என் அன்புத் தங்கையே,

நலந்தானா?

நான் உங்கள் கவிதைகளின் ரொம்ப பெரிய ரசிகையோ வாசகியோ அல்ல. ஆனால் நீங்கள் எழுத வந்ததில் அளவில்லா ஆனந்தம் கொண்டவர்களில் நானும் ஒருத்தி.

kanimozhi_300_copyகலைஞரின் படைப்புகளில் சிறந்தது? என்ற கேள்விக்கு ஒரு முறை மாலன் அவர்கள் சொன்னார் கனிமொழி என்று. அந்தப் பதிலை ரொம்பவும் ரசித்ததும் உண்டு.

சாகித்திய அகதெமி தன் பொன்விழாவை கவிபாரதிகள் நிகழ்வாக மும்பை, ரவீந்திர நாட்டிய மந்திரில் கொண்டாடியபோது  நீங்கள் வாசித்த கவிதை நினைவில் இல்லை. கவிதை அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரியும் இல்லை என்பது தான் அப்போதே மும்பை இலக்கியவாதிகளின் அபிப்பிராயமாக இருந்தது. சரி அதெல்லாம் இருக்கட்டும். இன்றைக்கு உங்களுக்கு கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சத்தில் எங்களைப் போன்ற அன்னக்காவடிகளின் விமர்சனங்கள் எடுபடாது. இருக்கட்டும். ஆனால் அன்று உங்களைப் பற்றிய அறிமுகம் தான் நான் ரசித்த க்ளைமாக்ஸ்.

கனிமொழி தன்னைக் கலைஞரின் மகள் என்று சொல்லிக்கொள்ளக்கூட விரும்பமாட்டார்கள். கனிமொழி கருணாநிதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அவர் விரும்புவதில்லை என்று குமுதம் பாணியில் சொல்லி உங்களை அறிமுகப்படுத்தினார் அகதெமியில் செயலாளராக இருந்த சச்சிதானந்தன். அதை ஒரு  நல்ல நகைச்சுவையாக ரசித்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருத்தி.

உங்கள் கவிதைகள் சில எனக்கும் பிடிக்கும். எங்கள்  தென்னாடுடைய சிவனுக்கு அந்த நாட்களில் மட்டும்  பெண்கள் என்றால் ஆவதே இல்லை என்ற வரிகளை பல கட்டுரைகள், பேச்சுகளில் நானும் எடுத்தாண்டிருக்கிறேன் பெருமையுடன்.

சிறைவாசம் சிலருக்குத் தான் சாதகமாக இருந்தது, இருக்கிறது. அந்த ஒரு சிலரில் நீங்கள் தான் முதல் வரிசையில் முதலாவதாக இருக்கிறீர்கள். ஆமாம் நீங்கள் சிறை சென்றது எதற்காக?

முள்ளிவாய்க்கால், முல்லைப் பெரியாறு, கூடங்குளம்... இப்படியாக தமிழ்ச் சமூகத்தில் என்னவெல்லாமோ நடந்துக் கொண்டிருப்பதால், தங்கையே, மறந்து போய்விட்டது. ஆமாம், நீங்கள் சிறை சென்றது எதற்காக? யாருக்காக?

எனக்கு மறந்து விட்டதைப் போலவே உங்களுக்கும் மறந்து போயிருக்கும், சென்னை மாநகரில் உங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை பார்த்து!

ஆமாம், அண்ணன் ஸ்டாலின் அவர்கள் மிசா சட்டத்தில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடிபட்டதும்  மிதிபட்டதும்... எனக்கு இன்னும் மறக்கவில்லை!

ஆனால் பாருங்கள், இந்தக் கட்சிக்காரர்களும் ஊடகங்களும் உங்களுக்கு கொடுத்த வரவேற்பில் 0.00005 விழுக்காடு வரவேற்பு கூட அவருக்கு கொடுக்கவில்லையே. எனவே உங்களின் சிறைவாசம் உண்மையிலேயே... ரொம்பவும் ஸ்பெஷலானதாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதை வாசிப்பவர்கள் சிலர், அடடா, அண்ணன் தங்கைக்கு நடுவில் சிண்டு முடித்துவிடுவதாக நினைப்பார்கள். அல்லது என்னை ஸ்டாலின் ஆள் என்றோ எதாவது சொல்லக்கூடும். உங்களுக்கே தெரியும், இடியாப்பம் சிக்கல் அளவுக்கு இருக்கும் உங்கள் பங்காளிச் சண்டைகள். எனக்கென்ன கலைஞர் டி.வி.யிலோ உங்கள் சொத்து பத்திலோ ... எதாவது உரிமை இருக்கிறதா என்ன? இல்லை அப்படித்தான் ஏதாவது கேட்கப் போகிறோமா என்ன?

திராவிட அரசியலில் ஒரு தலைமுறை தன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டது. அந்தத் தலைமுறையில் எச்சமாய் நான் உங்கள் முன் நிற்கிறேன். உங்கள் வார்த்தைகள், கவிதை மொழிகள், உங்கள் வசனங்களை எல்லாம் நம்பி எங்கள் தந்தையர் தலைமுறை தங்கள் இளமைக்காலத்தைத் தொலைத்துவிட்டார்கள். அதன் சாட்சியாக நான் மட்டுமல்ல, என்னைப் போல கோடான கோடிபேர் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறோம்.

சிறைவாசம் கண்டு நீங்கள் திரும்பி வந்தபோது சென்னை வீதியில் வரவேற்பு பதாகைகளில் தமிழும் தமிழ்ச் சொற்களும் வல்லாங்கு செய்யப்பட்டதைப் பார்த்துக் கொண்டு உங்கள் அரசியலுக்கு சாட்சியாக இருக்க எங்கள் தலைமுறையும் தயாராக இல்லை. இப்போதெல்லாம் கார்ட்டூன் காட்சிகளாக நீங்களும் உங்களுக்கு உங்கள் தொண்டரடிகள் கொடுத்த வரவேற்புகளும் தான் காமெடி கலாட்டாவாக ஒலி-ஒளி காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

தங்கை கனிமொழியே, உன் அரசியல் பிரவேசம் உன் கவிதைகளை எரித்த சாம்பலில் பிறந்தபோது நான் மவுனமாகவே இருந்தேன். எனக்குத் தெரியும் நீங்களும் நானும் கவிதை எழுதாவிட்டால் தமிழ்த்தாய் ஒன்றும் அனாதையாகிவிட மாட்டாள் என்று.

ஆனால்... தங்கையே! நம் பாட்டன் மூப்பாட்டன் காலவெள்ளத்தில் செதுக்கி செதுக்கி நம் கைகளில் கொடுத்திருக்கும் தமிழை - தமிழ் அர்த்தங்களை யாருக்காகவும் எரிக்கவோ பிரிக்கவோ அரசியல் ஆதாயக் கணக்கில் சேர்க்கவோ அவ்வளவு எளிதில் விட்டுவிட  இனியும் நாங்கள் தயாராக இல்லை.

ஏமாந்து போன எங்கள் தந்தையர் தலைமுறையிலிருந்து நாங்கள் பாடங்கள் கற்றுக்கொண்டோம் ஏமாந்தவன் ஏமாந்துகொண்டே இருப்பதும் ஏமாற்றுபவன் ஏமாற்றிக்கொண்டே இருப்பதும் இனி  தொடர்கதை அல்ல.

அன்புடன்
புதிய மாதவி

Pin It