பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு, அவர்களுள் சிறப்பாக இசுலாமியர்களுக்கு அதிக இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருப்பதாக யாரும் குற்றம் சொல்ல முடியாது.

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டில் 4.5 விழுக்காடு ஒதுக்கீட்டைச் சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்கும் சிறுபான்மையினருக்குக் கொடுப்பது என நடுவண் அரசு முடிவெடுத்திருக்கிறது;    அரசின் இம்முடிவு அறியாமையாலும் குழப்பத்தாலும் சிலரால் எதிர்க்கப்படுகிறது.  இந்த உள் ஒதுக்கீட்டிற்கும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு ‘உலோக்பாலி’ன் கீழ் கொடுக்கப்படும் 50 விழுக்காட்டிற்குக் குறைவான ஒதுக்கீட்டிற்கும் இடையேயான வேறுபாடு தெரியாமல், ஊடகங்களில் உள்ள சிலரால் இந்தத் தனி இட ஒதுக்கீடு மேலும் சிக்கலாக்கப்படுகிறது.

4.5 விழுக்காட்டுத் தனி இட ஒதுக்கீட்டைப் பற்றி ஆய்வாளர்கள் கூறும் நான்கு கருத்துகள் சரியானவை அல்ல.

அ) மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது; எனவே இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

இக்கருத்து தவறான ஒன்றாகும்.  இவ்வொதுக்கீடு என்பது சிறுபான்மையினருக்கோ இசுலாமியருக்கோ அன்று!  இது புதிய இட ஒதுக்கீடும் அன்று!  மாறாகப் பிற்படுத்தப்பட்டோரில் சமூக நிலை, கல்வி நிலை ஆகியவற்றில் பின்தங்கியுள்ள குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு ஆகும்.  சிறுபான்மையினருள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் 1993ஆம் ஆண்டு வாக்கிலேயே மாநிலவாரியாக எடுக்கப்பட்டு மையப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.   பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான  தேசிய ஆணையம் (‘என்.சி.பி.சி’) மாநிலப் பட்டியல், மாநிலங்களின் மண்டிலப் பட்டியல் ஆகியவற்றில் காணப்படும் பொதுத்தன்மையைக் கருத்தில் கொண்டு 1993, 2000 ஆகிய ஆண்டுகளில்  சில சட்ட அறிவுரைகளை வழங்கியது.  இவ்வறிவுரைகள், 1992ஆம் ஆண்டு வந்த ‘மண்டல்’ தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடன் அமைந்தன.  இவை அனைத்தும் இந்திய அரசியல் சட்டம் குறிப்பிடும் ‘சமூக நிலை, கல்வி நிலை ஆகியவற்றில் பின் தங்கியுள்ள நிலை’யை மட்டுமே கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டன.  இவற்றில் மதங்கள் எவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை;

ஒரு மதத்தில் உள்ள எல்லாச் சமூகத்தினருக்கோ எல்லாச் சாதியினருக்கோ இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் மட்டும் தான் அதை மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்று கருத முடியும்.  இசுலாமிய சாதிகள்  என்றோ இசுலாமிய சமூகங்கள் என்றோ சொல்லப்படுகின்ற செய்யது, பதான், மொகல், அரபு, இரானி, கட்சி-மெமோன், போரா, கோஜா ஆகியனவும் கிறித்தவ சாதிகள் (அல்லது சமூகங்கள்) ஆன சிரியன் கிறித்தவர்கள்,  சீக்கிய மதத்தைச் சேர்ந்த சாதிகளான ஜட் சிக், கத்ரி சிக் ஆகியனவும் மாநில வாரியான மையப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.  ஏனென்றால் அவை இந்து மதத்தில் உள்ள சில சாதிகளைப் போலச் சமூக நிலையில் பின் தங்கிய நிலையில் இல்லை.  இவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சாதிகளும் சமூகங்களும் மதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என அறியலாம்; எனவே இவ்வொதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது அன்று.

இந்து மதத்தில் இல்லாத சாதிகளையும் சமூகங்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது என்பது வாக்குச்சீட்டுக்கு அலையும் அரசியலாளர்களின் ‘புத்தம்புதிய கண்டுபிடிப்பு’ என்று நினைத்து விடாதீர்கள்.  தென்னிந்திய மாநிலங்கள் சிலவற்றில் இசுலாமியர்களில் சில பிரிவினரை இந்து, கிறித்தவம் ஆகிய மதங்களின்  பிற்படுத்தப்பட்டோருடன் சேர்த்தது என்பது இந்திய விடுதலைக்கு முன்னரே நடந்திருக்கிறது.  விடுதலைக்குப் பின்னும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான மாநிலக் குழுக்கள், கலேல்கர் (1953-55), மண்டல் (1979-80) குழுக்கள் போன்ற தேசிய குழுக்கள் ஆகியனவும் இப்படி அடையாளம் கண்டிருக்கின்றன.  சீக்கியர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடத்தும் (தாழ்த்தப்பட்டோர் புத்த மதத்தைத் தழுவினாலும் தாழ்த்தப்பட்டோராகவே கருதப்படுவார்கள் என்பதற்கு முன்பு) பிற்படுத்தப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இந்த வகையினர் அனைவரிடமும் உள்ள சமூக இயல்பு நிலைதான் கணக்கில் கொள்ளப்பட்டதே தவிர அவர்களின் மதம் அன்று!  எனவே மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது என்பதும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதும் தவறானது.

அடிப்படை இருமை

ஆ) இசுலாமியர்களிடத்துப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு என்பது அடிப்படையிலேயே தவறானது ஏனென்றால் இசுலாம் சாதியை மறுதலிக்கிறது.

இந்தக் கருத்தை இரு எதிர்க்கோணங்களில் அணுகலாம் – முதலாவது, இசுலாம் சாதியை மறுதலிப்பதால் இசுலாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதே கூடாது என்பதாகும்.  இரண்டாவது, இசுலாம் சாதியை மறுதலிப்பதால் இசுலாமியர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதாகும்.  இரண்டாவது முறையைச் செயல்படுத்த அரசியல் சட்டத்தின் படியோ சமூக நீதிக் கொள்கைகளின் அடிப்படையிலோ வாய்ப்பே இல்லை.  இட ஒதுக்கீடு முதலியவற்றைக் கொண்ட சமூக நீதி என்பது இந்தியச் சமூக அமைப்பு முறையில் பிற்படுத்தப்பட்ட, அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் “தீண்டாமை”யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மட்டுமே தேவையான ஒன்றாகும்.  நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டம் தனியாள் சார்ந்த ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.  எனவே தான், சமூக அமைப்பு முறையில் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் சமூகங்களையும் சாராத மக்களில் உள்ள தனியாட்களுக்குப் பொருளியல் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சமூக நீதிக்கு முரணாகவும் அரசியல் சட்டத்தின் படித் தவறாகவும் இருக்கிறது.

மதம் என்னும் கொள்கையையும் சமூகக் கட்டமைப்பு, சமூக அடுக்கு முறை ஆகியவற்றையும் சரிவரப் பிரித்தறிய முடியாத நிலையே முதல் முறையில் சிந்திப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.  கொள்கையளவில் இசுலாம் சமத்துவம் கொண்டதாகவும் சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் இருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான்!  ஆனால் இசுலாத்தைப் பின்பற்றுவோரின் சமூக நிலை என்பது நடைமுறையில் சமூகவியல், பொருளியல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.  இவ்விரண்டின் அடிப்படையில் பார்க்கும் போது இந்தியாவிலும் உலகின் மற்ற சில பகுதிகளிலும் வாழும் இசுலாமியர்களின் சமூக நிலை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.  மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராக 1931ஆம் ஆண்டு பணியாற்றிய புகழ்பெற்ற அறிஞர் ஜே.எச். அட்டன் கூறுவது போல, “சாதி என்பது காற்றோடு கலந்திருக்கிறது;  இசுலாத்தைப் பின்பற்றுபவர்களையோ கிறித்தவர்களையோ அக்காற்று தீண்டாமல் விடுவதில்லை.  மத மாற்றம் கூட சாதிய அமைப்பை அழித்துவிடவில்லை.  சாதிகளை ஏற்றுக்கொள்ளாத இசுலாத்தில் கூட இந்து மதத்தில் எத்தனை சாதிகள் இருக்கின்றனவோ அத்தனை சாதிகள் நடைமுறையில் இருக்கத்தாம் செய்கின்றன.”  (அட்டன் 1980 (1946)).

இந்திய இசுலாம் சமூகத்தில் சமத்துவ சமூகம் என்னும் கருத்தியலுக்கும் நடைமுறையில் உள்ள ஏற்றத்தாழ்வு, மரபு சார்ந்த இணைப்புகள், புறமணத்தடை ஆகியவற்றுக்கும் இடையே இருவேறு நிலைகள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், மக்கள் தொகை ஆய்வாளர்கள், சமூகவியல் திறனாய்வாளர்கள் எனப் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  இவையனைத்தும் “ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள இசுலாமியர்களின் சமூக நிலை, கல்வி நிலை ஆகியவற்றில் பின் தங்கிய வகுப்புகளை அடையாளப்படுத்துதல்” என்னும் என்னுடைய அறிக்கையிலும் (ஜூன் 2007) (இவ்வறிக்கை ஆந்திரத்தில் உள்ள இசுலாமியர்களிடையே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு நான்கு விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது. ) “எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி” இதழின் 2010 ஆகஸ்டு 21ஆம் நாள் பதிப்பில் நான் எழுதிய “இசுலாமியச் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைப் புரிந்துகொள்ளுதல்” என்னும் கட்டுரையிலும் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.  இந்நேரத்தில் இசுலாத்திற்கு மாறுவோரின் சமூகப் பண்பாக, சுவாமி விவேகானந்தர் கூறும் கருத்தை (1897) நினைத்துப் பார்ப்பது சாலப் பொருத்தமாக இருக்கும்.

“இந்தியாவில் முகம்மதியர்களின் வெற்றி என்பது ஒடுக்கப்பட்டோருக்கும் ஏழைகளுக்கும் ஒரு விடிவாகவே அமைந்தது;  அதனால் தான் நம்முடைய மக்களுள்  ஐவருக்கு ஒருவர் முகம்மதியர் ஆனார்;  கத்திக்கு அஞ்சி மக்கள் முகம்மதியர்கள் ஆனார்கள் என்று எண்ணுவது அறியாமையன்றி வேறில்லை.”  என்கிறார் அவர்.

இதே நிலைதான் மற்ற மதங்களைப் பின்பற்றுவோருக்கும் பொருந்தும்.  மனிதர்களிடத்தும் மனிதர்கள் அல்லாத பிற உயிர்களிடத்தும் இறைவன் ஊடுருவி நிற்பதாகவே வேதங்களும் உபநிடதங்களும் கூறுகின்றன.  ஆனால் அப்படிப்பட்ட உயர்வான ஆன்மிகக் கருத்துகள் எவையும் இன்றித் தீவிரமான சாதீய அமைப்பு முறை இந்துச் சமூகத்தில் நிலவுகிறது.  உச்சநீதிமன்றத்தில் வெளியான மண்டல் தீர்ப்பும் இந்து மதம் தவிர்த்த பிற மதங்களிலும் சாதீய அமைப்பு முறை நிலவி வருவதைக் குறிப்பிட்டுக் காட்டியது.  ‘இசுலாம் சாதியை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று சொல்வதும் ‘இசுலாத்தில் சாதிகளோ அவற்றைப் போன்ற அமைப்புகளோ இல்லை’ என்று சொல்வதும் இவற்றை எல்லாம் கருதும் போது நடைமுறைக்குச் சிறிதும் ஒவ்வாத, பொருத்தமற்ற வாதங்களாக அமைந்து விடுகின்றன.

இ) இந்துக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டின் ஒரு பகுதி பறிக்கப்பட்டு இசுலாமியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாதமும் சொத்தையானது தான்!  பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒன்று அன்று; மதத்தைக் கருதாது கொடுக்கப்பட்ட ஒன்றாகும்.  இசுலாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரிடையே அடையாளம் காணப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்து பிற்படுத்தப்பட்டவர்களைப் போலவே 27 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டுப் பலனுக்கு உரியவர்கள் தாம்!  ஒட்டுமொத்தமாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காட்டளவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அவர்கள் அனைவரது பிற்படுத்தப்பட்ட நிலையும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கவில்லை;  சிலரது நிலை மிகவும் பின்தங்கியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட நிலை என்பது எல்லோருக்கும் ஒரே அளவில் இல்லை என்பதும் சிலர்தம் சமூக நிலை மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது என்பதும் உச்சநீதிமன்றத்தின் மண்டல் தீர்ப்பு ஏற்றுக்கொண்ட ஒன்று தான்!  பிற்படுத்தப்பட்டவர்களுள்  ‘சமூக நிலை’ சார்ந்த பகுப்புகள் வேண்டும் என்பதையும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் மண்டல் தீர்ப்பு வலியுறுத்துகிறது.  இப்படிச் செய்வது அரசியல் சட்டத்திற்கு எதிரானது அன்று என்பதையும் அப்போது தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் உண்மையான பலனை அடைய முடியும் என்பதையும் சேர்த்தே அத்தீர்ப்பு சொல்கிறது.  இத்தீர்ப்பை ஏற்கெனவே பல மாநிலங்கள் பிற்படுத்தப்பட்டவர்களுள் உள் ஒதுக்கீடு வழங்கிப் பல ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகின்றன.

மாநில அரசுகள் செய்ததை நடுவண் அரசு மிகுந்த காலம் கடத்தி எடுத்தாலும் கூடச் சரியான திசையில் எடுத்திருக்கிறது.  ஏற்கெனவே இசுலாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரிடையே பிற்படுத்தப்பட்டவர்கள் இருப்பதாலும் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் வருவதாலும் அவர்களுக்கு 27 விழுக்காட்டில் ஒரு குறிப்பிட்ட பங்கை ஒதுக்குவது என்பது ‘இந்துக்களிடம் இருந்து பறித்து இசுலாமியர்களுக்கு வழங்குவது’ என்று சொல்வது பொருத்தமாகாது.

ஈ) இசுலாமியர்களுக்கு இப்போது வழங்கப்பட்டிருப்பது மிக மிக அதிகம் அல்லது இசுலாமியர்களுக்கு இப்போது வழங்கப்பட்டிருப்பது மிக மிகக் குறைவு

இந்திய மக்கள் தொகையில் 43.7 விழுக்காட்டளவில் இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாக ‘மண்டல்’ குழு தெரிவிக்கிறது.  இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 83.84 விழுக்காடு இருக்கும் இந்துக்களில் 43.7 விழுக்காடு என்பது ஏறத்தாழ 100க்கு 52 பேர் ஆவர்.  இதே அளவை நிலை அளவாகக் கொண்டு சிறுபான்மையினரிடத்திலும் 52 விழுக்காட்டுப் பேர் பிற்படுத்தப்பட்டோர் எனக் கணக்கிடப்பட்டது.  இந்திய மக்கள் தொகையில் (83.84 இந்துக்கள் போக) மீதி 16.16 விழுக்காடு சிறுபான்மையினர் ஆவர்;  அப்படியானால் அவர்களுள் 52 விழுக்காட்டு என்பது 8.4 விழுக்காடு ஆகும்.

மொத்தத்தில் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் 43.7 விழுக்காடு; சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்டோர் 8.4 விழுக்காடு.  ஆக மொத்தத்தில் 52 விழுக்காடு ஆகும்.

இந்துப் பிற்படுத்தப்பட்டோருக்கு எடுத்துக்கொண்ட நிலையளவைச் சிறுபான்மையினருக்கும் அப்படியே பொருத்திப் பார்ப்பது நூற்றுக்கு நூறு சரி என்று சொல்ல முடியாது தான்!  ஆனால் மொத்தமாகப் பிற்படுத்தப்பட்டோர் எத்தனை விழுக்காட்டுப் பேர் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்படுவதே இல்லை!  எனவே மண்டல் குழுவிற்குப் பிற்படுத்தப்பட்டோரைக் கணக்கிடுவதற்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.  எனவே சிறுபான்மையினருள் பிற்படுத்தப்பட்டோருக்கு 4.5 விழுக்காட்டளவு இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தப் பிற்படுத்தப்பட்டோர் கணக்கைக் கொண்டு முடிவு செய்தது சரி தான்!  இதைக் கூடுதல் ஒதுக்கீடு என்று சொல்ல முடியாது.

2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் இந்துக்கள் 81.47 விழுக்காடும் சிறுபான்மையினரும் 18.53 விழுக்காடும் இருக்கிறார்கள்.  ‘மண்டல்’ குறிப்பிடும் சிறுபான்மையினருள் 0.5 விழுக்காடு இருக்கும் சமண மதத்தில் பிற்படுத்தப்பட்டவர்களே இல்லை;  சமணத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் வைசிய, பனியா சமூகங்களைச் சேர்ந்தவர்களே ஆவர்; புத்த மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதப்படுவர் என்னும் நிலைக்குப்  பிறகு, 0.7 விழுக்காடு இருக்கும் புத்த மதத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களே இல்லை.  ஆக, 13.43 விழுக்காடு இருக்கும் இசுலாமியர்கள், 2.4 விழுக்காடு இருக்கும் கிறித்தவர்கள், 2 விழுக்காடு இருக்கும் சீக்கியர்கள் ஆகிய மூன்று மதங்களிடம் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இருக்கின்றன.

இவற்றுள் சீக்கிய மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் உயர்சாதியினரும் தாம் அதிகம்.  கிறித்தவ மதத்தில் மலைவாழ்மக்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர்சாதியினர் ஆகியோர் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள்.  இசுலாமிய மதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மலைவாழ் மக்களும் அதிக அளவில் பிற்படுத்தப்பட்டோரும் மிகக் குறைந்த அளவில் உயர் சாதியினரும் இருக்கிறார்கள்.  “தீண்டாமை”க் கொடுமையால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் இந்து மதத்தில் இருப்பது போல, இசுலாமிய மதத்திலும் கிறித்தவ மதத்திலும் இருந்தாலும் அவர்கள் ‘பிற்படுத்தப்பட்டோர்’ ஆகக் கருதப்படுவதால் இவ்விரண்டு மதங்களிலும் தாழ்த்தப்பட்டோர் என்னும் பிரிவே இல்லை.  அதே சமயம் ‘மலைவாழ் மக்கள்’ என்னும் பிரிவும் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்னும் பிரிவும் இசுலாமிலும் கிறித்தவத்திலும் இருக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது.

மலைவாழ்மக்கள், உயர்சாதியினர் ஆகிய இரு பிரிவினரைக் கழித்துப் பார்த்தால், கிறித்தவர்களுள் 1.4 விழுக்காட்டளவிலும் இசுலாமியர்களுள் 10.5 விழுக்காட்டளவிலும் பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாகக் கருதலாம்.  சீக்கியர்களுள் பிற்படுத்தப்பட்டோர் 1.2 விழுக்காட்டளவில் இருக்கிறார்கள்.  இவையனைத்தையும் (1.4 + 10.5 + 1.2) கூட்டிப்பார்த்தால் 13.1 விழுக்காடு ஆகிறது.  நாட்டின் மொத்த பிற்படுத்தப்பட்டோர் விழுக்காடான 52 விழுக்காட்டில் 13.1 என்பது நான்கில் ஒரு பங்காகிறது.  சிறுபான்மையினர்க்கான 27 விழுக்காட்டளவில் இது 6.75 விழுக்காட்டளவைப் பிடிக்கிறது.  ஒட்டு மொத்தப் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையில் (52 விழுக்காட்டில்) இசுலாமியப் பிற்படுத்தப்பட்டோர் (10.5 விழுக்காடு)  எண்ணிக்கை என்பது ஐந்தில் ஒரு பங்காகும்.  எனவே பிற்படுத்தப்பட்டோர்க்கான 27 விழுக்காட்டளவில் இசுலாமியர்கள் 5.4 அல்லது 5.5 விழுக்காட்டைக் கொண்டிருக்கிறார்கள். எனவே 4.5 விழுக்காட்டுத் தனி ஒதுக்கீடு என்பது ஒப்பீட்டளவில் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

சரியான மதிப்பீடுகள்
அ) கால தாமதமான முடிவு இது!  முன்னரே இம்முடிவை எடுத்திருக்க வேண்டும்.

இந்த உள் ஒதுக்கீட்டை அரசு 1990களிலேயே கொடுத்திருக்க வேண்டும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.  ஏனெனில் 1961இல் வந்த பாலாஜி தீர்ப்பின் (பாலாஜி தீர்ப்பு – மொத்த இட ஒதுக்கீடு ஐம்பது விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்னும் கொள்கை பற்றியது)  அடிப்படையில் முடிவெடுத்த மண்டல் குழுவே பிற்படுத்தப்பட்டோருள் பகுப்பு என்னும் முடிவில் 4:1 என்னும் அளவில் பிரிந்து நின்றது. மண்டல் குழுவின் உறுப்பினராக இருந்த எல்.ஆர். நாயக், பிற்படுத்தப்பட்டோர்,  தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் என இருவகையாகப் பிரிக்கப்பட்டு 27 விழுக்காட்டு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சொன்னார்.  ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.  அந்நேரத்தில் நாயக், என்னுடன் இது பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார்.  அதன் பிறகு 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வெளிவந்த மண்டல் தீர்ப்பு, பிற்படுத்தப்பட்டோரை, அவர்களிடையே உள்ள வேறுபட்ட பிற்படுத்தப்பட்ட நிலையைக் கருத்தில் கொண்டு வகைப்படுத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது அன்று என்றும் அப்படி வகைப்படுத்துவது தேவையான ஒன்று என்றும் கூறியது.

எனவே இப்படிப் பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்துவது என்பது 1990ஆம் ஆண்டிலோ 1993ஆம் ஆண்டிலோ தான் செயல்படுத்தப்பட்டிருக்க முடியும்.  ஆனால் வட இந்தியாவில் உள்ள சில ஊடகங்கள் செய்த தவறான பரப்புரையாலும் அவை எடுத்த சார்பு நிலையாலும் இதை எதிர்த்து மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.  அவ்வெதிர்ப்பை வழிநடத்திய சிலர்தாம் மீண்டும் 2007ஆம் ஆண்டு நடுவண் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதையும் எதிர்த்தார்கள்.  அவர்களுள் சிலர் ஊடகங்களிலும் இயக்கங்களிலும் பெரிய பொறுப்புகளில் இன்றும் இருந்து கொண்டு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்குப் பின்புலமாகப் பணியாற்றி வருகிறார்கள்.  இவற்றை எல்லாம் கருதிப் பார்க்கும் போது, 90களின் சூழலில் அரசு கவிழ்வதற்கு முன் பிற்படுத்தப்பட்டோருள் உள் ஒதுக்கீடு என்பது சற்றே கடினமான ஒன்றாகத் தான் இருந்தது.  பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதையும் அதை ஒப்புக்கொள்ள வைப்பதையும் மட்டும் தான் அப்போதைக்குச் செய்ய முடிந்தது.

1993ஆம் ஆண்டுக்குப் பிறகு (அதாவது 1992ஆம் ஆண்டு வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு) பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்துவதைச் செய்திருக்க முடியும்.  அதற்காக என்னையும் உறுப்பினராகக் கொண்ட அறிஞர் குழு ஒன்று 1992ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் அமைக்கப்பட்டது.  பிற்படுத்தப்பட்டோருள் சமூக நிலையில் ஓரளவு முன்னேறிய ஆட்கள், பிரிவுகள் ஆகியவற்றைப் பதினைந்து நாட்களுக்குள் கண்டறிந்து சொல்லுமாறு அக்குழு பணிக்கப்பட்டது.  ஆனால் பதினைந்து நாட்களுக்குள் அப்பணியை முடிக்க முடியவில்லை.  அப்பணி முடிந்த பிறகு, மண்டல் தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் வகைப்பாட்டைப் பரிந்துரைக்க, அக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இப்பணியைக் குழு செய்து கொண்டிருந்த போதே, அரசு பிற்படுத்தப்பட்டோருள் உள் ஒதுக்கீடு என்னும் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கிக்கொண்டது.  பிற்படுத்தப்பட்டோருள் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மிக மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்தம் ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் பலன் கண்டு வந்த சிலரால் அரசு இப்படி நடந்துகொள்ள நேர்ந்தது.  ஆனால் எது எப்படியோ, அரசு நினைத்திருந்தால் 1993ஆம் ஆண்டே இவ்வொதுக்கீட்டைக் கொண்டு வந்திருக்க முடியும்.  அப்படி ஏன் கொண்டுவரவில்லை என்பதற்கு 1993ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சியில் இருந்த ஒவ்வோர் அரசும் விடை சொல்லியே ஆகவேண்டும்.

ஆ) இவ்வகைப்பாடு முழுமையானது இல்லை.

இக்கருத்து சரியான ஒன்று என்றாலும் யாரும் இதை எழுப்பவில்லை.  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் சாதிகளும் சமூகங்களும் ஒரேயளவில் பிற்படுத்தப்பட்டவை கிடையாது.  இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாகச் சென்றடைய வேண்டுமென்றால் அச்சமூகங்களின் சமூகநிலையில் உள்ள வேறுபாடுகளைத் “தேர்தலை” ஒதுக்கி வைத்து விட்டுச் சிந்திக்க வேண்டும்.  ‘பிற்படுத்தப்பட்டோர்’, ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’, ‘மிகமிகப் பிற்படுத்தப்பட்டோர்’, ‘மீமிகு பிற்படுத்தப்பட்டோர்’ (‘பிச்சாடே’, ‘ஆதி பிச்சாடே’, ‘அத்தியந்த பிச்சாடே’, ‘சர்வாதிக பிச்சாடே’) என நான்கு வகைகளாகப் பிற்படுத்தப்பட்டோர் வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்.  எவ்வித மரபு சார்ந்த திறமைகளும் சொத்துகளும் இல்லாத சாதிகளை “மீமிகு பிற்படுத்தப்பட்டோர்” பட்டியலில் சேர்க்க வேண்டும்.  ‘குற்றப் பரம்பரை’ என்று முத்திரை குத்தப்பட்ட சாதிகளையும் துப்புரவுத் தொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் சாதிகளையும் இப்பட்டியலில் சேர்க்கலாம்.  இச்சாதிகளுள் சில, இந்து மதத்தில் இருந்தால் தாழ்த்தப்பட்ட சாதிகள் பட்டியலில் இருக்கின்றன.  ஆனால் அதே சாதிகள் இசுலாமில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தாம் இருக்கின்றன.  இந்து வால்மீகி, சீக்கிய மசாபி ஆகியவற்றிற்கு இணையாக இசுலாமில் இருக்கும் ஹலல்கோர், இலால்பெகி, மெதர், நற்று, ஜோகி ஆகிய சாதிகளும் இந்து, கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களில் இருக்கும் பிச்சை எடுக்கும் சாதிகள், பரதேசிச்சாதிகள் ஆகியன இன்னும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தாம் இருக்கின்றன.

“மிக மிகப் பிற்படுத்தப்பட்டோர்” பட்டியலில் மரபு சார்ந்த தொழில் திறமைகள் மட்டும் கொண்டிருந்து சொத்து ஏதும் இல்லாதோரைச் சேர்க்கலாம்.  கைவினை சார்ந்த தொழில்களைச் செய்யும் பெரும்பாலான சாதிகள் ஆகியன இப்பட்டியலின் கீழ் வரும்.  இசுலாமிய மதத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகள் பெரும்பாலானவை இப்பட்டியலில் வந்து விடும்.

குத்தகைக்கு எடுத்து நிலங்களை உழும் உழவர்கள் சார்ந்த சாதிகளை ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ பட்டியலில் சேர்க்கலாம். மேல் சொன்ன மூன்று வகைகளிலும் வராத பிற்படுத்தப்பட்டோரை, அதாவது கொஞ்சமாவது சொத்துகளுடனும் உரிமைகளுடனும் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வைக்கலாம்.

இந்நான்கு பிரிவுகளையும் ஒரே போட்டியில் ஒன்றாக ஓட விட முடியாது.  இதை உணர்ந்து தான் கேரளம், கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் உட்பிரிவுகளை ஏற்படுத்தி உள் ஒதுக்கீடுகளைக் கொண்டு வந்திருக்கின்றன.  இவ்வகை ஒதுக்கீடுகள், இட ஒதுக்கீட்டின் பலனைச் சமூகம் முழுமையாகப் பயன்படுத்திச் சமூக நீதியை நிலைநாட்ட உதவுகின்றன.  இம்மாநிலங்களைப் போல வேறு சில மாநிலங்களும் உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்திருந்தாலும் அது முழுமையானதாக இல்லை.  மைய அரசும் வட இந்தியாவின் சில மாநில அரசுகளும் வழக்கம் போல் மந்தமாகத் தான் இருக்கின்றன.  தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் திட்டக்குழுவின் பத்தாவது திட்டப் பணிக்குழுவின் தலைவராகவும் நான் இருந்த போது பிற்படுத்தப்பட்டோரிடையே உள் ஒதுக்கீடுகளைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தேன்.  ஆனால் அரசு வழக்கம்போல் மெத்தனமாகவே இருந்தது.

இ) சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு இட ஒதுக்கீடு மட்டுமே போதாது.

சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு இட ஒதுக்கீடு என்பது இன்றியமையாத ஒன்றாகும்.  முன்னேறிய சாதிகளுடன் சரிக்குச் சமமாகப் பொருளியலில், கல்விநிலையில், உடல்நலத்தில் என எல்லா நிலைகளிலும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ்மக்கள், பிற்படுத்தப்பட்டோர் வர வேண்டும் என்பதற்கான பணிகளில் இட ஒதுக்கீடு என்பது ஒரு கூறு மட்டுமே!  எனவே அரசு தன்னை இட ஒதுக்கீடு வழங்குவதில் மட்டும் சுருக்கிக்கொள்ளக்கூடாது;  அதைத் தாண்டியும் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்டப் பணியாற்ற வேண்டும்.

அடுத்தது என்ன?

பிற்படுத்தப்பட்டோருள் சிறுபான்மையினருக்குச் சிறப்பாக இசுலாமியருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.  எனவே அரசு உறுதியாகச் செயல்பட்டு நான்கு, ஐந்து பிரிவுகளாகப் பிரித்து உள் ஒதுக்கீட்டிற்கு வகைசெய்ய வேண்டும்.  இதற்கான தரவுகளை ஓரிரு மாதங்களில் எடுத்து விடலாம்.  ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த பின் உள் ஒதுக்கீட்டைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரலாம்.  இத்துடன், பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்குவதற்கு முன் உரிய திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் அமைத்துச் சமூக நீதியை நிலைநாட்டுவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

சரியான நேரம்

தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் மக்களுக்கு என்ன செய்கின்றனவோ அதைத்தான் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று கட்சிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன.  ஆனால் மக்கள் போதுமான அரசியல் விழிப்புணர்வு பெற்று வரும் இக்காலத்தில் அக்கருத்து பொய்யானது எனப் பலமுறை நிறுவப்பட்டு விட்டது.

சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் என்று மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாகவே பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அவர்தம் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கும் போதுமான தரவுகள் தெளிவாக இருக்குமாயின் இப்பட்டியலில் இல்லாத ஏழைகளுக்கும் உரிய திட்டங்கள் தீட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.  போதுமான தரவுகள் ஏராளமாக இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் கவனிக்கப்படாமலேயே நீண்ட காலம் வைக்கப்பட்டிருக்கின்றன.  இம்முறையாவது மாநிலத் தேர்தல்களுக்குப் பின் அரசு செயல்படும் என்று நம்புவோம்.

(கட்டுரையாளர்: பி.எசு. கிருட்டினன் – நடுவண் அரசுச் செயலாளராக 1990ஆம் ஆண்டு இருந்தவர்.  அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ்மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மைச் சமூகங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குச் சமூக நீதி கிடைக்க இயங்கி வருபவர்.)

நன்றி: “பிராண்ட்லைன்” மார்ச்சு 9ஆம் நாள் இதழ்

மொழிபெயர்ப்பு: முத்துக்குட்டி

Pin It