எதிர்பார்த்தது போலவே அணு உலை பாதுகாப்பானது என்று ஜெ அறிவித்துவிட்டார். சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவிற்குப் பின் வரும் என்று பலரும் எதிர்பார்த்திருக்க ஓட்டு எண்ணிக்கை முடிந்த மறுநாளே ஜெவின் நயவஞ்சகம் அம்பலமானது.

அடுத்த கணம் பத்து பேர் கைது.. 144 தடையுத்தரவு… கடலோரக் காவல் படை கண்காணிப்பு.. கூடங்குளம் நோக்கி மக்கள் அணி திரளல் என்று செய்திகள் வருகின்றன. காலவரையற்ற உண்ணாநிலையை போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தக் கட்டுரை எழுதி முடிக்கப்படுமுன், அல்லது இதனை நீங்கள் படிக்கும் நேரத்தில் நிறைய மாறுதல்கள் வந்துவிடலாம். ஆனால், எதுவும் நமக்கு நல்ல செய்தியாக இருக்காது.

இன்று மாலை மதுரையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடந்தது. அணு உலை எதிர்ப்பு மக்கள் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். அணு உலையைத் திறக்க அனுமதிக்காதே என்று கோரவிருந்த ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டமாக மாறியது. (அதில் நானும், நான் சார்ந்த எம்எல் கட்சியின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினேன்.)

கூடங்குளம் போராட்டம் இரண்டு (ஒன்றிணைந்த) காரணங்களால் சிறப்பு மிக்கது என்பது என்னுடைய கருத்து. இவ்வளவு நீண்ட நாட்கள் நடைபெற்ற, ஆனால், பிரதானமான எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் பெறாத போராட்டம் என்பது அனைவ்ரும் அறிந்த சிறப்பம்சம்.

மற்றொரு சிறப்பம்சம்தான் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இந்தப் போராட்டம் வளர்ச்சிக்கு எதிரான போராட்டம் என்று நாராயணசாமி வகையறாக்கள் சொல்கிறார்கள். அது உண்மையில்லை. கூடங்குளம் போராட்டம் உண்மையில் வளர்ச்சிக்கான போராட்டம். மக்கள் கோரும் வளர்ச்சிக்கான போராட்டம்.

யாருடைய சதியினாலோ அல்ல, மாறாக, மக்கள் எவ்வகை வளர்ச்சி கோருகிறார்களோ அதனை அளிக்கவில்லை என்பதால் இப்போராட்டம் துவங்கியது. இதுதான் மிகவும் கவனத்திற்குரிய செய்தி.

இந்திய அரசு மக்களுக்கான வளர்ச்சியை மறுக்கிறது. மாறாக, முதலாளிகளின்- அதிலும் குறிப்பாக பன்னாட்டு முதலாளிகள் மற்றும் அவர்களுடன் கைகோர்த்துக்கொண்ட உள்நாட்டு முதலாளிகளின் வளர்ச்சிக்காக செயல்படுகிறது. இதில் எந்தவித விதிவிலக்கும் இல்லை.

உதாரணமாக, இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள நீர்க்கொள்கையை எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கை சுற்றுச்சூழல் தேவைக்குப் போக எஞ்சியுள்ள நீர் அனைத்தையும் வணிகப் பண்டமாகப் பார்க்க வேண்டும் என்றும் நீரிலிருந்து கூடுதல் பலன் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும் என்று சொல்லி இறுதியில் முதலாளிகளின் லாபவேட்டைக்கான பொருளாக நீரை மாற்றுகிறது நீர்க்கொள்கை 2012. குடிக்கக் கூட நீர் கொடுக்காத அரசாங்கம் இந்திய நீர்வளத்தை பன்னாட்டு இன்னாட்டு முதலாளிகளுக்குத் தானம் செய்கிறது.

மக்களுக்கு இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையில்லை. உண்மையில் மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் மக்களின் பணம் லேப்டாப் உற்பத்தி செய்யும் அல்லது மிக்சியை உற்பத்தி செய்யும் முதலாளிக்குப் போய் சேர்கிறது… அதாவது மூலதனத்தின் வளர்ச்சிக்குப் போய் சேர்கிறது. அதில் உப விளைவாக, அரசியல் கட்சிகளுக்கு ஓட்டும், ஓட்டு வாங்கப் பணமும் கிடைக்கிறது.

விவசாயம் செத்துக்கொண்டிருக்கிறதே, அதில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் என்ன செய்துள்ளது அரசு? ஒன்றுமில்லை. மாறாக, விவசாய எந்திரங்களை உற்பத்தி செய்யும் முதலாளிகளுக்கு அரசுப் பணம்- அதாவது மக்கள் பணம்- போய் சேரும் வகையில் விவசாயத்தை யந்திரமயமாக்க ஜெ. அரசும் காங்கிரஸ் அரசும் திட்டம் போட்டு செயல்படுகின்றன.

இப்படி நிறைய சொல்லலாம். அதில் ஒன்றுதான் அணு உலை. அணு உலை தொழிலில் உள்ளவர்களின் அதாவது அணு முதலாளிகள் மற்றும் கலாம் போன்ற தொழில்நுட்ப சேவகர்களின், லாப வேட்டைக்கு இந்தியாவைத் திறந்துவிட்டுள்ளார், IMF அளித்த பிரதமமந்திரி.

அன்று இராஜாக்கள் இந்திய மண்ணை கிழக்கிந்திய கம்பெனிக்கு விற்றார்கள். இன்று பிரதமமந்திரிகள், முதலமைச்சர்கள் விற்கிறார்கள்.

ஆக, கூடங்குளம் பிரச்சனை வெறும் அணு உலை பிரச்சனையில்லை. மாறாக, அது வளர்ச்சி யாருக்கு என்ற பிரச்சனை. வளர்ச்சி எந்த திசையில் என்ற கேள்வியே அது.

முதலாளித்துவத்தின் நலனுக்காக இந்தியாவின் மண்ணும் நீரும் வானும் உயிர்களும் பலியாக வேண்டுமா? அல்லது மக்களின் நலனுக்காக, வளமான, தரமான, நிம்மதியான வாழ்க்கையை இந்தியர்கள் பெற வேண்டுமா என்ற இரண்டு கேள்விகள் மோதிக்கொள்கின்றன.

முதலாளித்துவப் பாதையில்தான் வளர்ச்சி என்பதில் அனைத்து முதலாளியக் கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன.

கருணாநிதி அணு உலையை எதிர்த்துவிட்டார் அதனால் ஜெ. ஆதரித்துவிடுவார் என்று சிறுபிள்ளைத்தனமாக நம்பியவர்கள் ஏமாந்துபோனார்கள். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை என்பதில் க.வும் ஜெ.வும் கூட்டாளிகள்.

காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் நிறத்தில், குணத்தில் மணத்தில் வேறுபட்டாலும் அதே ரத்தினம் பட்டணம் பொடிதான். இந்திய மக்களின் வளர்ச்சிக்கு இரண்டு கட்சிகளுமே வெடிதான்.

இந்த நான்கு கட்சிகளையும் அவற்றின் இடத்தைப் பிடிக்கப்போட்டியிடும் மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளையும் மறுத்தொதிக்கினால் மட்டுமே இந்திய மக்களுக்கான வளர்ச்சி உத்திரவாதம் ஆகும்.

கூடங்குளம் போராட்டம் மக்களின் வளர்ச்சியை முன்னிறுத்திய போராட்டம் என்பதால், அது தமிழக மக்களின், இந்திய மக்களின் போராட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது. ஆனால், பல்வேறு அரசியல் சமூக வளர்ச்சி நிலைமைகளில் அது போராட்டக் குழுவினால் வழி நடத்தப்படும் போராட்டமாக இன்று இருக்கிறது.

நாளை அல்லது நாளை மறுநாள் கூடங்குளம் இரத்தக் களம் ஆகலாம். ஆனால், போராட்டம் தோற்காது. மாறாக அன்றுதான் மற்றொரு புதிய வடிவம் எடுக்கும்.

முதலாளித்துவ பாதையை மறுத்து மக்களின் வளர்ச்சியைக் கோரும் இந்திய மக்களின் போராட்டத்தின் அங்கமாக மாறும்..

இந்திய மக்களின் வளர்ச்சிக்கான இடதுசாரி ஜனநாயக அரசியலின் முன்னோடியாகவும், அங்கமாகவும், மக்கள் பெறப்போகும் இறுதி வெற்றியில் தனது வெற்றியையும் காண்பதாகவும் கூடங்குளம் போராட்டத்தின் வரலாறு நீளும்.

Pin It