சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியையாகப் பணிபுரிந்த உமா மகேஸ்வரி, தன்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் முகமது இர்பான் எனும் மாணவனால் வகுப்பறையிலேயே கொடூரமாகக் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குழந்தை வளர்ப்பின் சீர்கேட்டையும், இந்தியக் கல்விமுறையின் அவலத்தையும் அடையாளம் காட்டுவதாய் அமைந்துள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்னர் இவ்வளவு சிறிய வயது மாணவன் தன்னுடைய ஆசிரியரைப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே கொன்ற சம்பவம் வேறு ஏதேனும் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. எனினும் இந்தப் படுகொலை இந்தியச் சமூகம் மாறி வருவதை முன்னறிவிக்கும் ஓர் அபாய எச்சரிக்கையாகவே தோன்றுகிறது.

இது அந்த மாணவனின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினையால் உண்டானதல்ல. இதற்குப் பின்னர் கல்விமுறையின் சிக்கல்களும் சமூக அமைப்பின் வன்முறைகளும் உள்ளன. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனுக்கு எங்கிருந்து வருகிறது இந்தக் கொலைவெறி? கண்டிப்பாகச் சமூகத்திடமிருந்துதான். தற்போதைய சமூகம் கொலைகளால் நிரம்பியது. குழந்தைகள் தம்மைச் சுற்றி நடப்பவற்றை ‘போலச் செய்தல்’ (இமிடேசன்) எனும் முறையில்தான் தம்முடைய நடவடிக்கைகளை வடிவமைத்துக் கொள்கின்றன.

தற்காலத்திய குழந்தைகளை ஊடகங்கள்தான் வளர்க்கின்றன. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை வளர்க்கப் போதுமான பொறுமை இருப்பதில்லை. எனவே குழந்தை வளர்க்கும் பணியை எளிதாக ஊடகங்களிடம் ஒப்படைத்துவிட்டு விலகிக் கொள்கின்றனர். குழந்தையை மகிழ்விக்கவும் பொழுதுபோக்கவும் அதன் வெளியை ஊடகங்களால் நிரப்பிவிட்டு தங்கள் பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்கின்றனர்.

அழுகின்ற குழந்தைக்கு நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டும் அம்மாவை இன்று உலகின் எந்த மூலையிலும் பார்க்க முடியாது. டி.வி.யை போட்டுவிட்டு ‘இதைப் பார்த்துக் கொண்டே சாப்பிடு’ என்று கூறிவிட்டுச் செல்வதுதான் தற்போதைய வழக்கம். இதனால் அக்குழந்தை டி.வி.யில் வரும் புனையப்பட்ட கற்பனை உலகுக்கும், நிஜமான உலகுக்கும் வேறுபாடு தெரியாமலே வளர்கிறது.

அது நிஜமாக நினைக்கும் அந்தக் கற்பனை உலகில் பார்க்கும் குடும்ப உறவுகள், சமூக நிகழ்வுகள், வன்முறைகள், ஆபாசங்கள், நகைச்சுவைகள் ஆகியவற்றுடனே அதன் மன உலகம் விரிவடைகிறது. டி.வி. மட்டுமின்றி சினிமா, வீடியோ விளையாட்டுகள் மற்றும் புத்தகங்களுக்கும் இதில் பங்குண்டு. உலகில் ஒவ்வொரு குழந்தையும் தினமும் குறைந்தது இருபது முதல் எழுபது முறை யாராவது கொலை செய்யப்படுவதை பார்க்கின்றன அல்லது படிக்கின்றன.

குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் ஒரு மசாலா படத்தை விட அதிகளவில் வன்முறை இடம்பெறுகிறது. கொலைவெறியுடன் மவுசைத் துரத்தும் மிக்கி, எதிரிகளைச் சராமரியாகச் சுட்டுத் தள்ளும் பவர் ரேஞ்சர்கள், பாய்ந்து பாய்ந்து வில்லனைத் துவைக்கும் ஸ்பைடர்மேன் என்று வன்முறைக்கு அவற்றில் பஞ்சமேயில்லை. சினிமாவில் தங்கள் விருப்பக் கதாநாயகன் வில்லன்களை அரிவாள், துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு போன்ற கொடூரமான ஆயுதங்களுடன் தாக்கி அழிப்பதைக் கண்டு மகிழ்கின்றனர். அத்துடன் அக்கதாநாயகன் செய்வது போன்ற பாவனைகளை செய்து பார்த்து மகிழ்கின்றனர். பள்ளியாசிரியையைக் கொலை செய்த இர்பான் ‘அக்னி பாத்’ எனும் இந்திப் படத்தைப் பலமுறை பார்த்தாகவும் அதிலிருந்தே இச்செயலுக்குரிய உத்வேகத்தை அடைந்ததாகவும் சொல்லியிருக்கிறான்.

கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் நடக்கும் சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி நகைச்சுவைக் காட்சிகளிலும் கூட ரத்தம் வருமளவு தாக்கிக் கொள்வது, மற்றவர்களை உதைப்பது, குண்டு வெடிப்பில் ஆடைகள் கிழிந்து கருகிப் போய் நிற்பது போன்ற காட்சிகளைச் சிரித்துக் கொண்டே வெகு இயல்பாக ரசிக்கக் கற்றுக் கொண்டுவிடுகின்றன குழந்தைகள். பாடல்களிலும் காதல் உணர்வைச் சொல்வதற்குக் கூட வன்முறை வார்த்தைகளையே கவிஞர்கள் பயன்படுத்துகின்றனர். (அன்பே அன்பே கொல்லாதே, செம்பூக்கள் தீண்டும் போது செத்துச் செத்துப் பூப்பூக்கிறேன், முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி, கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே, என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா, நீ கொன்னா கூட குத்தம் இல்ல நீ சொன்னா சாகும் இந்த புள்ள, எவன்டி உன்னைப் பெத்தான் கைல கெடச்சா செத்தான், உசிரே போகுது, கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன, ஒய் திஸ் கொலைவெறி என்று ஏராளமாய் உதாரணங்கள் சொல்லலாம்.)

கொலை எனும் குற்றச் செயல் காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் குழந்தைகளைச் சுற்றிச் சுற்றி வருகிறது. இது ஒரு கட்டத்தில் அக்குழந்தையின் பாவனையாக மாறிப் பின்னர் செயலாகப் பரிணமிக்கிறது. எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட சக மாணவர்களிடம் கொன்னுடுவேன், குத்திப்புடுவேன் போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதைக் காணலாம்.

டி.வி., சினிமா, வானொலி போன்றவற்றவின் வழியாகப் பார்த்து, கேட்டுப் பழகும் வன்முறை உணர்வுகளைச் செயல் வடிவில் பழகிப் பார்க்க அவற்றுக்கு வீடியோ விளையாட்டுகள் உதவுகின்றன. குழந்தைகளுக்கான இவ்விளையாட்டுகள் அவற்றின் வன்முறை உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதற்கேற்ற வகையில் அமைகின்றன. உதாரணமாகக் குத்துச் சண்டை விளையாடும் குழந்தை அப்போட்டியில் தன்னையும் ஒரு வீரர் என்கிற நிலையில் இருத்திக் கொள்ளும் மாயநிலை வீடியோ விளையாட்டில் சாத்தியப்படுகிறது. எதிரியை பலம் கொண்ட மட்டும் குத்துவதில் மகிழ்ச்சியடையும் அக்குழந்தை, அதற்குரிய புள்ளிகள் கிடைக்கும் போது கூடுதல் உத்வேகம் அடைந்து மூர்க்கத்தனமாகத் தாக்கும் மனவெறிநிலையை அடைகிறது.

அண்மையில் குழந்தைகளுக்கான ஒரு வீடியோ விளையாட்டைக் கண்டு மனம் அதிர்ந்தது. அவ்விளையாட்டில் ராணுவ வீரர் எனும் மாயப்பாத்திரத்தை ஏற்கும் குழந்தை, மறைந்து திரிந்து பயங்கரவாதிகளைத் (வழக்கம் போல இஸ்லாமியப் பயங்கரவாதிகள்) திறமையுடன் சுட்டுத் தள்ளுவதாக அமைந்திருந்தது. அதில் குழந்தை ஒரு பட்டனை அழுத்தியதும் பயங்கரவாதியின் தலை வெடித்து ரத்தம் சிதறி மடிகிறார். பயங்கரவாதியை வீழ்த்திய (கொலை செய்த) மகிழ்ச்சியை அக்குழந்தை குதூகலமாகக் கொண்டாடுகிறது. அந்த நேரத்தில் தீவிரவாதியை விட ஆபத்தானதாக அக்குழந்தை காட்சியளிக்கிறது.

இந்தியச் சமூகத்தில் குறிப்பாக நகர்ப்புறங்களில் குழந்தைகள் வளரும் சூழல் இப்படித்தான் மாறிப்போயுள்ளது. கொலை செய்வதை இயல்பான ஒன்றாகப் பார்க்கும் மனப்பாங்கை குழந்தைகளிடம் விதைத்துவிட்டு, அது பதின்வயதை அடையும் போது மற்றவர்களைத் தாக்குவது, ஆசிரியரைக் கொல்வது போன்ற செயல்களில் ஈடுபடும்போது ‘அய்யய்யோ.. நாடு இப்படி ஆகிப் போச்சே’ என்று புலம்புவது எவ்வளவு போலித்தனம்? அதைத்தான் சமூகம் செய்கிறது.

ஆசிரியையைக் கொன்ற முகமது இர்பானின் மனநிலையில் வினோதம் ஏதும் இல்லை. இது போன்ற சமூகத்தில் இன்னும் ஏராளமான இர்பான்கள் உருவாகலாம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைச் செய்திகளில் பார்க்கலாம். வகுப்பறையில் ஒரு சிறுவன் சக மாணவர்களைத் துப்பாக்கியால் வெறித்தனமாகச் சுடுவது போன்ற செய்திகள் அங்கு இயல்பானவை. அந்நாட்டின் தேசிய மனநிலையே கொலை செய்வதுதான் என்று மாறியிருக்கிறது.

ஈராக் மீது போர் தொடுத்து அங்குள்ள மக்களையும், வீரர்களையும் கொன்று குவிப்பதை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்கும் மனப்பான்மையை குழந்தைகள் மனத்தில் தேசப்பற்று என்கிற பெயரில் அமெரிக்கா விதைத்தது. இதன் தொடர்ச்சியில் தங்கள் நாட்டை எதிர்க்கும் எந்த நாட்டு மக்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற மனநிலையை அக்குழந்தைகள் எளிதாக அடைகின்றனர். துப்பாக்கி ஏந்திய வீரர்கள்தான் அவர்களின் ஆதர்ச கதாநாயகர்கள். நாட்டை எதிர்ப்பவர்களை அழிக்கும் தங்கள் நாயகர்களின் வழியில் தன்னை எதிர்ப்பவர்களை அழிக்கத் துடிக்கும் துப்பாக்கி ஏந்திய சிறுவர்கள் அங்கு பெருகிவிட்டனர்.

எல்லாவற்றிலும் அமெரிக்கப் பண்பாட்டைப் பின்பற்றத் துடிக்கும் இந்திய நகர்ப்புறத்து மேல்தட்டுச் சமூகம், தனக்குள் இர்பான் போன்ற இளம் கொலையாளிகள் உருவாவதை ஏற்கத்தான் வேண்டும்.

பள்ளியாசிரியை கொலைச் சம்பவத்தில் அடுத்த சிக்கல் கல்விமுறை. அனைவருக்கும் கட்டாயக்கல்வி என்பதை கொள்கையளவில் கூட ஏற்றுக் கொள்ளாத தனியார் கல்விமுறை, கட்டாயப்படுத்தும் கல்வியை முன்வைக்கிறது. குழந்தைகளின் விருப்பத்திற்குக் கொஞ்சமும் இடம் தராத கல்விமுறை அவர்களை வெறுப்படையச் செய்கிறது. எதைப் படிக்க வேண்டும் என்பதைக் குழந்தைகள் தீர்மானிப்பதில்லை. சொல்லப் போனால் அவர்களின் பெற்றோர்களும் கூட தீர்மானிப்பதில்லை. உண்மையில் உலக முதலாளிகளே இதனைத் தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள்.

தங்களுடைய பொருளாதார நலனுக்குத் தேவையானவற்றையே அவர்கள் கல்வி என்று போதிக்கின்றனர். அவற்றைக் கற்பதையே வெற்றிக்கான பாதையாகவும், அவ்வாறு கற்பவர்களை முன்மாதிரிகளாகவும் ஊடகங்களின் வழியாகத் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இதனால் பெற்றோர்கள் சில குறிப்பிட்ட கல்விப் பிரிவுகளை மட்டுமே இலக்காக வைத்து எல்.கே.ஜி. வகுப்பிலிருந்தே குழந்தைகளை வளர்க்கத் தொடங்குகின்றார்கள். அக்குழந்தையின் விருப்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் தன்னுடைய விருப்பம் என்னவென்றே அந்தக் குழந்தை தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் வளர்கிறது.

தனியார் பள்ளிகள் இச்சூழலைத் தங்களுடைய லாபநோக்கில் பயன்படுத்தி அறுவடை செய்கின்றன. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை முன்வைத்துக் குழந்தைகளிடம் மதிப்பெண் நோக்கிய கல்விமுறையைத் திணிக்கின்றன. பாடத்திட்டம் எனும் ஒரு வட்டத்திற்குள் இருந்துகொண்டு நல்ல மதிப்பெண் எடுக்காத குழந்தைகளை வாழவே தகுதியற்றவர்கள் போல் அவை திரும்பத் திரும்பச் சொல்லி நம்ப வைக்கின்றன. அத்துடன் அம்மாணவர்களை ஆசிரியர்களின் வழியாகத் தண்டிக்கவும் செய்கின்றன.

தன்னுடைய மனநிலைக்கு ஏற்புடையதாக இல்லாத பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவர்கள், அதில் போதுமான மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் போகும் நிலையில் தங்கள் வாழ்க்கை குறித்த சுய பிரக்ஞையை அழித்துக் கொள்கின்றனர். தனக்கென்று எதிர்காலம் இல்லை என்று உறுதியாக நம்பும் மாணவன், நிகழ்காலத்தைப் பாழாக்கத் தொடங்குகிறான். தனக்காக மற்றவர்கள் உருவாக்கிய இலக்கை அவன் மதிப்பதில்லை. அதை அடைவது அவனுக்குக் கடினமானதாக இருப்பதால் அதைத் தூக்கியெறிந்துவிட்டு இலக்கின்றி வாழத் தொடங்குகிறான். அதில் இன்பமும் காண்கிறான்.

இச்சூழலில், தான் மட்டுமே உலகில் முக்கியமானவனாகவும் தனக்கு எதிரான அனைவரும் தேவையில்லாதவர்களாக அவனுக்குத் தோன்றுகிறது. தன்னை எதிர்ப்பவர்களை அழிக்கத் துடிக்கும் மனநிலை அவனிடம் வேரூன்றுகிறது. யாரோ நிர்ணயித்த இலக்கை அடையும்படித் தன்னைக் கட்டாயப்படுத்தும் எல்லோரையும் எதிரியாகப் பார்க்கப் பழகுகிறான். சரியாகப் படிக்காததால் திட்டிய உமா மகேஸ்வரியை அழிக்க நினைத்த இர்பானின் மனநிலை இதுதான்.

இப்படுகொலை தனிப்பட்ட நிகழ்வன்று; சமூக நிகழ்வு. கல்விமுறையும் குழந்தைகளின் வளர்ப்புமுறையும் மாறாதவரை இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். இந்தியச் சமூகம் அப்படிப்பட்ட ஒரு பரிணாமப் பாதையில்தான் பயணிக்கிறது. இந்தப் பயணத்தின் முதல் களப்பலியாகியிருக்கிறார் உமா மகேஸ்வரி எனும் அப்பாவி ஆசிரியை.

Pin It