2009 மே மாதம் 18ம் தேதியுடன் முடிந்த இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் 1½ லட்சம் ஈழமக்கள் படுகொலை செய்யப்பட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் ஊனமடைந்தும் கணக்கற்ற அளவில் வீடுகள் உள்ளிட்ட அவர்களது உடமைகள் அழிக்கப்பட்டும் ஈழத்தமிழினம் அழித்து சிதைக்கப்பட்டது. அப்போரின் முடிவுக்கு பிறகும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொடிய வதை முகாமில் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர்.

 ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அமைத்த குழு, அப்போர் குறித்து ஒரு பூர்வாங்க விசாரணையை மேற்கொண்டது. அதனடிப்படையில் அக்குழு, 31.03.2011 நாளிட்ட ஒரு விசாரணை அறிக்கையினை ஐ.நா.வின் பொதுச் செயலாளரிடம் அளித்தது. அதில், இலங்கை அரசு கொடிய போர்குற்றங்களை செய்துள்ளது என்பதற்கும் பன்னாட்டு மனித உரிமை மற்றும் மாந்தநேய சட்ட விதிமுறைகளை மீறியமைக்கான தகுந்த சான்றுகள் உள்ளன என்றும் அதன் மூலம், இலங்கை அரசு மனித உரிமைகளுக்கு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் இழைத்துள்ளது என்றும் அவை குறித்து ஒரு பன்னாட்டு விசாரணை அவசியம் என்றும் தெரிவித்தது. அக்குழு, 1. இலங்கை அரசு பொதுமக்களை மீட்கும் நடவடிக்கை என்று கூறிக்கொண்டு உண்மையில் அவர்கள் மீது கொடிய குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் அதன்காரணமாகவே பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர் என்றும் 2. அம்மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளே செல்ல முடியாதவாறு தடைகளை விதித்து, அதன் காரணமாக போர்க்கொடுமைகள் அதிகரிக்க காரணமாக இருந்துள்ளது என்றும் 3. மருத்துவமனைகள் மற்றும் பன்னாட்டு உதவிநிறுவனங்கள் செயல்பட்ட இடங்கள் மீது குண்டு வீசி தாக்குதல்கள் நடத்தியுள்ளது என்றும் 4. போரின் முடிவில் கைது செய்யப்பட்டவர்களையும் சரணடைந்தவர்களையும் கொடிய முறையில் கொன்றுள்ளது என்றும் 5. கைது செய்யப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் என்ன ஆனார்கள் என்று தெரியாதவகையில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்துள்ளது என்றும் 6. பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எந்த குற்றச்சாட்டும் நீதிவிசாரணையும் இல்லாமல் அவர்களது இருப்பிடம் கூட வெளித்தெரியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் 7.போர்க்களத்திலிருந்து வெளியேறிய இலட்சக்கணக்கான மக்களை தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகள் கூட இல்லாத கொடிய கொட்டடி முகாம்களில் அடைத்துவைத்து அவர்களுக்கு உணவு கூட வழங்க மறுத்துள்ளது என்றும் இலங்கை அரசின் மீது குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு தெரிவித்தது.

சானல்-4 தொலைக்காட்சி வெளிகொணர்ந்த போரின் போது நிகழ்த்தப்பட்ட அக்கொடிய குற்றங்களின் சிலவற்றை காட்டும் காட்சிகள், இலங்கை அரசுப்படைகள் ஈழத்தமிழர் மீது இழைத்துள்ள குற்றங்களுக்கு கண்ணால் காணத்தக்க மற்றும் மறுக்கவியலாத சாட்சியமாக உள்ளன.

உண்மையில் கொல்லப்பட்ட மக்களின் திட்டவட்டமான எண்ணிக்கை என்பது இன்றுவரை மறைக்கப்படுகிறது. ஆனால், போருக்கு முன்பு மன்னார், முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழ்ந்து வந்த மக்களின் மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவித்த மறுக்கப்படமுடியாத புள்ளவிபரங்களின் அடிப்படையில் 1½ லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு, இதுவரை இலங்கை அரசால் தக்க சான்றுகள் மூலம் மறுக்கப்படக்கூடவில்லை.

இலங்கை அரசும் அதன் படைகளும் செய்துள்ள கொடிய குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளால் எழுப்பப்பட்ட கோரிக்கை, இப்பொழுது நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகிவிட்டது. இக்கொடிய குற்றங்களை செய்தவர்கள், தண்டனை பெறாமல் தப்பித்து வருவது என்பது உலக அரங்கில் நியாயத்தை வலியுறுத்துபவர்களின் எதிர்ப்பினையும் ஒருமுகப்படுத்தியது. இத்தகைய கொடிய குற்றங்களுக்கு எந்த பன்னாட்டு விசாரணையும் இல்லை என்பது, நியாயமற்ற உலக ஒழுங்கு நிலவுவதை காட்டுவதோடு ஐக்கிய நாடுகள் அவையின் இருப்பின் அவசியத்தையும் கேள்விக்குள்ளாக்கியது.

இனப்படுகொலைத்தடுப்பு மற்றும் அதற்கான தண்டனை குறித்த ஐ.நா. சாசனம்-1948-ன் கூறு 2 பின்வருமாறு கூறுகிறது. ஒரு தேசிய இனம் அல்லது மரபினம் அல்லது இனத்தொகுதியினர் அல்லது மதப்பிரிவினர் ஆகிய ஒரு மக்கள் தொகுதியினர் அல்லது அவர்களின் ஒரு பகுதியினரை அழித்து சிதைக்கும் நோக்கில், i அவர்களைக் கூட்டமாக கொல்லுதல் ii அவர்களுக்கு உடல் அல்லது மனக்காயம் உண்டாக்குதல் iii அம்மக்களின் அல்லது அவர்களது பகுதியினரின் உடல் அழிவை உருவாக்கும் திட்டமிட்ட நோக்கில் தீங்கான நிலைமைகளை வேண்டுமென்றே ஏற்படுத்துதல் iv அம்மக்கள் பிரிவினரில் குழந்தைகள் பிறப்பைத் தடுக்கும் நோக்கத்திலான நடவடிக்கைகளை அவர்கள் மீது மேற்கொள்ளுதல் எ அவர்களின் குழந்தைகளை வேறொரு பிரிவினரிடம் மாற்றிக் கொடுத்து விடுதல் ஆகிய செயல்களை இனப்படுகொலை குற்றமாக வரையறுத்துள்ளது.

இனப்படுகொலை குற்றத்தை செய்வதுடன் அக்குற்றத்தை செய்ய சதிசெய்வது, அந்தக்குற்றத்தை செய்ய துண்டுவது, அக்குற்றத்தைச் செய்ய முயற்சிப்பது மற்றும் அக்குற்றத்திற்கு ஒத்துழைப்பது ஆகியவையும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக அதன் உறுப்பு- 3 கூறுகிறது. மேலும், அக்குற்றத்தைச் செய்தவர்கள், ஒரு நாட்டின் அரசியலமைப்புப்படியான பதவிகளில் இருந்தவர்களாயினும் மற்றும் அலுவல் பணியில் இருந்தவர்களாயினும், தண்டிக்கப்பட வேண்டுமென்று கூறு-4 கூறுகிறது. அந்த ஒப்பந்தத்தில் மேலும் பலப் பயனுள்ள கூறுகள் உள்ளன.

 ஆனால், அக்குற்றத்தை விசாரணை செய்வதற்கோ அல்லது அவற்றை செய்தவர்களை தண்டிப்பதற்கோ பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்கள் சார்பாக மற்றவர்கள் நீதிமன்ற விசாரணையை துவங்குவதற்கு வழிவகை செய்யும் எளிய பன்னாட்டு சட்டவிதிகள் உருவாக்கப்படவில்லை. இனப்படுகொலைப் போன்ற பன்னாட்டு மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய ஆணையிடுவதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவைக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆள்வரைக்கு உட்படுவதாக ஒப்புதல் தெரிவித்து, அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ள நாடுகளைப் பொறுத்தவரையில் மட்டுமே பாதுகாப்பு அவையின் பரிந்துரையின்றி, விசாரணை மேற்கொள்ள இயலும். அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் கையொப்பமிடவில்லை.

 ஐ.நா.பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும், தங்களுக்கு வேண்டிய நாடுகள் அக்குற்றங்களை செய்யும் பொழுது, அவை குறித்து விசாரணையைக் கோரும் தீர்மானங்களை தங்களது இரத்து அதிகாரத்தை பயன்படுத்தி, தோற்கடித்துவிடுகின்றன. எனவேதான், இலங்கையில் அத்தகைய விசாரணையைக் கோரும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையில் நிறைவேற்ற இயலாது. ஏனெனில், அத்தகைய தீர்மானம் கொண்டுவரப்பட்டால், ரசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் தங்களது இரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதனை தோற்கடித்துவிடும்.

எனவே, இந்த இனப்படுகொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் மூலமே விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஏனெனில், அந்த அவையில் உறுப்பு நாடுகள் எதற்கும் ஒரு தீர்மானத்தை தோற்கடிக்கும் இரத்து அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன்மூலம், விசாரணை செய்யப்பட்டு அத்தகைய குற்றங்கள் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுமானால், அதன் பிறகு, ஐ.நா.வின் பாதுகாப்பு அவை, அக்குற்றங்களை இழைத்தவர்கள் மீது பன்னாட்டு குற்ற நீதிமன்றத்தின் மூலம் விசாரணை செய்வதை தடுக்க முடியாது.

ஈழப் போரில் நடத்தப்பட்டுள்ள குற்றங்களை இழைத்துள்ள குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கை அரசின் இராணுவம், சிங்கள இராணுவ வீரர்களை மட்டுமே கொண்டுள்ள இராணுவமாகும். குற்றமிழைக்கப்பட்டவர்கள் முழுமையும் தமிழர்கள் மட்டுமே ஆவர். இவ்வாறு குற்றமிழைக்கப்பட்டவர்கள் ஒரு இனத்தைச் சார்ந்தவர்களாகவும், அக்குற்றத்தை இழைத்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள படையினர் மற்றொரு இனத்தவராக உள்ளனர். மேலும், அந்தக்குற்றங்கள் கொடிய முறையில் மற்றொரு இனத்தை அழிக்க வேண்டும் என்ற பழி தீர்க்கும் வன்மத்துடன் நடத்தப்பட்டுள்ளன. அப்போரில் கொல்லப்பட்டவர்கள், ஊனமடைந்தவர்கள் மற்றும் கொடுங்காயம் அடைந்தவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை, உடைமைகள் அழிப்பு என அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு நியாயமான பன்னாட்டு விசாரணை நடத்தப்படுமானால், அந்த விசாரணையின் முடிவு இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை குற்றத்தை செய்துள்ளது என்ற தவிர்க்க முடியாத உண்மையை உலகிற்கு அறிவித்துவிடும்.

இலங்கை அரசு, ஈழத் தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலை குற்றத்தை நடத்தியுள்ளது என்ற உண்மை உலகிற்கு தெரிய வந்திடுமானால், அவர்களது தமிழ் ஈழ தனி அரசு என்ற போராட்டத்தின் நியாயத்தை உலகம் ஏற்றுக்கொள்ளும் என்பதுடன் தமிழ் ஈழ தனி அரசு என்ற அவர்களது நியாயமான தேவையை மறுக்கவும் முடியாது என்ற நிலைமை உருவாகிவிடும் அல்லவா?. இத்தகைய ஒரு நிலைமை உருவாகிவிடுவதை தடுக்க முயலும் சக்திகள்தான், இலங்கை அரசின் குற்றங்கள் குறித்து ஒரு பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக நியாயமான போரினையே நடத்தியதாகவும் அவர்களிடமிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையையே தான் மேற்கொண்டதாகவும், தனது தரப்பு நியாயமாக இன்று வரை கூறி வருகிறது. அவ்வாறு, அந்த அரசு செயல்பட்டது உண்மையாக இருக்கும் நிலையில், அந்த அரசு ஒரு பன்னாட்டு விசாரணைக்கு ஏன் எதிர்ப்புக்காட்ட வேண்டும்? விடுதலைப்புலிகள் மீதும் ஐ.நா.குழு போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும் என்கின்ற நிலையில், இலங்கை அரசு தனது தரப்பை எளிதில் நிரூபிக்க முடியும் அல்லவா? இக்கேள்விகளுக்கு, அத்தகைய விசாரணையை எதிர்க்கும் இலங்கை அரசினாலோ அந்த அரசினை ஆதரிக்கும் நாடுகளினாலோ தக்க பதில் அளிக்கப்படமுடியவில்லை. அத்தகைய ஒரு விசாரணை, இலங்கை அரசின் இறையாண்மை அதிகாரத்தை மீறுவதாக அந்நாடும் அதனை ஆதரிக்கின்ற சிலரும் வாதிடுகின்றனர். ஒரு நாடு, அந்நாட்டிற்குள் வாழும் சிறிய இனத்தினரை அழித்து ஒழிக்கும் அளவிற்கு, அதன் இறைமை அதிகாரம் நீண்டிருப்பதாக கூற முடியாது. அவ்வாறு வாதிடுபவர்கள், எவ்வகையில் இஸ்ரேல் நாடு, பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் இனஎதிர்ப்பு ஒடுக்கு முறைகளை மட்டும் எதிர்க்கிறார்கள்?. அவ்வாறு எதிர்ப்பதென்பது, இஸ்ரேல் நாட்டின் இறையாண்மையை எதிர்ப்பதாக ஆகிவிடாதா? இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள ஒரு இனவாத அரசை நாட்டை காப்பாற்றும் நோக்கமல்லவா, அத்தகைய இறையாண்மை வாதத்தில் ஒளிந்திருப்பது?

 தற்பொழுது, ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இலங்கை அரசு, அந்த தீர்மானத்திற்கெதிராக கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருவதுடன் அந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான ஆதரவு திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்திய அரசு, இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால் தன்னுடைய நிலை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால், எந்த ஒரு நாட்டையும் குறி வைத்து குற்றம் சாட்டி அந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தாங்கள் எதிர்ப்பதாக கூறி இலங்கை அரசை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் அமைந்த ஒரு அறிவிப்பினை மட்டுமே வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, பன்னாட்டு விசாரணைக்கான ஒரு தீர்மானத்தைக்கொண்டு வந்துள்ளது போன்றும், அதன் மூலம் இலங்கை அரசை ஒரு நெருக்கடிக்கு உள்ளாக்கிருப்பது போன்றும் பலரும் கருதுகின்றனர். அதனடிப்படையிலேயே, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அவற்றில், இலங்கை அரசை ஆதரிக்கும் வகையில் அந்த அவையில் வாக்களிக்கக்கூடாது என்று இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளன. ஆனால் இந்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் மற்றும் கட்சிகளின் எதிர்ப்பையோ, கருத்துக்களையோ ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை என்ற அதன் கடந்த கால செயல்பாடுகள் காட்டுகின்றன.

பலரும் நினைப்பதுபோன்று, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், உண்மையில் ஈழ மக்களுக்கு நியாயம் பெற்றுத்தரப்போகின்ற ஒரு தீர்மானம் அல்ல. அது இறுதியில், இலங்கை அரசை காப்பாற்றும் ஒரு தீர்மானம் என்பதோடு, ஈழ மக்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எந்தவொரு நியாயமும் கிடைக்கப்பெறாமல் செய்துவிடும்; சூழ்ச்சியும் நிறைந்தது என்பதை பலரும் அறியவில்லை. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையே நிறைவேற்றக்கோருகிறது.

அந்த ஆணையம், முதலில் இலங்கை அரசால் அமைக்கப்பட்டதாகும். குற்றம்சாட்டப்பட்டுள்ள தரப்பான இலங்கை அரசே, தனது அதிகாரத்திற்கு கீழ்படிந்து பணியாற்றும் அதிகாரிகளை கொண்டு அமைத்துள்ள ஒரு ஆணையம், குற்றமிழைக்கப்பட்ட தரப்பான ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒரு நடுநிலையான ஆணையமாக எவ்வாறு இருக்க முடியும்?. அடுத்து, அந்த ஆணையம் அதன் விசாரணையில் எவ்வளவு நபர்களை விசாரித்தது? எவ்வளவு காலத்திற்கு விசாரணை நடத்தியது? அதில் சாட்சியம் அளிக்கக்கூடியவர்களாகயிருந்த சாட்சிகளுக்கு உண்மையை தெரிவிக்கும் சுதந்திரமான நிலைமை உறுதி செய்யப்பட்டிருந்ததா? அந்த விசாரணையின் நம்பிக்கைத்தன்மை என்ன? என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், அந்த விசாரணை கண்துடைப்பு விசாரணைதான் என்பது எளிதில் தெரியவரும். ஐ.நா.வின் விசாரணைக்குழுவே, அந்த ஆணையத்தின் நடைநிலைமையின்மையையும் அதன் விசாரணை மீதான நம்பிக்கையின்மையையும் குறிப்பிட்டு, அதன் அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளது. அதனை, பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

சானல்-4 வெளிக்கொணர்ந்த காணொளி குற்றசாட்சியங்கள் கூட உண்மையல்ல என்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்டவை என்றும் அந்த ஆணையம் கருத்து தெரிவித்தது. இது ஒன்றே, அந்த ஆணையத்தின் அறிக்கை எந்தளவு அரசு சார்பு அறிக்கை என்பதை எடுத்துக்காட்டுகிறது. முடிவில், அந்த அறிக்கை கொடுமைகள் இழைக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு எந்த ஒரு நியாயத்தையும் வலியுறுத்தவில்லை என்பதோடு, அரசியல் பிரச்சினைக்கும் எந்த ஒரு தீர்வையும் முன் வைக்கவில்லை. அந்த அறிக்கை, இலங்கை அரசிற்கு தேவைப்படும் கால அவகாசத்தை பெற்றுக் கொடுப்பதற்கு பயன்படுத்ததத்தக்க ஆவணமாகவே அமைந்துள்ளது.

ஒரு மோசடியான ஆணையத்தின் அறிக்கை என்பதாக எளிதில் தெரிந்துவிடுமே என்பதற்காக, அதனை மறைக்கும் நோக்கில், தோற்றத்திற்கு பயனளிக்கத்தக்கவை போன்று காட்டும் சில பரிந்துரைகள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவற்றையே, இலங்கை அரசு ஈழ மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளாக இந்த அமெரிக்க தீர்மானம் வலியுறுத்துகிறது.

அத்தகைய ஒரு ஆணையத்தின் அறிக்கை ஐ.நா.வின் அறிக்கையை காட்டிலும், எவ்வகையில் உயர்வானதாக இருக்க முடியும்? ஐ.நா. அறிக்கையின் அடிப்படையில் ஒரு விசாரணையை கோரும் தீர்மானத்தை ஏன் அமெரிக்கா கொண்டு வரவில்லை?.

சில நாட்களுக்கு முன்பு வரையிலும், ஐ.நா.வின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்திய ஐரோப்பிய ஒன்றியம், திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அமெரிக்கா கூறுவதையே வழிமொழிகிறது. இதிலிருந்து, இந்த நாடுகள் தங்களுக்குள்; இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்து செயல்படுவது தெளிவாகிறது. அவ்வாறிருக்க, அம்மேற்கத்திய நாடுகள் இப்பொழுது ஈழத்தமிழர் மீதான குற்றங்கள் குறித்து அக்கறை காட்டுவதற்கான காரணங்கள் என்ன?.

துனிசியா, எகிப்து மற்றும் லிபியா, ஆகிய நாடுகளில் பெரும் புரட்சிகளின் மூலம் சர்வாதிகாரிகளை ஆட்சியிலிருந்து விரட்டிட பல மாத போராட்டங்கள் நடந்துள்ள போதிலும், அவற்றிலும் இராணுவங்கள் ஈடுபட்டுள்ள போதிலும், அங்கு எங்கும் தனித்தனியாகவோ, அல்லது மொத்தமாகவோ கூட ஈழத்தில் நடந்தது போன்று இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்படவில்லை. அதே போன்று தற்சமயம் சிரியாவில் பெரியளவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையமும் குற்றம் சாட்டி அந்த நாட்டின் அரசினையே மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், அதைவிட கொடிய குற்றங்கள் ஈழத்தில் நடந்து கொண்டிருந்த போது ஐக்கிய நாடுகள் அவை ஏன் வேடிக்கை பார்த்தது?

போர், இறுதி நிலையை அடைவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே, முல்லைத்தீவின் கடற்கரையில் மிகப்பெரிய ரத்த குளியல் நடைபெறவிருக்கிறது என்று ஐ.நா.வின் அதிகாரி - ஐ.நா.வின் மனித நேய உதவிகளுக்கான துணைச் செயலர்- ஜான் கோம்சு முன்னறிவிததும் ஐ.நா மன்றம் எந்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுத்து ஏன் ஈழ மக்களை காப்பாற்ற முன்வரவில்லை?. ஐக்கிய நாடுகள் அவையும் அப்போது தன்னுடைய கடமையை நிறைவேற்றாமல் தவறிவிட்டது என்று அதனை குற்றம்சாட்டியுள்ளதுடன் அது குறித்தும் ஐக்கிய நாடுகள் அவை உள்ளக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் விசாரணை அறிக்கையே தெரிவித்தது. கொடிய குற்றங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று ஐ.நா.வின் ஆணையமும் தெரிவித்துவிட்ட பின்பும் ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் எந்த ஒரு நம்பத்தகுந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை?.

இக்கேள்விகள், ஐக்கிய நாடுகள் அவையின் நம்பத்தன்மையின்யையும் ஒருபக்க சார்பையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன அல்லவா? இதன்மூலம், ஐக்கிய நாடுகள் அவையும் அதன் உறுப்பு நிறுவனங்களும் வல்லரசு நாடுகளான ஏகாதிபத்தியங்கள் விரும்புவதற்கேற்பத்தான் செயல்படுகின்றனவே தவிர, உண்மையில் மனித உரிமைகள் மற்றும் ஐ.நா.வின் கொள்கை நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை நிறைவேற்றும் நோக்கில் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும் அல்லவா? அதனை மறைக்க வேண்டித்தான், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இப்பிரச்சினையில் தாங்கள் அக்கறையுடன் செயல்படுவதாக காட்டிக்கொள்வதற்கு முயல்கின்றன. ஏனெனில், ஐ.நா.அவை என்ற சட்ட அங்கீகாரம் வழங்கும் நிறுவனத்தினை முழுமையாக பயன்படுத்தி உலக அரசியல் போக்கினை தங்களது நலன்களுக்கு சாதகமாக வைத்திருக்கச் செய்து ஆதாயம் அடைந்து வரும் நாடுகள் அல்லவா அவை?

 தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்றாற்போன்று பன்னாட்டு அரசியல் நிகழ்வு போக்குகளை பயன்படுத்திக்கொள்ளும்; அமெரிக்கா, தெற்காசியாவிலும் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் இலங்கை, இந்திய அரசுகளை கையாள்வதற்கும் கிடைத்த ஒரு துருப்புச்சீட்டாகவே ஈழ மக்கள் இனப்படுகொலையை பயன்படுத்தப்போகிறது. அமெரிக்கா, ஈழப்போரின் போக்கில் கொடிய மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வந்த போதும் அவற்றை செய்மதி மூலம் துல்லியமாக அறிந்து வந்திருந்த போதிலும், அப்போரின் இறுதியில் மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட இருக்கின்றனர் என்பதை நன்கறிந்தும் அவற்றைத் தடுக்க ஒரு சிறிய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற உண்மையை விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. போரின் இறுதி நாட்களில், ஒரு பெரிய பேரழிவை தடுக்கும் நோக்கத்திலாவது உலகம் எவ்வாறாயினும் தலையிடும் என்று அப்போர்க்களத்தில் கொல்லப்படவிருந்த மக்களின் கடைசி நம்பிக்கையையும் பொய்பிக்க வைத்தது. இது ஒன்றே, அது ஈழ மக்கள் மனித உரிமை மீறல்களை எதிர்க்கின்ற நாடல்ல என்பதைக் காட்டும். மேலும் அம்மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கெதிராக, அம்மனித உரிமை மீறல்களையே பயன்படுத்தி அவற்றை மிரட்டி தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்படுமாறு செய்து வருகிறது என்பதுதான், அமெரிக்கா பேசும் மனித உரிமை அரசியலின் உள்ளடக்கமே தவிர அம்மனித உரிமைகள் மீறலால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளோ துயரங்களோ அல்ல!.

உலகில் ஓடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்து, அவர்களுக்கு அமெரிக்கா நியாயம் பெற்றுத் தந்தாக நாம் வரலாற்றில் பார்க்க இயலாது. அமெரிக்காவின் மனித உரிமை ஆதரவு வேடத்தை நம்புவதற்கு கசோவா போன்ற விதிவிலக்குகள் உதாரணங்களாகிவிடாது. சொத்துரிமை, மத உரிமை, தொழில் செய்யும் உரிமை, வணிக நிறுவனங்களின் வியாபார உரிமை, உலக நாடுகளில் யாவற்றிலும் நுழைந்து அவற்றின் வளங்களை கைப்பற்றி சுரண்டும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் பொருளாதார உரிமைகள்தான் அமெரிக்கா பேசும் மனித உரிமைகள். உணவு, கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கான உரிமைகள், தொழிற்சங்க உரிமை, சமத்துவத்திற்கான உரிமை, சுரண்டலுக்கெதிரான உரிமை, இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான உரிமை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான உரிமை உள்ளிட்ட மக்களின் கூட்டுரிமைகளையும் தேசிய இனங்களின் சுயநிர்ண உரிமையையும் முழுமுச்சில் எதிர்ப்பதோடு மாத்திரமல்லாமல் அவற்றை ஒடுக்கும் அரசுகளுக்கு துணை நிற்பதிலும் அமெரிக்காதான் முதல் அரசு. இதுதான் அதனுடைய மனித உரிமை அரசியலின் உண்மை முகம்.

கிடைக்கின்ற விபரங்களை வைத்து நாம் கீழ்கண்டவாறுதான் யூகிக்க முடிகிறது. ஈழ மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் ஒருபோதும் உலகிற்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுவதை தடுக்க வேண்டும். அக்குற்றங்கள் அவ்வாறு அறிவிக்கப்படுமானால், அக்குற்றத்தை செய்த இலங்கை அரசு மாத்திரமே குற்றவாளி அல்ல என்பதுடன் அக்குற்றத்தை செய்வதற்கு இந்தியா முழுமையாக துணை நின்றது என்பதும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அக்குற்றங்கள் நிறைவேறுவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி கொடுத்த வகையிலும், அப்போரின் போது, அக்குற்றங்களை இழைத்தத்தரப்பை ஆதரித்த வகையிலும் காரணமாக இருந்துள்ளன என்பதும் சேர்ந்து தெரிய வந்து விடும். எவ்வாறாயினும், தமிழ் ஈழமக்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு அவர்களது தனி ஈழ அரசு என்ற தேவை உலக மக்களால் ஏற்று வலியுறுத்தப்படும் நிலைமை உருவாவதை தடுக்க வேண்டும். எனவேதான், இந்த குற்றங்கள் முழுமையாக விசாரணை செய்யப்படாமல் தடுக்கப்படவேண்டுமென்பதில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இந்தியாவும் கூட்டாக பணியாற்றுகின்றன.

அதன்படிதான், இலங்கை அரசு அதன் அரசியலமைப்புச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13-வது திருத்தத்தினை அமுல்படுத்த வேண்டுமென்றும், அதுதான் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை பெற்றுத்தரும் என்றும் கூறி இந்திய அரசு, ஈழப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக ஒருபுறம் மும்முரமாக வேலை பார்க்கிறது. மற்றொரு புறத்தில், இலங்கை அரசு ஈழ மக்கள் மீது செய்துள்ள இனப்படுகொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் முழுமையாக விசாரணை செய்யப்படாமல் தடுக்கின்ற வகையில், அமெரிக்கா மனித உரிமை ஆணையத்தில் தனது பணியினை செய்கிறது. அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் அதிகாரப்பரவலாக்கல் என்பதையே ஈழமக்கள் உரிமை போராட்டத்திற்கு தீர்வாக முன்வைக்கப்படுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இவ்வாறு இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கிடையே செய்து கொள்ளப்பட்டுள்ள வேலைப்பகிர்வினை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்யப்பட்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தின் விபரங்களை யார் அறிவர்? இறுதியில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்கக்கூட செய்யலாம். அல்லது அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது அதில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிப்பதாக காட்டலாம். அதன் மூலம், இந்திய அரசு ஈழ மக்கள் மீது இலங்கை அரசால் நடத்தப்பட்டுள்ள கொடிய குற்றங்களுக்கு துணை நின்றதை நிறுத்திவிட்டு, அவர்களது உரிமைகளுக்கு முன்நிற்கவந்துள்ளது போன்று காட்டிவிட முடியும். இங்குள்ள தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும் தங்களால்தான் இந்திய அரசின் நிலைபாட்டை மாற்ற முடிந்ததாக காட்டிக்கொள்ள முடியும்! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் கூட அந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென்று கூறுவதை கவனியுங்கள்! ஈழ மக்களின் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கை அரசை இன்று வரை ஆதரிக்கும் காங்கிரசு, இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறது என்பதும் ஆரிய-சிங்கள இனப்படுகொலை அரசிற்கான கோயாபல்ஸ் பணியை இன்று வரை செய்து வரும் இந்து நாளிதழ் கூட இந்த தீர்மானத்திற்கு ஆதரவான வகையில் எழுதி வருகிறது என்பதும், இத்தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்பதற்கு சான்று பகர்பவவை அல்லவா?

ஆக இரண்டு முனைகளிலும், ஈழத்தமிழர்கள் ஏமாற்றப்படுவதற்கும் வஞ்சிக்கப்படுவதற்கும் அமெரிக்க இந்திய ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டு செயல்படுகின்றன. மக்களின் உரிமைப் போராட்டங்களை, தங்களது நலன்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் இந்த ஏகாதிபத்தியங்கள், அந்தப் போராட்டங்களின் போதான கொடிய மனித பேரழிவுகளை கண்டும் தடுப்பதில்லை என்பதோடு, அவற்றிற்கு துணை நிற்கவும் செய்கின்றன. இறுதியில், அம்மனித பேரழிவுகளை உண்டாக்கிய குற்றங்கள் குறித்த விசாரணையை வேண்டும் நியாயத்திற்கான அரசியல் போராட்டங்களையும் கூட தங்களது நலன்களுக்கு சாதகமாகவே பயன்படுத்துகின்றன என்பதுதான் ஈழ இனப்படுகொலையிலும் நடக்கிறது.

தமிழ் ஈழ மக்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட கொடுமைகளைவிட வேறு என்ன பெரிய கொடுமைகளை இனிமேல் எதிர்கொண்டு விடப்போகிறார்கள்? அக்கொடுமைகளை, அவர்கள் மீது நடத்தப்படுவதற்கு பலவகையில் துணைபுரிந்த ஏகாதிபத்திய நாடுகளே அவர்களது உரிமைகளை மீட்டுக்கொடுக்கும் என்று எவ்வகையில் நம்புவது?

ஈழ மக்கள் இனப்படுகொலை குறித்த ஒரு பன்னாட்டு நடுநிலை விசாரணை என்பது ஒன்று நடைபெறாமல் இருந்து வருவது கூட, அக்குற்றங்களுக்கு நியாயத்தை தேடும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதற்கு வாய்ப்பாக இருக்கும். அவற்றையும் முடக்கும் நோக்கம்தான் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் அடங்கியுள்ளது.

ஈழ மக்களின் போராட்டங்களின் மூலம் நியாயம் கிடைத்து விடக்கூடாது என்று தடுத்த அதே அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள்தான், அப்போராட்டத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் குற்றங்களின் மூலமாகக் கூட அவர்கள் தரப்பு நியாயம் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிலைமை உருவாகிவிடுவதை தடுக்கும் பணிகளையும் செய்கின்றன. அப்பணிகளில் ஒன்றுதான் அமெரிக்கா மனித உரிமை அவையில் கொண்டு வந்துள்ள தற்போதைய தீர்மானமாகும்.

- சு.அருணாசலம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It