் கொஞ்சம் விரிவாக தமிழ் இணையத்தில் பதிவு செய்யும் வகையில், அவர் முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றினை கீற்று மீள்பதிவு செய்கிறது)

அண்மைக் காலமாகத் தமிழ் வாசகரிடமிருந்து பரவலாக வருகின்ற கேள்வி ஒன்று. “அது எப்படி, பெரியாரையும், பெரியாரியலையும் ஏற்றுக் கொண்டவர்கள் நாட்டார் தெய்வங்களைக் கொண்டாட முடிகின்றது?” இந்தக் கேள்வி, ஒரு புறம் சிந்தனையுணர்வோடும் மறுபுறம் கேலியாகவும் கேட்கப்படுகின்றது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

periyar_283பெரியார் 1917 முதல் 1973 வரை தன்னுடைய எழுத்தாலும், பேச்சாலும் தன் சிந்தனையில், ‘சரி’ என்று தோன்றியவற்றை எப்பொழுதும் எளிய மக்களின் மத்தியில் நின்று கொண்டு முரட்டுத்தனமான பேச்சாலும் எழுத்தாலும் முன்வைத்தவர் ஆவார். பல நூற்றாண்டுக் காலமாக முளைத்தெழுந்த எளிய மக்களின் கோபத்தின் வெளிப்பாடு அவர். அறிவாளிகளின் கூட்டத்தினையும், புத்தகத்தினையும் பின்னணியாக வைத்துக் கொண்டவர் அல்லர், அவர். இதுவே அவரது மிகப் பெரிய வலிமையாகும். இலக்கு நோக்கிய தன் பயணத்தில் சில கட்டத்தில் எதிரிகளையும் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொண்டவர் அவர்.

‘பெரியாரியம்’ என்று நாம் வகைப்படுத்துகின்ற சிந்தனை மரபு பெரியாருக்கு முன்னரே தொடங்கிய ஒன்று. அது அவருக்குப் பின்னரும் தொடருவதாகும். ஒரு கலகமரபின் பேராளுமையாக அமைந்த காரணத்தாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் நிறைந்த அவரது செயல்பாடுகள் நம் கண்முன் நிகழ்ந்தவை என்பதாலும் இச்சிந்தனை மரபினைப் ‘பெரியாரியம்’ என்கிறோம்.

இந்தச் சிந்தனை மரபினால் நெடும்பரப்பாகவும் குறுக்குவெட்டாகவும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சமூக அசைவுகளை நாம் இழை இழையாக அவதானிக்க வேண்டும். ‘காலனிய மரபின் எதிர் வினையாகப் பாரதியார் உருவானார்’, என்றால், ‘இந்து தேசியத்தின் எதிர்வினையாகப் பெரியார் உருவானார்.’ ஆனால் அவரது பேச்சும், செயல்பாடுகளும் ‘இந்து தேசியம்’, ‘இந்திய தேசியம்’ என்ற இரண்டு எல்லைகளையும் தாண்டி மனித குல விடுதலைக்கான பயணமாக விளங்கின. அதிகாரக் குவிமையத்தைத் தகர்ப்பதற்காக அவர் நடத்திய மாநாடுகளில் பல ‘இல்லாதார்’ மாநாடுகளாகவே அமைந்தன. அல்லாதார் என்பது அவரது அகராதியில் ‘அடிமைப்பட்ட மக்களின் பெரும் திரளாகும்’.

அவர்களை நோக்கிய அவரது கண்டிப்பில் நோதலும் இருந்தது; நோகாமையும் இருந்தது. ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்று பேசிய வாயும் அவருடையதே; தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செய்த கையும் அவருடையதே. கோயில்களை ‘குச்சுக்காரி’ வீடு என்று சொன்னதும் அவர் தான். கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தையும் அவரால் தான் முன்னெடுக்க முடிந்தது. கலை இலக்கியம் பற்றி உயர்ந்த எண்ணம் எதுவும் அவருக்குக் கிடையாது. அதே நேரத்தில் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதிக்கு அவர் முன்னுரையும் எழுதினார். அண்ணாவின் நாடகங்களையும் பாராட்டினார். இதன் உண்மையான பொருள் என்னவென்றால், ‘அல்லாதார்’ எனப்படும் எளிய மக்களின் சமூக விடுதலைக்காக அவர்களோடும் அவர்களது சமூக அசைவுகளோடும் அவர் சமரசம் செய்து கொண்டார் என்பதேயாகும்.

நாட்டார் தெய்வங்களைக் கொண்டாடலாமா? என்று கேள்வி கேட்பவர்கள் ஒன்றை நினைத்துப் பாருங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை இந்துத்துவ சக்திகளும் ஆதரித்தன; கி.வீரமணியும் ஆதரித்தார். இதனை எப்படிப் பார்ப்பது? இது ஒரு அரசியல்முரண் அல்லாமல் பண்பாட்டு முரண் ஆகும். பெரியார் உயிரோடு இருந்திருந்தால் இந்தக் கட்டத்தில் பெரியாரது நிலைபாடு என்னவாக இருந்திருக்கும்? “பெரிய கோயில்களில் யாகங்களை நிறுத்துங்கள், அனைவரையும் கருவறைக்குள் நுழைய அனுமதியுங்கள், அதற்கப்புறம் ‘உயிர்ப்பலித் தடை’ பற்றி யோசிக்கலாம்” என்று தான் அவர் சொல்லியருப்பார். ஏனென்றால் பெரியார் உடனடித் தீர்வு பற்றிய சிந்தனையாளர் அல்லர். அவர் ‘நேற்றும் நாளையும்’ ஆகப் பணியாற்ற விரும்பியவர்.

முதலில் பண்பாட்டளவில் நாட்டார் தெய்வங்கள் எனப்படும் தெய்வங்களுக்கும் சிவன், பார்வதி, திருமால், பிரம்மா, சுப்பிரமணியன் என்று அறியப்பட்ட ‘மேலோர்’ தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கொஞ்சம் ‘தள்ளி’ நின்று புரிந்து கொள்ள முயல வேண்டும். இல்லையென்றால் சமகால இதழ்கள் ஊட்ட முயலும் பண்பாட்டுத் தவறுகளையும் முட்டாள்தனமான திரிபுகளையும் நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும்.

‘நாட்டார் தெய்வங்கள்’ என்ற சொல்லாட்சி, ஓரளவு வாசிப்புப் பழக்கம் உடையவர்களிடத்திலும் இடதுசாரி இயக்கச்சார்பு உடையவர்களிடத்திலும் உடனடியாகச் ‘சாமியாட்டம், குருதிப்பலி, பலிவடிவங்கள்’ ஆகிய படங்களாகவே விரிகின்றது. பொத்தாம் பொதுவான அல்லது மேலோட்டமான இந்தக் கணிப்புக்கள் அனைத்துமே தவறானவை. நாட்டார் தெய்வங்கள் தத்துவ ‘விசாரங்களிலே’ நொறுங்கிப் போகுமளவு மெலிதானவையல்ல. அவற்றின் வேர்கள் வலிமையானவை. அவை வட்டாரத் தன்மையும் உயிர்ப்பும் உடையன. சிவன், திருமால், விநாயகர் போல ‘வடவேங்கடம் தென்குமரி’ வரை ஒத்ததன்மை அவற்றுக்கில்லை. சென்னை, செங்கல்பட்டு வட்டங்களில் ‘காளன்’, ஆற்காட்டுப் பகுதியில் ‘பொன்னியம்மன்’, வேலூர் திருவண்ணாமலைப் பகுதிகளில் ‘போத்தி ராஜா’, கொங்கு நாட்டில் ‘அண்ணன்மார்’, திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களில் ‘சுடலைமாடனும் இசக்கியம்மனும்’ என்று, வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் ஆகப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுபவை. இந்தப் ‘பன்முகத் தன்மை’ என்பது சைவம், வைணவம், ஸ்மார்த்தம், இசுலாம், கிறித்தவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட இயலாததாகும்.

‘நிறுவனம்’ என்பதே அதிகாரச் சார்புடையது. எனவே அங்கு ‘மேல் – கீழ்’ என்ற வரிசை முறையுடன் தான் அதிகாரம் செயற்படத் தொடங்குகின்றது. அதிகாரத்தை நிலைப்படுத்த விரும்புகின்ற நிறுவனச் சமயங்களுக்கு மூன்று அடிப்படைத் தேவைகள் உண்டு. முதலாவது ஒரு புனித நூல் (வேதம், தேவாரம், பைபிள், குர் ஆன்) இரண்டாவதாக விதிகளை அடிப்படையாகக் கொண்ட பூசை முறை (கிரியாசூத்திரம், காரணுகாரிய ஆகமங்கள், பாஞ்சராத்திர – வைகாசன ஆகமங்கள், ஷியா – சன்னி – மாலிகி – அன்பலி விளக்கங்கள்) மூன்றாவதாகப் புனித இருப்பிடங்கள் (கைலாசம், பரமபதம், காசி, பெத்லேம், மெக்கா) ஆகியவற்றோடு மற்றொரு கூறும் இதில் அடங்கியுள்ளது. அதாவது, கடவுளுக்கும் அடியவர்களுக்கும் நடுவிலே நிற்கும் புரோகிதர் (Clergy) எனப்படும் ஒரு மனிதர். நாட்டார் தெய்வ வழிபாடுகள் மேற்குறித்த இலக்கணத்திலிருந்து விலகி நிற்பவை அல்லது அவ்வகையான கட்டுகளுக்குள் அடங்க மறுப்பவை.

--

நாட்டார் தெய்வங்கள் நிறுவனச் சார்பற்றவை. எடுத்துக்காட்டாக, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஊர்தோறும் வழிபடப் பெறும் சுடலைமாடன், இசக்கி ஆகிய தெய்வங்களுக்கு நிறுவனத் தலைமை என்று ஏதும் இல்லை. ஆறுமுகமங்கலம் (தூத்துக்குடி மாவட்டம்) சுடலை, ஊர்க்காட்டுச் (நெல்லை மாவட்டம்) சுடலை, முப்பந்தல் (குமரி மாவட்டம்) இசக்கி என்று சிறப்பிடங்கள் உண்டு. அவ்வளவே! ஒருங்கிணைந்த (Integrated) ஒரு வழிபாட்டு முறைமை இத்தெய்வங்களுக்கு இல்லை. இவை அனைத்தும் வட்டாரச் சார்புடைய மாற்றங்களை உட்கொண்டவை. இத்தனை தொலைவு போக வேண்டாம். மாரியம்மனை எடுத்துக் கொள்வோம்.

‘மாரி’ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘மழை’ என்பதே பொருளாகும் மழையைக் கட்டுப்படுத்தும் தெய்வம் (அதிதேவதை) மாரியம்மன் ஆகும். இருக்கன்குடி (சாத்தூர் அருகே), வண்டியூர் (மதுரை மாவட்டம்), சமயபுரம் (திருச்சிக்கு அருகே), பண்ணாரி (கோவை) என மாரியம்மன் குடிகொண்ட ‘சிறப்பிடங்கள்’ உண்டே தவிர மையமான ஒரு தலைமையிடம் (மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்பது போல) இந்த வழிபாட்டு நெறிக்குக் (Cult) கிடையாது. இவ்வாறு பல்வேறு வகையான வழிபாட்டு நெறிகள் தமிழ்ச் சமூகத்திலும் – பொதுவாக இந்தியச் சமூகத்திலும் உள்ளன. இவற்றைத் தெய்வ நம்பிக்கையோடு கூடிய வழிபாட்டு நெறிகள் (Cult) என்று அழைக்கலாமே தவிர மதம் என்ற கட்டுக்குள் அடக்கவியலாது. எனவே அவை அரசதிகாரச் சார்புடையன அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் சாதிக்கயிற்றால் கட்டப்பட்டவைதானே? என்பது அடுத்த கேள்வியாகும். நாட்டார் தெய்வங்களின் வகைப்பாடுகள் பல. ஒரு சாதியினர் மட்டும் வழிபடும் தெய்வங்கள் சில உண்டு. அவை எல்லா ஊரிலும் அதே சாதியினரால் வழிபடப் பெறுவதில்லை. எனவே ஒரு சாதிக்குரிய தெய்வம் என்பது அந்த ஊரில், அந்த இடத்தில் (கோயில் என்று சொல்ல வழியில்லை) மட்டும் ஒரு சாதியினர் வழிபடும் தெய்வமாகும். அந்தத் தெய்வத்தின் ‘அருளாட்சி எல்லை’ அந்த ஊரெல்லை அளவே. அது மட்டுமன்று. ஒரு சாதிக்குரிய தெய்வத்தைப் பிறர் கும்பிட முன்வந்தால் அந்த முதற்சாதிக்காரர்கள் ‘நீ கும்பிடக் கூடாது’ என்று தடுப்பதில்லை. சாதிய முரண்பாடுகள் தலைதூக்கும்போதுகூட அந்தந்த சாதிக்குரிய தெய்வங்கள் முரண்படுவதில்லை. மாறாக ஒருவர் தெய்வத்தை மற்றவர்கள் மதிக்காவிட்டாலும் விலகிப் போய்விடுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் தெய்வங்களை பிற சாதியினர் வழிபடுவது என்பதும் தமிழ்நாடு முழுவதும் காணக்கூடிய ஒரு காட்சியேயாகும்.

ஒரே சாதிக்குரிய கோயில்களில் காணக்கூடிய மற்றொரு நடைமுறை, அக்கோயிலில் சாமியைத் தொட்டுப் பூசனை செய்யும் பூசாரிகளும் சாமியாடிகளும் அதே சாதியினரே ஆவர். பூசாரிக்கும் சாமியாடிக்கும் தரப்படும் ‘புனிதம் சார்ந்த மரியாதை’ (அல்லது ஆன்மீக அதிகாரம்) என்பது திருவிழா நடைபெறும் ஒன்றிரண்டு நாட்களிலும், சாமியாடும் நேரத்திலும் மட்டுமே பின்னர் அனைவரும் இயல்பான சமத்தன்மையுடன் உறவாட வேண்டயவர்களே.

ஊர்த் தெய்வங்கள் என்பன அவ்வூரில் வாழும் நான்கைந்து சாதிகளுக்கும் பொதுவானவை. ஊர்த்தெய்வங்கள் தாம் வாழும் ஊரின் சாதி அதிகார அமைப்பை ‘மேல்சாதியார்’ பேணிக் கொள்வதற்கு ஒரு கருவியாகவும் காரணியாகவும் அமைந்துள்ளன என்பது உண்மையே. ஊர்த் தெய்வக் கோவில்களில் சாதிய மேலாண்மை மூன்று நிலைகளில் செயல்படுகின்றது. கோயில் அமைந்துள்ள நிலப்பரப்பின் மீதான உரிமை, கோயில் நிருவாக உரிமை, கோயில் மரியாதை ஆக மூன்று நிலைகளில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியார் அவற்றைத் தங்கள் முற்றுரிமையாகக் கொள்கின்றனர். ஊர்த் தெய்வ வழிபாட்டு நெறிகளில் பிராமணரும் வேளாளரும் பெரும்பாலும் இருப்பதில்லை; அல்லது ஒதுங்கிக் கொள்கின்றனர். (குருதிப் பலியும் சாமியாட்டமும் அவர்களுக்கு அன்னியமானவை).

ஊர்த் தெய்வக் கோயில்களுக்கான வரியினை ‘ஊர்ச்சமூகம்’ பெறுவதில்லை. ஊர் என்ற அளவில் ‘வரி’ என்பது ‘சம உரிமை’யின் அடையாளமாகும். ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து வரியினைப் பெறாத பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ‘மரபு’? ‘வழிவழி வழக்கம்’, என்ற பெயர்களில் ஊர்த்திருவிழாவிற்குரிய அவர்களின் உடலுழைப்பினைக் கட்டாயப்படுத்தினர். (சில ஊர்களில் இன்னும் நிலைமை இதுவே. 1832 இல் கிழக்கிந்தியக் கம்பெனி நிருவாகத்திற்கு எதிராகச் சாதி ஆதிக்கம் இந்த இடத்தில் தான் முதன் முதலாகப் ‘போர்க்கோலம்’ பூண்டது. அதாவது ஒரு பறையர் வகுப்பினர் கிறித்துவராக மாறிய பிறகும் ஊர்த்தெய்வக் (கிறித்துவம் அல்லாத) கோயில் திருவிழாக்களின் போது அவர் தன்னுடைய சுத்திகரிக்கும் பணியினைக் கூலியில்லாமல் செய்தாக வேண்டும். இதன் காரணமாகவே தமிழகத்தின் பல ஊர்களில் சாதி முரண்பாடுகள் முளைவிடத் தொடங்கின.

இந்த முரண்பாடுகள் கூர்மையடையவில்லை. இதற்கான காரணத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ‘இந்த இடம் மட்டுமே இந்தத் தெய்வத்தின் தலைமையிடம்’ என்பது போல நாட்டார் தெய்வங்கள் ஆன்மீக அதிகாரத்தின் குவிமையங்களை (காஞ்சி மடம்) ஏற்றுக் கொள்பவையல்ல. இதற்கு மாற்றான சனநாயக் கூறு ஒன்றினை நாட்டார் தெய்வங்கள் பெருமித உணர்வுடன் வெளிப்படுத்திக் கொண்டுள்ளன.

சாதிய அடுக்குமுறை காரணமாகவோ அல்லது உள்ளூர்க் காரணங்களாலோ ஒரு தெய்வத்தை வழிபடத் தடை ஏற்படுத்தப்படும்போது நாட்டார் தெய்வ வழிபாட்டு நெறி அதற்கு ஒரு மாற்று வழியினை முன்னிறுத்துகின்றது. அதாவது, எந்தத் தெய்வத்தின் கோயிலில் இருந்து யாராயினும் ‘பிடிமண்’ எடுத்துக் கொண்டு சென்று, தன்னிடத்தில் அந்தத் தெய்வத்துக்கு ஒரு கோயிலை உருவாக்கிக் கொள்ளலாம். இதனை யாரும் எதிர்க்க இயலாது. கேரளத்தில் நாராயண குரு ஈழவர்க்கான சிவன் கோயிலை உருவாக்கியபோது அவரை யாராலும் எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால் தமிழகத்தின் பண்பாட்டுச் சூழலில் அவ்வாறு யாரும் முன்வரவில்லை வந்தாலும் 75 ஆண்டுக்கு முன்னான சூழலில் வெற்றி பெறவும் இயலாது. பின்னாட்களில் (1980-களில்) பங்காரு அடிகளார் அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். அவரது வெற்றி தனியான ஆய்வுக்குரியது.

நாட்டார் வழிபாட்டில் ஊர்த்தெய்வ வழிபாட்டில் மட்டும் சாதிய அதிகாரம் பிரதிபலிக்கின்றது என்பதை மறுக்க இயலாது. இது சமூக அதிகாரமே தவிரப் பண்பாட்டு அதிகாரம் அல்ல. ‘பிடிமண்’ கோயில்கள் என்பன பெரும்பாலும் சாதிய அதிகாரத்தோடு மோதி வெல்ல முடியாமல் இடம் பெயர்ந்த மக்கள் உருவாக்கிக் கொண்ட பண்பாட்டுப் பாதுகாப்பு அரணாகும். (கண்டதேவி சொர்ணபுரீசுவரர் கோயிலும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலும் ஆகம ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட அதாவது குருதிப்பலி பெறாத பெருந்தெய்வக் கோயில்களாகும். அவை நாட்டார் தெய்வங்கள் அல்ல) சாதிய அதிகாரம் என்பது உற்பத்தி உறவுகளிலும் சமூகத்தின் பிற அசைவுகளிலும் மூர்க்கமாகச் செயல்படுவது போல நாட்டார் தெய்வ வழிபாட்டில் செயல்பட இயலாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சாதிய ஆதிக்கத்தால் கொலை செய்யப்பட்ட ஒருவன் தெய்வமாக்கப்பட்டால் அவன் இரண்டு சாதியாராலும் வணங்கப்படுவான். அவனைக் கொன்ற ஆதிக்க சாதி ஆவி அச்சம் காரணமாகவும் கொலை செய்யப்பட்டவனின் சாதியினர் பாதுகாப்புக் கருதியும் ஒரே தெய்வத்தை வழிபடுவதையும் கள ஆய்வில் கண்டறியலாம்.

எளிய மக்கள் திரளில் பெண்களின் விடுதலைத் தாகம் நாட்டார் தெய்வ வழிபாட்டில் வெளிப்படுகின்றது. நாட்டார் தெய்வங்களில் 90%-க்கு மேல் பெண் தெய்வங்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டார் தெய்வக் கோயில்களில் மட்டுமே தெய்வத்தைத் தன்மேல் நிறுத்திச் சாமியாடவும் குறி (அருள்வாக்கு) சொல்லவும் அடியவர்களுக்குத் திருநீரு வழங்கி அருள் பாலிக்கவும் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. இது மேல் சாதி மரபில் பெருந்தெய்வக் கோயில்களில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாட்டார் தெய்வங்கள் எவையும் ‘முன்னே வந்து’ வரம் தரும் தெய்வங்கள் அல்ல. ‘பின்னே நின்று’ பாதுகாப்புத்தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும் அறுவடைக் காலத்திலும் கண்மாய்க் கரையிலும் ஊர் மந்தையிலும் ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. அவை நுகர்வுக்காக மட்டும் பிறந்தவை அல்ல. உற்பத்தி சார்ந்த பண்பாட்டோடு பிறந்தவை.

பெரியாரைப் புரிந்து கொள்வது போலவே நாட்டார் தெய்வங்கள் ‘மதம்’ என்ற கட்டுக்குள் அடங்குவதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ‘மதத்திலிருந்து மனிதனை விடுதலை செய்வது’, என்ற முழக்கம் நாட்டார் தெய்வ வழிபாடுகளுக்குப் பொருந்தாது. மேலோர் மரபினால் விலக்கப்பட்ட கள்ளும். கறியும் நாட்டார் தெய்வங்களால் கொண்டாடப்படுபவை. உற்பத்தி உறவுகளோடு இரண்டறக் கலந்தவை. எனவே நகர்ப்புறம் சார்ந்த அறிவு ஜீவிகள் தவிர பாரம்பரியமான முறையில் பொருள் உற்பத்தி செய்யும் மனிதரைத் தெய்வ நம்பிக்கையிலிருந்து விடுதலை செய்ய இயலாது. சோவியத் ஒன்றியத்திலும் சீனத்திலும் மாபெரும் புரட்சிகளுக்குப் பின்னரும் கூட மக்களை மதத்திலிருந்து மட்டுமே விடுதலை செய்ய முடிந்தது. தமிழ்நாட்டில் பெரியாரின் ஐம்பதாண்டுப் பணியும் அவ்வாறே செய்ய முடிந்தது. தமிழ்நாட்டுப் பெண்கள் (குறைந்தது) எண்பது விழுக்காட்டிற்கு மேல் சனநாயக உணர்வுடன் கூடிய நாட்டார் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள். எனவே தான் நாகூரும் வேளாங்கன்னியும் சமயபுரமும் அவர்களுக்கு வெவ்வேறான தெய்வங்களாகத் தெரியவில்லை. அவர்களை சடங்கியல் போர்வையில் ஊடகங்கள் ‘இந்து மதத்திற்குள்’ இழுத்து வர முயலுகின்றன. இதற்கான எதிர்க்குரல் என்பது நாட்டார் தெய்வங்களை அங்கீகரிப்பதாகவே இருக்க முடியும்.

எல்லாவற்றையும் விட மேலாக, நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் குறிப்பாகத் தாய்த் தெய்வங்கள் தம் மக்களின் காப்பிற்காக ஆயுதமேந்தி போராடும் குணம் உடையன. தம் மக்களைக் காப்பதற்காகவே மகிசாசுரன் (எருமைத்தலை அரக்கன்) என்னும் ஆணைத் தாய்த்தெய்வம் ஆண்டுதோறும் போரிட்டு அழிக்கின்றது. இதன் வழியாக இருத்தலுக்கும் வாழ்வதற்குமான போராட்ட உணர்வை நாட்டார் தெய்வங்கள் பண்பாட்டுத் தளத்தில் பேணிக்காத்து வருகின்றன.

பெரியாரின் வாழ்வும் நோக்கமும் தன் மக்களின் இருத்தலுக்கும் கண்ணியமான வாழ்விற்குமான போராட்டமாக இருந்தன. எனவே தான் ஆண்டு முழுவதும் வெட்ட வெளியில் மண் குவியலாகக் கிடந்து ஆண்டிற்கொருமுறை உயிர் கொண்டெழும் நாட்டார் தெய்வங்களை அவர் எதிர் கொள்ளவில்லை. மாறாக அதிகார மையமாகிய கோயில்களையும் அதனை மையப்படுத்திய மனித ஏற்றத்தாழ்வுகளையுமே அவர் எதிர்த்தார்.

இறுதியாக பெரியாரைப் புரிந்து கொள்ள முயலுகின்றவர்களுக்கு ஒரு கேள்வி எழுகின்றது. குருதிப் பலியும் சாமியாட்டமும் கூட மூட நம்பிக்கைகள்தானே? என்பதே அந்தக் கேள்வி. இப்படி திருப்பிக் கேட்கலாம். ‘நம்பிக்கைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் இடையே என்ன இருக்கின்றது? ஏதோ ஒரு வகையில் நுண் அரசியல் அதிகாரமும் சமூக அதிகாரமும் இருக்கின்றன என்பதே நமது பதிலாகும். இந்தப் பதிலைக் கொண்டுதான் பெரியாரையும், மக்கள் திரளையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

(நன்றி: 'தெய்வம் என்பதோர்' நூல், யாதுமாகி பதிப்பகம், திருநெல்வேலி. தொடர்புக்கு - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It