கர்நாடக சட்டசபையில் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் 'நீலப்படம்' பார்த்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதுவும் 'கலாச்சார காவலர்கள்' என்று தங்களை அடையாளங் காட்டிக் கொள்ளும் இந்த இராமபக்தர்களின் லீலை மக்கள் மத்தியில் முக்கிய பேசும் பொருளாகியிருக்கிறது. ஆண்-பெண் நட்பையும், காதலையும் கண்டிப்பதன் மூலமும், கட்டுப்படுத்துவதன் மூலமும், பண்பாட்டை காப்பாற்றத் துடிக்கும் காவிக் கும்பலின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. பெண்ணை பொருளாகப் பாவித்து அவளைப் பாதுகாக்க வேண்டியதை கடமையாக எண்ணும் உடைமைத்துவ சிந்தனையே இந்துத்துவ மனநிலை. அடிப்படைவாதிகள் பெண்ணை இருவிதமாகப் பிரிக்கிறார்கள். (1) பாதுகாக்கப்பட வேண்டியவள் (தாய், தாரம், தங்கை) (2) போகப் பெருளாக மாறி மகிழ்ச்சி தருபவள் (விலைமாதர், திரைப்பட நடிகை, ரத்த உறவில்லாத பல பெண்கள்). பெண்ணை வீட்டிற்குள் வைத்து பாதுகாக்கும் மனநிலையுடைய ஆண், கண்டிப்பாக தெருவில் செல்லும் பெண்களை நீலப்பட நாயகிகளாகத்தான் கற்பனை செய்வான். பெண்ணை சக உயிரியாக நினைக்க மறுக்கும் ஆணாதிக்க உளவியலை மறுபார்வைக்கு உட்படுத்த வேண்டிய தருணம் இது.

பாலியக் கல்வியும், பகுத்தறிவு உணர்ச்சியும்

இந்திய சமூகத்தில் ஒரு குழந்தையானது சிறுவயதிலிருந்தே 'பாலியல்' குறித்த சொல்லாடல்களையும், செயல்பாடுகளையும் கவனித்துக் கொண்டே வளர்கிறது. ஆனால், பாலியல் குறித்த வரையறையோ, கருத்துப் புரிதலோ எக்காலத்திலும், எந்த வகுப்பறையிலும் பயிற்றுவிக்கப்படுவதில்லை. புராணங்கள், இதிகாசங்கள், தமிழ்த் திரைப்பட பாடல்கள், ஊடகங்கள் என குழந்தைகளைச் சுற்றி இயங்கும் சமூக வெளி பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆண் தலைமையை முன்னிறுத்தும் 'இந்துத்துவ' அமைப்பில் பெண்ணை தீண்டத்தகாதவளாக சித்தரிக்கும் போக்கு உள்ளது. இந்த கருத்தியலை உள்வாங்கிக் கொண்டு வளரும் பெண்குழந்தை, ஆணை திருப்திப்படுத்தும் பொம்மையாகவே (அழகின் மூலமும், சேவையின் மூலமும்) தன்னை கருதிக் கொள்கிறாள். அந்த மரபிற்குள் அடங்காமல் வெளியேறும் பெண்களை ஆண்சமூகம் பெண்களாக ஏற்றுக் கொள்வதில்லை. பாலின சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த சமூகத்திற்கு 'பாலியல் கல்வியே' அருமருந்தாக அமையும். ஆண்-பெண் உடல் குறித்த வெளிப்படையான கல்வியை சிறுவர்களுக்கு போதிக்க வேண்டும். 13வயது நிரம்பிய மாணவர்களுக்கு 'பாலியல் கல்வி' அவசியம் தேவை.

 ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பிலிருக்கும் அறிவியல் பாடத்தினை அறிவியல் ஆசிரியர்கள் முறையாக நடத்துவதில்லை. இருபாலர் படிக்கும் பள்ளிகளில் பிறப்புறுப்பு சார்ந்த பாடங்களை தவிர்த்துவிட்டு செல்லும் ஆசிரியர்களும் உண்டு. ஆண் உறுப்பு, பெண் உறுப்புகளைப் பற்றி சிறுவர்களிடம் பாடம் நடத்தினால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட மாட்டார்களா என்று திருவாளர் வெகுசனம் நம்மிடம் கேள்வி கேட்பார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை நன்கு உணர வேண்டும். இன்று பதிமூன்று வயது சிறுவர்களுக்கு எல்லாவித கெட்டவார்த்தைகளும் தெரியும். பெரும்பாலும், அதில், ஆண், பெண் பிறப்புறுப்பு சார்ந்த கெட்ட வார்த்தைகளே அதிகம். கிருஷ்ண லீலையும், கங்கா-சிவன் உறவையும், பக்தியாகச் சொல்லித் தரும்போது ஏற்படும் பாலியல் உணர்வு குழந்தைகளைப் பாதிக்காதா? தசரதனின் மனைவிகளைப் பற்றியும், இந்திரனின் காமலீலைகளையும், கோபியர்கள் குளிப்பதை கண்ணன் கண்டு மகிழ்ந்ததையும் 'பதினெட்டு வயதிற்கு மேல் வந்தவர்களுக்கு மட்டும்' (adults only) என்று இந்த்துவவாதிகள் அறிவிப்பார்களா? இது போன்ற கதைகளும், கற்பிதங்களும் தான் மாணவர்களிலிருந்து, மந்திரிகள் வரை மனதைப் பாழ்படுத்தியிருக்கின்றன என்பதை உணர வேண்டும்.

இந்து மத புராணங்கள் மனதை சிந்திக்க விடாமல் சிறைப்படுத்துகினறன. ஆனால் பாலியல் கல்வி மனதை நெறிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இரண்டு வயது குழந்தை, அறியாமல் தன் பிறப்புறுப்பை தீண்டும்போது, கோபப்ப்படும் பெற்றோர்கள் அதிகம். அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் அடித்தே விடுவார்கள். எல்லா உறுப்புகளையும் போல் செல்களால் ஆன பகுதி தான் அது. ஆனால் பிறப்புறுப்பின் மீது இச்சமூகம் ஏற்றி வைத்திருக்கும் புனிதக் கோட்பாடும், அருவறுப்பு சிந்தனையும் குழந்தையை அதட்டச் சொல்கிறது. 15வயது பெண் மாதாந்திர தொந்தரவு காரணமாக தனக்கு தேவைப்படும் நாப்கினை தனது தம்பியிடமோ, அண்ணனிடமோ கேட்கும் உரிமையை எத்தனை வீடுகளில் கொடுத்திருக்கிறார்கள்?

அக்காவின் கழிவு இரத்த்தை அறிவியல் பூர்வமாக உணர்ந்து கொள்ளும் தம்பிகள் எத்தனை பேர்? மாதாந்திரப் பிரச்சனையை முன்வைத்து பெண்ணைத் தள்ளி வைக்கும் ‘இந்து' சமூக அமைப்பில் ‘பாலியல் கல்வி' கட்டாயமாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்.

பாலியல் கல்வி, பெண் விடுதலைக்கான திறவு கோல்

பாலியல் என்பது ஆணைப் பொறுத்தவரை 'வேட்கையாகவும்', பெண்ணைப் பொறுத்தவரை 'கட்டுப்படுத்தப்பட' வேண்டிய ஒன்றாகவும், ஆண் உலகம் சித்திரிக்கிறது. பெண்ணை ஆண் நுகரும் பொருளாகவே திரையுலம் சித்தரிக்கிறது. பெண் உறுப்புகளை மறைக்கும்போது, புனிதம் கற்பித்து தன்னுடைய உடைமையாக்கிக் கொள்ளும் ஆண் உலகம், உடல் உறுப்பை வெளிப்படுத்தும்போது அதனை சந்தையாக்கி வணிகம் செய்கிறது.

உடலுறவை சித்தரிக்கும் ஆண் மொழிகள் அனைத்தும பெண்ணை ஓர் அசைவற்ற பொருளாகவும், ஆண் அதன் மீது விசையை செலுத்தும் கருவிபோலவும் சித்தரிக்கின்றன. ஆண்-பெண் சமத்துவத்திற்கு உடனடியாக பாலியல் கல்வியை துவங்குவதற்கான முன்முயற்சியை எடுக்க வேண்டும். திருநங்கைகளுக்கான உடலமைப்பு குறித்தோ, அவர்களின் பாலியல் தேவை குறித்தோ பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. வருங்கால தலைமுறையினராவது பாலின அறிவு பெற்று சமத்துவ சிந்தனையுடன் வளர வேண்டும்.

ஆணாதிக்கம் தன்னுடைய வெறியாட்டத்தை பெண்ணுடலிருந்துதான் தொடங்குகிறது. அடிப்படைக் கல்வி அறிவு, பாலியல் விழிப்புணர்வில்லாத பெண்கள் அதிக அளவில் ஆண் வக்கிரத்திற்கு இரையாகின்றனர். மேற்கத்திய நாடுகளில் 6 வயது குழந்தைக்கு Good touch, Bad touch என தொடுதலின் வித்தியாசத்தை சொல்லித் தருகின்றனர்.  ஆனால், இங்கு நம் மாணவர்களுக்கு 13 வயதில் கூட பாலியல் குறித்த அறிமுகத்தை நாம் செய்து வைப்பதில்லை. பாலியல் கல்வியின் மூலம் பெண் விடுதலை விழிப்புணர்வு ஏற்படும்.

பள்ளிப் பருவத்தில் பாலியல் கல்வி கற்றிருந்தால் பாரதிய சனதா அமைச்சர்கள் சட்டசபையில் இப்படி கீழ்த்தரமாக நடந்திருக்கமாட்டார்கள். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பாலியல் கல்வி கற்றிருந்தால் பாரதிய சனதா போன்ற அடிப்படைவாதக் கட்சிகளின் பெண்ண்டிமைச் சிந்தனைகள் இம்மண்ணில் எடுபடாமல் போயிருக்கும்.

Pin It