“மருத்துவக் கல்விக்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வு, நுழைவுத் தேர்வு அல்ல! தமிழர்களை மருத்துவக் கல்விக்குள் நுழையவிடாத தேர்வு!” என, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராக புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

சமூக நீதியை சிதைக்கும் வகையிலும் மாநில உரிமையைப் பறிக்கும் வகையிலும் வெளியார் ஆக்கிரமிப்புக்குத் துணை செய்யும் வகையிலும் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், 06.05.2016 மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். தோழர் வெ. கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் தோழர் இரா. அழகிரி, தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ்க் கழகம் திரு. கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி புதுச்சேரி ஒருங்கிணப்பாளர் தோழர் தமிழன் மீரான், ’இலக்கியப் பொழில்’ தலைவர் திரு. பெ. பராங்குசம், தமிழ் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. ஆ.வ. பிரதாப சந்திரன், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் திரு. தீனா, புதுச்சேரி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கூட்டமைப்புத் தலைவர் திரு. கோ.அ. செகன்நாதன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பூ.அ. இளையரசன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் திரு. இரா. முருகானந்தம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பின்வருமாறு பேசினார்:

”மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் வழியாக நாம் வலியுறுத்துகிறோம்.

அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டு மென உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தாலும், உண்மையில் இவ்வாறு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியதே இந்திய அரசுதான்!

இந்திய அரசின் அனைத்திந்திய பொது நுழைவுத் தேர்வுத் திட்டம், வெறும் சமூக நீதிக்கு எதிரான செயல் மட்டுமல்ல! அது ஆரிய சூழ்ச்சி! பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்குள், மாநிலங்களின் அதிகாரங்களை ஒடுக்கி, தன்னுடைய மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் முயற்சி இது!

இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுதான், உச்ச நீதிமன்றம் இதுபோன்றதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால், இந்திய அரசு சில சாக்குபோக்குகளைக் கூறியது. இந்த ஆண்டு வேண்டுமானால் விட்டு விடுங்கள், ஆனால் அடுத்த ஆண்டிலிருந்து அனைத்திந்திய நுழைவுத் தேர்வை நடத்தலாம் என இந்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

இதைக்கூட உச்சநீதிமன்றம் ஏற்க மறுக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமும் மருத்துவப் பல்கலைக்கழகங்களிடமும் பணம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியதன் காரணமாகவும், பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளின் காரணமாகவும் ஏற்கெனவே கலைக்கப்பட்ட இந்திய மருத்துவக் கழகம் (எம்.சி.ஐ). என்ற அமைப்பிடம்தான், இவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றம் கலந்து பேசி இந்த அறிவிப்பைத் தீர்ப்பாக வெளியிடுகிறது.

ஏற்கெனவே ஊழல் காரணமாக கலைக்கப்பட்டு தற்காலிகமாக -- இடைக்காலமாக முன்னாள் தலைமை நீதிபதி லோதா மற்றும் இருவரைக் கொண்டு மருத்துவக் கழகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் இந்திய மருத்துவக்கழகத்தில் நிலவும் வரம்பற்ற ஊழல்தான்.

கையூட்டு பெற்றுக் கொண்டு எந்த அடிப்படைக் கட்டமைப்பும் தகுதியும் இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்கு இசைவு வழங்கியது இந்திய மருத்துவக் கழகம் தான். ஆனால் இப்போது அதே ஊழல் முறைகேடுகளைக் காரணமாகச் சொல்லி, மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் -- முறைகேடுகளை ஒழிக்கிறோம் என்றெல்லாம் கூறி, பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவது அப்பட்டமான மோசடிச் செயலாகும்!

இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களை- மொழிகளை ஒடுக்குவது, சமற்கிருதமயமாக்கப்பட்ட இந்தியைத் திணிப்பது, சமூகநீதியை அழித்து ஆரியப் பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவது, ஊழலில் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கீழ் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பது ஆகியவையே இந்திய அரசின் உண்மையான நோக்கமாக உள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமெனச் சொல்வதெல்லாம் உண்மையான நோக்கமல்ல!

இங்கே தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும், பன்னி ரெண்டாம் வகுப்பில் 200 மதிப்பெண்ணில், 190க்கு மேல் பெறுபவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பைப் பற்றி சிந்திக்க முடியும். 200க்கும் 190க்கும் இடையிலான 10 மதிப்பெண்களுக்கிடையேதான் இங்கு போட்டியே நடைபெறுகிறது.

இந்த மதிப்பெண் போட்டியை வைத்துதான், தமிழ்நாட்டில் நாமக்கல் போன்ற இடங்களில் பிராய்லர் கோழிப் பண்ணைகளைப் போல, மதிப் பெண் மாணவப் பட்டறைகள் உருவாக்கப்படுகின்றன.

பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் 190க்கு மேல் பெறுவதை விட, வேறு என்ன தகுதி மருத்துவக் கல்விக்குத் தேவைப்படுகிறது? இந்திய அரசு நடத்தும் எந்த பொது நுழைவுத் தேர்வு மோசடி யில்லாமல் நடக்கிறது?

வடநாட்டிலே நடத்தப்படும் தேர்வுகளில் எந்தள விற்கு முறைகேடுகள் நடைபெறுகின்றன என நமக்குத் தெரியும். மும்பை போன்ற இடங்களில் தேர்வில் பார்த்து எழுதுவது, பிட் அடிப்பது போன்றவற்றிற்கு தனியார் நிறுவனங்களே உள்ளன.

இங்கே நாம் பேருந்துக்குள் இடம் பிடிக்க, துண்டு போட்டு வைப்போம். சிறிது நேரம் வெளியே சென்று விட்டும் வருவோம். ஒருவர் துண்டு போட்டிருந்தால், இன்னொ ருவர் அதில் அமர மாட்டார்கள். ஆனால் வடநாட்டிலே, தொடர் வண்டிகளிலே முன் பதிவு செய்யப் பட்ட பெட்டிகளுக்குள் திபுதிபு வென ஏறுவார்கள். பயணச் சீட்டு எடுப்பதில் கூட, வடநாட்டவர் களிடம் ஒழுங்கு இருக்காது.

இப்படிப்பட்ட இவர்கள், நமது மருத்துவக் கல்வியை ஒழுங்கமைக் கிறோம் எனச் சொல்லி, தமிழ்நாட் டின் மீது இந்த நுழைவுத் தேர்வை வேண்டுமென்றே வீம்புக்காகத் திணிக் கிறார்கள்.

இந்த நுழைவுத் தேர்வு சமூக அநீதி மட்டுமல்ல, மருத்துவக் கல்வியை தரம் உயர்த்தலுக்கும் இது எவ்வகையிலும் பயன்படாது என்பதே உண்மை!

இந்திய அரசின் நடுவண் பாடத் திட்டத்தின் (சி.பி.எஸ்.இ.) அடிப் படையில், இப்பொது நுழைவுத் தேர்வை நடத்தவுள்ளதாகச் சொல் கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தைவிட அந்தப் பாடத் திட்டம் உண்மையில் அவ்வளவு தரமானதல்ல. அங்கே கிடைக்கும் மருத்துவம் தரமான தென்றால், வடநாட்டவர்கள் ஏன் தமிழ்நாட்டில் மருத்துவம் பெற படையெடுத்து வருகிறார்கள்?

இந்த நுழைவுத் தேர்வை இந்தி - ஆங்கில மொழிகளில் நடத்துவார்களாம். வடநாட்டவர்கள் தங்கள் தாய் மொழியான இந்தியில் தேர்வெழுதி தேறிவிடுவார்கள். ஆனால், தமிழர்களைப் பொறுத்த வரை இந்தி -- ஆங்கிலம் இரண்டுமே அயல் மொழிகள் தான்! ஆக, தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் புறக் கணிக்கவே இந்தத் தேர்வுமுறை நம் மீது வலிந்துத் திணிக்கப்படுகிறது.

இத்தேர்வு முறை வந்தால், தமிழ்வழியில் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட -- பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள், இத்தேர்வுகளினால் பின்தங்கி, மருத்துவக் கல்வியில் சேர முடியாத அபாயகரமான நிலை ஏற்படும்.

ஏற்கெனவே ஜிப்மர் மருத்துவக்கல்லூரி, புதுவை நடுவண் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துறைதோறும் அயல் மாநில மாணவர்கள் மிகை எண்ணிக்கையில் உள்ளனர். இப்போது இந்த நுழைவுத் தேர்வில் 15 விழுக்காடு இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கப்படும் அதற்கு மேல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம், இந்தியில் தேர்வு என்ற வழியில் வெளி மாநிலத்தவர்கள் அதிகம் இடம் பிடிப்பார்கள்.

எனவே இது நுழைவுத் தேர்வல்ல, தமிழர்களை மருத்துவக் கல்விக்குள் நுழைய விடாதத் தேர்வு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே, மாநில நுழைவுத் தேர்வை தமிழ்நாடு அரசு நடத்திப் பார்த்துவிட்டுதான், அது வேண்டாம் என பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தற்போது கலந்தாய்வு முறையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கை இங்கு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மருத்துவக் கல்வியின் தரம் சிறிதும் குறையவில்லை என்பதை நாம் நேரடியாகவே காண்கிறோம்.

இப்போது புதிதாக இந்திய அரசு நுழைவுத் தேர்வு கொண்டு வருவ தால், மருத்துவக் கல்வியின் தரம் உயரப் போவதில்லை. மாறாக, இந்த நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கி றோம் என்று சொல்லி புதிது புதிதாக தனிப் பயிற்சி நிறுவனங்கள் (கோச்சிங் சென்டர்கள்) உருவாகி, பெற்றோரிடமிருந்து பணம் கறக்கவே இது பயன்படும்.

எனவே, இந்திய அரசு மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தக் கூடாது. நயவஞ்ச கமான - முறையில் சமூக நீதியை - - தேசிய நீதியை - -மொழி நீதியை மறுக்கின்ற அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாம் உறுதியுடன் நின்று போராட வேண்டும். இந்திய அரசு தேர்வு நடத்த முன்வந்தாலும், தமிழ்நாடு -- புதுச்சேரி அரசுகள் அத் தேர்வை நடத்தவிடக் கூடாது”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர்கள் க. ஆனந்தன், மதியழகன், பெருமாள், செயப்பிரகாசம் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

Pin It