டி.கே.ரங்கராஜனுக்கு சி.மகேந்திரன் சூடு

மார்க்சிஸ்ட் கட்சி இப்போது பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் எம்.பி-யுமான டி.கே.ரங்கராஜன், '' இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை" என்று ஒரு பேட்டியில் தெரிவிக்க... தமிழ்நாடெங்கும் கண்டனக் கணைகள். அவரது கட்சிக்குள்ளும் பரவலாக எதிர்ப்பு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும் எழுத்தாளருமான சி.மகேந்திரனிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டோம்.

''டி.கே.ரங்கராஜன் என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னார் என்று புரியவில்லை. ஆனால், இலங்கை இனஅழிப்புப் போர்க் குற்ற விவகாரத்தை இலங்கைக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. எந்த ஒரு நாடும் பிரச்னைகளின்போது ஒரு வரம்பைத் வரம்பைத் தாண்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஐ.நா. அவை, சர்வதேச நீதிமன்றம், ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்ற உலகளாவிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அமைப்புகளை உருவாக்கியதில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குப் பெரும்பங்கு உண்டு.

ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டுக்குள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றால், பல நாடுகள் காட்டுமிராண்டிக் காலத்துக்குச் சென்று விடும் என்ற காரணத்தால்தான், ஐ.நா. போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதை வேண்டாம் என டி.கே.ஆர். சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை, அந்த நாட்டு அரசாங்கமே அதைத் தீர்க்காது என்பதற்கு நிறைய ஆதாரங்களைச் சொல்ல முடியும். அங்கு நடப்பது தொடர்ச்சியான வரலாற்று இனஅழிப்புதான். தமிழ்ச் சமூக அடையாளத்தை முற்றாக அழித்து நீக்கிவிட வேண்டும் என்பதுதான் அங்கு உள்ள சிங்கள இனவெறியர்களின் தொலைநோக்குத் தீர்மானம். இந்தக் கொள்கையைப் பலப்படுத்துவதற்கு இலங்கையில் உள்ள ஆரிய பௌத்தம் அவர்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது.

சுதந்திரத்துக்குப் பின் தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்படும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சுதந்திர இலங்கையில் தமிழ் மக்கள் மீதுதான் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தனைக்கும் சில நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் உழைத்துக் கொடுத்த தேயிலை, ரப்பர், காபி தோட்டங்கள்தான், இலங்கைக்கு பெரும் அந்நியச் செலாவணியைத் தேடித்தருகின்றன. ஆனால், அந்த மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்தால் சிங்கள இனப் பெரும்பான்மைக்கு ஆபத்து வந்துவிடும் என்று, முதல் கட்டமாக மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறித்து, அகதிகள் ஆக்கியது இலங்கை அரசு.

அமைதி வழியில் 35 ஆண்டுகளும் ஆயுதப் போராட்ட வழியில் 25 ஆண்டுகளும் தமிழ் மக்கள் போராடியது, அவர்களின் அடிப்படை அரசியல் உரிமைக்காகத்தான். இதை யாரும் மறுக்க முடியாது. 2008-ல் யுத்தம் தொடங்கியவுடனே ஐ.நா. பார்வையாளர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக இலங்கையைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். மூன்று இடங்களைப் பாதுகாப்பு வளையம் என அறிவித்து, உயிர் காக்க அங்கு ஓடிச் சென்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அத்தனை தமிழ் மக்களையும், சாட்சிகளே இல்லாதபடி கொன்று ஒழித்தார்களே. 2009 கடைசி நாளில் மட்டும் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதை சேனல் 4 தொலைக்காட்சி தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியும், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரங்கராஜனுக்கு எப்படித் தெரியாமல் போனது?

போர் முடிந்தபிறகு, இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்காகத்தான், ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் வல்லுநர் குழுவை அமைத்தார். எனவே, இலங்கையே விசாரணை நடத்த வேண்டும் எனச் சொல்வது, கொலைகாரனையே நீதிபதி நாற்காலியில் அமர வைத்து, தீர்ப்பு எழுதச் சொல்வதைப் போலத்தான் என்பதை ரங்கராஜன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும், உலகம் எங்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை கட்டாயம் வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவது, கம்யூனிஸ அமைப்புகளின் அடிப்படைக் கொள்கை. இப்படி இருக்க, ஈழ மக்களின் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான ரங்கராஜன் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, ஆச்சர்யமாகவும் முரண்பாடாகவும் இருக்கிறது. எது எப்படியாயினும், இன அழிப்புப் போர்க் குற்றவாளியான ராஜபக்ஷேவை நீதிபதி ஆக்க முடியாது'' என்று பட்டென முடித்தார், சி.மகேந்திரன்.

மார்க்சிஸ்ட் தோழர்கள் என்ன கொள்கை விளக்கம் சொல்லப் போகிறார்கள்?

- இரா.தமிழ்க்கனல்

(நன்றி: ஜூனியர் விகடன்)

Pin It